Wednesday, December 24, 2008

எது ஊனம்?

தூரத்தில் எழும்பவிருக்கும்

கிசுகிசுவிற்கு செவியைத் தீட்டியதால்

வீட்டிற்குள் ஓலமிடும்

கூக்குரல்களை நிசப்தமாக்கினோம்

மனதில் ஊனமுடன்!

அறுவடையாக

வாழ்க்கையின் ஓட்டத்தில்

துணைகளுடன்

துருவத்திற் கொருவராய் நாம்!


இருந்தும் பட்டுத் தெளியா சமூதாயம்

நாளை யாரென்றெண்ணி இன்று

தொலைக்கும்...!!

Sunday, December 07, 2008

இந்திய துணை கண்டத் தீவிரவாதம் - தெகாவின் பார்வையில்!

சமீபகாலமா பதிவுகள் எழுதவே தோணுவதில்லை. நடைபெறும் நிகழ்வுகளை கொண்டு எனது எண்ணவோட்டத்தை சுடச்சுட பதியும் பொழுது, அந்த ஒட்டு மொத்த நிகழ்வின் பரிமாணமோ வேறு மாதிரியாக நாட்பட நாட்பட வெளிச்சத்திற்கு வருகிறது. அதுவும் இந்தியாவில் நடைபெறும் அரசியல், கலவரங்கள் சார்ந்த நிகழ்வுகள்.

அதற்கு ஒரு உதாரணமாக அண்மையில் அரசு சட்டக் கல்லூரியில் (எல்லா அரசாங்க கல்லூரிகளிலுமே என்று கூட கூறி விட முடியும்) காலங் காலமாக நடைபெற்று வரும் இந்த ஜாதிச் சண்டையின் பின்னணியை ஆர அமர கவனிக்கும் பொழுது யாருக்கும் தெரிய வந்திருக்கும். இதனில் முக்கியமாக கேமராவும் கையுமாக, ஒருவர் தற்கொலைக்காக ஒரு உயரமான நீர்த் தொட்டியின் மீது ஏறி குதித்து உயிரை மாய்த்து கொள்வதனை நேரடி ஒளிப்பரப்பு செய்வதாகட்டும், கல்லூரியில் ஒருவரை ஒருவர் மாட்டடி அடித்துக் கொண்டு அவர்களும் செத்துக் கொண்டு பார்ப்பவர்களுக்கு வன்முறை சார்ந்து இம்யுனிடி கொடுப்பதில் காட்டும் அக்கறையாகட்டும் இந்த வியாபார மீடியாக்களின் பங்கு சகிக்க முடியா அளவிற்கு சந்தை படுத்தப் பட்டிருக்கிறது. அது நம் வளர்ச்சியில் ஒரு அபாயகரமான சந்திப்பில் நின்று தவறான பாதையில் வழி நடத்தப் பட்டுக் கொண்டிருக்கிறோமென்பதற்கான ஒரு வழியாக எனக்குப் படுகிறது.
________________________________

சரி இப்பொழுது பதிவின் கருவிற்குள் செல்வோம். அவந்திகா அண்மையில் நடந்தேறிய மற்றுமொரு ரியல் லைஃப் ஷோ இதுவும் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பெற்றது "மும்பை தீவிரவாத தாக்குதலுக்குக்" காரணம் இந்திய அரசியல்வாதிகளே முழுப் பொறுப்பேற்க வேண்டுமென்றும், சரியான, நேர்மையான அரசியல்வாதிகளை இந்தியா பெற்று விட்டால் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புகள் குறையுமா என்றும் வினவி ஒரு தொடர் விளையாட்டை ஆட அழைத்திருக்கிறார்.

இந்த தீவிரவாத தாக்குதல் அல்லது உலகம் தழுவிய நவீன தீவிரவாத அணுகுமுறை சார்ந்து என் மனதில் எண்ண அலைகள் அவ்வப்பொழுது தீவிர'மாக எழுந்து வீழ்வதுண்டு. இருந்தாலும், இன்றைய பொருளாதார கட்டமைவில் நடைபெறும் சித்து விளையாட்டுக்களும், புவியிருப்பில் அமைந்திருக்கும் நாடுகளின் அரசியல் சார் நகர்வுகளையும் ஒட்டு மொத்தமாக கவனிக்கும் பொழுது, மனித பரிணாம நகர்வில் ஆண்ட்ரோஜனையும், அட்ரீனலின் ஓட்டத்தினையும் கொண்டே எடுக்கப்படும் சுயநலத்தனமான முடிவுகளின் வெளிப்பாடே இந்த நவீன தீவிரவாத விளையாட்டோ என்று என்னை ஒரு கணம் யோசிக்க வைக்கிறது.

காலம் தொட்டே மதங்களின் இருப்பும் மறுப்பும் அவைகளின் நெகிழ்வுறும் தன்மையைக் கொண்டே மக்களால் மானசீகமாக பின்பற்றப் பட்டு தலைமுறையாக கையிறக்கம் பெற்று பல நூறு ஆண்டுகள் மாற்றத்தினூடே தன்னையும் மாற்றியமைத்துக் கொண்டு மக்களின் தேவைக்கும் விட்டுக்கொடுத்து தலை தப்பி நிற்பதாகவும், லாஜிக்கலாகவே இயற்கையின் நியதிப்படியே அதுவே சாத்தியமாகவும் தோணச் செய்கிறது எனக்கு.

ஆனால் இன்றைய நிலவரப்படி அது போன்ற ஒரு பாதையில் எந்தவொரு மதத்தினையும் நாம் பரிணமிக்க போதுமான கால அவகாசம் கொடுப்பதாக தெரியவில்லை, அந்தந்த குழுமங்களும் தங்களின் "கடவுளர்களை" காப்பாற்றி அடுத்த தலை முறைக்கு விட்டுச் செல்வதற்காக போராடுவதாகப் படுகிறது. இச் சூழலில் வன்முறையும் ஒரு வாழ்வின் அங்கமாக தேவைப்படாத நாடுகளின் மீது கூட வைத்து திணிக்கப் படுகிறது.

இப்பொழுது இந்திய துணைக் கண்டச் சூழலுக்கு வருவோம். நம் புவியியல் இருப்பு உலக வரைபடத்தில் உற்று நோக்கினால் ஒரு சூடான பகுதியில் (geo-politicaly we are located in a complex place) இருப்பதனைக் பார்க்கலாம். இச் சூழலில் எந்தவொரு முடிவினையும் நம் நாடு எடுத்தோம் கவிழ்த்தோமென்று தான் தோன்றித் தனமாக எடுத்து அதனை நிறைவேற்றி பார்த்துவிட முடியாது என்றே தோன்றுகிறது.

உண்மை அப்படியாக இருக்க "கொம்பு சீவி" விடப்படுவதினால் கோபம் கொப்பளித்து 'பாடம் கற்பிக்கிறேன் பார்!' என்று மல்லுக்கு நின்றால் தொலைதூரப் பார்வையில் நாம் சந்திக்கவிருக்கும் இன்னல்கள் நம் கற்பனைக்கும் எட்டாதது. எனவே நம்மூர் அரசியல்வாதிகள் அண்டைய நாடுகளுடன் பகை பாராட்டி அதன் மூலம் ஓட்டு அரசியல் வேண்டுமானால் செய்து கொள்ளலாமே தவிர இது நடைமுறைக்கு சாத்தியப் படாத ஒன்று!

இருக்கும் வழி ஒரே வழியே! பொருளாதார வகையில் தன்னிறைவு எட்டி, தன் நாட்டிற்கு போதுமான பாதுகாப்பை, எல்லை கடந்த தீவிரவாதத்தை எல்லையிலேயே தடுத்து நிறுத்தற்குரிய வழிமுறைகளைக் கண்டு, நாட்டின் எல்லைக்குள் வாழும் எல்லாரும் நிறைவாக வாழும் ஒரு வழிவகை கண்டு, பிரிவினை வாத அரசியலை தவிர்த்து நாட்டினை எடுத்துச் செல்வதே வாழும் மக்களுக்கும் ஒரு நம்பிக்கையளிக்கும் கட்டத்தில் இருப்பதாக ஏனைய தீவிரவாத விசயங்களில் கவனத்தை செலுத்தாமல், தான் பயனுறும் உடனடித் தேவைகளில் கவனம் செலுத்த முடியும்.

நாம் வெறுமனே அரசியல்வாதிகளை குறை கூறுவதில் எந்த பொருளும் கிடையாது, என்னமோ அரசியல்வாதிகள் எங்கிருந்தோ குதித்து நம்மிடையே தோன்றிவிட்டதாக நினைத்துக் கொள்வதற்கு! அவர்கள் நம் ஒட்டு மொத்த சமூகத்தின், எண்ணவோட்டத்தின், ஒழுக்க நெறிகளின் பிரதிநிதிகளே! அது அப்படியாகக் கிடையாது என்று கூறினால், கண்டிப்பாக நம்மால் அது போன்ற பொய்யான பிரதிநிதிகளை சகித்துக் கொண்டிருக்க முடியாதல்லவா? மாற்றுத் தலைவர்களை நம் எண்ணங்களின் பிரதிபலிப்பானை தேடிக் கொண்டே இருப்போமே...! இத்தனை கோடி மக்களிருந்தும் நமக்கு கிடைப்பதெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தாமே எனும் பொழுது என்ன தெரியவருகிறது அதிலிருந்து?

ஒண்ணு மட்டும் நிச்சயம் ஒட்டு மொத்த இந்திய மக்களின் எண்ண வோட்டம் இந்த "சுயநலப்" போக்கு சார்ந்து மாற வேண்டும், அதற்குத் தேவை என்னன்ன அப்படின்னு ஒவ்வொரு தனிமனிதனும் தீவிரமாக யோசிக்க வேண்டும், அப்படி யோசித்து தன்னைத் தானே திருத்திக் கொண்டு பொது வாழ்க்கைக்கும், ஏனைய துறைகளுக்கும் சென்றால் மட்டுமே ஒரு விடிவுகாலம் நம் நாட்டிற்கு கிட்டும் என்பது எனது எண்ணம்.

நானும் இன்னோட பங்கிற்கு ஒரு நாலு பேரை முன்னுரைக்கிறேன்...


1) தருமி

2) சுரேகா

3) சுகா

4) சந்தோஷ்



மேலும் இவங்க இல்லாம யாரெல்லாம் தானும் தன்னோட பார்வையை முன் வைக்கணுமின்னு நினைக்கிறீங்களோ கண்டிப்பா செய்ங்க. நன்றி!




பி.கு: இதுக்கு தொடர்பான மற்றுமொரு தீவிரவாதம் சார்ந்த பதிவு என்னிடமிருந்து - வன்முறை வாழ்க்கைக்கு யார் பொறுப்பு...?

Wednesday, October 08, 2008

பேராசையின் விளிம்பு நிலையில்:Greed - The Dead End!

நேற்று பல குப்பை அரசியல் செய்திகளுக்கிடையே மிகச் சாதாரணமாக ஒற்றை வரியில் பறவைப் பார்வையில் ஒரு வீட்டைக் காமித்து, பொருளாதார நஷ்டத்தால் மனமுடைந்த ஒருவர் தன்னையும் சுட்டுக் கொண்டு தன் வீட்டிலிருந்த மூன்று பிள்ளைகள், மனைவி மற்றும் மாமியாரையும் சுட்டு விட்டு மரணித்துக் கொண்டார்னு ட்டிவியில வாசிச்சாங்க. நானும் அட பன்னாடைப் பசங்களா, சாவுறதுன்னா எவன் சாவணுமின்னு நினைக்கிறானோ அவன் மட்டும் போய்ச் சேரவேண்டியதுதானே அதுக்கு எதுக்கு மற்றவர்களையும் துணைக்கு அழைக்கணுமின்னு நினைச்சுட்டு விட்டுட்டேன்.

இன்னிக்கு காலையில நம்ம துணைவியார் அப்பாம்மாவை அழைத்துருப்பார் போல. நம்மூர் உலகத் தரம் வாய்ந்த பத்திரிக்கைகளான தினகரன், தினத்தந்தி, தினமலர் போன்ற நாளிதழ்கள் அமெரிக்காவில் யாராவது ஒருவருக்கு காலையில் "பாத்ரூம்" வரவில்லையென்றால் கூட உடனே பிக்கினியோட ஒரு வெள்ளையம்மாவை போட்டு செய்தியாக்கிவிடும் அமெரிக்கா பாசம் நம்மூடது, இல்லையா.

சில நேரத்தில உண்மையாகவே எனக்கே சில நேரத்தில அங்கிருந்துதான் அமெரிக்காவில நடக்கிற செய்திகளே இங்கே தெரியவரும், சன் ட்டிவி மூலமாவும், செய்தித்தாள் படிச்சிட்டு தொலைபேசி மூலமா மக்கள்கிட்டயிருந்தும் :)). அந்தளவிற்கு அமெரிக்கா மேல நம்மாளுங்களுக்கு பாசமோ பாசம்.

இந் நிலையில் நம்ம துணைவியார் அவரோட அப்பாகிட்ட பேசப் போக அவரும் அந்த உலகத் தரமான செய்திகளை, அதாவது இந்த நேரத்தில் அமெரிக்காவில் வெறும் 2500 ரூபாய்க்கு எப்படி வீடு கிடைக்கிறது இந்த பொருளாதாரச் சரிவால்ங்கிற செய்தியிலருந்து, அதோட நான் மேலே சொன்ன அந்த சுட்டுக்கிட்டு செத்த செய்தியையும் ஊதியிருப்பாங்க போல படிச்சிட்டு அதனை குறிப்பிட்டு என்னம்மா இப்படியெல்லாம் நாடு போயிட்டு இருக்கிறதா இங்க பேசிக்கிறாங்க, நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க ஒண்ணும் பிரச்சினையில்லையேன்னு அப்பாவியா கேட்டுருக்கார்.

நம்மூர் செய்தித்தாள்கள் எல்லாம் என்னமோ அமெரிக்காவின் வீழ்ச்சி பட்டாசு வெடிச்சு தீபாவளி கொண்டாடுற நாள நினைச்சு ஒண்ணும் தெரியாத புதுப்பட்டி ஆளுங்களுக்கு கதையை ஜோடிச்சுக் கொண்டு போயி சேர்த்துக்கிட்டு இருக்கிற கணக்க அள்ளிவிட்டுக்கிட்டு இருக்காங்க.உண்மை நிலவரம் தெரியாம.

நாந்தான் கேக்கிறேன், இங்க புத்தியில்லாம உலகத்தில உற்பத்தி பண்ணிக் கொடுக்கிற ஒரு சிறு ஊக்குல இருந்து குழந்தைக விளையாடுற விளையாட்டுச் சாமான்கள் வரைக்கும் எதப் பத்தியும் யோசிக்காம வாங்கி எல்லோருக்கும் வேலை கொடுத்து பணத்தை சுழற்சியில விட்டுக்கிட்டு இருக்கிற ஒரு நாடு போண்டியா போன அதனையே நம்பி இருக்கிற மற்ற நாடுகள் என்னய்யா பண்ணும்?

நம்மூர்ல இப்ப கொடி கட்டி பறந்துட்டு இருக்கிற இந்த மென் பொருள் உற்பத்தி, அதனைத் தொடர்ந்த வேலை வாய்ப்புகள், ஏற்றுமதி, அண்ணிய செலவாணிப் பணம் இதெல்லாம் நின்னு போன, எப்படிய்யா மூணு வருஷத்திற்கு முன்ன வரை 1500 ரூவா கொடுத்து வாடகைக்கு இருந்த ஒரு அறையை இன்னிக்கு 15,000 ஆயிரம் கொடுத்து வாடகைக்கு இருக்க முன் வருகிற "வருண்" பையில பணமிருக்கும்? இதெல்லாம் கணக்குப் போட்டு பார்த்தா இப்படியெல்லாம் சம்பளம் போட்டுக் கொடுக்கிற முதலாளி நாசமா போகணுமின்னு நினைச்சு நம்மூரு உலகத் தரம் வாய்ந்த நாளிதழ்கள் எழுதுமா, அது போன்ற கதையை, சொல்லுங்க.


ஆஹா, பேச வந்த விசயத்தை விட்டுட்டு எங்கேயோ போயிட்டேனே. சரி, எழுதினதை அழிச்சுடவா முடியும், படிச்சு வைங்க.

இப்ப பேச வந்த டாபிக். இப்ப என்னாச்சுன்னா, இந்த பங்கு சந்தை, பங்கு சந்தைன்னு நவீன சூதாட்டக் க்ளப் ஒண்ணு நாட்டுக்கு நாடு வைச்சிருக்காங்க, அத வைச்சி சில பெருசுங்க பெரிய அளவில சூதாட ஆரம்பிச்சாய்ங்க உலகம் தழுவிய முறையில (இதுதான்னு இல்ல உணவுப் பண்டத்தில இருந்து, தங்கம், பெட்ரோல் etc., etc.,ன்னு...), இப்படி பெரும் பணக்காரய்ங்களா சேர்ந்து ஆடினா போர் அடிக்குதுன்னும், கைப் பத்தலைன்னுட்டு நடுத்தர தட்டுல வாயிக்கும் கைக்கும் வாழ்ந்திட்டு இருந்தவய்ங்களையும் கடன உடன வாங்கி சூதாட்டத்தில ருசி காமிச்சு இறக்கி விட்டாய்ங்க. விளையாட்டும் நல்ல ஜரூராத்தான் போயிட்டு இருந்துச்சு.

ஒன்னுக்கு பக்கத்தில போட்டுக்கிற பூஜ்யம் சேரச் சேர தயவு தாட்சன்யம் பார்க்காம ஆட்டம் விறுவிறுப்பு ஏறுனுச்சு தினமும், சுத்திவர தலையை திருப்பிக் கூட பார்க்க நேரமில்லாம எப்படிடா இன்னமும் ரெண்டு பூஜ்யத்தை இப்ப இருக்கிற எண்களோட சேர்க்கிறதுங்கிற ஒரே குறிக்கோளோட. இப்படியாக போனது திடீர்னு ஒரு நாள் "வீங்கிறதெல்லாம் வெடிக்குமின்னு" சொல்ற மாதிரி, வெடிக்கிற அந்த நாளும் வந்தவுடன் எல்லா பயலும் தன்னையே கிள்ளிப் பார்த்துக்கிட்டு இப்பத்தான் ஒவ்வொருத்தனா முழிக்க ஆரம்பிச்சிருக்கான் அந்தப் சூதாட்ட போதையில இருந்து.

இப்ப இந்தக் கட்டுரையில் முன்னமே சொன்ன சுட்டுக்கிட்டு செத்த ஒரு சாதாரண நடுத்தர தட்டு மகன் ஒருத்தர் எம்.பி. ஏ டிகிரியோட ஆரம்பிச்சிருக்கார், வேலைக்கு போகாமயே வீட்டில இருந்தபடியே அந்த பூஜ்யங்களை சேர்க்க ஆசைப்பட்டிருக்கார். அதில 5.40 கோடி சம்பாரிக்கிற அளவிற்கு சூதாட்டமும் கை கொடுத்துருக்கு. ஆனா, ஈசியா பணம் பார்த்தவனுக்கும், கொட்டு வாங்காம தேனீ எடுத்து நக்கிப் பார்த்தவனுக்கும் ஆசை விடுமா, விடலை போல, அதான் ஆட்டத்தில எடுத்தப் பணத்தையெல்லாம் திரும்பவும் அந்த கூடையிலயே போட்டு வைச்சி அழகு பார்த்திருக்கார். இந்த உடையற நாள் கிட்டவந்துட்டு இருக்கிறது தெரியாமலயே.

இப்ப உடைஞ்சுடுச்சு ஆனா இத எப்படி கையாள்கிறதுன்னு தெரியல இந்தாளுக்கு. ஏன்னா, பெரிய ஆசை சிறு சறுக்கல்கள் வழியில வருங்கிறதைக் கூட பார்க்கவிடாம கண்ணை கட்டி வைச்சிருச்சு. சரி, அடி வாரதுக்கு முன்னாடி கொஞ்சூண்டு அதில இருந்து எடுத்து குடும்ப நலனுக்காக அப்பால போட்டு வைச்சிருக்கலாமில்லையா? அப்படி போட்டு வைச்சிருந்தா இவரோட தொழில் அணுகுமுறையில நாளக்கி ஏதாவது இது மாதிரி நடந்தா கூட குடும்பமாவது தப்பி பிழைச்சுக் கெடக்குங்கிற நம்பிக்கையில இவரு பொறுப்போட அவருக்கு வேணுங்கிறதை பண்ணிட்டுப் போகலாம். அது தன்னைத் தானே சுட்டுக்கிட்டு செத்துப் போறதா இருந்தாலும் கூட. ஆனா, இந்தாளு இவரு குடும்பத்தையுமில்ல கூட அழைச்சுட்டு போயிருக்கார்.

நம்ம எல்லோருக்கும் ஒரு பிரச்சினை இருக்கு - அது அடுத்தவங்களுக்காக நம்ம வாழ்க்கையை வாழ்றது. எப்படின்னா, நம்மோட படிச்ச மோகன் இந்த மாதிரி வேலையில, இது மாதிரியான சம்பளத்தோட, இப்பேர்பட்ட இடத்தில பெண் எடுத்து வாழ்க்கை நடத்திக்கிட்டு, இது மாதிரியான கார் ஓட்டுறான்னா அதுனாலே நமக்கு என்னாகப் போகுதுன்னு நினைக்காம அவனை நினைச்சு பொறாமை பட்டுக்கிட்டு ராத் தூக்கமில்லாம, அவன மாதிரி நானும் இருக்கேன்னு உன்னோட சூழ்நிலை தெரியாம உன் விரலுக்கும் மீறி ஆசைப் பட்டு அந்த வழியில இறங்கி நடந்தா யாரு வாழ்க்கையை இங்கே முழுசா வாழ்றா?

அதுனாலே இந்த peer pressureயை வைச்சு வாழ்க்கையை அமைச்சுக்க விரும்பினாலே குழப்பம்தான் வாழ்கிற முக்காலே மூணு நாழியும். டார்க்கெட் வைச்சி வாழ்க்கையை வாழ்றது ஒரு உந்துதலை கொடுக்குதுங்கிறதுக்காக சிறு, சிறு அதுவும் நம்மோட லிமிட், டி-லிமிட்குள்ளர வைச்சி வாழ்றதில தப்பில்லை, ஆனா அடுத்தவங்க வாழ்க்கையை தன்னோட வாழ்க்கையின் அளவுகோள வைச்சி பின்னாடி சிக்கலில் மாட்டித் தவிச்சிட்டு குடும்பத்தையும் பிடிச்சு உள்ளே தள்ளிவிடுறதில என்ன நியாயமிருக்கு சொல்லுங்க.

இந்த படத்தை அப்படியே தேசங்களை வைச்சி பொருத்திப் பார்த்துக்கோங்க. இப்ப அமெரிக்கா அப்படி செலவு செய்யும் சித்தாந்தத்தை கொண்டு வாழுது, இது போன்ற வாழ்க்கைத் தன்மையோடு வாழுது அது போலவே நாமும் அமைச்சிக்கணுமின்னுட்டு அகலக் கால் வைக்கிறதில என்ன இருக்கு. இப்பொழுது இருக்கும் பொருளாதார கட்டமைப்பே உலகம் தழுவிதான் கட்டி வைக்கப்பட்டிருக்கிறது, அப்பொழுது ஒரு தனி தேசத்தின் பேராசை, எப்படி ஒரு தனிமனிதனின் பேராசை இருக்கிறதோ அது போலவே பல காரணிகள் கட்டமைக்கப் பெற்று அதுவே ஒரு இடத்தில் வீங்கி வெடிக்கும் பொழுது அதனையே பாதையாக தேர்வு செய்த ஏனைய குடும்பங்களும், தேசங்களும் வெடித்தலுக்கு உட்புக நேரிடுகிறது.

சோ, வளர்ச்சி என்பது சமச்சீராக பல காலங்களில் பல அடிகளை தாங்கி எஞ்சி நிற்பதாக இருக்க வேண்டும். If the profit is made overnight then it should be prone to lose it in overnight too...

கடைசியா நம்ம ஆட்டுப் பால் ரொம்ப பிடிக்கிற காந்தி தாத்தா சொன்னது, எப்பொழுதும் பொருந்தும் பாருங்க...

The world holds enough to satisfy everyone's need; but not everyone's greed.

P.S: இந்தப் பதிவிற்கு தொடர்பாக இத் துறையில் உள்ள பதிவர் பாரதி அவர்கள் பங்கு வணிகத்தின் ஆழ, அகலங்களை இத் தலைப்பில் அலசியிருக்கார் படிச்சுடுங்க அதனையும். நன்றி பாரதி.


பங்கு சந்தைகளால் பாதிக்கப்படும் மனது

Sunday, September 28, 2008

உடலுறுப்புகள் தானமா,பதறும் நெஞ்சு : Donation of Organs!

ம்ம்... சரியாக 2001ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், நானும் மாநிலம் மாறி என்னுடைய ஓட்டுநர் உரிமத்தை மாற்றி புதிய மாநிலத்தில் இணைத்துக் கொள்ளும் அவசியத்தில் இருந்தேன். அப்படியாக நானும் அந்த அலுவலகத்தில் என்னுடைய பழைய ஓட்டுநர் உரிம அட்டையை ஒப்படைத்து விட்டு, புதிய மாநில அட்டையை வாங்கும் பொழுதும், புகைப்படம் எடுத்துக் கொண்டு, இதர கேள்விகளுக்கு பதிலுரைத்துக் கொண்டு வரும் பட்சத்தில், ஓரிடத்தில் நிறுத்தி பொறுமையாக "டு யூ வாண்ட் ட்டு பி ஆன் ஆர்கன் டொனர்" என்று கேட்டார்.

அப்படியே ஒரு நிமிடம் ஆடிப் போய் யாரோ பொடீர் என்று செவுட்டில் அடித்ததினைப் போன்று உறைந்து போனேன். அவரிடம் ஒரு நிமிடம் என்று கேட்டுக் கொண்டு, என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு" என்னடா இது இதுபோன்ற ஒரு கேள்வியை என் வாழ் நாளில் நான் கேட்டுக் கொண்டதே இல்லையே இப்படியான சாவுடன் தொடர்படுத்தக் கூடிய கேள்வியை இவ்வளவு சாதாரணமாக கேட்டு சிந்திக்க வைத்திவிட்டாரே என்று ஆட வைத்தது.

இருந்தாலும் மறுபக்கம் வாய் கிழிய எல்லாம் பேசும் நமக்கு சாவு என்றவுடன் சும்ம அதிர்ந்து போகுதே ஏன், இறந்த பிறகு தம்மிடம் பிரயோசனமாக பிறருக்கு உதவும் வாக்கில் உள்ள சில உறுப்புகளை எடுத்துக் கொள்ளட்டுமா என்று கேட்டவுடன் ஏன் உள்ளங்கால் முதல் உச்சந்தலை வறை உதறுதே ஏன்? என்று மனம் குழம்பிப் போனது உண்மை. சுதாகரித்துக் கொண்டு மரண பயத்தை தூரத்தே வைத்துவிட்டு உள்ளுணர்வை எழுப்பி கேட்டவுடன் இயல்பென்ற ஒரு விசயம் கடிவாளத்தை பற்றிக் கொண்டது, நானும் அதன்படியே "எஸ், ப்ளீஸ் ஆட் மீ" என்று கூறிவிட்டேன். அன்றிலிருந்து நானும் ஒரு உடலுறுப்பு பங்களிப்பாளன்.


இதனை எழுத வேண்டுமென நீண்ட நாட்களாகவே ஆசைப் பட்டதுண்டு, ஆனால் பிறரை தர்மசங்கடத்தில் ஆட்படுத்தக் கூடும் என்பதினால் தள்ளிப் போட்டதுண்டு. இன்று தினகரனில் ""உள்ளத்தில் நல்ல உள்ளம்..."" என்ற தலைப்பிட்ட உடலுறுப்பு தானம் எந்தளவில் இந்தியாவில் செயலில் இருக்கிறது என்பதனைப் பற்றி படிக்கும் பொழுது மிகவும் ஆச்சர்யமாக இருந்ததது அங்கே குறிப்பிடப்பட்டிருந்த சில புள்ளியல் சார்ந்த குறியீடுகள்.

உதாரணத்திற்கு அந்தக் கட்டுரையிலிருந்து... "உலக அளவில் ஸ்பெயின்தான் உறுப்பு தானம், உடல் தானத்தில் முதலிடம் வகிக்கிறது. அங்கு வசிக்கும் 4.60 கோடி பேரில் 14500 பேர் முன்வந்து உறுப்பு மற்றும் உடல் தானம் செய்கிறார்கள். ஆனால், 100 கோடி பேர் வசிக்கும் இந்தியாவில் ஆண்டுக்கு 30 முதல் 40 பேர் மட்டுமே உடல் தானம் செய்கிறார்கள்.".... என்று குறிப்பிட்டதை படித்தவுடன், நான் ஏன் அப்படி அது போன்ற ஒரு கேள்வி ப்ரக்ஞையுணர்வே அற்று வாழ்ந்திருக்கிறேன் 2001ம் ஆண்டு வரை என்பது பட்டென புரிந்தது.

ஏன், இத்தனை மக்கள் தொகையுடன் உள்ள ஒரு நாடு, இத்தனை மீடியாக்கள் தங்களுடைய பிழைப்பை ஜரூராக நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் கூட வெறும் 30 லிரிந்து 40 பேர் மட்டுமே முன் வந்து தானம் செய்யும் நிலை? மதத்தில், இறப்பிற்குப் பிறகு இது போன்ற உடலுறுப்புகளுடன் மேலே வந்தால்தான் மீண்டும் பிறப்பெடுக்கும் பொழுது ஏதுவாக இருக்க முடியும் என்ற முறையில் எழுதப் பட்டுள்ளதா? எனக்குத் தெரிந்தவரையில் இந்து மதத்தில் அப்படிய் அடிக் கோடிட்டு காட்டப்பட்டு குறிப்பிடப் பட்டுள்ளதாக தெரியவில்லை. பிற மதங்களை பற்றி, நோ ஐடியா!

இத்தனை நல்லவர்களை கொண்ட(?!) நம் நாடு ஏன் ஸ்பெயினைக் காட்டிலும் இத்தனை கருமியாக இறப்பிற்குப் பிறகும் கூட மனிதர்களை வைத்திருக்கச் செய்கிறது? எப்படியோ, எல்லா மதங்களும் ஆத்மா என்ற ஒன்று இருப்பதாகவும், அது மட்டுமே நமது மரணிப்பிற்கு பிறகு மேலெழும்பிச் சென்று பிறகு எங்கடைய வேண்டுமோ அங்கடைந்து மறு-சுழற்சி (ரீ-சைக்கிலிங்) செய்யப் படுவதாக அறிகிறேன்.

அப்படி இருக்கும் பொழுது உடலுறுப்பிற்கும், ஆத்மாவிற்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? எனவே, இந்த உடலுறுப்புச் சார்ந்த விசயத்தில் நிறைய மரண பயமும், கொஞ்சமே மதம் சார்ந்த விசயமும் குறுக்கிடுவதாக நான் கருதுகிறேன். மரணத்தைப் பற்றிய பயத்தை மரணிக்க வைத்துவிட்டால் நீங்களும் குபேரனாக வாழ்ந்து முடித்ததாக இச் சமூகம் உணரும் இந்த "தானாக முன் வந்து உடலுறுப்பு தானம் செய்யும் பொறுட்டு" இல்லையா?

ஆனால், இன்னும் கொஞ்ச காலங்களில் இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சிகளின் உச்சமாக ஆய்வுக் கூடங்களிலே இது போன்ற டி.என்.ஏ பொறுத்தம் கொண்ட உடலுறுப்புகளை உற்பத்திக்கவும் முனைந்துவிட்டால், மனித பயத்தினையும், மதம் சார்ந்த நம்பிக்கைகளையும் போற்றி பாதுகாத்து கேள்வி நிலைக்கு நம்மை இட்டுச் செல்ல வேண்டிய நிர்பந்தமிருக்காது - அதுவும் ஒன்று.

நம்மூரில் நடிகர் கமல்ஹாசன் தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானம் செய்திருப்பதாக அறியும் தருவாயில், அவரின் மீது பன்மடங்கு அறிவுசார் மரியாதை கூடுகிறது.

இதனை வாசிப்பவர்களின் பார்வை எதனைப் பொறுட்டு ஒத்துப் போகிறது, விலகி நிற்கிறது என்பதனை அறிய ஆவலாக இருக்கிறது. பகிர்ந்து கொள்ளுங்கள், நல்லவர்களே!

Thursday, September 25, 2008

ஹெய்டி - ஒர் மனித இயற்கைத் துயரம்: Haiti's Man Made Disaster!!

ஹெய்டி (Haiti) என்றொரு கரீப்பியன் தீவு நாட்டைப் பற்றி எனக்கு படிக்க, கேக்க நேரும் பொழுதெல்லாம் மனித குலம் தன்னுடைய இயற்கைசார்ந்த ப்ரக்ஞையுணர்வை மேலும் ஊட்டிக் கொள்ளவும் விழிப்புணர்வு பெறவும் ஒரு இன்றியமையா இடமாக வாழும் நரகமாக எப்படி அந்த தீவு நாடு தன்னை வழி நடத்தி இன்று அத் தீவில் வாழவே அருகதையற்றதாக மாற்றிக் கொண்டது என்று ஏனைய நாடுகள் பார்த்து தெரிந்து கொள்ள ஒரு ஆய்வுக் கூடமாக திகழ்கிறதுங்கிற மாதிரி எண்ணத் தோன்றும்.

இத் தீவின் ஆதீயைத் தோண்டிப் பார்த்தால் இது ஒரு சொர்க்கப் பூமியாகத்தான் மலையும், மலையுஞ்சார்ந்த இடமாக மழைக் காடுகளுடன் கட்சியளித்ததாக தெரியவருகிறது. அதாவது 16வது நூற்றாண்டுகளுக்கு முன்பு வரையிலும். அதற்கு பிறகுதான் கப்பல் கட்ட தெரிந்து கொண்ட துரைமார்கள் ஊரோடியாக இருந்துப் போய் துரதிருஷ்ட வசமாக இந்தத் தீவினிலும் கால் பதித்திருக்கிறார்கள். முதற் காலனி ஃப்ரெஞ்ச்சும், ஸ்பானிஷும் இங்கே கோலோச்சியிருக்கிறார்கள்.

துரைமார்கள் என்றாலே இயற்கை படைக்கப்பட்டதே மனிதன் நுகர்ந்து அழிப்பதற்குத்தான் என்ற மன நிலை தீர்க்கமாக அவர்களின் புத்தகத்தின் மூலமாகவே அடி மனதில் தூவப்பட்டுவிட்டது. இந் நிலையில் 16ம் நூற்றாண்டு வாக்கில் கிட்டத்தட்ட 6000 வேறுபட்ட மர இனங்களும்(இதில் அவ்வூருக்கேயான இனங்கள் 35% இருந்திருக்கிறது - i.e., Endemic species), 220 பறவை இனங்களும்(அவைகளில் 21 பறவை இனம் அங்கு மட்டுமே காணப்படுபவை), கிட்டத்தட்ட நம்மூர் மேற்கு மலைத் தொடரில் காணப்படும் பறவை இனங்களின் கூட்டுத் தொகைக்கு நிகர், அப்படியெனில் அத் தீவின் உயிரின பன்முகத் தன்மை (Bio-diversity) எந்தளவிற்கு செழித்து இருந்திருக்க வேண்டுமென பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆனால், ஃப்ரெஞ்ச் மக்கள் அத் தீவை உறித்து எடுத்தது போக, 1915லிருந்து 1934 வரையிலும் அமெரிக்க ஆக்கிரமிப்பின் பொழுது அலும்னியத்திற்கான தாதுப் பொருள் கிடைக்கிறதென நாட்டையே புரட்டிப் போட்டு தோண்டியிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல், ரப்பர் மரங்களை அங்குள்ள இயற்கை மழைக்காடுகளை அழித்து ஒரு தனியார் நிறுவனம் தனது இஷ்டத்திற்கு அவ் மரக் கன்றுகளை நட்டு விளையாண்டிருக்கிறது. எனது நண்பர் ஒருவர் அவரின் அனுபவத்தை இது தொடர்பாக பகிர்ந்து கொள்ளும் பொழுது எப்படி சிறு நாடுகளை தன் சொந்த லாபத்திற்காக வளர்ந்த நாடுகள் கண்மூடித்தனமாக பயன்படுத்திக் கொண்டு விட்டெறிந்து விட்டு வந்துவிடுகிறது பின்னாளில் என்பது விளங்கியது.

இன்று அந்த நாட்டிலிருந்து சாகுபடியாகிக் கொண்டிருந்த கரும்பையும், வாழை, மா போன்றவைகளின் இறக்குமதியைக் கூட சில அரசியல் காரணங்களால் அமெரிக்கா நிறுத்தப் போக விளைவு மக்கள் உள்ளதைக் கொண்டு வாழும் நிலை உள் நாட்டில். விளைவு எது அவர்களின் அழியா சொத்தாக, உயிர் காக்கும் தோழனாக இருக்க வேண்டியிருந்த வனங்களும், பலன் தரும் பழ மரங்களும் கூட தனது அகோர பசிக்கு ஒன்றன் பின் ஒன்றாக வெட்டி வீழ்த்தப் போக எஞ்சி நின்றது வெறும் மலை அதுவும் மணல் குன்றுகளாகத்தான் போல.

அதனையொட்டி ஓவ்வொரு முறையும் ட்ராபிகல் சூறாவளிகள் அந் நாட்டை கடக்கும் பொழுதும் மலைகள் மரங்களற்ற நிலையில் கரைந்து வெறும் சேற்று ஆறாக வெள்ளம் ஊர்க்காடுகளில் பெருக்கெடுத்து நடக்கவோ அல்லது வீடுகளில் கூட வாழவோ முடியாத நிலை. அண்மைய குஸ்டவ் மற்றும் ஐக் என்று பெயரிடப் பட்ட சூறாவளிகள் அடுத்தடுத்து தாக்கும் பொழுது அதிகளவில் உயிரிழப்பை சந்தித்தது ஹெய்டி மட்டுமே.

இந் நிலையில் அந் நாட்டில் சரியான அரசியலமைப்பும் சீர் கெட்டுப் போன நிலையில், வறுமையும், வன்முறையும் ஒரு சேர கூட்டுச் சேர்ந்து அந் நாடே ஒரு அழிவின் விளிம்பில்.



(மேலே உள்ள படத்தில் கவனித்துப் பார்த்தீர்களேயானல் சேற்று ஆறிலிருந்து தப்பிக்க மக்கள் அகப்பட்ட கூரைகளில் தஞ்சம் புகுந்திருப்பதனை காணலாம்)

இதனிலிருந்து உலகிற்கு கிடைக்கும் பாடம் என்னவெனில், அரசியல் வாதிகளின் சுரண்டல் புத்தியும், சுயநலமும், தீர்க்க மற்ற பார்வை இயற்கை சார்ந்தும் தனது நாடு சார்ந்தும் இல்லாமல் போனால், அதனால் ஏற்படும் பின் விளைவுகள்தான் இன்று கண்ணுரும் இந்த மனித அவலம். வளரும் அத்துனை நாடுகளும் பிற வளர்ந்த நாடுகளுடன் போட்டுக் கொள்ளும் ஒவ்வொரு கண்மூடித்தனமான ஒப்பந்தங்களுக்குப் பின்னாலும் எது போன்ற இயற்கை சுரண்டல்கள் நடைபெறும் என்பதனை நீண்ட கால யுத்தியாக யோசித்து நகர்வடைவது நலம் பயக்கும் என்று அறிந்து கொள்வதே.

இருந்தாலும் அந்த பாடத்தை பிற நாடுகள் கண் கூடாக அறிந்து கொள்ள ஹெய்டி மக்கள் கொடுத்த விலை அளவிடற்கரியது.


Thursday, September 11, 2008

மலிந்து வரும் அமெரிக்க அரசியல்: Cheap Political Stunts

வரும் நவம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் அமெரிக்கத் தேர்தலில் எதிர்பார்த்தபடியே பல குட்டிக்கரனங்கள் ஒவ்வொன்றாக அரங்கேற ஆரபித்தாகிவிட்டது என்பதற்கிணங்க குடியரசுக் கட்சியின் துணை ஜனாதிபதிக்கு ஜான் மெக்கெய்ன் அலாஸ்காவிலிருந்து இறக்குமதி செய்திருக்கும் சாரா பேலின் என்ற ச்சியர் லீடிங் நன்றாகவே செய்யும் அழகுப் பதுமையின் தேர்வின் மூலமே அறிந்து கொள்ள முடிகிறது, குட்டிக்கரனங்களின் தொடக்கத்தை.



சாரா பேலின் இந்தக் காட்சியில் இணையும் வரை நன்றாகவே சென்று கொண்டிருந்த அரசியல் சார் பிரச்சாரங்கள் இன்று வேறு திசை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. அதனை கண்ணுரும் பொழுது ஏற்கெனவே கிலி பிடித்திருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு மேலும் அதுவே அச்சாணி அடித்து நிறந்தரமாக குடியேறி விடுமோ என்ற அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந் நிலை மிகவும் வருத்தத்திற்கூரியது. ஏனெனில், பேசப் படக் கூடிய விசயங்களை ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு, கூட்டத்தினை கைதட்டி "க்கோ ட்டீம் க்கோ" சொல்லிக் கொண்டிருப்பதில், ஒரு விளையாட்டு அணி வெற்றிப் பெற வேண்டுமானால் உடனடி குளூக்கோஸ் ஏற்றுவது போல விளையாட்டு வீரர்களுக்கு ஏற்றி விளையாடி வெற்றி பெற வைக்கலாம்.

ஆனால், இங்கு வாழ்வா, சாவா நிலையில் இது போன்ற ஒரு கவர்ச்சி(கன்னித்) திட்டம் தேவையா, நாட்டிற்கும் ஏன் இந்த உலகத்திற்குமே? மற்றுமொரு நான்கு வருட தீரன் புஷ்ஷுன் அடாவடி பொறுப்பற்ற அரசியல் பிரயோகத்தை இந்த உலகம் தாங்குமா? இதோ அதனையும் சுவைத்துப் பார்த்துவிட நேரம் வந்துவிட்டது. நான் முன்பே கருதி, எழுதியும் வைத்து விட்டேன் ஜனநாயக கட்சி சில பல காரணங்களுக்ககாவும், குடியரசுக் கட்சியின் அரசியல் தந்திரத்தாலும், இந்த முறையும் அந்தக் கட்சிக்கே வெற்றி பெரும் அனேகத் தன்மையென ...இந்தப் பதிவின் மூலமாக.

கடந்த சில மாதங்களாக ஓபாமாவின் பின் புலத்தை அறியும் தருவாயில் இழந்த பொருளாதார இழப்புக்களையும், உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கும், சர்வ தேச முறிந்த உறவுகளை புதுபிக்கவும் - அமெரிக்காவின் முக்கியமான வரலாற்று சந்திப்பில் இவரே ரட்சகராக இருக்க முடியுமென்ற எண்ணம் ஆழமாக என் மனதில் பதிய ஆரம்பித்தது.

இந் நிலையில் சாரா பேலினின் மூலமாக மலிந்த வளரும் நாடுகளின் அரசியல் தந்திரங்களை குடியரசுக் கட்சி இங்கும் அமல் படுத்த ஆரம்பித்து விட்டது. அமெரிக்க அரசியல் நாகரீகத்திற்கு இது ஒரு பின்னடைவுதான். முன்பே கூறியதைப் போன்று அரசியல் நாகரீகத்துடன் தேவையான விசயங்களை பேசிச் சென்ற கூட்டங்கள் இப்பொழுது தனிப்பட்ட முறையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது.

சாரா பலீன் தனது கட்டற்ற குழந்தை ஈன்றெடுப்பு, டவுன் சின்ரோமிருந்தும் தனது மன உறுதியாலும்(?), மத கோட்பாட்டை முன் நிறுத்துவதாலும் ஒரு அர்பணித்த கிருஸ்துவர் என்ற அடையாளத்தின் கீழ் தனது குடும்பத்தை மேடையிலேற்றி ஓட்டு வேட்டை நடத்த ஆரம்பித்துவிட்டார். அதாவது தன் குடும்பம் சார்ந்த பச்சாதாபத்தை முன்னுருத்தி. அதுவும் போர், போர் என்றழையும் மனிதர்களை உள்ளடக்கிய கட்சிக்காக. இதன் மூலமாக அடையப் போகும் பலன் யாவரும் அறிந்ததுதான்.

ஆனால், இதில் என்னவொரு நகைமுரண் என்றால் மற்ற கலாச்சாரங்களை நாகரீமற்று, காட்டுமிரண்டிகளாக இருப்பதாகக் கூறி அவைகளுக்கு விடுதலை அளிக்க எத்தனிக்கும் ஒரு கட்சியே அது போன்ற காலவதியாகிப் போன அடையாளங்களை முன்னுருத்தி ஓட்டு வாங்க எத்தனிப்பதுதான், அது. இவர்கள் இவர்களின் புத்தகத்தின் அடிப்படையில் வாழ்க்கையை அணுகுகிறார்கள் என்றால், அந்தச் சமூகம் அவர்களின் புத்தகத்தின் வழி நடக்கிறார்கள், இதில் யாருடைய வழி சிறந்த வழி என்பதனை யார் கூறுவது?

ஓபாமாவின் ஜனநாயக் கட்சி இந்த வெற்றி வாய்ப்பை தவறவிடும் பட்சத்தில் பல சிரமங்களை இந் நாடும், உலகமும் அனுபவிக்கப் போவது உறுதி என்பது மட்டும் எங்கோ மனதின் ஓரிடத்தில் அபாய மணி அடித்துக் கூறிக் கொண்டே இருக்கிறது. History repeats itself once again, fasten your seat belts my fellow folks.

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

அமெரிக்க அரசியல் - தெகாவிற்கான பதில்! by யு. எஸ். தமிழன் [குடியரசுகட்சியின் சாதனைகள் அதனை சரியாக பார்க்கத் தவறிய பொது (என்னைப் போல) ஜனங்களுக்குமான பதிவிது].

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.... by அவியல்செல்வி - [குடியரசுக் கட்சியில் குறிப்பாக சாரா ப்பேலின் ஏன் திடீர் உதயம் என தோலுரித்துக் காட்டும் பதிவிது].

Monday, August 11, 2008

ஒலிம்பிக்ஸ், சைனா, இந்தியா = Where Is India?

நேற்று மாலை 4X100 நீச்சல் போட்டியில் ஃப்ரான்ஸை அமெரிக்கா தோற்கடிக்கும் பொழுது மைக்கேல் ஃபெல்ப்ஸின் உற்சாக கூச்சல் ஒரு கொரில்லாவின் கொக்கரிப்பைக் காட்டிலும் அதீதமாகவே கொப்பளித்தது, உணர்வுப் பூர்வமாக இருந்தது. அதே சமயத்தில், பார்த்துக் கொண்டிருந்த சானலில் விளம்பர இடைவெளியில் நம்மூர் ட்டி.வி சானல் பக்கம் திருப்பினால் அய்யகோ சூப்பர் டான்சர்-2 என்ன எழவோ ஓடிக் கொண்டிருந்தது.

1.2 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாட்டிலிருந்து வெறும் 54 வீரர்கள் அதுவும் என்னவோ ட்டி.வி விளம்பரங்களில் நடிப்பதற்கு செல்பவர்களைப் போல தழுக், மொளுக்கென்று நாம் கண்ணுரும் அதே ட்டி.வி விளம்பர மக்களின் தோல் நிறத்துடன். இவ்வளவு பெரிதாக பரந்து விரிந்து கிடக்கும் ஒரு நாட்டிலிருந்து நம்மால் பல துறை விளையாட்டு விளையாடும் வீரர்களை ஏன் அனுப்ப முடியவிலை? என்ன நடக்கிறது?

நம்மூரில் விளையாட்டென்றாலே அது கிரிக்கெட் மட்டுமே என்பது போல ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்து அதிலிருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தை கூடி நின்று பங்குபிரித்துக் கொள்வதிலேயே வாழ் நாளை கடத்திக் கொண்டிருக்கிறோமோ? இந் நிலையில், உலக அரங்கில் நாகரீகமான முறையில் தன் பிற ஆளுமையைக் காட்டிக் கொள்ளும் வாய்ப்புகளாகக் கருதப்படும் இது போன்ற ஒலிம்பிக்ஸ்ல் எங்கே கவனம் செலுத்த நேரமிருக்கு. நாட்டை மாநிலங்களாக பிரித்து தன்னால் எவ்வளவுக்கெவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவுகவ்வளவு சுரண்டத் தான் நேரமிருக்கிறதே ஒழிய எங்கே இது போன்ற தருணங்களை ஒரு நாடு என்ற கட்டமைப்பில் தேசியம் சார்ந்து பெருமை பட்டுக்கொள்ளும் விசயங்களில் கவனம் செலுத்த நமக்கு நேரமிருக்கும்.

நான் நினைக்கிறேன் ஏதேனும் பாகிஸ்தான் ஒலிம்பிக்ஸில் கவனம் செலுத்தி நம்மை விட கோல்ட் மெடல்கள் வாங்கி உசுப்பேத்தினால்தான் நமக்கு சூடு வருமோ. ஐ. நாவில் நிரந்தர குழும உரிமை கேட்டுப் போய் நிற்கிறோம், ஆனால் சத்தமில்லாமல் இது போன்ற வாய்ப்புகள் கிடைக்கும் தருணம் தோரும் நம்மை நிரூபித்துக் கொள்கிறோமா? சைனாவுடன் நம்மை தினம் தோரும் ஒப்பிட்டுளவில் பேசி நாட்களை கடத்தி வருவதில் என்ன பெருமை இருக்கப் போகிறது?

அவர்களும் பல சூழ்நிலைகளில் சத்தமே இல்லாமல் பெரிய பெரிய காரியங்களை சாதித்துக் கொள்வதனைப் போல் உள்ளது. ஒலிம்பிக்ஸின் 100 வருட வரலாற்றையே புரட்டிப் போடுவதனைப் போல ஒரு ஒலிம்பிக்ஸ் திறப்பு விழாவை நடத்திக் காமித்து உலகத்தையே வாயடைக்க வைத்திருக்கிறார்கள். இதன் மூலமாக அவர்கள் தங்களின் ஆளுமையை சத்தமில்லாமல் உலகரங்கில் மேலும் நிரூபித்துக் காமித்திருக்கிறார்கள். தீரன் புஷும் அங்கே டெண்ட் அடித்து உட்கார்ந்திருக்கிறது, காரணம் சைனா ஒரு மார்க்கமாக இருப்பதாக இருக்குமோ என்று எண்ண வைக்கிறது.

நம்மூரில் தனிப்பட்ட ஒன்றிய, மாவட்ட, மாநில, நாட்டு அரசியல் வாதிகளுக்கு பணத்தாசை என்று ஒழிந்து இது போன்ற உலகரங்கில் நம்மை தூக்கி நிறுத்திப் பார்க்க வேண்டுமென்ற ஆசை, வெறி வரப்போகிறதோ, என்று நாமும் சத்தமில்லாமல் பாகிஸ்தானைக் காட்டிலும் இதிலெல்லாம் வளர்ந்துவிட்டோமென்று சத்தமில்லாமல் நிரூபித்துக் காட்டிக் கொள்ளப் போகிறோமோ, தெரியவில்லையே. எல்லாமே கனவு நிலையிலேயே தேக்கமுற்றுப் போய்விட்டதே! இந்த பணத்தாசை பிடித்த பித்தர்களால்!!

இந்த தனியார் தொலைக்காட்சிகளும் கிரிக்கெட்டையும் தாண்டி கொஞ்சம் சிறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று மற்ற விளையாட்டுக்கள் நடை பெறும் பட்சத்தில் அவர்களை வெளிக்கொணர்ந்து மக்களுக்கேனும் ஒரு நம்பிக்கை வழங்குவதின் மூலம் ஏதாவது மாற்றம் நடக்க வாய்ப்புண்டா?

இல்லை ஓவ்வொரு ஒலிம்பிக்ஸ் சீசனிலும் இப்படி பெருமூச்சு விட்டுக்கொண்டே, வாய் வீச்சில் மட்டும் நாங்க எம்பூட்டு பெரிய ஆள்னு காத்தில கத்தி வீசிட்டு இருக்க வேண்டியதுதானா? சகிக்கவில்லை, நம் நிலமை :-(.

Tuesday, August 05, 2008

கருக்கலைப்பு சட்டம் இது நியாயமா? : Abortion Rights...

நேற்று ஒரு நண்பரோட பேசிட்டு இருக்கும் பொழுது தெரிய வந்தது இந்தச் செய்தி, அது மும்பையில் வாழ்ந்து வரும் தம்பதிகளுக்கு கருவில் இருக்கும் தனது 24 வார கால சிசுவிற்கு இதய சம்பந்தமான பிரச்சினை இருப்பதாகவும் அதனை கருக்கலைப்பு செய்ய அனுமதிக்குமாறும் நீதி மன்றத்தை அணுகியிருக்கிறார்கள், ஆனால் நீதி மன்றம் அதனை மறுத்துவிட்டதாம். மேலதிக முழுச் செய்திக்கு இங்கே சொடுக்கவும் - அபார்ஷன் சட்டத்தை திருத்த முடியாது-அன்புமணி.

எனது நண்பர்களுக்கும், வீட்டு அன்பர்களுக்கும் கூட அப்படி அந்த தம்பதியர்களுக்கு கருக்கலைப்பிற்கு அனுமதி வழங்குவது நியாயமாகவே படுவதாக கூறினார்கள். ஆனால், இதனை இந்திய அரசியல் சட்டம் தடுக்கிறது. அதாவது ஒரே ஒரு பெண்மணிக்காக இந்தத் சட்டத்தை திருத்த வேண்டியதில்லை என்று.

அதாவது, இது போன்று ஒரு குழந்தை கருவிலேயே உடல் ரீதியாக சரியான வளர்ச்சியை எட்டாமலோ, அல்லது உறுப்புகளின் செயல் திறன் குறைபாடுகளோட பிறக்க சாத்தியமிருக்கும் பட்சத்தில் குழந்தையை எதிர்காலத்தில் வைத்து, அதற்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கப் போகும் பெற்றோர்களின் கையில் ஏன் அம் முடிவை எடுக்கும் உரிமையை வழங்கக் கூடாது? அதுவும் இது போன்ற ஒரு சிறப்பு சூழ்நிலையில், என்பதுதான் எனது கேள்வி.

இது போன்ற உறுப்பு குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தை எதிர்காலத்தில் தன்னையும் வருத்திக் கொண்டு, தன்னோட ஒட்டி வாழ்பவர்களையும் பல இன்னல்களின் வழி நடத்திச் செல்லலாம் பொருளாதார, மன உளைச்சல், ஆள் தேவை என பல படிகளில், இல்லையா? அதிலும் குறிப்பாக பணத் தேவை தொடர்ந்து தேவைப்படும் பட்சத்தில் இந்த சட்டமோ, அல்லது சிசுவை கருவில் கலைப்பது இறைத்தன்மையற்றது அல்லது கருணையற்றத்தனம் என்று கூறுபவர்களின் வாதமெல்லாம் அன்று அவர்களுக்கு துணை நிற்காது. அது அந்த குறிப்பிட்ட குடும்பத்தின் மீது விழுந்த பாரமேயன்றி எவருடைய கருசணையும் அவர்களுக்கு தினப்படியாக கிட்டப் போவது கிடையாது, என்பது நிசர்சனம்.

அப்படியே இந்தச் சட்டம் பெற்றோர்களின் கோரிக்கையை தாண்டியும் வலியுருத்தி அந்தக் கருவை வளர்த்து பிள்ளையாக பெற்றெடுக்க வைக்கும் பட்சத்தில் வேண்டா வெறுப்பாக பிள்ளையை நடத்தினாலோ, அல்லது பெற்றோர்களே மன உளைச்சலில் சிக்கித் தவிக்கும் பொழுது என்ன ஆறுதலை வழங்கப் போகிறது? ஏன், பெற்றோர்களின் முடிவில் இது போன்ற சூழ்நிலையில் பக்கம் நிற்கக் கூடாது இந்தச் சட்டம்? புரியவில்லையே...





ஒரு கொசுறுச் செய்தி: தட்ஸ்தமிழில், படிக்கும் பொழுது ஒரு க்ரிஸ்துவ மிஷனரி குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள முன்வருவதாக தெரிவித்தமைக்கு, அங்கே வந்த பின்னூட்டங்களில் ஒருவர் உடனே அந்த மிஷனரியின் நோக்கத்தை அதாவது தத்தெடுத்து மதம் மாற்றுவதற்காவே செய்ய முன் வந்திருக்கிறார்கள் என்று கோபப்பட்டிருக்கிறார். அதனைப் படித்தவுடன் அட இப்படியும் மனிதர்களா என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

Monday, July 21, 2008

நீரிழிவு நோயின் ஒன்பது முன் அடையாளங்கள்: Diabetes Symptoms!

நீரிழிவு நோய் கிட்டத்தட்ட எல்லோராலும் பொதுவாகவே டேக் இட் ஈசியாக எடுத்துக் கொள்ளப்படும் வியாதிகளில் ஒன்று. ஆனால், இதன் தாக்கத்தின் விளைவு நாம் நினைப்பதனைக் காட்டிலும் மோசமான நிலையில் தலை முதல் கால் வரை கிட்டத்தட்ட எல்லா உறுப்புகளையும் சிறிது சிறிதாக செயலிழக்க வைத்து இறுதியில் மரணமே முடிவாக நிகழ்த்தி விட்டுச் சென்று விடுகிறது.

நேற்று ஒரு ஆர்வமூட்டு கட்டுரை ஒன்று இதன் பொருட்டு வாசிக்க நேர்ந்தது அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப் பதிவு. நீரிழிவு நோய் பற்றிய விரிவான கட்டுரையை வாசிக்க நம்ம பத்மா அர்விந்தின் பதிவிற்கு சென்றால் காணலாம்.

இங்கே நீரிழிவு நோய் இருக்க நேரிடின் அல்லது எட்டிப் பார்க்க ஆரம்பிக்கும் பொழுது எது போன்ற முன் அடையாளங்களாக காட்டிக் கொண்டிருக்கிறது என்று பார்க்கலாம்.

1. கண் புருவத்தின் நிறம் - (Eyebrow Color):

உடல் ரோமங்கள் பொதுவாகவே நரைக்க ஆரம்பித்துருக்கும் பட்சத்தில் கண் புருவம் மட்டும் மறுத்தால், நீரிழிவு நோய் இருப்பதற்கான வாய்ப்பதிகமாம்.

2. மார்பக அளவு(பெண்களுக்கு) - (Breast Size):

பெண்களில் இருபது வயதடையும் பொழுதே D அளவிற்கும் பெரிதான உள்ளாடை அணிய நேர்ந்தால், சக வயதில் அதனை விட சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண் நண்பிகளைக் காட்டிலும் அதிக வாய்ப்பிருக்கிறதாம் இவ் நோய் தாக்க. ஏனெனில், மார்பக எடை வந்து ஆளின் உயரம் மற்றும் எடைக்கு (BMI = Body Mass Idex) சம்பந்தமில்லாத வகையில் தனியாக கணக்கிடப் படுவதால் அப்படி எடுத்துக் கொள்ளப் படுகிறதாம்.

3. பிறந்த மாதம் அல்லது காலம் - (Birth Month or Season):

குழந்தை பிறந்த மாதத்திற்கும் நீரிழிவு நோயின் தாக்கத்திற்கும் ஏதோ காரணமில்லா காரணமிருப்பதாக பத்து ஆயிரம் குழந்தைகளில் நடத்திய ஆய்வுகளில் கண்டிபிடிக்கப் பட்டிருப்பதாக அட்லாண்டாவை மையமாக கொண்ட நோய் தடுப்புக் கழகம் (Center for Disease Control - CDC) கண்டறிந்திருக்கிறதாம். இதில் இலையுதிர்(Fall) காலத்தில் பிறந்த குழந்தைகளைக் காட்டிலும் வசந்த(Spring) காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் தாக்கும் அபாயம் அதிகமுள்ளதாம் அதுவும் வட மாநிலங்களில் பிறந்த குழந்தைகளில். காரணமாக தற்காலிகமா தாய் உட் கொள்ளும் உணவும், மேல் விழும் சூரியக் கதிர்களின் அளவீடுமாக கருதப் படுகிறது.

4. காது கேளாமை - (Hearing Loss):

இதற்கு முன்னால் இது வரையிலும் காது கோளாமையை நீரிழிவு நோயுடன் சம்பந்தப் படுத்தி பார்த்தது கிடையாதாம். ஆனால், இப்பொழுது நீரிழிவு நோயல் பீடிக்கப் பட்டவர்களுக்கு அதிக அளவில் காது கேளாமை நிகழும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

5. குறுகிய கால்கள் - (Short Legs):

குறுகிய கால்களைப் பெற்றவர்களுக்கு நீண்ட கால்களை பெற்றவர்களைக் காட்டிலும் அதிகமான வாய்ப்புகள் நீரிழிவு வகை - 2 தாக்க வாய்ப்புள்ளதாம்.

6. மெதுவாக புண் ஆறும் தன்மை - (Slow-healing Cut):

இரண்டாம் வகை நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு பொதுவாக புண் ஆறும் காலம் சற்று கால தாமதமே ஆகும், இந்த நிலைக்கு Atherosclerosis என்று பெயராம். இதனில் என்ன நடைபெறுகிறதெனில் ரத்த குழாய்கள் தடித்து விடுவதும்(thickening), இரத்தச் செல்கள் இளகுவதும்(thinning) நடைபெறுவதால், ஒரு புண் ஏற்படும் பொழுது அங்கே இரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டுக்கள் அதிகளவில் பாதிக்கப் பட்ட இடத்திற்கு சென்று சண்டையிடும் நிலை குறைந்து போன நிலையில் புண் ஆறும் காலம் அதிகமெடுத்து கொள்கிறதாம்.

7. பல் இழப்பு - (Tooth Loss): மற்றும்

8. ரோம இழப்பு - (Hair Loss):

இங்கும் நமது 6வது அடையாளத்தில் பேசப்பட்ட Atherosclerosis நடைபெறுவதனாலும், அதன் மூலமாக பிராணவாயுவேற்றமும் குறைவதனாலும் விரைவாக கலக்க முடி இருக்கும் நிலைக்குப் செல்வதும் இவ் நோய் இருப்பதற்கான அறிகுறியாம்.

9. பூச்சிக்கொல்லியினால் விளைவு - (Pesticide's Exposure):

அதிகப் படியான பூச்சிக்கொல்லிகளில் கிடந்து உழல்பவர்களுக்கும் இவ் நோய் தாக்கும் அபாயக் கூறுகள் அதிகம் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.



பி.கு: மேலே கூறப்பட்டுள்ள ஒன்பது முன் அறிவிப்பு நோய் அடையாளங்களில் ஒன்றிரண்டு நம்மில் பலபேருக்கு சாதரணமாகவே காணப் பெறலாம்... உ.தா: ரோம உதிர்வு, காது கேளாமை, பல்லிழப்பு போன்றவைகள் அதனால் இவைகள் காணப்பட்டால் அபாய மணி அடித்து விட்டதாக பொருள் கொள்ள வேண்டியதில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது. இருந்தாலும், இரத்தம் சார்ந்த சர்க்கரை அளவு கண்டறிந்தால் நல்லா நிம்மதியா தூங்கலாம் போல.

Saturday, July 19, 2008

கருவாச்சி காவியம் விட்டுச் சென்ற தடயங்கள்

இன்னையோட வைரமுத்துவோட "கருவாச்சிய" நெஞ்சில தூக்கிச் சுமக்க ஆரம்பிச்சு மூணு வாரம் ஓடிப்போச்சு. படிச்சு முடிச்சக் கையோட மனசில பட்டதை எழுதி இங்கு பதிஞ்சு வைச்சிரணுமின்னு கொண்டு வந்திருக்கேன். இந்தக் "கருவாச்சி காவியம்" முதலில் எப்பொழுது புத்தக வடிவமாக வெளி வந்ததுன்னு எனக்குத் தெரியலை. ஆனா, எனக்கு நினைவிலிருக்கு போன வருடம் புதுகையில் போடப்பட்டிருந்த ஒரு சிறிய புத்தகக் கண்காட்சியில் இதனையும், கள்ளிக்காட்டு இசிகாசத்தையும் பார்த்துவிட்டு, முதலில் இரண்டாவது புத்தகத்தை வாங்கியதனை.

ஆனால், படிக்க படிக்க எழுத வருபவர்கள் எதற்காக எழுத முன் வர வேண்டுமென்ற உணர்வை வரி தவறாமல் கருவாச்சிக் காவியம் உணர்த்திக் கொண்டே வரத் தவறவில்லை. தமிழகத்தின் வறண்ட பூமிக் கிராமங்களில் இப்படியும் மூர்க்கமான நம்பிக்கையும், அன்பும், மனித விகாரங்களில் சகிப்புத்தன்மைமிக்க மனிதர்களும் ஒருங்கே பின்னிக் கிடப்பதனை படிக்க படிக்க நெஞ்சில் நமக்கே ஈரமும் நம்பிக்கையும் ஒருங்கே சுரக்கிறது. மேலும் வட்டார வழக்க மொழிகளில் மேலும் இது போன்ற படைப்புகள் எழுத வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துவதாகவே பட்டது.

உலகத்தின் கடைக் கோடியில் உள்ள ஏதோ ஒரு சொக்கத்தேவன் பட்டியில் வாழும் ஒரு பெண்ணின் வாழ்வியலைக் கொண்டு ஒட்டு மொத்த மனிதக் கூட்டத்தின் ஆசா பாசங்களையும், மன விகாரங்களையும் இந்தக் காவியம் தூக்கிச் சுமக்கிறது. எழுத்தாளனின் பெரும் ஆசையைப் போலவே இது கால வெள்ளச் சுழிப்புகளைக் கடந்து இந்தக் காவியம் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ளுமென்ற நம்பிக்கை எனக்குமிருக்கிறது.

கதையின் ஓட்டத்தில் கருவாச்சி சந்திக்கும் நம்பிக்கை துரோகங்களும், காலம் அவளுக்கு முன்னால் வைக்கும் சவால்களையும், மரணங்களையும், வறட்சியையும்,

பட்டினியையும் அவள் முகம் கொடுத்து சந்திக்கும் பாங்கு மீதமுள்ள மனுச ஜீவராசிகளுக்கு

ஒரு நம்பிக்கையூட்டும் விதமாகவுள்ள கடற்கரையோர ஒளி விளக்கு. கடைசி அத்தியாங்களில் அவள் வழி வருகின்ற ஒரு சுவாமிஜிக்கும், கருவாச்சிக்கும் நடைபெறும் சம்பாஷனைகளைக் கொண்டு ஒட்டு மொத்த வாழ்வியல் சார்ந்த கேள்விகளுக்கும் பதில் வழங்கப்பட்டுள்ளது. அதன் எச்சம் சமா காலத்தில் வாழும் கருவாச்சிகளிடத்தே நம்மை சம்பாஷனைத் நிகழ்த்த ஊண்டு கோலாக அமையலாம்.

சுவாமிஜி, கருவாச்சிப் பேசப் பேச தன்னோட படிப்பறிவில் நிற்கும் ஒரு உபதேசத்தை நினைவில் நிறுத்துவதாக வரும் இந்த வரிகள் ரொம்பப் பிடிச்சிருந்துச்சு, என்னோட குறிப்பேட்டில் நிறந்தரமாக இருத்தல் எண்ணி இங்கு பதிந்து வைக்கிறேன்...

...பொருளே பற்றுறுத்தும்;
பற்று ஆசையாய் முற்றும்;
அவ்வாசை தடைப்படின்
சினமே தீயாய்ப் பரவும்;
சினம் சித்தம் குழப்பும்;
சித்தக் குழப்பம் புத்தியழிக்கும்;
புத்தி அழிவுறின் சரீரம் ஆத்மம் சரியும்."

ஏண்டா படிச்சு சீக்கிரமே முடிச்சிட்டோமின்னு இருக்கு.

Monday, June 16, 2008

DasaAvataram : நானும் பார்த்திட்டேன்!!

தசாவதாரம் பார்க்க முடிஞ்சதே ஒரு chaotic eventஅ ஆகிப் போச்சு எங்க தரப்பில. மதியம் இரண்டு மணிக்கு அரக்க பறக்க கிளம்பி எப்பொழுதும் அட்லாண்டாவில் படமிடும் இடம்தானே என்று காலாக்சி சினிமா திரையரங்கிற்கு அத்தனை ட்ராஃபிக் லைட்டிலும் நிப்பாட்டி, நிப்பாட்டி ஒரு வழியா 2.45க்கு அரங்கத்தின் வாசலுக்கு வந்தடைந்தோம்.

முகப்பில் நம்மூர் இளைஞர்கள் இருவர் பேசிக்கொண்டிருந்தனர். இங்குதானே தசாவதாரம் ஓடுகிறது என்று கேட்டேன், அவர்களும் ஆமாமென்றார்கள். சரின்னு ஒரே எக்சைட்மெண்ட்ல கண்ணெல்லாம் இருட்டிப் போயி மூணு டிக்கெட்டை வங்கினத்துக்கபுறம்தான், திரும்பிப் பார்த்தேன், என்னாடாது மூணு மணி காட்சிக்கு அதுவும் ஞாயிற்றுக் கிழமை இப்படி காத்து வாங்குதேன்னு நினைச்சிக்கிட்டே திறந்து கிடந்த கதவின் வழியே பார்த்தா, பார்த்தா... "லோக நாயகனே, னே னேன்னு" பாட்டு ஓடிட்டு இருந்தது என் காதிற்கு தமிழில் உலக நாயகனேன்னு கேக்குது, என் மனைவி காதிற்கு லோகமா கேட்டுருக்கு என்னங்க இது தெலுங்கு வெர்சனால்லை இருக்கும் போலன்னு கேட்டு என் வயிற்றில் புளியைக் கரைத்தால்.

போச்சுடான்னு நானும் பக்கத்தில இருந்த மொத்த 12 பேரையும் பார்த்து இது தெலுங்கு வெர்சனான்னு கேட்கப் போக எல்லாம் ஆமான்னு சொல்ல, பிடிச்சேன் ஓட்டம் பீச்ட்ரி 8 சினிமா அரங்கத்திற்கு கொஞ்சம் அரைகுறையானா ட்ரைவிங் முகவரியோட அதாவது குத்து மதிப்பா. மணி 2.55க்கு ஓடி சரியா 3.05க்கு எப்படியோ தடவிப் பிடிச்சிட்டேன் மூணு மைல் தொலைவில் உள்ள சரியான திரையரங்கத்தை.

டிக்கெட் ஈசியாத்தான் கிடைச்சிச்சி. ஒரே நேரத்தில இரண்டு திரையரங்கத்தில் போட்டார்கள் ஒரே ப்ரெஜெக்டரிலிருந்துன்னு நினைக்கிறேன். அதுனாலே, நல்ல ஃப்ரீயா உட்கார்ந்து பார்த்தோம்.

சரி, இப்ப படத்தைப் பத்தி நான் நினைக்கிறதை சொல்லிடுறேன். கொடுத்த காசுக்கு கமல் அசராம தன்னோட சிரத்தையான உழைப்பின் மூலமா நிறுபிச்சிருக்கார், ஃப்ரேமிர்க்கு ஃப்ரேம். அப்படியே எந்த 'குத்'தையும் யோசிக்காம நேரடியா உள்வாங்கி பார்த்தா படத்தோட நீளம் தெரியாம வழுக்கிட்டு போகுமென்பது என்னோட வந்தவர்களையும் சேர்ந்து நாங்க உணர்ந்தது.

படத்தில இருக்கிற அரசியல் விசயங்களை அலசி காயப் போடணுமின்னா, இந்தப் படத்தில வார ஒவ்வொரு முக்கியமான கேரக்டர்களும் என்னா பேசுது அதற்கு தகுந்த மாதிரியான உடலைசவுகள், பின்னணி காட்சிகள்னு ஏராளமான விசயத்தை இன்னொரு இரண்டு, மூன்று முறைகள் பார்த்துத்தான், ஸ்கிரிப்டையே முழுசா வாங்கி வாசிச்சிட்டுத்தான் சொல்ல முடியுமின்னு நான் நினைக்கிறேன். நிறைய பேரு கதைக் களத்தைப் பற்றியும் தனிப்பட்ட கமலின் 10 காரக்டர்களை பற்றியும் தொடர்ந்து எழுதி தள்ளிட்டாங்க.

இந்த நிலையில் எல்லாத்தையும் படிச்சிட்டுத்தான் படம் பார்க்கப் போனேன். அப்படியிருந்தும் படம் நல்ல விறுவிறுப்பா நகர்த்துச்சு. குறிப்பா எனக்கு அந்த பூவராகவன், பால்ராம் நாயுடு கேரக்டர்கள் ரொம்பவே பிடிச்சிருந்தது. ஃப்ளெச்சர் கேரக்டரை வந்து "தி சின் சிட்டி"யில வந்த மொட்டைத் தலை கேரக்ட்ரை வைச்சி தலையை செதுக்கின மாதிரி தெரியுது. வெள்ளைக் கார துரைங்க தலைன்னா பெரிசா இருக்கணுமின்னு சொல்லிச் சொல்லி செஞ்ச மாதிரி இருக்கு.

அது சரி 12ஆம் நூற்றாண்ட்ல நடந்ததா காமிச்சி அது ஏன் வைஷ்ணவ ஆட்களை கொக்கிப் போட்டு தூக்குறத காமிச்சவங்க ஏன் சைவர்களை நடு ரோட்டில நிறுத்தி கழுவில ஏற்றினது, முழியைப் பிடிங்கினது மாதிரியெல்லாம் (இன்னொரு ஃப்ரேமில) காமிக்காம இந்த குறிப்பிட்ட காலக் கட்டதில இருந்து மட்டும் ஆரம்பிச்சிருக்குன்னு இயற்கையா மனசில ஒரு கேள்வியா தொக்கி நின்னுச்சு. நமக்கு இதில இருக்கிற அரசியல் எல்லாம் புரியாதுங்கிறதை நினைக்கும் பொழுது யப்பாடா ரொம்ப நல்லாதாப் போச்சுன்னு தோணுது. நான் எடுத்துக்கிறேன், எப்படியோ மனுசங்களுக்கு தேவை சண்டை போட்டுக்கிட்டு வயிற்றுப் பிழைப்ப அது மூலமா ஓட்டணும் அப்படின்னு.

ஆக மொத்தத்தில பார்க்க வேண்டிய படம்.

Sunday, June 15, 2008

The Happening : இது எங்களுக்குத் தேவையா?

சும்மா இருக்க முடியாம யூட்யுப்ப புடிச்சி நோண்டப் போக, வந்து மாட்டினது நம்மூரு இயக்குனரான (இப்படிச் சொல்லிக்கலாமில்ல) நைட் சியமாலன் ஹாலிவுட்டில் இயக்கிய தனது ஆறாவது படமான "த ஹாப்பனிங்"வோட ப்ரீவியூ. சரி, பார்த்து வைப்போமேன்னு அங்கே கிடைச்ச ரெண்டு, மூணு ப்ரீவியூவை பார்த்தேன், கொஞ்சம் ஆர்வம் வந்துச்சு மரம், மட்டை, செடி, கொடி எல்லாம் அசையிரதை பார்த்தும், மக்கள் ஆ'ன்னு வாய திறந்த படியே எப்பொழுதும் போல மேலே பார்த்துக்கிட்டு இருக்கிற வைச்சிம் - முடிவு பண்ணிட்டேன் தியேட்டருக்கு போயி பார்க்கிறதுன்னு.


இன்னொரு காரணமுமிருக்கு ஏன் இந்தப் படத்தை நான் திரையரங்கத்திற்கு சென்று பார்க்கணுமின்னு நினைக்க, அவர் எடுத்த The Lady In The Water, The Villager என்ற படங்கள் சொல்லிக்கிற மாதிரி ஒரு கிலியையும் பார்க்கிறவங்களுக்கு கொடுக்கலை. இப்பத்தான் நான் தி லேடி இன் த வாட்டர் டிவிடியில போட்டுப் பார்த்தேன், ரொம்ப அயர்ச்சியா இருந்துச்சு. கதை நகர்த்தும் விதம் நல்லா இருந்தாலும், அந்த திக், திக் குழந்தை தனமா இருக்கு.

சரி, இப்ப உள்ள தி ஹாப்பனிங்கு வருவோம். நியுயார்க் டைம்ஸ் தினசரி, வார்னிங் பெல் அடிச்சிருந்திச்சு மீறி நம்மூரு பாசத்தில மூணு பேருக்கு $28.50 கொடுத்து உள்ளே போனோமிங்க, படம் ஆரம்பிச்ச வேகம் அட்ரீனலை கணக்கில்லாம பம்ப் பண்ணவிட்டு ரொம்ப எதிர்பார்ப்போட நிமிர்ந்து உட்கார தவறவிடலை. ஆனா, போகப் போக நம்ம நைட் சியமாலன் குழந்தைகளுக்கு பெட் டைம் கதை படிக்கிற மாதிரி மக்களை விட்டே பேசிக்க வைச்சிட்டார் வந்த கடைசி மூன்று படங்களிலும் நடந்த மாதிரியே :(.

ஒரு வரிக் கதை: இந்த மரம், செடி, கொடிகளெல்லாம் நம்ம அடிக்கிற அட்டூழியத்திற்கு பதிலடி கொடுக்கிற மாதிரி ஏதோ நம்ம நரம்பு மண்டலத்தை ஸ்தம்பிக்க செய்ற மாதிரி ஓர் நச்சை வெளிப்படுத்தி சுவாசிக்கிறவங்களை தற்கொலை பண்ணிக்க தூண்டுது(குறிப்பிட்ட ஏரியாக்களில்).

இது வரை வந்த அவரோட படங்களில் இரத்தத்தை பார்த்திருக்க முடியாது, ஆனா இந்தப் படத்திலே இதுதானே மக்கா வேணுங்கிற கனக்கா அவரோட கற்பனையை முடிக்கி விட்டு எப்படியெல்லாம் தற்கொலை பண்ணிக்கலாமிங்கிற காட்சியமைப்புகள் ஏராளமா வருது. வரும் வழியெல்லாம் என்னோட படம் பார்த்தவர்கள் ஒரு படம் பார்த்த எபஃக்டே இல்லையேன்னு புலம்பல்.

மொத்தத்தில சுற்றுப்புரச் சூழல் சார்ந்து நைட் சியமாலன் பக்கமிருந்தும் ஒரு படமின்னு வைச்சிக்கலாம். ஒரு காட்சி பின்னணியில் அந்த அணு உலைகள் புகையை கக்கிக் கொண்டிருக்க அதே ஃப்ரேமில் ஹாட்டாகை நேசிக்கும் ஒருவர் தன்னோட தாவர தோட்டத்தில் செடிகளுடன் பேசும் காட்சியமைப்பினைக் கொண்டு முழுக்க, முழுக்க இது அந்த இயற்கை சார் விழிப்புணர்வு சார்ந்து எடுக்கப்பட்ட படமென்பது விளங்கியது.

Happy Feet (சந்தோஷக் குதிப்பு) தான் நான் கடைசியா திரையரங்கத்திற்கு சென்று பார்த்த கடைசிப் படம். அதுவும் ஒரு இயற்கைசார் விழிப்புணர்வேற்று படம்தான். அதுக்குகடுத்து இதுதான், அயர்ன் மேன் பார்க்கணுமின்னு நினைச்சிட்டு இருந்த என்னய இப்படி வலியப் போயி எலி பொறிக்குள்ள மாட்டின எலி மாதிரி 56 நிமிஷத்தில நானே மாட்டி வெளி வந்தக் கனக்காத்தான் இருக்கு இந்த படம் பார்க்கப் போயி வந்ததும்.

Thursday, May 08, 2008

அமெரிக்கா வாழ் இந்தியர்களின் ஓட்டு யாருக்கு?

இந்தப் பதிவை நான் எப்பொழுதோ போட்டு வைத்திருக்க வேண்டியது, சரி எதுக்கு தேவையில்லாத வம்பு என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் இங்கு சமீபத்தில் தோன்றிய சில பதிவுகள் என்னோட எண்ணங்களை பதிந்துதான் ஆக வேண்டுமென்ற சூழலுக்கு இட்டுச் சென்றதால் இதோ இங்கு.

நடக்கவிருக்கிற அமெரிக்க ஜனாதிபதி பொதுத் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது எனபதனைப் பொருட்டு ஏற்கெனவே இங்கு ஒரு பதிவு பதியப் பட்டிருக்கிறது எனது அவதானிப்பின் பொருட்டு. அங்கு நான் குறிப்பிட்டபடியே தேர்தல் கலத்தில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் இருவருமே இரு வேறு தளங்களில் சொத்தையாகிப் போனதால், இந்தத் தேர்தலில் மிக எளிமையாக வெற்றி வாகை சூடியிருக்க வேண்டிய ஜனநாயக் கட்சி குடியரசு கட்சிக்கு அவ் வெற்றியை கொடுத்து விட்டு விலகிக் கொள்வதனைப் போன்று இருக்கிறது என்று எழுதியிருந்தேன் இப்படி "ஓர் கருப்பினத்தவருக்கோ, பெண் ஜனாதிபதிக்கோ அமெரிக்கா ரெடியா?."

அதில் இன்னமும் எந்த மாற்றமுமில்லை. இப்பொழுது, இந்தப் பதிவில் நான் பேச வந்த விசயம். ஹில்லரி, பெருவாரியாக பெரிய மாநிலங்களில் முதன்மைத் தேர்தலில் வெற்றியடைந்து வருவதும், அவரை எதிர்த்து நிற்கும் ஓபாமா சிறு மாநிலங்களில் கறுப்பர்கள் மைனாரிடி மிகுந்து இருக்கக் கூடிய மாநிலங்களில் வென்று வருவதும் தெரிந்ததே.

இந்நிலையில் அண்மையில் நடந்த இண்டியானா மற்றும் வட கரோலினா முதன்மைத் தேர்தலில் ஆளுக்கொரு இடமாக வென்று மீண்டும் தொடர் ஓட்டத்தை தொடர்கிறார்கள். இதில் இன்னும் 6 மாநிலங்களில் மிச்சமிருக்கிற 217 டெலிகேட்டுகளின் மூலமாக யாரையும் அரிதியிட்டு சொல்லி விட முடியாத வண்ணம் அத் தேர்தலும் அமையவிருப்பதால், அக் கட்சியிலிருக்கிற மூத்த மற்றும் சூப்பர் டெலிகேட்ஸ்களான 265 பேர் யாரைச் சுட்டிக் காமிக்கிறார்கள் என்பதனைப் பொருட்டும் யார் ஜனாதிபதி தேர்தலுக்கு கடைசியாக தேர்வாவர்கள் என்பது அமையப் போகிறது.

இது அப்படி இருக்க, முன்னமே ஹில்லரியை நம் பதிவர்கள் உள்பட அக்கட்சியில் இருக்கிற சிலரும் ஓட்டத்தை நிறுத்தச் சொல்லி வற்புருத்துகிறார்கள் ;-). இப்ப வாரேன் விசயத்துக்கு. ஆசை ஆசையா 500 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டுக் குத்து பண்ணி நாங்கதாண்டா முதல்லேன்னு கொலம்பஸ்லிருந்து ஆரம்பித்து இன்னிக்கு வரைக்கும் 75 சதவீதம் வெள்ளையர்களே அமெரிக்காவில் இருக்கிறார்கள் எனும் பட்சத்தில், அதுக்குள்ளும் அவர்களிடத்தே ஆட்களே இல்லைங்கிற மாதிரி அந்த நாட்டை ஆள ஒரு அண்மைய இமிக்ரெண்டோட பிள்ளையை நாடாள அமர்த்திடுவாங்களா, என்ன? தெரியாமத்தான் கேக்கிறேன்.

சரி, இப்ப நம்மூர் ஆட்களைக் கொண்டே கடைசியா ஓட்டும் போடும் இடத்தில் எப்படி ஓபாமாவிற்கு ஓட்டுப் பொட்டியில் என்ன கிடைக்குமென்று பார்ப்போம். நாமல்லாம் நம்மூர்லையே வர்ணம் பார்த்து வளர்ந்தவங்க, அப்படி இருக்கும் பொழுது இன்னமும் வெள்ளைக் காரங்கன்னாலே "துரை" அப்படின்னுதான் விளித்து பார்க்கிற மக்கள் மிகுந்துருக்கிற ஒரு சமூகத்தில இருந்து வந்துட்டு (தோல் சிகப்பா இருக்கிறவங்கத்தான் எல்லாத்திலும் சிறப்புன்னு - நம்மூர் விளம்பரங்களும் இன்னமும் தூக்கிப் பிடிச்சி வியாபாரம் பண்ணிட்டு இருக்கிற சூழலில் வந்த நாம) போயிம் போயிம் ஒரு கறுப்பருக்கு நாம ஓட்டு போடுவோமா ;-)? மனச தொட்டுச் சொல்லுங்க. எத்தனை பேரு போடுவீங்க?

அதுக்கெல்லாம் மேலே நாம வேற ரொம்ப கன்சர்வேடிவ் :). இந்த ஓரினச் சேர்க்கை திருமண அங்கீகரிப்பு, கருக்கலைப்பிற்கு எதிர்ப்பு, உலகம் தழுவிய தீவிர வாதிகள் அடக்கு முறைக்கு நம்மோட மன நிலைன்னு நிறைய விசயங்கல் உள்ளே வரும், இல்லையா ஓட்டு போடுறதுக்கு முன்னாடி. அப்படி இருக்கும் பொழுது உங்க ஓட்டு ஜனநாயகக் கட்சிக்கா இல்ல குடியரசுக் கட்சிக்கா?

நான் பேசிச் தெரிஞ்சிக்கிட்ட வரை இந்த புஷுன் ஈராக் போரை இங்க வாழ்ற இந்தியர்கள் நிறைய பேர் வரவேற்கிறாங்க! அதுக்கு பின்னணியா நியாயப் படுத்தி சில காரணங்களையும் சொல்றாங்க. எல்லாத்துக்கும் மேலே குடியரசுக் கட்சி ஆளுங்க அமெரிக்கர்களின் பொது நலத்தைக் கூட யோசிக்காமே தன்னோட தனிப்பட்ட லாபத்திற்காக நம்மூருக்கு வேலைகளை கண்ண மூடிக்கிட்டு அனுப்புறதும் பிடிச்சிருக்கு இங்க வாழ்ற இந்தியர்களுக்கு.

இது போன்ற காரணங்களுக்கும் மேலே குறிப்பிட்ட ஜனநாயகக் கட்சி உவப்புகளுக்கும் நம்மாலுங்க குத்தப் போறது குடியரசுக் கட்சி ஆளுங்களுத்தான் ஓட்டை.

ஏன், குடியரசுக் கட்சியே உள் நோக்கத்தோடதான் ஓபாமைவை ச்சியர் லீடீங் பண்ணி இந்த ஓட்டத்தில் ஓட வைச்சிட்டு இருக்குது, அவிங்க ரொம்ப புத்திசாலிங்க! ஹில்லரியை முதன்மையில ஒழிச்சிட்டா, இறுதித் தேர்தல்ல ஓபாமை ஒண்ணுமில்லாம பண்றதுக்கு ரொம்ப நேரம் எடுத்துக்காதுன்னு கணிச்சி வைச்சிருக்காங்க.

அது எல்லாருக்கும் ஜனநாயக கட்சியில இருக்கிறவங்களுக்கு புரிஞ்சிருக்கான்னு தெரியலை, ஆனா அப்படித்தான் தெரியுது எனக்கு. அது அப்படி இருக்க இந்த கறுப்பினத்தவர் வேற ஓபாமாவை தன் இனத்துக்கு வந்த சேவியர் கணக்கா மற்ற வெள்ளையர்களை வெறுப்பேற்றும் வண்ணம் தலையில் தூக்கி வைத்து ஆடுவதும், ட்டிவிக்கு முன்னால் அவர் தோன்றும் பொழுது கையை மேலே தூக்கி ஆடுவதும் கண்டிப்பாக வெள்ளையர்களின் பார்வையை ஈர்க்காமல் விடாது. அதற்கும் சேர்த்தே சாதா மெஜாரிடியும்(வெள்ளை) ஓட்டுக் களத்தில் தங்களது எண்ணங்களை பதிந்து செல்லுமென்பது எனது கருத்து.

Sunday, April 06, 2008

வெண்ணை திரண்டு வந்துச்சு இப்ப ஒடைக்கணுமா? : ஒகேனக்கல்.

இரண்டு வாரங்களாவே தமிழ்மணத்தை உத்து உத்து பார்த்துக்கிட்டே வாரேன் எங்கட நிறைய ஒக்கேனக்கல் சார்ந்த பதிவுகளை உணர்வுப் பூர்வமாக காணோமேன்னு. இங்க மக்கள் நினைச்சிருப்பாங்க போல நாமும் வெறும் புரட்சி கருத்துக்களா எழுதி எதுக்கு வீணா வன்முறையைத் தூண்டி விடுறோமின்னு சும்மா இருந்திருக்கலாம் போல. எப்படியோ, இப்ப திடீர்னு திரைப்படத் துறையினர் நடத்தின உண்ணாவிரதப் போரட்டத்தினை தொடர்ந்து அங்கு சில பேர் பேசிய பேச்சுக்கள் அனல் பறக்க இங்கும் எங்கும் சூடு பற்றிக் கொண்டது.

அதிலும் குறிப்பாக இந்த முறை கழுவுற மீன்ல நழுவுற மீனாக தப்பிக்க வாய்ப்பே இல்லாதபடிக்கு சூழ்நிலையும் அமைந்து போக சில வார்த்தைகளை அள்ளி தெளித்தே ஆகவேணுமிங்கிற கட்டாயத்தில வார்த்தைகளை உதிர்க்க வேண்டியதாப் போச்சு, சில பிரபலங்களுக்கு.

என்னுடைய எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது என்றால் இந்த கலைக் கூத்தாடிகள் என்னாத்தை பெருசாக பேசிடப் போறாங்க, இன்னமும் பெரிய அளவில் வியாபாரம் அண்டைய மாநிலங்களுடன் பண்ணிக் கொண்டிருக்கும் பொழுதென்றே நினைத்திருந்தேன். ஆனால், நாட்டின் ஒருமை பாட்டில் அதீத நம்பிக்கையும், பொறுப்பும் கொண்ட சில கர்நாடாக சமூக அமைப்புகள் தொன்று தொட்டு அடித்து வரும் அழிச்சாட்டியங்கள் எல்லோர் மனத்திலும் கசப்புணர்வையே வளர்த்து வந்திருக்கிறது என்பதனை இந்த திரைப்படத் துறையினரின் பேச்சுக்களை கேட்கும் பொழுது அறிய முடிந்தது.

அதிலும் குறிப்பாக நடிகர் சத்யராஜ் மற்றும் கவிஞர் வைரமுத்துவின் பேச்சுக்கள் குறிப்பிடும் படியாக அமைந்திருந்தது. சத்யராஜ் தன்னுடைய நீண்ட நாள் மனக் குமுறலை இங்கு கொட்டித் தீர்த்துக் கொண்டதாகவே கருதுகிறேன். அவரின் மீது எழுந்த குற்றச் சாட்டுகள்: முகம் சுழிக்க வைக்கக் கூடிய வகையில் அமைந்த வார்த்தைகள், மற்றும் உடற் செயற்பாடுகள் (body gestures).

மேடையில் அமர்ந்திருக்கும் ஒரு சில மணி நேரங்கள் அவையடக்கத்துடனும், ஏனைய ஜெண்ட்ல்மென்களுக்கேயான அடக்க நடிப்புகளுக்கிடையே தானும் அப்படியே சற்று அமர்ந்து இளைப்பாறிவிட்டு செல்வதில் பெரிதாக ஒன்றும் கஷ்டமிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை அதிலும் நடிப்பையே தொழிலாக கொண்டவர்களுக்கு, இல்லையா? அப்படியாக இருக்கையில் எதற்காக அதிலிருந்து நழுவி இப்படி தன்னை ஒரு தரம் கெட்டவனாக ஆக்கிக் கொள்ள ஒருவர் முன் வர வேண்டும் (அதற்கு நீங்கள் என்ன பெயர் வைத்துக் கொண்டாலும் சரி...).

குறைந்த பட்சம் இவ்வளவு தொலைவு இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினை வளர்ந்து அதில் எந்த விதமான மத்திய அரசின் குறுக்கீடுகளுமில்லாமல் ஏதோ இரண்டு வெவ்வேறு நாடுகளுக்கிடையான பிரச்சினை போன்று பாவித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்த பக்கமிருந்து ஒரு சிலரேனும் தனக்கும் அது போன்ற மான உணர்வு இருக்கிறது என்பதனை மனதில் பட்டதை பட்டதாக (அதிலும் உண்மையில்லாமலில்லை) கூறுவதில் என்ன தவறு இருக்கிறது.

ஆனால், இதிலிருக்கும் உள் அரசியல்தான் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. காவேரி பிரச்சினையில்தான் நாம் ஏமாந்து விட்டோம், இதில் ஏமாறத் தயாராக இல்லையென்று கூறிய தலைமையிடம், நன்றாக சூடேறி எல்லா கட்சிகளும், மக்களும் ஓரளவிற்கு ஒன்றுதிரண்டு விழிப்புணர்வுற்று ஒரே குடையின் கீழ் இருக்கும் சமயத்தில் திடீரென்று தலைமையிடம் கர்நாடாக தேர்தல் முடியும் வரை முறுக்கேறிய ஒரு விசயத்தை தள்ளிப் போட்டுவிட்டது. சிறிது ஏமாற்றம்தான்.

எனக்கென்னான்னா, ஒரு தேசத்தை மதிக்கிற ஒரு மூத்த அரசியல் தலைவரா கலைஞர் இப்படி வன்முறையின் ஊடாக ஒன்றும் சாதித்து விட முடியாது என்பதனையும், நாட்டின் ஒருமை பாட்டையும் கருத்தில் கொண்டு இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க வேண்டுமென்று நினைக்கத் தோன்றுகிறது. அப்படியே இருக்கட்டும், இருந்தாலும் இந்த உணர்வை தூண்டி அரசியல் விளையாட்டாக ஆக்கிவிட்டு பிறகு எந்த ஒரு தீர்வும் இல்லாமல் ஒரு காவேரிப் பிரச்சினை போலவே பின்னாளில் தொங்கலில் விட்டால், பூனை வெளியே வரப் போவது நிச்சயம்.

நமது எதிர் பார்ப்பை பொய்க்க வைக்காமல் இருந்தால் சரித்தான். ஆனால், இது போன்ற பிரச்சினைகளில் உணர்வை தடவி, உசிப்பு விட்டுவிட்டு பிறகு அதனை வைத்து அரசியல் நடத்தும் சாணக்கியத் தனமிருந்தால், பின்பொரு நாளில் நிஜமாகவே (இப்பவே என்ன எல்லா மாநிலங்களும் தெரிந்து கொண்டுதானே அந்த உணர்வு இல்லையென்று) தேவைப் படும் பொழுது, மக்கள் நினைக்கலாம் "மண் குதிரையை நம்பி ஆற்றுக்குள் இறங்கிய"தைப் போன்றுன்னு. அது மாதிரி கழகத்திற்கு ஒரு களங்கம் ஏற்படா வண்ணமும், இந்த கடைசி வாய்ப்பையும் நழுவ விடாமலும், கழகத்தின் மீது இருக்கும் களங்கத்தை துடைத்தெறிவது போன்றும், கர்நாடாக தேர்தலுக்குப் பிறகு தமிழக மக்களுக்காக இந்த குடிநீர் பிரச்சினை தீர்த்து வைக்க கழகம் கடமை பட்டிருக்கிறது.

இல்லை ஒரே அடியாக தூங்கப் போட்டு விட்டு அரசியல் நடத்த மட்டுமே காவேரியும், ஒகேனக்கல் பிரச்சினையும் தோண்டி எடுக்கப் படுமானால், மக்கள் என்னைக்குமே இந்த நிகழ்வை மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என்பது நிதர்சனம்.

Thursday, March 20, 2008

ப்ரகாஷ்ராஜ், வெள்ளித் திரை - செய்தியாளர்கள் சந்திப்பு!

நேற்று நான் ட்யூப்தமிழ்.காம் தளத்தில் ப்ரகாஷ்ராஜின் வெள்ளித் திரை படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பை ஒரு 30 நிமிடங்கள் ஓடக் கூடிய படக் காட்சியுடன் காண நேர்ந்தது.

ஏற்கெனவே, நான் ப்ரகாஷ்ராஜின் "சொல்லாததும் உண்மை" சமீபத்தில்தான் படித்ததிலிருந்து அவரைப் பற்றியான எனது பார்வையை இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று எண்ணிக் கொண்டுள்ள நிலையில் இந்த 30 நிமிட படக் காட்சி நிச்சயமாக அவரைப் பற்றி எழுதியே ஆக வேண்டுமென்ற ஒரு நிலையில் என்னை கட்டிப் போட்டு விட்டது. இருந்தாலும், அவரின் "சொல்லாததும் உண்மை"யைப் பற்றி பிரிதொரு சமயத்தில் விளக்கமாக எழுதலாமென்று இருக்கிறேன்.

இப்பொழுது இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் ப்ரகாஷ்ராஜ் எதனை நிறுவ முயல்கிறார் என்பதனைப் பார்ப்போமா. ப்ரகாஷின் தைரியம் நிச்சயமாக பாரட்டப்பட வேண்டிய ஒன்று. அவரின் தைரியத்திற்கு அவர் வைத்திருக்கும் மாற்றுப் பெயர் - நம்பிக்கை.

இன்றைய காலக் கட்டத்தில் தமிழக சினுமா வெறும் போட்ட பணத்தை எடுக்க வேண்டுமென்ற உத்தியில் இயங்கும் ஒரு சிறு ஃபார்மிலாவைக் கொண்டே இயங்குமொரு பணச் சந்தை. மீறிக் கேட்டால் மக்களின் ரசனை அப்படி இருக்கும் பட்சத்தில் என்ன டிமாண்ட் இருக்கிறதோ அதனைத் தான் எங்களால் கொடுக்க முடியுமென்ற பொறுப்பற்ற பேச்சுக்களுக்கு கிடையே இது போன்ற மனிதர்களும் அங்கே இருந்து எதிர் நீச்சல் போட தயாராகி வருவது ஒரு ஆரோக்கியமான சூழல் திரண்டு வருவதை காட்டுகிறது.

நீங்கள் அனைவரும் இந்த விடியோ லிங்கை க்ளிக்கித்துப் பாருங்கள், அந்த சுட்டி வேலை பார்க்கலைன்னா கோலிவுட்டுடெ.காம் போங்க, உங்களின் நிமிடங்கள் ஒரு நல்ல சிந்தனையாளனுடன் உரையாடிவிட்டு வந்த திருப்தியில் அமையும். அவ்வளவு ஆழமான பேச்சு இது வரைக்கும் இந்த டின்சல் உலகில் இப்படி தீர்க்கமாக தன் சார்ந்து இருக்கும் துறையையே கேள்விக்கு உள்ளாக்கி அதன் மூலம் தன்னுடைய தொழில் தர்மம் காத்து, நல்ல விசயங்களை வெளிக் கொணர வேண்டுமென்று ஒரு சாதாரண பார்வையாளன் நிலையிலிருந்து பேசிய கலைஞனை நானறியேன்.

இன்றையச் சூழலில் நடிக, நடிகை என்றாலே கோழிமுட்டை போன்ற பரட்டை தலைக் கேசத்துடனும், அதீத மேற்கத்திய உடையலங்காரத்துடனும், இன்னொரு கிரகத்திலிருந்து இறங்கிய வேகத்தில் திக்தித், திணறி பேசும் மொழி, காலியான மொட்டை மாடியுடனும் இருக்கும் பல கலைஞர்களுக்கிடையில் இது போன்று அலட்டலே இல்லாத புத்திசாலிகளைப் பார்க்கும் பொழுது, நம் தமிழ் சினுமா உலகத்தில் அதனுள் வாழும் பல அரைகுறைகளையும் சிந்திக்க வைக்கும் சூழலை நோக்கி நகர வைக்கச் செய்கிறதோ என்ற நம்பிக்கை துளிர்க்கிறது.

எல்லாம் சரி, நான் இன்னமும் இந்த வெள்ளித் திரை படம் பார்க்கவில்லை, இந்த செய்தியாளர்கள் எதற்காக இப்படி வியர்வை சிந்த நோண்டி, நொங்கெடுத்து ப்ரகாஷ்ராஜிடம் சண்டை பிடிக்கிறார்கள் என்று யாருக்காவது விளங்கினால் எனக்கு அந்த விடியோவை பார்த்துவிட்டு பின்னூட்டங்களில் சொல்லி விட்டு போங்கள்.

வேறு எந்த படத்திற்காவது யாரவது இது போன்ற செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி இந்தப் படத்தின் மூலமாக நீங்கள் சொல்ல வந்த கருத்து என்ன இந்த சமூகத்திற்குன்னு கேள்வி கேப்பாங்களா? இல்லை அது போன்று நடத்தத்தான் தைரியமிருக்கா? ஏதோ, இதன் மூலம் முன்னோடியாக ஒரு நல்ல செயலை ப்ரகாஷ்ராஜ் அறிமுகப் படுத்தி வைச்ச மாதிரி இருக்கு.

ஆனா, அந்த கூட்டத்திற்கு வந்து ஆர்வத்துடன் கேள்விகளைக் கேட்ட செய்தியாளர்களை பார்த்தால் யாரோ "என்வலாப்" (பண முடிப்பு - ப்ரகாஷ்ராஜே கொடுத்திருக்க மறுத்திருக்கும் பட்சத்தில்) கொடுத்து அனுப்பி பொறுப்பாக பார்த்துக்கச் சொன்ன மாதிரி எனக்குத் தோணச் செய்தது ;)). அந்த யாரோக்கள் எல்லாம் ப்ரகாஷ்ராஜ் இப்படி நமது முகத்திரையை அகற்றிக் காமிக்க எத்தனிக்கிறானே என்றும் செய்யக் கூடுமோ...

Thursday, February 14, 2008

Valentine's Day - ஏன் நடிக்கணும்?

இந்தக் கட்டுரை நம்மூரை நினைவில் கொண்டே எழுதப் பட்டது. இதனில் உண்மையாக தன் நேசிக்கும் ஒருவரை மணம் முடிக்க எண்ணி வியர்வை சிந்தும் நல்ல உள்ளங்கள் இந்தக் கட்டுரைச் சாடலிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள். ஏனையதுகளுக்கு இந்தக் கட்டுரை ஒரு அவசியமான வாசிப்பாக அமைய வாய்ப்புண்டு.

தினகரனில் நான் படித்த விழுப்புரம் அருகே காதலன் வீட்டு முன் அமர்ந்து விடிய விடிய காதலி தர்ணா போன்ற போராட்டக் காதல்களுக்கு முன்னாலும், சில சமயத்தில் வீட்டு மிரட்டல்களையும் மீறி திருமணம் முடித்துக் கொண்ட நபர்களைத் தேடிக் கண்டுபிடித்து பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் ஹானர் கொலை (Honor Killing) போன்றே இங்கும் அது போலவே கண்டுபிடித்து உயிரோடு எரிக்கவும் துணியும் நிலையிலும், நன்றாக மூன்று, நான்கு வருடங்கள் ஒளிந்து மறைந்து கடலை வறுத்து, ஸ்பரிசம் உணர்ந்து திடீரென்று ஒரு நாள் காதலிக்கும் ஆண் மகனோ அல்லது அந்தப் பெண்ணோ நெஞ்சில் மாஞ்சா இல்லாமல் உருவிக் கொண்டு போவதைக் கொண்டும், ஒரு படி மேலேச் சென்று தன்னை விரும்பியவனையே நம்பிச் செல்லும் ஒரு சில பெண்களை வசதியாக ஒரு இரண்டு மூன்று மாதங்களுக்கு பயன்படுத்தி விட்டு தூக்கியெறிஞ்சிச் செல்லும் அவல நிலைக்கு முன்னாலும், நம்மூர் "வாலண்டைன்'ஸ் டே"ஒரு ஏமாற்று நாளாகத்தான் எனக்குப் படுகிறது.

இன்னும் போக வேண்டிய தொலைவை எங்கோ வைத்துக் கொண்டு எதற்காக இந்தப் பகட்டு, நாங்களும் உலகளவில் வளர்ந்து விட்டோமென்று தொலைகாட்சிகளில் நடித்துக் காட்டிக் கொள்வதற்காகவா இந்த நாள்? அல்லது வியாபாரத் தந்திரம் தெரிந்த பெரிசுகள் வைக்கும் விளக்கின் கீழ் விழும் விட்டில் பூச்சிகளாக இருப்பதற்காகவா? எதற்காக நீங்கலெல்லாம் இந்த வாலண்டைன்'ஸ் டே கொண்டாடுகிறீர்கள் என்று அறிந்து கொள்ளலாமா?

ஓவ்வொரு வருடமும் இந்தத் தொலைகாட்சிகளின் பேனை பெருமாளாக்கும் தனத்தால் வெகுண்டெழுந்து எழுத வேண்டுமென்று நினைத்து நினைத்து தள்ளிப் போட்டதை இந்த வருடம் கடைசியாக எழுதலாமென்று எழுதவும் செய்தாகிவிட்டது.

எனக்கு நம்மூர் சிறுசுகள், அதாவது இந்த விடலைகள் முப்பதுக்குள் இருப்பவர்களும் இதற்குள் அடக்கம் தான். ஏனெனில் அந்த வயதிலும் இன்னமும் ஒருத்தியை காதலிப்பதாக அழைத்துக் கொண்டு திரிபவர்கள், அதற்கென நாள் நெருங்கும் பொழுது எங்க அம்மாவும், அப்பாவும் என் பிணத்தின் மீது ஏறிப் போயி அவ கழுத்தில தாலியைக் கட்டுன்னு சொல்லி மிரட்டுறாங்கன்னு சொல்லிட்டு கடைசி நிமிட்ல அப்பீட் ஆகிக்கிறது பெரும்பான்மையா நடக்குதுன்னா, இவர்களை விடலைப் பசங்க லிஸ்ட்ல சேர்க்கலாமில்லையா?

எத்தனை கலப்புத் திருமணங்கள் இந்தியாவில் தினந்தோறும் நடந்தேறுகிறது, அதிலும் இந்த ஜாதி, மத, இனத் தொடர்பான வெட்டுக் கொத்து, ஆட் கடத்தல் போன்றவைகள் இல்லாமல்? உண்மை நிலை இப்படியாக இருக்க, எதற்காக தெரிந்தே இந்த ஏமாற்றுத் தனம், அதாவது என்னுயிர் உன்னிடத்தில், உன்னுயிர் என்னிடத்தில் என்றுக் கூறி நாட்களை இந்த ஒரு உயிர்ப்பூ நிலையில் வைத்தற்கோரி தற்காலிகமாக நகர்த்தும் ஏமாற்றுத் தனம். இங்கு ஏமாற்றுத் தனம் என்றழைக்கக் காரணம் அந்த உறவில் ஈடுபட்டிருக்கும் இருவருக்குமே தெரிகிறது, இது இறுதி நிலையை அடையப் போவது கிடையாது என்று அறிந்தே இருவரும் ஒரு வரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டு நடித்தித் திரிவதற்கு வேறு என்ன பெயர் பொருத்தமாக இருக்கும்.

இதற்கு எதற்கு வெள்ளைகாரத் துரைகள் தன் காதலியினடத்தே அல்லது தன் மனைவியிடத்தே பக்குவமாக, உண்மையாகவே காட்டப் பயன் படுத்தும் ஒரு நாள் உங்கள் கைகளில் ஒரு ஏமாற்றுத் தினமாக? ஒரு பெண்ணையோ அல்லது ஒரு ஆணையோ விரும்பவதற்கு முன்னால் உன் பின்புலத்தை திரும்பிப் பார்த்துக் கொண்டாயா - எது போன்ற மக்களை உனது குடும்பம் பெற்றிருக்கிறது, அருவாக் கலாச்சாரம் கொண்டதா, மத, ஜாதி பித்து பிடித்திருக்கிறதா அல்லது உன் நலமே எங்களின் நலமென்ற பண்பாடு கொண்ட குடும்பமா?

அப்படி இல்லாதப் பட்சத்தில் உனது மனத் தைரியத்தை கேள்வி நிலைக்கு இட்டுச் சென்றாயா - எந் நிலையிலும் எல்லா பிரச்சினைகளையும் சந்திக்க தயாராகி விட்டோமா, எனது சமூக, பொருளாதார, மனப் பக்குவம் பின்னால் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை சந்திக்கும் பொருட்டு எனது மன நிலை என்னவாகா இருக்கிறது போன்ற கேள்விகள் கேட்டறிந்திருக்கிறாயா? இது போன்ற நிலையில் ஆக்கப் பூர்வமான போராட்டத்திற்கு தயாராகமல் தன்னை அதற்கு ஒரு தகுதியானவனாக ஆக்கிக் கொள்வதற்கு முன்னர் எதற்கு இப்படி ஒருவரை ஒருவர் ஏப்ரல் ஃபூல் ஆக்கிக் கொள்ள வேண்டும்.

பதிவர் தஞ்சாவூரானின் பரவாக்கோட்டையில் வாலன்டைன்ஸ் டே கொண்டாட்டங்கள்! என்ற பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டம் நம்மூர் காதலர்(!?)களுக்கு ரொம்பவே பொருந்தும். அந்தப் பின்னூட்டம் கீழே:

Thekkikattanதெகா said...

... //ஆனா, எதையுமே அறைகுறையாகப் புரிந்துகொண்டு பந்தா காட்டும் நமது நாட்டில்.....???//

இன்னமும் இந்தியாவில் இந்த காதல் திருமணங்கள் என்பது ஃபாண்டஸி நிலையிலயே தேக்கமுற்றுப் போனதால்தான் அதன் பொருட்டே கச்சடா திரைக்கதைகளைக் கொண்டு கதைச் சொல்லி சினிமா உலகம் காசு பார்த்துக் கொண்டுள்ளது. இந் நிலையில் இந்த மேற்கத்திய "வாலண்டைன்ஸ் டே" வியாபாரம் கூடக் கொடி கட்டிப் பறக்கலாம் அங்கே. காரணம், ஃபாண்டஸி நிலையில் எல்லாமே அழகாகத்தான் இருக்கும்...

ஆக மொத்தத்தில் இவனுங்களுக்கு (காதலிக்கிறவங்களுக்கு) உண்மையான guts இருந்தால் காதலிப்பவளையே கரம் பிடித்து பிறகு இன்று இந்த ஃபாண்டஸி நிலையில் செய்வதை தொடரட்டும் நான் ஒத்துக் கொள்கிறேன், இவனுங்க a real gutsy guys என்று. அதுவரைக்கும் இது ஒரு பேத்தல், "ஏப்ரல் ஃபூல் டே," to pacify eachother... shame on them...!

Wednesday, February 06, 2008

ஓர் கருப்பினத்தவருக்கோ, பெண் ஜனாதிபதிக்கோ அமெரிக்கா ரெடியா?

உலகம் போகிற போக்கைப் பார்த்தால் இந்த வருடத்தில் நடக்கப் போகிற அமெரிக்கா தேர்தல் ஒரு முக்கியமான தேர்தலாக உலகம் தழுவிய முறையில் எதிர் பார்க்கப் படவேண்டியா ஒன்றாக இருப்பதனைப் போல உள்ளது.

இங்கு தொலைக்காட்சி பெட்டியைத் திறந்தாலே எப்பொழுதும் தேர்தல் கலத்தில் போட்டியிடும் நபர்களின் பேட்டியோ அல்லது முதன்மைச் சுற்று வாக்களிப்பதற்கு ஏதுவான பிரச்சாரங்களோதான் நடந்து கொண்டிருக்கிறது.

கடந்த எட்டு வருடங்களாக நம்ம தீரன் புஷுன் முகம் பார்த்து சலித்தவர்களுக்கு இந்த தேர்தல் ஒரு தென்றலாக தீண்டிச் செல்லவிருக்கையில், இந்த தேர்தலில் யார் வெற்றியடைப் போகிறார்கள் என்பதனைப் பொருட்டு மீண்டும் நாம் ரோலர் கோஸ்டர் ரைட் எடுக்கப் போகிறோமா இல்லை நம்ம உண்டு, நம்ம வீட்டு பொருளாதார, சுகாதார காப்பீட்டுப் பிரச்சினைன்னு கலாத்தை கடத்தப் போறமான்னு ஆர்வம் பிறீட காத்துக் கொண்டிருக்கிறார்கள், மக்கள்.



இந் நிலையில் பாருங்க ஜனநாயக கட்சியில் சொல்லிக்கிற மாதிரி ஒருத்தரும் நிக்காததாலே, நியாயமா இந்த முறை ஒரு மாறுதலுக்காகவாவது எட்டு வருட அவஸ்தையிலிருந்து தப்பித்து ஓட்டுப் போட மக்கள் ரெடியா இருந்தாலும், குடியரசுக் கட்சியிலேயே அந்த நிறமும், தேவைப்பட்டளவில் ஆண்ட்ரோஜனும் இருந்து போனதால் இந்த முறையும் அந்தக் கட்சியே வெற்றியடையும் நிலையில் இருக்கிறது.

ஜனநாயகக் கட்சியில் எப்பொழுதும் புரட்சிகரமான திட்டங்களுக்கும், அடிமட்ட மக்களின் குரலுக்கும் கொஞ்சம் மதிப்புண்டு (சர்ச் போன்ற விசயங்களை கொஞ்சம் அப்படித் தள்ளிவைத்து விட்டு அரசியல் நடத்துவார்கள் - கொஞ்சம் மனசாட்சியுடன்). ஆனால், இந்த அண்மைய போர்கள், மற்றும் வெளியுலக அதிருப்தி இன்னமும் நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் துரதிருஷ்ட வேளையாக ஜனநாயகக் கட்சி வெற்றியடைந்து சற்றே ஆருததளிக்காமல் போவப் போவது ஒரு பலத்த பின்னடைவே, அமெரிக்காவிற்கும் உலக நாடுகளுக்கும்.

இப்பொழுது நிகழும் இந்த முதற் கட்ட தேர்தல் அங்கீகரிப்பின் படி ஓபாமாவும், ஹிலாரியும் ஜனநாயக கட்சியில் மேலோங்கி இருக்கிறார்கள். இதில் கடைசியாக யார் ஜனாதிபதிக்கு நின்றாலும் இருவருமே வெற்றியடைய வாய்ப்புகள் மிகவும் குறைவென்றே என்னால் எண்ணத்தோன்றுகிறது. காரணம் ஓபாமா - ஒரு கருப்பினத்தவர், மேலும் இசுலாமிய முன்னோர்கள் அவர்களின் வழி வந்திருப்பதாலும் மக்கள் கடைசி நேரத்தில் கணினித்திரைக்கு முன்னால் நிற்கும் பொழுது மனதை மாற்றிக் கொண்டு எதிர் தரப்பில் நிற்கும் குடியரசுக் கட்சி வேட்பாளர் மெகனைக்கு ஓட்டைக் குத்தித் தள்ளி விடுவார்கள்.

அது போலவே ஹிலாரியின் நிலையும் கடைசி நேரத்தில் ஒரு பெண் உலக அரங்கில் நின்று என்னாத்தை சாதித்து விடப் போகிறாள், என்று ஆண்ட்ரோஜன் பீறிட மக்கள் மீண்டும் மெகைனுக்கே ஓட்டைக் குத்தித் தள்ளப் போகிறார்கள். நான் இங்கு தென் கிழக்கு மகாணத்தில் இருந்து பார்த்து, பேசி வருவதொட்டும் வெள்ளைப் பெண்களே ஹிலாரியை ஒரு 'விட்ச்'ன்றே விளிக்கிறார்கள் (ஆனால், வட கிழக்கு மகாணங்களில் அப்படியே இதற்கு நேர் மாறாக இருக்கும் அதுவும் தெரியும்).

எனவே, அமெரிக்கா எல்லா தகுதியையும் கொண்ட ஒரு பெண் ஜனாதிபதியையோ அல்லது ஒரு கருப்பினத்தவரையோ (அனுபவம் கொஞ்சம் குறைவே என்றாலும் - புஷ்சே எனும் பொழுது ;) முழுதுமாக அரசாட்சியில் அமர வைக்க தயாராகவில்லை என்பது எனக்கு வெளிச்சமாக தெரிகிறது.

இந்த எட்டு வருடங்களுமே போதும் போதுமென்று ஓடித் தேய்ந்திருக்கிற நிலையில் மேலும் இன்னொரு ரிபப்ளிகன் ஜனாதிபதியை இந்த நாடும், இந்த உலகமும் தாங்குமா? பொறுத்திருந்து பார்ப்போம், என்ன நடக்கப் போகிறது வரும் நவம்பருக்குளென்று.

Monday, January 21, 2008

*ஒன்பது ரூபாய் நோட்டு* - எல்லோரும் கிழித்த பிறகு...

சக பதிவர்கள் நிறைய பேர் தங்கர் பச்சானின் "ஒன்பது ரூபாய் நோட்டை" கசக்கியும், கிழித்தும் எரிந்த பிறகு ரொம்பவே யோசித்து விட்டு என் கிழிப்பை இங்கு தொடர்கிறேன்.

அண்மையில் நம்ம சேவியர் உண்மையாக எப்படி அந்தப் படத்தின் கருத்தினை வைத்து படத்திற்கு பெயர் வைக்க வேண்டுமோ அந்த டைட்டிலுடன் ஒரு பதிவு எழுதியிருக்கார் "ஒன்பது ரூபாய் நோட்டு : மாதவனாய் வாழாதே" எனக்கும் அந்தப் படத் தலைப்பு சரி என்றே படுகிறது.

அந்தப் படம் எடுக்கப் பட்ட விதமும், வழங்கப் பட்ட நேர்த்தியும் அப்படியே அந்த கிராமத்தில் வாழ்ந்ததனைப் போன்றிருந்தது என்றால் மிகையில்லை.

எங்கோ ஓர் இடத்தில் அந்தப் படத்தில் தேவையில்லாத கூச்சல் இருந்ததென்று நேராகவே தங்கரிடத்தில் யாரோ கேட்டதாகவும், அதற்கு அவர் எங்களூர் கிராமத்தில் அப்படித்தான் இரைந்து பேசுவார்கள் என்று கூறியதற்கு, நம்மவர் ரஷ்யாவில் எடுக்கும் கலை படங்களில் எல்லாம் அப்படி இல்லையென்று கூறாமல் கூறிவிட்டு, ஏதோ ஒரு "கம்யூனிகேசன் கேப்" இருப்பதாக கூறிவிட்டு நகர்ந்து விட்டாராம்.

இன்னமும் கிராமங்களில் இந்த குழாய் ஒலி பெருக்கி அரசாங்க தடுப்பில் இருந்தாலும் எவன் வீட்டு சாவா இருந்தாலும் சரி, இல்ல விநாயக சதுர்த்தியாக இருந்தாலும் சரி, இல்ல நாலு மோடு முட்டிகள் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுகிறேன் என்று கத்தி உயிரோட இருக்கிற கிழங் கட்டைகளை சீக்கிரம் ஊருக்கு அனுப்புவது போல ஒலி பெருக்கிகளை கட்டி வைத்து கும்மியடித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள். இந் நிலையில் கிராமப் புறங்களில் எந்தளவிற்கு "ஹஸ்" வாய்ஸ்ல் பேசிக் கொள்ள நாம் பழகி வருகிறோம் என்பது விளங்கும்.

சரி, இப்ப விசயத்துகுள்ள போவோம். சேவியர் அந்தப் படத்திற்கான சில சினிமாத் தனங்களை அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார். படம் நம் எதிர் பார்ப்பிற்கு தகுந்தால் போல நகர வில்லைதான். ஒத்துக் கொள்ள வேண்டிய விசயம். தனிப்பட்ட மனித எதார்த்த வாழ்வில் எந்த வாழ்வுதான் எதிர் பார்த்த ஓட்டத்தில ஓடித் தேய்கிறது? எத்தனை பேருடைய வாழ்வோ தான் எடுக்கும் சிறு, சிறு தவறான முடிவுகள் கடைசி வரையிலுமே தவறாக நடந்தே முடிவது போலாகிவிடுகிறது. அதனை அந்த முடிவு எடுத்தவரும் புரிந்து கொள்ளாமலே அந்த ஓட்டம் ஒரு முடிவுக்கு வருவதில்லையா?

இந்தப் படத்தில் அப்படி ஒருவர், தான் எடுத்த வறட்டு முடிவுகளால் 'அவர்' ஒரு அனாதை பிணமாக வீழ்ந்து கிடப்பதனை போலவே காட்சியமைத்ததனைக் கொண்டு படத்தின் முழு வீச்சத்தையும் உள் வாங்க முடியவில்லையா?

அந்த நிலையிலேயேதான் அந்தப் படத்திலுள்ள மாதவரின் குணச்சித்திரமும் வழங்கப்பட்டுள்ளாதாக நினைத்து அந்தப் படத்தினை முழுமையாக என்னால் உள்வாங்க முடிந்தது.

கீழே உள்ள பின்னூட்டம் சேவியரின் பதிவுக்கு இட்டது. இங்கயும்.

...மாதவனாய் வாழ்ந்தது சேவியர், ஒரு கேடம்பக்கத்து சினிமா கதையாசிரியன் அல்லவே!


ஒரு கிராமத்தில் ஒரு சாதாரண வறட்டு கொளரவத்துடன் வாழ்ந்த ஒரு மனிதனின் கதைதான். அவனுக்கு வாழ்வியல் சார்ந்து எது சரி, எது தவறு என்று எண்ணக் கிடைக்கிறதோ அதனை அப்படியே செய்து வைக்கிறான்.

இந்தக் கதையின் மூலமாக இரு பக்கமாகவும் கருத்தினை எடுத்துக் கொள்ளலாம் 1) பெரியவர்கள் சிறு பிரச்சினைகளுக்காக இப்படி ஒரு முடிவு எடுப்பது சரியல்ல, மற்றும் வளர்ந்து வளரும் குழந்தைகளின் தேவைகளை புரிந்து கொள்வது அவர்களின் கடமை 2) வளரும் குழந்தைகள் வயதானவர்களின் முக்கியத்துவம் அறிந்து கொடுக்கும் மரியாதையை கொடுக்க வேண்டுமென்பது. இப்படியாகவும் எடுத்துக் கொள்ளலாம் தானே.

கேடம்பாக்கம் பாணியில் எடுத்தால் நமக்கு வேண்டியது மாதிரி கதையை எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த படமே ஒரு உண்மைச் சம்பவத்தை வைத்துத்தான் எனும் பொழுது, ஒரு மனிதன் சில விசயங்களை உணராமலேயே இறந்து விடுவதில்லையா அது போலத்தான், மாதவரும் நிறைய விசயங்களில் காம்ப்ரமைஸ் பண்ணிக் கொள்ளாமலேயே இறந்து விட்டார்.

அதற்கு உ.தா: //மகனை எழுப்பி வாழ்க்கை என்பது உணர்வுகளில் தான் என அவனை அரவணைத்து அவனுடைய வாழ்க்கையில் சற்று ஆனந்தத்தையாவது அளிக்கவில்லை மாதவர்.//

நீங்கள் கூறிய படியே எனக்கும் அந்த அவா எழுந்தது அந்தக் காட்சியைக் காணும் பொழுது. ஆனால், மாதவரான அந்த மனிதனுக்கு தன் மனம் அப்படிச் செய்ய உந்துதல் அளிக்க வில்லை. அங்குதான் நானும், நீங்களும், மாதவரும் வித்தியாசப் படுகிறோம் என்பதனை உள்ளது உள்ளபடியே கூறியிருக்கிறார், இயக்குனர் என்று நினைக்கிறேன்...

Thursday, January 10, 2008

யோகா சார்ந்து *பாரி.அரசுக்கு* சில எண்ணப் பகிர்தல்கள்!!

போன வருஷம் நான் "மருத்துவரே வேண்டாம் - *யோகா* செய்யுங்கள்" அப்படிங்கிற தலைப்பில ஒரு பதிவு போட்டிருந்தேங்க. அதுக்கு நம்ம முக்கியமான தலைகள் எல்லாம் வந்து இப்ப என்னய போட்டு கும்முறாங்க. அதிலும், குறிப்பா நம்ம பாரி.அரசு இந்தக் கலையை செய்து கொண்டே எனக்கு தடகள உடற் பயிற்சிக்கும் இந்த யோகாவிற்கும் அவ்வளவு பெரிய வித்தியாசம் தெரியலைன்னு வந்து சொல்லிட்டார்.

நான் இந்தப் பதிவிற்கு சொந்தக் காரன் என்பதால் அதற்கு பதிலுரைக்கும் நிலையில் இருக்கிறேன். இருந்தாலும், இதன் பலன்களை இன்னமும் நிறைவாக தெரிந்தவர்கள் வந்து இங்கே தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன். இரு தரப்பினரும் வருக! ஆதரவு தருக!!

கீழே பாரியோட பின்னூட்டங்க...

பாரி.அரசு said...

......ஒரு அற்புதமான பதிவுக்கு வாழ்த்துக்கள் தெகா!

நான் 10 ஆண்டுகளுக்கு மேலாக யோகா செய்து வருபவன் என்கிற முறையில்...

யோகா ஒரு உடற்பயிற்சி முறை அது இந்திய சூழலில் உருவானது என்பதை தவிர வேறுவிதமான கற்பனை வாதங்கள் தேவையற்றது.

உடற்பயிற்சி என்பது ஆரோக்கியமான உடலுக்கு தேவை, அதை தவிர யோகா செய்வதால் எல்லாவிதமான நோயும் குணமடையும் என்பதெல்லாம் பொய் என்பதோட மட்டுமல்லாமல்...


ஒழுங்கற்ற உடல் இயங்கியல்(disorder) எனப்படும் மருத்துவ சவால்களை யோகா வால் எதுவும் செய்ய இயலாது.

புறப்பொருட்களால் ஏற்படும் (diseases) யோகா செய்வதால் காப்பாற்ற இயலாது.

இப்படி பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம்.

ஆரோக்கியமான உடல் தேவையென்றால் உடற்பயிற்சி அவசியம் அதை வலியுறுத்துங்கள்.
யோகா - இந்திய சூழல் என்றால்
நீச்சல் - ஐரோப்பிய நாடுகளில் அற்புதமான உடற்பயிற்சியாக இருக்கிறது குறிப்பாக ரஷ்யர்கள்.

மரபு சண்டை பயிற்சி கிழக்காசிய நாடுகளில் முக்கிய மன, உடல் பயிற்சியாக இருக்கிறது (சீனா,கொரியா,ஜப்பான்)

யோகா வால் சக்தி கிடைக்கும் (ஒரு புண்ணாக்கும் கிடைக்காது) என்பதெல்லாம் வெறும் கற்பனை! .....

Thursday, January 10, 2008.


அதுக்கு என்னோட பதில ஒரு பின்னூட்டமா நினைச்சித்தான் எழுத ஆரம்பிச்சேன் அது முடியறாப் போல தெரியல உடைச்சிட்டேன் இரண்டாவது பகுதியா. அதுதான் கீழே...

வாங்க பாரி.அரசு,

தாமதமாக வந்தாலும், சூடாக வந்து கொடுத்திருக்கீங்க எனக்கு ஒண்ணு ;).

சில விசயங்களில் உங்களோட நான் ஒத்துப் போகிறேன் என்றாலும், பல விசயங்களில் எழுந்து நிற்க வேண்டியுள்ளது.

ஒவ்வொன்றாக இப்பொழுது பார்ப்போம்.

1) ஒழுங்கற்ற உடல் இயங்கியல்(disorder) எனப்படும் மருத்துவ சவால்களை யோகா வால் எதுவும் செய்ய இயலாது.

நீங்கள் கூற வருவது உடல் சார்ந்த வியாதி முற்றிய நிலை என்று வைத்துக் கொள்வோமா? அதாவது, புற்று நோய், எய்ட்ஸ் போன்ற வியாதிகள் அதுவும் ஒருவரை ஏற்கெனவே பீடித்து முற்றிய நிலையில் அதற்கு கண் கண்ட மருத்துவ முறையாக இந்த கலையை பயன் படுத்த முடியாதுதான்.

இருப்பினும், இந்த இரத்த கொதிப்பு, சுவாச சம்பந்தமான முதல் நிலை இருப்பில் இவைகளை கட்டுக்குள் வைக்கும் பொருட்டேனும் அதன் பிற்கால அவதரிப்புகளான, டாயபெடிஸ், ஆஸ்த்மா போன்ற முழு நிறைவடைந்த வியாதி நிலைகளிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளலாமல்லவா?

இரத்தக் கொதிப்பே 'ஒருவன்' எப்படி தினசரி வாழ்க்கையில் பிறரிடம் நடந்து கொள்கிறானென்பதனை தீர்மானிக்கும் வல்லமையுடையது. அப்படி இருக்கும் பட்சத்தில் பெரும்பாலான இந்த யோகா பயிற்சிகளில் நாம் உடம்பை மட்டுமே முறுக்க வில்லை, அப்பொழுது நாம் சுவாசிக்கும் முறையையும் கவனத்தில் கொள்கிறோம், இல்லையா?

கோபம் தலைக்கேறும் பொழுது நம் முகம் சிவத்து விடுகிறது, மூச்சும் தாருமாறாக எகிறுகிறது அப்பொழுது அங்கே என்ன நடக்கிறது, பாரி? இப்பொழுது நீங்கள் பத்து வருடங்கள் யோகவினை செய்து வந்திருக்கிறீர்களென்றால் முறையாக, கண்டிப்பாக இவையனைத்தும் உங்களுக்கு இந் நேரத்தில் உங்களையுமறியாமல், அதன் தாக்கம் உங்களுக்கு பலனளித்துக் கொண்டுள்ளது என்றே கொள்ளலாம். உங்களுக்கு அடிக்கடி ஜலதோசத் தொந்திரவு முன்புள்ளது போல இப்பொழுது உண்டா? இல்லையெனில், என்ன நடந்திருக்கக் கூடும், உங்கள் உடல் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை தருவித்துக் கொண்டிருக்க இந்தப் பயிற்சியும் உதவி செய்ததாக எடுத்துக் கொள்ளலாம்.

அதே நோய் எதிர்ப்பு சக்தியும் ஒரு பாசிடிவான நிலையில் தன்னை சிறிதே ஆசுவாசப் படுத்திக் கொண்டு தன் சிந்தனையை ஒரு முகப் படுத்தும் பொழுது, மேலும் மனம் தனக்குத் தேவையான சக்தியை பன்முகமாக தருவித்துக் கொடுக்கிறது. இது போன்ற மனப் பயிற்சி தடகளத்தில் பரவலாக இல்லைதானே?

அதற்குச் சான்றாக எய்ட்ஸ் நோயாளிகளில்... எய்ட்ஸ் நோயாளிக்கு முக்கிய பிரச்சனை நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து கொண்டே போவது...யோகாவினால் இந்த எதிர்ப்பு சக்தி அதிகமாகி நோயாளிகளுக்கு CD4 count ஜாஸ்தியாவது அனைவராலும் ஒத்துக்ககொள்ளப்பட்ட ஒன்று... இது வியாதியை குணமாக்கா விட்டாலும் நோயாளி சந்தர்ப்பவாத நோய்களில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள பயன் படுகிறது, இல்லையா? (நன்றி: மங்கை)

இது போன்ற வியாதி முற்றிய நிலையிலேயே உள்ள ஒருவருக்கு அதிக உடல் உழைப்பு தேவையில்லாது சிறிய, சிறிய மூச்சுப் பயிற்சிகளினாலும், சிறிய உடல் முறுக்கேற்று பயிற்சிகளினாலும் இதனைப் பெற வைக்க முடியுமென்றால்... நீங்கள் கூறிய அயற்சியூட்டக் கூடிய நீச்சல் பயிற்சி, தடகள உடற் பயிற்சிகளை எப்படி அவர்களுக்கு நாம் பரிந்துரைக்க முடியும், பாரி?

உடல் வியாதி முற்றிய நிலையில் ஒரு நோயாளி வியாதியிலிருந்து முழுமையாக குணமடைகிறாரோ இல்லையோ அவருக்குத் தேவை ஆறுதலும், பாசிடிவ் எண்ணங்களும் பெரும் பங்காற்றக் கூடும் தன்னை எழுந்து நிற்க வைக்க (மன ரீதியாகவேணும்)... அதனை இந்த யோகா சிறப்பாகவே வழங்குகிறது.

எனக்குத் தெரிந்தே நூயொர்க் நகரத்தில் வீடு இல்லாமல் தெருவோரங்களில் வசிக்கும் ஒரு ஐம்பது பேரைக் கொண்டு ஒரு ஆராய்சி நடத்தப் பட்டது. அவர்களில் நிறைய பேருக்கு எலும்பு மூட்டு (arthiritis) மற்றும் மன ஆரோக்கியம் சார்ந்த நோய்கள் இருந்தன. அவர்களை இரு பிரிவாக பிரித்து ஒருவருக்கு அலோபதி மருத்துவமும், மற்றொரு பிரிவினருக்கு இந்த யோகா பயிற்சியும் வழங்கப் பட்டது.

இதில் முதல் குரூப்பில் இருந்தவர்கள் உடனடி நிவாரணம் பெற்றது போல ஆரம்பித்த காலத்தில் இருந்தாலும், மீண்டும் அந்த சிகிச்சை முறையை விட்டவுடன் அவர்கள் அதே நோயால் பீடிக்கப் பட்டனர்.

ஆனால் இரண்டாவது குரூப் மெதுவாக அதன் பலனன ஈன்ற பெற்றாலும், ஆர்த்ரடிஸ், இரத்தக் கொதிப்பு சார்ந்த உபாதைகள் மற்றும் மன நலத்தில் நல்ல முன்னேற்றம் கண்டு சிலர் அது போன்ற வாழ்க்கை முறையையே கைவிட்டுவிட்டு நல்லதொரு வாழ்வை அமைத்து கொண்டதாக அறியப் பட்டேன்.

இப்பொழுது இந்த இரண்டாவது குரூப்பிற்கு என்னாயிற்று? அவர்களின் தினப்படி பழக்க வழக்கங்கங்களில் சில மாற்றங்களை திருத்தி அமைத்தார்கள். உதாரணமாக, ஒருவர் எழுந்து அமர்ந்தவுடனே, சரியாக அமரும் ஒரு முறையையும், சரியாக சுவாசிக்கும் ஒரு விசயத்தையும் மனத்தை அதன்பால் குவித்து கவனமாக செய்யும் பொழுது, இரத்த ஓட்டமும், சுவாசமும் சரியாக நடைபெறும் பட்சத்தில் அதனையொட்டிய எண்ணவோட்டமும் சீரடைய வாய்ப்புண்டல்லவா? இதற்கு எதற்கு வியர்வை சிந்த வேண்டும்?

இரத்த ஓட்டமும், சுவாசமும் முறைப்படி நடைபெறும் பொழுது தினப்படி நாம் சேகரிக்கும் இந்த மன அழுத்தத்தை அதன் போக்கிலேயே வந்த வழியிலேயே அனுப்பி விட முடியுமென்பது எனது எண்ணம்.

அது போலவே நிறைய சைக்கோலாஜிகள் டிஸ்ஸர்டர்களுக்கு, சில யோக முறைகளும் பரவலாக இப்பொழுது மேற்கத்திய நாடுகளில் 'குணப்படுத்தக் கூடிய தெரபிகளில்" ஒன்றாக சேர்த்துக் கொள்ள ஆரம்பித்தாகி விட்டது.

பாரி, உதாரணமாக உங்களுக்கு 45 வயதாகியும் இன்னமும் கொலஸ்டிரல் மற்றும் இரத்தக் கொதிப்பு தலை வைத்து படுக்க வில்லையென்றால், மறைமுகமாக உங்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ நீங்க செய்யும் அந்த யோகாவும் ஒரு காரணமென்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மற்றபடி தடகள உடற் பயிற்சிக்கும், யோகாவிற்கு நிறைய வேறுபாடுகளுண்டு. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்... இப்போதைக்கு இது போதும். பின்னூட்டங்களிலும் மேலும் பேசுவும். நன்றி! வணக்கம்!!

Related Posts with Thumbnails