Sunday, January 29, 2012

வியாபிப்பவன்இரவும் குளிரும்
பனிக்குட திரவ மிதவையில்
பாதுக்காப்பாய் இருந்தயெனை
மஞ்சளொளியான்
ஆற்றின் சலசலப்பினூடே
வெள்ளிக்காசுகளை அள்ளிப்பரப்பி
இனமறியா பல
பறவை ஒலிக்குறிப்புகளுமாக
சங்கீத நாண்பூட்டியபடியே
முற்றத்திற்கு 
அனிச்சையாய் ஈர்த்து
பூனைப் பாதங்களையொட்டி
என்னுள்
அரவமற்று மெதுமெதுவாய்
உள்ளிறங்கி
தன்னையே கரைத்துக் கொண்டிருக்கிறான்.

Monday, January 09, 2012

எல்லாம் தெரிஞ்ச அம்புஜம் - நடிகை சுஹாசினி!!

அண்மைய காலங்களில் பார்த்து ரசித்த சுப்பிரமணியபுரம், பசங்க, மைனா, அங்காடித் தெரு, வாகை சூடவா போன்ற படங்களுக்குப் பிறகே தமிழ் சினிமா சரியான திசையில் செல்ல ஆரம்பித்திருக்கிறது என்ற நம்பிக்கையை என்னைப் போன்றவர்களுக்கு அளித்திருக்கிறது.

அதற்கு முற்றும் முழுக் காரணம் எந்த ஒரு படைப்பும் மக்களின் தன் மண் மணம் மாறாமல் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அழுந்த பதிந்து கொடுக்கும் பொழுது அது பல நிலைகளில் மக்களின் மனதில் ஆழ்ந்த ஒரு தாக்கத்தை விட்டுச் செல்கிறது. தினப்படி வாழ்வில் எத்தனையோ விசயங்கள் தன்னியல்பிலேயே பல அற்புதங்களை உள்ளடக்கி எழுவதும் வீழ்வதுமாக நகர்ந்து வருகிறது. நாம் அதனை கவனிக்கத் தவறி எந்த ஒரு முயற்சியுமற்ற நிலையிலேயே மீண்டும் மீண்டும் மரத்துப் போன ஒரு மனநிலையில் செக்குமாட்டுத் தனத்துடன் அந்த நிகழ்வின் முழு வீச்சத்தினையும் காணத் தவறி வாழ்ந்தும் முடித்திருப்போம்.

உதாரணமாக நாம் தினசரி வாழ்க்கையில் கண்ணுற்று, புழங்கி வரும் காட்சிகளான மாட்டு வண்டியில் - ஆடுகளும், கோழிகளும் மனிதர்களுமாக பகிர்ந்து கொண்டு சந்தைக்கு சென்று வரும் ஒரு வண்டியை அனிச்சையாக பார்த்தவாரே கடந்து போயிருப்போம். ஆனால், அந்த பிராந்தியத்தில் வாழ நேர்ந்திருக்காத ஒரு அயலருக்கு அந்தக் காட்சி முதன் முதலாக காணக் கிடைக்கும் பொழுது மலைத்துப் போய் நின்று, பல கோணங்களில் அதே காட்சியினை அழகு, அழகான லாங்/குலோசப் புகைப்படங்களாக சுட்டுத் தள்ளியிருப்பார். அது போன்ற புகைப்படங்களும் உலக காட்சியகங்களில் காட்சிக்கு பரப்பப் பெற்று பல பரிசுகளையும் அள்ளி இருக்கும்.

மாறாக நியூ யார்க்கிலிருந்து வந்திருக்கும் ஒருவருக்கு, தன் ஊரில் நிற்கும் ஒரு வானுயர்ந்த கட்டிடத்தை போன்றே தான் வந்திருக்கிற இடத்திலும் அதே போன்ற வானுயர்ந்த கட்டிடத்தை வளைத்து வளைத்து புகைப்படமாக எடுத்து போவதிலோ, அல்லது அங்கயே தேக்கமுற்று போயி நின்று விடவோ விரும்ப மாட்டார். அவர் பார்க்க நினைக்கும், அவரை கவரும் விசயங்களே வேறாக இருக்கும்.

அப்படியே அவர் பார்க்கும் அத்தனை விடயங்களும் புதிய கதைகளையும், கோணங்களையும் வழங்கி நிற்கும். அது போலவே, நாம் இங்கிருந்து அங்கு போனால் நமக்கு நிகழ்வதாக இருக்கும். அது நமக்குள் மறைந்திருக்கும் ரசனைத் தன்மையையும், படைப்புத் திறனையும் பொறுத்து பார்க்கும் விடயங்கள் ஆர்வத்தை ஊட்டுவதாக அமையப் பெறலாம்.

இயல்பிலேயே, படைப்பாளிகள் நமக்கும் எட்டாத பல நுண்ணிய இழையில் இழைந்தோடும் அந்த அற்புதங்களை உணர்வு பூர்வமாக வெளிக் கொணர்ந்து அதனை பெரிய திரையில் ஒரு காவியச் சித்திரமாக வரைந்து காண்பிக்கும் பொழுதே அதற்கு பின்னான அதன் அழகியலை, கோரத்தை, சமூக அநீதிகளை, அரசியலை புரிந்து கொள்ளும் நிலைக்கு நம்மை நகர்த்தி வைக்கிறார்கள்.

இது போன்ற காரியங்களை அதனூடாகவே வாழ்ந்து தோய்ந்து போனவர்கள் சொல்ல முற்படும் பொழுது அதனில் ஒரு ஜீவனூட்டம் இருப்பதாகி நம்மை யாவரையும் கட்டிப் போட்டு விடும். உதாரணமாக, அங்காடித் தெருவில் வரும் ஒவ்வொரு பசங்களும் நம் பக்கத்திலேயே வாழ்ந்து, நம்முடனே பயணித்து வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்குப் பின்னான வலிச் சமுத்திரம் நம் பார்வையிலிருந்து பல அக/புற காரணிகளால் மரத்து போகச் செய்யப்பட்டிருக்கிறது. அதனை மிக நுட்பமாக, உணர்வு பூர்வமாக உள்வாங்கிய ஒருவரால் மீண்டும் அதே பசங்களின் வாழ்வு அடிக் கோடிட்டு காட்டப் பெறும் பொழுது அவர்களுக்கான வசந்த காலமும், பூட்டப்பட்டிருக்கிற கதவுகளும் திறக்கப் பெறுவதாக அமைகிறது.

அந்த திறப்பினை நிகழ்த்த கமல்ஹாசன்களையும், அரவிந்த சாமிகளையும், அஜித்களையும் குணாதிசியங்களாக கொண்டு செய்ய முடியுமா? தன் மண்ணில் ஒரே மாதிரியான வாழ்வுச் சூழலையும், கிடைக்கும் புறச் சூழலையும் கொண்டு ஒருவன் வயக்காட்டிலும், புழுதிச் சாலையிலும் வறுபட்டு கன்னம் வற்றி, உள்ளிழுக்கப் பெற்று, தோல் கறுத்து, முடி சுருண்டு இருந்த நிலையில் வறுமையின் கோரப் பிடியிலிருக்கும் அந்தக் கூட்டத்தினை முன் நிறுத்தும் உடல் மொழியையும், இயல்பிலேயே அப்படியாக உருவ ஒற்றுமையும் கொண்டவரே நிகழ்வின் விபரீதத்தை/அபத்தத்தை நம்முள் இன்னும் ஆழமாக இறக்க முடியும். மாறாக, வயதிற்கு சிறிதும் பொருத்தமற்ற அஜித்திற்கோ, கமலுக்கோ உடலை வருத்தி, கன்னம் டொக் விழ ஆறு மாதம் சாப்பிடாமல் போட்டு, நிறத்திற்கு கருமையேற்றி தன் நடிப்பிற்கு பொலிவூட்டிக் கொள்ள வேண்டியதில்லை.

அந்த நிலத்திலிருந்தே ஒரு கதாநாயகனை நல்ல ஒரு படைப்பாளி வெளிக் கொணர முடியும். இப்பொழுது, எந்த திசையில் இந்த கட்டுரை நகர்கிறது என்று உங்களால் விளங்கிக் கொள்ள முடியுமே! கதாநாயகியாகவே நடிப்பிலிருந்து விடைப் பெற்றுக் கொண்டு பணி ஓய்வு பெற்ற திருமதி. சுஹாசினி மணிரத்னம் இரண்டு முறை பொது இடங்களில் ஓர் அபத்தமான வேண்டுகோளை படங்களை இயக்கவிருக்கும் இயக்குனர்களுக்கு ஒரு கோரிக்கையாக முன் வைத்திருக்கிறார்.

ஒரு முறை விஜய் தொலைக்காட்சியில் ஏதோ ஒரு சிறப்பு நிகழ்ச்சியிலும், இப்பொழுது உலக திரைப்பட விழாவிலும் இதே கோரிக்கையை எழுப்பி இருக்கிறார். கோரிக்கை இதுதான்: எங்களுக்கு எம்.ஜி.ஆர், கமல், அஜீத் மாதிரி ஹீரோக்கள்தான் வேண்டும்-சுஹாசினி பேச்சு!. இவரின் கோரிக்கையை நாம் வேறு யாரோ ஒரு குடும்பத் தலைவியாக இருந்து சொல்லியிருந்தால் எளிதாக அவரின் அறியாமையை கவனத்தில் நிறுத்தி கடந்து வந்து விடலாம். ஆனால், இவர் உலகச் சினிமாக்களையும், நமது படங்களை பல உலக சினிமா விழக்காளுக்கு அறிமுகப் படுத்தும் பணியிலிருப்பதாக தன்னை முன் நிறுத்தி கொள்பவர்.
இவரிடமிருந்து இப்படி ஓர் அபத்தமான, மேட்டிமைத் தன மேலோட்ட எண்ணப்பாடு கொண்ட இந்த கருத்தாக்கத்தை எப்படியாக எடுத்துக் கொள்வது. இந்த எண்ணம் எத்தனை பெரிய இழப்பை நமது படைப்பாளிகளுக்கும், போராடி வர விருக்கிற மண்ணின் மைந்தர்களான இளம் நடிக, நடிகைகளுக்கு ஊறுவிளைவிக்கும் என்று அறியாமலேயே இன்னமும் சிவப்புத் தோலு கதாநாயர்களை சிவப்பூத் தோலு கதாநாயகிகளுக்கு அறிமுகப் படுத்தச் சொல்லுகிறார்.

எனக்கு என்ன ஆச்சர்யமென்றால் இது போன்ற ஒரு புரிதலை வைத்துக் கொண்டு இவர் எது போன்ற பட ரசனையை கொண்டவராக இருப்பார்? அதுவும் நம் ஊரிலிருந்து வெளி வரும் நல்ல படங்களை அறிமுகப் படுத்த எண்ணும் பொழுது, இது போன்ற சிந்தனை சில நல்ல படங்களையும் வடிகட்டி விட பாதகமாக அமைந்து விடாதா?

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போதே இவரின் அபத்த நகைச்சுவையுணர்வு தாங்கும் படியாக இல்லை. ஒரு கட்டத்தில் சொல்லியிருந்தார் ”இப்பொழுது வரும் கதாநாயகர்கள் எண்ணை வழிந்து கொண்டும், திரையில் எங்கு நிற்கிறார்கள் என்று தடவி கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும்,” சொல்லி நகைத்தார். அந்த மண்ணுக்கே உரியவர்கள் வேறு எப்படியாக இருப்பார்கள்? இவர் எந்த காலத்தில் இருக்கிறார்? இன்னமும் எம்.ஜி.ஆரைக் கொண்டு அங்காடித் தெரு கதாநாயகனை ரசிக்க, தரிசிக்க வைக்க. நகைமுரணாக இல்லை! உலகப் படங்களில் இவர் எதனை சிறப்பாக இருப்பதாக எண்ணி, பார்த்து சிலாகிக்கிறார்?

இந்த சிந்தனை எப்படியாக இருக்கிறது என்றால் ராகுல் காந்தி அவர் அப்பனைப் போலவே நல்ல அழகாக சிரிக்கிறார், சிவப்புத் தோலை போர்த்தியிருக்கிறார். ஆதலால், இந்தியாவின் சார்பில் உலக மனமகிழ் மன்றமாகிய ஐ.நா போன்ற இடங்களில் அமர வைத்தால் இந்தியாவிற்கு கெளரதை என்ற கிரமாத்து தவக்களை சிந்தனையாக இருக்கிறது. :))

சுஹாசினி பேசாமல் குழந்தை வளர்ப்பிலும், வாசிப்பிலும் தன் சொச்ச மிச்ச காலத்தை கடத்தலாம். எனக்கு கவலையாக இருக்கிறது. இவர் போன்றவர்கள் தனது இருக்கையை முக்கியமான இடங்களிலெல்லாம் எப்படியோ கிடைப்பதாக ஊர்ஜிதப் படுத்திக் கொண்டு இது போன்ற அபத்தமான விஷமத்தனமான சிந்தனைகளை அதுவும் எந்தத் துறைக்காக தான் பாடுபடுவதாக நினைத்துக் கொண்டு தனது உழைப்பை போடுகிறாரோ அதுவே நலிந்து எப்பொழுதும் போல அர்விந்த சாமிகளுக்குள்ளும், கமலஹாசனுக்களுக்குள்ளும் முடங்கிக் கிடக்க வழி கோலுகிறார்கள். எப்படி இவர்களாகவே இதனை புரிந்து கொண்டு தகுந்தவர்களை அங்கே அமர விட விலகி நின்று வழி விடுவார்கள்?

இந்த கணினி யுகத்தில் இவர்கள் போன்றவர்கள் ஒரு முக்கியமான விடயத்தை அறிந்து கொள்ள வேண்டும். காலம் மிக வேகமாக மாறி வருகிறது. ஒரு தனி நபரின் சிந்தனை கண்டங்களுக்கிடையே கை சொடுக்கும் நேரத்திற்கும் குறைவான நொடிகளிலிலேயே பகிர்ந்து கொள்ளப்பட்டு அந்த சிந்தனை யுனிவெர்சல் நேர்த்தியை அடைகிறது. உங்களின் பழமைவாத, குலக் கல்வி சிந்தனை is an utter flop in the world stage where learnt people are laughing at your blabbering!!

Related Posts with Thumbnails