Monday, December 28, 2009

அவதார் - இது சினிமா மட்டுமல்ல!

ஒரு நான்கு நாட்கள் வட துருவம் :) வரைக்கும் போயிட்டு வருவோமின்னு மினசோட்ட போயிருந்தேன். போறன்னிக்கு முதல் நாளிலிருந்தே தொலைக்காட்சி செய்திகள் அங்கு பனிப் புயல் ஒன்று தாக்கப் போவதாகவும், பயணம் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டுமெனவும் நடுங்கிக் கொண்டே அறிவிச்சுக்கிட்டு இருந்தது.

எப்படியோ ஒரு வழியா போய்ச் சேர்ந்து வாடகைக்கும் ஒரு காரை அமர்த்திக்கிட்டு விடுமுறையை கொண்டாடினோம். கிரிஸ்துமஸ் மறுநாள் சனிக்கிழமை, அமெரிக்காவில் இருக்கிற அத்தனை ஷாப்பிங் மால்களுக்கும் அன்னை போன்ற அளவில் இருக்கிற 'மால் ஆஃப் அமெரிக்கா' போனோம். ரொம்பப் பெரிசு. அது உண்மையா ஒரு ஃபுட்பால் அரங்கமாம், பின்னாடி ஷாப்பிங் மாலாக மாத்திவிட்டார்களாம்.

சரி கதைக்கு வருவோம். என்னோட பதினொரு வயது நிரம்பிய பையனோட நானும் அவதார் படம் பார்த்திட்டேங்க. அவன் திருகிட்டே வந்தான் என்னது 2.30 மணி நேரம் ஓடுமா, இப்பவே அசதியா இருக்கே அப்படின்னு ஒரு விருப்பமில்லாம சொன்னவனை, வாடா நல்லாருக்குமின்னு உள்ளே தள்ளிட்டுப் போனேன். படம் ஆரம்பிச்சு சரியா 20 நிமிஷத்தில என் பக்கமா சாய்ஞ்சு, "அப்பா, படம் எனக்குப் பிடிச்சிருக்கு"ன்னு சொல்லிட்டான்.

படம் இரண்டரை மணி நேரம் ஓடினாலும், எல்லா தரப்பினரையும் ஏதோ ஒரு வகையில் கட்டிப் போடுற மாதிரியான விசயங்களுடன் இயக்குநர் கேமருன் உழையோ உழைன்னு உழைச்சு இருக்கையோட நம்மை எல்லாம் கட்டிப் போட்டுட்டார்.

இந்தப் படத்தை நான் பார்க்க ஆரம்பிச்ச கோணமே கொஞ்சம் வித்தியாசமானது! மெல் க்ப்சனின் "அபோகாலிப்டே" படத்திற்கு அப்படியே எதிர் தரப்பிலிருந்து படத்தினுடைய கதை நகர்த்தப் பட்டிருக்கிறது (முடிவிலிருந்து தொடக்கமாக). அபோகாலிப்டோவில், க்ப்சன் நாகரிகத்தின் உச்சத்தில் இருந்த மாயா இன மக்கள் வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த காலகட்டத்திலிருந்து ஆரம்பித்து அந்த நாகரிக மக்களை ஒரு காட்டுமிரண்டிகளைப் போல சித்தரித்துக் கொண்டே வந்து கடைசியில் ஸ்பானியார்ட்ஸ் 'மிஷனரிகள்' கப்பல் கட்டி வந்து இறங்கி மிச்சம் மீதி தப்பிக் கிடந்தவர்களை காப்பாற்றுவது போல, கட்சிதமாக தன் பார்வையை மக்களின் முன் படமாக வைத்திருப்பார்.

ஆனால், கேமருன் எடுத்துக் கொண்ட தளம் முற்றிலும் மாறுபட்டது. ஒரு பரந்து பட்ட படிப்பாளியின் தன்மையை முழுமையாக படம் முழுதுமே உணர முடிந்தது. கி.பி 1490களுக்குப் பிறகு அமெரிக்காவின் வரலாறு பலவாறாக திரிக்கப்பட்டு, இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் தலைமுறை என்னவோ இங்கயே பூர்விகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் காலனியின மக்களை, எங்கிருந்தோ வந்த செவ்விந்தியர்கள் கொன்று குவித்து, நாடு பிடித்ததினைப் போன்ற மயக்க அளவிற்கு வரலாறு கற்பிக்கப் பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் (அது பள்ளிப் பாடப் புத்தகங்களிலிருந்தே தொடங்கிவிடுகிறது) இந்தப் படம் சினிமாவிற்கென சில விசயங்களை மாற்றி உண்மை பேசியிருக்கிறது.

பூர்விக குடிமக்களின் மகத்துவத்தை, அவர்களுடைய வாழ்க்கை முறையை, இயற்கையுடன் எவ்வாறு அவைகளின் சூழலமைவு (ecosystem) புரிந்து, இயைந்து வாழ்ந்திருந்திருக்கிறார்கள் என்ற பேருண்மையை அழுத்தமாக எல்லா திரிக்கப்பட்ட வரலாற்றுப் புத்தகங்களின் பக்கங்களிலிருந்தும் கிழித்தெறிந்து விட்டு, அம்மக்களும் நாகரிகத்துடன், குடும்பங்களாக தங்களுடைய நாட்டில் வாழ்ந்திருக்கிறார்கள் என்று விதையை எல்லா தரப்பு சிறியவர்களிலிருந்து, படிக்க, யோசிக்க வாய்ப்பற்ற பெரியவர்கள் வரைக்கும் சென்றடையுமாறு நாசுக்காக விசயம் தூவப் பட்டிருக்கிறது.

என்னை கட்டிப் போட்ட விசயங்களாக நான் கருதுவது, பரிணாம-உயிரியியல் ரீதியில் சிந்தித்து நம்முடைய கிரகத்தில் நாம் பார்த்துப் பழகிய தாவர, விலங்குகளையும் அவைகளுக்கிடையேயான இயற்கைத் தேவை, மற்றும் உணவுச் சங்கிலித் தொடர்பு, வாழ்விடம் என பல விசயங்களை படித்து, ஆராய்ந்து கொஞ்சமே சினிமாத் தனங்களுடன் வழங்கப்பட்டிந்த விதம். இயற்கையின் அங்கங்களான மனிதர்களும், தாவரங்களும், விலங்குகளும் எவ்வாறு ஒன்றிற்கு ஒன்று நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பதனை இந்தப் படத்தை விட வேறு எந்தப் படமும் எடுத்துக் காட்டியதாக நானறிந்த வரையிலும் காண முடிந்ததில்லை.

ஒரு நாகரிகத்தின் வாழ்வும், சாவும் இயற்கை வளங்களை வைத்து கையாளும் விதத்திலேயே தீர்மானிக்கப்படுகிறது. அதற்குச் சான்றாக இறந்து போன பல நாகரிகங்களைக் கொண்டு நாம் காணமுடியும். அது பாலிநேசியத் தீவுகளான ஈஸ்டர், ஹெண்டர்சன் மற்றும் அவைகளையொட்டிய ஏனைய தீவுகளாகட்டும் அல்லது அமெரிக்கா தென்கிழக்கு தொன்மை நாகரிங்களான அனசாசி, மற்றும் பிற தென் அமெரிக்கா நாகரிகங்களாகட்டும் (மாயா, inca, aztec) அனைத்து நாகரிகங்களின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் இந்த இயற்கை பேணலை ஒட்டியே நிகழ்ந்திருக்கிறது.

எத்தனைப் பேருக்கு பழைய வரலாறுகளிலிருந்து இன்றைக்குத் தேவையான பாடங்களை கற்றுணரும் பண்பும், பொறுமையும் இருக்கிறது. இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த பொருளாதார, உலகமயமாக்கல் அரிபரிகளில் நாமும் அது போன்றதொரு இயற்கை பேரழிவின் விளிம்பு நிலைக்கே நம்மை முன் தள்ளி சென்று கொண்டிருக்கிறோம் என்ற அடையாளப் படமாக, அதனை சுட்டிக் காட்டும் விதமாகவும் இந்தப் படம் கட்டமைக்கப் பட்டிருக்கிறது.

படத்தில் பல வசனங்கள் அப்படியே வருமாறும் பார்த்து பார்த்து கேமருன் அமைத்திருக்கிறார். அமைதியாக இயற்கையின் ஒத்திசைவை நன்கு அறிந்து, புரிந்து வைத்திருக்கும் ஒரு இன மக்களுக்கிடையில் (நா'வி = செவ்விந்தியர்கள்) காட்டுமிரண்டித் தனமாக பொருளையே தேடித் திரியும், அரைவேக்காட்டு ஆதிவாசிகள் (காலனி அமைக்கும் இனம்) வேறு எந்த சிந்தனையுமில்லாமல் வந்து நுழைகிறார்கள், விளைவு பேரழிவு. இதனை கதநாயகனுக்கும், கதநாயகிக்குமான முதல் சம்பாஷணைகளில் அழுத்தமாக பதியப்பட்டிருக்கிறது; இப்படியாக - எப்படி பலமான நெஞ்சுத் துணிவு இருப்பவர்களாக இருக்கும் அதே நேரத்தில் குழந்தைத் தனமாக முட்டாள்களைப் போல இயங்குகிறோம் என்று அமெரிக்கர்களை நோக்கி சுய விமர்சனமாக முன் வைக்கிறது ஒரு சம்பாஷணை.

சினிமாத்தனமாக இருந்தாலும், எப்படி மனிதர்களும் இயற்கையுடன் ஒத்திசைவு காட்டி 'சூப்பர் கான்சியஸ்' நிலையில் ஒருமித்து வாழ வேண்டுமென்ற கான்செப்டை இந்தப் படத்தில் - நா'விக்களின் கொண்டை முடியை விலங்குகளுடனும், தாவரங்களுடனும் இணைத்து பரஸ்பரமாக கலந்து ஒன்று பிறிறொன்றின் அங்கம் என்று காட்டும் ஸ்டைல், ரொம்ப அலாதியாக இருந்த அதே வேளையில் இப்படியாக சொல்லித்தான் அழுத்தமாக சொல்ல வந்த விசயத்தை விளங்க வைக்க முடியும் என்பதில் கேமருன் மனதை தொட்டு வெற்றியடைந்திருக்கிறார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

இந்தப் படம் காலனிகளின் நாடுபிடிக்கும் அணுகுமுறைக்கும், அவர்கள் இயற்கையை கையாண்ட விதத்திற்கும் எதிர்மறையானது. நா'பிக்கள் சந்தர்ப்ப சூழலில் வேட்டையாட நிகழ்ந்த பொழுதும், வேட்டையாடப் பட்ட மிருகங்களுக்கு வழங்க வேண்டிய உரிய சடங்கை நிகழ்த்துவதாக காமித்தது, மேற்குலகில் கால் பதித்த காலனி கண்ட மிருககங்களையும் தனக்கு ஆபத்தாக அமையலாம் என்று சுத்தமாக துடைத்தெறிந்ததை (உ.தா: அமெரிக்கன் ஓநாய்) சொல்லாமல் அடிக்கோடிட்டு சொல்லிவிட்டு, ஒரு காட்சியில் கதாநாயகின் மூலமாக காட்டு நாய்களைப் போன்று இருக்கும் மிருகங்கள் கதாநாயகனைத் தாக்க வரும் பொழுது, அவளும் அந்த நாய்களை தாக்கி அழித்துவிட்டு பின்பு இறந்து கிடக்கும் நாய்களை கண்டு இரக்கப்பட்டுவிட்டு, பேசும் வசனம் தெல்லத் தெளிவாக இயற்கையப் பற்றிய விழிப்புணர்வு ஊட்டக் கூடிய முறையில் அமைந்திருந்தது. இருந்தாலும், மக்களுக்கு அலுப்புத் தட்டாத முறையில் அமைந்திருந்தது கூடுதல் சிறப்பு. படத்தில் எல்லா காட்சிகளுமே மிகவும் நுணுக்கமாக அமைத்து என்னைப் போன்றவர்களுக்கு ஒரு செமையான மதியச் சாப்பாடு கொடுத்து அனுப்பியதனைப் போன்று இருந்தது.

திரையரங்கத்தை விட்டு வெளியில் வந்ததும், எனது பையன் 'வாவ்... வாவ்' என்று கூறிக்கொண்டே வந்தான். அவனுக்கு இப்பொழுது செவ்விந்தியர்களைப் பற்றிய மாற்றுப் பார்வை, அவனுக்கு புரிந்த, அதே கலாச்சாரத்தில் வாழ்ந்த ஒருவரின் மூலமாக கூறியது அழுத்தமாக பதிந்திருக்கிறது. அது மட்டுமன்றி வேற்று நாடுகளில் அடவடியாக இராணுவ ஆக்கிரமிப்புகளை நிகழ்த்தியிருக்கும் போது எப்படி போர்களை நடத்தும் 'காமண்டர்கள்' வேடிக்கையாக மனிதர்களை கொல்லும் வார்த்தைகளை, கையில் தேநீர் கோப்பையுடன் குண்டுகளை வீசுவதற்கு கட்டளையிட்டுவிட்டு, மரணங்களை கண்டு ரசிக்கும் காட்சியில், காமண்டரின் மண்டைக்குள் வேறு எதுவுமே இல்லாததனைப் போன்ற பிம்பத்தை நமக்கு வழங்கி, அது போன்ற மனிதர்கள் how evil என்பதனை அழுத்தமாக காமித்திருக்கிறார், கேமருன்.

எனது மகன் ஒத்துக்கொண்ட மற்றுமொரு விசயம், முதல் முறையாக நாம் (அமெரிக்கர்கள்) தேல்வியடைந்ததாக காமித்த படம் இது என்று கூறினான். அதற்கு நான் கூறிய மறுமொழி, ஆம் அது எந்தப் பக்கமிருந்து யார் கதை சொல்கிறார்கள் என்பதனைப் பொருத்து, மாறி மாறி வரும் என்றேன். கடைசியாக படம் பொருத்து, அவன் கூறிய ஒற்றை வரி கமெண்ட்... என்னைய யாராவது இந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதச் சொன்னால், ஒரே வார்த்தை "வாவ்!" என்று மட்டுமே எழுதுவேன் என்று முடித்துவிட்டான். அதுதான் எனது எண்ணமுமாக இருந்தது.

Saturday, December 12, 2009

நரியுடன் ஒரு நேரடி அலையாத்திக் காட்டில் - 2 : Muthupettai Lagoon - II


இந்த சதுப்பு நிலக் காட்டில் காணப்படும் மர வகைகள் தில்லை (Exoecaria agallocha) நரிக்கந்தல் (Aegicerous corniculatum) , நீர்முள்ளி, அலையாத்தி (Avicennia marina) மற்றும் தண்டல். இவைகளில் அலையாத்தி மற்றும் தில்லை மர வகைகளே மிகவும் அதிகமாக காண முடிந்தது. இருப்பினும் இந்தக் காட்டிலும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் சேர்த்து 61 வகையான தாவர வகைகள் அறியப்பட்டுள்ளதாம். (இங்க எப்படி வந்துச் சேர்ந்தோமென்று புரியாம, முழிச்சிங்கன்னா முதல்ல இதப் படிச்சிட்டு வாங்க ... முத்துப்பேட்டை லகூன் இயற்கையின் ஓர் அதிசயம்: Muthupettai Lagoon)


இருப்பினும் பிச்சாவரத்தில் அதிக அளவில் காணக்கிடைக்கும் ரைசோஃபோரா இன வகை சதுப்பு நிலத் தாவரம் இங்கே அறிமுகப் படுத்தப் பட்ட நிலையிலேயே குறைந்த எண்ணிக்கையில் ஒரு சில இடங்களிலேயே காணக்கிடைக்கிறது.


அங்கு வாழும் தாவரங்களின் வேர் அமைப்பு, நாம் சாதாரணமான நிலப் பரப்பில்

காணும் தாவரங்களின் வேர் அமைப்பைக் காட்டிலும் முற்றிலுமாக வேறுபட்ட முறையில் அமைந்திருப்பதனைக் காணலாம். நீரும், சேறுமாக எப்பொழுதும் வேர்ப் பகுதி மூழ்கிய நிலையில் இருப்பதால் உபரியாக அந்த தாவரங்கள் வேர்களை வெளிச் செலுத்தி (stilt roots) சுவாசிப்பதற்கெனவும், தேவையான போஷாக்குகளை பெறுவதற்கெனவும் அமைத்துக் கொள்கிறது. இது போன்ற வேர்கள் அந்த வனங்களின் தரைப் பரப்பு முழுவதிலும் வெளிக் கிளம்பி இருப்பதே கண்ணுக்கு விருந்தாகவும், மனதிற்கு எல்லையற்ற ஆச்சர்யத்தை
வழங்குவதாகவும் அமையக் கூடும்.



ரைசோஃபோரா வகைத் தாவரத்தின் வேர்கள் ஒரு படி மேலே போய் ஒரு மீட்டருக்கும் நீளமாக வேர்களை அதன் முதன்மைத் தண்டிலிருந்து கிளப்பி தரைகளில் வேரூன்றி இருப்பதனைப் போல அமைத்துக் கொள்கிறது. அதனைக் காணும் பொழுது ஏதோ நாமே அந்த மரத்தைச் சுற்றி ரொம்பவும் கவனமாக செதுக்கப்பட்ட மரங்களை எடுத்துச் சென்று அடுக்கி வைத்தனைப் போன்றதொரு பிரமிப்பை ஏற்படுத்தி விடுகிறது. எனக்கு என்னவோ ரைசோஃபோரா மரங்கள் புகைப்படத்திற்கெனவே அமைந்து போனதினைப் போன்ற பிரமையை தோற்றுவித்ததாலும், லகூனில் மிகவும் அரிதாகவே அவைகள் காணக்கிடைத்ததாலும், கிடைத்த மரங்களை நிறைய புகைப்படங்களாக எடுத்து வைத்துக் கொண்டேன்.

இங்கு 73 வகையான மீன் வகைகளும், பல வகை நண்டினங்கள், மெல்லூடலிகள் மேலும் இங்கயே தங்கி வாழும் மற்றும் வலசையாக வந்து போகும் 160 இனப் பறவைகளுமென முத்துப் பேட்டை சதுப்பு நிலக் காடு வண்ண மய மூட்டுகிறதாம்.

அவைகள் மட்டுமின்றி (13 வகையான) பாலூட்டி இன விலங்குகளில் ஜக்கால் (நரி), காட்டு முயல், கீரிப் பிள்ளை இங்கு அடிக்கடி காணப் படும் விலங்குகள்.


'தலைமை முனை' என்ற இடத்தில் அமைக்கப் பட்டிருந்த ஓய்வு மேடைக்குப்

பக்கத்தில் ஒரு திறந்த வெளி இருப்பதனைக் கண்டு, சற்று நேரம் அதனைப் பார்த்தவாறு அமர்ந்து விட்டுச் செல்வோம் என்று கூறி அமைத்திருந்த பெஞ்சில் நான் கட்டையை சாய்த்து விட்டேன். எனக்குள்ளர ஒரு சின்ன ஆசை; அதிர்ஷடமிருந்து ஏதாவது நரி வெளியே வந்தா இந்த திறந்த வெளியில வைச்சுப் பார்க்கலாமேன்னு.

அப்படி இப்படின்னு படகு ஓட்டின மீனவர் மற்றும் வாட்சர் ரெண்டு பேரும் நாங்க உட்கார்ந்திருக்கிற இடத்தில இருந்து ஈழ பூமி எத்தனை தூரம் என்ற வாக்கில் எங்களிடம் பேசப் போக அது எங்கங்கோ நகர்ந்து அப்படியே எப்படி சாமான்ய மக்கள் இந்த ஈழம் சார்ந்த நம் துரோகங்களை அவதானித்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கிணங்க 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு' உதாரணமாக பேசியவற்றை கேட்ட படியே சற்று இளைப்பாறினோம்.


திடீரென்று வாட்சர், "சார் நரி... சார் நரி" வந்து

எட்டிப் பார்த்துச்சு அங்கே... அங்கேன்னு ஹஸ் பண்ணினார். வாரிச் சுருட்டி கேமராவை ட்ரைபாட்டில் பொருத்தி விட்டு, எல்லார் வாயய்க்கும் என் வாயாலேயே ஒரு அமைதி பிளாஸ்திரி ஒன்னு போட்டுட்டு அந்தத் திசையை நோக்கி ஆவலோடு எதிர்பார்த்துட்டு இருந்தோம். நரித் தலைவரு, மெதுவா பொறுமையா இருந்து, இருந்து பார்த்திட்டு இவிங்க இப்போதைக்கு தொலைய மாட்டாய்ங்கப்பான்னுட்டு மெதுவா எட்டிப் பார்த்துச்சு. பிறகென்ன, கேமராக் கண்களைக் கொண்டு பொடெர், பொடெர்னு அவரோட ஒவ்வொரு இயக்கத்தையும் சுட்டு எடுத்துட்டேன்ல.

தலைவரு, நண்டை ஓடி ஓடித் தேடினார். அங்குமிங்குமா,எனக்கு மட்டும் அப்பப்போ நிமிர்ந்து போஸ் கொடுத்துட்டே. எல்லார் முகத்திலும் ஒரே சந்தோஷம்!

"சார், எத்தனையோ முறை வந்திருக்கோம், ஆனா, இது மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சதில்ல உங்களுக்கு செம லக் சார்" அப்படின்னு வேறச் செல்லி உசுப்பு ஏத்தினாங்க இரண்டு பேருமா சேர்ந்து. இருந்தாலும், கேமராவிற்குள் எனக்கு செம வசுல். மற்றதை புகைப்படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க.

பதிவை முடிக்கிறதுக்கு முன்னாடி சில ஃபாக்ட்ஸ். இந்த சதுப்பு நிலக்காடுகள் இயற்கையின் அமைப்பில (eco system) ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் வாழ்விடமும் அதனைச் சார்ந்து வாழும் உயிரினங்களுக்கும், மனிதர்களுக்குமென பல வகையில் உபயோகமாக இருக்கிறது. அண்மையில் நடந்தேறிய சுனாமியின் பாதிப்பு கூட எங்கெல்லாம் இந்தக் காடுகளின் அடர்த்தி அதிகமாக இருக்கிறதோ அங்கே சற்றே சுனாமி அலைகளின் தாக்கம் குறைவாகவே இருந்திருப்பதாக அறியப்படுகிறது.

இந்த நிலையில், முத்துப்பேட்டை சதுப்பு நிலக் காடுகளுக்கு உள்ள முக்கியமான உடனடி பாதிப்பு கட்டற்ற முறையில் அவிழ்த்து விடப் படும் கால்நடைகள் இளம் செடிகளின் குருத்தை அடியிலேயே மேய்ந்து நாசம் செய்து விடுவதால் இந்த மரங்களின் இனப் பரவல் தடுக்கப் படுகிறது என்று ஒரு புறம் இருந்தால், மற்றொரு புறம் சாராயம் காய்ச்சும் கூட்டம் மரங்களையே வெட்டி விறகுக்கென பயன்படுத்துவதும், லோகல் மக்களும் பொறுப்பற்று சில நேரங்களில் அதே வேலையில் ஈடுபடுவதும் இந்தக் காடுகள் சந்தித்து வரும் தலையாய அபாயங்களாக அந்தக் காட்டின் வனச் சரகர் கூறி வருத்தப் பட்டார்.



கண்டிப்பாக மக்களாகவே இந்த வனங்களின் முக்கியத்துவம் அறிந்து, அவைகளைப் பாதுகாக்க முன் வர வேண்டும்.



நான் லகூனில் மிதக்கச் சென்ற நாளன்று என் கண்ணில் சிக்கிய பறவைகளின் பட்டியல்:

1. Common Hoopoe (Upupa epops)

2. Koel (Eudynamys scolopacea)

3. Indian Roller (Coracias benghalensis)

4. Small Blue Kingfisher (Alcedo atthis)

5. White-breasted Kingfisher (Halcyon smyrnensis)

6. Small Bee-eater (Merops orientalis)

7. Rose-ringed Parakeet (Psittacula krameri)

8. Asian Palm Swift (Cypsiurus balasiensis)

9. Spotted Dove (Streptopelia chinensis)


10. Red-wattled Lapwing (Vanellus indicus)

11. Brahminy Kite (Haliastur indus)

12. Large Egret (Casmerodius albus

13. Cattle Egret (Bubulcus ibis)

14. Indian Pond Heron (Ardeola grayii)

15. House Crow (Corvus splendens)

16. Black Drongo (Dicrurus macrocercus)

17. Common Myna (Acridotheres tristis)

18. Red-vented Bulbul (Pycnonotus cafer)

19. White-headed Babbler (Turdoides affinis)

20. House Sparrow (Passer domesticus)

21. Large Pied Wagtail (Motacilla maderaspatensis)

22. Indian Cormorant (Phalacrocorax fuscicollis)

23. Little Cormorant (Phalacrocorax niger)


P.S: Further reading:


Friday, December 11, 2009

முத்துப்பேட்டை லகூன் இயற்கையின் ஓர் அதிசயம்: Muthupettai Lagoon

இந்தப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் எனக்கு அலையாத்தி (லகூன்) எந்தப் பக்கம் இருக்கிறது என்றே தெரிந்திருக்கவில்லை. ஏதேச்சையாக எனது மைத்துனன் மூலமாக அறிய நேர்ந்த ஓர் அற்புத இடம். எனது பெற்றோர்கள் வசிக்கும் கரம்பக்குடியிலிருந்து ஐம்பது கிலோமீட்டர்கள் தொலைவிலேயே அமைந்திருந்தாலும், அது வரையிலும் கேள்விப்படாமலும் அங்கு சென்று வராமலிருந்ததை இப்பொழுது நினைக்கும் பொழுது ஆச்சர்யமாகவும் இருக்கிறது.

அது ஒரு ஆச்சர்யக் காடு என்றால் மிகையில்லை. எனக்கென்னவோ, நாமெல்லாம் படங்களில் பார்த்து அசந்த அந்த அமேசான் காடுகளில் இரு மருங்கும் அடர்ந்த வனப் பிரதேசத்தின் ஊடாக ஓடும் நீண்ட ஆற்றினூடாக ஒரு பயணத்தை கொண்டதாக நினைக்கச் செய்தது; இந்த முத்துப்பேட்டை லகூனில் பயணித்ததின் மூலம், அப்படியானதொரு அழகு!

அந்த சதுப்பு நிலக் காட்டினை (Mangrove Forest) சென்றடைய இரண்டே மணி நேர பயண ஏற்பாட்டின் பேரில் இரண்டே பேருந்துகள்தான் எனக்கு எடுத்தது. அந்தப் பயணத்திற்கு முன்னதாக மைத்துனன் ஆர்வத்தின் பேரில் இணையத்தில் தேடி இரண்டு வலைப்பதிவுகளின் மூலமாக கிடைத்த கட்டுரைகளை படிப்பதற்கென அச்சுப் பிரதி வீட்டிற்கு எடுத்து வந்திருந்தார்.

எங்களது திட்டம் அவர் எனது வீட்டிற்கு முன்னிரவே வந்துவிடுவது எனவும், இரவு தங்கலின் பொருட்டு பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு வசதியாக இருக்கும் எனவும் திட்டமிட்டோம்.

காலை உணவை வீட்டில் வைத்துக் கொள்ள அவகாசமின்றி கிடைத்த ஆறு மணி பேருந்தை பிடித்தோம். பட்டுக்கோட்டையில் இறங்கிய நேரம் காலை சிற்றுண்டி முடிக்கத் தகுந்த நேரமாகிப் போனதால், ஹோட்டல் லக்சுமி நாராயணனில் இனிமேல் காலை உணவே சாப்பிடப் போவதில்லை என்ற அளவிற்கு ஒரு கட்டு கட்டி வயிற்றை நிறைத்துக் கொண்டோம்.

பேருந்துப் பயணம் நான் இழந்திருந்ததாக நினைத்திருந்த நான்கு வருடத்திய ஜன்னலோர இருக்கையும், நல்ல நண்பருனூடான சம்பாஷணைகளையும் ஒருமித்து அந்த ஒரு மணி நேர பேருந்து பயணம் நிறைவுற்றதாக அமைத்து தந்தது. அப்படியானதொரு பயணமாக கரம்பக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டையிலிருந்து முத்துப்பேட்டை பயணமும் அமைந்தது. இரண்டு பேருந்துகளுமே (கரம்பக்குடியிலிருந்து பத்து கிலோமீட்டர்கள் தாண்டி) காவேரிப் பாசனத்தை நம்பியதொரு ஊர்களின் வழியாக பயணித்ததால், பசுமைக்கு பஞ்சமில்லாமல் இருந்தது; சம்பா சாகுபடி நடந்து கொண்டிருந்தது.

எங்களின் பேச்சு அதிகமாக புத்தகங்களைப் பற்றியும் அதனை எழுதிய சமகால மனிதர்களின் நிஜ வாழ்க்கையின் பயணிப்பு பற்றியும், எப்படியுமாக சந்தர்ப்ப வாதம் மனிதர்களின் வாழ்வியல் கோட்பாடுகளையே புரட்டிப் போட்டு விடுகிறது எனவும், அதனையும் மிஞ்சிய சில 'பிழைக்கத் தெரியாத' படைப்பாளிகளைப் பற்றியுமாக சுவாரசியத்திற்கு பஞ்சமில்லாமல் இரண்டு மணி நேரப் பயணம் அரைமணி நேரமாக பயணித்தது. அவர் என்னைக் காட்டிலும் தமிழில் அதிகமாக வாசித்திருந்ததாக தெரிந்து கொண்டேன்.


முத்துப்போட்டையில் இறங்கி கண்ணில் தென்பட்ட ஒரு பெட்டிக் கடையில் அலையாத்திக்கு பொடிநடையாக நடந்தே சென்று விடலாமா என்று வினவினோம். பெட்டிக் கடைக்காரர் ஒரு முறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, சார் அந்த இடத்திற்கு போகாமலேயே நிறைய பேர் நிறைய கதையைச் சொல்வார்கள் அதிலொன்று இது! நீங்கள் பேசாமல் ஒரு ஆட்டோவை அமர்த்திக் கொண்டு செல்வது எதற்கும் நல்லது என்று ஆட்டோ ஒன்றையும் அமர்த்திக் கொடுத்தார்.

அந்தப் பெட்டிக் கடையிலேயே கொஞ்சம் கொறிப்பதற்கென பண்டங்களும், தண்ணீர் பாட்டில்களும் வாங்கிக் கொண்டு ஆட்டோவிற்கு 30 ரூபாய் கொடுத்து லகூனை(அப்படித்தான் அந்த ஊரை குறிப்பிடுகிறார்கள்) சென்றடைந்தோம். வரும் வழியில் சில ஆயுதமேந்திய காவல்துறை அலுவலர்களைக் காண முடிந்தது. ஓட்டுனரிடம் என்ன விசயம் என்று விசாரிக்கும் பொழுது ஒரே வார்த்தையில் கூறி விட்டார் “நல்லா இருந்த ஊரைக் கெடுத்துப்புட்டாங்க சார், 'இன்னொரு காஷ்மீர் ரேஞ்சிற்கு” இருக்கு என்றார். போய்ச் சேரும் வரையிலும் யோசித்துக் கொண்டே போகும்படி ஆகிவிட்டது.

வனத்துறை அலுவலகத்திற்கு முன்பு இறக்கி விடும் பொழுது மணி சரியாக காலை 9.30யை தொட்டிருந்தது. அந்த ஊர் எனது பதினைந்து வருடத்திற்கு முன்னதான என் சொந்த ஊரை ஞாபமூட்டியது. வனத்துறை அலுவலகத்திற்கு முன்பாக இறங்கிய சமயத்தில் யாரும் தென்படவில்லை ஆதலால், கிடைத்த இருக்கையில் அமர்ந்து அப்படியே புழுக்கத்தின் அடர்விற்கிடையே வழிய எத்தனிக்கும் வியர்வையை வழித்துதெறிந்து கொண்டே சுற்றிலும் பார்வையை ஓட்டும் பொழுது, எதிரில் ஒரு குளம் கிடந்தது. அங்கு பெண்களும் ஆண்களுமாக தனித்தனியான படித்துறைகளில் அமர்ந்து இதனைத் தாண்டிய ஒரு உலகம் இருப்பதற்கான எந்த ஒரு பிரக்ஞனையும் காட்டாமல் மகிழ்ச்சி வெள்ளத்தில் முங்கி, துவைத்து, பல் துலக்கி, கால் அலம்பி, சோப்பு போட்டு அதிலேயே மீண்டும் மீண்டும் குளித்து என்று இருப்பதனைக் காணும் பொழுது, என்னாலும் அப்படியானதொரு ஒரு வாழ்க்கையை மீண்டும் மீட்டெடுத்து விட முடியுமா என்ற ஒரு பேராசையை மனதினுள் எழுப்பியது.

என்னுடைய வாழ்க்கை பயணிப்பு, மிக நீண்ட தொலைவுகளை கொண்டது. சில விசயங்களிலிருந்து துண்டித்துக் கொண்டு செல்லுமளவிற்கும், பல விசயங்களை மேலும் நெருக்கமாக்கிக் கொள்வதற்குமான ஒரு தோணியாகிப் போனது. அதிலொன்றுதான் இந்த குளம், குட்டைகளில் குளிப்பதனை நிறுத்திக் கொண்ட துண்டிப்பும் கூட.

அப்படியாக அமர்ந்திருக்கும் பொழுது பக்கத்தில் இருந்த ஒரு பார்க் எங்களை ஈர்த்தது. அங்கு அந்த ஊரே ஓய்வாக இருந்ததாக பட்டது. இப்படி ஒரு அழகான ஆட்டுக் குட்டியும், எதனை நோக்கியோ அமர்ந்திருக்கும் ஒரு பெரியவரையும் கிளிக்க வேண்டுமென கை பரபரத்தது அது உங்களின் பார்வைக்கும், இங்கே.






நாங்கள் வனத்துறை சரக அலுவலகத்தை அடைந்த நேரம் மிக சீக்கிரம் என்பதால் சற்று நேரம் அமர்ந்து அலுவலர்களின் வருகைக்காக காத்திருக்கும் படியாக அமைந்து போனது. பின்பு ஒரு வனத்துறை பாதுகாவலர் ஒருவர் வந்தார், எங்களிடம் வந்ததிற்கான காரணத்தை அறிந்து கொண்டு வனச்சரகரை அலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை பேச வைத்தார். நானும் அறிமுகப் படுத்திக் கொண்டு அவரிடமிருந்து அலையாத்தி தொடர்பான பொதுச் செய்திகளையும், அலையாத்திக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளையும் கேட்டு தெரிந்து கொண்டு, அவர் ஏற்பாடு செய்து கொடுத்த ‘வாட்சர்’ ஒருவருடன் ஒரு படகை ஏற்பாடு செய்து கொண்டு ஏறி அமரும் பொழுது சரியாக சூரியனும் எங்கள் மண்டைக்கும் நேர் மேலாக தன்னை அமர்த்திக் கொண்டான்.


அதுவே எனது முதல் கழிமுகத்துவார நீர் நிலை மற்றும் தாவர வகைகளுக்கூடான படகுப் பயணம். இருப்பினும் என்னுடைய முந்தைய வாசிப்புகளும், சதுப்பு நிலக் காடுகளைப் பற்றியான பொது அறிவும் ஏற்கெனவே அந்த இடங்களுக்குள் பிரயாணித்ததனைப் போன்ற பிரமையை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும், ஒவ்வொரு முறையும் இயற்கை வனங்களுக்குள் பிரவேசிக்கும் பொழுதும் ஆச்சர்யங்களுக்கு அளவில்லை என்பதனால், மனம் எதனை நாம் இந்தப் பயணத்தின் மூலம் இன்று சந்திக்கவிருக்கிறோமோ என்ற எதிர்பார்ப்பை தூவாமல் இல்லை.


எதிர்பார்த்த படியே ஒரு நரியுடனான வீர தீர செயல்களையும், இன்னும் அதிகப் படியான படங்களுடனும் சதுப்பு நிலக் காடுகளின் மேலதிக விபரங்களுடனும், முத்துப்பேட்டை லகூன், அழிவிற்கென முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் காரணங்களைப் பற்றியும் எனது அடுத்தப் பதிவில் தொடர்கிறேன்...

***தொடர்ச்சியும் போட்டாச்சு, பதிவிற்கு இங்கே சொடுக்குங்க ...


நரியுடன் ஒரு நேரடி அலையாத்திக் காட்டில் - 2 : Muthupettai Lagoon - II விடியோவுடன்!

Monday, December 07, 2009

நிலா புகைப்பட விபரம் : EXIF of my Moon Shot

வானவியல் சார்ந்த புத்தகங்களை பார்க்கும் பொழுதெல்லாம் அவங்க எடுத்த நிலாவின் படத்தைப் பார்த்தால் நாம் வாடிக்கையாக பார்க்கும் ஒளிப் பிழம்பாக நிலா இல்லாமல் சப்புன்னு இருக்கும். ஆனா, அந்தப் புகைப்படங்கள் அதன் மேல் இயற்கை நடத்தியிருக்கும் கலேபரங்களை அவ்வளவு தெளிவா காமிக்கும். அதே மாதிரி புகைப்படமா நானும் ஒரு நாள் லபக்கி என்னோட கேமராவிற்குள்/கணினிக்குள் அடக்கிக்கணுமின்னு எண்ணம் இருந்திட்டே இருந்துச்சு.

சரி, இப்போ ஓரளவிற்கு நல்ல கேமராவும் வாங்கியாச்சு. இருப்பினும் லென்ஸ் கழட்டி மாட்டுற SLR மாதிரி இல்லாவிட்டாலும், அந்த அளவிற்கு விபரமான ஒரு SLR like டிஜிட்டல் பெட்டி ஒண்ணு வாங்க முடிஞ்சிச்சு.

சரின்னு அத வைச்சு கோடியக்கரை இரவு வானத்தை எடுக்க முயற்சி பண்ணேன்னு சொன்னேன் இங்கே. அதில ஓரளவிற்கே எனக்கு வெற்றி, தானியங்கி முறையில கேமராவை இயங்க விட்டு எடுத்ததிலன்னு சொல்லியிருந்தேன்.

இப்போ இங்க நல்ல குளிர்காலம். வானத்தில ஒரு மேகம் இல்லாம தன்னந்தனிய நிலா மட்டும் காய்ஞ்சிட்டு இருந்தது. என்னய சுத்தி கீழே இருக்கிற அவ்வளவு ஒளி இம்சையிலும், மனசில் பசக்கின்னு ஒட்டிக்கிற மாதிரியான அழகான ஒரு 'நிலை'யில (phase) இருந்தது. சரி, கேமராவை எடுத்து முயற்சி பண்ணுவோம்னு மீண்டும் தானியங்கி நிலையில போட்டு எடுத்தா நிலா பெரிய ஒளியை அள்ளி வீசும் வட்ட தட்டாத்தான் தெரிஞ்சது.

அடப் போங்கப்பான்னு, அலுப்பா வந்திச்சு. அதுவரைக்கும் நான் நம் திறமையைக் கொண்டு எடுக்கும் 'மானுவல்' மோட்ல போட்டு முயற்சி பண்ணவே இல்ல. இத்தனைக்கும் ஒரு காலத்தில அது மாதிரி (manual) கேமராக்களையே பயன் படுத்தி வந்திருந்தும், இந்த டிஜிட்டல் காலம் ரொம்பவே சோம்பேறி ஆக்கிடுச்சு. வீட்டில ரொம்ப நாளக்கி முன்னாடி வாங்கி வைச்சிருந்த இரண்டு புத்தங்களில் ஒண்ணை Understanding exposure by Bryan Peterson எடுத்து கொஞ்ச நேரம் புரட்டினேன்.

Aperture, Shutter Speed and ISO எல்லாத்தையும் மீண்டு'ம் உள் வாங்கினவனா, கேமராவை 'மானுவல் மோட்'ல போட்டுகிட்டு கேமராவின் லென்ஸ் திறந்து மூடும் aperture செட்டப்பை f/8 போட்டுக்கிட்டேன்; திறந்து மூடுற லென்ஸ் எவ்வளவு நேரம் கிடைக்கிற வெளிச்சத்தை உள்ளே வாங்க திறந்தே இருக்கணுங்கிற shutter speedயை 1/125 வைச்சிக்கிட்டேன்.

பின்பு ISO 100 இருந்தா நல்லாருக்குமின்னு குப்பியை சுத்தி சுத்திப் பார்த்தேன், ஆட்டோ இருந்தது பின்பு 200ல இருந்து தான் தொடங்கிருந்துச்சு. அட'ன்னு ஆட்டோவா அதே பிக் பண்ணிக்கட்டுமின்னு விட்டுட்டேன்.

ட்ரைபாட் ரொம்ப அவசியமா பட்டது. இருந்தது நல்லதாப் போச்சு. அதில கேமராவை ஏத்திக்கிட்டேன். ட்ரைபாட் இல்லன்னா, நாம பட்டனை அழுத்தும் போது சின்ன ஆட்டம் கூட இது போன்ற கூர்மையான முறையில படம் இல்லாம போறதிற்கு வாய்ப்பாகிடும். எனவே, ட்ரைபாட் அவசியம்.

வீட்டின் முகப்பில கிடைச்ச இடத்தில வீசி எறிஞ்ச காற்றையும், விரலை பிடிச்சு இழுக்கிற குளிரையும் சட்டை செய்யாம உட்கார்ந்திட்டேன். இப்போ நிலாவை நோக்கி ஷும் பண்ணேன் உடனேயே ஒளிச் சிதறல் இல்லாமல் ரொம்ப அடக்கமா நிலா என்னோட அதிக பட்ச லென்ஸ் ரேஞ்சிக்கு (484mm லென்ஸ் அது ஆனா, 86mm அளவிலேயே இங்க எடுத்தது) எவ்வளவு பெரிசா தெரியணுமோ அவ்வளவு அளவிற்கு ரொம்ப மென்மையா கேமரா வியூ ஃபைண்டரில் காமிச்சவுடன் இரண்டு அதே இடத்தில் அமர்ந்து எடுத்துக்கிட்டேன்.


கேமராவில இருந்து கண்ணை விளக்கி நிலாவை பார்த்தா, பக்கத்தில நின்ன ஒரு மரத்தின் ஒரே ஒரு குச்சி நிலாவின் குறுக்கே ஓடியிருந்தது. எடுத்தப் படத்தை திரும்ப ஓட்டிப் பார்த்தேன். புகை மாதிரியா ஃபோகஸ்ல இல்லாட்டியும் வித்தியாசம் காட்டினிச்சு. இடத்தை மாத்தி மீண்டும் ஒரு நாலஞ்சு படம் அதே செட்டிங்ல கேமராவை வைத்து எடுத்துக்கிட்டேன்.

அடுத்த நிமிஷமே கணினியில ஏத்தி நல்லதா வந்திருந்த ஒரு படத்தை பெயிண்ட்ல திறந்து 100% ஷும் பண்ணி நிலாவையும், சுற்றி கொஞ்சம் கரும் வானமும் இருக்கிற மாதிரி வெட்டி (cropped) புது விண்டோவில வைச்சு ஒட்டிட்டேன். வேற எந்த ஜகதல வித்தையும் பண்ணலை எந்த மென்பொருள் பயன்படுத்தியும். நிலாவிற்கு எந்த விசயமும் ஏத்தவும், இறக்கவும் தேவையில்லைன்னு பட்டது, சரியாக அமைஞ்சிருந்ததினாலே.



இப்போ மற்றவர்களும் முயற்சிப் பண்ணிப் பார்க்க உதவுமேன்னு நண்பர் sathis and truth கேட்டுக் கொண்டதிற்கினங்க (EXIF), படம் எடுக்கப் பட்ட பொழுது கேமரா செட்டிங்ஸ் பற்றிய விபரங்கள்:

Dimension: 4000 x 3000
Camera make: Panasonic
Camera model: DMC-FZ35
Camera Date 2009:12:04 07:10:49
Resolution: 4000 x 3000
Orientation: Normal
Flash: Not Used
Focal length: 86.4mm
35mm equivalent: 486mm
Exposure time: 0.08s (1/125)
Aperture: f/8.0
ISO: 200
Exposure bias: 0.00
Metering Mode: Spot
Exposure: Manual
Thumpnail: 160x 120 pixels
JPEG Quality: 98 (422)

Useful sites for further catch up:

* Learning about Exposure - The Exposure Triangle by Darren Rowse

* How to take pictures of the moon


Sunday, December 06, 2009

என் கேமராக் கண் மூலமாக நிலவு: the moon picture

ஒரு வாரமாக நிலாவின் மீது ஒரு கிறக்கம் வந்து விட்டது. நிலாவின் முழுமைக்கும் 'அது போன்ற' மனிதர்களுக்கும் ஏதோ ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறதாமே, அது எதுவும் காரணமாக இருக்குமோ :)...

சரின்னு முயற்சி பண்ணிப் பண்ணி கீழே உள்ள மாதிரி கடைசியா அமைஞ்சிடுச்சு உங்களோடும் என்னோட மகிழ்ச்சியை பகிர்ந்துகலாமேன்னு இங்கன.

முதல் முயற்சி இப்படி ஆட்டோ மோட்ல போட்டு எடுத்தப்போ...



ஒரு வழியாக படிச்சி கிடிச்சி மானுவல் மோட்ல போயி விளையாண்டு நிலாவின் ஒளிச் சிதறலை குறைச்சு இப்படியாக எடுக்க கத்துக்கிட்டேன்...



அப்படியே இந்தப் பாட்டையும் கேளுங்க குழந்தைகளோட இருக்கிறவங்க ...நிலா, நிலா ஓடி வா!!


பி.கு: நிலா புகைப்படும் எடுக்கும் பொழுது கவனத்தில நிறுத்த வேண்டிய விசயமா சொல்லுறது என்னான்னா: பொளர்ணமி அன்னைக்கு நிலா புகைப்படத்திற்கு சரியா வராதாம், அதுனாலே வளர்பிறை/தேய்பிறை சமயங்களில் முயற்சி பண்ணச் சொல்லுறாங்கோ. இன்னும் கூட நல்ல வர வைக்க முடியும் போல, இப்போதைக்கு இது போதும் :)

Wednesday, December 02, 2009

கோடியக்கரையில் ஒரு பொழுது : Blackbucks in Point Calimere

கோடியக்கரைக்கு நான் முதுகலை பட்டப் படிப்பு படிக்கும் பொழுதே 90களின் தொடக்கத்தில் வன விலங்குகளின் கணக்கெடுப்பிற்கென சென்றிருக்கிறேன். இருப்பினும் இந்தப் பயணம், 15 வருட வித்தியாசத்தில் வாழ்வின் சில அடர் அனுபவங்களுக்கிடையே எனக்கு நானே தருவித்துக் கொண்ட ஒரு வாய்ப்பாகவும், அதுவும் எதிர்பாராமல் நிகழும் ஒரு சம்பவம் என்பதால் மிகவும் குதூகலத்துடன் மற்ற இரு நண்பர்களுடனும் பயணத்தைத் தொடங்கினேன், எல்லாவற்றையும் பின் தள்ளியவாரே!

கோடியக்கரை வனச் சரணாலயத்தை இரு வகையாக பிரிக்கலாம். ஒன்று வன விலங்குகளுக்கெனவும் மற்றது பறவைகளுக்கெனவும் அமைந்ததாக. இந்தக் கட்டுரையில் முதலாவதாக வன விலங்குகளுக்கென அமைந்த பகுதியில் நடந்த விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பறவைகள் பகுதியில் சுற்றுப் புறச் சூழலின் சேதாரம் கொஞ்சம் தூக்கலாகவும் மனசை நெருட வைப்பதாகவும் அமைந்திருப்பதால் அதனைத் தனியாக பிரிதொரு நேரம் பதிக்கிறேன்.

எனது வேதாரண்யம் நோக்கிய பயணம் அன்று தஞ்சாவூரிலிருந்து தொடங்கியதால் வரும் வழியில் மிகவும் எதிர்பாராத வகையில் வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் இடறி விழுந்தோமென்று கூறியிருந்தேன். அந்த நிகழ்வு மனது முழுதும் மேற்கொண்டு கொண்டாட்டத்திற்கான விதையை தூவியிருந்ததால் பார்க்கும் பச்சையெல்லாம் அடர்ந்த வனப்பகுதிக்குள் இருப்பதாகவே மனசை ஒரு மயக்கத்தில் வைத்திருந்தது. அது வடுவூர் நகரமாகத்தான் இருந்திருக்க வேண்டும். அந்த வடுவூர் ஏரியைத் தாண்டி கண்ணில் பட்ட முதல் டீக் கடையைப் பார்க்க வண்டியை மூர்ச்சையாக்கிவிட்டு, ஆளுக்கொரு வடையும் அருமையான டீயுமென எங்களது நெஞ்சுக்குள்ளும் சிறிது ஈரத்தை வடித்துக் கொண்டு மீண்டும் கிளம்பினோம்.

எங்களது அடுத்த நிறுத்தம் வேதாராண்யம் பேருந்து நிலையமாக இருந்தது. அங்கே தினமணி நிருபர் ஒருவரை சந்தித்து அவரின் மூலமாக கோடியக்கரை சூப்பர் மேன் ஒருவரையும், அந்த ஏரியாவிற்கான வனத்துறை அலுவலர்கள் சிலரையும் அலைபேசியின் மூலமாக தொடர்பு படுத்திக்கொண்டு, நிருபரையும் எங்க கூடவே அழைத்துக் கொண்டு கோடியக்கரை நோக்கி சூரியனார் தன்னை சுருட்டி கவிழ்த்துக் கொள்வதற்கு முன்பாகவே இரவு கேம்பிற்கு தேவையான எதனையுமே அங்கு வாங்கிக் கொள்ளாமல் எல்லாம் கோடியக்கரையில் கிடைக்குமென்ற நம்பிக்கையில் கிளம்பிவிட்டோம்.

எங்களுடன் இருப்பதில் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸில் நிருபர் (என்னுடைய நண்ப - சொந்தக்காரர்), அதனால் வனத்துறை அலுவலர்களிடம் விசயத்தைக் கூறி அனுமதி பெறுவது ரொம்ப எளிதாகவும் பரஸ்பரமாகவும் இருந்தது. கேட்டதெல்லாமே கிடைத்தது. இரவு தங்கல் எங்களுக்கு சற்றே வனப்பக்கமாக அமையும்படி பார்த்துக் கொண்டோம். தான் சரியான படி மின்சார வசதியோ, தண்ணீர் வரத்தோ இருக்காது என்று கூறியும் அப்படியே இருப்பதுதான் நல்லது என்று கேட்டு அதிலேயே நின்ற பொழுது வனச்சரகருக்கே ஆச்சர்யம். அவர் அந்த இல்லங்களில் இன்சார்ஜில் இருக்கும் வாட்சர்களை கூப்பிட்டு கேட்கும் பொழுது இரண்டுமே எப்படியாவது தேர்த்தி கொடுத்து விடலாம் என்று கூறியதாக பின்பு எங்களிடம் தெரிவித்தார்.

அப்படியாக பேசிக்கொண்டு இருக்கும் பொழுது மாலைச் சூரியன் மேலும் மேற்கிற்குள் தன்னை திணித்துக் கொண்டிருந்தது. அவசர அவசரமாக அவரிடம் நாங்கள் பறவைகள் சரணாலயம் பக்கமாக செல்லவேண்டுமென கூறி விடை பெற்றுக் கொண்டு, விரட்டோ விரட்டென்று விரட்டிச் சென்று அங்கே என்னவெல்லாம் கண்டோம் என்பதனை எனது கோடியக்கரை பறவைகள் சரணாலயப் பதிவில் பல படங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மீண்டும் நன்கு இருட்டிய பிறகு எங்களுக்குத் தேவையான விசயங்களை, எதுவெல்லாம் தேவைப்படுமோ அவைகளை இருட்டிற்குள் தேடியலைந்தோம். மின்சாரம் புடுங்கிக் கொண்டு விட்டது, இங்கும் எங்கும் நடப்பதனைப் போன்றே! கோடியக்கரை ஒரு சிறு கிராமம். அதிகமாக மீனவ மக்கள் வசிக்கும் பகுதியாக இருப்பதாக அறிய முடிந்தது. அவர்களின்றி மற்ற சமூக மக்களும் சிறிய எண்ணிக்கையில் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். நல்ல கும்மிருட்டு. இருட்டினுள் வெளிச்சம் விற்கும் ஒரு பெட்டிக் கடையில் கிடைத்த அளவில் சில மெழுகு வர்த்திகளும், தீப்பெட்டிகளும் வாங்கிக் கொண்டு, கண்ணில் பட்ட ஒரு கையேந்தி பவனில் நிறைய புரோட்டாக்களும், சில வீச்சு புரோட்டா மற்றும் கொத்து புரோரோட்டவென ஊரில் உள்ள மற்றவர்களுக்கு மிச்சம் வைக்காத அளவில் எல்லாவற்றிற்கும் ஆர்டர் கொடுத்துவிட்டு, அந்த இருட்டில் நின்று கொண்டு நாங்களும் சில மாடுகளுமாக மேலே அண்ணார்ந்து பார்த்தால் கடையில் புகைந்து கொண்டிருந்த புகையினூடே வானத்தில் கொட்டிக் கிடக்கும் அத்துனை நடசத்திரங்களும் எங்கயோ நாங்கள் வேறு ஒரு உலகத்தில் இருப்பதனைப் போல உணர்வை வழங்கிக் கொண்டிருந்தது.

ஒரு சில விசயங்களின் கனமறிய அதற்கு தொடர்பில்லாத வகையில் தம்மை அந்நியப் படுத்தி வைத்திருந்தாலே முழுதுமாக சில விசயங்களில் விழிப்புணர்வு அடையமுடிகிறது போலும். அது சொந்தங்களின் அருகாமையின் அவசியம் உணர்வதாகட்டும் அல்லது விலகியே வாழ்வதாகட்டும், மேலும் மனதுக்கு நெருக்கமாக நாம் வாழ்ந்து பழக்கப்பட்ட ஊரின் சிறு சிறு விசயங்களின் ஆளுமை நம்முள் ஏற்படுத்திய தாக்கங்களை உணரக் கூட இது போன்ற அந்நியப்பட்டுப் போதல் அவசியமாக பயன்பட்டுப் போகிறதோ?

அதனையொட்டியே குறிப்பாக எனக்கு அண்மைய காலங்களில் கும்மிருட்டில் இது போன்ற நட்சத்திரம் நிரம்பிய வானத்தை அண்ணார்ந்து பார்ப்பதென்பது ஒரு ஆடம்பரமான விசயமாகவே அமைந்து போய் விட்டது. அதனால் கிடைத்த ஒவ்வொரு கணத்தையும் முழுதுமாக பருகினேன் என்றால் அது கண்டிப்பாக மிகையாக இருக்க முடியாது. ஒரு இரண்டு மணி நேரத்திற்கு முன்புதான் சில அற்புதமான காட்சிகளை பறவைகளுக்கென ஒதுக்கிய ஏரியாவில் பார்த்துவிட்டு வந்த எனக்கு இது மேலும் கிரக்கத்தை அதிக மூட்டியது.

யாரும் யாரையும் கண்டு கொள்ளும் நிலையிலில்லாத ஒரு குழு என்பதால், அது க்ரேசி தனங்களை ஒவ்வொருவரின் தனித்தன்மையிலும் வைத்து இயங்கக் கூடிய ஒரு இரவாக அமைந்துப்பட்டிருந்தது. எனது சார்பாக அந்த கும்மிருட்டில் புதிதாக வாங்கியிருந்த கேமரா ட்ரைபாட் வைத்து இரவு வானத்தை புகைப்படம் எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன், வாட்சரின் பாம்புகளின் நடமாட்ட எச்சரிக்கையை கேட்ட ஒரே காதில் கொஞ்சமே வாங்கிக் கொண்டு. இரண்டு படங்கள் நன்றாக வந்திருந்ததாக நினைத்துக் கொண்டேன்.

மறுநாள் காலையில் "யானை, குதிரை எல்லாம் குளிக்குதா, பல்லு தேய்க்கிதா" என்ற கோட்பாட்டினை மற்ற இருவருக்கும் ஞாபகமூட்டி சீக்கிரமாக கிளம்ப வேண்டுமென கொண்டு வந்தவைகளை சுருட்டி வாகனத்தில் திணித்துக் கொண்டு ஆறு மணிக்குள்ளாகவே வெளிமான்கள் (blackbuck - Antelope cervicapra) வாழும் திறந்த புல்வெளி மற்றும் புதர்க்காடுகளைப் போன்றமைந்த (scrub jungle) காய்ந்த பசுமை மாறா மரங்களடங்கிய (dry evergreen) சரணாலயத்தினுள் வனத்துறை பாதுகாவலர் ஒருவருடன் ஊடுருவி விட்டோம்.

நுழைவாயில் பெரும் பொருட்செலவில் நாமெல்லாம் சினிமாக்களில் பார்த்துப் பழகிய ஜுராசிக் பார்க் தோட்டத்தில் நுழைவதனைப் போன்ற பிரமிப்பை ஊட்டியது. இருப்பினும் இது இயற்கை அமைவில் அமைந்த ஒரு காடு. அங்கு எந்த விதமான கட்டுப்பாடுகளுமில்லாமல் (free ranging) வாழும் வெளி மான், புள்ளி மான், ஜக்கால், காட்டுப் பன்றி, பரட்டைத் தலை குரங்கு, முயல், புனுகுப் பூனை, கீரிப் பிள்ளை மற்றும் பல பத்தாண்டுகளுக்குப் முன்பு இந்த வனத்தினுள் குடியேறிய வளர்ப்பு குதிரைகள் (கோவேரிக் கழுதைகள்?) இன்றும் அங்கேயே தங்கி குட்டி ஈன்று (Feral Pony) வாழும் விலங்குகளென கோடியக்கரை இருக்கிறது.

உள்ளே சென்ற சில நிமிடங்களுக்குள்ளாகவே அங்கொன்றும் இங்கொன்றுமாக குழு, குழுவாக கண்களுக்கு வெளிமான்கள் தட்டுப்பட ஆரம்பித்தது. அப்பொழுதுதான் வெளிக்கிளம்பி மேலே ஏற எத்தனித்துக் கொண்டிருக்கும் சூரியனார் தன்னுடைய மஞ்சள் வெயிலை வெளிமான்களின் மீது செலுத்தப் போக அது பெண் மற்றும் இள ஆண் மான்களின் பள பளப்பான தோல்களின் மீது பட்டுத் தெரித்து ஒரு மேஜிக்கல் எஃபெக்ட்டை கொடுத்தது. நன்றாக வளர்ந்த ஆண் வெளிமான்களை அவைகளின் மேல் பகுதியில் இருக்கும் அடர்வான கறு நிறத்தைக் கொண்டு அறிய முடிந்தது.


என்னுடைய கேமராவின் தொலை நோக்கு லென்ஸின் ரேஞ்ச் 480mm அளவிலேயே வித்தையைக் காட்ட திறனுடையது என்பதால், நானும் எப்படியெல்லாம் பல்டி அடித்தும், மான்கள் அவைகளின் இடத்திலிருந்து என்னை நூறு மீட்டர் தொலைவு ரேஞ்சிலேயே நுழையும்படியாக வைத்திருந்தது. இன்னும் அங்கு நேரம் செலவழிக்கும் பொறுமையும், தக்க உபகரணங்களுடனும் ஆயத்தமாக சென்றிருந்தால் பல நல்ல புகைப்படங்களை சுட்டுத் தள்ளியிருக்க முடியும்.

அன்று என் கண்களுக்கு அகப்பட்டது இந்த வெளி மான்களும், ஒரு காட்டுப் பன்றியும், முயல் மற்றும் கீரிப் பிள்ளை. அந்தப் பகுதியின் கடற்கரை ஓரமாக சென்று பார்த்த பொழுது சுனாமி பற்றிய பேச்சு எழும்பியது. ஒரு கலங்கரை விளக்கம் அலேக்காக தூக்கியெறியப் பட்டு சுத்தமாக தரையிலிருந்து ஒரு இரண்டு மீட்டர்கள் அளவே விட்டு விட்டு மீதப் பகுதி ஐம்பது மீட்டர்கள் தொலைவிற்கு அப்பால் கிடந்ததனைப் காண முடிந்தது. அந்த நேரத்தில் கடல் தண்ணீர் சரணாலயத்தினுள் ஏறினாலும் ஒரு விலங்குகளும் மாண்டதாக தெரியவில்லையாம். அனைத்தும் மிகவும் பாதுகாப்பான தொலைவு சென்று விட்டதாக கூறக் கேட்டேம். ஏற்கெனவே செய்தித் தாள்களின் மூலமாகவும் அறிந்து கொண்ட செய்திதான். இருப்பினும் மீண்டும் கேட்கும் பொழுதும், அந்த சம்பந்தப் பட்ட இடத்தில் நின்று கொண்டு பார்க்கும் பொழுது மிகவும் பிரமிப்பாகவும், அச்ச மூட்டக் கூடியதாகவும் இருந்தது. எந்த கடவுள் அல்லது பின்னாடி நடப்பதனை முன்பே அறிவிக்கும் சக்தி கொண்ட சூப்பர் சாமியார்கள் அந்த ஜீவராசிகளின் காதுகளில் ஓதியிருப்பார்கள் என்ற எண்ணமும் எழுந்து வீழ்ந்தது.

கடற்கரை ஓரத்தில் அமைத்திருந்த வாட்ச் டவரின் மீது ஏறி பறவைப் பார்வையில் ஒட்டு மொத்த சரணாலயத்தையும் பார்த்து விட்டு இந்த விடியோவையும் தத்தக்கா பித்தக்கா என்று சுட்டுக் கொண்டு கீழே இறங்கி ஆகாயத் தாமரையின் மலர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டே வந்த பொழுது ஒரு வித்தியாசமான டப்பா ஒன்றை கண்டேன்.

ஆரஞ்சு நிறத்தில் ஒரு அமுல் பால்பவுடர் டப்பா கணக்கில் அது இருந்தது. நூல் அதன் மூடியிலிருந்தபடி தொங்கிய அதன் வித்தியாசமான அமைப்பில் ஏடாகூடமான விசயம் ஈழ மண்ணிலிருந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என்று உடனே பொறி தட்டியது. மனத்தினுள் அச்சம் கலந்த பல சிந்தனைகள் அதனையொட்டி சுனாமியாக நிரம்பி வழிந்தது. இருப்பினும், அதனையும் விடாமல் டப்பாவை இருபக்கமுமாக திருப்பி வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன். பின்பொரு சமயம் கண்டிப்பாக ஈழ மக்களின் உலகம் எப்படி நம்மிலிருந்து 30 கிலோமீட்டர்களே புவி இருப்பில் தள்ளிச் செல்ல நேர்ந்திருந்தாலும் அவர்களின் உலகம் நம் உலகைக் காட்டிலும் ரொம்பவே நகர்ந்து தூரமாக பரிணமித்து விட்டதாக, அந்த ஒத்தை டப்பாவின் மீது எழுதியிருந்த வாசங்களை படிக்கும் பொழுது எனக்குள் எழுந்த எண்ணங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். அதுவே பொருத்தமாகப் படுகிறது.

மீண்டும் கோடியக்கரைக்கே வருவோம். வெளிமான்களுக்கு போட்டியாளர்களாக காணக் கிடைத்தது அந்த கிராமங்களில் கட்டுப்பாடுன்றி அவிழ்த்து விடப்படும் கால்நடைகள்தாம். வெளிமான்களுக்கு தேவைப்படும் அத்துனை உணவையும் மேய்ந்து தள்ளி அவைகளை பட்டினிப் போர் நடத்த விடுமளவிற்கு அதிக எண்ணிக்கையில் உள்ளே நடந்து திரிவதாகப் பட்டது. மற்றுமொரு ஆபத்து வெளிமான்களுக்கு உண்டு அவை தெரு நாய்கள், மான்களின் சிறு குட்டிகளை விரட்டிச் சென்று கடித்து வைப்பது அதன் மூலமான மரணம் என்றும், பல்கிப் பெருகி வரும் கருவேல மரங்களும் இந்த மான்களுக்கே உரித்தான வெட்ட வெளிக்கு இட நெருக்கடியை தருவித்துத் தருவதாக கூடவே வந்திருந்த வனத்துறை அலுவலர் கூறினார்.

வெளிமான்களின் வெளியை தரிசித்து முடித்து விட்டு மீண்டும் அடுத்த கோடியில் அமைந்திருந்த பறவைகள் சரணாலயம் பக்கமாக சென்றதை பற்றி அடுத்தப் பதிவில்... வரும் வழியெங்கும் ஜெர்கின், நீண்ட தலை முடி, தாடி என்று வைத்திருந்த பல மனிதர்கள் தனிமையில் நின்று பரந்து விரிந்து கிடந்த வானத்தின் அடிவாரத்தையோ அல்லது பறவைகளை காண்பதனைப் போன்றோ நிற்பதனைக் பார்த்துவிட்டு அவர்கள் ஆராய்ச்சியாளர்களாக இருக்கக் கூடுமென்று வினவினால், அவர்கள் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து வேண்டுமென்றே வேதாரண்யம் பக்கமாக தன் சொந்தக் குடும்ப உறுப்பினர்களால் கொண்டு வந்து தொலைக்கப்பட்ட புத்தி சுவாதீனம் இல்லாதவர்களாம். என்னால் நம்பவே முடியவில்லை, அவர்களின் ஆராவாரமற்ற செய்கைகளை கவனிக்கும் பொழுது, நம்மை எல்லாம் ஏமாற்றி விட்டு நம்மைக் காட்டிலும் தனிமையையும், இயற்கையின் ஏகாந்தத்தையும் அனுபவிக்கிறார்களோ என்று எண்ண வைத்து பொறாமை கொள்ள வைத்தது.

Friday, November 27, 2009

ஈஷா வித்யாவும் சில எண்ணங்களும் - படங்களுடன் : Isha Vidhya

இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்று கூறி, கூறி தோழி ராஜியை முதல் ஒரு வாரமும் அதனையொட்டி கோயமுத்தூரிலிருந்து கொண்டே என்னுடைய பைத்தியக்காரத்தனமான எந்தவொரு திட்டமுமில்லாமல் சுற்றித் திரியும் பழக்கமும், மேலும் மேலும் அவரைக் கூப்பிட்டு இன்று மாலை, நாளைக் காலை என்று கூறிக்கொண்டே கோவையிலிருந்தவன் சிறுவாணி சாடிவயல் வரைக்குமான பயணம் என்று கிளம்பி, அது சிறுவாணி பாதுகாக்கப்பட்ட வனத்தின் வழியாக, சிறுவாணி மேல் அணை வரைக்குமென நீண்டு, காட்டுக்குள்ளாகவே பாலக்காடு செல்லுவோம் என்று கிளம்பி அது மழம்புலா அணைக்கட்டு வரையிலும் நீண்டு அன்று இரவுதான் கோவை மீண்டும் வந்தடைய முடிந்தது. ஒரு புறம் ராஜீயை காக்க வைக்கிறோமே என்ற குற்றவுணர்வு இடித்துக் கொண்டே இருந்தாலும், அந்தப் பயணம் எல்லா வற்றையும் மறக்கடித்துக் நீண்டு கொண்டே சென்றது இனிமையிலும் இனிமையாக அமைந்து போனது.

ஒரு வழியாக ஆலந்துரையருகே அமைந்திருக்கும் ஈஷா வித்யாவை தருசிக்கும் வாய்ப்பை அந்த சிறுவாணி பயணத்திற்கு மறுநாள் காலையில் நிகழ்த்திக் கொள்ள முடிந்தது. இந்த முறை என்னுடைய கோவை பயணிப்பு முழுதுமாக வெளியிலும், உள்ளுமாக மிகவும் ஈரம் நிரம்பியதாகவே அமைந்திருந்தது. எங்கு திரும்பினும் மேகம் படுத்து உருளும் மலை முகடுகளாகவே காட்சியளித்தன. தென் மேற்கு பருவ மழை அப்பொழுதுதான் உள்ளே காலடி எடுத்து வைத்திருந்தததால் மரங்களும், செடிகளும், ரோடுகளும் ஒரே மகிழ்வுடன் தொப்பலாக நனைந்திருந்தது மென் மேலும் பயணத்தை பொருளுள்ளதாக அமைத்துக் காட்டியது.

ஈஷா வித்யாவிற்கு இருட்டுப் பள்ளம் பாலத்தின் மீதான பயணிப்பின் போது ஆற்றில் நீர் ஓடிக் கொண்டிருந்தது. அங்கு ஒற்றைக் கல்லறை ஒன்றும் இடது புறமாக நின்று இயற்கையின் ஜாலங்களில் நானும் அடக்கம் என்று சான்று கூறி நின்றது. ஈஷா அறக்கட்டளை, வழியெங்கும் மரக் கன்றுகளை நட்டு அதற்கு கூண்டும் கட்டி அதன் மீதாக "நமது மரம்" என்று எழுதியிருந்தது, என்னுடன் வந்திருந்த ஒருவருக்கு மிக்க மகிழ்சியை அளித்தது. எப்படி அந்த கிராமத்து மக்களின் ஆதரவை பெறுவதற்கென "நாம்" என்ற வார்த்தை பயனளிக்கும் என்று சொல்லிச் சொல்லி அதிசயித்துப் போனார்.


ம்ம்ம் வழியெங்கும் அவ்வளவு அழகு தென்னைத் தோப்புகளும், வாழையும் பச்சை பசேலென ஏனைய தாவரங்களும் கண்களுக்கு விருந்தளித்துக் கொண்டே வந்தது. திடும்மென அவ்வெளியில் காவி நிறத்தில் மிகவும் எளிமையான முறையில் இரண்டே கட்டடங்கள் ஆரவாரமில்லாமல் அந்த மலைகளின் பின்னணியில் உறுத்தலே இல்லாமல் கரைந்து போய் நின்றது.

கட்டடத்தின் ஒரு பகுதியில் நுழையும் பொழுதே என்னால் நமது வலைப்பதிவு தோழி ராஜியை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. யாரிடமோ பேசிக் கொண்டு இருந்தார். என்னுடன் மேலும் மூன்று நண்பர்களை அழைத்துச் சென்றிருந்தேன். அது பெரும் அச்சுறுத்தலாக இருக்கப் போகிறதோ என்ற கவலையுடனேயே எல்லாரையும் அறிமுகப் படுத்தி வைத்தேன். ராஜீயும் உடனே அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை அவர்களை அழைத்து எங்களை அறிமுகப் படுத்தியதோடு, பள்ளியை சுற்றிப் பார்க்க சிறப்பு அனுமதியும் வாங்கிக் கொண்டார்.

பள்ளியின் பல விசயங்கள் என்னுடைய மனத்தினுள் ஓடும் எதிர்பார்ப்புகளை மிக நேர்த்தியாக எதிர் கொண்டதாகவே முதல் அவதானிப்பு வழங்கியது. பள்ளிக் குழந்தைகளின் மிதியடிகளை ஒழுங்கு படுத்தி வைத்திருந்த பாங்கு, டிசிப்ளின் வீட்டிலும் எவ்வளவு அவசியம் என்பதனை தினப்படி பழக்கமாக கத்துக் கொடுப்பதற்கான ஒரு வழி முறையாக புரிந்து கொள்ள முடிந்தது. பிறகு வகுப்பு அறைகளின் ஆராவாரமற்ற, இறுக்கமற்ற, நல்ல விஸ்தாலமான உயர்ந்த கூரைகளுடன், செயற்கை வெளிச்சமே தேவையற்ற முறையில் நல்ல வெளிச்சம் படறக் கூடிய வகையில் நிறைய ஜன்னல்களுடன் [குழந்தைகள் நண்பக முறையில் - Children-friendly] அறைகளாக இருந்தது. அந்தக் குழந்தைகளின் மனநிலையில் என்னை வைத்துப் பார்க்கும் பொழுது எனக்கு அந்த அமைப்பு மிகவும் பிடித்துப் போனது. வகுப்பு அறைகளின் அமைப்பின் நேர்த்தி மிரட்டலே அற்ற முதல் படியாக அமைந்து போனது.

எனக்கு அந்தப் பள்ளியின் நோக்கமும், அங்கு படிக்க வரும் குழந்தைகளின் பின்புலம் ஆகியவற்றை கேட்கும் பொழுது, பல ஆச்சர்யங்களுடன் என்னை சற்றே பேச்சற்ற நிலைக்கு இட்டுச் சென்றது. அதனால், ராஜீயைப் பார்த்து அதிசயத்துக் கொண்டே வந்ததில் சரியாகக் கூட பேச முடியாத ஒரு நிலையை உணர்ந்தேன். என்னுடைய மலைப்பு அந்தளவிற்கு ஆழமாக நங்கூரமிட்டிருந்தது. அவர்களின் கடுமையான உழைப்பின் ஊடாக, ஒரு தனி மனித சிந்தனை இத்தனை ஆக்கப் பூர்வமான செயலாக எழுந்து நின்றதனைக் காணும் பொழுது எனக்கு அவ்வாறாக நேர்ந்து போனதில் வியப்பொன்றும் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

ஈஷா வித்யாவில் படிக்கும் குழந்தைகள் அனைவரும் சுற்றியுள்ள கிராமங்களிலுள்ள பொருளாதார வசதியற்ற, பின் தங்கிய மற்றும் மலைவாழ் மக்களின் குழந்தைகள் என கூறினார்கள். ஆனால், அந்தக் குழுந்தைகளுடன் பேசும் பொழுது அவைகளின் உடல், மன ஆரோக்கியம் மிகவும் பிரமிக்கத் தக்கதாக அமைந்தது. கண்களில் தான் என்னவொரு அறிவின் ஒளி மற்றும் தன்னம்பிக்கை, அந்த கண்களின் ஊடாகவே அந்தக் குழந்தைகளின் உடல் ஆரோக்கியமும் காண முடிந்தது.

நாங்கள் அங்கிருந்த நேரம் மதியத்தையும் கடந்து சென்றதால் எங்களுக்கு அந்தக் குழந்தைகளின் மதிய உணவு இடைவேளையையும் காணும் வாய்ப்பு கிட்டியது. ஈஷா வித்யா தங்கிப் படிக்கும் வசதியற்றதாலும், சுற்று கிராமத்தவர்களின் பயன்பாட்டிற்கென அமைந்ததாலும் தினமும் குழந்தைகள் பள்ளிக்கு வந்து செல்கிறார்கள் (அதுவே எனக்கும் பிடித்ததாகப் படுகிறது). எனவே விரும்பிய பெற்றோர்கள் மதிய உணவையும் கையோடு கொடுத்து அனுப்பி விடுகிறார்கள் போலும், ஒரு ஆழ்ந்த மதிய உணவு குழு ப்ரேயர் பாடலுக்குப் பிறகு சாப்பிட ஆரம்பித்தார்கள். அதே கட்டடத்தின் மறு முனையில் மதிய உணவு கொண்டு வராத குழந்தைகளுக்கு உணவு வழங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த உணவினை காணும் பொழுது அது ஒரு சரி விகித உணவாகப் பட்டது, சப்பாத்தி, கொண்டக் கடலை, ஏதோ ஒரு கீரை வகையென அமைந்திருந்தது.

அதனை காணும் பொழுது எனக்கு மீண்டும் பிரமிப்புத் தட்டியது. எப்படி அத்தனைக்கும் நிதி திரட்டி இதனை தினமும் செய்து வர முடியுமென்று. இதற்கு எத்தனை பேரின் பெரிய உழைப்பு தேவைப் படும் என்று நினைக்கும் பொழுதே, மீண்டும் பூமியில் எனது பாரம் அதிகரித்துப் போனது. இந்த நோக்கத்தினை செயலாக்க, எல்லாவற்றையும் பின் தள்ளி இந்த நோக்கத்திற்காக தன்னை முன் நிறுத்திக் கொண்ட ராஜீயை நினைக்கும் பொழுது மிக்க பெருமையாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்தப் பள்ளி உருவாவதற்கு காரண கர்த்தாவான சுவாமி ஜக்கி வாசுதேவிற்கும் எனது வந்தனங்கள்.

இப்பொழுது புரிகிறது ஏன் அவர் கடுமையாக பறந்து கொண்டே இருக்கிறார் என :-) . ஈஷா வித்யாவை முடித்துக் கொண்டு, தியானலிங்க கோவிலுக்கும் சென்று விட்டு மீண்டும் ராஜீயின் பங்களிப்பால் அதே வளாகத்திற்குள் அமைந்திருக்கும் சர்வதேச ஹோம் ஸ்கூலையும் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பும்கிட்டியது. இருப்பினும் எனக்கு என்னவோ ஈஷா வித்யாவே மனதை விட்டு நீக்கமற நிறைந்திருந்தது.

அந்தப் பள்ளிக்கு இன்னும் நிறைய பொருளுதவியும், பள்ளிக்கும், குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களுமாக வழங்குவதற்கு உண்டான அத்தனை வாய்ப்புகளையும் கண்ணுற முடிந்தது. பள்ளி நூலகம் ரொம்பப் பெரிதாக நிறைய அடுக்குகளுடன் உள்ளது இன்னும் புத்தகங்கள்தான் வந்து குமிய வேண்டியுள்ளது. ராஜீ அறுபதாயிரம் ரூபாய்க்கு வாங்கியதாக காண்பித்த புத்தகங்களின் தொகுப்பு ஒன்னரை அடுக்குகளை அடைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தது...

Thursday, November 26, 2009

விபத்தாக சந்தித்த பறவைகள் சரணாலயம் : Vadoovur Birds Sanctuary

எங்களுடைய பயணம் அன்று தஞ்சாவூரிலிருந்து தொடங்கியது. கரம்பக்குடிக்கும், தஞ்சாவூருக்குமான வித்தியாசம் (40கிமீ களுக்குள்) இயற்கையின் அமைப்பில் இராமநாத புரத்திற்கும் கோயம்புத்தூருக்குமான வித்தியாசங்களைப் போன்றே விரிந்து கிடக்கிறது. கரம்பக்குடியின் பாலைவனவாக்கம், ஒரு முறைக்கு மற்றொரு முறை செல்லும் பொழுதிற்கான வித்தியாசங்களை காணும் பொழுது, பாலையேற்றம் தன் கைகளை அகல விரிப்பது ரொம்பவே கண் கூடாக இருக்கிறது. ஏதோ ஒரு காலக் கட்டத்தில் புதுக்கோட்டையை ஆண்ட ஒரு புண்ணியவான் அந்தக் காலத்தில காவேரி கால்வாய்களே உள்ளே வராத மாதிரி பார்த்துக் கொண்டாராம்.


ஏன்னா, தண்ணீரால் கண்டமென்று ஒரு குறிப்பிட்ட சமூகம் எண்ணியதால், கால்வாய்களின் வழியாக வெள்ளம் ஊருக்குள் வந்துவிடும் அபாயமிருக்கிறதென்று, அப்படி ஒரு புத்திசாலித்தனமான முடிவு எடுத்து இருந்திருக்கிறார்கள் :-( அது ஒரு தனிக் கதை. கரம்பக்குடியிலிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தாண்டி தஞ்சை எல்லைக்குள் இருக்கும் இடையாத்தியில் ஓடும் காவேரிக் கால்வாய் தண்ணீர் என்னை அவ்வப் பொழுது பொறாமை கொள்ள வைக்கும். இப்பொழுதோ காய்ந்து கிடக்கும் வயல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, பெருகி வரும் வீடுகளும் அதனையொட்டிய தேவைகளுக்கான திண்டாட்டங்களும், கொழுத்து வளர்ந்து போன கொசுக்களுமாக நீக்கமற எங்கும் வியாபித்து இதிலிருந்து தப்பிப்பதற்கான அடுத்த வழி என்ன என்று விழி பிதுங்க வைக்குமளவிற்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது.

நான் சென்றிருந்த சமயத்தில் கர்நாடகாவில் நல்ல வெள்ளம் போல காவேரிக்கரைகள் கரைபுரண்டு ஓடுமளவிற்கு. அவர்களும் தங்களின் நெஞ்சாங்கூட்டை அகல விரித்து நம்மூர் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டிருந்தார்கள். அது தஞ்சாவூரின் பசுமையைக் கொண்டே புரிந்து கொள்ள முடிந்தது.

தஞ்சாவூரை விட்டு கிளம்பிய 30 நிமிடங்களுக்குள்ளாகவே வழியில் ஒரு பெரிய ஏரியை காண முடிந்தது. ஆஹா! என்று வாயை அகல விரித்துக் கொண்டே, கரம்பக்குடியின் பஞ்ச நிலையிலிருந்து ரசித்துக் கொண்டு வரும் பொழுது அப்படியானதொரு நீர் நிலையை கண்டால் வாய் பிளப்பதில் என்ன ஆச்சர்யமிருக்கக் கூடும்.

எனவே கண்களுக்கு விருந்தாக அந்த ஏரி முழுக்கவுமே சின்னதும் பெரிதுமாக கருப்பு, வெள்ளை, பழுப்பு என நிறைய பறவைகள் மிதந்து கொண்டும், கரைகளில் ஒதுங்கி அடிமேல் அடி வைத்துக் கொண்டுமென காட்சியளித்தது. அது போதாதா, "நிறுத்துங்கப்பா வண்டியை" என்று கூவிக் கொண்டே கீழே இறங்கி அது என்ன இடம் என்று விசாரிக்கும் பொழுது வடுவூர் என தெரிந்து கொண்டேன். இந்த வடுவூர் மன்னார்குடிக்கும் தஞ்சாவூருக்குமான நெடுஞ்சாலையில் உறைந்து கிடக்கிறது. தஞ்சாவூரிலிருந்து 25கிமீ தூரத்திலும், மன்னார்குடி மாவட்டத்தின் ஆளுமைக்குள்ளும் வருகிறது.

அங்கேயே நின்று சில பறவைகளின்
அனுமதியின்றியே புகைப்படங்களை
தட்டிக்கொண்டு இன்னும் கொஞ்சம் தூரம் மெதுவாக வாகனத்தை உருட்டிக் கொண்டே வந்தால், ஒரு பெரிய நுழைவு வாயில் கண்ணில் தட்டுப்பட்டது.


அட! என்று கீழே இறங்கி பார்த்தால், அது

"வடுவூர் பறவைகள் சரணாலயம்" என்று வளைத்து வளைத்து கூறிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் எனது இரண்டு நண்பர்களுமே தஞ்சாவூரிலேயே இப்பொழுது வசிக்கிறார்கள். இரண்டு பேருக்குமே தெரிந்திருக்கவில்லை, இப்படி ஒரு பறவைகள் சரணாலயம் இருப்பது. எனக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை. ஏனெனில், எனக்கு முன்னால், கண்ணுக்கு எட்டும் தொலைவு வரைக்குமாக ஏரி பரந்து விரிந்து கிடக்கிறது. அவை முழுக்க பல வகையான பறவைகளை தன் மீது கிடத்தியவாறே. கண் கொள்ளாத காட்சி!

நான் மேலும் புகைப்படம் எடுப்போமென்று எண்ணினால் எங்களின் கோடியக்கரை நோக்கிய பயணம் வெகு இரவினில் விழுந்து விடும் என்ற அச்சத்தால் ஒரு அரை கிலோமீட்டர்கள் மட்டுமே நடந்து கண்ணுக்கும், கேமராவிற்கும் சிக்கிய சில பறவைகளை நெஞ்சுக்குள்ளும், மெமரிகார்டுக்குள்ளும் அடக்கிக் கொண்டு மீண்டும் வாகனத்தில் ஏறி மனசே இல்லாமல் என்னை வைத்து அடைத்துக் கொண்டேன். கண்டிப்பாக இன்னொரு முறை சீசன் நேரத்தில் நான் அங்கு இருக்குமாரு ஒரு வாய்ப்பும்கிட்டினால் சூரியன் கிளம்பி, படுக்கச் செல்லும் வரைக்குமான நேரத்தில் அங்கே கிடந்து உருள வேண்டுமென எண்ணிக் கொண்டே பயணத்தை தொடர்ந்தேன்.

இது போன்ற எதிர்பாராத காட்சிகளும், சந்திப்புகளும்தான் நம்மை இயற்கையின் முன்னால் நிராயுதமாக நிற்க வைத்து, இன்னும் அனுபவிப்பதற்கு எவ்வளவு விசயங்கள் பூமி முழுதும் விரவிக் கிடக்கிறதென்று பறைசாற்றிக் கொண்டுள்ளன. தஞ்சாவூருக்கு அருகே வசிப்பவர்களும், அந்த ஏரியின் வழியாக பயணிக்க நேரும் வெளி ஊர் மக்களும் சற்று நிறுத்தி, நிதானித்து அவசியம் குழந்தை 'குட்டி'களுடன் சென்று பார்க்க வேண்டிய இடம். ஒரு முக்கியமான விசயம் உள்ளே செல்வதற்கு அனுமதி இலவசம்!

அன்று நான் பார்த்த பறவைகள்: கூட்ஸ், மூர்ஹென், ஜாக்கானா, கார்மோரண்ட்ஸ், நெல் வயல் ஹெரான், பெரிய வகை ஹெரான், பெயிண்டட் ஸ்ட்ரோக், வாத்து வகைகளில் சில... பைனாகுலர் கைவசம் எடுத்துச் செல்லவில்லை அம்பூட்டுத்தான் வெறும் கண்ணால பார்த்து அடையாளப் படுத்த முடிஞ்சது...

கீழே இருக்கிற கண்கானிப்பு தாத்தா என்னய ஒரு படம் எடுங்க, எடுங்கன்னு கேட்டாரா பார்க்கவும் ரொம்ப வித்தியாசமா இருந்தாரா, பிடிச்சுட்டேன் இந்தாங்க அவரும்...



P. S: சரணாலயத்தைப் பற்றிய சில விபரங்கள்: 1999ஆம் வருடம் இந்தப் பறவைகள் சரணாலயம் உருவாக்கப்பட்டதாகவும், மேட்டூர் அணையிலிருந்து சாகுபடிக்கென திறந்து விடப்படும் தண்ணீர் இங்கு சேமிக்கப்பட்டு பயன் படுத்தப்படுவதாகவும், வட கிழக்கு பருவமழையின் போது இயல்பாக பெறப்படும் மழைநீரும் சேர்ந்து இங்கு பறவைகள் இறங்கி ஏற வழிவாகை செய்து விடுகிறதாம். ஏறத்தாழ 40 வகையான நீர்ப் பறவைகள் வந்து செல்வதாக தமிழக வனத் துறை செய்தி கையேடு தெரிவிக்கிறது.

Tuesday, November 24, 2009

சோதனைப் பதிவு!

கொஞ்ச நாளாச்சா அதான்...

இந்தியப் பயணத் தொகுப்பு ஒரு முன்னோட்டம்: w/pictures...

மீண்டும் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு, எங்கிருந்து தொடங்குவது என்ற எண்ணத்தினூடையே இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பிக்கிறேன். காணாமல் போன நான்கு வாரங்களும் நான் நேசிக்கும் என்னுடைய இந்தியாவிற்கு சென்றிருந்தேன். இந்தப் பயணத்தில் என்னுடைய இரண்டு வயது மகளும் இணைந்திருந்ததால் இம்முறை கொஞ்சம் தூக்கலாக இனிப்பும், கசப்புமாக அனுபவங்களை பெற நேர்ந்தது.

இந்த குறுகிய காலப் பயணத்தில் எனக்கு நான்கு நாட்கள் சுவாசம் சார்ந்த சுகவீனமும், நான்கைந்து நாட்கள் என்னுடைய மகளுக்குமாக மருத்துவமனை, மருத்துவ வாசற் காத்திருப்பு என்று நாட்களை கழித்திருந்தேன், இருப்பினும் என்னுடைய ஊர்ச் சுற்றலுக்கு ஒன்றும் குறைச்சலில்லை.

அப்பாடா என்று ஒரு நிமிசம் உட்கார்ந்து யோசிக்கும் பொழுது இங்கெல்லாம் நாம் சென்று வந்தோமா என்று மலைப்பாக இருக்கிறது. கோடியக்கரை, முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி (லகூன்), கோயம்புத்தூர் சென்று அங்கிருந்து வெள்ளியங்கிரி, சிறுவாணி வனத்தினூடாக மேல் அணைச் சென்று அங்கிருந்து மலம்புழா அணை சென்று பார்த்து விட்டு பாலக்காடு வழியாக மீண்டும் கோவை என எனது பயணம் அமைந்திருந்தது.

ஒவ்வொரு இடத்திற்கு சென்றிந்த பொழுதும் கஞ்சத்தனம், வெட்கம் பார்க்காமல் இதைத்தான் புகைப்படம் எடுக்க வேண்டுமென்ற விவஸ்தை இல்லாத அளவிற்கு படங்கள் எடுத்தும் தள்ளியாகிவிட்டது; அந்தப் படங்களைக் கொண்டு பின்னாளில் எழுத நிறைய கிடைக்கக் கூடும் என்ற முன் யோசனையின் பேரில். எனவே, மக்களே கலந்து கட்டியாக என்னிடமிருந்து நிறைய அறிவியல், ஊர் சார்ந்த நினைவோடை மற்றும் அதனைச் சார்ந்த, எப்பொழுதும் நான் நிகழ்த்தும் புலம்பல்களும் அவ்வப் பொழுது வரலாம்.


உடனடியாக எழுத நினைப்பவைகளிலிருந்து சில உங்களின் பார்வைக்கு ஒரு முன்னோட்டமாக:

1) நமது சக வலைப்பதிவரும் தன்னார்வ தொண்டில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ராஜி அவர்களுடன் வெள்ளியங்கிரி ஈஷா மையத்தில் ஒரு ட்டூர். ஒரு நாள் முழுதுமே அங்கு அமைந்திருந்த சர்வதேச பள்ளி மற்றும், ஈஷா வித்யா என்ற பெயரின் கீழ் பிற்படுத்தப் பட்ட மற்றும் மலை வாழ் மக்களின் குழந்தைகளுக்குமான (ஈஷா அறக்கட்டளையின் வாயிலாக ஆலந்துரை அருகே அமைந்திருக்கும்) பள்ளிக்கும் சென்றிருந்தோம் அங்கு நிறைய ஆச்சர்யங்களும், வாயைக் கட்டிப் போடும் அளவிற்கு நமது தோழியின் உழைப்பும் ஒருங்கே காணக் கிடைத்தது. அதனை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் படங்களுடன் ஒரு பதிவு.



2) கோடியக்கரை சென்ற பொழு அது பறவைகள் நிரம்பி வழிய வேண்டிய அக்டோபர் மாதம், ஆனால் சில அதிர்ச்சியூட்டும் உண்மைத் தகவல்கள் ஏன் அது போன்ற பறவைகளின் வரவை குறைத்திருந்தது என்று தெரிந்து கொள்ள முடிந்ததை உங்களின் பார்வைக்கும் வைக்கிறேன்.



3) முத்துப் பேட்டை அருகாமையில் அமைந்திருக்கும் ஒரு சதுப்பு நிலக் காட்டில் (லகூன்) ஒரு நாள் முழுக்கவும் படகில் மிதந்த அனுபவம், அந்தக் காட்டில் நான் கண்ட இயற்கையின் விந்தைகளை படங்களுடன் ஒரு நாள் விவரிக்கிறேன்.



4) மீண்டும் டாப்ஸ்லிப் சென்ற பொழுதினில், அங்கு செமையான மேக மூட்டம் அதனால் சென்ற வாகனத்திலேயே கோழிகாமுத்தி யானைகள் முகாம் வரையிலும் சென்று அங்கு பூவனின் குடும்பத்தாரை சந்தித்த நெகிழ்ச்சியூட்டும் ஒரு சந்திப்பும், என்னுடைய டாப்ஸ்லிப்னூடான நினைவோடையும் படங்களுடன் மீண்டும் பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்.



அதுமட்டுமின்றி இன்னும் நினைவில் தைத்துப் போன விசயங்களையும் நினைவிலிருந்து வெகு தொலைவு செல்வதற்கு முன்பாக இங்கு பதிந்து வைத்து விட மேண்டுமென்று எண்ணிக் கொண்டுள்ளேன், பார்க்கலாம்.

அன்புடன்,

தெகா.

Related Posts with Thumbnails