Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Tuesday, November 19, 2013

தஞ்சாவூர் - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் ஓர் பயணம்: Mullivaaikkaal Mutram (Photos)

என்னோட நண்பன் ஒருத்தனை கிட்டத்தட்ட பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு பிறகு ஒளிஞ்சு கண்டுபிடிச்சு விளையாண்டுகிட்டே இருந்துட்டு நேற்று முகநூலில் வைச்சு கன்னம் மாத்தி, கன்னம் அறைஞ்சுகிட்டு  இன்று நேரா சந்திசிக்கலாம்னு முடிவாகி அவன் தஞ்சாவூர் வந்திருந்தான்.

அவன் எங்களோட நட்பை வட துருவமும் தென் துருவமும் சேராதுங்கிற ரேஞ்சிக்கு 90களிருந்தே சொல்லிட்டு திரியறது உண்டு. ஆனா, அதுக்கு பின்னாடியான திரை மறைவில் ஒரு hate and love காற்றில் தொங்கிட்டே இருக்கும் எங்களைச் சுத்தி.

என்னோட துணைவி, நேற்று நானும் அவனும் அலைபேசியில் பேசிக் கொண்ட தனிப்பட்ட மொழியை கவனிச்சிட்டு ”அப்படி பேசுவீங்க இப்படி நடிக்கிறீங்க ஃபோன்ல அவரோட” அப்படின்னு புருவம் உயர்த்திர அளவிற்கு எத்தனை நாயை கூப்பிட்டுக்க முடியுமோ அத்தனை தடவை மாத்தி மாத்தி கூப்பிட்டுக்கிட்டோம்.

நேரா வந்தவன்கிட்ட என்னய பிடிச்சும் கொடுத்தா. அவன் இது எப்போதுமே அப்படித்தான். அப்படின்னு அதே கிக்கேபிக்கே சிரிப்போட நழுவிட்டான். அவனுக்கு கடுப்பு ஏண்டா நல்ல விசயமே சொல்லி வைக்க மாட்டீங்களாடன்னு. எப்பூடி நாங்க எங்க வைஃபை கிட்ட கூட ஹீரோ வேஷம் கட்டலன்னா- நாலு பேரை வில்லனா ஆக்கினாத்தானே நான் ஹீரோ ஆக முடியும்னு நினைச்சிக்கிட்டு ஹிஹிஹின்னு மனசுக்குள்ளர சிரிச்சிக்கிட்டேன்.

அப்பறம் அவனுக்கு முள்ளிவாய்க்கால் முற்றம் பார்க்கணும்னு தோணி நேற்றே சொல்லிட்டான் போலாம்டான்னு. சரின்னு ஒரு வழியாக தத்தி தவழ்ந்து இடம் கண்டுபிடிச்சு போனோம்.

இந்த அண்ட வெளியில மிதக்கிற அத்தனை வஸ்துவையும் பார்க்க அரக்கபறக்க ஓர் ஓழுங்கற்ற வழியில இயங்கிற மாதிரி இருந்தாலும், அததது இயற்பியல் விதிகளுக்கு உட்பட்டுத்தான் இயங்கி மிதந்துகிட்டு இருக்கு. ஆனா, இந்த மனுசப்பய நடந்துக்கிறதுக்கான காரணங்கள் படிக்க இன்னொரு உலகத்தையே படைக்கணும் போல. கண்ணைக் கட்டுதப்போய்!

நினைவு முற்றம் போயிருந்தோம். மூன்று வருடங்களுக்கு முன்னாலேயே அதனை கட்ட முற்பட்டவர்கள் முறையான அனுமதிச் சான்றிதழ்கள் பெற்றுத்தானே ஒதுக்கப்பட்ட இடத்திற்குள் அதனை கட்டியெழுப்பி இருப்பார்கள். அப்படி இருக்கும் பொழுது, அத்தனை வருடம் எழும் வரையிலும் காத்திருந்து விட்டு இப்பொழுது மதில் சுவரை இடித்து யாருக்கு எதனை தெரியப்படுத்த அப்படி ஒரு அலங்கோலச் மட்டச் சுவர் கட்டினார்கள் என்ற கேள்வியை தவிர்க்கமுடியவில்லை சாலையிலிருந்து அந்த மொத்த அமைப்பையும் கண்ணுரும் பொழுது. என்னவோ போங்கப்பா!

அங்கு எங்களுடன் அந்த முற்றத்தினை பார்வையிட்ட சிலரில் ஒரு பெண்மணிக்கு ஆச்சர்யம் பெண்களை இப்படி கயிற்றால் பிணைத்து எல்லாம் இப்படிச் செய்திருக்கிறார்களா என்று. எந்தளவிற்கு பதினான்கே கிலோமீட்டர் தொலைவில் உள்ள இன்னொரு இடத்தில் இடம் பெயர்ந்து வாழும் தன் இன மக்களுக்கு நேர்ந்த கோரம் அவர்களது பார்வையிலிருந்து முற்றிலுமாகவே மறைக்கப்பட்டிருப்பதற்கு அது ஒரு சான்று வார்த்தையாக காற்றில் மிதந்து காதடைந்தது.

இத்தனை குறுகிய புவியியல் அமைப்பின் குறுக்கப்பட்ட தொலைவிற்குள்ளும், நமக்கும் அவர்களுக்குமான துயரங்களும், தேவைகளும், தொலைதூர நோக்கும் நமக்கும் மத்திய அமெரிக்காவிற்கும் இடையே கிடக்கும் தூரங்களை கடந்து நிற்பதற்கு ஓப்பானது.

அங்கே பார்த்த சிற்பங்கள் அனைத்தும் இணையத்தில் புழங்கியவர்களுக்கு காணக் கிடைத்ததாகவே இருக்கும். இருந்தாலும், அரிதிப் பெரும்பாண்மையான நமது மக்களுக்கு நிச்சயமாக இந்த முற்றம் ஒரு பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி மனதில் ஒரு குற்ற உணர்வை ஊட்டக் கூடியதாகவும், சிந்திக்க வைக்கக் கூடியதாகவும் அமையும் என்பது திண்ணம்.


1) நுழைவு முற்றம்...


2) தமிழகம் மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் தீக்குளித்தவர்களுக்கான மதில் பதிப்பு...

3) ஈழம் மண்ணில் அவர்கள் படும் வதையை விவரணம் செய்யும் மதில் பதிப்பு...

4)

5)
6)

7)
8)


9)
10)

Sunday, August 14, 2011

இது எப்படி சாத்தியமாகிறது...?

அப்பொழுதே சூடாக நடந்தேறி முடிந்திருந்த ஈழ இனப்படுகொலையின் தாக்கத்தின் அடிப்படையில், இந்த கட்டுரை ஜுன் மாதம் 2009ல் எழுதியது. பொங்கி எழும் மனத்தின் ஓலத்தினை தணிப்பதற்கென கொட்டித் தீர்த்தது. பின்னாளில் ஈழ நேசனுக்கு அனுப்பி ஏதோ ஒரு சூழலில் பிரசுரிப்போம் என்றவாக்கில் நிறுத்தி வைத்திருந்ததை, மீண்டும் தூசு தட்டி இங்கு கொண்டு வந்திருக்கிறேன்.

மறைந்த பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை அரக்க பரக்க தூக்கில் தொங்கவிட எத்தனித்து கொண்டிருக்கும் இந்த சூழலில், இணையத்தில் நடக்கும் உரையாடல்கள் சிலவை நாம் உண்மையிலேயே சிந்திப்பு திறனை இழந்து மீடியாக்கள் கொடுப்பதனை அப்படியே ஏற்றுக் கொண்டு முகத்தை திருப்பிக் கொள்ளும் நிலைக்கு நகர்ந்து வெகு தூரம் சென்றுவிட்டோமோ என்று எண்ணச் செய்கிறது.


உலக அரங்கில் ஈழத்தில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது உண்மையே என்று சானல் 4 கொடுத்த காணொளி ஆவணப்படத்தின் மூலம் இந்த உலகத்தையே பதறச் செய்த செய்தி, இத்தனை பெரிய ஜனநாயகத்தை உள்ளடக்கிய ஒரு நாடு, காந்திய வழியில் செல்லும் அஹிம்சா நாட்டிற்கு பாரா முகம் காட்டும் வெறும் செய்தியாகிப் போனது. இப்பொழுது வேக வேகமாக 20 வருடங்களுக்கு முன்னால் குற்றம் சுமத்தப்பட்டு ஏற்கெனவே தண்டனையும் அனுபவித்தவர்களை மீண்டும் தூக்கிலிட வேண்டிய அவசரமென்ன, என்பது புரியவில்லை.

எங்குதான் சென்று யூ டர்ன் அடிப்போம் என்று பார்க்கலாம். இப்பொழுது ஒரே மொழி பேசினாலும் பல மனங்களை உள்ளடக்கி அதனதன் தேவைகளையொட்டி ஓடித் திரியும் உள்ளங்களுக்கென பொதுவானதொரு வாசிப்பு...

இது எப்படி சாத்தியமாகிறது...?

பூகோளத்தின் பரப்பில் நாம் பிறந்து விழும் இடத்தைக் கொண்டுதான் நம் வாழ்வு முறை பெரும்பான்மையாக தீர்மானிக்கப் படுகிறது. அவ்வாறு வாழப் போகும் வாழ்வு எப்படி நகர்ந்து, ஊர்ந்து அன்றாட வாழ்வில் அடிப்படை தேவைகளுக்கு கூட களைத்து தேய்ந்து விடாமலும், மலர்ந்தும் மலராமல் பிஞ்சிலேயே கசக்கப் படாமலும், கண்கள் மலங்க விழித்த படி அதில் கொத்து மண் விழுந்து, வானம் பார்த்த பிண்டமாய் வீழாமலும் வாழ வைப்பது என்பது அப்பரப்பின் அரசியல் ஆளுமையைப் பொருட்டும், மக்களையாளும் மனித மனங்கள் பொருத்தும், தனி மனிதனின் வாழ்க்கை அமைகிறது. 

அவ்வாறு வாழ, வழி நடத்தி செல்லப்பட சுதந்திரமானதொரு பூகோளப் பரப்பு அவசியமாகிறது. சக மனிதனை கெளரவத்துடன் மதித்து மனித ஆற்றல் வெளிப்பட அந்த சுதந்திரம் மிகவும் இன்றியமைதாகிவிடுகிறது.

அவ்வாறு வாழ வழிவகை கிடைத்தவர்கள் தன் மனத்தினூடாக பார்க்கும் அனைத்தும் அழகுடையதாக பார்ப்பதும் இயற்கைதான். அதே மனது சக மனிதன் ஒருவன் தான் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்பங்களில் கால் சதவிகிதம் கூட கிடைக்காமல் வாழ்க்கை மறுக்கப்பட்டு துன்பங்களிலேயே உழன்று, சொல்லொண்ணா சித்திரவதைகளை அனுபவித்து வாழ்கிறான் என்பதனை கண்ணுரும் பொழுது பார்வையாளனாகவே இருக்கிறது. 

தான் பேசும் மொழியினாலோ, அல்லது தரித்திருக்கும் தோல் நிறத்தினாலோ சக மனித துயரம் என உணரும் பொழுது அந்த சுகவாசியின் மனதினுள் கூட ஓர் ஓரத்தில் அதிர்ச்சி கலந்த இரக்கம் சுரப்பதும் இயற்கைதான்.

ஐம்பது வருடங்களுக்கு முன்பு எங்கோ ஓர் இனப்படுகொலை நடந்தேறி அதனின்று தப்பித்து இன்றைக்கு ஒரு நபர் ஒரு புத்தகத்தின் மூலமாக தான் கண்டதை அனுபவித்ததை முன் வைக்கிறார், நாமும் படிக்கிறோம். அந்த வாசிப்பின் ஊடாக நாம் நினைக்கிறோம் மனித நிலையில் இப்படியெல்லாம் சிந்தித்து சக மனிதனை சித்ரவதைத்து தினப்படி கொல்லாமல் கொன்றதை, அந்த ஆசிரியன் அப்படியே விவரிக்கும் பொழுது கண்கள் ஓரத்தில் நீர் வழிய புத்தகத்தை மூடி வைத்து விடத் தோன்றும்.

இப்படி ஒரு மூர்க்க மனம் படைத்த மனிதர்கள் எனும் இனத்தில் நாமும் ஒருவராக பிறந்திருக்கிறோமே என்று நினைத்து நம் பிறப்பிற்கே வெக்கப்பட்டிருப்போம், கண்ணீர் வடித்து சாப்பிட மனமின்றி சில நாட்கள் இருந்திருப்போம்.

மேலே கூறிய அனைத்தும் இன்னமும் மனித நிலையில் ஆரோக்கிய வாழ்வினூடாக வளர்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற எந்த ஒரு மனித மனத்திற்கும் பொருந்தக் கூடும். அது தவிர்த்து, தன் சுய வளர்ச்சிக்காகவும், லாபத்திற்காகவும் வாழும் இந்த ஒரு வாழ்க்கையில் இது போன்ற உணர்வுகளை தொலைத்து சக மனிதன் ஒருவன் பக்கத்து வீட்டில் அலறி துடித்து சாக நேரிடும் பொழுது எப்படி நம்மால் இன்னும் கொஞ்சம் அதிகமாக கேளிக்கை சாதனங்களின் ஒலி குப்பியை திருகி அங்கு ஒன்றுமே நடைபெறவில்லை என நடித்துக் கொண்டு நம் வழியிலேயே சொன்று கொண்டிருக்க முடியும்?

ஏதாவது ஒரு நிமிடமேனும் நம் ஆழ் மனது தெரிந்தே அவ்வாறு இருந்திருக்கிறோமே என்று, நம் ஒட்டு மொத்த வாழ்க்கையின் வாழ்வு முறையை ஒரு நாள் கேள்விக்கு உட்படுத்தி நம் பிறப்பின் நோக்கத்தையே கேள்வி நிலையில் நிறுத்தி விடாதா? எத்தனையோ பட்டங்களை பெற்றிருக்கலாம். எல்லோரும் அண்ணார்ந்து பார்க்கும் உயரத்தை எட்டியிருக்கலாம். ஆனால், மனதிற்கும் தன் உணர்வுகளுக்கும் நெருக்கமான ஒரு சில விடயங்களிலேனும் வாழ்ந்து பார்த்திருக்காத பட்சத்தில் தன் மொத்த வாழ்க்கையுமே அந்த தனிப்பட்ட நபரைப் பொருத்தவரை அவருக்கு இழப்பாகத்தானே தோன்றும்.

இன்று நம் வீட்டிலிருந்து ஒரு 30 கிலோமீட்டர்களே வித்தியாசத்தில் எத்தனையோ அப்பாவி உயிர்கள், எதிரபாராத முறைகளிலெல்லாம் சூறையாடப் பட்டுக்கொண்டிருக்கிறது ஒரு சில அற்ப காரணங்களுக்காக. ஆனால், சுதந்திரமான ஆரோக்கிய சூழலில் சுகவாசியாக வாழும் நாம், நம்மினம் அல்லல் படுவதைக் கண்டு கொதித்தெழுவதை விட்டுவிட்டு, அரிதாரம் பூசிக் கொண்டு ஒன்றுமே செய்ய இயலாத நிலையில் இருப்பதாக கூறி முகம் திருப்பிக் கொள்வது வேதனை அளிப்பது.

பின்னாளில், இக்கோர கொடுமைகள் தாங்கி வெளி வந்த சுயசரிதை வாசிக்குங்கால், என் இனம் தத்தளிக்கும் போது என் குரல் ஓங்கி ஒலிக்கவில்லையே என கண்ணீர் விடுவதால் இன்று நடக்கும் கொடுமைக்கு பயன் ஏது? சிந்தனைவாதிகளாகவும், அறிவு ஜீவிகளாகவும், அரசியல் சாணக்கியர்களாகவும், மனித நேயர்களாகவும் மார்தட்டி இறுமாந்து திரியும் நாம், மெல்லவே முகத்திரை கிழித்து, கதைகள் பேசுவதை நிறுத்தி, ஒற்றுமை வளர உழைப்பது எப்படி என்று சிந்திப்போமா?

Wednesday, June 15, 2011

கொலைக் களம் : இவிங்களும் மனுசங்களாம்!!

கொஞ்ச காலங்களுக்கு இங்கு எழுதுவதை நிறுத்தி வைப்பதாக எண்ணியிருந்தேன். ஆனால், இந்த சானல் நான்கு நேற்று ஒளிபரப்பிய ஈழ இனப்படுகொலை பற்றிய காணொளி பார்த்ததிலிருந்து மேலும் இந்த உலகம் பற்றியும், பணப் பேய்களின் உளம் பற்றியும் அறியும் பொழுது அவ நம்பிக்கையும், அயற்சியும் இவர்களுடன் இன்னமும் இதே காற்றை சுவாசித்து மாண்டொழியும் நாளை எதிர் பார்த்து வயிற்றுப் பிழைப்பு நடத்தி வருகிறோமே என்று நினையும் பொழுது அவமானமாக இருக்கிறது; அதனையொட்டியே இந்த பதிவினை முன் வைக்க வேண்டி வந்திருக்கிறேன்.

இந்த படுகொலையை சந்தித்தவர்களின் கடைசி மணி துளிகளை நினைத்து பார்க்கும் பொழுது இரவு தூக்கம் காணாமல் போவது மிகச் சாதாரணம். அதன் வீரியம் புரியாமலும், புரிந்தும் மனதிற்குள் சிரித்துக் கொள்பவர்களும் இதே நிகழ்வு நாளை நம்மையும், தன் குடும்பத்தாரையும் முற்றுகையிட்டால்... என்ற தொனியில் ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள் மனதின் ஓர் ஓரத்தில் இரக்கம் சுரக்கலாம்.

அவசியம் கீழே உள்ள காணொளியை நெஞ்சை இறுக்கி பிடிச்சிகிட்டு பார்த்து முடிச்சுடுங்க. அப்படியே கையோட அதுக்கு கீழே காணும் இணைப்பில் சென்று ஐக்கிய நாட்டு சபையின் மூத்தவர் பான் கீ மூனுக்கு வெளியான போர் குற்ற ஆதாரங்களை கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு உள்ள விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து அனுப்புங்க.

அதில் இரண்டே விசயங்கள்தான் கேட்கப்படுகிறது. உங்கள் பெயரும், மின்னஞ்சல் முகவரியும். எனவே பயப்பிடாம மனசாட்சிக்கு பயந்தாவது செய்யுங்க, மக்களே! நன்றி!!


பகுதி ஒன்று:



பகுதி இரண்டு:



பகுதி மூன்று:




யூ. என் தளத்திற்கு சென்று விண்ணப்பம் செய்ய:

I just signed a petition urging Ban Ki Moon, UN Secretary-General (UNSG) to investigate allegations of war crimes before an international war crimes tribunal. Please share this important petition with your friends and family. If you are on Facebook, Bebo, MySpace or any other social network please put a post up giving others the link to the petition. Also if you run a website or blog please encourage others to support this urgent campaign. SIGN YOUR PETITION HERE

This message was sent from the Sri Lanka Peace Campaign website, www.srilankacampaign.org. Please report any abuse of this service.

Sunday, April 03, 2011

திருப்பதி ஏழுமலையானே ராஜபக்சேவிற்கு ஆசீர்வாதம்?!

இந்த புகைப்படத்தை பார்த்ததிலிருந்து இனம் புரியாத எரிச்சலும், மானுட நம்பிக்கை இழக்க வைக்கும் எண்ணங்களுமாக என்னுள் எழுந்து போகிறது. நம்முடைய அரசு யாரை எரிச்சல் படுத்தி பார்க்க மேலும், மேலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி பார்க்கிறது? இந்த புகைப்படத்தினை பார்த்த மாத்திரத்தில் இருந்து என்னுள் எழுந்த கேள்விகளில் சில:

அ) ஆயிரக் கணக்கில் மனித உயிர்களை உயிரோடும், குத்துயிரும், கொலை உயிருமாக இருக்கும் போதே புல்டோசர் கொண்டு நிரவியும், குழியுனுள் போட்டு மூடியும் கொன்ற ஒருவருக்கு எப்படி இன்னமும் மனித மாண்புகள் இருக்கக் கூடுமென்று எந்த கடவுளும் ஆசிர்வதிக்கும்? அதற்கு சாமீ பூஜாரிகளும் இந்த புகைப்படத்தில் உள்ளவர்கள் போலவே அங்கீகரித்து ஆசீர்வதிப்பார்கள்? அவருக்கு மென்மேலும் எதனை நிகழ்த்த ஆசீர்வாதம் வழங்கப்படுகிறது?

ஆ) ஒருவரை ஏதோ ஒரு நோக்கத்திற்காகவோ அல்லது அறியாமலோ கொன்று விட்டால் கூட ஒரு காலத்தில் மனசாட்சி கேக்காமல் தன்னையே ஒப்படைத்து கொள்ளும் மனித மனத்திற்கிடையே, எப்படி ஒருவர் பல்லாரயிக்கணக்கான உயிர்களை கதறக் கதற அழித்தொழித்துவிட்டு இப்படி மண்டைக்குள் எந்த குடைச்சலுமே இல்லாமல் புன்னகைத்து அலைந்து திரிய முடியும்? சரி, சில மனிதர்கள் நம்புவது போலவே ஆவி, பேய், பிசாசு சமாச்சாரங்கள் உண்மையாக இருந்தால் இவர்களை ஏன் போய் பிராண்டப்படாது? அப்போ அதுவும் உண்மையில்லையா??

இது போன்ற பல கேள்விகள். அதனையொட்டியும் சில பின்னூட்டங்களையும், உண்மைத் தமிழன் பதிவினையும் படித்ததிற்கு பின்னாலும் வந்த சிந்தனையையும் சற்றே விரிவாக கீழே வைத்திருக்கிறேன். பொறுமை உள்ளவர்களும், தன்னைத் தானே தரம் பிரித்து பார்த்துக் கொள்ள விரும்புவர்களும், please go on read...

மற்ற விலங்குகளிடமிருந்து நம்மை பிரித்துணர நமக்கு கிடைத்த சிறப்பு பண்புகளிலேயே ஆறாம் அறிவாக கிடைத்த சிந்திக்கும் பண்பே சிறந்தது என்று இங்கே பலர் அறிவோம். இந்த சிந்திக்கும் திறனாலேயே நாம் இன்றைய பரிணாம ஏணியின் உச்சத்தில் ஒரு மானுட இனமாக ஏனைய ஜீவராசிகளை அடக்கி ஒடுக்கி உச்சாணிக் கொம்பில் அமர்ந்து கிடைத்த குச்சி ஐசை சுவைத்துக் கொண்டுமிருக்கிறோம்.

இந்த சிந்திக்கும் திறனுக்கு மிகவும் துணையாக இருப்பது நமது ஞாபக சக்தி. இந்த ஞாபக சக்தி தனிமனித வளர்ச்சியினைக் கொண்டு பல குண நலன்களாக தேவையான பொழுது இப்பொழுது நடக்கும் ஒரு நிகழ்வினூடாக பழைய விசயத்தினை வைத்து தைத்து எடுக்கும் முடிவிற்கு முக்கிய காரணியாக செயல்பட்டு நம் முன்னால் நிற்கும் அந்த மனிதன் எது போன்ற எண்ணச் செயல்பாடுகளை கொண்டவன் என்பதனை அறியத் தருவதாக இருக்கிறது.

அந்த தனிமனிதன் தனிப்பட்ட முறையில் குண நலன்களாக பொது நலனை கருத்தில் கொண்டு அடுத்தவர்களுக்கு நிகழும் தன் முயற்சியற்ற அநீதிகளை தனக்கானதாக கருதி எந்த தருணத்திலும் சமரசம் அடைந்து கொள்ளாமல் தக்க தருணத்தில் நீதி பெற்றுத் தரும் ஒரு ’மைட்டோகாண்ட்ரியா’வாக ஒரு சமூகத்தில் இருக்கலாம். மாறாக, சுயநலத்துடனும், வசதியாகவும் தனக்கு சாதகமாக அமையும் பட்சத்தில் உண்மை விசயங்களை புறந்தள்ளி இயல்பாகவே அது போன்ற விசயங்களிலிருந்து தன்னை விடுவித்து கடந்து செல்லும் ஒரு நிகழ்வாக பார்வையுரும் சுயநல நபராகவே தன்னை, தன் சிந்திக்கும் திறனை பழக்கப்படுத்திக் கொள்பவராக அமைந்து விடுவர்.

இது போன்று ஞாபக சக்தியில் நிறுத்தும் பழைய, கடந்து போன சம்பவங்களில் கசப்பான, உடலுக்கும்/மனதிற்கும் தீய்மை தரும் விடயங்களை மறந்து கடப்பது நமக்கு மிக்க நன்மை பயக்கும். அதே சமயத்தில் உலக ப்ரபஞ்ச ரீதியில் ஒட்டு மொத்தமாக மனித நிலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பிறந்து போனதினையொட்டி இன்னொரு இனத்தின் ஊடாக பிறந்தவர் தவறான எண்ணங்களை தனது இனத்திற்கு ஊட்டி வலிமையற்ற ஓரினத்தை தனது சுய லாபங்களுக்காக துடைத் தெரியும் துர்ச் சம்பவத்தை கண்ணுருகிறோம் என்றால் எப்படி அந்த மனிதனை இன்னமும் நம் கூடவே வைத்துக் கொண்டு ஒன்றுமே நிகழாத மனநிலையில் நம்மால் மறந்து வாழ்ந்து விட முடியும்?

மனிதர்களாக அப்படி கடந்து விடுவதும், அது போன்ற மனிதர்களை நம் கூடாக வாழ விடுவதும் நாளை நடந்து முடித்திருப்பதனைக் காட்டிலும் பெரியளவில் எடுத்து நிகழ்த்த முயல மாட்டான் என்று எந்த நிச்சயத்தில் நாம் நிம்மதியாக உண்டு, உறங்கி எழ முடியும்? இதற்காக நீ செய்வதனை நிறுத்திக் கொண்டாயா என்ற அதி புத்திசாலித்தனமான கேள்வியை கேட்டு மடக்க நேரத்தை இழக்க வேண்டாம்...

சில வருடங்களுக்கு முன்பு மும்பை தாஜ் மற்றும் புகைவண்டி நிலையத்திலும் கண் மூடித்தனமாக கட்டவிழ்த்து விடப்பட்ட துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தானின் நேரடித் தலையீடு இருப்பதாக அதனைத் தொடர்ந்த வருடங்களில் பாகிஸ்தானும் அந்த துப்பாக்கிச் சூட்டிற்கான விசாரணையில் ஒத்துழைக்க செய்யவில்லையென ‘கிரிக்கெட் பேச்சு வார்த்தையில்’ கூட சேர்த்துக் கொள்ளாமல் உலக மேடையில் நம் தேசம் அவர்களை அவமானப் படுத்தி பார்த்தது.

இங்கு சில பேர் சொல்வது போல அதாவது விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் அன்றைய சூழ்நிலையில் பாகிஸ்தானை புறக்கணித்து உலகத்தின் பார்வையை அந்த நாட்டை நோக்கி பார்க்க வைக்கும் நோக்கில் செய்து காமித்தோம். என்னை பொருத்த மட்டில் அதுவும் ஒரு நல்ல அரசியல் நகர்வு என்பேன். ஆனால், இன்று எந்தளவிற்கு அந்த நாடு இந்தியாவின் பாதுகாப்பு கருதி பாதி வழி வந்து நம் நாட்டின் கோரிக்கைகளை ஏற்றிருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், இப்பொழுது வட்டியும் முதலுமாக இந்த வாரம் நடந்து முடிந்த ‘கிரிக்கெட் பேச்சு வார்த்தையில்’ முதல் மரியாதை கொடுத்து பாகியின் பழைய கோபத்தை தனிந்து போகச் செய்திருக்கிறது.

இதன் பின்னணியிலேயேதான் உலக அரங்கில் அந்த குட்டியூண்டு இலங்கை தீவில் இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்தேறிய இனப்படுகொலை தொடர்பாக உலக அரங்கில் மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரிப்பு அந்த நாட்டின் அதிபருக்கு இருக்கிறது. ஆனால், அதனின்று தப்பித்து தப்பித்து எந்த அடையாளங்களை அப்புறப்படுத்தவோ என்னவோ இன்றைய அளவிலும் எந்த ஒரு வெளி நாட்டு மனித உரிமை கழகத்தினையோ, பத்திரிக்கைகளையோ உள்ளே விடாமல் அடைத்து வைத்துக் கொண்டு எதனையோ அவசர அவசரமாக செய்து கொண்டிருக்கிறார்.


அண்டைய தேசமான மிகப் பெரிய ஜனநாயகத்தை உள்ளடக்கிய ஒரு நாடு அதன் கை சுத்தமாக இருந்தால், காந்தி பிறந்த மண் அஹிம்சையை போதிக்கும், சிறப்பாக எடுத்தியம்பும் ஒரு நாடு இலங்கையில் இது போன்றதொரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது எனும் பட்சத்தில் அந்த அதிபரை உலக சபையின் முன் நிறுத்தி நீதியை நிலை நாட்டித் தருவது என்பது அதன் பங்கும், கடமையுமில்லையா?

ஒரு முரடனை தனிமைப் படுத்தி, அவன் உண்மையான முகம் வெளிக் கொண்டு வர அதற்கான வழிகளுக்கான சந்தர்ப்பம் அமையும் பொழுதெல்லாம் சுறுக்கை இறுக்குவதின் மூலமாக மட்டுமே அல்லவா அநீதியை வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியும். அதனை விட்டுவிட்டு ஒரு இனப்படுகொலையாளனை எப்படி தோழனாக கொள்ள முடியும்? அப்போ பாகிஸ்க்கு ஒரு நீதி, இந்த குட்டித் தீவு அதிபருக்கு ஒரு நீதியா?!

இது வரையிலும் சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருந்த உலக மானுட ஒழுக்க நெறி, மாண்புகளை எல்லாம் இழந்து விட்டோம் என்ற வாக்கில் ஒரு மனிதன் இனப் படுகொலையை நம் கற்பனைக்கும் எட்டாத வகையில் எல்லாம் நிகழ்த்தி விட்டு எப்படி இப்படி விசிலடித்துக் கொண்டு கேளிக்கை விளையாட்டுகளில் நல்லவனாக வலம் வர முடியும்?

விளையாட்டை விளையாட்டாக பார் என்றால் அத்தனை உயிர்களின் விலை என்ன மயிரா? யார் நீதியை பெற்றுத் தருவது? விளையாட்டு வீரர்களுக்கும் சமூக கடமை இருக்கிறதா இல்லையா? அவர்கள் என்ன ரோபாட்டா? இது போன்ற விளையாட்டுக்களிலிருந்து தனிமை படுத்தி காட்டுவதிலிருந்து உலக சபையில் என்ன நடந்திருக்கிறது என்று நாம் யோசிக்க வைக்க வில்லையெனில் பிறர் யார் யோசிக்க வைப்பார்கள்?


Photo Credit: Net

Sunday, March 20, 2011

லிபியாவின் கடாஃபிக்கு குரல் குடுப்போம் வாங்க...

லிபியாவில் ‘ஆபரேசன் ஆடிசி டாவ்ன்’ தொடங்கி கடாஃபி மற்றும் அவர்களது மகன்களின் கொக்கரிப்பிற்கு ஒரு முடிவுரை உலக நாடுகள் சேர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஏன் நமது அ’ஹிம்சையை மட்டுமே விரும்பும் தேசம் இங்கிருந்து கடாஃபியை அடிக்காதீங்க, அடிக்காதீங்கன்னு கூக்குரலிடுகிறது. யாருக்காவது என்ன ஏதுன்னு ஏதாவது தெரியுமா?

லிபியாவில் கடந்த 40 வருடங்களாக தனது இரும்பு கரத்தைக் கொண்டு மக்களை அடக்கி ஒடுக்கி பெட்ரோல் வளத்தின் மூலமாக கிடைக்கும் அத்தனை பொருளாதாரத்தையும் தானும், தன் மகன்களின் மூலமாகவும் வெளி நாட்டு பாடகிகளை கொண்டு வந்து நாலு பாட்டு பாடு மில்லியன் கணக்கா பணம் தாரேன்னு நாட்டின் பணத்தை செலவு பண்ணி களிக்கும் கூட்டத்திற்கு ஏன் இத்தனை பெரிய ஜனநாயகம், சர்வதிகார அரசாங்கத்திற்காக குரல் கொடுக்கிறது?

கிட்டத்தட்ட எகிப்தில் மக்கள் எழுச்சி எழ ஆரம்பித்த சமயத்திலேயே லிபியாவிலும் மக்கள் துணிந்து தெருவிற்கு வந்து விட்டார்கள். சர்வதிகாரிக்கு எதிராக எழுந்து போராட்டம் நடத்த முன் வர வேண்டுமென்றால் தனது உயிரை இரண்டாம் பட்சமாக பனயம் வைத்து விட்டுத்தான் முன் வந்திருப்பார்கள். அதுவும் இத்தனை ஆண்டுகள் வறுவலுக்கு பிறகு.

இது போன்ற ஒரு வாய்ப்பை பயன்படுத்தி ஜனநாயகத்தில் திளைத்த நாகரீக நாடுகள் அது போன்று தானாக மக்களே முன் வந்து கேக்கும் நிலையில் தன்னாலான உதவிகளை செய்து, ஏனைய சர்வாதிகாரிகளுக்கும் ஓர் எச்சரிக்கை விடுக்கும் வண்ணம் செயல்களை செய்து மக்களுக்கு ஒரு தீர்வை வாங்கி கொடுப்பதல்லவா முறையாக இருக்க முடியும்.

இருந்தாலும் யூ. என்_க்கு செலக்ட்டிவ்வா மனித உரிமைகள் பாதிக்கப்படும் பொழுது, தட்டிக் கேட்கப் போகும் இடம் எது போன்றது, செல்வதின் மூலமாக ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்பதனை எல்லாம் கருத்தில் கொண்டுதான் இறங்குகிறது என்பதனை மறுப்பதற்கில்லை. ஈழத்திலோ அல்லது உகண்டாவிலோ நடந்தேறிய இனப் படுகொலையின் போதெல்லாம் இது போன்ற செலக்ட்டிவ் முன் உரிமைகளே முன் நின்றன. இது போன்ற சமயங்களில் உலக நாடுகளுக்கிடையே முடிவு எடுப்பதில் பிளவுற்று இருந்தாலும் அங்கே சென்று செலவழிப்பதில் எந்த பயனுமில்லை என்றால், மனித உரிமை மீறல்களைக் கூட கிடப்பில் போட்டு வேடிக்கை பார்க்க வைத்து வந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா?

கடாஃபி தனது நாட்டின் தேசீய தொலைக்காட்சியிலேயே தோன்றி போராட்டக்காரர்களை நோக்கி - இதோ எனது கூலிப்படை இன்று இரவு வருகிறது, எந்த ஈவு இரக்கமும் காட்டப் போவதில்லை சாவதற்கு தயாராக இருங்கள் என்று அறைகூவல் விட்டே கோரக் கொண்டாட்டத்தை தொடர்கிறார். இதனை யூ. என் என்ற அமைப்பு அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்க்க வேண்டுமா? இதன் மூலமாக என்ன இந்த உலகத்திற்கு செய்தியாக கொடுக்க முடியும்? மேலும் பல ஈழ, உகாண்டாவை ஒத்த படுகொலைகளை நடத்துங்கள் உங்களின் சொந்த குடும்ப பேராசைக்காக என்று விட்டுவிடலாமா.

ஏன் இந்தியா போன்ற ஒரு பெரிய ஜனநாயக நாடு யூ.என்_ல் கடாஃபி நிகழ்த்தும் வன்முறைக்கு எதிராக ஓட்டு போடுவதில் இருந்து வெளி வந்தது, வந்தும் ஏனைய நாடுகள் எடுத்திருக்கும் முயற்சியினை உடனடியாக நிறுத்துமாறும் கூறி வருகிறது. ஏன் இதனைப் போன்று அன்று ஈழத்தில் இறுதி கட்ட போரில் அத்தனை அப்பாவி உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள், சீனாவும் இலங்கை அரசாங்கத்திற்கு பக்க பலமாக நின்று கொல்லத் துணை போகிறது என்று தெரிந்தும் இந்தியா இன்று லிபியாவிற்கு விடும் அறை கூவலை அன்று ஈழ மக்களுக்காக விடவில்லை? ஒன்னுமே புரியலை...


சகாய விலையில் எண்ணெய் தருகிறேன் என்றால் மனித உயிர்கள் ஒன்று மற்றதாகி விடுகிறதா? இங்கேயும் நம் சுயநலம் வெட்ட வெளிச்சத்தில் அம்மணமாக நிற்கிறது.

பஹ்ரைனில் நம்மவர்கள் அந்த நாட்டு அரசருக்கு ஆதரவாக பாகிஸ்தானின் கூலிப்படைகள் எப்படி அந்த நாட்டு அரசருக்கு சாதகமாக போலீஸ் என்ற பெயரில் அடித்து கொல்வதற்கு துணை நிற்கிறதோ, அதே நிலையில் நம்மூரிலிருந்து சாதாரணமாக வேலைக்கு சென்றவர்களும் கிட்டத்தட்ட பாகிஸ் கூலிப்படைகளின் மனம் போன்றே தாங்களும் நடந்து கொள்வதாக படிக்க முடிகிறது.

அங்கும் 200-300 வருடங்களாக ஒரே பெரும்பான்மையற்ற சன்னி முஸ்லீம் நாட்டை ஆண்டு வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் ஒடுக்கப்பட்ட ஷியா பிரிவினர் தங்களுக்கும் சம உரிமை வேண்டுமென்று போராடி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் எங்கிருந்து நாம் இடையில் வருகிறோம். ஏன் இந்த சுயநலத்தனமான நிலையை எடுக்க வேண்டும்? அங்கே, நமக்கு வேலை போய் விடலாம் என்பதனைத் தவிர வேறு ஏதாவது யோசிப்பதற்கு இருக்கிறதா? இது போன்ற புத்தியைத்தான் நாம் ஐக்கிய நாட்டுச் சபையிலிலும் காட்டி வருகிறோம்.

நீதி, நியாயம் என்ற ஒன்றெல்லாம் நமது சுயநலத்திற்கு முன்பு ஒன்று மற்றதாகி விடுகிறது என்றுதான் நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையிலும் காட்டிக் கொள்கிறோம். இதனையே பிர தேசங்களில் தற்காலிகமாக இருக்கும் பொழுதும் கண்ணை மூடிக் கொண்டு முன் வைக்கவும் எத்தனிக்கிறோம் விளைவுகளை பற்றி சிறிதும் கவலையோ, அக்கறையோ இல்லாமல்.

லிபியாவிலும் மற்ற மத்திய கிழக்கு நாடுகளிலும் நடந்து வரும் மக்கள் எழுச்சியினையொட்டி வரும் ஆபத்திற்கு பின்னால் பல நாட்டு மக்கள் வெளியேறி வருகிறார்கள். நம்மூர்க்காரர்கள் ஊருக்கு சென்று என்ன செய்வது, நம்மூரில் எனக்கு உள்ள சூழ்நிலையை விட இதுவே பரவாயில்லை என்று அங்கயே இருந்து விடவும் துணிவதாக செய்திகள் படிக்கிறோம் அதுவும் லிபியா போன்ற நாட்டிலிருக்கும் நம்மூர் பெண்களே இப்படியாக முடிவு எடுத்து தங்கியிருக்கிறார்களாம். இதன் மூலமாக தெரிய வருவது என்ன? நம்மூரில் எத்தனை துயரங்களையும், பொருளாதார நலிவடைவையும் பார்த்திருந்தால் அப்படியான ஒரு துணிவிற்கு வந்திருப்பார்கள். இதனை நினைத்து பெருமைபட்டுக் கொள்ளவா முடியும்.

நம்மால் செய்ய முடியாததை அடுத்தவன் செய்யவாவது விட்டு விலகி நிற்போம். இந்த நேரத்தில போயி இரட்டை நிலை எடுப்பதெல்லாம் எங்கப்பன் குதிருக்குள் இல்லைங்கிற மாதிரி காட்டி கொடுத்துவிடும். கொஞ்சம் அப்படி ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்க்கலாம், ஈழத்தில நடந்தப்போ இருந்த மாதிரியே!



P.S: Photo Courtesy: Net

Wednesday, January 12, 2011

சீமான் என்ன செய்யவேண்டும்?

சமீப காலமாக நான் கவனித்து வருபவர்களில் முக்கியமான இடத்தை பிடித்து வைத்திருப்பவர் இந்த சீமான். இவரை ஓர் அரசியல் கட்சி தலைவர் என்று பார்ப்பதனைக் காட்டிலும் இன்றைய நிலையில் பெரும்பாலான இளைஞர்களின் மனக் குமுறல்களின் ’பேசுவாய்’ என்றே கொள்ளத் தோன்றுகிறது. தமிழகத்திலுள்ள இரு பெரும் அரசியல் கட்சிகளின் புளித்துப் போன நடவடிக்கைகளையும், சுழற்சி அடிப்படையில் கோணிப் பைகளுடன் வந்து அள்ளிக் கொண்டு போக காத்திருக்கும் கூட்டங்களாகவே இருக்கிறது.

சமீபகாலமாக இளைய சமூகத்தின் மூளையின் முழுப் பகுதியையும் டாஸ்மார்க் அரித்து விடாத மக்கள் ஓரளவுக்கேனும் உணர்ந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் வெளிப்படுத்த வழியில்லாமல் அரசியல்வியாதிகளை நாட்டிய நாடகங்களை தினந்தோறும் பார்த்துக் கொண்டுருக்கிறார்கள்.

இந்த சந்திப்பில் சரியான திசையில் மீண்டும் வழி நடத்தி செல்லவும் ‘பணத்தை’ மட்டுமே குறியாக கொண்ட தலைகளைத் தாண்டி ஏதோ ஒரு வகையில் மாநிலத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பிரச்சினைகளுக்கு (தண்ணீர்) விடையறியும் ஒரு புள்ளியில் வந்து நிற்கிறது மாநில அரசியல். ஒரு அரசியல் தலைமையின் எதிர்காலம் என்னவாகப் போகின்றது என்பதை இந்த தேர்தல் நிச்சயம் முழுமையாக உணர்த்தாவிட்டாலும் கூட விபரம் புரிந்தவர்களுக்கு கோடிட்டி காட்டிவிடும்.

பரந்த பார்வையாற்ற, பணத்தை தாண்டி யோசிக்க தெரியாத தரித்திர குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் சதா காலமும் இன்றைய சூழ்நிலையில் தமிழினத்தை காக்க வந்த தேவர்களாக காட்சி அளித்துக் கொண்டுருப்பது ஒரு மகத்தான் ஆச்சரியமே? தங்களுக்கான தேவைகளை அதீதமான ஒரு ‘மேனியாக்’ தனமாகவே பாவித்து அதன் பின்னாலே சமரசங்களுடன் ஓடித்திரிந்து கொண்டுருக்கிறார்கள். எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்று ஒவ்வொரு முறையும் ஏமாறுவது திருவாளர் பொதுஜனம் மட்டுமே? இத்தகைய அவலத்தினை தாண்டி உண்மையாக யோசித்து மக்களுக்கு நிறந்தரமான ஒரு தீர்வை பெற்றுத் தரும் ஒரு தலையை ஒவ்வொரு காலகட்டத்திலும் காலம் கொண்டுவந்தும் சேர்த்துவிடுகிறது. நாங்கள் பொற்காலத்தை தமிழர்களுக்கு கொடுத்தவர்கள் என்பவர்களுக்கும் இல்லையில்லை எங்களால் மட்டுமே தமிழர்கள் விரும்பும் மறுமலர்ச்சியை அளிக்க முடியும் என்று சொல்லிக் கொண்டுருப்பவர்களுக்கும் இந்த தேர்தல் ஒரு குருஷேத்திர யுத்தம் போலத்தான் காட்சியளிக்கப் போகின்றது. பணம் தான் இன்று பாராளுமன்றத்தை தீர்மானிக்கிறது என்பதைப் போலவே இந்த பணமே இந்த தேர்தலில் பாதாளம் வரைக்கும் பாயப் போகின்றது..

இதற்கான தலைமையை நாம் காலம் தோரும் சினிமாவை பின்புலமாக கொண்டவர்களிடமிருந்தே எதிர்ப்பார்த்து பெற்றுக் கொள்கிறோம். அது நமது சாபங்களில் ஒன்று! அதன் பின்னணியிலிருந்து நமக்கு யாரோ ஒருவர் கிடைக்கப்பெற்றாலும், பேசும் விசயங்கள் சார்ந்து இருக்கும் ஆழ அறிவினைக் கொண்டு ஒரு நம்பிக்கை கீற்றை நமக்கு அவர்கள் வழங்கலாம்.

தெளிவற்ற, கொள்கையடிப்படையற்ற, குழப்ப மனநிலையிலிருக்கும் ஒரு சினிமா பிரபலத்தை விட, பிரச்சினையின் ஆழமறிந்த உடனடித் தேவைகளை கண்டறிந்த இளைஞனே இன்றைய தேவை. சீமானுக்கு இது அமைந்திருக்கிறது; திரைப்படம் என்றொரு பின்புலத்தை மட்டும் நீக்கிவிட்டு பார்த்தால். அவருக்கு உடனடியான, தடாலடியாக இந்திய பிரதம மந்திரியாகும் ஆசையெல்லாம் இருப்பதாக தெரியவில்லை.

துணிச்சலாக பிரச்சினைகளின் ஆழத்தைப் பற்றி பேசுகிறார். அரசியலாகிப் போன காவேரி, கொஹோனக்கல், முல்லை பெரியார் நீர் பகிர்தலைப் பற்றி ஆதாரப்பூர்வமாக பேசிகிறார். ஈழத்தின் துரோகத்தினைப் பற்றி ஒவ்வொரு கூட்டத்திலும் தவறாமல் பேசுகிறார். ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் வைத்து பகடையாடப்படும் தனத்தையும், அண்டைய நாடுகளுக்குள் எல்லைகளை வைத்து தேவையான பொழுது சில திசை திருப்பல்களுக்காக அரசியல் செய்து கொள்வதனைப் போன்று இன்றைய நிலையில் அண்டைய மாநிலங்களுக்குள்ளும் இது போன்ற உயிர்வாதார தண்ணீரை வைத்தும் விளையாட தலைப்பட்டுள்ள ஒரு நிலையில் சரியான கேள்விகளை முன் வைத்து தன் இருப்பை காட்டியுள்ளார் இந்த சீமான்.

என்னய பொருத்த மட்டிலும் இன்றைய கால கட்டத்தில் ஒரு அரசியல் கட்சியாக பரிணமிப்பதும் அதை இந்தியா உருவாக்கியிருக்கும் போலியான ஜனநாயக தார்மீக நெறிகளுக்குள் உருவாக்குவதும் சாதாரண காரியம் அல்ல. நமது ஊழல்/அராஜகம் மலிந்த, மக்களை இலவச நோய் பீடித்த, தார்மீக கோப முனை மழுங்கடிக்கப்பட்ட சமூகத்தில் அவ்வளவு சுலபமில்லை என்றே தோணச் செய்கிறது. இன்றை நிலை தேர்தல் வந்தால் யார் குடம் கொடுப்பார்கள், ஓட்டிற்கு அய்ந்தாயிரம் வரையிலும் கொடுத்தால் வாங்க மலினப்பட்டுள்ள மக்களைக் கொண்ட சமூகத்தில் நெறி சார்ந்தெல்லாம் கட்டியிழுப்பது என்பது சாத்தியமே இல்லை.

புரட்சி பேச்சுக்களை பேசி ஓர் இரவின் உட்சத்தில் மக்களை தெருவிற்கு இழுப்பது என்பதெல்லாம் சினிமாவில் பார்ப்பதற்கு வேண்டுமானால் சாத்தியப்படும்.

ஆனால், உண்மை சற்றே நேர்மாறானது. ஒரு நாடு என்ற கட்டமைப்பிற்குள் இருக்கும் பொழுது அதன் ஓட்டத்தில் சென்று விசயங்களை சாதித்து கொள்ள முடியும் என்பதே நிதர்சனம். அதற்கான வியூகங்களை வகுத்துக் கொள்வதே மேற்கொண்ட சிறைப்படுத்தல்களையும், தீவிரவாதி என்ற படைபலங்களின் முத்திரைக் குத்த காத்திருத்தல்களிலிருந்து தன்னை தக்க வைத்துக் கொள்வதற்கான அடிப்படையாக இருக்க முடியும்.

மாறாக, சீமான் புரட்சிகரமாக பேசுகிறார் என்பதற்காக சில இளைஞர்கள் அவரை அப்படியே பேசிக் கொண்டு, துண்டு பிரசுரங்கள் விநியோகித்து கொண்டு ஒரு நிலையில் கையில் கம்பெடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்தளவில் நன்மை பயக்கும்.??

சீமான் வெறுமனே ஈழம் சார்ந்த பிரச்சினையை மட்டுமே பேசி தமிழகத்தில் பெரும் அரசியல் கட்சியாக சாதிப்பதின் சாத்தியக் கூறும் மிகவும் குறைவு.. எனவே, தமிழகத்திற்குள் நிலவும் பிரச்சினைகளையும் எடுத்து முன் வைத்தே சமச்சீறாக நின்று தன்னை வார்த்து எடுத்துக் கொண்டாலே பெரியளவில் நாளை ஈழத்திற்காக மட்டுமல்ல புலம் பெயர்ந்து வாழும் எந்த தமிழர்களுக்கும் நினைத்தபடி குரல் எழுப்ப முடியும்.

அனைத்து வித பின்னணிகளை கொண்டு வைத்து பார்க்கும் பொழுது தன்னிச்சையாக நின்று பெரியளவில் எதனையும் சாதித்து காட்டிவிட முடியாது வரப் போகும் தேர்தலில் என்பதால் தமிழகத்தின் இரு பெரும் சக்திகளில் எதிர் முனையில் இருப்பவருடன் கை கோர்த்து, இன்றைய நிர்வாகத்தில் இருப்பவர்களை வீட்டிற்கு யோசிக்க அனுப்பவது ஒன்றே சமயோசிதமாக இருக்க முடியும். இதுவே நாற்பது ஆயிரம் மக்கள் எதற்காக நாம் சாகின்றோம் என்று தெரியாமல் இறந்து போனவர்களுக்கும் இரண்டு லட்ச ஈழ மக்கள் தங்கள் உறவுகளை மறந்து உயிர்ப்பிச்சைக்காக கூடார வாசிகளாக மாறிப் போனதற்கும் காரணமாக இருந்தவர்களுக்கும் கிடைத்த ஒரு சிறிய தண்டனையாக இருக்க முடியும்.

இதற்கு முன்னால் நாம் எத்தனையோ இன்றைய அரசியல் கட்சிகளின் ‘பல்டிகளை’ பல தேர்தல் களங்களில் பார்த்திருக்கிறோம். அதே சமூகப் பின்னணியில் சீமான் நிகழ்த்தியிருப்பதும் ஒரு பல்டியெனவே வைத்துக் கொண்டாலும், எதிர்காலத்தில் அவர் கொண்ட கொள்கையில் சிறிதேனும் நேர்மையாக இருப்பார் என்று நம்பி பெரிய படத்தை பார்க்க ஆயத்தமாவோம்.

Thursday, September 09, 2010

புனைவுகளின் தீவிரம் உணர்வோம்: To Writers...!!

நேற்று ஒரு நண்பரோட அரட்டைக் கச்சேரி நடத்திக்கொண்டிருந்தேன். அவரு வலையுலகில் நடக்கும் அவ்வப்போதைய அடிதடிகளிலிருந்து எப்பொழுதாவது எழுதினாலும் கூட செறிவு மிக்க, சிந்தனைகளை தூண்டக் கூடிய விசயங்களை எழுதுபவர்கள் ஏன் விலகியே இருக்கிறார்கள் என்று என்னய சீண்டிப் பார்த்தார். அதுக்காக ”சுயமாக” தன்னை வளர்த்து எடுத்துக்கொண்ட அந்தக் கூட்டத்திற்குள்ளர விழுற ஆள்னு என்னய படிச்சி வைக்காதீங்க.

நான் எதிலும் சேராசேத்தி. இன்னும் நான் அவதானிக்கும் நிலையிலேயே இருக்கிறேன். எனக்கும் திரிச்சு எழுதும் சோ கால்ட் ‘புனைவிற்கும்’ ரொம்பத் தூரம். வலையுலக புனைவு இலக்கியம் படிச்சுப் படிச்சு, புனைவு எழுதுறது அவ்வளவு எளிமையான விசயமாக பட்டாலும் என்னால அப்படி பார்க்க முடியல :). நான் எழுதும் கட்டுரைகளிலிருந்தே புனைவிற்கு தேவையான அனேக கருக்களை எடுத்து கையாள முடியும்தான். இருந்தாலும், புனைவு கொடுப்பதற்கின்னு எனக்கு நானே பல எதிர்பார்ப்புகளை, கட்டுப்போக்குகளை உருவாக்கி வைச்சிருக்கேன்.

எப்பொழுதெல்லாம் என்னாலும் புனைவுகள் கொடுக்க முடியும், என் வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக் கொண்ட விசயங்களிலிருந்தே வண்டி வண்டியாக மூக்கை சிந்த வைக்கும், தன்னையே உணர்ந்து (தடவி) பார்த்து கொள்ள வைக்கும் ரேஞ்சிற்கு கூட அனுபவ பாடங்களைக் கொண்டு புனைவு என்ற பெயரில் வாந்தி எடுத்து வைக்க முடியும்தான். அது எனது கட்டுரைகளின் நீளங்களைக் கொண்டே கூட நீங்களும் யூகிக்க முடியும்தானே!

சரி இத்தனை முஸ்தீபுகளைக் கொண்டிருந்தாலும், ஏன் முயற்சி எடுத்துப் பார்க்கவில்லை, என்ற அடிப்படைக் கேள்வி எழும்பலாம். முதலாவது, புனைவுகளின் மூலம் நம்மிடம் இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லி பாசாங்கு செய்ய முடியாது. நன்கு அறிந்த வாசகர்களிடம் மாட்டிக் கொள்வோம். இரண்டாவதாக, தகவல் பிழையோ, அல்லது தன்னுடைய அரைகுறை மண்டைப் புரிதலை வைத்துக் கொண்டு ஒரு பெண்ணின் மூலமாக அவளுடைய வாழ்வியல் சிக்கலை சொல்கிறேன் என்று தத்துபித்துத் தனமாக நம்முடைய சிறு சாளரத்தின் வழியாக கண்ட விசயத்தை வாந்தி செய்து வைத்தால் அதுவே தம்மை விட இன்னும் பல படிகள் வளர்ச்சியில் பின் தங்கி இருக்கும் மக்களின் மனத்தில் தவறான ஒரு கற்பிதத்தை வளர்த்து விடச் செய்யலாம்.

என்னை பொருத்த மட்டிலும் கதை சொல்லிக்கென்றே பல திறமைகள் வேண்டும். காப்பியடித்து எழுதுவதான எழுத்து நடை, சொல்லாடல், வட்டார மொழி பயனேற்றம் செய்வது மட்டுமே புனைவிற்கான அடிப்படை தகுதிகள் கிடையாது என்று நினைக்கிறேன். அவன் மிக மிக கூடு விட்டு கூடு பாயும் திறன் கொண்டவனாக இருத்தல் அவசியமென்று கருதுகிறேன். அஃறிணை பொருட்கள் கூட சம்பாஷணை செய்து கொண்டால் எப்படி இருக்கும் என்ற கற்பனை உலகத்திலும் சஞ்சரிக்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும்.

விசயம் அப்படியாக இருக்கும் பொழுது மனிதர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியைப் போன்றவன் வெறும் பிறர் படைப்புகளையும், உலகச் சினிமாக்களையும், பேருந்து நிலையத்தில் அமர்ந்து வயதான பாட்டி ஒன்று பேருந்தில் ஏறக் கஷ்டப்படும் பொழுது மற்றொருவன் உதவுவதைப் பார்த்து, கேட்டு, வாசித்து கதை சொல்லியாக பக்குவப் பட்டிருந்தால் போதுமா? அது படிக்கும் வாசகனிடத்தில் உண்மையான ஒரு தாக்கத்தை நிகழ்த்தி விட்டுச் செல்ல முடியுமா? அப்படியே பயிற்சியின் மூலமாக ஒரு தேர்ந்த கதை சொல்லியாக பேர் பட்டுப் போனாலும் அது எந்த அளவிற்கு அந்த கதை சொல்லியின் சொந்தப் பார்வையில் தாக்கத்தினைக் கொடுத்து அவன் உண்மையான அகப் பார்வையினை மாற்றியிருக்கக் கூடும்?

உண்மை உலகில் சமூகம் கட்டமைத்த பல நம்பிக்கை, அவ நம்பிக்கைகளை உடைத்து, பிற விளிம்பு நிலை மனிதர்களுக்கெதிரான சமூக அநீதிகளுக்கூடான வாழ்க்கைப் பயணத்தில் தானும் பங்கேற்று எது போன்ற அனுபவப் பொதிகளை சிறிதேனும் தன்னுள் இறக்கி இருப்பார்கள். இது போன்ற என்னுடைய சொந்த எதிர்பார்ப்புகளே ஒரு கதை சொல்லியின் பின்புலமாக இருக்க வேண்டுமென்ற நிலைப்பாடோ என்னவோதான், புனைவிற்கெதிரான படிப்போட்டத்தை இன்றைய நிலையில் தடை செய்து வைத்திருக்கிறது எனதுள்ளம் என்று எண்ணச் செய்கிறது. இருப்பினும் அது போன்ற பயணங்களின் ஊடாக எழுதும் மனிதர்களை என் மனதும் தேடிச் சென்று படிக்கச் சொல்கிறது.

கற்பனை உலகில் சஞ்சரித்து எழுதும் அறிவியல் புனைவுகளின் மீது எனக்கு அலாதியான காதல் இருக்குமளவிற்கு, நம் சமூகத்தில் எழுதும் சமூகம் சார்ந்த எழுத்துக்களை என்னால் படிக்க முடிவதில்லை காரணம், அதனில் நிறைய skewed பார்வை இருக்கிறது. அது நிகழக் காரணமாக இருப்பதற்கு அவர்கள் வாழ்ந்த உலகின் பக்கமாக உள்ள பகுதியை மட்டுமே பார்த்து வளர்ந்ததுனாலேதான் என்று என்னால் கூற முடியும். அதனைத் தாண்டியும் இன்னமும் கதைச் சொல்லிகளே வளரவில்லை என்றுதானே கட்டியம் கூறி நிற்கிறது அவர்களின் படைப்புகளும்.

அப்படியாக நமது சமூகத்தில் நல்ல தேர்ந்த எழுத்தாளர் பல இளைஞர்களுக்கு ஆதர்ஷ குரு என்று பெருமையாக கூறிக் கொள்பவரும் கூட தனது பயணக்கட்டுரைகளில் தன் கண்டக் காட்சிகளை, பிரிதொறு கலாச்சாரத்தில் வாயிலாக பார்க்கும் திறனற்று அதே குறுக்குச் சந்து பார்வையோடு வெகு ஜன பத்திரிக்கைகளில் கூட வாந்தியெடுத்து வைத்திருப்பார். இது போன்ற கட்டுரைகளே ஒரு எழுத்தாளனின் வளர்ச்சியை உலகம் பொருத்து, தான் சார்ந்து வாழும் சமூகம் பொருத்து உண்மையான பார்வையினை வைக்கும் முகமாக அமைந்த சாளரம்; அந்த மனிதனை உள் முகமா படிக்க.

ஆனால், தன் ஊரின் எல்லையையே தாண்டி உலகம் பார்த்திடாத ஒருவர் பிரிதொரு கலாச்சாரத்தின் அத்தனை கூறுகளும் தெரியக் கூடியதாக பாசாங்கு செய்து எழுதும் புனைவுகள் எத்தனை தகவல் பிழைகளை கொண்டிருக்கக் கூடும். தன்னுடைய சொந்த சமூகத்திலேயே விரவிக் கிடக்கும் ஏற்றத் தாழ்வுகளை தனக்குக் கிடைத்த வளர்ப்பு சூழ்நிலைக் கொண்டு அதன் வழியாக குணாதிசியங்களின் மூலமாக குருட்டுத் தனமாக வைத்துப் பேசும் பொழுது, பிரிதொரு கலாச்சாரம், அவர்களின் வாழ்வியல் முறைகளைப் பற்றி ஆய்ந்து எப்படி biased பார்வை இல்லாமல் கொடுக்க முடியும்.

இன்றைக்கு இணையம் வழங்கியிருக்கும் வாய்ப்பு தனிப்பட்ட மனித நிலையில் ஏதாவாது எழுதி தானும் ஒரு தேர்ந்த எழுத்தன் என்று அவனளவில் பாராட்டிக் கொள்ளவே பயன்படுத்தப் பட்டிக் கொண்டிருக்குமளவிற்கு செழித்து வளர்ந்து வருகிறது. அரைவேக்காட்டுத்தனமான புரிந்துணர்வோடு மனித உணர்வுகள் சார்ந்து உளறி வைப்பது. ஒற்றைப் பரிமாணத்தில் விசயங்களை அணுகி தன்னுடைய பார்வையை பொது சமூகத்தின் எண்ணமாக புனைந்து வைப்பது என்ன எந்த விதமான பொறுப்புணர்வில்லாமல், எழுத தலைப்படுவதுமென ஜரூரா நடந்து வருகிறது.

இலக்கியம் ஒரு சமூகத்தின் சமகால நிகழ்வுகளை பதியப்படுவதாக அதன் நீள, அகலங்களை அறியும் கண்ணாடியாக அமைய வேண்டும். அதற்கு அதனை படைக்கும் படைப்பாளி எத்தனை தீர்க்கமான, திறந்த மனதுடைய, மாற்றங்களை தழுவிச் செல்லும் ஒரு கருவியாக செயல் பட வேண்டியதிருக்கும். அவன் எப்படி மூடிய நிலையில், சார்பு நிலைகளை கொண்டு இயங்கும் ஒரு சாமான்யனாக இருக்க முடியும். இப்பொழுது இயங்கக் கூடிய பல சமகால எழுத்தாளர்கள் பிளவுற்ற (duality) மன நிலையிலேயே இருப்பதாகப் படுகிறது எனக்கு.

எழுத்து என்பது என் நிலையில் ஒரு தவம் போன்றது. எழுதுவது பிரிதொரு மனிதருடன் உரையாடுவதனைப் போல சிந்தனை சிதறலுக்கு அங்கே வாய்ப்பில்லை. நேரடியாக சமயோசிதமாக, புத்திசாலித்தனமாக சிந்திக்கும் புத்தி செயலிழந்து, நேரடியான ஆத்ம உரையாடல் நடைபெறுகிறது. அப்பொழுது எழுதும் எழுத்தும் நேர்மையாக சுய லாப நோக்குகள் அழிந்து, அறச் சீற்றம் கொள்ளும் நேரத்தில் சரியாக பிரதிபலித்து சமூகத்திற்கு தேவையான விசயங்கள் வந்து சேரும். ஒரு எழுத்தாளன், படைப்பாளியாக இருப்பதால் மற்றவரின் கஷ்ட நஷ்டங்கள், ஒடுக்கப்படும் சமூகத்தில் வாழும் மக்களின் அவல நிலை அவ்வாறாக ஒடுக்கப்படும் சமூகம் தொடர்ந்து அமிழ்த்து வைக்கப்படுமாயின் அது எது போன்ற விளைவுகளை உற்பத்திக்கக் கூடுமென்ற அனைத்து விளைவுகளையும் அறிந்தவனாக இருக்க வேண்டும். அதுவே அவன் பேனா பிடிப்பதற்கான அடிப்படைத் தகுதி கூட!

ஆனால், அண்மையில் நடந்தேறிய ஈழப் படுகொலையின் போது சில விரல் விட்டு எண்ணும் படைப்பாளிகளைத் தவிர ஏனையோர் அனைவரும் முதுகெலும்பு உடைந்தவர்களாக, எழுதவே தகுதியற்றவர்களாக, தான் சார்ந்து வாழும் சமூகத்திற்கு ஒரு சொல்லனாத் துயரம் நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது பேனாவின் முனை உடைந்து விட்டதாக ஆன்மீக தத்துவங்களும், லத்தீன் இலக்கியமும், சினிமா இயக்குனர்களின் முதுகையும் சொறிந்து கொண்டிருந்தார்கள். பிறகு இவர்களின் படைப்பை எந்த சீற்றத்தை, எந்த உலக ஞானத்தை அடைய நான் வாசிக்க வேண்டும்; இவர்கள் எழுதுவதற்கான அடிப்படைத் தகுதியே இழந்து நிற்கும் பொழுது? அந்த மொழி பேசும், அந்த உணர்விற்காக இந்த துயரங்களை சுமந்து திரிபவர்களின் எலும்பு கூடுகளின் மீது இவர்கள் இலக்கியம் வடித்து அடிக்கி வைக்கும் பொழுது அவர்கள் கல்லறைகளிலிருந்து படைத்த இலக்கியங்களை கொண்டாடுவார்களா?

இதுவே இன்றைய இணைய காலத்தில் பல ’சோ கால்ட்’ எழுத்தாளர்கள் விமர்சனத்திற்கு ஆளாவதும், புனைவுகளைத் தாண்டியும் சமூக நிகழ்வுகளையொட்டி அவர்களின் கருத்துக்களை வைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதால், அவர்களின் உண்மையான குறிக்கோளும், வளர்ச்சியும் வெளிப்பட்டு சந்தி சிரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்களோ என்று எண்ணச் செய்கிறது.

எப்பொழுது ஒரு எழுத்தாளன், படைப்பாளி தான் சார்ந்து வாழும் சமூகத்தை அவதானிக்கத் தவறி, தேவையான ஏற்றத் தாழ்வுகளை செப்பனிடும் பொருட்டு தன் பொறுப்புகளிலிருந்து நழுவி தன் சுய லாபத்திற்காக பாதையை மாற்றிக் கொள்கிறானோ அவன் எழுத்தை வைத்து விபச்சாரம் செய்து வருகிறான் என்றே என்னால் பொருள் கொள்ள முடிகிறது. அதற்கு இது போன்ற புனிதமாக கருதப்படக் கூடிய படைப்புத் திறனை விட்டு விலகி விடல் நலம் பயக்கும்; பிற்கால தலைமுறைகளாவது தப்பிப் பிழைக்கும். நன்றி!

Friday, July 10, 2009

தமிழ் பெரும் விழா - தாமரை - வைரமுத்து: Fetna 2009 - II

அடுத்த நாள் விழாவை ஓரளவிற்கு முழுமையா பார்த்த மாதிரி இருந்தாலும், காலையில 9.30 மணிக்கு முன்னால் வரைக்கும் நடந்த நிகழ்ச்சிகளை பார்க்க முடியல [எனது முதல் நாள் அனுபவம் இங்கே]. ஏன்னா வீட்டிலருந்து கிளம்பி வந்ததே தாமதம். நான் வந்து அமர்ந்த சிறிது நேரம் கழிச்சு ஐயா சிலம்பொலியார் அவர்கள் பேசக் கேட்டேன். அவர் நம் தமிழ்ப் பெயர்கள் என நம்பி வைக்கும் சில பெயர்களுக்கு உண்மையான பொருள் என்ன என்று தமிழிலாக்கி காமித்த விதம் அரங்கையே வெடிச் சிரிப்பு சிரிக்க வைத்தது.

அதனைத் தொடர்ந்து ஒரு அரட்டை அரங்கம் பாணி நிகழ்ச்சி ஒன்று. அது ஓடிட்டு இருக்கும் போது என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவரை ஆவலுடன் கவிஞர். தாமரை வந்திருக்கிறாரா என்று கேட்டேன் அதற்கு அவர் வரவில்லையென்று நினைக்கிறேன் என்று கூறிக்கொண்டே நிகழ்ச்சி நிரல் அட்டையின் மீது தனது அலைபேசியின் வெளிச்சத்தை நிரப்பி தேடி இல்லையென்றார்.

இதென்ன புதுக் கதை! நான் இந்த விழாவிலே நண்பர்களன்றி தாமரைக்காகவும் தான் இத்தனை நெருக்கடியிலும் அங்கு சென்றேன். ஆனால், உட் கட்சி பூசலோ இல்லை வேறு என்ன காரணத்தாலோ தாமரை கழட்டி விடப்பட்டிருக்கிறார் போல. எனக்கு ஒரு ஆள் மேலதான் கண்ணா இருக்கு, பார்ப்போம்; பின்னால் என் கெஸ் சரியா என்று. உண்மை பேசுற எவனுக்கும் கிடைக்கும் மரியாதை இப்படியாகத்தான் இருக்க முடியுமென்று பக்கத்து இருக்கையாளரிடம் முனகிக் கொண்டே சீட்டில் நெளிந்தேன்.

அங்கயே பல விதப் பட்ட எண்ணங்களால் சிக்குண்டது மனது. என்ன உலகமிது? மனித மனம் எப்பொழுதும் உண்மைகளை மறுத்து, போலியாக நடித்துக் கொள்வதிலயே அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறது. போலி மனிதர்கள் தன் நிறம் உயர்த்தி காமிக்க முகச் சாயங்களுக்கு கீழ் ஒளிந்து, உதட்டில் இனிப்பு தடவிய வார்த்தைகளைக் கொண்டு பேசும் விற்பனை மனிதர்களை அப்படியே நம்பி தெரிந்தே வாங்க எத்தனிக்கும் நம் மனது, தெரிந்தே, உண்மை பேசுபவர்களை தவிர்க்க முனைகிறதே, இது எதனால்? பிரச்சினைகளிலிருந்து தன்னை விளக்கி வைத்து, ஒரு பாதுகாப்பான இலக்கிய, காலச்சார காவலன் அவதாரம் எடுக்கத்தானோ? இது எப்படி, தனியொருவனாக தன்னுள்ளே என்றேனும் ஒரு நாள் உண்மையான "அவனை" சந்திக்கும் பொழுது அவன் வாழ்வே அவனை பார்த்து நகைப்பதிலிருந்து விலகி நிற்பதாக அன்றும் தன்னை ஏமாற்றிக் கொள்ள முடியும்? இப்படியே எண்ணச் சுழிப்பில் சிக்குற எத்தனித்தது என் மனது...

பின்பு மதிய உணவு இடைவேளை, அதனின்று எனை மீட்டது. சாப்பாடு அசத்தல்! செட்டிநாடு போல, நல்லாவே பண்ணியிருந்தாங்க. அங்கே ஒரு ஜிகு, ஜிகு பிரபலம் கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்தில், மேஜைக்கு மேஜைக்கு "நீங்க, ரொம்ப அழகா இருக்குறீங்க" பாட்டு பாடியிருப்பாங்க போல சுளுக்காம சிரிச்சிட்டே எதிர்பாட்டு "நன்றிங்க" சொல்லியிருப்பார் போல, அதப் பார்த்திட்டே நான் அரை "நான்(bread)" சாப்பிடாம தட்டிலயே விட்டுட்டேன். பிரபலம்ங்கிற வேலை ரொம்ப கஷ்டம்தானோ!

சாப்பாட்டிற்கு பிறகு நான் ரொம்ப சிலாகிச்சு பார்த்த ஒரு பேச்சுன்னா அது மனித உரிமை குழுவிலிருந்து வந்து பேசிய ஒரு வெள்ளக்காரம்மா டாக்டர் Ellyn Shander. அரங்கத்தில் இருந்த சில மக்களை நெளிய வைச்சு, மனசை நெருடுகிற ஸ்லைடுகளை இது வரைக்கும் நம்மக்களில் சிலர் பார்க்கவே கூச்சப்பட்ட(பயந்த) படங்களையும் வழங்கி அந்தம்மா பாதிக்கப்பட்ட ஈழ மக்களோட தன்னை இணைச்சு பேசிய விதம் என்ன சொல்றது. ம்ம்ம்.

அந்தம்மா இந்த ஈழ அவலத்தை தன்னோட இனமான யூதர்கள் , நாசி காலத்தில் பட்ட அவஸ்தைகளுக்கும், வேதனைக்களுக்கும் எந்த விதத்திலும் குறைந்ததல்ல இந்த ஈழ நிகழ்வு என்று, ராஜபக்சாவையும், ஹிட்லரையும் ஒரே ஸ்லைடில் காமிக்கும் பொழுது ஏன் இதனை இந்த ஒட்டு மொத்த உலகமும் அவ்வாறு கண்ணுறவில்லை என்ற கேள்வியே தொக்கி நின்றது என் முன்னால்.

ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த உணர்ச்சிகளோட பேசிக் கொண்டே சென்றார்கள். அப்பொழுதும் நினைச்சேன், இந்த சில்லூண்டி ஊர்க்கார சினிமாக் காரய்ங்க எல்லாரையும் கொண்டு வந்து முன்னாலே அமர வைச்சிருக்கலாம்னு. உண்மையான பாடத்தை ஒரு முறையாவது கேக்க வைக்க. தன் உரையை முடிப்பதற்கு முன்பாக பல முறை அரங்கம் உறங்குவதாக உசிப்பேத்தி மக்கள் அனைவரையும் "Next year in Eelam" என்று மூன்று முறைக்கும் அதிகமாக கூற வைத்து அரங்கத்தையே நடு நடுங்க வைத்துவிட்டார்.

உரையின் இறுதியில் அவரை ஊக்கப்படுத்தும் விதமாகவும், கெளரவிக்கும் விதமாகவும் எல்லாரும் எழுந்து நின்று கை தட்டியது அரைகுறை மனதோடும், தர்மசங்கடத்தோட ஏண்டா வென்று நினைத்தவர்களையும் கூட எழுந்து நிக்க வேண்டிய கட்டாயத்தில் நிறுத்தியது என்றால் மிகையாக இருக்க முடியாது.

அப்படியாக ஒருவர் முன் வரிசையில் அமர்ந்திருந்தார், எனக்கு அந்த டாக்டர் பேசப் பேச கண்டிப்பாக நம்மூர் கவிஞர் நெளிந்திருக்கக் கூடுமென்றே எண்ணச் செய்தது. அவர் வேறு யாருமல்ல நம்ம கவிப் பேரரசு வைரமுத்து அவர்களேதான். யார் அந்த நிகழ்ச்சி நிரலை அப்படி அமைத்தார்களோ தெரியவில்லை, ஆனால், கண்டிப்பாக கவிஞருக்கு ஒரு செம ச்சேலஞ்சாக அமைந்திருந்தது அந்த மேடை, டாக்டர் Ellyn Shanderக்குப் பிறகு. எனக்கு அப்பொழுதே தோன்றி விட்டது கவிஞர் கடுமையாக இன்னமும் சீரவேண்டும் டாக்டரின் இருப்பை அந்த அரங்கம் சிறிது நேரம் மறக்க வேண்டுமானலென்று.

ஆனால், இம் முறை அவரின் சீற்றம் வயதானால் காடுகளில் வசிக்கக் கூடிய புலிகள் பற்களை, நகங்களை, உடல் வலிமையை இழந்து நிற்கும் பட்சத்தில் எளிமையான விலங்குகளை கொய்துதான் தனது இருப்பை நகர்த்த முடியும். அது போலவே, இவரும் ஏதோ வந்துட்டேன் எல்லாரும் பார்த்துக்கோங்க; நான் தான் அந்தக் கவிஞன் அப்படின்னு மேடையேறி காமிச்சிக்கிட்ட மாதிரியும், ஃபெட்னா மலர் போட்டவர்களை தமிழ் வளர்க்க வேண்டுமானல் இப்படி வரலாறு புறக்கணிக்கப்படக் கூடாதென்று கூறி அண்ணா நூற்றாண்டு விழா மலரில் பசும்பொன் முத்துராமலிங்கம் இடம்பெறவில்லையென்று சீறினார். மேலும் பல சில உள்குத்துக்கள்!

பின்பு திருவிளையாடல் கே.பி சுந்தரம்பாள் பாட்டியை ஞாபப் படுத்துவதைப் போல ஒன்று... இரண்டு... மூன்று... என்று வரிசைப் படுத்தி கூறியதெல்லாம் "நேரக் கொலை" செய்வதின் பொருட்டாகவே நினைக்கச் செய்தது. மொத்தத்தில் என் பணம் அதை நோக்கிச் செல்லவில்லை எனும் போது சற்றே ஆறுதலாகவும் இருந்தது.

அவரின் உரை முடிந்ததுமே நான் மூட்டையைக் கட்டிக் கொண்டு வெளிக் கிளம்பி மீண்டும் நுழைவு வாயிலுக்கு வந்த பொழுது பயங்கர "எஸ்கார்ட்களுடன்" கவிப் பேரரசு தன்னைச் சுற்றி நிற்பவர்களையெல்லாம் எறும்புகள் கணக்காக பார்க்காமலயே என்னமோ ஒரு இறுக்கம் ஆழ்ந்து எதனையோ கேட்டுக் கொண்டே நடப்பதனைப் போல நடந்து சென்றதை ஒரு சில விநாடிகள், நானும் நடந்து கொண்டே பார்த்து தொலைத்து விட்டு வீட்டிற்கு வந்தடைத்தேன்.

காரை ஓட்டிக்கொண்டே சிந்தனைக்குள் பயணிக்க வேண்டியாதாகிப் போனது. இந்த மனிதர் அன்று கிராமத்து மனிதனின் எளிமைக்குள் புகுந்து தனது வாழ்வு எனும் பெரும் சமுத்திரத்தில் நீந்தத் தொடங்கிய காலத்திற்கும் இன்று நிற்கும் புள்ளிக்கும் உள்ள வித்தியாசங்களை கண்ணுற்றால் விரிசல் இரு பெரும் கண்டங்கள் விலகிப் போன தொலைவாகப் படுகிறதெனக்கு. மனிதனின் உயரங்களின் நிலை மாற மாற, மனித நிலைகளும் பல விசயங்களை இழக்கத்தான் நேரிடுகிறதோ. சிலர் தனது தூக்கத்தை, சிரிப்பை, சந்தோஷத்தை, சிலர் நல்ல நண்பர்களை, நல்ல தன்னிடம் உள்ள வாழ்வு நெறிகளை இப்படி... இவரின் முகத்தில் நிலவிய இறுக்கத்தை கவனித்தால் பெரும் நிகழ்வுகள் இவரின் எளிமையை சிதைத்துக் கொண்டிருப்பதாகப் படுகிறது...

அதனைத் தொடர்ந்து இரவு உணவும், பாட்டுக் கச்சேரியும் போல. ஆனால், எனக்கு அதுக்கு மேல தாங்காது என்பதால் கிளம்ப வேண்டியதாப் போச்சு. இத் தருணத்தில் இத்தனை எண்ணங்களையும் எனக்கு வாய்க்க பேருதவிய நண்பர் பழமைபேசிக்கு ஒரு நன்றி.

விழா சிறப்பாக நடந்தேற உழைத்தவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும், நன்றிகளும்!

நிறைய தமிழ்பதிவர்கள் வந்திருப்பாங்க போல, ஆனா, என் கண்ணில எப்படியோ தட்டுப்படாம தப்பிச்சிட்டாங்க. அடுத்த முறை வைச்சிக்கிறேன். இத்தனைக்கும் பரவாயில்லாம ஒரு டி-ஷர்ட்தான் போட்டுருந்தேன் :-) .

Friday, January 30, 2009

முத்துக்குமார் காறி உமிழ்ந்த உமிழ்நீர்!




காறி உமிழ்ந்து போனான் முத்துக்குமார்
அழுத்தி துடைக்கப் போய்
காசு பணமாக எங்களது மாமிசம்

உதிர்ந்தன..... சேர்த்தே
எங்களது இடுப்பு வேஷ்டியும் தான்!!!




பி. கு: இதற்கு மேலும் அரிதாரம் பூசிக் கொண்டு இந்த அஹிம்சா நாட்டில் வாழ வழியில்லையென்று வெட்கி இறந்து போன அந்த சகோதரன் முத்துக்குமார்க்கு ஒரு கையாலாகாதவனின் ஒரு சொட்டு கண்ணீராக இதனை சமர்பிக்கின்றேன் :-(( .

Related Posts with Thumbnails