Wednesday, October 08, 2008

பேராசையின் விளிம்பு நிலையில்:Greed - The Dead End!

நேற்று பல குப்பை அரசியல் செய்திகளுக்கிடையே மிகச் சாதாரணமாக ஒற்றை வரியில் பறவைப் பார்வையில் ஒரு வீட்டைக் காமித்து, பொருளாதார நஷ்டத்தால் மனமுடைந்த ஒருவர் தன்னையும் சுட்டுக் கொண்டு தன் வீட்டிலிருந்த மூன்று பிள்ளைகள், மனைவி மற்றும் மாமியாரையும் சுட்டு விட்டு மரணித்துக் கொண்டார்னு ட்டிவியில வாசிச்சாங்க. நானும் அட பன்னாடைப் பசங்களா, சாவுறதுன்னா எவன் சாவணுமின்னு நினைக்கிறானோ அவன் மட்டும் போய்ச் சேரவேண்டியதுதானே அதுக்கு எதுக்கு மற்றவர்களையும் துணைக்கு அழைக்கணுமின்னு நினைச்சுட்டு விட்டுட்டேன்.

இன்னிக்கு காலையில நம்ம துணைவியார் அப்பாம்மாவை அழைத்துருப்பார் போல. நம்மூர் உலகத் தரம் வாய்ந்த பத்திரிக்கைகளான தினகரன், தினத்தந்தி, தினமலர் போன்ற நாளிதழ்கள் அமெரிக்காவில் யாராவது ஒருவருக்கு காலையில் "பாத்ரூம்" வரவில்லையென்றால் கூட உடனே பிக்கினியோட ஒரு வெள்ளையம்மாவை போட்டு செய்தியாக்கிவிடும் அமெரிக்கா பாசம் நம்மூடது, இல்லையா.

சில நேரத்தில உண்மையாகவே எனக்கே சில நேரத்தில அங்கிருந்துதான் அமெரிக்காவில நடக்கிற செய்திகளே இங்கே தெரியவரும், சன் ட்டிவி மூலமாவும், செய்தித்தாள் படிச்சிட்டு தொலைபேசி மூலமா மக்கள்கிட்டயிருந்தும் :)). அந்தளவிற்கு அமெரிக்கா மேல நம்மாளுங்களுக்கு பாசமோ பாசம்.

இந் நிலையில் நம்ம துணைவியார் அவரோட அப்பாகிட்ட பேசப் போக அவரும் அந்த உலகத் தரமான செய்திகளை, அதாவது இந்த நேரத்தில் அமெரிக்காவில் வெறும் 2500 ரூபாய்க்கு எப்படி வீடு கிடைக்கிறது இந்த பொருளாதாரச் சரிவால்ங்கிற செய்தியிலருந்து, அதோட நான் மேலே சொன்ன அந்த சுட்டுக்கிட்டு செத்த செய்தியையும் ஊதியிருப்பாங்க போல படிச்சிட்டு அதனை குறிப்பிட்டு என்னம்மா இப்படியெல்லாம் நாடு போயிட்டு இருக்கிறதா இங்க பேசிக்கிறாங்க, நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க ஒண்ணும் பிரச்சினையில்லையேன்னு அப்பாவியா கேட்டுருக்கார்.

நம்மூர் செய்தித்தாள்கள் எல்லாம் என்னமோ அமெரிக்காவின் வீழ்ச்சி பட்டாசு வெடிச்சு தீபாவளி கொண்டாடுற நாள நினைச்சு ஒண்ணும் தெரியாத புதுப்பட்டி ஆளுங்களுக்கு கதையை ஜோடிச்சுக் கொண்டு போயி சேர்த்துக்கிட்டு இருக்கிற கணக்க அள்ளிவிட்டுக்கிட்டு இருக்காங்க.உண்மை நிலவரம் தெரியாம.

நாந்தான் கேக்கிறேன், இங்க புத்தியில்லாம உலகத்தில உற்பத்தி பண்ணிக் கொடுக்கிற ஒரு சிறு ஊக்குல இருந்து குழந்தைக விளையாடுற விளையாட்டுச் சாமான்கள் வரைக்கும் எதப் பத்தியும் யோசிக்காம வாங்கி எல்லோருக்கும் வேலை கொடுத்து பணத்தை சுழற்சியில விட்டுக்கிட்டு இருக்கிற ஒரு நாடு போண்டியா போன அதனையே நம்பி இருக்கிற மற்ற நாடுகள் என்னய்யா பண்ணும்?

நம்மூர்ல இப்ப கொடி கட்டி பறந்துட்டு இருக்கிற இந்த மென் பொருள் உற்பத்தி, அதனைத் தொடர்ந்த வேலை வாய்ப்புகள், ஏற்றுமதி, அண்ணிய செலவாணிப் பணம் இதெல்லாம் நின்னு போன, எப்படிய்யா மூணு வருஷத்திற்கு முன்ன வரை 1500 ரூவா கொடுத்து வாடகைக்கு இருந்த ஒரு அறையை இன்னிக்கு 15,000 ஆயிரம் கொடுத்து வாடகைக்கு இருக்க முன் வருகிற "வருண்" பையில பணமிருக்கும்? இதெல்லாம் கணக்குப் போட்டு பார்த்தா இப்படியெல்லாம் சம்பளம் போட்டுக் கொடுக்கிற முதலாளி நாசமா போகணுமின்னு நினைச்சு நம்மூரு உலகத் தரம் வாய்ந்த நாளிதழ்கள் எழுதுமா, அது போன்ற கதையை, சொல்லுங்க.


ஆஹா, பேச வந்த விசயத்தை விட்டுட்டு எங்கேயோ போயிட்டேனே. சரி, எழுதினதை அழிச்சுடவா முடியும், படிச்சு வைங்க.

இப்ப பேச வந்த டாபிக். இப்ப என்னாச்சுன்னா, இந்த பங்கு சந்தை, பங்கு சந்தைன்னு நவீன சூதாட்டக் க்ளப் ஒண்ணு நாட்டுக்கு நாடு வைச்சிருக்காங்க, அத வைச்சி சில பெருசுங்க பெரிய அளவில சூதாட ஆரம்பிச்சாய்ங்க உலகம் தழுவிய முறையில (இதுதான்னு இல்ல உணவுப் பண்டத்தில இருந்து, தங்கம், பெட்ரோல் etc., etc.,ன்னு...), இப்படி பெரும் பணக்காரய்ங்களா சேர்ந்து ஆடினா போர் அடிக்குதுன்னும், கைப் பத்தலைன்னுட்டு நடுத்தர தட்டுல வாயிக்கும் கைக்கும் வாழ்ந்திட்டு இருந்தவய்ங்களையும் கடன உடன வாங்கி சூதாட்டத்தில ருசி காமிச்சு இறக்கி விட்டாய்ங்க. விளையாட்டும் நல்ல ஜரூராத்தான் போயிட்டு இருந்துச்சு.

ஒன்னுக்கு பக்கத்தில போட்டுக்கிற பூஜ்யம் சேரச் சேர தயவு தாட்சன்யம் பார்க்காம ஆட்டம் விறுவிறுப்பு ஏறுனுச்சு தினமும், சுத்திவர தலையை திருப்பிக் கூட பார்க்க நேரமில்லாம எப்படிடா இன்னமும் ரெண்டு பூஜ்யத்தை இப்ப இருக்கிற எண்களோட சேர்க்கிறதுங்கிற ஒரே குறிக்கோளோட. இப்படியாக போனது திடீர்னு ஒரு நாள் "வீங்கிறதெல்லாம் வெடிக்குமின்னு" சொல்ற மாதிரி, வெடிக்கிற அந்த நாளும் வந்தவுடன் எல்லா பயலும் தன்னையே கிள்ளிப் பார்த்துக்கிட்டு இப்பத்தான் ஒவ்வொருத்தனா முழிக்க ஆரம்பிச்சிருக்கான் அந்தப் சூதாட்ட போதையில இருந்து.

இப்ப இந்தக் கட்டுரையில் முன்னமே சொன்ன சுட்டுக்கிட்டு செத்த ஒரு சாதாரண நடுத்தர தட்டு மகன் ஒருத்தர் எம்.பி. ஏ டிகிரியோட ஆரம்பிச்சிருக்கார், வேலைக்கு போகாமயே வீட்டில இருந்தபடியே அந்த பூஜ்யங்களை சேர்க்க ஆசைப்பட்டிருக்கார். அதில 5.40 கோடி சம்பாரிக்கிற அளவிற்கு சூதாட்டமும் கை கொடுத்துருக்கு. ஆனா, ஈசியா பணம் பார்த்தவனுக்கும், கொட்டு வாங்காம தேனீ எடுத்து நக்கிப் பார்த்தவனுக்கும் ஆசை விடுமா, விடலை போல, அதான் ஆட்டத்தில எடுத்தப் பணத்தையெல்லாம் திரும்பவும் அந்த கூடையிலயே போட்டு வைச்சி அழகு பார்த்திருக்கார். இந்த உடையற நாள் கிட்டவந்துட்டு இருக்கிறது தெரியாமலயே.

இப்ப உடைஞ்சுடுச்சு ஆனா இத எப்படி கையாள்கிறதுன்னு தெரியல இந்தாளுக்கு. ஏன்னா, பெரிய ஆசை சிறு சறுக்கல்கள் வழியில வருங்கிறதைக் கூட பார்க்கவிடாம கண்ணை கட்டி வைச்சிருச்சு. சரி, அடி வாரதுக்கு முன்னாடி கொஞ்சூண்டு அதில இருந்து எடுத்து குடும்ப நலனுக்காக அப்பால போட்டு வைச்சிருக்கலாமில்லையா? அப்படி போட்டு வைச்சிருந்தா இவரோட தொழில் அணுகுமுறையில நாளக்கி ஏதாவது இது மாதிரி நடந்தா கூட குடும்பமாவது தப்பி பிழைச்சுக் கெடக்குங்கிற நம்பிக்கையில இவரு பொறுப்போட அவருக்கு வேணுங்கிறதை பண்ணிட்டுப் போகலாம். அது தன்னைத் தானே சுட்டுக்கிட்டு செத்துப் போறதா இருந்தாலும் கூட. ஆனா, இந்தாளு இவரு குடும்பத்தையுமில்ல கூட அழைச்சுட்டு போயிருக்கார்.

நம்ம எல்லோருக்கும் ஒரு பிரச்சினை இருக்கு - அது அடுத்தவங்களுக்காக நம்ம வாழ்க்கையை வாழ்றது. எப்படின்னா, நம்மோட படிச்ச மோகன் இந்த மாதிரி வேலையில, இது மாதிரியான சம்பளத்தோட, இப்பேர்பட்ட இடத்தில பெண் எடுத்து வாழ்க்கை நடத்திக்கிட்டு, இது மாதிரியான கார் ஓட்டுறான்னா அதுனாலே நமக்கு என்னாகப் போகுதுன்னு நினைக்காம அவனை நினைச்சு பொறாமை பட்டுக்கிட்டு ராத் தூக்கமில்லாம, அவன மாதிரி நானும் இருக்கேன்னு உன்னோட சூழ்நிலை தெரியாம உன் விரலுக்கும் மீறி ஆசைப் பட்டு அந்த வழியில இறங்கி நடந்தா யாரு வாழ்க்கையை இங்கே முழுசா வாழ்றா?

அதுனாலே இந்த peer pressureயை வைச்சு வாழ்க்கையை அமைச்சுக்க விரும்பினாலே குழப்பம்தான் வாழ்கிற முக்காலே மூணு நாழியும். டார்க்கெட் வைச்சி வாழ்க்கையை வாழ்றது ஒரு உந்துதலை கொடுக்குதுங்கிறதுக்காக சிறு, சிறு அதுவும் நம்மோட லிமிட், டி-லிமிட்குள்ளர வைச்சி வாழ்றதில தப்பில்லை, ஆனா அடுத்தவங்க வாழ்க்கையை தன்னோட வாழ்க்கையின் அளவுகோள வைச்சி பின்னாடி சிக்கலில் மாட்டித் தவிச்சிட்டு குடும்பத்தையும் பிடிச்சு உள்ளே தள்ளிவிடுறதில என்ன நியாயமிருக்கு சொல்லுங்க.

இந்த படத்தை அப்படியே தேசங்களை வைச்சி பொருத்திப் பார்த்துக்கோங்க. இப்ப அமெரிக்கா அப்படி செலவு செய்யும் சித்தாந்தத்தை கொண்டு வாழுது, இது போன்ற வாழ்க்கைத் தன்மையோடு வாழுது அது போலவே நாமும் அமைச்சிக்கணுமின்னுட்டு அகலக் கால் வைக்கிறதில என்ன இருக்கு. இப்பொழுது இருக்கும் பொருளாதார கட்டமைப்பே உலகம் தழுவிதான் கட்டி வைக்கப்பட்டிருக்கிறது, அப்பொழுது ஒரு தனி தேசத்தின் பேராசை, எப்படி ஒரு தனிமனிதனின் பேராசை இருக்கிறதோ அது போலவே பல காரணிகள் கட்டமைக்கப் பெற்று அதுவே ஒரு இடத்தில் வீங்கி வெடிக்கும் பொழுது அதனையே பாதையாக தேர்வு செய்த ஏனைய குடும்பங்களும், தேசங்களும் வெடித்தலுக்கு உட்புக நேரிடுகிறது.

சோ, வளர்ச்சி என்பது சமச்சீராக பல காலங்களில் பல அடிகளை தாங்கி எஞ்சி நிற்பதாக இருக்க வேண்டும். If the profit is made overnight then it should be prone to lose it in overnight too...

கடைசியா நம்ம ஆட்டுப் பால் ரொம்ப பிடிக்கிற காந்தி தாத்தா சொன்னது, எப்பொழுதும் பொருந்தும் பாருங்க...

The world holds enough to satisfy everyone's need; but not everyone's greed.

P.S: இந்தப் பதிவிற்கு தொடர்பாக இத் துறையில் உள்ள பதிவர் பாரதி அவர்கள் பங்கு வணிகத்தின் ஆழ, அகலங்களை இத் தலைப்பில் அலசியிருக்கார் படிச்சுடுங்க அதனையும். நன்றி பாரதி.


பங்கு சந்தைகளால் பாதிக்கப்படும் மனது

Related Posts with Thumbnails