Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் - படத்திற்கான விமர்சனமல்ல!


இந்த கட்டுரை பேசப்போவது கமல்ஹாசனின் விஸ்வரூபமான ”கேளிக்கை” படத்தை பற்றிய விமர்சனமாக இல்லை.  அந்த படத்தை இப்பொழுது என்னால் பார்க்கக் கூடிய வாய்ப்புமில்லை.  தேடி ஓடி பார்க்கும் அத்தனை தீவிரமான சினிமா ரசிகனுமில்லை. ஆனால், சமூக வலைத்தளங்களில் நடக்கும் கட்டிப் புரதல்களை கண்ணுற்று அங்குமிங்குமாக ஓடி என்னுடைய பார்வையை வைத்தும் மனது கேக்காததால் சில விசயங்களை எனக்கு நானே தெளிவு படுத்திக் கொள்ள இங்கு பதிந்து வைக்கிறேன்.

நான் கமலைப் பற்றி பல பதிவுகளில் சிலாகித்தும் அவர் அப்படித்தான் என்ற தனிமனித வெளிப்பாடுகளை பாராட்டியும், அவர் திரையுலகில் தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக் கொள்ள எடுக்கும் மெனக்கெடல்களையும் பாராட்டியே எழுதி வந்திருக்கிறேன். அப்பொழுதும் தனியாகவே நின்றதாக ஓர் உணர்வு, இப்பொழுது இந்த படத்தின் சர்ச்சையை ஒட்டியும் தனித்தே இருப்பதாக ஓர் உணர்வு! ஆனா, இன்று அவருக்கு சேர்ந்திருக்கும் கூட்டம் பெரும் கூட்டம். இங்கேதான் அவர் நின்று நிதானித்து தனது மேற்கொண்ட பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒருவர் இரண்டு வழிகளில் ஒரு குன்றின் உச்சத்தை அடையாளம். ஒன்று, பழனி மலையில் ஏறுவதற்கு விஞ்ச் ஏற்பாடு செய்து அலுங்காமல், குலுங்காமல் போய் ஆயிரம் ரூபாயை சிறப்பு தரிசனத்திற்கென யார் கையிலாவது வைத்து திணித்து எல்லாரையும் குறுக்காக நடந்து மிடுக்காக போய் அந்த வேலவனைப் பார்த்து கண்ணடித்து விட்டு வரலாம்.  இல்லையென்றால், அரைநாள் முழுக்க வரிசையில் நின்று தனக்கு முன்னாலும், பின்னாலும் இருப்பவர்கள் பேசிக்கொள்ளும் சம்பாஷணைகளை கேட்டுக் கொண்டே ஒவ்வொரு அடியாக முன்னேறி உண்மையான உள்ளொளி பெற்று கடைசியில் உச்சத்தை அடையாளம். அது அவரவர்களின் தேர்வு!

ஆனால், விஞ்சில் போவது சரட்டென்று ஏறி உச்சத்தை அடைந்து விடலாம்தான்.  ஆனால் படியேறி வரிசையில் நின்று போவதின் பல அணுகூலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டாமலே அது செய்து விடும்தானே! அதுவும் நல்ல இயங்கும் உடற் செயல் பாடுகளுடன் இருக்கும் ஒருவருக்கு. விஞ்சில் ஏறும் பொழுது இதுதான் உண்மையென்று பூமியில் நடக்கும் விசயங்கள் அறியாமல் போக நிறைய ஆபத்துகள் நமக்குள்ளேயே குவியும் வாய்ப்புகள் அதிகம் தானே?

இங்கே கமல் உலக ரசிகர்களின் பார்வையை நம் பக்கம் திருப்ப நம் ஊர்லயும் உலகப்பார்வை கொண்ட  ஒரு கலைஞன் இருக்காண்டான்னு உலகத்திற்கு எடுத்து இயம்ப வேண்டுமென்ற நல்ல எண்ணத்தில் இருந்தால் அவர் ஆங்கிலத்திலேயே ஒரு படத்தை ஆஃப்கான், பாலஸ்தைன், நைஜீரியா போன்ற நாடுகளில் சுடச் சுட  உலக தீவிரவாதம் பற்றி பேசி இயக்கி எடுத்து பிறகு அது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வந்தால் ரொம்ப நன்மை பயக்கும் என் ஊருக்கும், உங்கள் ஊருக்கும். உலக தீவிரவாதத்தை வீட்டுவாதமாக உருவேற்றி காமிப்பது மிக்க அபத்தமானது, ஆபத்தானது. இந்த விஷ பரீட்சையை உலக மொழியில் நமக்கு கிஞ்சித்தும் 

சம்பந்தமே இல்லாத மொழியில், உடையில், தெருவில் இருந்து தொடங்குவதாக பேசி ஆரம்பித்தாரென்றால் இந்த கட்டுரைக்கே எனக்கு வேலையில்லை. ஆனால், நமது தெருக்களிலிருந்தும் நாம் இதனை வளர்த்தெடுத்து உலகத்திற்கு வழங்குகிறோம் என்ற சிறு எண்ண விதை விதைத்து அதனை இவரின் உக்கிர மெனக்கெடல் வழியாக வழங்கினால், நம்முடனே வாழ்ந்து வரும் பிற மனிதர்களை மென்மேலும் தனிமைப் படுத்துகிறோம் என்ற அடிப்படை அக்கறையுடன் இருப்பதாக படவில்லை.

உலக அரங்கில் இது வரையிலும் இந்தியாவிலிருந்து வளர்த்தெடுக்கப்பட்ட பூர்வீகமாக கொண்ட குடிமகன்களில் யாரேனும் தீவிரவாதத்தில் தோள் கொடுத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதுண்டா? வீட்டினுள் நடக்கும் பிரச்சினைகள் வேறு. ஆனால், அதனை பொறுப்பற்று, தீர்த்துக் கொள்ளும் நிலைக்கு நம்மை நகர்த்தி நமது வாழ்வு சூழலுக்கு தகுந்தாற்போல் தீர்வுகளை கண்டடைந்து கொள்வதனைத் தவிர்த்து, கேளிக்கையின் வழியாக உலக சென்றடைதல் நிகழ்த்துகிறேன் பார் என்று கிளம்பினால், கொள்ளிக்கட்டையால் தலையை பிராண்டிக் கொள்வதாகத்தான் புரிந்து கொள்ள முடிகிறது என்னால். அதிலும் இந்த கால கட்டத்தில்.

உலகிலேயே ரெண்டாவது பெரிய இஸ்லாம் வாழ் மக்களை உள்ளடக்கியது இந்தியா. நாம் ஒன்றும் அமெரிக்கா இல்லை. இங்கே நாம் இரண்டற பின்னி பிணைந்து கிடக்கிறோம். இருவரும் ஒத்திசைவுடன் இயங்குவதின் அவசியம் மிக நுண்மையாக மெதுவாக ஆழப் பதிக்கப்பட வேண்டியதின் அவசியம் உணருதல் ஒன்றே நிரந்தர தீர்வு என்பதனை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

நம்முடைய உடனடித் தேவை உள்ளூருக்குள் எப்படியாக அனைவருக்கும் எல்லாமும் கிட்டும் ஒரு நிலையை எட்டுவது என்பதாகத்தான் இருக்க வேண்டும். பரம்பரை பரம்பரையாக இங்கே வாழ்ந்து, உண்டு, வளர்ந்து, மடிந்து வாழும் அனைவருக்கும் கல்வியும், வேலையும் நீக்கமற கிடைப்பது போல ஒரு அடிப்படையான வாழ்வாதாரத்தை அமைத்து, எல்லாரையும் போல வாழ அனைவருக்கும் ஒருவாழ்வு அடிப்படையிலேயே கிடைக்க வேண்டிய சூழலை, ஒரு வாய்ப்பை அமைத்து கொடுப்பதே உண்மையானத் தேவை. 

அது போன்ற ஒரு பின்னணியில் வாழும் எந்த இந்திய குடும்பத்தவனும், வலியப் போயி டுப்பாக்கி தூக்குகிறேன் என்று அலையமாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன். ஏனெனில் நம் சமூக கட்டமைப்பு அப்படி அதற்கான ஊறல்கள் மனிதர்களை இப்படியாக நொதிக்க வைத்து தண்மை படுத்தி விடுகிறது என்ற அடிப்படை நம்பிக்கை கொள்ளல் வேண்டும். மாற்றம் சிறுகச் சிறுகத்தான் விதைக்க முடியும், அதுவே நீண்ட காலத்திற்கு நிற்கவும் செய்யும். இப்படியாகத்தான் இங்கே வாழ்வும் நகர்ந்து வந்திருக்கிறது. இத்துணை வெளிநாட்டு பிரவேசிப்பு, ஆக்கிரமிப்புகளுக்கு பின்னாலும்.

கிராமப்புரங்களில் இன்னும் எத்தனையோ இடங்களில் படித்தும் வேலை கிடைக்காத இளைஞர்கள் தனது பெயர்களுக்கு பின்னால் இருக்கும் மத அடையாளத்தால் வேலைகள் மறுக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒரு நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் சென்று தனது இளமையை தொலைத்து, குடும்பத்தையும் பிரிந்து வாழ்கிறார்கள். அது போன்ற மனிதர்களில் பலரும் மீண்டும் ஊருக்கு திரும்பி கையிலிருக்கும் சொற்ப பணத்தில் தனது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு, மேற்கொண்டு தனது குடும்பத்துடன் ஒரு நிம்மதியான பொருளாதார தன்னிறைவை எட்டி வாழ முடியாத பட்சத்தில் இன்னும் பலரும் இருக்கிறார்கள். 

எங்கள் ஊரில் பெரும்பாலான மக்கள் கருவாட்டுக் கடையும், கறிக்கடையும், காய்கறி/பழக்கடைகளும், பேரீச்சை பழத்திற்கு இரும்பு வாங்கிக் கொண்டும், மிதிவண்டிகளில் ஐஸ்க்ரீம் விற்றுக் கொண்டும் இருப்பவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களும் ஏனையவர்களைப் போல பெரும்பான்மையுடன் தனது பிள்ளைகளுக்கு எது போன்ற வாழ்வு வேண்டுமென்ற தேர்ந்தெடுப்பு சமூகத்தில் வளர்க்க வேண்டுமென்ற ஆவலை உருவாக்காது போனது யாருடைய குற்றம்?

இப்படியான மறுக்கப்பட்டச் சூழலில் இயல்பாகவே அரசியல் நடத்தும் குருந்தாடி மனிதர்களில் சிலர் ஏதோ சில பல கேள்விகளை அள்ளி வீசி - ஏன் இப்படியாக மாற்றான் தாய் மகன் என்ற முறையிலே நம் பூர்விக மண் என்றாலும் நடத்தப் பெறுகிறோம் என்று கேள்வியே  வீசி குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதனைப் போன்று உருவாக்கும் சூழலுக்கு இட்டு, அவர்களும் மண்டையை குடைந்து கேள்விக்கான பதிலை தேடிக் கொண்டிருக்கும் பொழுது, இந்த கமல்ஹாசன்களின் உலகளாவிய தீவிரவாத எக்ஸ்போர்ட் கல்வியூட்டு செயல்முறை கேளிக்கை படம் தேவையற்றது. அது தன்னை காதலிக்காத பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசு என்ற செயல்முறை வகுப்பு எடுப்பதற்கு ஒப்பானதுதானே!

அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்ட தவறான(?!) கேள்விகளுக்கான பதிலை எட்டி நியாயமான கேள்விகளுக்கு முகம் கொடுக்கிறோம் என்ற நிலைக்கு எட்டும் முன்பு எனது பக்கத்து வீட்டு குடும்பத்திற்கும், எனக்கும், நண்பனுக்கு நல்ல வேலை, வசதி வாய்ப்பு தேவை. நான் எங்கும் சென்று பஞ்சம் பிழைக்க புறப்பட்டு செல்லும் இடத்தில் வைத்து என் மூளை சலவை செய்யப்படுவதற்கு முன்பு இது நடந்தாகணும்.

பிரச்சினையை தூண்டி விடும் சலசலப்பான விசயங்கள் தேவை இல்லை.  நமக்கு இந்தச் சூழலில் பிரச்சனையின் ஆணி வேருக்குச் சென்று பேசி அதற்கான தீர்வை நோக்கி மனிதர்களின் மனதில் ஈரத்தை விதைக்கும் அடிப்படையைப் பேசும் படங்களே தேவை. சிறு பிள்ளைத்தனமான படங்களாகவோ அது கேளிக்கைக்கான படங்களாகவோ இருந்தாலும்.

கமலின் கேளிக்கைக்கான படமான இந்த விஸ்வரூபத்தில் கமல் எப்படி குழந்தைகள் தீவிரவாதத்தின் பால் ஈர்க்கப்படுகிறார்கள், எது அவர்களை அது போன்ற ஒரு சூழலில் போடுகிறது, நம்மூர் கிராமப்புறங்கள் வறுமையில் வாழும் குழந்தைகளுக்கும் இப்படியான ஒரு நிலை வந்துவிடக் கூடாதுங்கிற அக்கறையில் நடுநிலையில் நின்று இந்த தீவிரவாதத்திற்கான பரவலை தடுக்க தனது அறிவுஜீவி எண்ணங்களை பயன்படுத்தி இருப்பார் என்று சிலர் நம்பி படத்தை ஆதரிக்கலாம். படத்தைப் பார்த்தபிறகு மற்றொரு பதிவின் மூலமாக இந்த படத்தின் அரசியல் கூறுகளை அலச வாய்ப்பிருக்கிறது அப்பொழுது சந்திப்போம். அதுவரையிலும் இதையே படிச்சிட்டு இருங்க !பி.கு: என்னுடைய பால்ய காலத்து கல்லூரி படிப்பு திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியிலேயே தொடங்கியது. எனக்கு வாய்த்த அனைத்து நண்பர்களும் அந்த சமூக பின்னணியிலேயே இருந்தார்கள். எனக்கு பரிணாமம் முதல் மரபியல் வரை கல்வியூட்டிய அறிவார்த்தமான பேராசியர்களும், அறிவியர்களும் இவர்களே! எனவே கமல் தொட்டுப் போகும் விசயம் நமது தமிழகத்திற்கு தேவையற்றது. அவர்களுடனான உரையாடலுக்கான சாளரம் எப்பொழுதோ நமது நாட்டில் திறந்து வைத்தாகி விட்டது. அதனை எப்படி நாம் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதனை பொருட்டே, பின் வரும் காலம் அமையவிருக்கிறது.

Wednesday, January 09, 2013

வன்புணர்வு - சமூக உளச்சிதைவின் ஓர் குறியீடு!

வன்புணர்வு கலாச்சாரம் பற்றிய இக் கட்டுரையை எங்கிருந்து தொடங்குவது என்பதே ஓர் இடியாப்பச் சிக்கலைப் போன்றது. டெல்லி வன்புணர்வு சம்பவத்தை தொடர்ந்து பலரும் அதிலும் குறிப்பாக மத வழிபாட்டாளர்கள் தீர்வாக முன் வைக்கும் விடயங்கள் மிக அபத்தமானதாகவும், விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டியதாகவும் இருக்கிறது. பிரசித்தி பெற்ற தினமணி தலையங்கத்தில் ஒரு பெரியவர் தனது வீட்டுக்குள் தனது பெண்டீர்களுக்கு வழங்கும், தற்காப்பு கலையை உலக மக்களும் பார்த்து உய்ய தனது சொற்பொழிவினை அச்சில் ஏற்றி நமது பார்வைக்கும் கொண்டு வந்திருந்தார். அவர்களின் தீர்வு வெகு எளிமையானது -

 1) பெண்கள் நிறைய தோல் தெரிய உடை உடுத்தி இருட்டு தட்டிய பின் வெளியில் சுற்றித் திரிவதை தவிர்க்க வேண்டும் ...

 2) ஆண்கள் பொருளீட்டும் பொழுது, பெண்கள் வீட்டிற்குள் இருந்து லக்‌ஷமண் போட்ட கோட்டைத் தாண்டாமல் குடும்ப பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் ...

 3) வன்புணர்வாளர்களிடம் சிக்கிக் கொண்டால் கையெடுத்து கும்பிட்டு இறைவனை இறைஞ்ச வேண்டும், சகோதரர்களே என்று விளிக்க வேண்டும், முடியாத பட்சத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்...

அவரவர்களின் மன வளர்ச்சிக்கேற்ப இப்படி பக்கம் பக்கமாக தீர்வு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்துமே ஓர் ஆணின் பார்வையில் அல்லது அவர்களின் தாக்கத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட ஆணியவாதப் - பெண்களின் வாக்குமூலங்களாக நம்மை வந்தடைகிறது.

இத்தனை அல்லோல கல்லோலங்களுக்கும் பின்னான சமூக உளவியல் எங்கோ படுத்து மதிய நேரத்து துயில் கொண்டிருக்கிறது. அதனைத் தேடிச் செல்வது இந்த கட்டுரையின் நோக்கம். நம்மூர் வழக்கத்தில் ஒரு சொலவாடை உண்டு. பஞ்சையும் நெருப்பையும் தள்ளித் தள்ளிதான் வைக்கணும்... இதுக்கு பின்னான சமூக அணுகுமுறை ஒரு ஆண்/பெண்ணுக்கான உலகத்தை இரண்டாக பிளந்து பிரித்து வைக்கக் கூடிய அத்தனை சாத்தியங்களையும் உருவாக்கி வைத்துவிடுகிறது.

 இந்த ஆண்/பெண் என்ற உடல் கூறே எங்கிருந்து முளைத்து வருகிறது? அம்மாவின் உடலும் ஒரு பெண்ணின் உடல் குறியீடுகளை உள்ளடக்கி உள்ளதுதானே! முதலில் அவள்தானே மற்ற பெண்களின் உடல்/மன உலகத்தை காணுவதற்கான அறிமுகச் சாவியை ஓர் ஆணின் கையில் ஒப்படைக்கும் பொறுப்பை பெற்றிருக்கிறாள். இங்கே பெண் என்பவள் போற்றுதலுக்கும், வணங்குவதற்கும், காக்கும் பூமித் தாய் அளவிற்கு வானுயர ஏற்றி வைத்தும் பேசுவதாக அமைந்துள்ளது. இப்படியாக பேசும் சமூகத்தில்தான் கண்ணால் கண்டு, உதட்டைச் சுழித்து, கண் சிமிட்டினாலே போதை கொண்டு புணர்விற்கு தயாராகி விடும் நாணலைப் போன்றவளாகவும் மனத் திரையில் அவளுக்கென விருப்பு/வெறுப்புகள் உண்டு என்று கிஞ்சித்தும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு வேட்டை ஓநாய்களை போல ஆகிவிடும் ஒரு ஆண் சமூகத்தையும் நம்மைச் சுற்றி புடைசூழ வைத்திருக்கிறது. இது எப்படி சாத்தியமாகிப் போனது?

எனது பார்வையில் வீட்டிற்குள் தடை பட்டுப் போன உரையாடலும், உடற் மொழி அன்பு வெளிப்பாடுகளுமே இதற்கு முதன்மைக் காரணமாகப்படுகிறது. ஒரு காட்டு விலங்கை முறைப்படி பழக்கி உட்காரு என்றால் உட்காரவும், கரணம் அடிக்கவும் பழக்கப்படுத்த தெரிந்த நமக்கு நமது மனதை பக்குவப்படுத்திக் கொள்வதின் அனுகூலங்களையும், அடுத்தவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு விலகிச் செல்லும் மனப் பக்குவத்தையும் சிறு வயதிலேயே ஆழ பதிக்க முடியாமல் போனதிற்கு எதுவெல்லாம் காரணிகளாக அமைந்திருக்க முடியும்? வீட்டிற்குள் நடக்கும் கலாச்சார முன் நிறுத்தல்களே இது போன்ற சாலையோர முரட்டு சமூக வன்முறை வெளிப்பாடுகளுக்கு காரணம்.

முறையாக பேசி எதிர் பாலினத்தவரின் மீதான வன்முறை எண்ணங்களை பண்பூக்கம் (tame) செய்ய கற்றுக் கொடுக்காததே ஒரு காரணி. அதுவே ஆழ் மன வறட்சி நிலையில், கிடைக்கும் சூழலில் அத்துமீற எத்தனிக்கும் கூட்டு சமூக வெளிப்பாடுயாகி விடுகிறது எனலாமா? வீட்டிற்குள் அம்மா, அப்பா, சகோதர மற்றும் சகோதரிகளுக்கிடையே நிகழ்த்தும் உடற்மொழி கலாச்சாரத்தின் கட்டமைப்பு போதாமை, இது போன்ற கூட்டுச் சமூக வன்புணர்வு எண்ண வெளிப்படுதல்களுக்கும் வன்புணர்வு  மனிதர்களை உருவாக்கி தெருவிற்குள் பிரவேசிக்க வைக்கும் ஒரு காரணியாக அமைகிறது. 

சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதியை வாஞ்சையுடன் இறுக கட்டியணைத்து உச்சி முகர்ந்த நிலையில் ஒரு புகைப்படம் வெளி வந்திருந்ததைக் கண்டு நமது கலாச்சார கண்ணாடிகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பி இது போன்று ஒரு தவறான முன்னுதாரணமாகவும், வாழ்க்கையைப் படங்களில் நடிப்பதனைப் போலவும் செய்கிறார் என்ற மிகை கலாச்சார அதிர்வு உந்தல்களால் பலவாறாக தங்களது உளச் சிதைவுகளை முன் வைத்திருந்தார்கள்.

அப்பொழுதும் இப்பொழுதும் எப்பொழுதும் எனக்கு நமது கலாச்சாரப் பின்னணியில் புரியாமல் போகிற விசயம் எப்படி மிருக நிலையிலேயே நம்மால் தசை கூறுகளைக் கொண்டே எல்லா உறவு நிலைகளிலும் கூட நிறக் கண்ணாடி கொண்டு பார்க்க முடிகிறது? அப்படியாக காணும் ஒரு நிலைக்கு நாம் நகர்ந்திருந்தால் அது பிறழ்வுற்ற/சிதைவுற்ற ஒரு கூட்டுச் சமூகமாகத்தானே இருக்க முடியும்? எப்படி நம்முடைய அம்மாவை இறுக கட்டி அணைத்துக் கொள்ளும் பொழுது நமது திசுக்கள் வேறு விதமாக சமிக்கையை அனுப்பி கிளர்வுறச் செய்யும்? போலவே, மகள்/மகன்/சகோதரன்/சகோதரி கூடவும் அப்படியாக நிகழ்ந்தால் அங்கே ஏதோ ஒன்று கழண்ட நிலையில்தான் உள்ளது என்பதாக எடுத்துக் கொண்டு மன நல வைத்தியரை அல்லவா அணுக வேண்டி வரும்.

ஆனால், கூட்டுச் சமூகமாக இந்த மனச் சிதைவை நாம் எப்படி அணுகுகிறோம். அப்படியாக நடந்து விடுவது ரொம்ப இயல்பு, அதனால் தாயா இருந்தாலும் பிள்ளையா இருந்தாலும் தள்ளித் தள்ளிதான் வைக்கணுங்கிற அளவில பஞ்சையும் நெருப்பையும் தள்ளி வைக்கச் சொல்லுகிறோம். அதற்கு மாறாக, நாம் உரையாடல் நிகழ்த்த தயாராக இல்லை. இங்கேதான் ஓர் அம்மாவிற்கும் பிள்ளைக்கும், ஒரு தகனுப்பனுக்கு மகளுக்கும், ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்குமான பொன்னான வாய்ப்புகள் கை நழுவி தெருவோர வன்முறையாளர்களை உருவாக்கி வைக்கும் பங்கை ஒரு கலாச்சாரமாக செய்து வைத்து விடுகிறோம்.

அன்பான தொடுதல்கள், வருடல்களுக்கும் காமத்தின் இச்சைக்கு எட்டிச் செல்லும் தொடுதல்கள், வருடலுக்குமான வித்தியாசம் அதற்கான ஏற்பாடுகள் எப்படியாக வித்தியாசம் கண்டறிந்து கொள்வது? அதனை எங்கிருந்து யார் முதல் கல்வியூட்டுவது? அது போன்ற மென் உணர்வு சார் விசயங்களை எப்படியாக இனம் காண்பது? அதற்காக என்ன வீட்டிலேயே ஆரம்பித்து வைக்கச் சொல்லுறீங்களான்னு கேக்கக் கூடாது. நாம் செல்ல விருக்கும் இடம் வேறு. ஒரு அம்மாவின்/சகோதரியின் நெருக்கம் அதனையொட்டிய உரையாடல் ஒரு ஆணுக்குள் இருக்கும் புறம் சார்ந்த சீண்டல்களை பண்பூக்கம் செய்ய வித்திட வாய்ப்பாக அமையலாம். அவன் இயல்பாகப் பார்க்க கற்றுக் கொள்ளலாம். உடல் சார்ந்த திறப்பு என்பது முதலில் மனத் திறப்பு என்பதுதான் என்று அவன் உணர்ந்து, உடல் சார்ந்த வயப்படலிலிருந்து வெளி வர இந்த உடற்மொழி வெளிப்பாடுகள் உதவச் செய்யலாம்.

இது போன்ற தெருவோர வன்புணர்வு மனச் சிதைவு ஒரு மனதின் அன்பற்ற எதிர்பாலினத்தின் புரிதலைப் பற்றிய வறட்சியை நோக்கியே நம்மை இட்டுச் செல்கிறது. புறம் சார்ந்த கிளர்ச்சியுறு நிலை என்பது இருபாலினத்திற்கும் ஓர் ஆரோக்கியமான உடற் செயல்பாட்டையே சுட்டி நின்றாலும், அது கட்டுக்குள் வைக்கும் பொறுப்பு பக்குவமடைந்த சமூகத்தின் ஒரு வெளிப்பாடே என்பதனை நாம் இங்கே புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கேதான் நாம் ஒரு கேள்வியை கேட்டுக் கொள்ள வேண்டும். மேற்கு நாடுகளில் ஏன் இது போன்ற தெருவோர/பொது இட வக்கிரச் சீண்டல்கள், வன்புணர்வுகள் இல்லை (அதற்காக முற்றாகவே இல்லை என்று இங்கு நான் நிறுத்தற் குறி இடவில்லை). நம் சமூகம் மற்ற சமூகங்களைக் காட்டிலும் தொன்மையான, மிக நீண்ட வரலாற்றைக் கொண்டதாகவும், உலகளவில் விவாகரத்து பெறும் புள்ளியலில் மிக குறைந்த எண்ணிக்கையை கொண்டதாகவும், பெற்றோர்களே தங்களது பிள்ளைகளுக்கு வரன் பார்த்து அமைத்து கொடுக்கும் ஓர் உன்னத கலாச்சாரத்தை உள்ளடக்கியது எனவும் நம்புகிறோம்.  வரன் பார்த்து வைக்கும் வரை முப்பது வயதை எட்டிய யுவதியும்/யுவனும் உடற் ரீதியில் வறட்சி நிலையில் தனித் தனி தீவுகளாக வாழ்ந்தாலும், ஒழுக்க நெறியுடன் இன்னமும் தனக்கு பரிட்சியமான ஏழு வயது சிறுமியோ/சிறுவனோ என்ற நிலையில் பெரியவர்கள் அவர்கள் உலகத்தில் நம்பிக் கொண்டு கலாச்சார கண்ணாடிகளாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இப்படி மட்டற்ற பெருமையை கொண்ட ஒரு சமூகத்தில், எப்படி இத்தனை வக்கிரமான சமூகத்தில் உளச் சிதைவை கொண்ட மக்களும் பெருகி இருக்கிறார்கள்?

மேற்குலகில் பெற்றோர்கள் ஒரு கடவுளர்கள் அளவிற்கு மேலே வைத்து தொழும் இடத்திற்கு தங்களை நகர்த்தி வைத்துக் கொள்வது கிடையாது. உரையாடலுக்கான அத்தனை சாளரங்களையும் திறந்த நிலையிலேயே வைத்திருக்கிறார்கள். முதல் தடை நம்முடைய சமூகத்தில் இங்கே இருக்கிறது. இரண்டாவதாக மேற்குலகில் ஆண்/பெண் நண்பர்களை அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்குள் அமைத்துக் கொண்டு சகஜமாக பழகும் நிலைக்கு தங்களை நகர்த்திக் கொள்ளவில்லை என்றால் கவலையுறுகிறார்கள். ஆனால் நாமோ, நமது மனச்சிதைவின் காரணமாக அந்த யுவ/யுவதிகளின் உடற் கூற்றை மட்டுமே கண்டு கற்பனையால் துணுக்குற்று கொண்டிருப்போம். ஆனால், அந்த பழகல்களின் மூலமாக அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான தனிமனித விருப்பு/வெறுப்புகள், வரம்பு மீறாமை போன்ற அடிப்படை நாகரீகத்தை கற்றுக் கொள்கிறார்கள் என்பதனை பார்க்க மறுக்கிறோம். சிதைவுப் பார்வையின் வழியாக நம் கலாச்சார மாண்பு பேசியே சமூக உளவியலைக் காணத் தவறுகிறோம்.

அதே மேற்குலகில் வயதிற்கு வந்தவர்கள் புணர்ச்சி நிமித்தம் தடுமாறிப் போய் சாலையில் போவோரை வருவோரை கையை பிடித்து இழுக்கும் நிலைக்கு போகாமல், தங்களை பண்புடனான நிலையில் வைத்துக் கொள்ள பல சமூக நோக்கு அணுகுமுறை அவர்களுக்கு கை கொடுக்கிறது. நமக்கு எல்லாம் ஒரு காலத்தில் மேற்குலகு என்றாலே ஃப்ரீ செக்ஸ், எப்படி வேணாலும் யார் யாருடனும் இருப்பார்கள் என்ற சமூக கூட்டு அழுக்கு பார்வை இருந்தது. ஆனால், உண்மையில் நடந்தது, நடந்து கொண்டிருப்பது என்ன வென்றால் உண்மையை உண்மையாக, தங்களுக்கு தாங்களே கல்வியூட்டிக் கொண்டு, எதனையும் மறுக்காமல் ஏதோ ஒரு உறவில் தங்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி பொது இடங்களில் கோவில், பேருந்து, புகைவண்டி, எந்த ஒரு கூட்ட நெரிசல் சந்தர்ப்பங்களின் போதும் எதிர்பாலினத்தை துழாவ வேண்டுமென்ற பொது புத்தி பெற்றிருக்கவில்லை. எத்தனை பெரிய வேறுபாடு!

இப்படியாக கூட்டு ஒத்துழைப்பின் மூலமாக வாழ்க்கை கல்வி சமமாக பரவும் பொழுது தெருவோர பிரச்சினைகள் ஓர் ஒழுங்கிற்கு வருகிறது. இத்தனையும் மீறி அத்து மீறல்கள் வரலாம், மிக குறைந்த சதவிகிதத்தில் வெளி வரும் பொழுது அவர்களுக்கு உடனடியாக சட்டம் தன் பங்கை ஆற்றி மற்ற பக்குவமற்ற/வறட்சி மனங்களை கட்டுக்குள் வைத்துக் கொள்கிறது.

இங்கே மற்றுமொரு சிந்தனைக்கான கேள்வி. இரு வயதிற்கு வந்தவர்கள் தங்களுக்கு பிடித்த மாதிரியான வாழ்க்கையை எப்படியோ தங்களது இச்சையை மட்டுக்குள் வைத்துக் கொள்ளும் விதமாக வாழ்ந்து முடிக்கும் பொழுது எந்த விதத்தில் அது நமது குடும்பத்தை மகனை/மகளை சிதைக்கிறது. அவர்கள் எப்படியோ இருந்து விட்டு போகட்டும், நமக்கென்ன? ஒரு நாட்டின் கலாச்சாரத்தை முன் நிறுத்த உங்கள் வீட்டுப் பிள்ளைகளையும் பலி கொடுக்க தயாராகி விட்டீர்களா, அல்லது பக்குவமற்ற தனிமனித தேடல்களை அவர்களுக்கு தெரிந்த முறையில் வெளிப்படுத்தி வாழ அனுமதி வழங்கி ஒதுங்கி நின்று தனி குடும்ப நிம்மதியை பேணிக் கொள்வீர்களா?  

இந்த வக்கிர தெருவோர சீண்டல்களிலிருந்து தப்பித்து  வீட்டிற்கு வெளியே போன பிள்ளைகள் பாதுகாப்பாக வந்து சேருவார்களா என்று கெதக்கென்று இருப்பது நமது தினப்படி நிம்மதியை சிதைக்கிறதா, இல்லை கலாச்சார கண்ணாடிகளின் கூற்றுப்படி எங்களது கலாச்சாரம் உலக அளவில் பிரசித்திப் பெற்றது என்று ஒரு பெரும் போர்வையை கொண்டு உண்மையை மறைத்து வைத்து விட்டு பொது இடங்களில் வக்கிரம் காட்டி மனதிற்குள் அழுது கொண்டு திரிந்து ஒரு நாள் இது போன்று கொலை அளவிற்கும் தங்களை முன் நிறுத்திக் கொள்வது நம் நிம்மதியை குலைக்கிறதா? எது நாகரீகமடைந்த கலாச்சாரம்/சமூகம் இங்கே??

எனவே மனிதருக்கான அத்தனை சமூக பண்படுத்தலுக்கான விடயங்களும் ஒரு வீட்டிற்குள்ளயே உள்ளடக்கி இருக்கிறது. அதனை நடைமுறைப் படுத்தி உரையாடலைத் தீவிரப்படுத்தி நுண் உணர்வுகளை தங்களது குடுப்பத்தாருடன் பகிர்ந்து கொள்ளுவோம். பேருந்தில் சீண்டலை முகம் கொடுத்தீர்களா, அது எத்தனை மன வலியை, முக சுழிப்பை உருவாக்கியது என்பதனை உணர்வுப் பூர்வமாக குடும்பத்தாருடன் குறிப்பாக பிள்ளைகளுடன் ஒரு பெண்ணின் பார்வையில் பகிர்ந்து கொள்ளுங்கள். மனசிற்கும், உடற் செயல்பாட்டிற்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பை ஆழ விதைக்கலாம். தன் வீட்டுப் பெண்டிர்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தொடர்பான உடல் உபாதைகளை மிக இயல்பாக ஏனைய வீட்டு நபர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். வரும் வழியில் மாதவிடாய் பேட் வாங்கி வரச் செய்யுங்கள். அது பிற்காலத்தில் பெண்களை கீழானவர்களாக, ஒரு நுகர்வுப் பண்டமாக பார்க்கும் பார்வையை மாற்றியமைக்க உதவும்.

இது குழந்தைகளிடமிருந்துதான் தொடங்க முடியும். ஒரு சமூகமாக இந்த புற்றுக் கட்டியை அகற்றி கொள்ளும் நேரமிது. ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் இருக்கிறது, அறுவை சிகிச்சைக்கான ஆயுதம் - உரையாடல் மூலமாக வெளிப்படும் மென்னுணர்வு, அதன் மூலமாக வெளிப்படுத்தும் கரிசனம், உள்ளார்ந்த அன்பு வறட்சியற்ற ஆரோக்கியமான சமூகம்.

Related Posts with Thumbnails