Wednesday, January 09, 2013

வன்புணர்வு - சமூக உளச்சிதைவின் ஓர் குறியீடு!

இந்த கட்டுரையை எங்கிருந்து தொடங்குவது என்பதே ஓர் இடியாப்பச் சிக்கலைப் போன்றது, இந்த வன்புணர்வு கலாச்சாரம் என்பதனை பேச எடுத்துக் கொள்வதும். வேறு எந்த இடத்திலுமே இந்த டெல்லி வன்புணர்வு சமாச்சாரம் தொடர்ந்து என்னுடைய பார்வையை நான் முன் வைக்கவில்லை. ஆனால் அண்மைய காலத்தில் இந்த சம்பவத்தை தொடர்ந்து பலரும் அதிலும் குறிப்பாக நமது காவி, வெள்ளை உடுத்திகள் தீர்வாக முன் வைக்கும் விடயங்கள் மிக்க அபத்தமாகி, விமர்சனத்திற்கும் உள்ளாகி விடுகிறது. சில வாரங்களுக்கு முன்பாக பிரசித்தி பெற்ற தினமணி தலையங்கத்தில் கூட ஒரு பெரியவர் தனது வீட்டுக்குள் தனது பெண்டீர்களுக்கு வழங்கும், தற்காப்பு கலையை உலக மக்களும் பார்த்து உய்ய தனது சொற்பொழிவினை அச்சில் ஏற்றி நமது பார்வைக்கும் வைத்திருந்தார். அவர்களின் தீர்வு வெகு எளிமையானது -

 1) பெண்கள் நிறைய தோல் தெரிய உடை உடுத்தி இருட்டு தட்டியும் வெளியில் சுற்றித் திரிவதை தவிர்க்க வேண்டும் ...

 2) பெண்கள் வீட்டிற்குள் இருந்து லக்‌ஷமண் கோட்டைத் தாண்டாமல் குடும்ப பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் ஆண்கள் பொருளீட்டும் பொழுது...

 3) வன்புணர்வாளர்களிடம் சிக்கிக் கொண்டால் கையெடுத்து கும்பிட்டு இறைவனை இறைஞ்ச வேண்டும், சகோதரர்களே என்று விளிக்க வேண்டும், முடியாத பட்சத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்...

 இப்படி பக்கம் பக்கமாக தீர்வு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள், அவரவர்களின் மன வளர்ச்சிக்கேற்ப; இவை அனைத்துமே ஒரு ஆணின் பார்வையில் அல்லது அவர்களின் தாக்கத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட ஆணிய - பெண்களின் வாக்குமூலங்களாக நம்மை வந்தடைகிறது.

 இத்தனை அல்லோகல்லங்களுக்கும் பின்னான சமூக உளவியல் எங்கோ படுத்து மதிய நேரத்து துயில் கொண்டிருக்கிறது. அதனைத் தேடிச் செல்வோம். நம்மூர் வழக்கத்தில் ஒரு சொலவாடை உண்டு. பஞ்சையும் நெருப்பையும் தள்ளித் தள்ளிதான் வைக்கணும்... இதுக்கு பின்னான சமூக அணுகுமுறை ஒரு ஆண்/பெண்ணுக்கான உலகத்தை இரண்டாக பிளந்து பிரித்து வைக்கக் கூடிய அத்தனை சாத்தியங்களையும் உருவாக்கி வைத்துவிடுகிறது.

 இந்த ஆண்/பெண் என்ற உடல் கூறே எங்கிருந்து முளைத்து வருகிறது? அம்மாவின் உடலும் ஒரு பெண்ணின் உடல் குறியீடுகளை உள்ளடக்கி உள்ளதுதானே! முதலில் அவள்தானே மற்ற பெண்களின் உடல்/மன உலகத்தை காணுவதற்கான அறிமுகச் சாவியை ஓர் ஆணின் கையில் ஒப்படைக்கும் பொறுப்பை பெற்றிருக்கிறாள். இங்கே பெண் என்பவள் போற்றுதலுக்கும், வணங்குவதற்கும், காக்கும் பூமித் தாய் அளவிற்கு வானுயர ஏற்றி வைத்து பேசும் சமூகத்தில்தான் கண்ணால் கண்டு, உதட்டைச் சுழித்து, கண் சிமிட்டினாலே போதை கொண்டு புணர்விற்கு தயாராகி விடும் நாணலைப் போன்றவளாகவும் மனத் திரையில் அவளுக்கென விருப்பு/வெறுப்புகள் உண்டு என்று கிஞ்சித்தும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு வேட்டை ஓநாய்களை போல ஆகிவிடும் ஒரு ஆண் சமூகத்தையும் படைத்து வைத்திருக்கிறோம். இது எப்படி சாத்தியமாகிப் போனது?

எனது பார்வையில் வீட்டிற்குள் தடை பட்டுப் போன உரையாடலும், உடற் மொழி அன்பு வெளிப்பாடுகளுமே காரணமாகப்படுகிறது. ஒரு காட்டு விலங்கை நமக்கு சந்தோஷத்தை வழங்கும் முறைப்படி பழக்கி உட்காரு என்றால் உட்காரவும், கரணம் அடிக்கவும் பழக்கப்படுத்திய நமக்கு நமது மனதை பக்குவப்படுத்திக் கொள்வதின் அணு கூலங்களையும், அடுத்தவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு விலகிச் செல்லும் மனப் பக்குவத்தையும் சிறு வயதிலேயே ஆழ பதிக்க முடியாமல் போனதிற்கு எதுவெல்லாம் காரணிகளாக அமைந்திருக்க முடியும்? மீண்டும் வீட்டிற்குள் நடக்கும் கலாச்சார முன் நிறுத்தல்களே இது போன்ற சாலையோர முரட்டு சமூக வன்முறை வெளிப்பாடுகளுக்கு காரணம்.

முறையாக பேசி எதிர் பாலினத்தவரின் மீதான வன்முறை எண்ணங்களை பண்பூக்கம் (tame) செய்ய கற்றுக் கொடுக்காததே இது போன்ற ஆழ் மன வறட்சி நிலையில் கிடைக்கும் சூழலில் அத்துமீற எத்தனிக்கும் கூட்டு சமூக வெளிக்கிளம்பல்களாகி விடுகிறது எனலாமா? இப்பொழுது எப்படி நமக்கு வீட்டிற்குள் அம்மா/அப்பா/சகோ/தரிகளுக்கிடையே நிகழ்த்தும் உடற்மொழி கலாச்சாரம் இது போன்ற கூட்டுச் சமூக வன்புணர்வு எண்ண வெளிக்கிளம்புமளவிற்கு மனிதர்களை உருவாக்கி தெருவிற்குள் பிரவேசிக்க விட ஒரு காரணியாக அமைகிறது எனத் தோண்டுவோம்.

சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதியை வாஞ்சையுடன் இறுக கட்டியணைத்து உச்சி முகர்ந்த நிலையில் ஒரு புகைப்படம் வெளி வந்திருந்ததைக் கண்டு நமது கலாச்சார கண்ணாடிகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பி இது போன்று ஒரு தவறான முன்னுதரணமாகவும், வாழ்க்கையை படங்களில் நடிப்பதனைப் போலவும் செய்கிறார் என்ற மிகை கலாச்சார அதிர்வு உந்தல்களால் பலவாறாக தங்களது உளச் சிதைவுகளை முன் வைத்திருந்தார்கள்.

அப்பொழுதும் இப்பொழுதும் எப்பொழுதும் எனக்கு நமது கலாச்சாரப் பின்னணியில் புரியாமல் போகப் போகிற விசயம் எப்படி மிருக நிலையிலேயே நம்மால் தசை கூறுகளைக் கொண்டே எல்லா உறவு நிலைகளிலும் கூட நிறக் கண்ணாடி கொண்டு பார்க்க முடிகிறது? அப்படியாக காணும் ஒரு நிலைக்கு நாம் நகர்ந்திருந்தால் அது பிறழ்வுற்ற/சிதைவுற்ற ஒரு கூட்டுச் சமூகமாகத்தானே இருக்க முடியும்? எப்படி நம்முடைய அம்மாவை இறுக கட்டி அணைத்துக் கொள்ளும் பொழுது நமது திசுக்கள் வேறு விதமாக சமிக்கையை அனுப்பி கிளர்வுறச் செய்யும்? போலவே, மகள்/மகன்/சகோதரன்/சகோதரி. அப்படியாக நிகழ்ந்தால் அங்கே ஏதோ ஒன்று கழண்ட நிலையில்தான் உள்ளது என்பதாக எடுத்துக் கொண்டு மன நல வைத்தியரை அல்லவா அணுக வேண்டி வரும்.

ஆனால், கூட்டுச் சமூகமாக இந்த மனச் சிதைவை நாம் எப்படி அணுகுகிறோம். அப்படியாக நடந்து விடுவது ரொம்ப இயல்பு, அதனால் தாயா இருந்தாலும் பிள்ளையா இருந்தாலும் தள்ளித் தள்ளிதான் வைக்கணுங்கிற அளவில பஞ்சையும் நெருப்பையும் தள்ளி வைக்கச் சொல்லுகிறோம். அதற்கு மாறாக, உரையாடல் நிகழ்த்த தயாராக இருக்க முடியாமல். இங்கேதான் ஒரு அம்மாவிற்கும் பிள்ளைக்கும், ஒரு தகனுப்பனுக்கு மகளுக்கும், ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்குமான பொன்னான வாய்ப்புகள் கை நழுவி தெருவோர வன்முறையாளர்களை உருவாக்கி வைக்கும் பங்கை ஒரு கலாச்சாரமாக செய்து வைத்து விடுகிறோம்.

அன்பான தொடுதல்கள், வருடல்களுக்கும் காமத்தின் இச்சைக்கு எட்டிச் செல்லும் தொடுதல்கள், வருடலுக்குமான வித்தியாசம் அதற்கான ஏற்பாடுகள் எப்படியாக வித்தியாசம் கண்டறிந்து கொள்வது. அதனை எங்கிருந்து யார் முதல் கல்வியூட்டுவது. அது போன்ற மென் உணர்வு சார் விசயங்களை எப்படியாக இனம் காண்பது? அதற்காக என்ன தெகா வீட்டிலேயே ஆரம்பித்து வைக்கச் சொல்லுறீங்களான்னு கேக்கக் கூடாது. நாம் செல்ல விருக்கும் இடம் வேறு. ஒரு அம்மாவின்/சகோதரியின் நெருக்கம் அதனையொட்டிய சம்பாஷணை ஒரு ஆணுக்குள் இருக்கும் புறம் சார்ந்த சீண்டல்களை பண்பூக்கம் செய்ய வித்திட வாய்ப்பாக அமையலாம். அவன் சகஜமாக பார்க்க கற்றுக் கொள்ளலாம். உடல் சார்ந்த திறப்பு என்பது முதலில் மனத் திறப்பு என்பதுதான் என்பதனை அவன் உணர்ந்து உடல் சார்ந்த வயப்படலிலிருந்து வெளி வர இந்த உடற்மொழி வெளிப்பாடுகள் உதவச் செய்யலாம்.

இது போன்ற தெருவோர வன்புணர்வு மனச் சிதைவு ஒரு மனதின் அன்பற்ற/எதிர்பாலினத்தின் புரிதலைப் பற்றிய வறட்சியை நோக்கியே நம்மை இட்டுச் செல்கிறது. புறம் சார்ந்த கிளர்சியுறு நிலை என்பது இருபாலினத்திற்கும் ஓர் ஆரோக்கியமான உடற் செயல்பாட்டையே சுட்டி நின்றாலும், அது கட்டுக்குள் வைக்கும் பொறுப்பு பக்குவமுற்ற சமூகத்தின் ஒரு வெளிப்பாடே என்பதனை நாம் இங்கே புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கேதான் நாம் ஒரு கேள்வியை கேட்டுக் கொள்ள வேண்டும். மேற்கு நாடுகளில் ஏன் இது போன்ற தெருவோர/பொது இட வக்கிரச் சீண்டல்கள், வன்புணர்வுகள் இல்லை (அதற்காக முற்றாகவே இல்லை என்று இங்கு நான் நிறுத்தற் குறி இடவில்லை). நம் சமூகம் மற்ற சமூகங்களைக் காட்டிலும் தொன்மையான, மிக நீண்ட வரலாற்றைக் கொண்டதாகவும், உலகளவில் விவாகரத்து பெறும் புள்ளியலில் மிக குறைந்த எண்ணிக்கையை கொண்டதாகவும், பெற்றோர்களே தங்களது பிள்ளைகளுக்கு வரன் பார்த்து அமைத்து கொடுக்கும் (அது வரைக்கும் ஒரு முப்பது வயதை எட்டிய யுவதியும்/யுவனும் உடற் ரீதியில் வறட்சி நிலையில் தனித் தனி தீவுகளாக வாழ்ந்தாலும், ஒழுக்க நெறியுடன் இன்னமும் தனக்கு பரிட்சியமான ஏழு வயது சிறுமியோ/சிறுவனோ என்ற நிலையில் பெரியவர்கள் அவர்கள் உலகத்தில் நம்பிக் கொண்டு கலாச்சார கண்ணாடிகளாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள்) ஓர் உன்னத கலாச்சாரத்தை உள்ளடக்கியது எனவும் நம்புகிறோம். இப்படி மட்டற்ற பெருமையை கொண்ட ஒரு சமூகத்தில் எப்படி இத்தனை வக்கிரமாக ஒரு சமூகத்தில் உளச் சிதைவை கொண்ட மக்களும் பெருகி இருக்கிறார்கள்?

மேற்குலகில் பெற்றோர்கள் ஒரு கடவுளர்கள் அளவிற்கு மேலே வைத்து தொழும் இடத்திற்கு தங்களை நகர்த்தி வைத்துக் கொள்வது கிடையாது. உரையாடலுக்கான அத்தனை சாளரங்களையும் திறந்த நிலையிலேயே வைத்திருக்கிறார்கள். முதல் அடைப்பு நம்முடைய சமூகத்தில் இங்கே இருக்கிறது. இரண்டாவதாக, ஆண்/பெண் நண்பர்களை அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்குள் அமைத்துக் கொண்டு சகஜமாக பழகும் நிலைக்கு தங்களை நகர்த்திக் கொள்ளவில்லை என்றால் கவலையுறுகிறார்கள். ஏன்? நமது கற்பனை மற்றும் பயம் முழுதும் அந்த யுவ/யுவதிகளின் உடற் கூற்றை மட்டுமே மனச் சிதைவின் மூலமாக கண்டு துணுக்குற்று கொண்டிருப்போம், ஆனால் அந்த பழகல்களின் மூலமாக அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான தனிமனித விருப்பு/வெறுப்புகள், வரம்பு மீறாமை போன்ற அடிப்படை நாகரீகத்தை கற்றுக் கொள்கிறார்கள் என்பதனை க்ளீன் போல்டாக பார்க்க மறுத்து சிதைவுப் பார்வையின் வழியாக நம் கலாச்சார மாண்பு பேசி சமூக உளவியல் காணத் தவறுகிறோம்.

அதே உலகில் வயதிற்கு வந்தவர்கள் புணர்ச்சி நிமித்தம் தடுமாறிப் போய் சாலையில் போவோரை வருவோரை கையை பிடித்து இழுக்கும் நிலைக்கு போகாமல் தங்களை பண்புடனான நிலையில் வைத்துக் கொள்ள பல சமூக நோக்கு அணுகுமுறை அவர்களுக்கு கை கொடுக்கிறது. நமக்கு எல்லாம் ஒரு காலத்தில் மேற்குலகு என்றாலே ஃப்ரீ செக்ஸ், எப்படி வேணாலும் யார் யாருடணும் இருப்பார்கள் என்ற சமூக கூட்டு அழுக்கு பார்வை இருந்தது. ஆனால், உண்மையில் நடந்தது, நடந்து கொண்டிருப்பது என்ன வென்றால் உண்மையை உண்மையாக, தங்களுக்கு தாங்களே கல்வியூட்டிக் கொண்டு, எதனையும் மறுக்காமல் ஏதோ ஒரு உறவில் தங்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி பொது இடங்களில் கோவில், பேருந்து, புகைவண்டி, எந்த ஒரு கூட்ட நெரிசல் சந்தர்பர்ங்களின் போதும் எதிர்பாலினத்தை துழாவ வேண்டுமென்ற பொது ப்ரக்ஞையினான ஞானம் பெற்றிருக்கவில்லை. எத்தனை பெரிய வேறுபாடு?

இப்படியாக கூட்டு ஒத்துழைப்பின் மூலமாக வாழ்க்கை கல்வி சமமாக பரவும் பொழுது தெருவோர பிரச்சினைகள் ஓர் ஒழுங்கிற்கு வருகிறது. இத்தனையும் மீறி அத்து மீறல்கள் வரும், மிக குறைந்த சதவிகிதத்தில் வெளி வரும் பொழுது அவர்களுக்கு உடனடியாக சட்டம் தன் பங்கை ஆற்றி மற்ற பக்குவமற்ற/வறச்சி மனங்களை கட்டுக்குள் வைத்துக் கொள்கிறது.

இங்கே மற்றுமொரு சிந்தனைக்கான கேள்வி. இரு வயதிற்கு வந்த அடல்டுகள் தங்களுக்கு பிடித்த மாதிரியான வாழ்க்கையை எப்படியோ தங்களது இச்சையை மட்டுக்குள் வைத்துக் கொள்ளும் விதமாக வாழ்ந்து முடிக்கும் பொழுது எந்த விதத்தில் அது நமது குடும்பத்தை மகனை/மகளை சிதைக்கிறது. அவர்கள் எப்படியோ இருந்து விட்டு போகட்டும், நமக்கென்ன? ஒரு நாட்டின் கலாச்சாரத்தை முன் நிறுத்த உங்கள் வீட்டுப் பிள்ளைகளையும் பலி கொடுக்க தயாராகி விட்டீர்களா, அல்லது பக்குவமற்ற தனிமனித தேடல்களை அவர்களுக்கு தெரிந்த முறையில் வெளிப்படுத்தி வாழ அனுமதி வழங்கி ஒதுங்கி நின்று தனி குடும்ப நிம்மதியை பேணிக் கொள்வீர்களா? 

வீட்டிற்கு வெளியே போன பிள்ளைகள் பாதுகாப்பாக வந்து சேருவார்களா இந்த வக்கிர தெருவோர சீண்டல்களிலிருந்து தப்பித்து என்பதாக கெதக் என்று இருப்பது நமது தினப்படி நிம்மதியை சிதைக்கிறதா, இல்லை கலாச்சார கண்ணாடிகளின் கூற்றுப்படி எங்களது கலாச்சாரம் உலக அளவில் பிரசித்திப் பெற்றது என்று ஒரு பெரும் போர்வையை கொண்டு உண்மையை மறைத்து வைத்து விட்டு பொது இடங்களில் வக்கிரம் காட்டி மனதிற்குள் அழுது கொண்டு திரிந்து ஒரு நாள் இது போன்று கொலை அளவிற்கும் தங்களை முன் நிறுத்திக் கொள்வது சரியா? எது நாகரீகமடைந்த கலாச்சாரம்/சமூகம் இங்கே??

எனவே மனிதருக்கான அத்தனை சமூக பண்படுத்தலுக்கான விடயங்களும் ஒரு வீட்டிற்குள்ளயே உள்ளடக்கி இருக்கிறது. அதனை நடைமுறைப் படுத்தி உரையாடலை தீவிரப்படுத்தி நுண் உணர்வுகளை தங்களது குடுப்பத்தாருடன் பகிர்ந்து கொள்ளுவோம். பேருந்தில் சீண்டலை முகம் கொடுத்தீர்களா, அது எத்தனை மன வலியை, முக சுழிப்பை உருவாக்கியது என்பதனை உணர்வுப் பூர்வமாக குடும்பத்தாருடன் குறிப்பாக பிள்ளைகளுடன் ஒரு பெண்ணின் பார்வையில் பகிர்ந்து கொள்ளுங்கள். மனசிற்கும், உடற் செயல்பாட்டிற்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பை ஆழ விதைக்கலாம்.

இது குழந்தைகளிடமிருந்துதான் தொடங்க முடியும். ஒரு சமூகமாக இந்த புற்றுக் கட்டியை அகற்றி கொள்ளும் நேரமிது. ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் இருக்கிறது, அறுவை சிகிச்சைக்கான ஆயுதம் - உரையாடல் மூலமாக வெளிப்படும் மென்னுணர்வு, அதன் மூலமாக வெளிப்படுத்தும் கரிசனம், உள்ளார்ந்த அன்பு வறச்சியற்ற ஆரோக்கியமான சமூகம்.

10 comments:

ஓலை said...

மக்களது மனதில் மாற்றம் வரும் வரை electronic சாதனங்களின் உதவியைத் தான் நாட வேண்டியுள்ளது. மாலை நேரத்தில் செல்லும் முற்றிலும் கண்ணாடிகள் மறைக்கப்பட்டுள்ள (tinted) ஒவ்வொரு பஸ்சிலும், பயணிகள் செல்லும் வாகனங்களில் ஒரு panic பட்டன் emergency நேரத்திற்கு ஒவ்வொரு சீட் அருகிலும் இருப்பது மாதிரி வைப்பது கட்டாய மயமாக்கப் படனும். இது கொஞ்சம் உதவும்.

TERON said...

மிக நன்றாக எழுதியுள்ளீர்கள். Thank you.

"இரு வயதிற்கு வந்த அடல்டுகள் தங்களுக்கு பிடித்த மாதிரியான வாழ்க்கையை எப்படியோ தங்களது இச்சையை மட்டுக்குள் வைத்துக் கொள்ளும் விதமாக வாழ்ந்து முடிக்கும் பொழுது எந்த விதத்தில் அது நமது குடும்பத்தை மகனை/மகளை சிதைக்கிறது. அவர்கள் எப்படியோ இருந்து விட்டு போகட்டும், நமக்கென்ன? ஒரு நாட்டின் கலாச்சாரத்தை முன் நிறுத்த உங்கள் வீட்டுப் பிள்ளைகளையும் பலி கொடுக்க தயாராகி விட்டீர்களா, அல்லது பக்குவமற்ற தனிமனித தேடல்களை அவர்களுக்கு தெரிந்த முறையில் வெளிப்படுத்தி வாழ அனுமதி வழங்கி ஒதுங்கி நின்று தனி குடும்ப நிம்மதியை பேணிக் கொள்வீர்களா?"

Loved it.

The Analyst said...

The previous comment was mine. Didn't realise that my husband was still logged in. Sorry.

ஜோதிஜி திருப்பூர் said...

முதலில் இது போன்ற ஒரு கட்டுரையை எழுதியதற்கு என் மனமார்ந்த பாராட்டுரைகள். நிச்சயம் இன்னோரு முறை வந்து படிப்பேன். நன்றி தெகா.

Thekkikattan|தெகா said...

ஓலை நல்ல திட்டத்தைத்தான் தர்றீங்க. க்ளீயர் கண்ணாடி எல்லா சூழ்நிலையிலும் அவசியமெனப் படுகிறது.

Thekkikattan|தெகா said...

அனலிஸ்ட்,

எங்க ஆளக் காணோமேன்னு பார்த்தேன் வந்திட்டீங்க. எதுக்கு நன்றி, எண்ணங்களை பகிர்ந்து கொள்வது நம்மோட கடமை :) .

Thekkikattan|தெகா said...

முண்டாசு,

திரும்பத் திரும்ப வாசிச்சு புதுப் புது பரிமாணங்களில் அடிச்சு விளையாட ஒரு தளம்வோய்... உங்க புத்தக வெளியீடு முடிச்சிட்டு வாங்க மெதுவா உட்கார்ந்து பேசலாம்.

கோமதி அரசு said...

இது குழந்தைகளிடமிருந்துதான் தொடங்க முடியும். ஒரு சமூகமாக இந்த புற்றுக் கட்டியை அகற்றி கொள்ளும் நேரமிது. ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் இருக்கிறது, அறுவை சிகிச்சைக்கான ஆயுதம் - உரையாடல் மூலமாக வெளிப்படும் மென்னுணர்வு, அதன் மூலமாக வெளிப்படுத்தும் கரிசனம், உள்ளார்ந்த அன்பு வறச்சியற்ற ஆரோக்கியமான சமூகம்.//

அருமையான விழிப்புணர்வு கட்டுரை.

வீட்டிலிருந்து தான் எதுவுமே ஆரம்பிக்க வேண்டும்.

தனி மனித ஒழுக்கம் என்பது மிக மிக முக்கியம், இதில் ஆண் பெண் இருவருக்குமே பொருந்தும். வீட்டில்
அன்பு காட்டபடும் பிள்ளைகள் வீட்டில் மட்டும் அல்ல உறவினர்களிடமும், மற்றவர்களிடமும் அன்பாய் பழகும்.
மூர்க்கம், குறைந்து நீங்கள் சொல்வது போல் மென்மையான மனதை உடையவர்களாய் மாறுவார்கள்.
ஆரோக்கியமான சமுதாயம் மலரும் காலம் வரும் என்று நம்புவோம்.
வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள்.

Thekkikattan|தெகா said...

கோமதியம்மா, உங்க வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

முழுசா உள்வாங்கி வாசிச்சிட்டீங்களா, கொஞ்சம் நீண்ட பதிவு. :)

Anonymous said...

செறிவே காய்ந்த குணனு முய்த்தலில் தெளிவே சமநிலை என்று சொல்லுமாப் போல் அறிவை கொண்டு ஆராய்ந்து எழுதிய பண்பிளர் கட்டுரை இது.

ஒழுகிசை பொருண்மையுதார காளையர் கூட்டம் கொஞ்சம் கெளடநெறி வலியத்துண்பத்தை
நினைத்தால் இங்ஙனம் செய்யுமோ ? காந்தம் சமாதி யென்றாங்கில் கடுமுறை விதியெனும் கைத்தாங்கில்
பட்டறை நடத்தி யாரேனும் படிப்பித்தால் சொற்படங் கடக்க இவர் தமக்கு உதவுமோ என்றெறியவில்லை.
கூற்றினுங் குறிப்பினு வாய்ந்த வென்ப வைதருப்பம்மே என்று நினைத்தால் விடிவெள்ளி வின்னில் வேனாக் காலத்தில் தோண்றிட இயலுமா ?


செறிவெனப்படுவது என்ற நிலையில் சிந்திக்குங்கால் நெகிழிசை யின்மை எனப் புலப் படுத்தும் வகையில் .
நீங்கள் வெளித்த சாத்வீக பண்படலாய் பொருள் கூட்டி எழுதியிருப்பது சமத்துவ பொங்கலாய் சர்கக்ரையில் பொதிந்து தந்த கருத்துக் கனிச் சாறே.

பெளதீக பாரபட்சத்தை சமன்படுத்தும் சாட்டுவீக ஸ்ங்கோபத்தின் பிரஸ்தமானகட்டும் உங்கள் எழுத்து.

வாழ்த்துக்களுடன்

சையது உசேன்.

இப்பம் தான் உங்கட மற்ற பழம் பதிவுகளை அவதானிக்க இருக்கிறேன்.

Related Posts with Thumbnails