Sunday, October 30, 2011

மேட்டிமைத்தனம் + போலி அறிவியல் = ஏழரை அறிவு!

அது என்னப்பா ஏழாம் அறிவு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லி படமா வருதேன்னும், ஹாரீஸ் ஜெயராஜ்வோட இசையும் கொஞ்சம் கவனிக்க வைச்சிருந்ததாலும் ஏதோ ஓர் உந்துதல் இந்த படத்தை பார்க்கணும்னு. பார்த்தேன். இரண்டும் கெட்டான் அப்படிங்கிறதுக்கு மிகச் சரியா பொருளைக் கொடுத்த படமிது!

பிறகு எதுக்கு இதைப் பத்தி எழுதி நேரத்தை வீணடிக்கிறன்னு கேட்டீங்கன்னா, கண்டிப்பா பேசப்படணும். ஏன்? ஓரளவிற்கு உயிரியலையே மேஜரா எடுத்து படிச்ச என்னயே பாதி வழியே படம் பார்த்திட்டு இருக்கும் போதே ஒரு தற்குறியா உணர வைச்ச படமாச்சே அதுனாலே மத்தவிங்களுக்கும் மணி அடிச்சு அப்படி ஃபீல் செஞ்சிராதீங்க இதுவும் ஒரு சாதாரண தமிளு படமின்னு சொல்லவாவது உதவட்டுமேன்னு இதை எழுத உட்கார்ந்திருக்கேன்.

இந்த அளவிற்கு பணத்தை கொட்டி எடுக்குறீங்கன்னா, ஒண்ணு முற்று முழுதுமாக உண்மையான வரலாற்று உண்மைகளை (அப்படின்னு ஒண்ணு இருந்தா) உள்ளடக்கி அதை மக்களுக்கு கொண்டு போயி சேர்க்கும் முயற்சியில் படத்தை கொடுங்க, அதே மாதிரி அறிவியல் பேசுறீங்களா அடிப்படை விசயங்களை புரிஞ்சிட்டு அதுக்கு மேலே அதில நிகழ்த்தக் கூடிய விசயங்களா கற்பனையை கலந்து கொடுங்க. இரண்டுமே இல்லாம மொட்டையன் குட்டையில விழுந்த மாதிரி ஏற்கெனவே அடிப்படை அறிவியல் அறிவு இல்லாத ஒரு சமூகத்திற்கு எது போன்ற எண்ண விதைகளை விதைப்பீர்கள்?

இந்த படத்தையெல்லாம் இத்தனை தீவிரமாக எடுத்துக் கொண்டு விமர்சனம் எழுதுவது என்பது கண்ணில்லாத குருடன் யானையைத் தடவின மாதிரிதான் இருந்தாலும், பேசப்படுவதின் மூலமாக அடுத்து இதே வழியில் இறங்கி பணம், புகழ் சம்பாரிக்க எண்ணுபவர்களுக்கு ஒரு இரண்டாவது யோசைனையாக இருக்கட்டும் என்றளவிலாவது பேசப்படுவது அவசியமாகி விடுகிறது.

இந்தப் படத்தில 1600 வருடங்களுக்கும் முன்பாக வாழ்ந்த போதி தர்மர் என்ற தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட ஒரு துறவியைப் பற்றி நமக்கெல்லாம் தெரியவில்லை என்ற அவமான உணர்வுடன், குற்ற உணர்வு கொள்ளச் செய்யும் பீடிகையுடன் தொடங்கும் படம் மலை, காடுகள், ஆறுகள் வழியாக பயணித்து பின்பு மரபணு பாடம் எடுக்க எத்தனிக்கிறது.

எனக்கு அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது. அப்படியே ரெகுலர் சினிமா மசாலாத்தனமாக ஓட்டி முடித்திருந்தால் என்னிடமிருந்து இப்படி ஒரு கட்டுரை வந்திருக்க வேண்டிய அவசியமிருந்திருக்காது. மரபணு அறிவியல் சார்ந்த அடிப்படை அறிவு என்னவென்றால் - பரம்பரை வியாதிகள், முடி, கண்ணின் நிறம், உடற் சார்ந்த ஒற்றுமைகள் மரபணு வழி கடத்தப் பெறலாம் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு பரம்பரை பரம்பரையாக.

அதே நேரத்தில் எனது தாத்தன் தொடர்ந்து பல மணி நேரங்கள் தண்ணீர் அடிக்கும் பம்ப் செட்டில் 1000 குடங்களை அடித்து நிறப்பும் திறன் கொண்டவர், எனது அப்பா பெரிய கால்பந்து வீரர், மஹாத்தமா, அறிவியல் விஞ்ஞானி, பேராசிரியர் போன்ற புற பண்புகள் அதாவது முயன்று பெற்ற திறமைகள் கடத்தப் பெறுவது கிடையாது என்பது கண் கூறு, அனுபவ வழி உண்மை. இதுக்கு பெரிதாக அறிவியல் ஆராய்ச்சிகள் கூட தேவை இல்லை. வீட்டிற்குள் நிகழும் விசயங்களை கொண்டே புரிந்து கொள்ள முடியும்.

இந்த படத்தில் போதி தர்மா ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக முயன்று பெற்ற பண்பான கம்பு சுத்துறது, தொடர்ந்து பல மணி நேரங்கள் சுவற்றை உற்று நோக்குவது, வியாதிகளுக்கு மருத்துவ மூலிகைகளைக் கொண்டு குணப்படுத்துவது போன்ற விசயங்களை இருபது தலைமுறைகளை தாண்டி வந்த படத்தின் கதாநாயகனுக்குள் உறங்கிக் கொண்டிருக்கிறது என்பதாக கூறி ஜல்லி அடிப்பதனை தாங்க முடியவில்லை. இது போன்ற பண்புகள் கடத்தப்படக் கூடியதுதான் என்று புதிதாக எதுவும் ஆராய்சிகளின் மூலம் கண்டறிந்திருக்கிறார்களோ என்று ஒரு நிமிடம் என்னயே அதிர்ச்சியடைய வைத்தது என்றால் மிகையில்லை.

அதனை சப்பை கட்டும் விதமாக கதாநாயகி, இது போன்ற பரம்பரை குணங்கள் தலைமுறையாக கடத்தப்பெறுகிறது என்று வேறு அழுத்தம் திருத்தமாக கூறுவார். அடக் கொடுமையே! ஏற்கெனவே ஊர்க் காடுகளில் டேய் என் முப்பாட்டான், தாத்தா யார் தெரியுமாடா என்று மூடத்தனமாக ஒட்டு பீடிக்கு அருவா தூக்கும் இன்றைய இளைஞர்கள் வாழும் ஒரு சமூகத்திற்கு நவீன அறிவியல் பேசும் ஒரு படத்தில் அதே போன்ற மொண்ணை பேசும் வச்சனம் தேவையா? அது உண்மையா?

இந்த லட்சனத்தில் சமூகத்திற்கு ஏன் தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஏதோ பெரிய பெருமை சேர்க்கும் விசயத்தை உள்ளடக்கி வந்திருக்கிறது என்று கூவிக் கொண்டு டிக்கெட் வித்து தீத்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தனை அறிவையும் உள்ளடக்கிய பல ஞானிகளை பெற்றெடுத்த பூமியில் தான் இன்னமும் ஜாதி என்ற பெயரில் நடந்தேறும் அத்தனை வெட்டுக் குத்துகளும், அநீதிகளும் அதே ஞானிகளின் காலத்திலிருந்து இன்றைய அப்துல் கலாம்கள் வாழும் நாள் வரையிலும் நீட்டித்து நிற்கிறது. அதே அடிப்படை வாத பிரிவினைகளைக் கொண்டே இதோ நேற்று ஆயிரக் கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட ஈழ மக்களுக்கான அநீதியும் அடக்கம். இவைகளே உண்மையாக பேசப்பட வேண்டிய பாடங்கள், படங்கள்?

இது போன்ற பிரச்சினைகளை முகத்திற்கு முகமாக பேசக் கூடிய படங்கள் ஒன்றையும் காணோம். உயிரியல் தொழி நுட்பத்தை பயன்படுத்தி வரப் போகும் நவீன போர் உத்திகளை பற்றி பேசியமையும், எப்படியாக அது போன்ற நோய்கள் மிக விரைவில் பரவி மக்களை சென்றடையும் என்று இந்த படம் காட்டிய வரைக்கும் சரி, அது போலவே தாய் மொழியில் பயின்று, பேசி அறிவியல் ஞானத்தை எட்டுவது என்பதுமாக இரண்டு நேர்மறையான எண்ணங்களை கொண்டு சேர்ப்பது இந்த படத்தில் கவணிக்க வேண்டி விசயங்கள் என்றால் - நேர் எதிராக பல விசயங்கள் மூட/மேட்டிமை மயக்கத்தை தூவி, நிரூவி நிற்கிறது.

1600 வருடங்களுக்கு மேலாக நம் கூடவே நடந்து வரும் ஒரு மாபெரும் விசயம் நமது சமூகத்திற்குள்ளாகவே மக்களை பிளவு படுத்தி, அடிமை சாசனத்தில் வைத்திருக்கும் மக்களுக்கான விடியலான தீர்வு இட ஒதுக்கீட்டு விசயம். அதனை இந்தப் படம் போகும் போக்கில் இந்தியா இழிவான நிலைக்கு போவதற்கான அடிப்படை பிரச்சினைகளான ஊழல், சிபாரிசு மற்றும் இட ஒதுக்கீடு என்ற கேடுகெட்டவைகளில் ஒன்றுடன் இணைத்துச் செல்கிறது. என்னவோ, இந்த இட ஒதுக்கீட்டிற்கு முன்பாக பாலாறும், தேனாறும் இந்த சமூதாயத்தில் ஓடிக் கொண்டிருந்த மாதிரியும் அந்த மக்கள் அனைவரும் அப்பொழுது வேற்று கிரகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்ற ரீதியில் விசயத்தை மிகவும் எளிமை படுத்திச் செல்கிறது.

அதற்கு பின்னான அவசியமும், ஒரு நாடாக, ஒரு இனமாக மேலேழும்ப வேண்டுமாயின் சமதளம் எப்படியாக பரப்பபப் பட வேண்டுமென்ற அடிப்படை தேடல் கூட இல்லாது அப்படி ஒரு மேட்டிமைத் தன எள்ளலுடன் இட ஒதுக்கீட்டிற்கான அவசியத்தை புறம் தள்ளி பேசி நகர்த்திச் செல்கிறார்கள். இது போன்ற மேம்போக்கான எண்ண வெளிப்பாடுகளை கொண்ட விசயம் பேச எதற்கு அறிவியல் துணை தேவைப்படுகிறது? பரம்பரை குணம் இரத்தத்தில் பாய்ந்தோடுகிறது என்பதாகவும் அதனை மீள் பிரதியெடுக்க படத்தில் கதாநாயகனுக்கு ஏற்றிய பச்சை நிற சர்பத்தை தண்டுவடத்தில் ஏற்றி ராஜ ராஜ சோழனையும், போதி தர்மாக்களையும் இன்றைய பரமக்குடி பிரஜைகளாக உருவாக்கவா? நிகழ்கால பிரச்சினைகளை பேசி அதன் பொருட்டான விழிப்புணர்வை பரப்புவதே உண்மையாக ஒரு சமூகமாக பிழைத்து தம்மை தக்க வைத்துக் கொள்வதற்கான வழி முறையாக இருக்க முடியும்.

மாறாக அறிவியலின் துணைகொண்டு நம்பிக்கையின் அடிப்படையில் பேசப்படும் விசயங்களுக்கு உயிர் ஊட்டி மென்மேலும் மூட நம்பிக்கைகள் பல்கிப் பெருக வழியமைப்பது இல்லாத ஊருக்கு வழிகாட்டுவதாகத்தான் அமையும். Thanks for no thanks!


பி.கு: இங்கே ஒரு விஞ்ஞானி இப்படியாக பாஞ்சிருக்கார் (அழுத்தி படிங்க )... அறிவியல் கண்டுபிடிப்புகள் தமிழ் சினிமாவில் நகைப்புக்குள்ளாக படுவது நினைத்து கடுப்பை கிளப்புகிறது.

Sunday, October 09, 2011

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - V


ஐயா ஞானவெட்டியான், ஒட்டுமொத்த தமிழ் இலக்கியத்திற்குமே அருந்தொண்டு ஆற்றிவருகிறார். இந்த வயதிலும் அவரின் ஆர்வமும், உழைப்பும் என்னை பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விடுவதுண்டு. அவருடைய அத்துனை வலைத்தளங்களும் பொக்கிஷங்களாக பாதுகாத்து அந்தந்த வளர்ச்சி நிலைகளுக்கேற்ப பயன் படுத்திக் கொள்ளத்தக்கது எனினும், நான் அடிக்கடி செல்லும் அவரது வலைத்தளம் ஞானவெட்டியானின் ஞான வேள்வி என்ற தளத்திற்குத்தான் இன்றைய நாட்களில்.

அங்கு அன்பர்களின் ஆன்மீகம் சார்ந்த கேள்விகளுக்கு விடை பகன்று வருகிறார்.

18.மனம் என்பது ஆன்மாவா? என்ற கேள்விகளிலிருந்து மனத்தின் வளர்ச்சி நிலைகள் என்று அடுக்கடுக்கான பதிவுகளை அங்கே காணலாம். இருந்தாலும், தமிழ் மணத்தில் இவரின் பதிவுகள் வந்து போகாமல் நின்று போனது நமக்கெல்லாம் ஒரு இழப்பே!

அறிவியலும் ஆன்மீகமும் என்ற வலைத்தளத்தில் செந்தில் குமரன் என்பவர் முன்பொரு காலத்தில் விடாது பதிவுகளை கொடுத்துக் கொண்டிருந்தார். அங்கே மிகவும் எளிய நடையில் எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணத்தில் இயற்பியல் சார்ந்த ப்ரபஞ்ச கோட்பாடுகளையும், அதன்பால் ஏற்படும் ஆச்சர்யத்தை மறக்காமல் ஆன்மீகக் கேள்விகளுனூடையே

வைத்து கேள்விகளையும் தொடுக்கும் விதம் ஒரே கல்லிள் இரண்டு மாங்காய்கள் அடிப்பதனைப் போன்றே வாசகர்களுக்கு அமைந்திருக்கிறது. அதற்கு உதாரணமாக அறிவியலும் ஆன்மீகமும் - 3 அனுபவித்துப் பாருங்கள். 

பரஞ்சோதி மற்றும் விழியன் நடத்தி வந்த சிறுவர் பூங்காவும் குழந்தைகளுக்கான

சிறு சிறு குட்டிக் கதைகளும், பாப்பாப் பாடல்களையும் வழங்கி வந்தது. அதுவும் ஒரு நேரத்திற்குப் பிறகு நின்று போனது. அதனை எழுதியவர்கள் இன்னமும் இங்குதான் உலாவிக் கொண்டிருக்க வேண்டுமென்று எனக்குப் பல்லி சொன்னாலும் ஏன் அப்படி எழுதுவதை நிறுத்திக் கொண்டார்கள் என்று வினாவ வேண்டும் போல் உள்ளது.

திடீரென்று தஞ்சாவூரான் என்றழைத்துக் கொண்டு தஞ்சாவூருக்கே உரித்தான குசும்புடன் ஒருவர் வந்தாரய்யா. பதிவுக்குப் பதிவு நகைச்சுவையும், நக்கலும் மோலோங்கியிருந்தாலும் மறக்காமல் அந்த நகைச்சுவைக்குப் பின்னால் ஒளித்து வைத்திருக்கும் சிந்தனை நம்மை சிரிக்க வைத்து பிறகு யோசிக்க வைக்கத் தவறுவதில்லை. அமெரிக்காவுக்கு இந்தியா வச்ச ஆப்பு! சென்று படித்து வந்தாலே தெரியும் நான் எது போன்றவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேனென்று.

அண்மையில் தமிழ் மணத்துப் பக்கம் வந்து கலக்கிக் கொண்டிருக்கும் சுரேகா! இவரிடம் கதம்பமாக எல்லாத் திறமைகளும் ஒளிந்திருக்கிறது என்பதற்கினங்க வித விதமான பதிவுகளை காணப் பெறலாம் அவர் தளத்தில். சாமி காட்டிய தங்கசாமி! போன்ற வித்தியாசமான மனிதர்களை தின வாழ்க்கையோட்டமென்ற குப்பையிலிருந்து தனித்தெடுத்து நமக்கு அறிமுகப் படுத்துவதாக இருக்கட்டும், பஞ்சு மெத்தையில் படுத்தும் தூக்கம் பெற தவிக்கும் கூட்டத்திற்கிடையே ஈரோட்டுப் பெண்கள் என்ற பதிவில் இப்படியும் சக மனித ஜீவன்கள் இருக்கிறதென்று நம் கண் முன்னே நிறுத்துவதாகட்டும், நல்ல நல்ல வேளைகள் செய்து வருகிறார்.

Friday, October 07, 2011

கால நிவாரணி...


எல்லாமே கடந்துதான்
வந்துவிடுகிறோம்
நேற்றைய கிளிமஞ்சாரோ
இன்றைய இளைப்பாறலுக்கான
சிறுகுன்றாகிப் போனது
எவரெஸ்ட் ஏறிய பொழுதில்...

மறக்கவே முடியாத
ஏதோவொரு பெருஞ்சுமை
இன்றைய இலவம்பஞ்சுப் பொதி.
மனப் பல்லிடிக்கில் அகப்பட்டு
என்றேனும்
சிரிப்பூனூடே எட்டித் துப்பப்படுகிறது...

சுவாசமென அள்ளி
நெஞ்சுருக அணைத்ததொன்று
மறுநாள்
காத்திராமல் ஏதோ ஒன்றால்
ஹீமோகுளோபினுள் கரைக்கப்பெற்று
பிராணவாயுவாய் மாறி விடுகிறது

சர்வரோக நிவாரணியாய்
காலம் மட்டும்
ஆற்றுதல் படுத்திக் கொண்டே
மூட்டு வலியை
ஆழப் பதிக்கிறது!
In Buzz...

Wednesday, October 05, 2011

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - IV


எனது கடந்த பதிவில் சுய முன்னேற்றக் கட்டுரைகளும் இடம் பெறுகிறதென்று பிதற்றல்கள் என்ற வலைத்தளத்தைப் பற்றி சுட்டிக் காட்டியிருந்தேன். அதே லைனில் என்.கணேசன் என்பவரும் விட்டு விலாசிக் கொண்டுள்ளார். அதே பெயரின் தளத்தின் கீழ், அங்கே அவரே எழுதிய சிறுகதைகள், கவிதைகள், சுய முன்னேற்றம், ஆன்மிகம் மற்றும் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள் இடம் பெற்றிருக்கிறது. அண்மையில் நான் அங்கு வாசித்த படகு புகட்டிய பாடம் என்ற சுய முன்னேற்றக் கதையில் கோபத்தை கையாள்வது எப்படி என்பதனை மிக அழகாக சில உதாரணங்களைக் கொண்டு விளக்கியிருந்தது பிடித்திருந்தது.

அனாதை என்ற பெயரில் ஒருவர் இங்கு உண்மையிலேயே அனாதையாக நிறைய கிடைக்கற்கரிய உலகப் திரைபடங்களைப் பற்றி எழுதிவருகிறார். இவர் தான் பார்த்த அதாவது இன்னா படம்தான் இன்னா மொழிதான் என்றில்லை போல அத்தனை இன, மொழி எல்லைகளையும் தாண்டி படம் பார்த்து அவைகளுக்கு விமர்சனம் எழுதும் திறமை அசத்தலாக உள்ளது. இது போன்ற மக்களும் இங்கு இது போன்ற ரசனையுடன் இருப்பது நமக்குப் பெருமைதானே! இவர் Cronicas / காலக்குறிப்புகள் என்ற தலைப்பின் கீழ் எப்படித் தனக்கு இது போன்ற ஆர்வம் கிளம்பியதென்ற நினைவுகூர்தலுடன் நிறைய விசயங்களை அங்கே பகிர்ந்துர்க்கிறார். சினிமா பிரியர்களுக்கு அத் தளம் ஒரு தங்கச் சுரங்கமாக அமையும்.

K.P. குப்புசாமி என்ற ஓய்வுற்ற காவலதிகாரி ஒருவர் மூலிகை வளம் பற்றி எழுதி வருகிறார். அங்கே அது போன்ற தாவரங்களின் புகைப்படங்கள் அவைகளின் குடும்ப வகை, தாவரப் பெயர் மற்றும் அதன் பயன்பாடுகள் என்று அவரின் பக்கங்கள் மூலிகைச் செடிகள் மற்றும் அவைகள் எவ்வாறு பல்வேறு வியாதிகளுகளை குணப்படுத்தலாம் என்பதனை பட்டியிலிட்டுக் நிறைத்திருக்கிறார். சும்மா பார்ப்பதற்கே கண்களுக்கு

பச்சை நிற செடிகளின் படங்களையும் டெம்ப்ளேட்டையும் கொண்டு குளிர்சியூட்டுகிறார்.

சிங்கநல்லூர் சுகா, இவரை நான் விடுவதே இல்லை. தான் பார்த்து வளர்ந்த விசயங்கள் தன்னைச் சுற்றிலும் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் அந் நேரத்தில் ஒரு அனிச்சையாகத்தான் நம் மனத்தில் ஏறி சிம்மாசனமுற்றிருக்கும். ஆனால், ஊரைப் பிரிந்திருந்து விட்டு அவைகளை மீண்டும் அனுபவிக்கும் பொழுது அவைகள் ஒரு புது பரிமாணம் காட்டிப் போகத் தவறுவதில்லை என்பதற்கு இவரின் பல பதிவுகள் சாட்சி. அப்படி ஒரு பதிவாக இவரின் கோடை காலத்து மீண்டும் மழை அமைந்திருக்கும்.

பிறகு "பேருந்து ஜன்னலோர இருக்கை பிரயாணம், பயனங்களும் பாடங்களும்" போன்ற பதிவுகளிலும் ஏனைய பிற இடுகைகளிலிலும் நிறைய அன்றாடம் நாம் இயந்திரத் தனமாக கண்ணுரும் காட்சிகளுக்கு, சுகா ஒரு புது பரிமாணத்தைக் கொடுத்து நமக்கும் அவர் உள்வாங்கி இருக்கும் வீட்சத்திற்கு நம்மையும் இட்டுச் செல்ல முயற்சித்திருப்பார். அத் தளத்திலேயே இவரது பென்சில் ஓவியங்களும் காணக் கிடைக்கும்.

Related Posts with Thumbnails