Sunday, July 28, 2013

வானமும் என்னுடைய வாழ்க்கையும்...

மீண்டும் ஒரு அழகானதொரு நள்ளிரவு! இன்று எனக்கு நானே பேசிக்கொண்ட கோயப்புத்தூர் காலம்பாளைய நாள் 1996ஆம் வருடம் போன்றதொரு இரவு. காரின் ஹூடில் மல்லாந்து படுத்தபடி இரவு வானத்தை ஒரு ஏகாந்த நிலையில் தரிசித்தபடி பல கேள்விகளை எழுப்பிக் கொண்டே மணி போவது தெரியாமல் அருந்திக் கொண்டிருந்தேன். எனக்கும் இரவு வானத்திற்குமான தொடர்பு சொற்களில் சுருக்கவதாக இல்லை.

எனக்குத் தேவையான அத்தனை உள்ளார்ந்த சக்தியை எப்பொழுதும் ஒவ்வொரு தருணத்திலும் அங்கிருந்தே தரவிறக்கம் செய்து வந்ததாக எனது நினைவு. இந்தியாவிலிருந்து என்னுடைய இருபத்து ஆறாவது வயதில் இது போன்றதொரு சம்பாஷணைக்கு பிறகே அமெரிக்காவிற்கான பயணத்தை நிகழ்த்தி இருக்கிறேன். இடையில் எத்தனையோ மயிர் கூச்சரியும் நிகழ்வுகள் நடந்தேறியிருக்கின்றன. அது எனக்கும் அந்த நிகழ்வுகளுக்குமான அதிர்வுகளை பன்மடங்கு மற்ற மனிதப் பார்வைகளிலிருந்து எகிறி காமித்தாலும் எனக்கொன்னவோ அவை தேவையானதொரு பாடமகவே அமைந்திருக்கிறதாகப் படுகிறது.

அன்று கோவையில் நிகழ்ந்த அந்த இரவு வானத்தினூடான சம்பாஷணை ஒரு பைத்தியக்காரனின் புலம்பலாக யாராவது ஒட்டுக்கேட்டிருந்தால் நகைத்திருக்கக் கூடும். ஆனால், உள்ளார்த்தமாக அந்த பெளர்ணமி இரவு எனக்கு கொடுத்தது என்னுடைய பதினெழு வருட அமெரிக்கப் பயணத்திற்கு போட்ட உரமாக அமைந்தது.

இன்று மீண்டும் நான் அதே நிலையில் இந்தியா திரும்பும் ஒரு சந்திப்பில் நிற்கிறேன். அதே உத்தரவு கேட்டு. அதே பைத்தியக்காரத்தனம் கொஞ்சமும் குறைந்த பாடில்லை. என்னவோ எனக்கு உத்தரவு கிடைத்த மாதிரியான உணர்வுதான். இரவு வானத்தின் பின்னணியில் மரத்தைப் பார்த்தேன், என்னுடைய வீட்டைப் பார்த்தேன்- செய்வது சரிதானா என்று கேள்வியை முன்வைத்து நட்சத்திரங்களை உற்று நோக்கியபடிபடியே- என்னுடைய மற்றொரு குரல்- மச்சான் எல்லாம் நல்லாதான் நடக்கும். எல்லாமே நல்லபடியாகத்தான் நடந்தேறிருக்கிறது; keep it going என்று உள்ளிருந்து ஒரு குரல். அவ்வளவுதான் எனக்கு வேணும்.

என்னைச் சுற்றியும் எப்பொழுதும் எனக்காக மனம் கசிந்து நல்லதே நடக்கும் என்று உருகும் நல்ல நண்பர்களும்/உறவுகளும் உண்டு. அதனைத் தாண்டிய தீர்க்கமாக ஆற்றோடு மிதக்கும் அபரிதமான மன நிலையும் என்னிடமுண்டு. இத்துடன் ஒருமித்து ஒத்திசைவுடன் அடுத்த கட்ட நகர்வை நிகழ்த்துகிறேன்.

May this universe bless me all along the way! Good luck to me!! போய் வருகிறேன் அமெரிக்கா!! :)

Monday, July 22, 2013

வாத மூட்டழற்சி ஓரு மரபணுப் பிறழ்வு - Rheumatoid Arthritis

என்னோட ப்ளஸ்டூ நாட்கள்லே எங்களுக்கு ஒரு நண்பன் இருந்தான். அவனுடைய வீடு என் வீட்டிற்கு போகும் வழியில் சாலையை பார்த்தபடி அமர்ந்திருக்கும். என் வீட்டிலிருந்து நாங்கள் சந்தித்து மாலைகளைக் கொல்லும் இடத்திற்கு மிகச் சரியாக 750 நடையடிகள் பிடிக்கிறதென்றால் அவனுடைய வீடு சரியாக 550வது அடியில் அமைந்திருக்கும்.

மாதத்தின் பல நாட்கள்ல நல்லாத்தான் இருப்பான். திடீரென்று படுத்தபடி எழுந்து அமரவே ரொம்பச் சிரமப்படுவதாகவும், அப்படியே எழுந்து நடந்து திரிந்தாலும் குன்றியபடியோ அல்லது சிரமத்திற்கு இடையேயோ நடந்து திரிவதாகவும் காணக் கிடைப்பான். ஒரு முறை அவனை அருகே அமர்த்தி வைத்து என்ன பிரச்சினை என்று விசாரித்தேன்.

அப்பொழுது கூறினான் எலும்புகளின் சந்திப்புகளில் உபரியாக கால்சியம் படிந்து இணைப்புகளை இயக்கவே முடியாதபடிக்கு வலி உயிர்கொள்வதாக இருக்கிறது என்றான். அதிலும் குளிர்காலங்களிலும், காலை வேலைகளிலும் இந்த பிரச்சினை அதிகமாக இருப்பதாக கூறினான். அன்று அதன் தீவிரம் உணர்ந்து கொள்ள முடிவதாக இல்லை.

இன்று ஒரு 26 வயது மதிக்கத்தக்க பெண்ணை சந்தித்தேன். அவளுடைய பெயர் லோலா ஜேன் என்று அறிமுகப் படுத்திக் கொண்டாள். பேச்சு முதலில் புகை பிடிப்பதனைப் பற்றியதாக அமைந்தது. அப்படியே நகர்ந்து கஞ்சா புகைத்தால் தான் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளின் அளவையும், கீமோதெரபியின் தேவையையும் குறைத்துக் கொள்ள முடியும் என்று தனது உறவினர், கலிஃபோர்னியாவில் இருந்து கூறியதாக கூறினாள்.

சட்டென்று எனக்கு உள்ளே மணியடித்தது. இத்தனை சிறு வயது, ஆரோக்கியமாக காட்சியளிக்கும் ஒருத்திக்கு எதற்கு கீமோதெரபி தேவைப்படுகிறது. சற்றே தலையை சாய்த்து எதற்காக கீமோ எடுத்துக் கொள்கிறாய் என்று அன்னியத்தை உடைத்தேன்.

அவ்வளவுதான் அடுத்த இருபது நிமிடத்திற்கு மேல் எனக்கு ரூமாட்டாய்ட் ஆர்த்தரைட்டிஸ் (Rheumatoid Arthritis) பற்றி அத்தனை விபரங்களையும் அவளுடைய சொந்த அனுபவத்தின் ஊடாக வழங்கி சில இடங்களில் அவளுடைய வலியையும் எனக்குள் நகர்த்தி மீட்டெடுத்துக் கொண்டாள்.

இந்த வகை ஆர்த்தரைட்டிஸ் கை/கால் விரல்களின் இணைப்புகளில் சிறு வீக்கமாக ஆரம்பிக்கிறது. முதலில் வலியுடன் ஆரம்பித்து எலும்பு கரைவதும், பின்பு சிறுகச் சிறுக விரல்களை வளைக்கிறது. இது ஒரு மரபணு சார்ந்த வியாதி. தன்னுடை உடம்பில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியே தவறாக நம்முடைய உடல் திசுக்களைத் தாக்குவது autoimmune disorder.

இந்த வியாதி எலும்பு இணைப்புகளில் மட்டும் பிரச்சினை கொடுப்பதோடு விடுவதில்லை. தொடர்ந்த உடல் சோர்வும் அவ்வவப்பொழுது உடல் காய்ச்சல் வழங்குவதுமாக தொடர்கிறது. ஒரு சூழலில் மொத்தமாக முடக்கி சக்கர நாற்காலியில் அமர வைத்து விடும் நிலைக்கு இட்டுச் செல்வதாக தெரிகிறது.

என்னுடன் பேசிக்கொண்டிருந்த லோலாவின் வீட்டில் நான்கு தலைமுறையாக இது பெண் குழந்தைகளுக்கே அதிகமாக மரபணுவின் மூலமாக கடத்தப் பெற்றிருப்பதாக கூறினாள். இது வரையிலும் இந்த வியாதியை முற்றிலும் குணப்படுத்த மருத்துவத்தில் எந்த தீர்வையும் எட்ட வில்லையாம். மேலாண்மை செய்து வைத்துக் கொள்வது ஒன்றே வழியாம்.

இவர்களுடைய குடும்பத்தில் பல தலைமுறைகளாக இந்த வியாதியை அனுபவித்து, அந்த அனுபவத்தின் அடிப்படையில் ஒன்றை கவனித்தாகக் கூறினாள். அது கர்ப்பமுற்றிருக்கும் காலத்தில் இந்த வியாதிக்கான எந்த அறிகுறியும், வலியும் அண்டுவதில்லை என்பதாக. கொள்ளுப்பாட்டி ஒன்று இதனை அறிந்து தொடர்ச்சியாக பதினொரு வருடங்கள் அடுத்தடுத்து குழந்தைகளை பெற்றிருக்கிறார்.

இல்லையென்றால் சற்கர நாற்காலியில் அமர நேரிடும் என்ற பயத்தின் அடிப்படையில். அது போலவே இனிமேல் குழந்தைகள் பெற்றுக் கொள்ள முடியாது என்ற நிலையில் சற்கர நாற்காலியில் அமரும் நிலையும் ஏற்பட்டதாம்.

லோலாவின் வலியின் அனுபவம் பற்றி சொல்லும் பொழுது கேட்ட எனக்கே மயிற் கூச்சரிப்பு ஏற்பட்டது. பாதங்களை வைத்து ஒரு அடிக்கு இன்னொரு அடி எடுத்து வைப்போம் என்ற எண்ணமே கிலியை ஏற்படுத்துமாம்; ஏனெனில், ஒவ்வொரு அடியும் ஏதோ உடைந்த கண்ணாடி சிதில்களில் எடுத்து வைப்பதனைப் போன்ற ஷார்ப்பான வலியை கொடுப்பதாக அமையும் என்று கூறினாள்.

ஏன் இங்கு லோலாவைப் பற்றி குறிப்பாக பேசி இந்த வியாதியைப் பற்றி பேச வேண்டும் என்று தோணலாம்.  ஏன்னா, இந்த வியாதி பொதுவாக நாற்பது வயதிலிருந்து அறுபது வயதுடையவர்களிக்கிடையே எட்டிப்பார்ப்பதாக தெரிகிறது. ஆனால், லோலாவிற்கோ 26ஏ வயதுதான், பார்க்க ரொம்ப ஆரோக்கியமான இளம் பெண். விரல்களை நீட்டி இப்பொழுதே இந்த வியாதியின் அறிகுறியாக சிறிதே நுனிப்பகுதி வளைவதை காண்பித்தாள். கண்களில்தான் எத்தனை அயர்ச்சி. இது ஏன் எனக்கு என்பதாக.

ஒரு பெண்ணின் முட்டையும், விந்தணுவும் இணைந்த மறு நொடியிலிருந்துதான் எத்தனை விதமான மரபணு சமிக்கைகள் இரண்டு பெற்றோர்களின் குணாதிசியங்களை உள்ளடக்கி பரிமாறி, மறுபதிப்பு நிகழ்ந்து அதுவும் சரியான இடத்தில் வைக்கப்பெற்று, சரியான காலத்தில் ஒவ்வொரு உடல் சார்ந்த குணாதிசிய பண்புகள் வெளிக்கிளம்ப காரணங்களாகின்றன.

இதனில் எங்காவது ஒரிடத்தில் ஒரு குளறுபடியென்றாலும் வாழ்க்கை முழுதுக்குமே அந்த உயிரினத்தை அரைகுறையாகவோ அல்லது முழுமையாகவோ முடக்கி விடுகிறது. இத்தனை நமது சக்திக்கும் உட்படாத விசயங்களை எல்லாம் ஏதோ இயற்கையின் ஒரு இயங்கு விதிக்கு உட்பட்டு பெறப்பட்ட இந்த உடம்பையும், பரிணாமம் வழங்கிய களிமண் மண்டையும் வைத்துக் கொண்டு நான் அவனை விட செத்த செவப்பா இருக்கேன், காசு இருக்கு என்று ஜல்லி அடித்துக் கொண்டு ஒருவன் உயிரை இன்னொருவன் எடுத்துக் கொண்டிருப்பதை எந்த மரபணு வியாதி இயக்குகிறது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

சுயநலமே உயர்வு என்பதாகப் படுகிறது! அதுவும் மரபணுவில் பொதிக்கப்பட்ட ஒரு விசயம்தானே!!

Thursday, July 18, 2013

கற்சிலையொன்று உயிரெழும்பினால்...

ஒண்ணரை மாதமாகவே பூமி சற்றே சுழன்று தன்னுடைய பூமத்திய ரேகையை இடமாற்றிக் கொண்டதோ என்று நம்பும் அளவிற்கு சியாட்டிலில் கொட்டும் மழை போன்றும், நம்மூர் பருவமழை காலங்களையொட்டியே விட்டும் விடாமல் பெய்யும் மழை போன்றும் இங்கே மழை பெய்து வருகிறது.

நேற்று ஒரே பேச்சு. நான் வசிக்கும் இடத்திலிருந்து ஒரு மூணரை மைல் அளவிலே உள்ள பழைய நகரம் கான்யர்ஸில் டொர்னாடோ தரை தொட்டு இரயில் தண்டாவாளத்தையும், நிறைய மரங்களையும், கார்களையும் பொரட்டி போட்டுவிட்டு சென்று விட்டதாக.

சரி என்ன சங்கதி என்று தெரிந்து வருவோமென்று என்னுடைய காலச் சுருட்டியுடன் அந்த பக்கமா நகர்ந்தேன். அங்கே ஒரு பழைய காலத்து டச்சுடன் சிலையொன்று அமர்ந்திருப்பதை எப்போதுமே வைத்தக் கண் எடுக்காமல் அதனைச் சுற்றி காரைச் செலுத்தி கடந்து செல்வதுண்டு.

இன்று கீழே இறங்கி என்னதான் கிடைக்கிதுன்னு நெருங்கினேன். என்னால் நிஜம்மாக அந்த இடத்தை விட்டு நகர மனமேயற்று நாற்பத்தம்பது நிமிடம் சுற்றி வருவது மாதிரி ஆகிவிட்டது. அத்தனை வசீகரம் அந்த முகத்தில்! உச்சி வெயில் வேறு. வண்ணம் குழைத்து அப்பிக் கொள்ள முடியாவிட்டாலும். கிடைத்த வரை சுருட்டிக் கொண்டேன்.

அந்த கருஞ்சிலையின் முகத்தில் உள்ள வசீகரம் என் வீட்டு தோட்டத்தில் மெள்ளமே தவழ்ந்தெழும் ஆங்ரி பேர்டிடமும் ஓட்டி அந்த வசீகரச் சிலைக்கு உயிரோட்டியதைப் போன்ற பிரமை தட்டியதால்... இன்று பக்கம் பக்கமாக வைத்துப் பார்க்கத் தோன்றியது.  :)







இவள்தானோ அவள்!!



Related Posts with Thumbnails