Wednesday, January 27, 2010

பெரிய கோவில் 1024வது சதயவிழா : Night Photographs

கடந்த வருடம் அக்டோபர் மாதம் 28ம் தேதி, தஞ்சாவூர் பெரிய கோவிலில் இராசராசசோழனுக்கு 1024வது சதய விழா நடந்தது. அந்த நேரத்தில் அந்தப் பக்கமாக திரிந்து கொண்டிருந்த நான், எனது மாலை பொழுதை அங்கு கழித்தேன். நிறைய ஒளி அலங்காரங்களுடன் ஜொலித்துக் கொண்டிருந்த கோவில் வலாகத்தையும், கோவில் கோபுரத்தையும் எனது கேமராவிற்குள் லபக்கியதை உங்களுக்காகவும் இங்கே...

வாசல் தட்டி...




வெளிப்புற அழகு, இதே படத்தை மறுநாள் தினமணியிலும் பயன் படுத்திக் கொண்டதாக அறிந்தேன்...




ஜொலிக்கும் நுழைவு வாயில்...




முதன்மை கோபுரம் கொஞ்சம் எனது கேமரா சொதப்புலுடன்...




கோபுரத்திற்கு அருகில் படுத்து உருண்டு கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில், நிலாவையும் பிடித்து பொட்டும் வைத்து...




அதே கோணத்தில் கோபுரத்தின் மற்றுமொரு பக்கமிருந்து...





பெரிய கோவிலுக்குள்ளர இருந்திட்டு நந்தியை விட்டுட்டா எப்படி...




மிதியடிகளை மீட்டெடுக்கும் இடத்தில் ஸ்டாலிலிருந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்...


Tuesday, January 26, 2010

மேலும் புதிய நிலாப் புகைப்படங்கள்: New Moon Pictures

ஒரு டிசம்பர் மாதத்தில் ...



பகல் நேர வளர்பிறை நிலையில் அதே டிசம்பர் மாதத்தில்...




இது இன்று இரவு இப்படியாக எனது தலைக்கு மேலே (ஜனவரி 26, 2010)...

Friday, January 22, 2010

உறவறியும் மெக்சிகன்


குப்பைகளை வைத்தடைக்கும்
வாகனப் பின்பகுதியில்
அடுக்கி வைக்கப்பட்ட நிலையில்
மனித மூட்டைகள்!
பாதாளச் சாக்கடை பயணிப்பு
பாதங்களை கொப்பளிக்க
பாலைவனச் சுடு மணல்
வனவிலங்குகளை சுடுவதாக
போகும் போக்கில் சுருளச்செய்யும்
தொப்பி வைத்த மனிதர்
இப்படியாக பயணம் நீண்டு, வளைந்து
பண்ணிய புண்ணிய பணத்தில்
தன்தொடக்கப்
புள்ளியில் கொழித்து தள்ளாடும்
தன் உறவறிந்திருக்கவில்லை!



P.S: Photo Courtesy - NY Times.

Tuesday, January 12, 2010

காதலர்களா? தியாகிகளா?

சில சமூகம் சார்ந்த பொது நிகழ்ச்சிகளை பார்க்கவோ, படிக்கவோ நேர்ந்தால் அதனையொட்டி மனத்தினுள் எழும் எண்ணங்களுக்கு ஒரு வாய்ச் சல்லடை போட்டு அவ்வளவு எளிதில் பூட்டி வைத்து விட முடிவதில்லை. வெளிப் புறத்தில் பூட்டியே வைத்திருந்தாலும், மனசின் ஓரத்தில் எங்கோ சுவர்க்கோழியின் மண்டையை குடையும் ரீங்காரமாக ஆராவாரித்துக் கொண்டே மண்டை கனத்துத்தான் விடுகிறது.

அப்படியாக நேற்று இரவு ஒரு நிகழ்ச்சிக் காணக் கிடைத்தது. அந்த நிகழ்ச்சி நம் சமூகத்தினூடான காதல் மணங்கள்(!?) சந்திக்கும் கூறுகளை சம்பந்தப்பட்டவர்களைக் கொண்டே பேச விட்டு ட்டி.வி பெட்டிக்கு முன்னால் அமர்ந்து பார்க்கும் நம்மை போன்றவர்களுக்கு இன்னொரு மணி நேரக் கடத்தலுக்கு தேவையான மிளகாய், காரம், உப்பு எல்லாம் போட்டு கொடுத்ததாக எடுத்துக் கொண்டு பார்த்தும் முடித்திருப்போம்.

இது போன்ற நிகழ்ச்சிகள் எது போன்ற சிந்தனைகளை பார்ப்பவரிடத்தில் கிளர்த்தி விடுகிறது? உண்மையிலேயே நேர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்தி, மூர்க்கமாக ஓடித் திரியும் மனத்திற்கு ஒரு மூக்கணாங்கயிறு போட்டு விட்டால் அந்த ஒரு மணி நேர காணொளி எத்தனை ஆழத்திற்கு சென்று ஒரு மனிதனின் கோணலான பார்வையை சற்றே தளர்த்தி, மிச்சமிருக்கும் வாழ்க்கைக்கும் பயன் உள்ளதாய் அமைத்து விடக்கூடும்.

சரி, அப்படி என்னதான் பெரிசா அந்த நிகழ்ச்சி பேசினிச்சுன்னு கேக்குறீங்களா. அது ஒண்ணுமில்ல காதல் மணங்களைப் பற்றியும், அது பல விதமான சமூக இறுக்கங்களால் சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றியும் பேசியது.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு வாலண்டைன்ஸ் டே சமயத்தின் போது, நான் எழுதிய "ஏன் நடிக்கணும்" என்ற கட்டுரைக்கு ஒரு இறுதி பாகமாகக் கூட அமையட்டுமேன்னு, எனக்குள் எழுந்த சில கேள்விகளையும் இணைச்சு ஒரு கட்டுரையா வைச்சிடுறேன். அந்தப் பதிவில் எது போன்ற காரணிகள் எல்லாம் நம் சமூகத்தில் காதல் மணங்களை நிர்ணயிக்கின்றன, வளர்ப்பும், தனி மனித எண்ண ஓட்டம், காதலிப்பதற்கான அடிப்படைத் தகுதிகள் என்னன்ன என்ற ரீதியில் பேசியிருக்கும்.

நம் சமூகத்தின் இறுக்கம், நேசித்து, ஒரு மனிதரை நன்கு புரிந்து வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ளும் ஒரு நிலையை ஒரு தீண்டத் தகாத செயலாக, வெட்கி தலை குனியும் ஒரு சம்பவமாக எடுத்துக் கொள்ளும் துரதிருஷ்ட நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறது. அதனுடைய முரண் நகை என்னவென்றால் அது போன்ற உறவு தளத்தின் அடிப்படையில் தொடங்க வேண்டிய விசயம் தான் திருமணங்கள். ஆனால், இதற்கு குறுக்காக நிற்பது அடிப்படையில் பல சமூக கட்டமைப்புகளே என்றாலும், அவைகளையே தலையில் பாரமாக கருதிக் கொண்டு தூக்கிச் சுமந்தலைவதற்கு யார் காரணம். தனி மனித மனங்களேன்றி வேறு யார்? ஏன் இது போன்ற ஸ்டாம்புகள், வேறு எது போன்ற சுயம்பு சிந்தனைகளுமே அற்ற நிலையில், யாரோ போட்ட சுகமான சாலையிலேயே பயணிக்க வேண்டுமென்ற நிர்பந்தத்தில் இட்டு வைத்ததாக எடுத்துக் கொள்கிறது? இங்கும், தனி மனித கேள்விகளற்ற, சுய வளர்ச்சிக்கான உழைப்பற்ற, ரெடி மேட் வாழ்க்கை தேர்ந்தெடுப்பே காரணமேயன்றி வேறு யாரையும் குற்றம் சொல்வதற்கில்லை.

அப்படியாக தன்னைச் சுற்றி அமைத்துக் கொண்ட சுகமான ஒரு உலகத்தில் மூழ்கி கிறங்கிப் போய், உப்பிக் கிடக்கும் நிலையில், ஒரு சில சேலஞ்ச்களை வாழ்க்கை தன் முன்னே விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வைத்து திணிக்கும் பட்சத்தில், மாற்றுச் சிந்தனைக்கான இயக்கத்தை தொடங்கி வைத்து விடுகிறது (அது தனது 60 வயதிலே கூட நடக்கலாம்), அது வரையிலும் தன்னுள் நடந்த அத்தனை சுய விசாரிப்புகளும் குணாதிசயமான தன் நடைமுறை எண்ணங்களாக பீறிட்டு வெளிக் கிளம்புகின்றன.

அந்த நிலையிலும் கூட ஒரு தனி மனித நிலையில் தனது மகனுக்கு/ளுக்கு பிடித்ததெல்லாம் கேட்டு, பார்த்து பார்த்து செய்து வைத்தவர்கள், அதே பிள்ளைகள் நன்கு விபரமறிந்து தனக்கென முடிவெடுக்கும் ஒரு திறனும் கிட்டிய பிறகும், தனக்கென பிடித்த ஒருவரை முன் கொண்டு வந்து நிறுத்தும் பொழுது, சமூக இறுக்கங்களுக்கென தன்னை பலிகடாய் ஆக்கி தான் நேசித்தவர்களையே வெறுத்து ஒதுக்கும் நிலைக்குத் தள்ளப்பட விடுவது எத்தனை முதிர்ச்சியற்ற ஒரு வளர்ச்சி :). இங்கே என்ன வசதியாக மறந்து போய் விடுகிறோமென்றால், குட்டிக் கரணம் அடித்தாவது தனது குடும்பத்தை தூக்கி நிறுத்துவதற்காக தனது வாழ் நாளை செலவு செய்து, எந்த விதமான தன் சார்ந்த குலத்தின் பங்களிப்புமில்லாமல் வாழ்ந்த ஒருவர், பின்பொரு நாளில் தன் சார்பற்ற அந்தக் குலத்திற்காக தன் நேசித்த பிள்ளைகளையே வஞ்சிப்பதனைத்தான். அது ஒரு நிலை என்றால்....

இத்தனை தனி மனித இறுக்கம் சார்ந்த சமூக தேக்க நிலையைத் தாண்டி மண முடித்துக் கொள்ளும் நபர்கள், அதே சமூக தேக்க நிலையில் தன்னை உட்படுத்திக் கொள்ள நேர்வது, எதனையெல்லாம் எதிர்த்து நின்று செய்தார்களோ அப்படியாக செய்ததே தவறு என்கிற ரீதியில் சரணாகதி ஆகிப் போவதுதான் கொடுமையின் உச்சம். அந்த நிகழ்ச்சியில், பலர் மதம் விட்டு, சாதி விட்டு மணம் புரிந்து கொண்டவர்கள் ஏதோ ஒரு புள்ளியில் ஒரு பக்கமாக கணவனின்/மனைவின் பக்கம் சார்ந்த மதத்திற்கோ அல்லது சாதியினையோ சார்ந்து, தன் உண்மையான இயல்பு இழந்து, பெயரிழந்து யாருக்காகவோ வாழ்வதனைப் போன்ற ஒரு 'தியாக' நிலையில் வாழ்வதாக புரெஜெக்ட் பண்ணப்பட்டது நெருடலாக இருந்தது.

அப்படியாக தியாக நிலையில் வாழ்வதில் அதனைப் பெற்றுக் கொள்பவருக்கு வேண்டுமானால் பயனளிப்பதாக இருக்குமே ஒழிய கண்டிப்பாக, ஒரு காலமும் அது எதிர் தரப்பினருக்கு நாம் வழங்கிய நியாயமாக போய்விடவே முடியாது. பரஸ்பரமாக இருவரும் பாதிவழியில் வந்து சந்தித்துக் கொண்டு இருவருக்குமே எதெல்லாம் இணக்கமாக, மனதிற்கு சுமையில்லாமல் இருக்கக் கூடிய வகையில் அமைத்துக் கொள்ள முடியாத ஒரு வாழ்க்கையில் எப்படி காதலும், நேசமும் இருக்க முடியும்? முதலில் அந்த தனிமனித விருப்புகளை பூர்த்திக்க தெரிந்த மனதுதானே நேசிப்பு நிலைக்கு உறவை நகர்த்தி ஒரு நல்ல நண்பர்கள் நிலையில் வைத்துக் கொள்ள சாத்தியப்படுத்தும். அதனைத் தவிர்த்து, மீண்டும் சமூகம் நமது குழந்தைகளை வஞ்சித்து விடக் கூடாதே என்ற காரணத்தினாலோ அல்லது வாழ் நாள் முழுதும் நாம் ஒரு வெளியாளாக என் சமூகத்தால் கருதப்பட்டு விடுவோமோ என்ற சுமையை சுமந்து கொண்டு ஒருவரை மட்டும் பலிகடாய் ஆக்கி அவ்வாறு ஆக்கிக் கொள்வதில் 'காதல்' எப்படி அங்கே இருக்க முடியும்?

மற்றுமொரு கேள்வி, காதலும், நேசிப்பும் நெத்தியில் பொட்டு/பட்டை போட்டுருக்காங்களா, நம்ம டயலக்ட் பேசுறாங்களா, செவப்பு/கருப்புத் தோலா அப்புறம் என்ன சாதி, மதம் அப்படின்னு பார்த்துக்கிட்டு வந்ததுச்சுனா, அது உண்மையான மனசு சம்பந்தப் பட்ட நேசிப்பா இல்ல கணக்குப் போட்டு சேர்ந்ததா? எனக்கும் மதம், இனம், மொழி அப்பாற்பாட்டு ஒரு காதல் வந்துச்சு. அதில எந்த நிர்பந்தமுமில்லை. எதனையும் யாரும் எவருக்காகவும் மாற்றிக்கவும் தேவைப்படலை. ஆனால், அதுவும் கொஞ்ச நாட்களில் ஆட்டம் கண்டு உதிர்ந்து போனது; அதுவும் தனிமனித பழக்க வழக்கங்களின்பாற் (attitude) பட்டு, ஆனால், என்னுடைய பையனுக்கு இது வரையிலும் எது போன்ற அடையாளங்களையும் சிலுவை ஏற்ற வேண்டுமென்ற இக்கட்டில் இன்றளவும் என் நிலையில் இல்லை. சுய சிந்தனை உடையவனாகவும், நிதர்சனத்தை சந்திக்க தயாரனவானகவும் வாழக் கூடிய சாத்தியங்களை அவனைச் சுற்றிலும் அமைத்துக் கொடுத்து விட்டால், யாரும் யாருக்காகவும் சமரசம் செய்து கொண்டு, தியாகியாக (ஒரு பக்கமாக) வாழ்ந்து முடிக்க வேண்டிய கட்டாயமிருக்காது.

என்ன ஒன்னு தெரியுதுன்னா, நம்மூர் காதல் மணங்களில் டூ மச் சினிமா செண்டிமெண்ட் பெருக்கெடுத்து ஓடுது. தியாகியா வாழ ஆரம்பிச்சா அது ஒரு சாயம் மாதிரி கொஞ்சம் கொஞ்சமா நிறமிழந்து கடைசியில சுய கழிவிரக்கம் பெருக்கெடுத்து ஓடி பின்னாடி தன்னையே ஒரு லூசரா மனசு அங்கீகரிக்க ஆரம்பிச்சுடும். பாவம்யா!

Monday, January 04, 2010

உடல் + உடை = அரசியல்!

தமிழ்மணத்தில் வரும் அத்தனை பதிவுகளையும் வாசிக்க முடிந்துவிடுவதில்லை. இப்பொழுதெல்லாம் நண்பர் வட்டம் படித்துவிட்டு இதற்கு ஒரு ஐந்து நிமிடங்கள் செலவு செய்தால் வீண் விரயமில்லை என்ற வடிகட்டலுக்குப் பிறகே சில நாட்கள், வாரங்களுக்குப் பிறகு நல்ல பதிவுகள் வந்தடைகிறது. இருப்பினும், தான் தோன்றியாக அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆர்வத்தை கிளப்பும் பதிவுகளை நானாகவே கிடைக்கும் நேரங்களில் அங்கு சென்று தழுவிச் செல்லாமலும் விட்டதில்லை.

எழுத்து என்பது என்னைப் பொருத்தமட்டில் ஒரு தானியங்கி முறையில் உள் உந்துதலாக நிகழ வேண்டியதொரு விசயம். அவ்வாறாக நிகழும் பொழுது அங்கே பசப்புத் தனங்களுக்கு இடமிருக்காது என்றே எண்ணுகிறேன். அதனை ஒரு கட்டாயமாக, நிர்பந்தமாக ஆக்கிக் கொள்ளும் பட்சத்தில் அதற்கு பயிற்சி தோள் கொடுத்தாலும், எழுத்தில் ஒரு போலித்தனமும், ஆழமின்மையும் மிளிரக் காணமுடியலாம்.

அண்மைய காலங்களில் அதாவது வலைப்பூக்கள் அநாமதேயமாக எங்கிருந்து வேண்டுமானாலும், குறைந்த பட்ச நேரம் மட்டுமே மூலதனமாக செலவு செய்து தன்னிடம் சரக்கு இருக்கிறது, அது இந்த உலகிற்கு சென்றடைய வேண்டுமென்ற ஆவல் உள்ள எவரும் செயற்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கிற ஒரு சூழலில், நான் இன்று சந்திக்கின்ற வளரத் துடித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களிடம் கேட்டுக் கொள்வதனைத்தும் "ஏன், நீங்கள் ஒரு ப்ளாக்கர்" கணக்குத் தொடங்கி உங்களின் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்பதுதான் ;).

அப்படியாக அவரும் தொடங்கும் பொழுது அது அவருக்கு ஒரு ஆரோக்கியமான சுய வளர்ச்சிச் சூழலை உருவாக்கிக் கொடுக்கக் கூடும் என்ற நம்பிக்கையிலேயே, அவ்வாறாக பரிந்துரைக்கிறேன். ஏனெனில், மனித மனமென்பது எப்பொழுதும் தனக்கு பழக்கமான, ஆபத்தற்றதாக கருதிக் கொள்ளும் எல்லைகளிலேயே பயணிக்க பிரியப்படும். அவ்வாறான ஒரு சூழலும் அமைந்து போனால், அதனைத் தாண்டிய ஒரு உலகமும், மனிதர்களும் பல் வேறு பட்ட கருத்து, சமூக, கலாச்சாரங்களின் ஊடான பார்வைகளைக் கொண்டும் இதே தெருவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், என்ற எண்ணத்தையே மறந்து தன்னுடைய எல்லைக்குள்ளாகவே லயித்து இருக்கும். அதன் நேர் பாதையில் ஏதாவது இடர்பாடுகள் இடரும் வரையிலும்...

மனமும் அதன் வளர்ச்சியுமென்பது ஒரு நீரோடையைப் போன்று ஓடிக் கொண்டே இருப்பதும், தேவையான மாற்றங்களை, பிரபஞ்ச விரிதலைப் போன்று எல்லாவற்றையும் அரவணைத்துச் செல்வதற்கு எப்பொழுதும் தயாராக்கிக் கொள்வதுமாக அமைந்து போனால் எங்கிருந்து வருகிறது மனச் சோர்வும், இத்தனை முரண்பாடுகளும்? இந்த தயார்படுத்தலுக்கு எழுத்தும், எண்ணமும் மேலும் வழிவகை செய்து கொடுக்கலாம். மனம் கற்றுக் கொள்ளும் நிலையிலேயே என்றுமிருந்தால்.

எனது எழுத்து என்பது என்னை நானே மேலும், மேலும் உட் நோக்கி பார்த்துக் கொள்வதற்கான காலச் சுவடு போன்றதாகக் கருதுகிறேன். அதற்கெனவே, மனதில் ஆழமாக உதித்ததை இங்கு பொதித்து வைத்து விடுகிறேன். பின்பொரு நாளில் கடந்து வந்த வளர்ச்சிப் பாதையின் நீளம், அகலம் அறிந்து கொள்வதற்காக.

அது போன்ற எழுத்தை எல்லார் முன்னிலையிலும் வைக்கக் காரணுமும் எத்தனை பேருக்கு அந்தத் தளத்தின் வீச்சம் பிடிபடுகிறது அல்லது எரடுகிறது என்பதனையும் அறிந்து கொண்டு எனது மேம்பட்ட வளர்ச்சிக்கெனவும் மேலும் பரந்து பட்ட பார்வையை உருவாக்கிக் கொள்ளவும் பயன் படுத்திக் கொண்டுள்ளேன். நமது உலகம், கற்றுக் கொள்ள மனதும் திறந்தே இருக்கும் நிலையில் விரிந்து கொண்டே செல்கிறது என்பதனை இது வரையிலும் எனக்கு ஊறக்கிடைத்த கிணறுகளின் நீள, அகலங்களை அளந்ததின் மூலமாக அறிந்து கொண்டேன். அதன் பொருட்டு இப்பொழுதெல்லாம் சில "கம்பளத் தனமான" வார்த்தைகளை (sweeping statement) விடுவதிலிருந்து முழித்துக் கொள்ள முடிகிறது.

இது அண்மையில் தமிழ்மணத்தில் நடந்து வரும் முரண்பாடுகளுக்கு ஊடான பதிவுகளும் , அதற்குண்டான எதிர் வினைகளுக்கும் சிறிது தொடர்பு இருக்கலாம். புதுப் புது பதிவர்களும், வாசகர்களும் வந்து கொண்டே இருக்கும் பட்சத்தில், அது போன்ற முரண்பாடுகள் ஊடான பதிவுகளும், எதிர் வினைகளும் முடிவற்று நடந்து கொண்டேதான் இருக்கும். அடிப்படையான எண்ணங்களையே அவர்களும் தான் ஊறிக் கிடந்த கிணற்று சாளரத்தின் வழியாக பரந்து பட்ட வானத்தின் ஒரு வட்டத்தைப் பார்த்து அவர்கள் கண்ட வானம் எப்பேர்பட்டது என்பதனை 'பீத்தி' முன் வைக்கலாம், மற்றொருவர் அதற்கு பக்கத்தில் கிடக்கும் கிணற்றிலிருந்து அவர் தரப்பில் கூவிக் கொண்டிருக்கும் அதே வேலையில்.

இப்பொழுது, எனது கிணற்றின் ஊடான அனுபவம் சில வற்றையும், அது எப்படி என் அகக் கண்களை அந்த வேலையில் திறக்க உதவியது, அது போன்று உங்களுக்கும் திறக்க உதவக் கூடுமென்ற நப்பாசையில் இங்கே இறக்கி வைத்து விடுகிறேன் ...

அனுபவம் எண் 1: அப்பொழுது கார்கில் பகுதியில் பாகியுடன் நாம் சண்டையிட்டுக் கொண்டிருந்தோமென்று நினைக்கிறேன். அதே நேரத்தில் எனக்கு முன்னமே இந்தியாவிலிருந்து அமெரிக்கா குடியேறி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தமிழர் எனக்குப் பழக்கமானார். அவர் இஸ்லாத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்தும், படிப்பிற்கும் பொது அறிவிற்கும், பண்பாட்டிற்கும் ஒருவனுடைய அடிப்படை இயல்பிற்கும் எந்த தொடர்புமில்லை என்பதற்கிணங்க, ஒரு அறிவு கெட்ட "கம்பள வார்த்தை" ஒன்றை அவரிடத்தில் மிக்க தேச பக்தியில்(??) உளறி வைத்தேன்.

அந்தக் கம்பள வார்த்தை என்னவெனில், "பாகியை துடைத்தெறிந்திட்டா எல்லா பிரச்சினைகளும் ஓய்ந்துவிடும்" என்பதுதான் அது. அவரும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்து விட்டு, நண்பா! அந்த நாட்டில் இன்னமும் எங்களுக்கு தொடர்புடைய பெரியப்பா, பெரியம்மா வகை சொந்தங்கள் வசிக்கிறார்கள் இன்னமும் வந்து போயிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதாக கூறினார். எனக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வது என்றே புரியவில்லை. அப்படியே நிலை குலைந்தவனாக அமர்ந்திருந்தேன். ஒரு நிமிடம் என்னை அவர் நிலையில் வைத்துப் பார்த்தேன். என்னுடைய வார்த்தையின் தீவிரம் புரிந்தது. அன்றிலிருந்து, பல சில நேரங்களில் இது போன்ற குருட்டுத் தனமான கம்பள வார்த்தைகளை தவிர்ப்பதின் அவசியத்தை உணர்ந்தேன்.

அனுபவம் எண் 2: இங்கு அமெரிக்கா வந்த பொழுதினில், எங்களைப் போல உண்டா என்று நாளும் ஏதாவது ஒரு வெட்டி வம்பு பேசுவதுண்டு. ஓடும் வாகனங்களின் எண்ணிக்கையைக் காண்பதிலிருந்து ஆரம்பித்து, அரை ட்ராயர் போட்டு நடந்து திரியும் பெண்களைக் கண்டால், பார்க்கில் அமர்ந்து அன்நியோன்யமாக வருடிக் கொள்ளும் ஜோடிகளைக் கண்டால், வாயை விட்டு 'ஐ லவ் யு, ஹனி, மகளே, மகனே' எனச் சொல்லிக் கொள்ளும் மக்களைக் கண்டால்னு சகட்டு மேனிக்கு குருட்டுக் கம்பளம் விரித்தேன். எல்லாமே போலி, வேஷமென்று. அதாவது அந்நாளில் என்னுடைய கிணற்று சாளரத்தின் வழியாக எனக்குக் காணக் கிடைத்த வான வெளியுடன் அவர்களின் கலாச்சாரத்தை தேவையில்லாமல் ஒப்பீடு செய்து கொண்டிருந்திருக்கிறேன். என்ன ஏதென்று எனக்குப் புரிய ஆரம்பிப்பதற்கு முன்பாகவே!

அது போன்ற ஒரு நாளில் எனக்குத் தெரிந்த ஒரு இந்திய குடும்பத்தாரை அருகிலிருக்கும் 'ஜோன்ஸ் பீச்சாங்கரைக்கு' அழைத்துச் சென்றேன். அதில் உள்ள கணவன், மனைவி ஐம்பதுகளின் மத்தியிலிருந்தார்கள். பத்தாவது படிக்கும் ஒரு மகன். பீச்சாங்கரையில் ஒரே ஜனத் திரள். எங்கு திரும்பினும் கூட்டம். யூனி ஃபார்மாக அந்த சூழலுக்கேயான உடை. பெண்கள் ட்டூ பீஸ், ஆண்கள் அரை ட்ரவுசர் என ஜோடித்திருந்தார்கள்.

என்னுடன் வந்திருந்த அம்மா வட இந்தியர். சுடிதாருக்கு மேலாக போட்டிருந்த துணியையும் வெயில் காய்கிறதென்று தலையில் போட்டு சுத்தியிருந்தார்கள். கால் முதல், தலை வரை துணியாக பீச்சாங்கரையை வலம் வந்து கொண்டிருந்தார். நாங்களும் ஒரு இடத்தை தேர்வு செய்து, துணிக் கம்பளம் விரித்து, கொண்டு வந்த திண் பட்டங்களை வைத்து கடை விரித்தோம். அருகினில் அமர்ந்திருந்த ஏனைய கூட்டம் எங்களைப் பார்ப்பதும், ஏதோ கிசு கிசுப்பதுமாக இருந்தார்கள். ஒரு அரை மணி நேரம் கழித்துப் பார்த்தால் எங்களைச் சுற்றி ஒரு 15 மீட்டர் சுற்று வட்டத்தில் யாரையுமே காணோம்!

எங்கடா மக்கள் எல்லாம் என்று பார்த்தால், இந்தக் காட்டுமிராண்டிகளுடன் நமக்கெந்த தொடர்மில்லை என்று தொப்புள் கொடி அறுக்கும் விதமாக விலகிச் சென்றிருக்கிறார்கள். இங்கும் எனக்கு கண் திறக்கும் நிகழ்ச்சியாகவே அந்த நிகழ்வும், சூழலும் அமைந்திருந்தது. நம் ஊரில் வாரப் பத்திரிக்கைகளும், தினசரிகளிலும் வெள்ளைக்காரிகள் என்றாலே என்னமோ எப்பொழுதும் ட்டூ பீஸில் அழைந்து கொண்டு, சாலையோரங்களில் கண் அடித்து கவிழ்த்து விடும் பெண்கள் என்ற வித பொதுப் புத்தியை விதைத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அன்று அந்த மெஜாரிடி சமூகத்தின் முன்னால்... எங்களுக்கு நிகழ்ந்ததின் பொருள் என்ன?

ஒவ்வொரு பூமியிலும் அந்தந்த காலக் கட்டத்திற்கு ஏற்றார் போல அந்தந்த சமுதாயமும் வசதிக்கேற்ப உடலரசியலை நகர்த்திக் கொள்கிறது. அந்த எல்லைக்குள் வாழும், சமூகக் கண்களுக்கு எது வரையிலும் தோலைக் காமித்தால் முகம் சுழிக்காமல் எடுத்துச் சொல்லக் கூடுமோ அதுவரையிலும் அவர்களுக்கு அது நாகரீகம். அவர்களின் எல்லைக்குள். அதனைக் கொண்டு பிரிதொரு எல்லைக்குள் பிரவேசித்து அதனைப் போல உடலரசியல் செய்யவில்லை என்று கூவுவது எந்த விதத்திலும் நாகரீகமில்லை, அப்படி நிகழ்த்தும் பொழுது அங்கே வீண் பிரச்சினையும், கிணறுகளின் நீள, அகலங்கள் ஒன்றிலிருந்து பிரிதொன்றின் பார்வையில் வித்தியாசப் பட்டுக் கொண்டே போகும். எது வரையிலுமென்றால், அவைகளை விட்டு விலகி மொத்தமாக அந்த வித்தியாசங்களின் கூறுகளை காணும், மனக் கண் திறக்கும் நாள் வரையிலும் என் கிணறு உன் கிணறை விட சிறந்தது/தாழ்ந்தது என்ற முறையிலேயே அமையும்.

பர்தா போட்டிருப்பவர்களின் கண்களுக்கு அதனைப் போடாமல் வெளியே போயி வருபவர்கள் ஆபாசமாகவும், சேலை கட்டிக் கொள்ளாமல் ஜீன்ஸ், ட்டி-ஷர்ட் போட்டுக் கொள்பவர்கள் ஆபாசமாகவும், அவர்களின் கண்களுக்கு மினி ஸ்கர்ட்டும், அரை ட்ரவுசரும் போட்டுக் கொள்பவர்கள் ஆபாசமாகவும் தெரிவது (இந்த வரிசைக்கிரமத்தை பின்னோக்கியாக ஓட்டி ஒருவர் மற்றொருவரை காட்டுமிராண்டி என்று அழைத்துக் கொண்டுமென...) எல்லாமே இந்த கிணற்று சாளரத்தின் வழியாக பார்க்கும் பார்வையில் தான் கோளாறே ஒழிய அந்தந்த தனிப்பட்ட மனிதரின் நிலையில் அது சரியே. பிடித்திருந்தால்/செல்லும் நிகழ்விற்கு ஒத்து வந்தால் எப்படி வேணா யாரும் இருந்துவிட்டுப் போகட்டுமே!





பி.கு: நான் இங்கு லுங்கி கட்டிக்கிட்டு வெளியே சென்று கடுதாசி பொறுக்கிக் கொண்டு வருவதற்குள், என் லுங்கியின் அமைப்பை பார்த்துவிட்டு என்னடா ... a guy dressed in long skirt என்று அதிசயத்து ஓட்டும் வாகனத்தை மட்டுப்படுத்தி குடுபத்தோட, குழந்தை குட்டிகளோட பார்த்தா அதுக்கு நான் என்ன பண்றது :))) ...

Related Posts with Thumbnails