Wednesday, August 22, 2007

துரியன்(Durian) பழம் சாப்பிட்டால் கர்ப்பமடையலாமாம்...!?

இன்னைக்கு ஒரு வேடிக்கை செய்தி நம்ம தினகரன் பத்திரிக்கையில படிக்க முடிஞ்சிச்சி. அத என்னான்னு சொல்றது, எப்படின்னு சொல்றது. நம்ம மக்கள் நம்பிக்கைக்கு இந்த வானமே எல்லை! துரியன் (Durian) அப்படின்னு ஒரு பழமிங்க நம்ம பலாப் பழம் மாதிரியே ஒரு கூட்டுக்கனி வகை. சுமாருக்கு தெற்காசிய நாடுகளில் மட்டும் ஒரு 30 வகை இனம் இருக்காம், அதில 9 வகைகள்தான் சாப்பிடற மாதிரியாம்.

இந்த பழ மரங்கள் ஒரு 35கிட்ட நம்ம ஊட்டி தோட்டக் கலை நிபுணர்களால் வளர்க்கப்படுகிறதாம். நம்மூர்ல எல்லா இடங்களிலும் பொதுவாக காண முடிவதில்லை. ஆனால், சிங்கையிலும், மலேசியாவிலும் நம்மூர் பலாப் பழங்கள் விற்கப்படுவதுபோலவே விற்கப்படுவதனை பார்த்திருக்கிறேன். வாசம், பலாப் பழத்தைவிட இன்னும் ஸ்ட்ராங்.

சரி விசயம் என்னான்னா, தினகரன்ல இதான் செய்தி:

...துரியன் பழம் சாப்பிட்டால் கருத்தரிக்கும் என்ற நம்பிக்கையால், பர்லியார் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் இந்தப் பழத்திற்கு முன்பதிவு செய்வோர் அதிகரித்துள்ளனர்.

இங்கு 35 துரியன் பழ மரங்கள் உள்ளன. இந்தாண்டு 2,000 கிலோவுக்குக் குறைவில்லாமல் துரியன் பழம் விளையும் என தோட்டக்கலைத்துறையினர் எதிர்பார்த்தனர். ஆனால், உரிய காலநிலை நிலவாததால், துரியன் பழ விளைச்சல் ஏற்படவில்லை.

இது குறித்து குன்னூர் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பிரகாசம் கூறியதாவது:மரத்தில் இருந்து பறிக்கப்படாமல் தானாக விழும் துரியன் பழங்களை சாப்பிட்டால்தான் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு கருத்தரிக்கும் என மக்கள் நம்புகின்றனர். இந்தப் பண்ணையில் அப்படித்தான் விற்பனை செய்யப்படுகிறது என்பதால் கிராக்கி அதிகமாக உள்ளது....

மேலே உள்ள பாராக்களை அப்படியே நொட்டு, நொட்டுன்னு கைவலிக்க டைப் பண்ணியிருக்கேன், அங்கேயும், இங்கேயும் தாவி... முழுசா படிக்கணுமா அது இங்க இருக்கு - கருத்தரிக்கும் நம்பிக்கையில் துரியன் பழத்துக்கு கிராக்கி; 880 பேர் முன் பதிவு.

இந்தாண்டு சொன்ன மாதிரி விளைச்சல் இல்லாததால் 880 கிலோ தான் சப்ளை செய்ய முடியுமாம். ஆனா, சுமார் 880 பேர் முன்பதிவு செய்திருக்காங்களாம் . என்ன செய்றதின்னு தெரியாம நம்ம துணை இயக்குநர் பிரகாசம் திண்டாடி தோட்டத்தில நிக்கிறாராம்.

ஏனுங்க தெரியாமத்தான் கேக்கிறேன், இந்த மக்களுக்குத்தான் கொஞ்சம் மறை கழண்டுப்போச்சுதுன்னா இந்த விவசாய ஆராய்ச்சியில இருக்கிற இந்த ஆட்களுக்குக் கூடவா கழண்டு போயிடும்.

கொஞ்சம் எடுத்துச் சொல்லலாமில்லை பொது மக்களுக்கு, இது போன்ற நாளிதழ்கள், சம்பந்தப் பட்ட ஆட்களை பேட்டி எடுத்து போடும் பொழுதாவது. இந்த மாதிரி இது ஒரு நம்பிக்கைதான் ஆனா, மருத்துவ ரீதியா அதில எவ்வளவு உண்மை இருக்குன்னு தெரியலை. நீங்க உங்க வீட்டுல இரண்டு பேருமா சேர்ந்து போயி அதுக்கான டாக்டர்களை சந்தித்து ஆலோசனை பெருவது நல்லதுன்னு. அப்படிச் சொல்ல எம்பூட்டு நேரம் ஆகும்.

நாளிதழ் காரர்களை விட்டுத்தள்ளுங்க, பாவம் அப்பாவிங்க, அவங்க கிளிப் பிள்ளை மாதிரி யாரு என்ன சொல்றாங்களோ அப்படியே மக்கள் கிட்ட வந்து வரி தவறாம சொல்லிடுவாங்க. கேள்வி எல்லாம் கேக்க மாட்டாங்க. கேட்டா அடுத்த மாசம் வேலை இருக்காது.

அப்படியில்லாம இங்கயும் துரியன் விக்கிறதுதான் நம்ம இயக்குநருக்கு முக்கியமான வியாபார உத்தியா? என்னங்கய்யா இது அரசியலில் தொடங்கி, விஞ்ஞானம் வரைக்கும் எல்லாமே வியாபாரம்தானா, நம்மூர்ல?


பி.கு: ஒரு முறை இந்தப் பழத்தை நிறைய சாப்பிட்டுவிட்டு ஒருத்தரு பொட்டாசியம் அதிகமாகிப் போய் முடியாமப் போயிட்டாராம். பார்த்துங்க. :-)). விக்கியில படிச்சப்ப சொல்றாங்க, இரத்தக் கொதிப்பு இருக்கிறவங்களும், கர்ப்பம்தரிச்சு இருக்கிறவங்களும் இந்தப் பழத்தை சாப்பிட வேண்டாமின்னு.

Saturday, August 11, 2007

*செல்வனின்* - பணப்பயிர், வியாதிகள் ஓர் அலசல்!!!

அன்பர் செல்வன் அருமையான முறையில் ஏன் நாம் வால்மார்ட் போன்ற சங்கிலிக் கடைகளை இந்தியாவுக்குள் அனுமதிக்க வேண்டுமென்ற தன்னுடைய புரிதல்களை இந்தப் பதிவில் வைத்து வருகிறார்... இந்தியாவிற்கு வால்மார்ட் அவசியமா?

அங்கு நிறைய அருமையான பின்னூக்கிகளின் மூலமாக மிகவும் தரமான முறையில் விவாதம் நடந்து வருகிறது. இந் நிலையில் செல்வன் அவர்கள் கேட்ட ஒரு கேள்வி மிகவும் முக்கியம் என நான் கருதியதால் அந்த பின்னூட்டத்தை மட்டும் ஒரு சிறு தனிப் பதிவாக இங்கு பதிகிறேன்.

நண்பர்களே இந்த வால்மார்ட் விசயத்தை நீங்கள் எவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதனைப் பற்றி எனக்கு தெரியவில்லை இங்கு. ஆனால், இது ஒரு மாபெரும் மாற்றத்தினை கொண்டு வரக் கூடிய ஆசுர சக்தி வாய்ந்தது என்பது மட்டும் திண்ணம். எனவே சிறிது கவனத்தை இங்கும் போட்டு வையுங்கள்.

இதோ அந்த பின்னூட்டம்.

செல்வன்,

//குறைந்த காலத்தில், அதிக மகசூல் தரும் நெல்வகைகள் நின்றன.மற்றவை மறைந்துவிட்டன.//

சரி நீங்கள் கூற வருவது, செலக்டிவ் ப்ரீடிங், இதன் பொருட்டு எது 60 நாட்களுக்கு ஒரு முறை அறுவடைக்கு ரெடியாகிறதோ அதனையே ஸ்டாம்ப் அடிப்பது போல் அந்த புவிப் பரப்பு முழுதுமே பயிரிடப் பட்டு ஜனத்தொகையை பரப்புவோம் என்ற புரிதலின் கோட்பாட்டின் படி சரியா.

இப்பொழுது இந்தக் காட்சியை சிறிது வனத்தினுள் நகர்த்துவோம். அங்கு என்னாகிறது இப்படியே இயற்கை(நம்மைப் போலவே-புத்திச்சாலித்தனமாக) "செலக்டிவ் ப்ரீடிங்" பண்ண ஆரம்பித்தால் ஒரே ஒரு உயிரினத்தை மட்டும் அவ் இயற்கையே காதலிக்கும் பொருட்டு (உதாரணமாக புலி அழகாக இருக்கிறது என). இப்பொழுது ஒரு வனத்தில் புலியையும் படைத்து அவைகளுக்கு நன்கு கேட்டு உணரக்கூடிய புலன்களையும், கால் பாதங்களில் மிருதுவான பஞ்சடைத்ததைப் போன்ற padயையும் கொடுத்து, ஒளிந்து, மறைந்து அதற்கு இரையாகும் ஒரு மானையும் கொடுத்து இருந்துகொண்டிருக்கிறது அவ்வனம்.

இப்பொழுது அந்த மானோ அதனை விட விரைவாக ஓடவும், நன்கு கவனித்து பிறகு இரை உட்கொள்ளும் பழக்கத்தையும் கொடுத்து தப்பிப் பிழைப்பதற்கென ஒரு தகவமைப்யையும் கொடுத்திருக்கிறது. இந்த பின்புலத்தில் அங்கு என்ன நடக்கிறது? அங்கு இயற்கை என்ன விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறது? இதுவே அவ் இயற்கை அந்தப் புலியை அதீதமாக காதலிக்கும் பொருட்டு சுலபமாக மான்களின் இனபெருக்கத்தை முடிக்கியும், சும்மா மான்கள் எல்லாம் லபக், லபக்கென்று படுத்துக் கிடப்பதை பிடித்து உண்பதனைப் போலவும் படைக்கவில்லையே ஏன்? அப்படி "செலக்டிவ் சாய்ஸ்" இயற்கை நிகழ்த்தியிருந்தால் என்னவாகும்? கொஞ்சம் யோசித்தால் அங்கே இயற்கையின் Prey-Predator relationship and Carrying Capacity at play என்பது விளங்க வரும். அது எதற்காக என்பதுவும் விளங்க வரும்.

இப் பொழுது நாம் முரட்டுத் தனமாக அந்த இயற்கையே விரும்பாத ஒரு செயலில் இறங்கி அந்த carrying capacity என்ற அமைப்பை எல்லாம் உடைத்து செய்வதெல்லாம் இன்னும் நிறைய வியாதிகளை தருவித்துக் கொண்டதுடன், பரிணாம சமச் சீரற்ற நிலையும் தான். இது எங்கு எடுத்துச் செல்லும் என தெரியாமலேயே கால்குலேட்டாரும், பென்சிலுமாக அமர்ந்து கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

//மட்டை அரிசியை சாப்பிட மக்கள் விரும்புவதில்லை.அதனால் அதை விவசாயிகள் அதிகம் பயிரிடுவதில்லை.நஷ்டம் வரும் பயிரை யார் தான் பயிரிட விரும்புவார்கள்?//

நான் பேசுவது மட்டை அரிசி (முரட்டுக் காளை) ரகத்தை மட்டுமல்ல.

அதனால், ஒரு சில மாதங்கள் சேர்த்து எடுத்துக் கொள்கிறது அந்த நெல் பயிரின் பயனை அனுபவிக்க என்று, அதன் மருத்துவப் பயனைக் கூட கருத்தில் கொள்ளாமல் உரங்களைப் போட்டு 60 நாட்களில் மண்ணில் கொஞ்சம், நம் உடம்பில் கொஞ்சம் என்று அந்த உரங்கலை உணவின் ஊடாக தின்று வாழ்ந்து விட்டால் வரக்கூடாத இடத்தில், வளரக் கூடாத விகிதத்தில் கட்டி வளரும் பொழுது அடித்துக் கொள்வதில் என்ன இருக்கிறது.

இதில் எது சமயோசிதப் புத்தி? ஒன்று சொல்லுங்கள் எனக்கு விளங்கவில்லை, ஏன் இன்று மேற்கத்திய நாடுகளில் ஆர்கானிக் காயகறிகளும், உணவு வகைகளும் மிகவும் பிரபலமடைகிறது, அதிக விலை கொடுத்தேனும் வாங்கிச் சாப்பிட வேண்டுமென, பெரிய பணக்காரர்களும், ஹாலிவுட் நடிகர்களும் முன் வருகிறார்கள்? அதே ஆர்கானிக் உணவு வகைகள்தானே ஒரு காலத்தில் ஒரு சராசரி இந்தியா குடும்பம் சாப்பிட்டு வந்தது. ஆனால், இன்று நிலைமை இப்படி ஆகி இருக்கிறதெ அது ஏன், செல்வன்.

Friday, August 10, 2007

அனானிக்கு ஓர் உருக்கமான பதில்!!!

யாருங்க இந்த அனானி? இப்படி அருமையான கேள்வியை எல்லாம் கேட்டுப்புட்டு இப்படி முக்காடுப் போட்டுக்கிட்டு ஒளிஞ்சுக்கிறீங்களே.

இந்த கேள்வி உண்மையிலேயே ஒரு சிறந்த பரிசை தட்டிக் கொண்டு செல்வது மாதிரி, ஏன் தவற விடுறீங்க சொல்லுங்க. நான் இப்படி கேட்டுப் புட்டீங்களேன்னு ஒண்ணும் உங்களை தவறாக சொல்லப் போவதில்லை. ஏன்னா, நீங்க கேட்டது ரொம்ப நியாயமான கேள்விங்க...ஆங்ங்ங்ங் உங்க பேரென்னா... சரி பெயரில்லாதவரே. வாங்க உங்க சந்தேகத்தை தீர்த்து வைச்சுடறேன்.

இப்படி கேட்டுருந்தார், பொத்தாம் பொதுவா. ஆனா, இதனை என்னையை மட்டும் கேட்டதாக நான் எடுத்துக் கொண்டு எழுதியிருக்கேன் அவருக்கு.

.....inge blog-la vanthu karuthu sollara pala per - USA-la kuppai kottitikkity irukkanga...

yen avangala ellam india-la velai seithu siru samabalam vaanga vendiyathu thane? :-) summa film kaataatheengapppa!!!! // ....

நான் வெக்கத்தை விட்டு ஒப்புத்துக்கிறேங்க. உண்மையிலேயே நான் பஞ்சம் பொழக்க வந்த ஆண்டிதாங்க. அதனையும் மீறி எனக்கு இங்க ரத்த பந்தம் வேற ஆகிப்போச்சுங்க. இதற்கெல்லாம் மீறி நான் ஒண்ணும் இந்தியாவில அப்படி கையைத் தட்டினால் ஓர் கார் ஓடி வந்து என்னைய ஏத்திட்டுப் போற வீட்டில பிறக்கலைங்க. அது என் தப்புமில்லைங்க.

அதுக்காக என் பெற்றொர்களை திட்டவுமில்லைங்க. ஆனா, கண் கொண்டு என் தகப்பனார் ஒரு பொறுப்பான ஆளா தன் குழந்தைகளை வளர்க்கப் பட்ட கஷ்டத்த என் ஒன்றரை கண்கள் கொண்டு பார்த்திருக்கேங்க. அந்த கஷ்டமெல்லாம் சில பேருக்கு சொன்னாக் கூட புரியாதுங்க. ஏன்னா, உங்க மாதிரி புளிச்ச ஏப்பக் காரர்களா இருந்தா புரியுமா? பசிச்சவன் எப்படி சாப்பாட்டை பார்க்கிறான் அப்படின்னா, சொல்லுங்க.

சரிங்க, இந்தியாவை எனக்கு நெஞ்சுக்குள்ள உசிரு இருக்கிற வரைக்கும் காதலிப்பேங்க. ஏன்னா, எனக்கு அந்த ஊரு ரொம்ப புடிக்குமுங்க. ஐ ஜஸ்ட் லவ் தட் கண்ரிங்க. இருந்தாலும், காலத்தின் கோலமாக இப்ப என் வாழ்க்கை இந்த அமெரிக்காவையும் ஏத்துக்க வைச்சுருக்குங்க. அதுதான் உண்மை. ஆனா, எந்த காரணங்களால் நான் இந்தியாவை காதலிக்கிறேனோ அந்த காரணங்களே அங்கிருந்து களையப்படும் பொழுது என்னால் அதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியலங்க. ஏன்னா, எதனை இங்கிருந்து எடுத்துச் சென்று சிறந்ததென அங்கே நிறுவ முயல்கிறார்களோ அது இங்கே விட்டுப் போன தழும்புகளை கண் கொண்டு இரு பக்க தட்டுகளிலும் வாழ்ந்ததினால் என்னால் இந்தியாவில் இருக்கும் சிறப்பு என்னான்னு தெளிவாக பார்க்க முடியுதுங்க. அதுக்காக எல்லாமே இந்தியாவில் சரியாக இருக்கிறது என்று சொல்ல வரலைங்க.

நிறைய நான் பணத்தை மூடைக் கட்டிக் கொண்டு இந்தியாவிற்கு அள்ளிக் கொண்டு செல்ல வேண்டுமென்ற எண்ணத்துடன் இங்கு வாழ்ந்து வரலைங்க. இங்கயும், நான் வாழ்க்கையை முழுதுமாக வாழ்கிறேங்க. அதிலுள்ள நல்லது கெட்டது எல்லாமே உடல் கொண்டும், சுவாசிச்சும் பார்க்கிறேன், நிறை, குறைகள் எல்லாம் பிடிபடுதுங்க. அவ்வாறு பட்டுணர்ந்ததை, அது போன்ற சில அழிவுப் பாதைகளில் சென்றுதான் ஒரு சில விசயங்களை கற்றுக் கொள்ள வேண்டுமென்ற கட்டாயத்தில் இல்லாத நம்மூர் மக்களுக்கு சிறிதேனும் ஏதாவது இங்கிருந்து பார்த்த விசயங்களை இரு பக்க விசயங்களையும் பார்க்க ஒரு வாய்ப்பு கிட்டிய ஆளாக இங்கேயே சிக்குண்டுதால் அதனை அங்கு சொல்லி கொஞ்சமேனும் விழிப்புணர்வு ஏற்ற முடியுமா என்ற ஒரு ஆசையில்தானுங்க அப்படி மக்கள் வந்து இங்கு வாழ்ந்தாலும் நாலு பேரு கூடுற இடத்தில வந்து சொல்லலாங்க, தனது கருத்துக்களை. அதில ஏதாவது தப்பிருக்காங்க.

ரொம்ப நேரம் ஆகாதுங்க நானும் ஒரு Mr. Wolfவாகவோ, Mr. Woodஆகவோ என்னை நானே ஏமாற்றிக் கொண்டு பேசித் திரிவதற்கு. நான் நானாக இருக்க ஆசைப் படுவதால்தான் இங்கே வந்து இப்படி எழுதித்(புலம்பித்) தள்ளுறேங்க. எனக்கும் ஒரு சில்வர் ஸ்பூன் நான் வளர்ந்த சூழ்நிலையில் வாயில் கிடைத்திருந்தால் அங்கேயே கிடந்துருப்பேன். இருப்பினும் இது போன்ற ஒரு பரந்த பார்வை கிட்டியிருக்காதே, அதுவும் ஒன்று இருக்கிறதல்லவா?

அதனால் மற்றவர்கள் எப்படியோ, நான் அவனில்லை :-)). அதனால், அங்கிருக்க, அதாவது இந்தியாவில் மனம் வெதும்பி நடை பிணங்களாக ஏண்டா இங்க பொறந்து சாகுகிறோமின்னு சான்ஸ் கிடைக்கலயேன்னு இருக்கவங்கெல்லாம் ஏதோ நாட்டுப் பற்றினால் கிடைத்த வாய்ப்புகளை நழுவிட்டுவிட்டு இருப்பது போலவும், இங்கு வந்து இருப்பவர்கள் எல்லாம் பணத் திமிரு எடுத்து இங்கு புலம் பெயர்ந்து வந்திருப்பது போலவும் எண்ண வேண்டாம் பெயரில்லாதவரே. ஒவ்வொருத்தர் வாழ்வும் வித்தியாசம் வித்தியாசமாய் அமைந்து விடுகிறது. என்ன செய்வது சொல்லுங்கள். அதற்காக பிறந்த ஊரை துடைத்துதெறிந்து விட முடியுமா, சொல்லுங்க?

எல்லாம் காலத்தின் கோலங்கள். என் இடத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் நான் அங்கு வந்து விடுகிறேன். இது எப்படி இருக்கு.

இந்த வாய்ப்பை வழங்கிய பெயரில்லாதவற்கு நம்ஸ்காரங்கள், பல!!பி.கு: அனானி உங்க வால்மார்ட் தரமான பொருட்களுக்கு இங்கே இருக்கு பதில்... பரிணாமச் சீர்கேடு ஒர் அறிமுகம்...

Wednesday, August 08, 2007

இந்தியாவிற்கு வால்மார்ட் அவசியமா?

கீழே காணும் தலைப்பின் கீழ் நேற்று IBNல் ஒரு செய்தி படித்தேன், அதனைத் தொடர்ந்து எனக்கு ஏற்பட்ட ஆதங்கத்தை இப்படியாக அங்கு பதிந்து வைத்தேன். ஒரு வாசிப்பாளனின் பின்னூட்டமாக.

Walmart-Bharti ink deal to start operations in India

The companies expect to open their first store towards the end of 2007.

...Prabhakar: I dont like Walmart is getting into a country like India, where small scale farmers are running their daily lives by selling their fresh garden produce. We dont need a whale to swallow down the beauty of small scale businesses. Please, God save us from this disaster!
( Posted: Tuesday , August 07, 2007 at 04:39 ) ...

அந்தப் பாராவில் தெரிவித்தது போல இன்று பல்லிளித்துக் கொண்டு போடும் ஒரு கையெப்பம் ஒரு தனி நபரின் லாப நோக்கை முன்னிறுத்தியே என்பது இங்கு யாவருக்கும் தெரிந்ததே. இது இப்படியாக இருக்கும் பட்சத்தில் முன்னயே இது போன்ற சூப்பர் ஸ்டோர்கள் வளர்ந்த நாடுகளில் அடித்து வரும் அட்டூழியம் தாங்க முடியாமல், அவ் வளர்ந்த நாடுகளில் சிறு விவசாயிகளே அற்றுப் போய் பெரும் திமிங்கிலங்களாக இந்தச் சங்கிலிக் கடை மன்னர்கள் எல்லாவற்றையும் தானே தயாரித்து, சூழ்நிலைக்கு ஏற்றாற் போல் விலையையும் நிர்ணயித்து சந்தைக்கு கொண்டு வந்து மக்களை சிறுகக் கொன்றுவருகிறார்கள் என்பதனை இன்று அந்த சிறு விவசாயத்தை இழந்து தவிக்கும் மக்கள் துயறுற்று நொந்து தனியார் தொலைக்காட்சிகளில் பல கண் திறக்கும் கேள்விகளை நம் முன் வைக்கிறார்கள்.

இச் சூழலில் இந்தியா போன்ற ஒரு பெரும் விவசாய நாட்டை கபளீகரம் செய்ய இதோ வந்து விட்டது அந்தச் சுறாமீன். வழியில் இருக்கும் அத்துனை சிறு மீன்களையும் அதனில் இருக்கும் அழகையும் தின்று, மென்று விடப் போகிறது. கிடைப்பதென்னவோ உடனடி விலை வீழ்ச்சிதான் சந்தேகமில்லை; நாம் அவ் சிறு விவசாயிகளை இடுகாட்டுக்கு அனுப்பும் வரையில். ஆனால், எதிர் காலத்தைப் பற்றி நாம் சிறிதும் யோசிக்கிறோமா? எது போன்ற உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும் இந்த பெரிய மீன்கள் பயன்படுத்தி விலை வீழ்ச்சியை கட்டுப் படுத்துகிறதென. தெரியாது.

இன்று அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒவ்வொரு ஐந்து பெண்களுக்கும் ஒரு பெண் மார்பக புற்று நோயால் தாக்கப் படுகிறாள். இது எங்கிருந்து தருவிக்கப் படுகிறது? திடீரென இது போன்ற ஒரு சங்கிலிக் கடைத் தயாரிப்பில் ஒரு குறிப்பிட்ட இன உணவு தயாரிப்பிலோ, விவசாயத்திலோ குளறுபடி நேர்ந்து நமக்கும் அதுவும் தெரியாமல் போய் அந்த மெல்லக் கொல்லும் நச்சுவை எப்பவோ உடம்பில் உணவாக உண்டு ஏற்றி செத்தால் யார் அதனை நமக்குத் தெரியப்படுத்துவது?

சரி இந்த சிறு விவசாயிகளை இழப்பது குறைந்தப் பட்சம் ஓர் பல்லூயிர் பேணுவதின் பொருட்டு ஒரு பலத்த இழப்பு அல்லவா - சமூக, மற்றும் கலாச்சார கட்டமைப்பின் படியாவது? இந்த வளர்ச்சி ஒரு அழிவுப் பாதையையே நமக்கு காட்டுகிறது.

வால்மார்ட்டுகளும், ஹோம் டிபோக்களும் இந்தியாவுக்குள் நுழைந்தால் அதனைச் சார்ந்த இழப்பு நமக்கு நிறையவே உண்டு. விழித்துக் கொள்வோமா என்றாவது, ரொம்பவும் தாமதமாவதற்கு முன்பே?


பி.கு: சிவா இங்கே இதனைப் பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறார். அங்கும் சென்று கருத்துச் சொல்லுங்க.

Wednesday, August 01, 2007

இன்னமும் புலம்பலா : படங்கள் மட்டும்???

இரு வேறு உலகங்களின் பிரதிபலிப்பு...Related Posts with Thumbnails