Tuesday, April 15, 2014

எனக்கு ஏ.டி.ம் கார்ட் கிடைச்சிருச்சு: A tell tale behind an ATM card!

வெளி நாட்டு கிளையான நியூயார்க் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஆறில் ஒரு கணக்குத் துவங்கினேன். எனக்கு கையில் ஒரு செக் புத்தகம் மட்டும் வந்து கிடைத்தது. என்னவோ பாஸ் பொஸ்தவமாம் அதெல்லாம் எனக்கு கிடைக்கல. ஏ.டி.ம் கார்டும் இல்லை. நான் வாங்கவும் முயற்சிக்கல.

ஏன்னா ஒரு பாஸ்வேர்ட் வாங்கணும்னா, மாத்தணும்னா, டெபிட் கார்ட் வாங்கணும்னா எல்லாத்துக்கும் பிரம்மபிரயத்தனம் செஞ்சாலே ஒழிய கிடைக்காதுன்னு தெரியும். இல்லன்னா, நேரடியா கணக்கு வைச்சிருக்கும் கிளைக்கு ஆளா போயி நிக்கணும் அல்லது கடிதத்தில எழுதணும். இத்தனையும் பார்த்து மிரண்டு நல்ல பிள்ளையா எப்பயாவது இருக்கிற இருநூறு ரூபா இன்னும் இருக்கான்னு மட்டும் போயி லாக் இன் செஞ்சு பார்த்திட்டு பத்திரமா வெளியில வந்திர்றது,

சரி ஊர்ல இருக்கோமே ஒரு டெபிட் கார்ட்தான் வாங்க முயற்சிப்போமேன்னு ஓர் இரண்டு வாரத்திற்கு முன்னாடி 50 கிலோமீட்டர் பயணித்து ஒரு வழியா அப்ளிகேசன் எல்லாம் வாங்கி நிரப்பி எப்படியோ முடிச்சு கொடுத்தாச்சு.

போன வாரம் தபால்ல கார்டு வந்திருச்சு. அய்யோன்னு வாங்கிப் பார்த்தா வங்கி கிளைக்கு நேரா வா, பிரத்தியேக அடையாள எண் வாங்கன்னு (PIN) சொல்லி இருந்திச்சு. சரின்னு இன்னிக்கு போனேனா, போனேனாதான் கதை.

ஒருத்தர்கிட்ட போயி நல்லா என்னோட முதுகு வளைஞ்சு இருக்க மாதிரி நின்னுகிட்டுதான், கக்கத்தில ஒரு பொஸ்தவத்துக்குள்ளர மத்த பேப்பர் எல்லாம் வைச்சிக்கிட்டு முதல் கேள்வியா-

“சார் எனக்கு டெபிட் கார்ட் வந்திருக்கு பின் வாங்க இங்க வரச் சொன்னாங்க” அப்படின்னேன்.

நிமிர்ந்து பார்க்காமயே ”உன்கிட்ட பாஸ்புக் இருக்கா”ன்னு கேட்டார்.

நான் ”அப்படின்னு ஒண்ணு கொடுக்கலீங்களே சார்.”

அப்படியா, ”உனக்கு மூணு வாரம் தாரேன் அதுக்குள்ளர நீ பாஸ்புக் வாங்கிட்டு வா” செஞ்சுக் கொடுக்கிறேன்.

”சார் நான் இன்னும் இந்த பில்டிங்குள்ளரதானே இருக்கேன். பாஸ்புக் எங்கிருந்து வரும்னு சொன்னா செஞ்சிடாலாமே சார்.”

”இத்தனை வருஷம் பாஸ்புக் இல்லாம எப்படி நீ அக்கவுண்ட் வைச்சிட்டு இருக்க.”

”எனக்கு அப்படின்னு ஒண்ணு கொடுக்கிறதே தெரியாது, சார். இந்த கணக்கை நான் ஆன்லைன்லேயே மெயிண்டைன் செஞ்சிட்டு இருக்கேன்.”

”சரி போயி ஒரு பேப்பர்ல இந்த மாதிரி பாஸ்புக் காணாம போயிடுச்சு புதுசா ஒண்ணு செஞ்சுக்கொடுங்கன்னு எழுதிக் கொண்டுவா.”

அரக்கபரக்க எழுதி அங்கேதான் மறக்காம என்னோட Dr. முன் இணைப்பா போட்டுக்குவேன். அது ஒர்க் அவுட்டும் ஆகுது ஓரளவிற்கு. இரண்டாவது சுற்றில் கொஞ்சம் மரியாதை கிடைச்சது.

ஒருத்தர் டாக்டர்னா என்ன மாதிரின்னு கேக்குற அளவிற்கு கொஞ்சம் நெருக்கம் காமிச்சாங்க. எப்படியோ என்னோட ஐந்து மணி நேர போராட்டத்திற்குப் பிறகு என்னோட பின் அடங்கிய மெயில் கையில் கிடைச்சது.

இத்தனை சுத்து என்னாத்துக்கின்னா, மக்கள் பிளு பிளுன்னு தேனி மொய்க்கிற மாதிரி மொய்க்கிறாங்க. சின்னச் சின்ன கேள்விகளோட பாவம்தான் அத்தனை பேருக்கும் பதில் சொல்லி ஒரு நாளை கடத்திப் போறதுங்கிறது. புரியுது!

அதுக்காக நான் என்ன செய்றது. குறைந்த பட்ச நாகரீகமான ஒரு அணுகுமுறை கூட இல்லாம மூஞ்சில சுடுதண்ணீயை பிடிச்சு ஊத்தி பிஸினெஸ் செய்ற மாதிரியான ஒரு சர்வீஸ். என்னதான் அரசாங்கத்து வங்கின்னாலும், லாபமில்லாத ஒரு தொழிலையா அரசாங்கம் மக்களுக்கு செஞ்சிக் கொடுத்துட்டு இருக்கு. ஒர்க் லோட் அதிகமாகிட்டா இன்னொரு கிளை திறங்க, அல்லது மேலும் ஆட்களை ஆட் செய்ங்க. 

அவ்வளவு வேண்டாம் இந்த பின் வாங்க என்னை எதுக்கு நேரா வரச் சொல்லணும். ஏன் முப்பது ரூவா கழிச்சிக்கிட்டு கூரியர்ல அனுப்பி வைச்சா இந்த மூஞ்சிய நீங்க அங்க பார்க்க வேண்டாம்ல.

ஒரு முறை நான் அமெரிக்கால பிஸினெஸ்ல இருந்தப்போ, கையில் ஒரு கஸ்டமருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை ஹாண்ட் அவுட் செய்யாம கவுண்டரில் வைச்சிட்டேன்னு சொல்லி கெட்ட வார்த்தையில திட்டிபோட்டு, didn't your mama teach you some manners அப்படின்னு கேட்டுட்டு போனா ஒருத்தி.

இங்க பேனாவை தூக்கி போட்டு கையெழுத்து போடுன்னு கொடுக்கிறது கீழே விழற பேனாவை துழாவி எடுத்து, முதுகை இன்னும் வளைச்சு நின்னு போட்டுக் கொடுத்துட்டு வர வேண்டியதா இருக்கு.

என்னதான் கூட்டம், மூன்றாம் தர உலக நாடுகளில் நாம் வசிக்கிறோம்னாலும், நம்ம மக்கள் தானேய்யா தாராளமா ஒருத்தரை ஒருத்தர் மிதிச்சிக்காம மதிச்சிக்கலாமே. காசா பணமா?! என்னமோ போங்க.

இந்த படம் எதுக்கின்னு கேக்குறீங்களா, இந்த மிஸ்ஸனின் இறுதியில் இப்படித்தான் இருந்துச்சு. ஒரு கடையில உட்கார்ந்து ஒரு ட்டீயை ஊத்தி பாய்லரை கூடுதலா எரிச்சிக்கும் போது.Related Posts with Thumbnails