Thursday, October 28, 2010

கலவை: அருந்ததி ராய்-கரன் தாபர்/காஃப்கா - (Metamorphosis-ஈ புக்)

டாக்டர் ருத்ரன் சமீபத்தில காஃப்காவின் பிம்பம் என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக அந்த எழுத்தாளனைப் பற்றிய அறிமுகத்தை நமக்கு வழங்கியிருந்தார். முதன் முதலாக காஃப்காவினை கேள்விப்படும் அன்பர்களுக்கு Metamorphosis வாசிக்கும்மாறும் கேட்டிக் கொண்டிருந்தார்.


இன்று எதார்த்தமாக கூகுள் செய்யும் பொழுது அப்படியே முழுமையாக டவுன்லோட் கூட செய்ய வேண்டாத அளவிற்கு மெட்டமார்ஃபோசிஸ் கிடைத்தது. அது முழு நீள புதினமா அல்லது குறு நாவலா என்று தெரியவில்லை. இருப்பினும், வாசிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள இணைப்பினை சொடுக்கி, அனுபவிங்க.


****************************************

அடுத்து, நம்ம ஆல்டைம் சூப்பர் வுமன் அருந்ததி ராய், கரன் தாபருடனான காணொளி காணக் கிடைத்தது. ராயை நினைக்கும் பொழுது பயமா இருக்கு, எப்படி இத்தனை மிரட்டல்கள், கூச்சல்களுக்கிடையேயிம் உண்மையை உண்மையா எடுத்து வைக்கிற துணிச்சலா இருக்க முடியுதேன்னு நினைக்கும் பொழுது.

ராய் அளவிற்கெல்லாம் என்னால உண்மையா மனசாட்சியோட இருக்க முடியாட்டியும் ஏதோ மனசில நறுக்கின்னு சுட்டதை உங்க கூடவும் பகிர்ந்துக்குவோமேன்னுதான் அந்த இணைப்பை இங்கயும் போட்டு வைக்கிறேன். பாருங்க முழுசும்!


*************************

நண்பர் கல்வெட்டு தளத்தில் இன்று ஒரு அருமையான கட்டுரை வாசிக்க நேர்ந்தது. கதைசொல்லிகளின் வாயிலாக எப்படியாக ஒரு வாசிப்பாளன் சித்திரங்களை உள்வாங்கி, அந்த கதைசொல்லியின் நியாயப்படுத்தல்கள் நம்மை அந்த ஓட்டத்திலே எடுத்துச் சென்று உறையப் போட்டுவிடுகிறது என்று விளக்கி இருக்கிறார். அது போன்ற எண்ணச் சுழிப்பிலிருந்து விடுபட்டு தன்னித்து நிற்பதின் சாதக பாதகங்களையும், அவசியத்தையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது அந்தக் கட்டுரை. அவசியம் வாசிக்கப்பட வேண்டிய பதிவது...


Sunday, October 17, 2010

இசையமைப்பாளர் சந்திரபோஸ் ரீ-மிக்ஸ்...

இசையமைப்பாளர் சந்திரபோஸ் 1980களில் பல பாடல்களை திரையுலகத்திற்கு வழங்கியவர். மறக்க முடியாத பல பாடல்களையும் கொடுத்திருக்கிறார். அண்மையில் அவர் மரணமடைந்ததாக அறிந்தேன். என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் அவரின் மரணத்தையொட்டி.


சில வருடங்களுக்கு முன்பு அவருடைய சில ரீ-மிக்ஸ் பாடல்களை யுட்யூப் தளத்தில் பார்க்க முடிந்தது. மனிதர் நன்றாக ரசித்து வாழ்ந்து கொண்டிருப்பதாகப் பட்டது அந்தப் பாடல்களின் மூலமாக. மீண்டும் இந்த நிகழ்வையொட்டி அந்த தளத்திற்குச் சென்று தேடிப்பார்த்தேன் பார்க்காதவர்கள் யாரேனும் இருப்பின் கண்டு/கேட்டு மகிழுங்கள். I loved his voice and mannerism... seemed to be very loving, funful person to be around with ...

பூஞ்சிட்டுக் குருவிகளா...


ஏண்டி முத்தம்மா...

இந்தப் பாடலை படமாக்கும் பொழுது சந்திரபோஸ் அவர்கள் செமயாக அனுபவிச்சு செய்ததைப் போன்று இருக்கிறது. நீங்களே பாருங்களேன்... ரகளை பண்ணியிருக்கார்! - having heard a couple times this song, his voice is becoming addictive...

Sunday, October 03, 2010

ஆஃப்கான் புத்தர் சிலை வெடிப்பு - பாபர் மசூதி இடிப்பு!

இந்த நிலத் தகராறு விசயமா இவ்வளவு நாலு இத்தனை பேரு எங்கப்பா போயிருந்தீங்கன்னு எல்லாருக்கும் தோணும். எனக்கும் தோணுச்சு. ஆனா எந்த நேரத்தில குரல் எழுப்பணுமோ அந்த நேரத்தில மட்டும் சில விசயங்களுக்கு குரல் எழுப்பினாத்தான் பொருத்தமா இருக்கும்.

சரி நானும் இந்த வரலாற்று சந்திப்பில என்னோட நிலை என்னான்னு சொல்லி வைச்சிர்றது என்னோட பசங்களுக்கும், என்ன உன்னிப்பா கவனிச்சிட்டு இருக்கிற என் நண்பர்கள் வட்டம் பல்முக கலாச்சார மத, இன மக்களையும் உள்ளடக்கி இருப்பதால் நாளக்கி உதவும்னு சொல்லி வைச்சிடுறேன். இது போன்ற சூழல்களில் மட்டுமே தன்னுடைய பார்வையை வைப்பதின் பொருட்டே எது போன்ற தனி மனித புரிதல் இந்த சமூகம் பொருட்டும், இந்த உலக ஞானம் பொருத்தும் தனிமனிதனாக தம்முள்ளையே வளர்த்தெடுத்திருக்கிறோம் என்பதனை முன் மொழிய வாய்ப்பாக இருக்கிறது என்று எண்ணி முன்வைக்கிறேன். நான் மற்றுமொரு மண்ணு மூட்டையாக இருந்து மடிய ஆவணப் படுத்திக்கொள்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

சரி விசயத்திற்கு போவோம். மனிதன் ஆஃப்ரிகா சமவெளிகளில் கற்களை கொண்டு மாமிசம் பிளந்து சாப்பிடுவதற்கு முன்னால் மனித குரங்குளாக நாலு கால்களில் அலைந்து திரிந்த கால யுகங்களில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மரங்களில் தஞ்சம் புகுந்திருந்தான். பிறகு எழுந்து நின்றால் சமவெளியில் வெகு தூரம் பார்க்கும் வாய்ப்பிருப்பதால், தன்னை அணுகி வரும் அபாயத்தை கண்டறியும் திறன் இருப்பதனையொட்டி காலப் போக்கில் சிறுகச் சிறுக அந்த உடற்சார்ந்த தகவமைவினை பெற்றுக் கொண்டான். குறைந்தது இந்த ஒண்ணரை லட்ச வருஷங்களுக்கிடையேதான் இன்றைய முழு நிலையை நாம் எட்டியிருக்கிறோம். ஆனால், இன்னும் போக வேண்டிய தொலைவு வெகு தூரம் இருக்கு; அதுவரைக்கும் நம்மை நாமே விட்டு வைச்சிக்கிட்டா.

அதற்குப் பிறகான சமூகமாக கூடி வாழ்தல். இந்தத் தன்மை பாலூட்டிகளில் பல விலங்குகள் நம்மை போலவே இன்றும் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறது வனங்களிலும், சமவெளிகளிலும். அது போன்ற கூடி வாழ்தல் ஒரு தற்காப்பு யுக்தியாகவே படைப்பில் அறியப்படுகிறது. அங்கிருந்துதான் நாமும் அது போன்ற வாழ்வமையை கற்றறிந்திருக்க முடியும். சிறு சிறு குழுக்களாக வாழ்ந்து, கிடைக்கும் உணவு, சீதோஷ்ண நிலையைக் கொண்டு இனப்பெருக்கமும், அதனையொட்டிய இடப்பெயர்வும் பிரிதொரு குழுவின் மீதான வன்முறையை கட்டவிழ்த்து விடுவதற்கான சூழ்நிலையை இயற்கையே அமைத்து கொடுத்து அதனை எப்படி நாம் எதிர்கொள்கிறோம் என்பதனைப் பொருத்தே இயற்கை ஒரு உயிரினத்தின் இருத்தலை இந்த பூமிப்பரப்பில் நிர்ணயம் செய்கிறது எனலாம்.

இந்த நிலையில் ஒரு பிராந்தியத்தில் வாழும் பல சிறு குழுக்கள் ஒன்றாக இணைந்திருந்தாலே ஒழிய பிரிதொரு குழு ஊடுருவி நிலத்தையோ அல்லது அங்கிருக்கும் இயற்கை வளங்களையோ சுரண்டும் பாங்கில் ஆக்கிரமிக்கும் பொழுது தன்னை தற்காத்து தனது நிலத்தை மீட்டெடுக்க ஒரு பெரும் இனமாக தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும் யுக்தி அவசியமாகிப் போகிறது.

இங்குதான் ஏதோ ஒன்றின் பொருட்டு அனைத்து சிறு சிறு குழுக்களையும் இணைக்கும் விதமாக மொழி, நிறம், பின்பு கல்லு, மண்ணு, தெருப் புழுதி என்று எதனையோ ’பயத்தின்பால்’ சார்ந்து தங்களது மனக் கவலையை அல்லது தன்னிடமிருக்கும் பயத்தை போக்கிக்கொள்ள பயன்படுத்துவதாக தனிமனித நிலையில் வைத்திருந்த ஒரு விசயத்தை ஒரு பரந்துபட்ட குறியீடாக நிறுவனப்படுத்தி ஒரு மதமாக உருத் தேத்துவதின் அவசியம் வந்திருக்கக் கூடும்.

நாம பேசிக்கிட்டு இருக்கிறது எல்லாம் பல ஆயிரம் வருஷங்களை கடந்து, இன்னும் மனிதன் முழுதுமாக நாகரீகமடையாமல் இருந்ததிற்கு முன்னாடி உள்ள கதை. அது போன்ற இடப்பெயர்வு ஓரளவிற்கு கற்காலம் தாண்டி, நாகரீகமடைந்ததாக கருதிக் கொள்ளும் அய்ந்தாயிரம் வருடங்களுக்குப் பின்னாலும் பல்வேறு தேவைகளால் நாடு விட்டு நாடு போயி இடம் பிடிப்பதும், பிரிதொரு கலாச்சாரத்தை தன்னகத்தே கொண்டு அவர்களை இவர்களாக்குவதும் வரலாறறிந்ததே!

அந்த காலக் கட்டத்தையும் நாம் கடந்து அண்மைய 1000 வருடத்திய வரலாற்றை புரட்டினாலும் இது போன்ற அவசியமே இருந்து வந்திருக்கிறது. ஏன் இன்று கூட ஓர் அந்திய நாட்டின் இயற்கை வளத்தைச் சுரண்ட கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு நாடு விட்டு நாடு சென்று ஆளுமை செய்து வருவதும் நடந்துதான் வருகிறது. கண்டும் வருகிறோம்.

அது போன்ற கால கட்டத்தில் இடப்பெயர்வின் பொருட்டு பிரிதொரு கலாச்சாரத்தை உட்கொள்ளுவதோ, இடம் பிடிப்போ ஒன்றும் புதிதல்ல. அது அன்றைய காலத்து நடைமுறை, எதார்த்தம்! அப்படியாகத்தான் வட அமெரிக்காவிலேயே ஒரு நாள் கொலம்பஸ் கால் வைத்து ‘யுரேகா!’ என்று கத்தி கூப்பிட்ட அன்றைய தினத்திலிருந்து செவ்விந்தியர்கள் அழிக்கப்பட்டு இந்த பரந்த நிலப்பரப்பை தனதாக்கிக் கொண்டார்கள், காலனிய மக்கள். அதற்காக, நவீன அமெரிக்காவின் இடம் பூர்வீக குடிகளான எங்களுடையது என்று நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கும் இன்றைய நாளில் அவர்கள் ஒரு கோரிக்கையை வைத்தால் நிலத்தை மீட்டெடுக்க விட்டுவிடுவார்களா? கனவிலும் நிகழாதுதானே!

இப்போ நம்ம விசயம். மொகலயா காலத்தில் அப்படியாக இடப்பெயர்வு பண்ணி இங்க வந்து தனக்கு வேணுங்கிற (அதுக்கும் முன்னடி எங்கங்கோ இருந்து எல்லாம் புகுந்து அள்ளிகிட்டு கொண்டு போயி வைச்சிருக்காங்க அது வேற விசயம்) மாதிரி ஆட்சி நடத்தி ஒரு நாட்டை ஆண்ட காலத்தில தனக்குத் தேவையான வழிபாட்டுத் தளம், அரசாங்கம் நடத்த கட்டடமின்னு கட்டி ஜெக ஜோதியா வாழ்ந்திட்டு பிரிதொரு நாள் கிளம்புற நேரம் வந்தவுடன் மிச்சங்களாக இது போன்ற சுவடுகளையும், அவர்களின் வழியை பின்பற்றி வாழ்ந்த மக்களையும் விட்டுட்டு போயிருக்காங்க.

அதுக்குபிறகு, இன்னுமொரு நாடு பிடிப்பு நடக்கிது. அது போன்றே அவர்களும் செய்துவிட்டு போகிறார்கள். இடையில் ஒரு நாடா சேர்ந்து போராடி, நாடுங்கிற ஒரு கான்செப்டிற்குள்ளர நாம முதல் முறையா நுழையிறோம். அன்றைய தேதியிலிருந்து அதுக்குள்ளர வருகிற எல்லா இன, மத, மொழி மக்களும் ஒரு நாடுங்கிற கட்டமைப்பிற்குள்ளர அவங்கவங்க வழித் தோன்றல், வரலாறு என்றும் உள்ளடங்கி வந்தாச்சு, நல்லா புரிஞ்சிக்கணும். இனிமே உள்நாட்டு குழப்பமே டைம் பாசிற்கு கூட இருக்கக் கூடாது. ஒரு நாடாக இருந்து அத்துனை பன்முகத் தன்மையையும் உள்வாங்கி அது வரைக்கும் எது நடந்தேறி இருக்கிறதோ, அதனையும் ஏத்து அவர்களின் வாழ்வு முறைக்கும் மரியாதை கொடுத்து, உயிருக்கும் உத்திரவாதம் வழங்கி ஒரு பாதுகாப்பான இடத்தில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம் என்று உணர வைப்பதில்தான் ஒரு நாட்டின் அமைதியும், முன்னேற்றமும் இன்றைய நிகழ்காலத்திற்கு உகந்ததாகவும் இருக்க முடியும்.

அதனைத் தவிர்த்து, புராண கால இதிகாசங்களைக் கொண்டு நம்பிக்கையின் அடிப்படையில் 500 வருடங்களுக்கு முந்திய வரலாற்று சிக்கலை இன்றைய நாகரீகமடைந்த நாடாக, தனக்கென சட்டங்களையும் கொண்டு இயங்கும் ஒரு நாடு ‘பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை’ மட்டுமே அடிப்படையாக கொண்டு நிகழ்காலத்தை சிதைத்துக் கொள்வது எந்த விதத்தில் சமயோசித யுக்தியாக இருக்க முடியும்? கண்டிப்பாக பண்படைந்த மக்களை உள்டக்கிய ஒரு நாடாக இது போன்ற நிகழ்வுகள் நம்மை மிகவும் வெட்கித் தலை குனிய வைக்க வேண்டிய இடத்திற்கே நகர்த்தும்! இன்றைய வரலாற்றுச் சின்னங்களை நேற்றைய பழிக்குப் பழி சிறுமையைக் கொண்டு சிதைப்பதும், அதன் வழியில் இன்றைய வாழ்வு சார் மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பங்கம் வருமாறுபிரச்சினைகளை உருவாக்கிக் கொள்வதும், தன் தலையை தானே கொல்லிக்கட்டையால் சொரிந்து கொள்வதற்கு சமம் என்பேன்.

இந்த பாபர் மசூதி இடிப்பும், ஆஃப்கானிஸ்தீய புத்தர் சிலை இடிப்பிற்கும் பெரிய வித்தியாசமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அந்த சிலை இடிப்பு இன்னமும் உலக அரங்கில் ‘காட்டுமிராண்டித்தனமாகத்தான்’ அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டுள்ளது. அது போலவேதான் இந்த நவீன உலகில் புராண காலத்து நம்பிக்கையைக் கொண்டு ஒரு வரலாற்றுச் சின்னத்தை அன்று இடித்ததும். ஆக மொத்தத்தில இந்த ஓட்டு ஆண்டிங்க அவங்களோட வயித்துப் பொழப்பிற்கு எல்லா பயலையும் தூண்டி விட்டு அடிச்சிக்கிட்டு சாக விடவும் தயாரா இருக்காங்க!

I feel very sad this day!- Photo Courtesy: Net

Related Posts with Thumbnails