Tuesday, November 30, 2010

இயற்கையின் ஒளி விளையாட்டு :Photos 1

#1 உன்னுள் எனைக் காண்கிறேன் ...#2 எத்தனை விந்தையடா...!
#3 ஆசை நிறைவேறுமா? கண்களை மூடிக் கொண்டு ஊதி மொத்த புற இதழ் கற்றைகளையும் தள்ளுங்க பார்ப்போம்...#4 இந்த காட்டுப் பூங்கொத்து யாருக்கு...? [பின் இணைப்பு - இந்தப் பூங்கொத்தை தருமிக்கு வழங்கிவிட்டேன் - அவரின் இலக்கிய பயணத்தில் மென்மேலும் பல சிறப்புகளை எட்ட வாழ்த்துக்களுடன் ;-) ]#5 ஒற்றை டூலிப் பறிக்கக் கூடாது...
#6 ரோசி ரோஸ் - வெட்கத்தின் உட்சத்தில்...#7 ஒரு சிறு நெல்மணியின் அளவில் உள்ள விதைக்குள் இத்தனை கவிதையான அழகா...*************************************
******************************

பி.கு: இந்தக் கவிதையை எல்லாரும் கேட்டிருக்கீங்களா? கமல் எழுதி, த்ரிஷாவோட வாசிச்சிருக்கார். பெரிய பெரிய விசயமெல்லாம் சொல்ல வந்திருக்காருங்கோவ்... ரெண்டு மூணு தடவ கேட்டா புரியுற மாதிரி இருக்கு. கேளுங்க! :)

Thursday, November 18, 2010

பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உரையாடல் இடைவெளி: What if...

தொடர்ந்து பதிவுகளா கொடுப்பதாக இந்த வாரம் அமைந்து போனதிற்கு வருந்துவதா? மகிழ்ச்சி கொள்வதா? பொதுவாக பழக்க போதைக்காக பதிவு எழுதுவது என்பது என்னிடம் இல்லை, சராசரியாக ஆண்டிற்கு 25 பதிவுகளே பதிந்து வருகிறேன். அது போன்ற பதிவுகளும் உள்ளிருந்து கொப்பளித்து வெளிக் கிளம்பும் வாக்கில் அமைந்தாலே உண்டு.

எண்ணங்கள் தவிர்க்க முடியாத வழியில் ஒரு குழந்தை முட்டிக் கொண்டு தாயின் மடியிலிருந்து வெளிவருவதாகவே எனது கட்டுரைகளும் இருந்தாலே ஒழிய அது வெளி உலக பார்வைக்கு கிடையாது. அப்படியாக உறங்க போட்ட கட்டுரைகளும் என்னிடமுண்டு. எதற்காக இதனை இங்கு முன் வைக்கிறேன் என்றால் தொடர்ந்து பதிவுகளை கொடுத்து திகட்ட வைத்து விடக் கூடாதே என்பதின் அடிப்படையிலேயே. நோ மோர் சுய புராணம்!

இந்த வாரத்தில் பல பதிவுகள் அவரவர்கள் பார்வையில் எது ஒழுக்கம்/பண்பாடு/பாரம்பர்யம்/கலாச்சாரம் என்று முன் வைத்து தன் தனது குதிருக்குள் எது போன்ற ஊறல்கள் இருக்கிறது என்பதனை மூடியை அகற்றி காமித்துக் கொண்டார்கள். என்னுடைய பெற்றோர்களின் வளர்ப்பின் அடிப்படையிலும், அவர்களைத் தாண்டி எனக்கு கிடைத்த வாய்ப்பின் அடிப்படையில் பெறப்பெற்ற உலக ஊடாட்டங்களைக் கொண்டும் எது போன்ற மன முதிர்ச்சியை, விசயங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அப்படியே இல்லையெனில் கேள்விப்படும் அல்லது அந்த சமயத்தில் என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியாத விசயங்களில் தலையை குனிந்து கொண்டு அதில் என்ன இருக்கிறது ஏன் என்னால் என் மன உலகை அந்த விசயம் சார்ந்து விரித்துக் கொள்ள முடியவில்லை என்ற பாங்கில் உள்ளரயே குமைந்துக் கொண்டு, காணாங் கோழியாகிவிடுவேன்; நன்கு புரிந்துகொள்ளும் வரையில்.

இங்கு நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையின் நிகழ்வுகளும், அது இயங்கும் தன்மையும் ரொம்ப விசிச்சிரமானது. எப்படியான வளைவுகளில் எது போன்ற ஆச்சர்ய விசயங்களை நம் வழியில் போட்டு அதனை புரட்டிப் போட்டுவிட்டு மேற்கொண்டு நம் பயணத்தை உந்தி தள்ள சவால் விடப் போகிறது என்பது யாருக்குமே தெரிவதில்லை.

அது போன்ற சவால்கள் மரணம் என்பது எவ்வளவு நாம் ஒவ்வொருவருக்கும் நிச்சயதாம்பூலம் செய்யப்பட்டு எதிர் நோக்கி காத்து கொண்டிருக்கும் ஒரு கொண்டாட்டமோ அது போலவே இது போன்ற வாழ்வின் சவால்களும் வந்து போகும். நாம் வளரும் பொழுது, அதிர்ஷ்ட வசமாக பொறுப்பான பெற்றோர்களை பெற்றிருக்கும் பட்சத்தில் அவர்களும் அவர்களுக்குத் தெரிந்த சமூக அறிவைக் கொண்டும், தானே வளர்த்தெடுத்துக் கொண்ட சுய அறிவையும் கொண்டுதான், தன் குழந்தைகளுக்கு வாழுமிடம், சூழல்களின் வழியாக கையிறக்கம் செய்து கொடுத்து வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த பெற்றோர்களுக்கும் ஓர் அறிவுசார் எல்லை இருக்கிறது. அதனைத் தாண்டி தான் பெறாத அறிவையும், பேரையும், புகழையும் அடையவே பொறுப்பாக நின்று தனக்கு சரியென பட்ட விசயங்களைக் கூறிக் கொண்டே தன் பெற்ற கல்வியை விட தன் குழந்தைகளுக்கு சிறப்பாக அமையுமாறும், தாங்கள் புழங்கிய மனிதர்களைக் காட்டிலும் இன்னும் கூடுதலாக அறிவில் சிறந்த மனிதர்கள் உலவும் உலகில் சங்கமித்து பரந்து விரிந்து வன்முறையற்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்து அவர்கள் சந்ததியை பெருக்க வேண்டுமென்று நினைத்தே அவர்களுக்கு கிடைக்காத அத்தனை வாய்ப்புகளையும் மறந்து/மறுத்து குழந்தைகளுக்கு வழங்கியே வாழ்ந்து விடுகிறார்கள், இல்லையா?

பெற்றோர்களுக்கும் அறிவுசார் எல்லைகளைக் கொண்டு என்று வரும் பொழுது, அவர்களுக்கு எட்டிய வளர்ச்சியைக் கொண்டே அவர்களால் தனக்கு வழங்கப்படும் வாழ்வின் சவால்களுக்கு விடையளிக்க முடியுமல்லவா? இது ஒரு சின்ன லாஜிக். தனது மகன்/மகள் தன்னைக் காட்டிலும் இன்னும் பெரிய பல்கலையில் பயிலும் வாய்ப்பைப் பெற்று, அறிவிலும், அவர்களுக்குக் கிடைத்த கூடுதல் உலக/மனித அனுபவம், வெளிநோக்கு (exposure) தளங்களைக் கொண்டு தன் இருப்பை கூடுதலாக ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளும் நிலையை எட்டிய பிறகு எப்படி அந்த மூளை இன்னமும் தனது பெற்றோர்களின் அறிவு சார் எல்லைக்கு உட்பட்டதாகவே இருந்து விட முடியும்?

அதனை ’உணர்ந்து கொள்ளும்’ பெற்றோர்கள் தனது பிள்ளைகளை வெளித் தளத்தில் எப்படி குப்புரடிச்சு எழுந்து தவழும் நிலைக்கு வந்தவுடன் தன் கண்களையே நம்ப முடியாமல் கைகொட்டி ஆர்ப்பரித்து கண்கள் அகல விரிய தங்களது முதல் அனுபவத்தை பெறுவார்களோ அதனைப் போன்றுதான், பின்னாலிலும் தன்னை விட பல வேறு வாழ்க்கை சவால்களை எதிர் நோக்கி முன்னெடுத்துச் செல்லும் பக்குவத்திற்கு வந்திருந்தால் வாயடைத்து சந்தோஷத்தில் நின்று அனுபவிப்பார்கள்.


தன் வயதில், அதே தெருவில் ஏதோ ஒரு social stigmaவைக் கொண்டு ஒரு குடும்பமே வெட்டிக் கொல்லப்பட்டதையோ, அல்லது சமூகமாக நெருக்கடி பேச்சுகளுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்வதையோ அவர் கண்ணுற்றிருக்கலாம் அது அப்படி நிகழ்ந்தது சரியென்றும் எண்ணியே அவரும் தனது முதுமை எட்டியிருக்கலாம். ஆனால், அந்த பெற்றோர்களைக் காட்டிலும் பல சாத்திய வித்தைகளை பெறும் வண்ணம் வாய்ப்புகளை பெற்று வளர்ந்த இந்த மனிதனும் அதே பாதையை தேர்ந்தெடுக்கிறான் என்றால், எங்கே தவறு நிகழ்ந்திருக்கிறது?

இப்போதான் பதிவின் கருவிற்கு வருகிறேன். இங்கேதான் குழந்தை பருவத்திலிருந்து பதின்மம் வரைக்குமான பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உரையாடல் எந்தளவிற்கு அமைகிறதோ அதனை ஒட்டியே எதிர்கால சமூக முகம் காட்டல் ஒரு தனி மனிதனுக்கு இருக்கப் போகிறது என்பேன்.

சில சமயங்களில் இந்த உலகம் பூராவும் வாழ்க்கையில் பக்குவ மடைந்த மனிதர்கள் கல்வியறிவே இல்லாது போனாலும் ஒரு அன்னை தெரசா ரேஞ்சிலேயோ ஏன் அப்படி, குறைந்த பட்சம் மனிதாபிமான முள்ளவர்களாக, தன் மனசாட்சியைக் கேட்டு தனக்கு நேர்ந்தால் (what if...) என்ற அடிப்படைக் கேள்வியை கேட்டுக் கொள்ளும் நல்லவர்களாகிப் போய்விடுகிறார்கள். அவன் கைக்கு மீறி நடந்த ஒரு நிகழ்விற்காக அவன் கழுத்தில் நான் கத்தியை வைக்கிறேனே, நாளக்கி இதே போன்று என்னால் எடுக்கப்படாத ஒரு முடிவிற்காக என் கழுத்தில் அவன் கத்தியை வைத்தால்.... (அப்படியாக யோசிப்பது...)

ஊரில் ஒரு சம்பவம் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இரு தரபட்ட பெற்றோர்களை வைத்து பார்க்கலாம். ஒரு பெண் தனக்கு தன் பெற்றோர்கள் பார்த்து செய்யப் போகும் திருமணம் பிடிக்காமல் தனக்கு பிடித்தவனுடன் நடையைக் கட்டி விடுகிறாள். அதுவும் திருமணத் தேதியெல்லாம் குறித்து பத்திரிக்கையும் அடித்து விநியோகித்து என்ற காலகட்டத்தில். இப்பொழுது இது வெளியில் தெரிய வருகிறது, வளர்த்தெடுத்த குடும்பத்திற்கும், தாம்பூலம் போட்ட குடும்பத்திற்கும் பிறகு சம்பந்தமே இல்லாமல் வெளியில் நின்று வேடிக்கை பார்க்கும் ஊருக்கும் என்று வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது நல்ல பண்பாட்டுடன் நடந்து கொள்ளும் படிப்பறிவே இல்லாத பெற்றோர் # 1) தனது பிள்ளைகளுடன் இரவு உணவை உண்டு கொண்டே சம்பாஷிக்கிறார்கள்... நன்றாகத்தானே போயிக்கொண்டு இருந்தது எப்படி பெத்தவங்களுக்கே தெரியாமல் இப்படி நடந்து போனது, இன்னும் கூடுதலாக அவரின்/ளின் அப்பா நேரத்திற்கு வீட்டிற்கு வந்திருக்கலாம், அவள்/னுடன் பேசி தெரிந்து கொண்டிருக்கலாம், வீட்டில் உரையாடுவதற்கு கூடுதலாக வாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கலாமென்று லாஜிக்கல் விசயங்களின் பொருட்டு பேசிக்கொண்டே... ம்ம்ம் என்ன பிரச்சினையோ நமக்குத் தெரியாது. பாவம்! எவ்வளவு மனக் கஷ்டமோ இப்பொழுது...

என்று பேச்சை அடுத்த தளத்திற்கு நகர்த்தி எடுத்துச் செல்வார்கள். அது போன்றே ஒரு தொழு நோயாளியோ அல்லது மனப் பிறழ்சி கொண்டு அலைந்து திரியும் ஒரு நபரைப் பார்க்க நேர்ந்து அவர்கள் மற்ற சிறார்களால் கல்லை விட்டு எரிந்தோ அல்லது பரிகசித்து பேசி/துன்பமிழைப்பதனைக் கண்டால் தனது பிள்ளைகளுக்கு அது போன்று பேசுவதின் ‘அறியாமை’யையிம், அது துன்பம் இழைக்கப்பட்டவருக்கான வலியையிம் எடுத்துரைப்பார்கள் - அது பண்பாட்டுடன் வளர்ந்து வரும் குடும்பத்துக்கான அறிகுறி. அதாவது அடுத்தவர்களின் மனது புண்பட தன் வழியில் நேரடியாக ஒரு விசயத்தை இழைக்காதே என்பது அடிப்படையில் விதைக்கப்பட்ட ஒரு ”யுனிவெர்சல் நல்லொழுக்கம்.” அதனை ஆண்டிபட்டியிலும் பயன்படுத்தலாம், அண்டார்டிகாவிலும் பயன்படுத்தலாம். உதை வாங்கி சாக வைத்து விடாது.

குடும்பம் # 2) நல்ல படிப்பறிவும் வெளி நோக்கு பார்வையும் இருந்தாலும் அந்த பண்பாடு என்ற வஸ்து விழிப்புணர்வு கிடையாத பெற்றோர்கள். அங்கு தினமும் அடுத்த குடும்பங்களைப் பற்றிய பொரணிபேசுதல் அவர்களின் பொழுது போக்கு. அதனில் குழந்தைகளும் தெரிந்தோ தெரியாமலோ காது வழியாக கேட்டு பழகி பிறகு தானும் கலந்து கொள்ளும் அளவிற்கு வந்த குடும்பம். அங்கும் இது போன்ற ஒரு உணவு கூடல் - அங்கும் மேற் கூறிய நல்லொழுக்க அடிப்படை குறிகளைக் கொண்ட குடும்பத்திற்கான அதே சம்பாஷணை. அங்கு பெற்றோர்கள் சொல்கிறார்கள் - காதலனுடன் நடையைக் கட்டிய பெண்ணின் அம்மா பொறுத்தான முதல் விமர்சனம் ’அவ, பொம்பளையா அவ, சரியான ஓடுகாலிய பெத்து வைச்சிருக்கா’ இப்போ அப்பா சொல்லுறார் ’நானா இருந்த்த்தாஆஆஆ அந்த பொண்ண கண்டுபிடிச்சு வெட்டி பொலி போட்டுருவேன்...’ அப்படியே தொழு நோயாளி/மனப் பிறழ்வு சூழ்நிலைக்கும் இது போன்ற முரட்டு வைத்தியம் ‘இவிங்கள எல்லாம் தெருவுக்குள்ளர விடாம கூடியடிக்கணும்... சகிக்கல’ அப்படின்னு சொல்லிட்டு நகர்ந்திடும்.

இப்போ பேசுவோம். இந்த இரண்டு குடும்ப சூழல்களில் வளர்ந்த பிள்ளைகள் எந்தந்த சூழ்நிலைகளில் எது போன்ற ரியாக்‌ஷன்களை முன் வைப்பார்கள்? அந்த அடிப்படை சம்பாஷணை விதைத் தூவல் இரு வேறு உலகங்களாக பரிணமிக்கிறது ஒவ்வொரு தனிமனித சமூக வெளி நோக்கிலும், இல்லையா? அப்பொழுது, வாழ்க்கை தன்னை விட பெரிது, சூழ்நிலைகளை அது பாட்டுக்கு நகர்த்திக்கொண்டே செல்கிறது, #2வில் அந்த அப்பா சொன்னதைப் போன்று ...அந்த பொண்ணை கண்டுபிடிச்சு வெட்டி பொலி போட்டுருவேன்னு.... சொன்னதிற்கு இணங்க அவர்களின் பிள்ளைகள் நாளக்கி இது போன்று ஒரு சம்பவம் யாருடைய குடும்பத்திலோ நிகழப் போக அதே வார்த்தையை உதிர்ப்பார் அல்லது தனக்கு தன் பிள்ளை தன்னை விட அறிவுசார் தளத்தில் எங்கோ போய் நிற்கின்றது இவரால் ஜுரணிக்க முடியாத ஒரு கருத்தியலைக் கொண்டு வருகிறது அப்பொழுது, வெட்டிப் போட்டுவிட்டு சிறைச்சாலைக்கு அவர் சென்று விடுவாரா, அல்லது தானே விஷமருந்தி மரணத்தை கட்டி பிடித்துக் கொள்வாரா?

மீண்டும் இங்கேதான் அந்த பெற்றோர்களின் அடிப்படை உரையாடல் பிள்ளைகளிடத்தில் கைகூடி மிக்க நலன் பயக்கிறது. தன் சக்திக்கு மீறிய தனிக் குடும்ப நிகழ்வுகள் தன்னைச் சுற்றி நிகழும் பொழுது (முட்டாள் தனமான, எதிர்மறை எண்ணங்களை கொட்டுவதை தவிர்க்க), what if... கேள்வியைக் கேட்டு மூர்க்கமான தன் சினத்தை மூக்கணாங்கயிறு போட்டு அடக்கிக் கொள்வதின் பொருட்டு அந்த அடிப்படைக் கல்வி உதவ வேண்டும். தன்னை விட பெரிய நிகழ்வு அது வெளியில், ஆனால் அதற்காக தான் முட்டி தேய உழைத்து உருவாக்கிய/வளர்த்த பிள்ளைகள் தன் வாழ்க்கை அளவை விட Outgrow ஆகி நிற்கிறார்கள் என்பதனால் தன் குடும்பத்தை நிந்தித்து கொள்வது எப்படி சமயோசிதமாக யோசிக்கும் மண்டைக்கு சாத்தியம்?

இப்போ புரிகிறதா? நம்முடைய பெரும்பாலான வியாதிகளின் மூலம் எங்கிருந்து வருகிறதென்று. ஆம்! நாம் பிள்ளைகளை நல் வழி படுத்தவே “நமக்குத் தெரிந்த விசயங்களை” உட்புகுத்தி வளர்க்கிறோம், ஆனால் நாளக்கி நம் மீது பிள்ளைகள் ஏறி நம் பார்வைக்கும் எட்டாத தூர விசயங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதனை நாம் உணரவேண்டும். வளர்வதுதான் வாழ்க்கை தேய்வதல்லவே!

எனவே, முடிந்தளவிற்கு குழந்தைகளுடன் கிடைக்கும் ‘வாய்ப்புகள்’ தோரும் நல்ல ’யுனிவெர்சல் ஒழுக்கம் சார்ந்த’ உரையாடல்களை நிகழ்த்துங்கள் அது பின் வரும் காலங்களில் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் யாரையும் தனி மனித குடும்பங்களில் மூக்கை நுழைத்து பரிகசிக்கும் காட்டுமிராண்டித் தனத்தை தொடராத வாக்கில். அதுவே ஆரோக்கிய வாழ்வு உனக்கும், எனக்கும் ஒரு சமூகத்திற்கும் ஏன் இந்த உலகிற்குமே!!
பி.கு: அண்மையில் இந்தக் கட்டுரை எனது பெற்றோர்களுடன் உரையாடும் பொழுது கருவாக உருவானது. இங்கே அப்படியே சிறிதும் கலப்படமில்லாமல், உங்களுக்காகவே!!

Wednesday, November 17, 2010

நான் ஏன் வலைபதிகிறேன்: சுயசொரிதல்...

ஓ! பாய்!! எங்கிருந்து இந்த பகுதியை நான் ஆரம்பிக்கிறதிங்கிறதிலேயே ஜாங்கிரி சுத்துற அளவிற்கு விசயமிருக்கு. ம்ம்ம் நான் பதிவ எழுத ஆரம்பிச்சு ஐந்து வருஷமாகிப்போச்சப்போய்... எனக்கு இந்த கணினியில தமிழ்ல கூட எழுத முடியுங்கிறதை நானே தட்டு தடுமாறி விழுந்து, அங்க நின்னு இங்க நின்னு கடைசியா இந்த வலைப்பூக்கள், பிறகு தமிழ்மணம் அப்படின்னு ஒண்ணு ஒண்ணா என் சொந்த தேடல்ல (இப்பெல்லாம் இத பயன்படுத்தவே வெக்கமா இருக்கு...) இங்க வந்து விழுந்தேன்.

ஏன் அப்படி நிகழ்ந்ததுன்னா, ஏதோ ஒண்ணு இன்னும் நிறைய மனிதர்கள்கிட்ட இருந்து கத்துக்க இருக்கின்னு தேடித் தேடி கண்டம் கண்டமா பராக்கு பார்த்திட்டு கத்துக்கிட்டு வந்தாலும், நம்ம மக்கள், நமக்கு நெருக்கமானவங்க எப்படியா உரையாடிகிட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கணும்னு வாரது இயற்கைதானே? அதானே சம்பந்தமோ, பொருத்தமோ இல்லாத இடமின்னாலும் இதுக்குள்ளர கெடக்கணும்னு ஒரு உறுதியும் கொண்டு அதுவும் நானே எடுத்துக்கிட்டது (இல்லன்னா, நான் விலகுகிறேன்னு பதிவ போடச் சொல்லும்...), யாரும் எனக்கு அறிவுரை கொடுக்கல. இங்க இருக்கவங்க யாரு என்னான்னு கூட அறிமுகப் படுத்தி அதுக்குப் பிறகு எழுந்து நடக்கவோ, தவழவோ சொல்லிக் கொடுக்கல. புதிசா வாரவங்க நிறைய பேரு நிறைய பக்க பலத்தோட, பின்னணியோட இப்பொல்லாம் வருவதனையும் அவதானிக்கிறேன்.

எல்லாமே என்னுடைய சொந்த முயற்சியில என்னோட அறிவு தளத்தில யார், என்ன சொல்லுறாங்க, எங்க உண்மை இருக்கு, எங்க பாசாங்கு நிரம்பி இருக்கு, எங்க சும்மா நேரத்தை கொல்ல யாகூ, கூகுள் சாட் அறையில இருந்து நேரடியா இங்க வந்து பழகிக்கிறதுக்கு மட்டும் இருக்காங்கன்னும், அதனைத் தாண்டி எப்படி மரணத்தை கண்ணுக்கு கண்ணாக பார்த்தவனாக, வாழ்க்கையையும் வாழ்ந்து, புரிந்து கொண்டவர்கள் யார் என்பதனையும் என்னளவிலான புரிதல்களோட மேலும் வாழ்வினை படிப்பதற்காக அவர்களின் வீடு தேடி போய் வாசிப்பதுமாக எனது ஐந்து வருட வலையுலக வாழ்க்கையை ஓட்டியிருக்கிறேன். இங்கு பல வலையுலகப் போர்களை பார்த்திருக்கிறேன், பல மனிதர்களின் நிறங்களைக் கண்டிருக்கிறேன், அவர்களுக்கான அங்கீகாரப் போரில் வாழ்வின் காலத்தினையும், தேய்வினையும் கண்டுணர்ந்ததிருக்கிறேன்.

இது எப்படி இருக்கின்னா எனக்கு, இப்படியாக; கற்பனைய விரிச்சிக்கோங்க கீழ் கண்டவாறு, எனக்கு திடீர்னு ஒரு 1000 வருஷம் வாழுற மாதிரியான வரம் கிடைச்சிருச்சு (அய்யோ நிஜ வாழ்க்கையில அப்படியான ஒரு தப்பை செய்ய மாட்டேங்க...). அதுவும் அந்த சிறப்பு வரத்தில ஒரு முப்பத்தஞ்சு மைலுக்கு மேல நிலையான இடத்தில பூமியை மட்டும் சுத்த விட்டு நான் கீழிருப்பவர்களின் வாழ்வையும், தேய்வையும் அவர்களின் பாரம்பரியம்/கலாச்சாரம்/பண்பாடு போன்ற மற்ற காலத்தினூடாக அழித்தெழுதும் விசயங்களையும் கண்ணுற்றுக் கொண்டே வாழ்ந்து வருவதனைப் போன்றதாக.

உங்களால் அனுமானிக்க முடிகிறதா அப்படிப்பட்டதான ஒரு வாழ்க்கையின் அவதானிப்பில் எத்தனை விசயங்களை கண்டுணர்ந்து எத்தனை விதமான நம்முள் எழும் கேள்விகளுக்கும் விடை கிடைத்திருக்கும் தனிமனித/சமூக வாழ்வின் பொருட்டு எது போன்ற விசயங்களில் அலட்டிக் கொள்வது நலம் பயக்கும், பயக்காது என்பதிலிருந்து இன்னும் எது எதுக்கோ சுயமாக கற்றுக்கொள்ள முடிந்திருக்கும்!

சமூகத்தில வாழ்ந்திட்டு இருக்கும் போது பிச்சை எடுத்து சாப்பிடுற நிலைக்கும் போறோமா அதுவும் நம்மோடதான், இல்ல ஊழல் செஞ்சு கோடி கோடியா சுருட்டிக் கொண்டு வாழுறோமா அதுவும் நம்மோடதான். அதப்பொருத்து ஒருத்தனுக்கும் கவலை இருக்காதுங்கிறதையும் தெரிஞ்சிக்கணும். காலம் பாட்டுக்கு இயங்கி போயிட்டே இருக்கு!

திரும்பவும் கதை. இப்போ அந்த பூமிக்கு மேல நின்னு பார்த்துட்டு இருந்தப்போ, மூணு தலை முறைக்கு முன்னாடி நம்மோட பாட்டி மொட்டை போட்டுக்கிட்டு ஆறு வயசில கல்யாணம் கட்டி, 17 வயசில அதுவோட கணவன் புட்டுக்கப் போக இதுக்கு ஒரு மொட்டை போட்டு, வெள்ளப் புடவை சாத்தி திண்ணைக் கொண்டையில உட்கார வைச்சி எத்தனை ஈ போகுது வருதுன்னு எண்ணிக்கிட்டு உட்கார வைச்சிருந்ததையும் பார்த்தோம், அதே நேரத்தில ஒரு 200 வருஷத்தை பாஸ்ட் ஃபார்வேர்ட் பண்ணி இன்னைக்கு மறுமணம் பண்ணவிட்டு அதே வயசு ஆள ISOல வேலைக்கு அனுப்பி அடுத்த நிலாவிற்கு போற ராக்கெட்டின் திசையறி மானியின் புரெஜெக்ட் கட்டுறதின் தலைமைக்கு ஆளாப் போடுற அளவிற்கு மாறியிருந்தா அதிசயமா இருக்குமா இல்லையா. வெயிட், வெயிட், இந்த நிலையில பாவம் அந்த மொட்டை போட்ட பாட்டி, வெறும் ஈயை எண்ணியே, போர் அடிச்சுப் போயி சேர்ந்திருக்கும் சமூகத்தின் மேல அத்தனை கோபத்தையும் வைச்சிட்டு; நியூக்ளியார் வெப்பனையே மனசிக்குள்ளர அது கட்டி முடிச்சிருக்கும் தான் சாவும் பொழுது இந்த ஊரையே எவனெல்லாம் கட்டிக்கிட்டு சந்தோஷமா இருந்தானோ அவனப் பூராவும் கூடவே வாரிக்கிட்டு போற ரேஞ்சிற்கு... யாருக்குத் தெரியும் அது என்ன புத்தகமா எழுதினிச்சு, நாம தெரிஞ்சிக்க.

சோ, நஷ்டம் அந்த தனி மனுசிக்குத்தான். ஆனா, அதே கால கட்டத்தில் ஏதாவது பலப்பல மனுசியோ/மனுசனோ அதன் வலியை நன்கு உள்வாங்கி சிறிது சிறிதாக நம்ம பாட்டியின் தெருமுனையிலோ ஊரின் மறு கோடியிலோ முனகியிருக்கக் கூடும். அந்த சிந்தனையின் பொருட்டு விளங்காத தடிமாட்டுத் தோல் கொண்ட மற்ற மனிதர்களுக்கும் விளங்கியிருக்கக் கூடும்; நாம் பேசிக் கொண்டிருக்கும் பாட்டியின் சிறு வயதின் தேவைகளும், ஏக்கங்களும், வலிகளும்... இது போன்றதாகத்தான் சமூகத்தின் தேவைகள் காலம் தோரும் விரித்து உள்வாங்க உதவியாக இருந்திருக்கிறார்கள். இந்தக் கால கட்டத்தில் பேசுவதற்கு கூட கூலி கிடைத்தால்தானே வாயைத் திறப்பதான சந்திப்பில் காலம் சுழன்று நம் கலாச்சாரத்தை கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் பொழுது, உண்மையான அக்கறையோடு பேசுபவர்களையும் காகம் கரைந்து கூட்டத்தை சேர்த்து அழுகி கெடக்கும் மாமீச எச்சத்தை உண்ணக் காத்து நிற்கும் ஹைனாக்கள் போல சுற்றி வந்து அவர்களை விரட்டியடிப்பதாலும், கிடைத்திருக்கும் சுய உணர்வோடு தன்னிச்சையாக சிந்திக்கும் காலங்களான ஒரு 30 வருடங்களுக்குள் என்னாத்தை பெரிசாக வாழ்ந்து முடித்ததினைப் போன்று உணர்ந்து விடப் போகிறோம்; தன் எண்ணத்தை கூட வெளிப்படுத்திவிடா வண்ணம்.

தனக்கான சிந்தனைகளுக்கு கூட வாய்பூட்டு போட்டு, நழுவிக் கொண்டு நன்றாக வாழ்ந்து முடித்திருக்கிறோம் (தனக்கு மட்டுமேயாக) என்று எண்ணி மண்ணுக்குள் புகுந்து பாறையின் ஒரு பகுதியா மீண்டும் ஆகிக்கொள்வதில், யாருக்கு லாபம்?

இப்போ பாயிண்டிற்கு வருகிறேன், என்னுடைய தளம் ஐந்து வருடங்களாக இயங்கி வருகிறது என்று கூறினேன். எழுதுவது அனைத்தும் எனக்கேயான சுய விமர்சனங்களும், என்னால் முடியாத, என்னை விட பெரிதாக எனக்கு முன்னால் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த வாழ்வை பொருத்தான சிக்கல்களில் ஏன் நான் இப்படி ரியாக்ட் செய்கிறேன்; எப்படியாக எனக்கு வழங்கப்பட்ட சூழல்களிலிருந்து மீண்டு அதன் பொருட்டான தெளிவு சார்ந்த கட்டுரைகளையுமே, தேடல்களையுமே இங்கு பிரதானமாக வைத்து எழுதி வைக்கிறேன்.

இந்த வலைத்தளத்தின் மூலமாக என் அறிவார்ந்த தளத்தில் இயங்கும் மக்களை அறிமுகப்படுத்திக் கொள்ள முடிந்தது. அவ்வளவுதான். வேறு எங்குமே இதனை வைத்துக் காரியம் சாதித்துக் கொள்ளவோ, அல்லது நாளக்கி அவர்கள் தேவைப்படுவார்கள் கர்மமே கண்ணாக கும்மியடிக்க வேண்டிய நிலையில் எந்த மனிதர்களையும் நான் பிடித்தும் வைத்திருக்கவில்லை, அவர்களும் என்னைப் பிடித்து வைத்திருக்கவில்லை? ஆச்சர்யம்தானே?! அப்படியான மனிதர்கள் இங்கு மென்மேலும் இருக்கக் கூடும்.

இது போன்ற புரிதல்கள் உண்மையாக தன்னுடைய கருத்துக்களை பதிய வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு கண்டிப்பா உதவக் கூடும். இல்லையெனில் கூட்டமாக வந்து, கூட்டமாக சென்றால் நாம் எதுவுமே தனிமனித சோதனைகள் சார்ந்து முகம் கொடுத்து, அதிலிருந்து மீண்டு எழ ஒரு போதும் தன்னை தயார்படுத்திக்கொள்ள முடியாது.

மேலும் முன்னெப்பொழுதுமில்லாத வாக்கில் இப்பொழுது இந்த இணையம் ஒரு அருப்பெரும் கதவை திறந்து விட்டிருக்கிறது. அது பல வேறுபட்ட நிலைகளில், தளங்களில் இயங்கும் ஜாம்பவான்களையும் அவர்களின் வாசிப்பின் வீச்சம், வாழ்க்கையின் ஆழம், பிற பிரதேசங்களின் பழக்க வழக்கம்/அங்கே நிலவும் கலாச்சாரம்/பண்பாடு போன்ற பல விசயங்களை ஒருங்கே கொண்டு வந்து ‘உரையாட’ ஒரு அருமையான இடமாக்கிக் கொடுத்திருக்கிறது.

இதெல்லாம் ஒரு 20 வருடத்திற்கு முன்பு கனவிலும் நினைத்துப் பார்த்திருக்காத விசயம். நானெல்லாம், அறிவார்த்தமாக இயங்கும் மனிதர்களை அவரவர்கள் இருக்குமிடங்களிலேயே சென்று பார்க்கும் நிலையிலேயே இருந்தது. அதுவும் தேடித் தேடி. இன்று அவரவர்களும் கிடைக்கும் நேரத்தில் இப்படி இணையத்தின் ஊடாக ‘உரையாட’ காத்துக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்களை படியுங்கள், எங்கிருந்து, எங்கு சென்று எது போன்ற வாழ்வுச் சாலையின் மூலமாக நடந்து எங்கே இருக்கிறார்கள், ஏன் இப்படி பேசுகிறார்கள் என்பதனை அவதானியுங்கள். நாம் செய்யும் பெரிய தவறு தனக்கு முன்னாக இருக்கும் வாய்ப்பினை பார்க்கத் தவறுவதுதான்.

பல இடங்களில் நான் குறிப்பிட்டபடி இந்த தளத்திற்கு வந்து வாசிப்பவர்கள் முதலில் என் பெயரைக் கொண்டு முன் முடிவு செய்பவர்கள் அத்தோடு நிற்கட்டும், அதனைத் தாண்டியும் எடுத்தாளும் பேசு பொருள், எழுத்து நடை உவப்பாய் இல்லையா, கழியுங்கள். பொருட்டு கிடையாது. ஆழமறிந்தவர்கள் மட்டுமே எஞ்சினாலே போதும். இந்தத் தளம் எனக்கானது, என் விழிப்பு நிலையை மேலும் வளர்த்துக் கொள்ளவும், முகம் கொடுக்கவே அஞ்சும் கேள்விகளை எழுப்பிக் கொள்ளவுமே இந்தத் தளம்.

அதன் பொருட்டு எனக்கு உறுதுணையாய் இருப்பவர்கள், இங்கே பொழங்கி வருகிறார்கள். புரியாதவர்கள், புரியும் பொழுது படித்துக் கொண்டால் போதும்!

இது எந்த தனிமனித லாப நோக்கிற்காகவும் எழுதப்படும் தளமில்லை. த்தோ, அவரை தெரிந்து வைத்திருந்தால் அது ஆகும்; இவரைத் தெரிந்து வைத்திருந்தால் இதுவாகும் என்பதற்கு - என்னை மென்மேலும் வளர்த்தெடுக்க வைத்திற்கும் ஒரு விளையாட்டுத்தளம்.

என்னுடனான இந்த ப்ளாக்கின் மூலமாக நெருக்கமானவர்களுக்கு கூட பூர்ண சுதந்திரம் கொடுத்தே வைத்திருக்கிறேன், நேராகவே சொல்லி என்னுடனான கருத்துக்களில் ஒப்புமை இல்லையெனில் எப்பொழுது வேண்டுமானாலும், சுதந்திரமாக நடையை கட்டலாமென்று. ஏனெனில், எதுவும் கட்டிப் போட்டிருக்கக் கூடாது. அவர்களுக்காக நானும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது, என்ற நல்ல எண்ணத்திலேயே. முகமூடியுடன் பழகிக்கொள்வது நேர விரயம், இரண்டு பக்கமுமே.

என்னைப் போன்று ஓடித் தேய எண்ணமுள்ளவர்கள் சத்தமில்லாமல் வந்து போவது ஒன்றே போதும், இதற்கான நேரம் செலவழிப்பதற்கான தட்டிக் கொடுப்பதாக. முகமூடிகளற்ற, உண்மையை நேசிக்கும், மரணத்தை அதன் கண் நோக்க தைரியமுள்ளவன் எஞ்சக் கடவ!

Friday, November 12, 2010

கண்ணுக்கு புலப்படாத கலாச்சாரம், பண்பாடு: A template post

கலாச்சாரம், பண்பாடு இன்னும் என்னன்னவோ சரியாகவே புரிந்து கொள்ளப்படாத ஒரு விசயத்தைப் பத்தி பேசிகிட்டு ரொம்ப அரைவேக்காட்டுத் தனமா விசனப்பட்டு பதிவுகள் மேல பதிவுகளா படிச்சு எனக்கு மண்டை காஞ்சிப் போச்சு. தேடித் தேடி அது மாதிரி பேசுற கட்டுரைகளை எல்லாம் போயி படிக்கிறதில்ல. எதிர்பாராத விதமா எடரி விழுந்து படிக்கப்போயி தனித்தனியா மறுமொழிகள் வேற இட்டு, அதனைச் சார்ந்து வேற்று சிந்தனைகளை கிளறி விடல் எண்ணி எப்பவோவது என்னோட சொந்த புரிதலை வைப்பதுண்டு.

இருந்தாலும் தனித்தனியாக விவாதித்திக்கொண்டே இருக்க முடியாது. ஏன்னா இன்றைய நவீன சூழல்ல நிறைய புதிய புதிய ஆட்களை பழைய மண்டைக்குள்ளரயே வைச்சு வெளி உலகத்திற்கு அறிமுகப் படுத்துறதுனாலே எல்லாருக்கும் பொதுவான ஒரு கட்டுரையா இருக்கட்டுமேன்னு இது.

நண்பர் கல்வெட்டு கலாச்சாரம் என்ற கழிச்சலில் போகும் வார்த்தைக்கு இப்படியாக அவரின் பதிவென்றில் விளக்கமளித்திருக்கிறார்...

...கலாச்சாரம் என்றால் என்ன என்று ஒருமுறை ஒரு பேராசியருக்கு பாடம் எடுக்கப்போய் அவர் அதில் இருந்து என்னிடம் இருந்து விலகிப்போய்விட்டார். நான் சொல்லும் பேராசிரியர் தமிழர் அல்ல வட இந்தியர் ஒருவர். கலாச்சாரம் என்பது எப்போதும் இறந்தகாலத்தைக் குறிக்கும். இறந்தகாலம் அல்லது கடந்தகாலம் என்பது எல்லை இல்லாதது. கி.பி என்று ஆரம்பித்து கடந்தகாலத்தை நோக்கிச் சென்றால் கிறித்துவின் பிறப்பில் நின்று அந்தர்பல்டி அடுத்து கி.மு என்றாகி எல்லையில்லாமல் விரியும்.

கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று புலம்பும் பெரிசுகளிடம் "எந்த காலகட்டத்திற்கான கலாச்சாரம் இப்போது இந்த ஆண்டில் கெட்டுவிட்டது?" என்று கேட்கலாம். ஒரு பேச்சுக்கு கண்ணகி காலத்தில் இருந்ததே அக்மார்க் கலாச்சாரம் என்றால், எல்லா ஊரிலும் பரத்தையர்கள் பகிரங்கமாக வாழ அதே பெரிசுகள் ஒத்துக்கொள்வார்களா? இல்லை, குறைந்த பட்சம் "கட்டைவண்டியில் மட்டும்தான் பயணம் செய்வேன்" என்று வாழ்வார்களா? டயர் வண்டி வந்த காலத்தில் கட்டைவண்டிக்காரர்களும், கட்டை வண்டிக்கு சக்கரம் செய்யும் தச்சர் மற்றும் மேல் இரும்புப்பட்டை பட்டை செய்யும் கொல்லரும் "இதெல்லாம் அழிவுக்கான அறிகுறி . டயர் வயக்காடில் போனா நல்லதா?" என்றுகூட அலுத்துக் கொண்டார்கள். ட்ராக்டரே போகும் காலம் வரவில்லையா? கூமுட்டைகள் பேசும் கலாச்சாரம் என்பது தனக்குத் தெரிந்த வரலாற்றில் இருந்து வசதிப்படி செலக்ட் செய்து கொள்வது.

இதுதான் டமிளனின் கலாச்சாரம் என்று ஏதேனும் ஒரு காலத்தை மட்டும் குறிக்க முடியாது. ஒவ்வொரு காலத்திலும் அந்த அந்த சூழலுக்கு ஏற்ப ஒருவித பழக்கங்கள் இருந்து இருக்கும். அடுத்து வரும் காலங்களில் அது மாறிவிடும். கண்ணகியின் பாட்டிகூட கண்ணகியிடம் "அந்தக்காலத்தில் இருந்த மாதிரியா இருக்கு? காலம் கெட்டுப்போச்சு. சூதானமா இரு புள்ள‌" என்று சொல்லி இருக்கக்கூடும். அந்தப்பாட்டிக்கு அவரின் காலம் நல்ல கலாசாரம். நமக்கு?

கலாச்சாரம் என்பது வரலாறு. மேலும் கலாச்சாரம் என்பது மற்றவர்களால் மதிப்பிடப்படும் ஒன்று. பண்பாடு, கலாச்சாரம் குறித்து விரிவாக எழுதும் போது நிறைய உரையாட வாய்ப்புண்டு...


இப்போ என்னோடது. கீழ் படிக்க நேர்பவை பின்னூட்டமாக எழுத ஆரம்பித்தது இந்தப் பதிவிற்காக... ஆபத்தான கலாச்சாரம்...!

வாழ்க்கை என்பது ஒரே நேர் கோட்டில் ஓடுவது கிடையாது. அது மனிதருக்கு மனிதர் புரிந்து கொள்ளும் படிகளைக் கொண்டு வளைந்து வித்தியாசப்பட்டு நிற்கிறது; எப்படி வான்வெளியில் பொருட்களின் பருமனுக்கு ஏற்ப வெளியே வளைந்து பிற பொருட்களின் ஈர்ப்பினிலின்றி விலகி ஓடவோ, இழுத்து பிடித்து தன்னைச் சுற்றி சுழலலவோ ஆக்கிக் கொள்வதனைப் போன்று.

இந்த தவறாக புரிந்து உள்வாங்கி கொள்ளப்பட்ட “கலாச்சாரம்” என்ற ஒற்றைச் சொல் எப்படி அடுத்தவரின் உடல் நிலையையிம், அவரின் தினசரி வாழ்க்கையையில் கூட நிம்மதியாக இல்லாமல் ஆக்கும் அளவிற்கு, தன் கையை மீறிய ஒரு விசயம் பாதிப்பினை வழங்கி விடுகிறது.

ஒருவருக்கு ஒரு விசயம் அதிருப்தியையும், கலக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்பதற்காக காலம் பிறர் ஒருவர் தன் வளர்ச்சியைக் கொண்டு எடுத்திருக்கும் முயற்சிக்கு அவரது அனுபவத்தின் மூலமாக தேடிச் சென்றடையக் கூடிய பாடங்களை வழங்காமல் அவர்களின் வாழ்கையை முடித்து விடுவது கிடையாதுதானே!

எதார்த்த வாழ்வில் விசயங்களின் ஓட்டம் அவ்வாறாக சுழன்றடித்து ஓடித் தேய்கையில் எப்படி தனி ஒருவனாக கடந்த கால விழுமியங்களில் சிக்கி தனக்கு உவப்பாய் இருக்கிறது என்பதற்காக, முட்நோக்கியே நகரும் கால அம்புக்குறியை வளைத்து பின்னோக்கி இழுக்க முடியும்.

இங்கு நம்மால் முடிந்தது, ஒதுங்கி நின்று அது போன்ற அனுபவப் பாடம் வேண்டியவர்களை விட்டு அதன் சாதக பாதகங்களை பெற விடுவது மட்டுமே! அந்தக் கட்டுரையில் பேசப் பட்ட விசயம் ஆண்/பெண் திருமணம் கட்டாமல் “சேர்ந்து வாழ்வது”பற்றியது என்பதால் இப்படியாகச் சொல்லியிருந்தேன். அது போன்ற ஒரு வாழ்வுச் சூழலில் ஈடுபடுபவர்கள் ஒன்றும் வயது முதிராத பள்ளிச் சிறார்கள் இல்லையே, உடல்/மன ரீதியில் சுயமாக சிந்திக்கும் நிலையில்தானே இருக்கிறார்கள்... இந்த பின்னணியில் எல்லாம் அவர்களுத் தெரிந்தேதானே இறங்குவார்கள்; எல்லா சாதக/பாதங்களையும் நேர் கொள்ளும் முடிவோடு.

ஏன், அது போன்ற உறவு நிலைகளில் கற்றுக்கொள்வதற்கு ஒன்றுமே இல்லையா? ஏன், மனிதனின் மனம் எப்பொழுதும் ஆண்/பெண் உறவு நிலையை குறுக்கி காமம் என்ற ஊறுகாய்க்குள்ளரயே தன்னையும் சேர்த்து ஊற வைத்துக் கொள்கிறது? எங்கே அப்போ தவறு நிகழ்கிறது? ஒரு பெண்ணை ஆற்றைக் கடக்க தோளில் சுமந்து சென்று அத்துடனே சுமையை இறக்கிய நபரா நீங்கள், அல்லாது மனத்துடனேயே வாழ்வுச் சாலையெங்கும் தூக்கிச் சுமக்கும் நபரா?


.... அந்தக் கட்டுரையில் சில சமூகம் கெட்டுப் போகிறதே என்று விசனத்துடன் என்ன செய்து இதனை கட்டுப்படுத்தாலம் என்ற தொனியில் கீழ்காணும் வரிகள்...

//'நமது கலாசாரத்திற்கு களங்கம் கற்பிக்கும்' //

//என்ன செய்து இதனை நிறுத்த போகிறோம் அல்லது தடுக்க போகிறோம்...?//


அடுத்து கலாச்சாரம், கலாச்சாரம் என்று பேசுகிறோமே, எது கலாச்சாரம்? பெற்றவர்களை புறந்தள்ளி வாழ்வது, தனக்காக தனது படிப்பை/தேவைகளை விளக்கி வைத்து மற்றவருக்காக வழி விட்டு வாழ்ந்தவர்களை தன் தேவை முடிந்தவுடன் அவர்களை தூக்கி கடாசிவிட்டு வாழத் துணிவது, வரதட்சிணைக்கென வயதானவர்களையும் நொந்து சாகும்படியான சூழலுக்கு இட்டுச் செல்வது, நாட்டையே சுரண்டும் வாக்கில் ஊரான் சொத்தை திருடி கொண்டு போய் வைத்துக் கொள்ளும் களவாணித் தனம், ஒருத்தனுக்கு ஒருத்தி என்று ஏமாற்றிக் கொண்டு வாழ்வதெல்லாம் இந்த கலாச்சார கூண்டிற்குள் வராதா?

ஆண்/பெண் உறவு சார்ந்தும், ஆடைகள் உடுத்தி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பாங்கில் மட்டுமே இந்தக் கலாச்சாரம் விழிப்புடன் இருக்கிறதே அது ஏன்? அதுவும், இந்த உறவு நிலையில் போலியாக இணைந்தே 30, 40 வருடங்கள் என ஊருக்காக வாழ்ந்து முடிக்கும் நிலையில் - இடையில் அடிதடி, நிம்மதியின்மை, மனச் சோர்வு, அடுத்தவருக்கு என்ன வேண்டும், தன்னுடைய டேஸ்ட் என்ன, தனக்கே என்ன வேண்டும் என்றே தெரியாமல் விழிபிதிங்கி என்னமோ பிறப்பெடுத்துவிட்டேன் வாழ்ந்து முடிக்கணுங்கிற கடமை உணர்ச்சியோட மல்லுக்கட்டி அக்கப்போர் பண்ணி வாழ்வதில் என்ன சிறப்பு இருந்துவிடப் போகிறது?

அதே சமயத்தில் இப்படியாக ஆண்/பெண் உறவுகளின் சிக்கல்களை புரிந்து கொண்டு மீண்டும் நிலையான உறவுகளுக்குள் வருவது எவ்வளவு மேல் எனலாம்; தன்னைப் பற்றிய சுயமான முடிவுகளோட, தேவைகள், குறிக்கோல் என பெற்ற அனுபவங்களைக் கொண்டு தனக்குத் தகுந்த மாதிரி தைத்துக்கொண்ட உடையை மட்டும் அணிந்து கொள்ளும் பக்குவத்தோடு. ... sum of experiences = lifely wisdom for future harmony.

மாறாக மோட்டில் முட்டிக் கொள்வதனைப் போன்று ஒவ்வொருவரும் ஒரு துருவத்தில் நின்று கொண்டு, இவர் பேசுவது அவருக்கு புரியவில்லை; அவரது இவருக்கு... ஒண்ணு காட்டிற்கு இழுத்தால் இன்னொன்னு மோட்டிற்கு இழுத்துக் கொண்டுமென உரையாடலே இன்றி அமைத்துக் கொள்ளும் வாழ்வில் எப்படியான தன்னைப் பற்றிய புரிதல் முழுமையாக இருக்க முடியும்.

இன்னும் எவ்வளவோ இருக்கிறது பேசுவதற்கு. அதற்காக எல்லாரும் இப்படி செய்து வாழ்க்கை புரிஞ்சிக்கோங்கப்பான்னு சொல்லல. தனக்குப் புரிஞ்சதை வைச்சு, தன்னோட வளர்ச்சியை வைச்சு, தான் வாழும் சூழலை வைச்சு மட்டுமே இந்த மொத்த உலகத்தையும் அளந்துவிட முடியாது. அதுனாலே உடம்ப பார்த்துக்குவோம். தனிமனித நிலையில் அவங்கவங்களும் தனக்குத் தேவையான வழியில, வாழ்க்கை பாடத்தை பெற அனுமதிப்போம். அடிச்செல்லாம் பழுக்க வைக்க முடியுமா??


*** இதுவும் கலாச்சார சீரழிவிற்குள் வருமா ...

புது ஃபேஷன் ஷெட்டி, ஐயர், ரெட்டி, மேனன்: Is it fool's identity?


***அப்படியே இதுவும் வருமுங்களா பார்த்துச் சொல்லுங்க...பி. கு: அப்படி இல்லாம இந்த பொஸ்தகத்தில எழுதியிருக்கு அத தூக்கிப் புடிச்சிக்கிட்டு, த்தோ அந்த அஞ்சாவது வீட்டில இருக்கவன் தொடர மாட்டிங்கிறான் எப்படி அவன வழிக்கு கொண்டு வாரதுன்னு அடாவடியா உட்கார்ந்து யோசிச்சா, நம் பிள்ளைகளுக்கும் ஆளுக்கு ஒரு அருவா தயார் செஞ்சு தலையணைக்கு கீழே வைச்சிக்க வேண்டியதுதான் - வீட்டுக்கு வீடு. :)

Thursday, November 11, 2010

பிள்ளைகளுக்கான பாலியல் உபத்திரமும், நம்மூர்ச் சட்டமும்...

தனி மனித ஒழுக்கம் சார்ந்த குற்றங்கள் ஒரு சமூக பார்வையில் பார்க்கப்படும் பொழுதும், அதே நேரத்தில் மிக நெருக்கமாக உணரும் பொழுதும் எவ்வாறாக அந்த பிரச்சினை திசை திருப்பப்படலாம் என்பதற்கு அண்மைய கோயம்புத்தூரின் சிறார்கள் கடத்தலும் அதனைத் தொடர்ந்த அவர்களின் படுகொலையும் ஒரு உதாரணமாகக் கொள்ள முடியும்.

பரவலாக இது போன்ற குற்றங்கள் ஒரு சமூகத்தில் முற்று முழுதாக தவிர்த்து வாழ்ந்து கொண்டிருப்பதாக எந்த நாட்டிலும் காண முடியாதுதான். ஆனால், இது போன்ற ransomக்காக குழந்தைகளை கடத்தி வைத்து பணம் பறிப்பதென்பது ஆங்காங்கே பரவலாக இப்பொழுது தலையெடுத்து வருகிறது நம்மூரில் என்பது கவணிக்கப்பட வேண்டிய ஒரு க்ரைம். ஏனெனில், நம் போன்ற ஒரு ஃப்ரீ ரேஞ்சிங் சமூகத்தில் அவ்வாறாக தொடர் நிகழ்வுகளாக ஆகிப் போவதற்கு மிக்க வாய்ப்புகளும் இருக்கிறது.

ஆனால், நான் அவதானித்த வரையிலும் நம் சமூகத்தில் குழந்தைகளின் மீதான வன்முறை கட்டவிழ்ப்பிற்கு போதுமான சட்ட ரீதியான பாதுகாப்பு இல்லை என்றுதான் கருதச் செய்கிறது. இது போன்ற தற்காப்பு நடவடிக்கைகள் சட்டம் சார்ந்த தண்டனைகளில் சிறிதும் சமரசங்களற்று எல்லா இடங்களிலும் விரவி பயன்பாட்டில் இருக்கும் போதுதான், அது போன்ற செயல்களில் இறங்க எத்தனிக்கும் எதிர்கால மனிதர்களுக்கு ஒரு விழிப்பேற்றும் அரணாக இருந்து குற்றங்கள் குறைப்பதற்கான வழியாக அமைய முடியும்.

அதற்கு மாறாக ஒரு சமூகம் கண்டும் காணாததுமாக வீட்டிற்குள்ளும், வெளியிலும் பாலியல் சார்ந்த உபத்திரங்கள் தன் குழந்தைகளுக்கு நேர்ந்திருக்கும் பொழுது கட்டப்பஞ்சாயத்து நிகழ்த்தியோ, அல்லது வெளியில் தெரிந்தால் பாதிக்கப்பட்ட குழந்தையின் எதிர்காலமே பாலாய் போய்விடுமென்றோ அல்லது தன் குடும்ப மானத்திற்கே கலங்கமென்றோ அல்லது குற்றமிழைத்தவர் தனக்கு ரொம்ப வேண்டியவராகிப் போய்விட்டார் வெளியில் தெரிந்தால் அவரின் குடும்பமே நடுத்தெருவிற்கு வந்து விடுமொன்றோ நாம் சாதாரணமாக கடந்து போய் விடுவது மென்மேலும் இது போன்ற உபரத்திரவாதிகளை வளர்த்தே விடும் என்பதில் ஏதாவது ஐயமுண்டா?

இதுவேதான் மீண்டும், மீண்டும் அடக்கி வைக்கப்பட்ட புற வய உணர்வுகள் ஒரு சமூகத்தில், இது போன்ற பாலியல் துன்புறுத்தல்கள் குழந்தைகளிடத்திலும் கூட மென்மேலும் வளர்தெடுக்க வழிகோணிவிடுகிறது. உதாரணமாக, பள்ளிகளில் இது போன்ற துன்புறுத்தலை பழக்க விதத்தில் (habitual behavior) தொடர்ந்து ஒரு மனிதர் செய்து வருகிறார், அவருக்கு நல்ல பின்புலமும் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த மனிதரும் சமூகத்தில் ஒரு குடும்பத்துடன் எல்லாரையும் போலவே தானும் முழுதுமாக வாழ்ந்து முடிக்க வேண்டுமென்ற ஆசையுடனே வளைய வந்து கொண்டிருக்கிறார்; தான் செய்வது தவறு என்று தெரிந்தும் கூட அந்த குற்றத்தை தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டே.

இந்த சூழலில் சட்டம் தன் வேலையை மிகச் சரியாக செய்தால் இது போன்ற சபல மனிதர்கள் மிகச் சுலபமாக தன்னை அந்த பழக்க நிலையிலிருந்து தன்னோட குடும்ப கெளரவத்திற்காகவேனும் தன்னை மாற்றி எழுதிக் கொள்வார். மாறாக, ஒவ்வொரு முறையும் அவரின் சபல இயக்கம் வெளிப் பட்டு அவருக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு, பாதுகாப்புடன் திரியும் பொழுது, பின்னாலில் அதே முறையில் இயங்க எத்தனிப்பவர்களுக்கு எப்படியானதொரு விழிப்புணர்வு கிட்டியிருக்கக் கூடும்.

நாமும் தினசரிகளிலும், அண்டை அயலர் வீடுகளிலும் பல இது போன்ற குழந்தைகள் சார்ந்த பாலியல் உபத்திர இன்னல்கள் பற்றி வாசித்து விட்டு நகர்ந்து கொண்டேதான் இருப்போம். ஆனால், இதற்கு பின்னான சமூக படிப்பும், சட்டத்தின் கிடுக்கிப் பிடியான முறையான தண்டனையும் அமுலில் இருந்தால் கண்டிப்பாக விசயம் பரவலாக சென்றடைந்து மனசாட்சிக்கு பயப்படாதவர்களுக்கு இந்த சட்டமாவது பயமுறுத்தி நேர் பாதையில் பயணிக்கச் செய்யலாம்.

பல நிகழ்வுகளில் கவனித்திருக்கிறேன், அமெரிக்கன் மீடியாக்களில் இது போன்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறும் கனம்தோரும் பலவிதமான சட்ட ரீதியான பாய்ச்சல்கள் அந்த குற்றம்சாட்டப்பட்டவரின் மீதானது மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. ஒரு முறை மாட்டினால், சொச்ச மிச்ச காலங்களும் அந்த மனிதரின் பின்னாலே அந்த குற்றம் ஊர் உலகறிய தொடர்கிறது. அதுவும் எதார்த்த ரீதியில் மிகவும் உண்மை. முதலில் தேசிய அளவில் மீடியாக்களில் அந்த நபரின் முகம் நிறுத்தி நிதானமாக காட்டப்படுகிறது. பின்பு அவருக்கான தண்டனை சிறைச்சாலையில் கழித்து முடித்து வெளியில் வந்தால் அவருக்கான child predator என்ற அடைமொழியுடன் கூடிய ஒரு எண்ணும், முழுமையான மற்ற விபரங்களும் அடங்கிய ப்ரோஃபைல் ஒன்றும் தயார் செய்யப்பட்டு அது கணினியிலேயே பொது மக்களும் பெறத்தக்க வகையில் போட்டு வைத்து விடுகிறார்கள்.

இப்பொழுது அந்த குறிப்பிட்ட நபரோ அல்லது அது போன்ற குற்ற பின்னணியில் சிறை சென்று வெளி வந்தவர் எந்த நகரத்தில், எந்த தெருவில் வசிக்கிறார் என்றளவில் தெரிந்து கொள்ளக் கூடிய வசதிகளை செய்து தந்து விடுகிறார்கள். எனவே எப்பொழுதும் அது போன்ற நபர்கள் தொடர் கண்கானிப்பில் இருப்பதனைப் போன்றே ஆகிவிடுகிறதல்லவா?

இது போன்ற கடுமையான சட்டம் தன் வாழ் நாள் முழுதும் தன்னைச் சுற்றி வருகிறது என்று ஒரு சமூகத்தையே விழிப்புணர்வு அடையச் செய்யும் பொழுது, குற்றமிழைக்க எண்ணும் சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கொண்டு வெளிக்கிட துணிந்தாலும் சம்பந்தப்படுபவர் ஒரு கனமேனும் எண்ணிப்பார்க்கக் கூடிய நிலையை உருவாக்கித் தருகிறது. ஆனால், நம்முடைய சமூகத்தில் இப்படியா செய்திகளில் படிக்கிறோம்? முதலில் பத்தி பத்தியாக சம்பவ வர்ணனை விரசமூட்டும் வகையில், பிறகு கட்டுரையின் கடைசி பத்தியில் போனால் போகிறதென்று அந்த நபரின் அடுத்த நிலை எப்படியாகும் என்ற சொல்லிவிட்டு ஊத்தி மூடிவிட்டு நகர்ந்து விடுவார்கள். அடுத்த கேசு கிடைக்கிறதா வேறு எங்காவது என்று, இதுதானே நிலமை?

மேலும் சட்டத்தை முறை படுத்தி செலுத்த வேண்டியவர்களே சிறு, சிறு சபலங்களுக்கு பின் சென்று தங்களுடைய வாலிடிட்டியையே இழந்து நிற்கும் பொழுது, எப்படி குற்றம் இழைக்க வரிசை கட்டுபவர்களிடத்திலும் சட்டம் முறைப்படி இயக்கப்படுமென்ற விழிப்புணர்வு இருக்கும். இது போன்ற சிவிக் சென்ஸ், சாலை விதிகளை கடைபிடிக்காதவர்களிடமிருந்து ஆரம்பித்து எந்த சமரசமுமின்றி, ஏழை/பணக்காரன்/பதவி என்று பார்க்காமல் இயக்கப்படுத்தி சட்டம் உயிரோடும், உயிர்ப்போடுமிருக்கிறது என்று காட்டினாலே ஒழிய குற்றங்களின் வீச்சம் குறையாது.

அப்படி ஒரு நாள் மலர்ந்து விட்டால் இது போன்ற ரசிக மனோபாவ ‘என்கவுண்டர்கள்’ தேவைப்படாது. இந்த என்கவுண்டரின் மூலமாக என்னதான் நமக்கு புரிய வைக்க எத்தனிக்கிறார்கள், ஒரு சமூகமாக இது போன்ற நிகழ்வுகளுக்கு பின்னான சட்ட மாற்று மாசோதாக்களை எழுப்பவதற்கான வாய்ப்புகளைத் தவிர்த்தும், சமூக அறிவியல் ரீதியில் குற்றவாளியிடமிருந்து மீண்டும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் எது போன்ற விசயங்களை கரந்து அதனை நடைமுறை படுத்த முடியுமென்ற ஆய்வுகளற்றும், பிராச்சார தொனியில் சமூகமறிய வழங்குவதனைத் தவிர்த்து, ஊழல் மலிந்து வழியும் ஒரு சமூகத்தில் ப்ரீமெச்சூர்டாக வேக வேகமா ஒரு கேசை மூடுவதின் மூலம் இன்னும் காத்துக்கிடக்கும் குற்றவாளிகள் அறியாமை வழி நடந்தேரவே காத்துக் கொண்டிருப்பார்கள்.

பி.கு: குற்றங்கள் குறைப்பதற்கான ஒரே வழி சட்டத்தை சரியாக முறையாக சமரசங்களற்றும், கை நீட்டுவதை அரவே நிப்பாட்டுவதின் மூலமுமே சாத்தியம். முறைப்படி சட்டம் பின் தொடரப்படும் பொழுது அது கண்டிப்பாக மக்களின் மனதில் (pyschic) ஆழமாக பதியப்பட்டுவிடும். காசு கொடுத்து வெளிய வந்திரலாம்னு தோன்றுவது நின்றுவிட்டால், encounterபண்ணி கேசை மூட வேண்டிய அவசிமிருக்காது.

இது போன்ற சம்பவங்களையொட்டி எது போன்று பின்வரும் க்ரைம்களுக்கு நம்மை தயார்படுத்தி கொள்ள முடியுமென்று புதுக்கோட்டையில் தொடர்கொலை செய்து மாட்டிய சம்பவத்தின் பொழுது எழுதிய பதிவையும் முடிஞ்சா வாசிங்க ... புதுக்கோட்டையில் ஒரு ‘சைக்கோபாத்!” - Psychopath


Related Posts with Thumbnails