Monday, September 20, 2010

ஊடுருவி...



கிறுக்கனாக்கிப் போன அந்த
ஒற்றை வார்த்தையின் சுகத்தில்
அடர்வான ஒரு பாடலொன்றை கேட்டவாறு
காலச் சுழிப்பற்ற ஓர் ஆழ்கறுந்துளையின்
வழியாக பயணித்தவாறே அமிழ்ந்து திளைக்கிறேன்...

பெரும் வெடிப்பினைப் போல் எங்கும்
சிதறிய வெண் வண்ணத்தினூடே
கண் முன் குமிழ்ந்த உயிரினங்களுடன் ஒன்றித்து
உட்கொண்ட சங்கீதத்தில் நனைந்தபடி எனை தொலைத்து
வெளியேறுகையில்
வெளியெங்கும் சிதறியொடுங்கிய
வார்த்தை இடிபாடுகள் கிறுக்குநிலையின்
மகத்துவமறிய நிழலாடியது!

Thursday, September 09, 2010

புனைவுகளின் தீவிரம் உணர்வோம்: To Writers...!!

நேற்று ஒரு நண்பரோட அரட்டைக் கச்சேரி நடத்திக்கொண்டிருந்தேன். அவரு வலையுலகில் நடக்கும் அவ்வப்போதைய அடிதடிகளிலிருந்து எப்பொழுதாவது எழுதினாலும் கூட செறிவு மிக்க, சிந்தனைகளை தூண்டக் கூடிய விசயங்களை எழுதுபவர்கள் ஏன் விலகியே இருக்கிறார்கள் என்று என்னய சீண்டிப் பார்த்தார். அதுக்காக ”சுயமாக” தன்னை வளர்த்து எடுத்துக்கொண்ட அந்தக் கூட்டத்திற்குள்ளர விழுற ஆள்னு என்னய படிச்சி வைக்காதீங்க.

நான் எதிலும் சேராசேத்தி. இன்னும் நான் அவதானிக்கும் நிலையிலேயே இருக்கிறேன். எனக்கும் திரிச்சு எழுதும் சோ கால்ட் ‘புனைவிற்கும்’ ரொம்பத் தூரம். வலையுலக புனைவு இலக்கியம் படிச்சுப் படிச்சு, புனைவு எழுதுறது அவ்வளவு எளிமையான விசயமாக பட்டாலும் என்னால அப்படி பார்க்க முடியல :). நான் எழுதும் கட்டுரைகளிலிருந்தே புனைவிற்கு தேவையான அனேக கருக்களை எடுத்து கையாள முடியும்தான். இருந்தாலும், புனைவு கொடுப்பதற்கின்னு எனக்கு நானே பல எதிர்பார்ப்புகளை, கட்டுப்போக்குகளை உருவாக்கி வைச்சிருக்கேன்.

எப்பொழுதெல்லாம் என்னாலும் புனைவுகள் கொடுக்க முடியும், என் வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக் கொண்ட விசயங்களிலிருந்தே வண்டி வண்டியாக மூக்கை சிந்த வைக்கும், தன்னையே உணர்ந்து (தடவி) பார்த்து கொள்ள வைக்கும் ரேஞ்சிற்கு கூட அனுபவ பாடங்களைக் கொண்டு புனைவு என்ற பெயரில் வாந்தி எடுத்து வைக்க முடியும்தான். அது எனது கட்டுரைகளின் நீளங்களைக் கொண்டே கூட நீங்களும் யூகிக்க முடியும்தானே!

சரி இத்தனை முஸ்தீபுகளைக் கொண்டிருந்தாலும், ஏன் முயற்சி எடுத்துப் பார்க்கவில்லை, என்ற அடிப்படைக் கேள்வி எழும்பலாம். முதலாவது, புனைவுகளின் மூலம் நம்மிடம் இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லி பாசாங்கு செய்ய முடியாது. நன்கு அறிந்த வாசகர்களிடம் மாட்டிக் கொள்வோம். இரண்டாவதாக, தகவல் பிழையோ, அல்லது தன்னுடைய அரைகுறை மண்டைப் புரிதலை வைத்துக் கொண்டு ஒரு பெண்ணின் மூலமாக அவளுடைய வாழ்வியல் சிக்கலை சொல்கிறேன் என்று தத்துபித்துத் தனமாக நம்முடைய சிறு சாளரத்தின் வழியாக கண்ட விசயத்தை வாந்தி செய்து வைத்தால் அதுவே தம்மை விட இன்னும் பல படிகள் வளர்ச்சியில் பின் தங்கி இருக்கும் மக்களின் மனத்தில் தவறான ஒரு கற்பிதத்தை வளர்த்து விடச் செய்யலாம்.

என்னை பொருத்த மட்டிலும் கதை சொல்லிக்கென்றே பல திறமைகள் வேண்டும். காப்பியடித்து எழுதுவதான எழுத்து நடை, சொல்லாடல், வட்டார மொழி பயனேற்றம் செய்வது மட்டுமே புனைவிற்கான அடிப்படை தகுதிகள் கிடையாது என்று நினைக்கிறேன். அவன் மிக மிக கூடு விட்டு கூடு பாயும் திறன் கொண்டவனாக இருத்தல் அவசியமென்று கருதுகிறேன். அஃறிணை பொருட்கள் கூட சம்பாஷணை செய்து கொண்டால் எப்படி இருக்கும் என்ற கற்பனை உலகத்திலும் சஞ்சரிக்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும்.

விசயம் அப்படியாக இருக்கும் பொழுது மனிதர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியைப் போன்றவன் வெறும் பிறர் படைப்புகளையும், உலகச் சினிமாக்களையும், பேருந்து நிலையத்தில் அமர்ந்து வயதான பாட்டி ஒன்று பேருந்தில் ஏறக் கஷ்டப்படும் பொழுது மற்றொருவன் உதவுவதைப் பார்த்து, கேட்டு, வாசித்து கதை சொல்லியாக பக்குவப் பட்டிருந்தால் போதுமா? அது படிக்கும் வாசகனிடத்தில் உண்மையான ஒரு தாக்கத்தை நிகழ்த்தி விட்டுச் செல்ல முடியுமா? அப்படியே பயிற்சியின் மூலமாக ஒரு தேர்ந்த கதை சொல்லியாக பேர் பட்டுப் போனாலும் அது எந்த அளவிற்கு அந்த கதை சொல்லியின் சொந்தப் பார்வையில் தாக்கத்தினைக் கொடுத்து அவன் உண்மையான அகப் பார்வையினை மாற்றியிருக்கக் கூடும்?

உண்மை உலகில் சமூகம் கட்டமைத்த பல நம்பிக்கை, அவ நம்பிக்கைகளை உடைத்து, பிற விளிம்பு நிலை மனிதர்களுக்கெதிரான சமூக அநீதிகளுக்கூடான வாழ்க்கைப் பயணத்தில் தானும் பங்கேற்று எது போன்ற அனுபவப் பொதிகளை சிறிதேனும் தன்னுள் இறக்கி இருப்பார்கள். இது போன்ற என்னுடைய சொந்த எதிர்பார்ப்புகளே ஒரு கதை சொல்லியின் பின்புலமாக இருக்க வேண்டுமென்ற நிலைப்பாடோ என்னவோதான், புனைவிற்கெதிரான படிப்போட்டத்தை இன்றைய நிலையில் தடை செய்து வைத்திருக்கிறது எனதுள்ளம் என்று எண்ணச் செய்கிறது. இருப்பினும் அது போன்ற பயணங்களின் ஊடாக எழுதும் மனிதர்களை என் மனதும் தேடிச் சென்று படிக்கச் சொல்கிறது.

கற்பனை உலகில் சஞ்சரித்து எழுதும் அறிவியல் புனைவுகளின் மீது எனக்கு அலாதியான காதல் இருக்குமளவிற்கு, நம் சமூகத்தில் எழுதும் சமூகம் சார்ந்த எழுத்துக்களை என்னால் படிக்க முடிவதில்லை காரணம், அதனில் நிறைய skewed பார்வை இருக்கிறது. அது நிகழக் காரணமாக இருப்பதற்கு அவர்கள் வாழ்ந்த உலகின் பக்கமாக உள்ள பகுதியை மட்டுமே பார்த்து வளர்ந்ததுனாலேதான் என்று என்னால் கூற முடியும். அதனைத் தாண்டியும் இன்னமும் கதைச் சொல்லிகளே வளரவில்லை என்றுதானே கட்டியம் கூறி நிற்கிறது அவர்களின் படைப்புகளும்.

அப்படியாக நமது சமூகத்தில் நல்ல தேர்ந்த எழுத்தாளர் பல இளைஞர்களுக்கு ஆதர்ஷ குரு என்று பெருமையாக கூறிக் கொள்பவரும் கூட தனது பயணக்கட்டுரைகளில் தன் கண்டக் காட்சிகளை, பிரிதொறு கலாச்சாரத்தில் வாயிலாக பார்க்கும் திறனற்று அதே குறுக்குச் சந்து பார்வையோடு வெகு ஜன பத்திரிக்கைகளில் கூட வாந்தியெடுத்து வைத்திருப்பார். இது போன்ற கட்டுரைகளே ஒரு எழுத்தாளனின் வளர்ச்சியை உலகம் பொருத்து, தான் சார்ந்து வாழும் சமூகம் பொருத்து உண்மையான பார்வையினை வைக்கும் முகமாக அமைந்த சாளரம்; அந்த மனிதனை உள் முகமா படிக்க.

ஆனால், தன் ஊரின் எல்லையையே தாண்டி உலகம் பார்த்திடாத ஒருவர் பிரிதொரு கலாச்சாரத்தின் அத்தனை கூறுகளும் தெரியக் கூடியதாக பாசாங்கு செய்து எழுதும் புனைவுகள் எத்தனை தகவல் பிழைகளை கொண்டிருக்கக் கூடும். தன்னுடைய சொந்த சமூகத்திலேயே விரவிக் கிடக்கும் ஏற்றத் தாழ்வுகளை தனக்குக் கிடைத்த வளர்ப்பு சூழ்நிலைக் கொண்டு அதன் வழியாக குணாதிசியங்களின் மூலமாக குருட்டுத் தனமாக வைத்துப் பேசும் பொழுது, பிரிதொரு கலாச்சாரம், அவர்களின் வாழ்வியல் முறைகளைப் பற்றி ஆய்ந்து எப்படி biased பார்வை இல்லாமல் கொடுக்க முடியும்.

இன்றைக்கு இணையம் வழங்கியிருக்கும் வாய்ப்பு தனிப்பட்ட மனித நிலையில் ஏதாவாது எழுதி தானும் ஒரு தேர்ந்த எழுத்தன் என்று அவனளவில் பாராட்டிக் கொள்ளவே பயன்படுத்தப் பட்டிக் கொண்டிருக்குமளவிற்கு செழித்து வளர்ந்து வருகிறது. அரைவேக்காட்டுத்தனமான புரிந்துணர்வோடு மனித உணர்வுகள் சார்ந்து உளறி வைப்பது. ஒற்றைப் பரிமாணத்தில் விசயங்களை அணுகி தன்னுடைய பார்வையை பொது சமூகத்தின் எண்ணமாக புனைந்து வைப்பது என்ன எந்த விதமான பொறுப்புணர்வில்லாமல், எழுத தலைப்படுவதுமென ஜரூரா நடந்து வருகிறது.

இலக்கியம் ஒரு சமூகத்தின் சமகால நிகழ்வுகளை பதியப்படுவதாக அதன் நீள, அகலங்களை அறியும் கண்ணாடியாக அமைய வேண்டும். அதற்கு அதனை படைக்கும் படைப்பாளி எத்தனை தீர்க்கமான, திறந்த மனதுடைய, மாற்றங்களை தழுவிச் செல்லும் ஒரு கருவியாக செயல் பட வேண்டியதிருக்கும். அவன் எப்படி மூடிய நிலையில், சார்பு நிலைகளை கொண்டு இயங்கும் ஒரு சாமான்யனாக இருக்க முடியும். இப்பொழுது இயங்கக் கூடிய பல சமகால எழுத்தாளர்கள் பிளவுற்ற (duality) மன நிலையிலேயே இருப்பதாகப் படுகிறது எனக்கு.

எழுத்து என்பது என் நிலையில் ஒரு தவம் போன்றது. எழுதுவது பிரிதொரு மனிதருடன் உரையாடுவதனைப் போல சிந்தனை சிதறலுக்கு அங்கே வாய்ப்பில்லை. நேரடியாக சமயோசிதமாக, புத்திசாலித்தனமாக சிந்திக்கும் புத்தி செயலிழந்து, நேரடியான ஆத்ம உரையாடல் நடைபெறுகிறது. அப்பொழுது எழுதும் எழுத்தும் நேர்மையாக சுய லாப நோக்குகள் அழிந்து, அறச் சீற்றம் கொள்ளும் நேரத்தில் சரியாக பிரதிபலித்து சமூகத்திற்கு தேவையான விசயங்கள் வந்து சேரும். ஒரு எழுத்தாளன், படைப்பாளியாக இருப்பதால் மற்றவரின் கஷ்ட நஷ்டங்கள், ஒடுக்கப்படும் சமூகத்தில் வாழும் மக்களின் அவல நிலை அவ்வாறாக ஒடுக்கப்படும் சமூகம் தொடர்ந்து அமிழ்த்து வைக்கப்படுமாயின் அது எது போன்ற விளைவுகளை உற்பத்திக்கக் கூடுமென்ற அனைத்து விளைவுகளையும் அறிந்தவனாக இருக்க வேண்டும். அதுவே அவன் பேனா பிடிப்பதற்கான அடிப்படைத் தகுதி கூட!

ஆனால், அண்மையில் நடந்தேறிய ஈழப் படுகொலையின் போது சில விரல் விட்டு எண்ணும் படைப்பாளிகளைத் தவிர ஏனையோர் அனைவரும் முதுகெலும்பு உடைந்தவர்களாக, எழுதவே தகுதியற்றவர்களாக, தான் சார்ந்து வாழும் சமூகத்திற்கு ஒரு சொல்லனாத் துயரம் நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது பேனாவின் முனை உடைந்து விட்டதாக ஆன்மீக தத்துவங்களும், லத்தீன் இலக்கியமும், சினிமா இயக்குனர்களின் முதுகையும் சொறிந்து கொண்டிருந்தார்கள். பிறகு இவர்களின் படைப்பை எந்த சீற்றத்தை, எந்த உலக ஞானத்தை அடைய நான் வாசிக்க வேண்டும்; இவர்கள் எழுதுவதற்கான அடிப்படைத் தகுதியே இழந்து நிற்கும் பொழுது? அந்த மொழி பேசும், அந்த உணர்விற்காக இந்த துயரங்களை சுமந்து திரிபவர்களின் எலும்பு கூடுகளின் மீது இவர்கள் இலக்கியம் வடித்து அடிக்கி வைக்கும் பொழுது அவர்கள் கல்லறைகளிலிருந்து படைத்த இலக்கியங்களை கொண்டாடுவார்களா?

இதுவே இன்றைய இணைய காலத்தில் பல ’சோ கால்ட்’ எழுத்தாளர்கள் விமர்சனத்திற்கு ஆளாவதும், புனைவுகளைத் தாண்டியும் சமூக நிகழ்வுகளையொட்டி அவர்களின் கருத்துக்களை வைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதால், அவர்களின் உண்மையான குறிக்கோளும், வளர்ச்சியும் வெளிப்பட்டு சந்தி சிரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்களோ என்று எண்ணச் செய்கிறது.

எப்பொழுது ஒரு எழுத்தாளன், படைப்பாளி தான் சார்ந்து வாழும் சமூகத்தை அவதானிக்கத் தவறி, தேவையான ஏற்றத் தாழ்வுகளை செப்பனிடும் பொருட்டு தன் பொறுப்புகளிலிருந்து நழுவி தன் சுய லாபத்திற்காக பாதையை மாற்றிக் கொள்கிறானோ அவன் எழுத்தை வைத்து விபச்சாரம் செய்து வருகிறான் என்றே என்னால் பொருள் கொள்ள முடிகிறது. அதற்கு இது போன்ற புனிதமாக கருதப்படக் கூடிய படைப்புத் திறனை விட்டு விலகி விடல் நலம் பயக்கும்; பிற்கால தலைமுறைகளாவது தப்பிப் பிழைக்கும். நன்றி!

Wednesday, September 08, 2010

*வெளி...*


சோம்பலாக தலையுயர்த்தி
அவசரமொன்றும் எனக்கில்லை
என்றுணர்த்திவிட்டு அரைக்கண்ணால்
பார்த்தவாறு தூங்கிப்போனது
தெருநாயொன்று...

கண்ணில் அறையும்
வாஸ்து பார்த்து நிறமூட்டிய
வீடொன்றில் தேக்கிலிழைத்த
மரக் கதவை பிறாண்டியவாறு
தூக்க மருந்து கொடுத்தும்
திமிர்ந்து எழுந்த நாயொன்று
எஜமான் வரவிற்காய்
கோடிட்டு
பொழுதைக் கழிக்கிறது!




P.S: Photo Courtesy - Net

Sunday, September 05, 2010

ஃபேஷன் ஷோ பகுதி - 2 : Photography in Fashion Show

போன மாசம் ஒரு ஃபேஷன் ஷோ போயிருந்தேன் அங்கே சிக்கின ஒரு வாய்ப்பை எனது காமிரவிற்குள் சுருட்டினேன்னு சொல்லி முதல் பாகமா இங்கே ரிலீஸ் பண்ணியிருந்தேன்.


அதோட தொடர்ச்சிதான் இது. ஆர்வமுள்ளவர்கள் மட்டு’ம் உள்ளர பொயிட்டு வாங்க! நெஞ்சடைச்சிகிறவங்க தூரமா நின்னுக்கோங்க :) .


# 1




#2





#3






#4 நம்புங்க என்ன பார்க்கலை, என் காமிரா லென்ஸைத்தான் பார்த்தாங்கோ...





#5




#6




#7




#8




உள்ளர முடிச்சிட்டு வெளியில வந்து வேற என்ன சிக்குமின்னு பார்த்தா மையமா இந்த ஒலிம்பியன் சிலை ஆக்சன்ல நின்னுச்சு. அங்கே கொஞ்சம் நேரம் நின்னு லபக்கினேன்.




கீழே இருக்கிற படம் எப்படி?




என்னதான் சொல்லுங்க, இதுக்கு இணையாகுமா எதுவும் :) பளீர்னு கண்ணுக்கு இதமா... ஹ்ம்ம்!



Related Posts with Thumbnails