Thursday, April 09, 2009

ப்ளாக்கர்ஸ் ப்ளீஸ் தீக்குளிச்சிருங்க...

இந்தப் போஸ்டை படிச்சவுடன், அந்தப் பதிவுவோட நோக்கத்தை என்னால சரியா புரிஞ்சுக்க முடியல. இதுவரையிலும் நான் இவ்வளவு வேகமா ஒரு பதிவை எழுதி பதிஞ்சாத எனக்கும் நினைவில்லை. இருந்தாலும், அந்தப் பதிவ படிச்சிட்டு சும்மா இருக்கவும் முடியல.

தமிழகத்தில ஈழப் பிரச்சனைக்காக நீண்டதொரு கடிதத்தை எழுதி வைச்சிட்டு தீக்குளிச்சு செத்துப் போன முத்துக்குமரன் செய்தி கேட்டவுடன் மனசில ஈரமிருக்கிற எந்த ஒரு மனுசப் பயலும் பதறித்தான் போயிருப்பானுங்க.

ஆனா, இன்றைய தமிழகம், இந்தியா போன்ற அரசியல் சூழலில், சாதா மக்களுக்குள்ளும் அதனைப் பார்த்து, பார்த்து மனிதம் செத்தவய்ங்களா ஆகிப்போறதில எந்த ஒரு ஆச்சர்யமும் இல்லைதானோன்னு நினைக்கத் தோணுது.

சரி, அன்னிய நிகழ்வுல அந்தப் பாதிப்பு ஓரளவிற்கு மனுசத் தன்மையோட, சமூக கரிசனத்தோட வாழ்வறவன் எவனுக்கும்... அந்தக் கடிதம், ஒரு வாழ வேண்டியவனின் மரணத்தின் மூலமா சொல்ல வந்த பொது சமூக விசயம் அப்படின்னு வைச்சிப் பார்த்திருந்தா நாம இது போன்ற ஒரு அரசியல் வாதிகளின் தலைமையின் கீழ் வாழ்றோமேன்னு நினைச்சு ஒவ்வொருத்தனும் வெக்கித் தலை குனிஞ்சிருப்போம்.

செத்தும் போயாச்சு ஒரு ஆள், பார்த்துகிட்டு இருக்க முடியாம. அத பாத்துக்கிட்டு அதே மாதிரியே கையறு நிலையில இருக்கிற மத்தவங்க அய்யோ! இப்படி ஒரு உசிரு அநியாயமா போயிருச்சேன்னு, உண்மையான வருத்தத்துடன் அன்னிக்கு பதிவு அல்லது இரங்கல் தெரிச்சவிங்கெல்லாம் ஏண்டா இன்னும் சாகாம இருக்குறீங்கன்னு கேட்டு ஒரு பதிவு! அப்போ, இது கூட பண்ணி ஒருவரின் தனிப்பட்ட ஆற்றாமையை தீர்த்துக்கொள்ள உரிமையில்லைன்னா, வேற என்னவெல்லாம் இது போன்ற அரசியல் நிலையில் மக்களாகிய நாம் செய்ய முடியும்?

முத்துக்குமரன் தீக்குளித்ததே இன்றைய அரசியல் நிலையில் அதுவும் மனிதம் மறித்துப் போன நாளில் நடந்தேறியது ஒரு தேவையற்ற இழப்புதான். சாவுதான்! செய்திருக்க வேண்டிய அவசியமே இல்லை! மானமற்று வாழ பழகிக்கொண்ட நிலையில்! தானும் பார்த்து, பழகி அதில் திளைத்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

எதனையும் எப்படியும் வைத்து அரசியல் பண்ணும் நிலையில் ஒவ்வொருவரும் மாறிப் போன நிலையில் இதெல்லாம் தேவையில்லை. சரி, ஒரு ஜனநாயக நாட்டில் எழுதியேனும் தனது மனக் குமுறலை தீர்த்துக் கொள்வதும் தவறா? தனிப்பட்ட முறையில் என்னதான் நாமும் நம் சார்ந்து வாழும் சமூகத்திற்கு, இப்பொழுது நடைபெறும் இந்த அரசியல் போக்குத் தனங்களை மற்றவர்களுக்கு ஊட்ட செய்து வருகிறோம்?

சும்மா அவர் எழுதியதற்கு இவர் எதிர் பதிவு? அவர் கூறிய கருத்துக்கு இவரின் கிண்டல் பதிவு என்று சும்மா டைம் பாஸ் மச்சிதானா? ஏன், புதிதாக வருபவர்களுக்கு இப்படியானதொரு மனச் சோர்வை வழங்க வேண்டும்? வலைப்பதிவுகளின் மூலமாக எதுவுமே போய்ச் சேரப் போவதில்லை என்ற கருத்தை உடையவர்கள் ஏன் அவர்களின் பதிவுகளை பொது இடத்தில் வைக்கிறார்கள்?

Tuesday, April 07, 2009

கண்டுபிடி... கண்டுபிடி டா...

"ஏன், உண்மைய பேசினா இப்படி பிரச்சினை வருது..."

"எனக்குப் பிடிச்ச மாதிரி நான் இருந்தாவோ, அல்லது நடந்துகிட்டாவோ ஏன் ஒரு மாதிரியா பார்க்கிறாங்க..."

"ச்சே, குழந்தையாவே இருந்திருக்கக் கூடாதா..."

இப்படியெல்லாம் எப்போதாவது ஒரு சூழல்ல வளர்ந்து, தினப்படி வாழ்க்கையை ஓட்டுற எவருக்கும் தோணியிருக்கலாம். குழந்தைகளாக இருக்கிறதில பல வசதிகள் இருக்கு. தனக்குன்னு எந்த ஒரு இமேஜும் இல்லாம எதிர் தரப்பில நடக்கிறதின் மறு பிரதிபலிப்பா மனசில என்ன தோணுதோ அத அப்படியே எதிரொலிச்சு வாழ்வாங்க. ஆனா, வாழ்க்கையென்கிற அனுபவ சேகரிப்பு பயணத்தில் பிரயாணிக்கும் பொழுது, நம்மின் அடிப்படை குணாதியசங்களை கொஞ்சம் கொஞ்சமா ஏற்கெனவே நிகழ்வுற்ற அனுபவங்களினூடாக வைச்சு தைச்சு சில பல நல்ல விசயங்களை இழந்துட நேரிடுகிறது.

இப்படியாக என்னய அசை போட வைச்சது அகநாழிகை வலைத்தளத்தில் படிக்க நேர்ந்த இந்தப் பதிவும், அந்தப் பதிவிற்கு வந்த தண்டோராவின் பின்னூட்டமும்தான். அதில அவர்கள் குறிப்பிட்ட இரண்டு குழந்தைகளை நாம் கிட்டத்தட்ட ஏதோ விதத்தில் நல்ல வளர்ப்புச் சூழலை கொடுத்து அவர்களின் மண்டையை வறண்டு போகாமல் வைத்திருக்கச் செய்யும் பொழுது பல இடங்களில் அது போன்ற பண்புகளை காண நேரிடலாம்.

இதனில் ஒரு குழந்தை, தன் தந்தை தவறுதலாக மேலோட்டமாக தான் (குழந்தை) எழுதியதாக ஒரு சில வார்த்தைகளை மிகைப்படுத்தி எழுதியதின் பொருட்டு, அத் தந்தையிடமே நான் அப்படி கூறவே(எழுதவே) இல்லையே என்று நிரூபிப்பதும், அதனை தந்தையும் (பெரிய விசயமாக)உணர்ந்து பொது இடத்தில் வாசகர்களை ஏமாற்றி விட்டதாக நினைத்து தான் வருந்துவதாக முன் வைத்திருந்தார். அதில் உள்ள "திறந்த வெளி கற்றலுக்கான" அடிப்படை விசயம் எனக்குப் பிடித்திருந்தது.

அது போலவே, தண்டோராவின் பின்னூட்டத்தில் சொல்லப்பட்டிருந்த மழை காலத்து நிகழ்வுகள் ஒரு அடல்ட் உலகத்திற்கும் குழந்தைகளின் உலகத்திற்குமான வண்ணங்களை பிரித்து காட்டியிருந்தது. தண்டோரா அதனை இப்படியாக போட்டிருந்தார் ... "குழந்தைகளின் உலகம் எவ்வளவு அழகும்,விசித்திரமும் வெள்ளந்தியாய் இருக்கிறது...."

அதனை படித்தவுடனேயே என்னுள் எழுந்த சில பால்ய காலத்து ஆசைகள் எப்படி என்னுடைய பெற்றவர்களின் மனத்தினுள் கலக்கத்தினை அதிகரித்திற்கக் கூடும் என்று ஒரு சிறு கொசுவத்தி.

நம் சொந்த வாழ்க்கையினை கொண்டு நினைத்துப் பார்க்கும் பொழுது வாழ்வின் அனைத்து தேவைகளும் ஏதோ ஒரு விதத்தில் சந்தோஷத்தினை தருவிக்கக் கூடியதாக, பெருத்த பொருளாதார செலவுகளுக்கிடையே அமைத்துக் கொள்ளும்யாவும் வீடு, கார், தொலைக்காட்சிப் பெட்டி இத்தியாதிகள்., இலவசமாக இயற்கை அளிக்க வல்ல சந்தோஷ நிமிடங்களை திருடிச் செல்கிறது என்பதனை நினைவூட்டியது.

ஊரில் பருவமழை தொடங்கி அது அடை மழையாக பரிணமிக்கும் பொழுது அன்றைய சிறுவர்களான எங்களுக்கு இருந்த மன மகிழ்வோ இன்று ஐமாக்ஸ் தியேட்டரில் அமர்ந்து பையனுடன் படம் பார்க்கும் நிகழ்வினால் கிடைக்கும் கேளிக்கையை விட அதிகமானதாக எண்ணச் செய்கிறது. அந்த அடை மழையின் பொருட்டு பள்ளி விடுமுறை, எல்லாரும் வீட்டில் ஒன்றாக இருக்கக் கூடிய நிகழ்வு, சிறப்பான உணவு பதார்த்தங்கள்(சோளம், மரவள்ளிக் கிழங்கு அவியல், வெள்ளரிப் பழம்...), ஜன்னலின் வழியாக காணக் கிடைக்கும் காட்சி, மழையை ஒட்டிய சம்பாஷனைகள், குளங்கள் நிரம்பி வீட்டிற்கும், சாலைக்கும், குளக்கரைக்குமான அடையாளங்கள் மறைந்து மீன் வீட்டு வாசலில் துள்ளித் திரியும் பொழுது அதிலிறங்கி மீன் பிடித்தல். தொப்பலாக நனைந்த செய்தித்தாள்களில் படகு கட்டமுடியாதென, வீட்டுப் பாட நோட்டுகளின் பக்கங்கள் காணாமல் போவதும் அன்றுதான். படகுப் போட்டி அரை கிலேமீட்டர் தாண்டியும் நடைபெறுவதில் உள்ள சுகம்...

அளவிற்கரிய இலவச இணைப்புகளாக ஒரு மழையின் நிகழ்வு இப்படியாக குழந்தைகளுக்கு மகிழ்வூட்டும் தருணத்தில், அதற்கு நேர் எதிர் மாறாக வளர்ந்தவர்களின் உலகத்தில்தான் எத்தனை கவலைகள்? குழந்தைகளின் மன உலகத்தில் சஞ்சரிக்க முடியாமல் மரத்துவிடச் செய்கிறது! ஓட்டு வீடாகவோ, அல்லது மண் பூச்சாக இருந்துவிடும் சமயத்தில் ஒழுகும் சூழலை முகம் கொடுக்க வேண்டும், பிறகு எங்கே மண் சுவர் நமத்து உட்கார்ந்து விடுமோ என அச்சம் கொள்ள வைக்கும் மறுபுறம். இக் கவலைகள் அவசியமான ஒரு அவதி என்றாலும் இதனில் நாம் இழந்தவைதான் எத்தனை எத்தனை?

இது போன்றே அது எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மிக எளிமையாக கிட்டே நெருங்கிவிடும் இயல்பு குழந்தையோடது, ஆனால் வயதினூடாக வரும் அனுபவம் பல முகங்களை தரிக்க வைக்கிறது நமது உலகத்தில். இதனால் எத்தனை விதமான எதிர்மறை குண இயல்புகள் இருக்க முடியுமோ அத்தனை விதமான இயல்புகளிலும் கிஞ்சித்தேனும் இருந்தால்தான் தப்பிப் பிழைப்பதற்கேனும் உதவுமென்று நம்மையறிமாலயே அவைகள் நம்மிடத்தே தஞ்சமடைந்துவிடுகின்றன.

ஆக மொத்தத்தில யார் இறுக்கம் அண்டவிடாமல், வெளிப்புற அடையாளங்களே தானாக நினைச்சு அப்படிச் சிரிச்சா, இங்கே இப்படி நின்னா, உட்கார்ந்தா, பேசினா தன்னோட இமேஜ் பாதிச்சிருமின்னு இல்லாம, மனசுக்குள்ளர ஒரு ஓரமா குத்த வைச்சு உட்கார்ந்திருக்கிற அந்த டவுசர் போட்ட கோபாலோ, இல்ல பாவாடை கட்டின சுகந்தியோ அந்த சிறுசுகளின் குசும்புக்கு இடம் கொடுக்க அனுமதிக்கிறவங்கதான் தழுக், மொழுக்குன்னு கண்களில் குறும்பும், முகத்தில் தவழும் பொன் சிரிப்போடும் இருக்கிற மக்களோன்னு நினைக்க வைக்குது!

மத்த சிடுமூஞ்சி சின்னப்பன், சின்னாக்காவெல்லாம் தன்னுள் இருக்கிற சின்னபுள்ளதனத்தை தொலச்சிட்டு இல்லாததை தேடி அலையற ஒரு கூட்டமோன்னு நினைக்கத் தோணுது. நான் அப்பப்போ யாராவது பெரிய தொப்பையும், இமேஜுமா இருக்கிறவங்கள பார்த்தா நினைச்சுப்பேன் இந்தாளு ஒரு நா டவுசரை போட்டுக்கிட்டு சக தோழனோட "எங்க உன் டவுசர் பாக்கெட்ட காமீ டா..." ன்னு சொல்லி சேஷ்டை பண்ணிக்கிட்டு திரிஞ்ச ஆளாத்தானே இருப்பாருன்னு நினைச்சா... சே, பாவத்தே!

இந்தப் பதிவை வாசிச்சிட்டு நீங்க உங்க புற அடையாளத்தை அந்தப் பக்கமா தள்ளி வைச்சிட்டு சிறு பிள்ளையாக குறைந்த பட்சம் ஒரு ரெண்டு நாளாவது உங்க உண்மையான இயல்பினோடு இருந்து பாருங்களேன், எத நீங்க இழந்துட்டே வாரீங்கன்னு காண முடியும். முடிஞ்சா, அத இங்கனயும் கிறுக்கி வைங்க தெரிஞ்சுக்குவோம்.

Related Posts with Thumbnails