Friday, February 15, 2019

ஆழிப்பேரலையை ஒத்த மனித இனம்: Sapiens 3

சேப்பியன்ஸ் புத்தகத்தின் முதலாம் பகுதியை முடித்த நிலையில் இதனை பகிர்ந்து கொள்ளாமல் நகர்வதற்கு மனம் ஒப்பவில்லை.
எப்பொழுது சேப்பியன்ஸின் மூளையளவு பெருத்து, நிமிர்ந்த நடை கொண்டு, இரண்டு கைகளை வீசி நடந்து திரியும் நிலைக்கு இந்த பரிணாமம் அவர்களை எடுத்துச் சென்றதோ அன்றே அவர்களின் அறிவுப் பசியும், குடற்பசியும் பல்கிப்பெருகி மிக்க அழிவுகளையும், கட்டுக்கடங்கா வளர்ச்சியையும் விதைத்து அவர்களின் வழித்தடம் தோறும் தடயங்களை விட்டுச் சென்றிருக்கிறது எனலாம்.
ஆஃப்ரிகாவின் கிழக்கு கடற்கரையோரம் மெதுவாக நடந்து ஆசியாவின் மத்தியப் பகுதியை அடைந்தவர்கள் அப்படியே கொஞ்சம் பேர் இந்திய துணைக்கண்டப் பகுதியிலும், மேற்படி நகர்ந்து தெற்காசியப் பகுதிகளிலும் குடியேறினர்.
இடையில் தங்களுடைய உப மனித இனங்களை சந்திக்கும் கணம் தோறும் அறிவின்பால் சார்ந்தவர்களை புணர்ந்து உள்கிரகித்தோ, அல்லது பகையுணர்ச்சியின்பால் போரிட்டு அழித்தோ சேப்பியன்ஸ் இனம் தங்களை அந்த சூழலியலுக்கு தகுந்தாற் போல் தகவமைத்துக் கொண்டு தழைத்து வாழ்கிறார்கள்.
வேட்டையாடிகளாக இருந்த காலத்தில், நம்முடன் புழக்கத்தில் இல்லாத விலங்கினங்களை சந்திக்கும் கணம் தோறும், அதி புத்திசாலித்தனமான மண்டையறிவுடன் உருவாக்கப்பட்ட நாம் பல்வேறு பட்ட வேட்டை உக்திகளைக் கொண்டு ஏனைய விலங்கினங்களை கொன்று குவிக்கும் ஒரு பேரழிவின் கருவியாக்கி இருந்தது நம்மை இந்த இயற்கை என்பதை நாம் இங்கு மறந்து விடக் கூடாது.
பல கோடி ஆண்டுகளாக பல கண்டங்களில் செழித்து வாழ்ந்து வந்த பல பெரும் பாலூட்டிகள் எங்கெல்லாம் இந்த வேட்டையாடி சேப்பியன்ஸ் காலூன்றினானோ அங்கெல்லாம் ஒரு சில ஆயிரம் ஆண்டுகளுக்குள்ளாகவே அழித்தொழிக்கப்பட்டிருந்தது.
இந்த பின்னணியில் நாம் வேட்டையாடிகளாக இருந்த காலத்தில் இயக்கமே அற்ற நாடோடிகள் என்றளவில் மட்டுமே நம்மை குறுக்கி பார்த்துக் கொள்ள முடியாது. நாம் பேரழிவுகளையும், போராட்டங்களின் ஊடாகவும் இந்த பரந்து விரிந்து கிடந்த கிரகத்தில் நம்முடைய ஆளுமையை மென்மேலும் வளர்தெடுத்துக் கொள்ள இரத்தம் சிந்தி ஆதி சேப்பியன்ஸ் செப்பணிட்டுக் கொண்டிருந்தார்கள் என்றளவில் புரிந்து கொள்ள வேண்டும்.
தெற்காசியாவின் தீவுகளிலிருந்து மெல்லப் பரவி என்று அவர்கள் ஆஸ்திரேலியா, நியூசிலண்ட் போன்ற பகுதிகளுக்கு சென்று அங்கும் பெருமளவிலான விலங்கு உணவுச் சங்கிலிகளையும், அதனைத் தொடர்ந்த சூழலியல் மாற்றங்களையும் உருவாக்கத் தொடங்கினார்களோ அன்றே நமது அடுத்தக்கட்ட நகர்வும் தொடங்கிவிட்டது.
அதற்கு சில பத்தாயிரம் வருடங்களுக்குப் பின்னால் சைபீரியாவின் மேற்கு நிலப்பரப்பில் பனி உறைவினால் தற்காலிகமாக உருவாக்கப்பட்டிருந்த இணைப்பு, மேம்பட்ட சூழலியல் தகவமையும், விலங்கு புரதத்தின் பால் ஈர்க்கப்பெற்றிருந்த அந்த பகுதியில் வாழ்ந்த சேப்பியன்ஸ்களை மெல்ல வலசை போகும் பாலூட்டிகளின் பின்னால் நகர வைத்து வட அமெரிக்கா கண்டத்திற்குள் காலூன்ற வைத்தது.
அங்கும் ஒரு மாபெரும் பேரழிவிற்கு இந்த வேட்டையாடி சேப்பியன்ஸ் வழி கோணி, சுற்றுச் சூழலில் ஒரு பெரும் மாற்றத்தினை உருவாக்குகின்றனர்.
இதிலிருந்து என்ன புரிய வருகிறது என்றால் எங்கெல்லாம் சேப்பியன்ஸ் காலடி பட்டதோ அங்கெல்லாம் அதி பயங்கரமான உருவத்தினை கொண்ட பாலூட்டிகளையும், எடையுடைய பறவைகளையும், பல்லூயிர்களையும் பெருமளவில் கொன்று குவித்திருக்கிறான். தங்களுடைய உடை, உணவு, பாதுகாப்பு என பல காரணங்களுக்காக.
அது மிக இயல்பாகவே நடந்திருக்கிறது. கற்கால கருவிகளை கையாண்ட காலத்திலேயே கிட்டத்தட்ட 50 விழுக்காடு அத்தனை பெரிய பேரழிவுகளையும் நிகழ்த்தியிருக்கிறது இந்த இருகால் கொண்ட அப்பாவிகளைப் போல் உள்ள சேப்பியன்ஸ் இனம்மென்று இந்த புத்தகம் பல சான்றுகளுடன் சுட்டிச் செல்கிறது.
பின் வந்த காலங்களில் அந்த பல்லூயிர்களின் நடமாட்டம் குறைந்த காலத்தில், வேளாண் இனம் அடுத்தக் கட்ட அலையாக இந்த நிலப்பரப்பெங்கும் ஆளுமை கொள்கிறது. முதல் ஆழிப்பேரலையையொத்த வேட்டையாடி சேப்பியன்ஸ் பரவலில் பெரும் விலங்கினங்கள் அழித்தொழிக்கப்பட்டன. இரண்டாவது அலையான வேளாண் குடிகள் நிலத்தினை திருத்தியும், அழித்தும் அடுத்த மாற்றத்தினை நிகழ்த்துகிறார்கள்.
மூன்றாவது அலையாக தொழிற்புரச்சி ஓங்கிய காலத்தில் நாம் இருக்கிறோம்... அவர்கள் அளவிற்கு அழிக்க ஒன்றுமில்லை என்றாலும் மிச்சமிருப்பது நம்முடைய இருப்பிற்கான இந்த பிராணவாயு அதுவும் மிச்சமிருக்கும் இந்த வனங்களில் மட்டுமே. அதனையும் கண் மூடித்தனமாக பழைய நினைப்புதான் பேராண்டி கணக்காக கையாண்டால், நாம் இந்த பூமிப்பந்தின் மேலடுக்கில் முகவரியில்லாமல் துடைத்தெரியப்படுவோம்.

Monday, January 28, 2019

உரையாடலின் புனைவுதான் கடவுள்: Sapiens - 2

இதுவே முதல் முறை கட்டாரின் வழியாக இந்திய பயணம் மேற்கொண்டது. ஒன்று எனக்கு வயசாகி இருக்கணும் இல்லன்னா எனக்கு தோன்றுவது போலவே தோகாவிலிருந்து அட்லாண்டாவை அடைவது மிக... நீண்ட அயற்சியைக் கொடுக்கக் கூடியதாக உள்ளதுன்னு மற்றவங்களுக்கும் தோன்றக் கூடியதாக இருக்கணும்.
அது ஒரு புறம் இருக்கட்டும். இந்த நீண்ட பயணத்தை எப்படி பயனுள்ளதாக ஆக்கிக்க முடியும் என்பதின் பேரில் வாசிப்பிலுள்ள சேப்பியன்ஸ் புத்தகம் துணைக்கு வந்தது. இன்னொரு பத்து பக்கங்கள் வாசிக்க ஆரம்பித்த உடனேயே எனக்கான தனிப்பட்ட எண்ண வெடிப்புகள் நிகழத் துவங்கியது.
வாசித்துக் கொண்டிருக்கும் பக்கங்கள் எது சேப்பியன்ஸை ஏனைய மனித இனங்களிலிருந்து பிரித்து உலகம் தழுவிய முறையில் ஒரே அடிப்படை கருத்துருவாக்கத்தின் மீது நம்மை நிற்க வைத்து, பிற ஆதி மனித இனங்களை பின்னுக்குத் தள்ளி நம்மை முன்னேறச் செய்தது என்று பேசுகிறது.
அதற்கு அடிப்படையே மொழி என்கிறது இந்த புத்தகம். அதனை நிரூபிக்கும் வாக்கில் அருமையான உரையாடலோடு முன் நகர்த்துகிறார் புத்தக ஆசிரியர்.
ஏனைய உயிரினங்களும் அவையவைகளுக்கேயான சங்கேத ஒலி குறிப்புகளுடன் ஒன்றுக்கொன்று தொடர்பில் இருந்து தங்களின் பாதுகாப்பை, உணவு தேடும் யுக்தியை பரிமாற்றம் செய்து தங்களின் இருப்பை தக்க வைத்துக் கொள்கிறது. இருப்பினும் சேப்பியன்ஸ் அடுத்தக் கட்டத்திற்கு எப்படியாக தங்களை நகர்த்திக் கொண்டது? என்பதே அடிப்படைக் கேள்வி.
நெருப்பின் பயன்பாட்டை தன்னுடைய ஆளுமைக்கு கீழ் கொண்டு வந்தது ஒரு வகையில் பெரிய தாண்டல் என்றால், நம்முடைய சிக்கலான மொழியறிவு இரண்டாவதாகும்.
இந்த மொழியறிவே கூட சிக்கலான கட்டமைப்பை பெறக் காரணம் நம்முடைய பொரணி பேசத் தக்க கற்பனா வாதமே முதன்மைக் காரணம் என்பதாக சொல்லி விரிகிறது இந்த புத்தகம்.
உதாரணமாக, நம்மை விட குறைந்த பட்ச உரையாடலைக் கொண்ட குரங்கினங்கள் ஆபத்து/உணவு அங்கே இங்கே என்று சுட்டிக்காட்டுக் கொள்ள ஒரு சில ஒலிக்குறியீடுகளின் வழியாக மட்டுமே தங்களது குழுவினருடன் கடத்திக் கொள்கிறது. ஆனால், சேப்பியன்ஸ் எங்கே உணவு இருக்கிறது, அதனை நெருங்கும் போது உள்ள ஆபத்து, அதன் பரப்பிடம், அருகில் என்ன இருக்கிறது, எப்படியாக சென்றால் அந்த இடத்தை விரைவில் அடையலாம், ஆபத்தை தவிர்த்து மீண்டு வருதல் என்பதாக உரையாடத் தலைப்படும் பொழுது எத்தனை மொழியறிவு தேவைப்படுவதாக உள்ளது.
இங்கிருந்துதான் சேப்பியன்ஸ்க்கு இரண்டாவது பெரிய தாண்டல் கிடைத்தது. இந்த உரையாடல், எதார்த்த, கற்பனை, புனைவு என்று பல நிலைகளில் விரிந்து விரிந்து சிறு குழுக்களை இணைக்கத் தக்க பெரிய பொய்களை உருவாக்கி கற்பனை கடவுளர்களை, நிறுவனங்களை எழும்பச் செய்து பரந்த நிலப்பரப்பில் வாழும் ஏனைய குழுக்களையும் இணைத்து ஒரு ஐடியாவிற்கு கீழ் வாழும் எதிரிகளற்ற வாழ்விடங்களை உருவாக்கிக் கொள்ள முடிந்தது.
இதுவே நமக்கு முன்னால் வாழ்ந்த பிற மனித இனங்களுக்கு சாத்தியப்படாமல் போனது அவர்களின் இருப்பை ஆழ நிர்மாணித்துக் கொள்வதிலிருந்து தவறச் செய்தது.
புனைவுக் கதைகளே, உடல் இல்லாத ஒரு நிறுவனத்திற்கோ (நல்ல கதை சொல்லிகளே முதுகெலும்பு), கடவுளுக்கோ (சடங்குகள், சம்பிரதாய கட்டுப்பாட்டு புனைவுகளே முதுகெலும்பு) அல்லது நாட்டிற்கோ எல்லைகளை வகுத்து (வாழ்வு சார்ந்த விழுமியங்களை கடைபிடிப்பதாக சொல்லப்படும் புனைவுகளே முதுகெலும்பு) அதற்கென ஓர் உடலைக் கொடுத்து அது இருக்கிறது என்று நம் அனைவரையும் அதன் பின்னால் நிற்கச் செய்து ஒரு பெரும் இனக்குழுவாக கட்டி வைத்திருக்கிறது.
இந்த புனைவுக் கதைகள் சிக்கலான மொழிகளின் ஊடாக சேப்பியன்ஸ்களின் மனங்களில் விதைக்கப்படுவதின் பொருட்டே நம்முடைய இனம் தனித்துவம் பெற்றதாகிறது.
இப்பொழுது நான் நடு வானில் பறந்து கொண்டே இந்த சிந்தனை சிக்கல்களில் என்னை அமிழ்த்தி மீட்டெடுக்கும் வகையில் பறத்தலின் அபாயக் கவலைகளை மறக்கடித்தது கூட அதே கற்பனைப் புனைவுதான்.
பறத்தல் ஆபத்தற்றது என்ற எதார்த்த கற்பனைக் கதைகள் நன்றாகவே ஆழ விதைக்கப்பட்டதும் அது அனைத்து சேப்பியன்ஸ்களின் நம்பிக்கை பெற்றதுமேயாகும்.
இதன் ஒழுங்கிலேயே சென்று யோசித்தால் திருமணம், விழாக்கள், நல்ல பெயரைக் கொண்ட நிறுவனப்படுத்தப்பட்ட ஒரு கம்பெனி அனைத்துமே புனைவுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது என்பதாகிறதுதானே?
எனில் எது உண்மை? எல்லைகளற்ற நிலமும், இந்த மரங்களும், ஆறுகளும் மலைகளும்தான். மற்ற அனைத்தும் ஓர் ஐடியாதான். அதுவே நம்முடைய இருப்பை முழுமையாக எத்தினிக் (இனப்) போரில் விழுந்து அழிந்து விடாமல் இருக்க தப்பி பிழைத்துக்கிடக்க வைத்திருக்கிறது.
இந்த கதைகளே பெருமளவில் கேள்விகளற்று விதைக்கப்படும் போது பிற்காலத்தில் நமக்கு ஆப்பு வைக்கக் கூடியதாகவும் அமையக் கூடும். அது எப்படி என்று மேல் வாசிப்பில் பிரிதொரு நாள் என்னுடைய எண்ணங்களையும் இணைத்துத் தருகிறேன்.

Sunday, January 27, 2019

மகப்பேறு மரணங்கள் ஒரு பரிணாமப் பார்வை: Sapiens வாசிப்பு - 1

இந்த முறை சென்னை புத்தகத் திருவிழாவில பல முக்கியமான புத்தகங்கள் வாங்கினேன். அதில் யுவால் நோவா ஹராரி எழுதிய "சேப்பியன்ஸ் மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு" ம் ஒன்று.

இந்தப் புத்தகம் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி. மேலும் மொழி பெயர்ப்புகள் மிகத் தேவையான ஒன்று என்று பல இடங்களில் உணர்கிறேன்; அதுவும் 25 பக்க வாசிப்புக்குள்ளாகவே இந்தப் புத்தகம் அதனை உறுதி செய்கிறது!

ஏனெனில் பரிணாம உயிரியலின் (evolutionary biology) அடிப்படை இயங்குதளம் பற்றிய அறிவு போதுமானதாக இருக்கும் எனக்கே இந்த நூல் பல இடங்களில் அட என்று நிமிர்ந்து உட்காரச் செய்வதாக உள்ளது.

இதன் பின்னணியில் அந்த வாசிப்பே அற்ற மற்ற துறை சார்ந்த வாசகர்களுக்கு எது போன்றதொரு வாசிப்பனுவத்தை வழங்கக் கூடும் என்று எண்ணும் பொழுது அறிவியல், வரலாறு சார்ந்த தமிழ் மொழி பெயர்ப்புகள் நம்மை அடுத்தக் கட்டத்திற்கு அறிவுசார் நிலையில் நகர்த்தக் கூடிய முக்கிய கருவியாகும் என்று தோன்றச் செய்கிறது.

இந்த புத்தகம் இன்றும் நாம் எதிர் கொள்ளும் பல நிகழ்கால உடலியல், உளவியல் சார்ந்து நம் கைகளுக்கு அப்பால் உள்ள பிரச்சினைகளுக்கு எதுவெல்லாம் காரணிகளாக இருந்து செயல்படுகிறது என்பதை ஆழமாக அலசிச் செல்கிறது.

உதாரணமாக மகப்பேறு சமயத்தில் ஏன் தாய் சேய் மரணம் நிகழ்கிறது என்பதை நம்முடைய எழுந்து நின்று இரண்டு கால்களில் (bipedal) நடக்கும் காலத்திலிருந்து தொடங்கி, நம்முடைய மூளையின் அளவு, எடை என பிணைத்து பிறப்புறுப்பின் குறுகலே அதற்கான மூலம் என்று நம்மை புரிந்து கொள்ள கோரி நிற்கிறது. இங்கே உடனே ஏன் மகப்பேறு நேரத்தில் மருத்துவர் பேறு வழியை பெரிதாக்க கத்தி வைத்து சிறிது கிழித்து விடுகிறார் என்பதற்கான பரிணாம வழி விடைகிடைக்கக்கூடும்😲

மூளையின் எடையே ஒரு சுமை அதனை இந்த பரிணாமம் நம் தலையில் தூக்கி வைத்து உடலின் 25% சக்தியை உட்கொள்ளும் பேர்பசி கொண்ட வஸ்துவை, நாம் வேலை வாங்க சிந்தனையின் வீச்சம் அதிகரிக்கச் செய்தோமெனவும் அதுவே ஏனைய விலங்குகளைக் காட்டிலும் அதி வேகமாக முன்னேறி பரிணாம உச்சாணிக் கொம்பில் அமர வழி வகுத்தது எனவும் புரிந்து கொள்ளச் செய்தது.

இல்லையென்றால் வேட்டையாட உடல் திராணியற்ற நிலையில் ஊனுண்ணி சாப்பிட்டு மிச்சம் வைத்த மாமிசத்தை கழுதைப் புலிகள் வரண்டியது போக, நாம் இன்னமும் எலும்பை உடைத்து மஜ்ஜை உண்ணும் நிலையிலேயே இருந்திருப்போம்தானே.

அதே மூளையின் எடையே நம் தோள்களுக்கு மேல் வைக்கப்பட அதன் இன்னலாக கழுத்துப் பிடிப்பும், முதுகு வலியும் வரக்காரணம் என்று சொல்லும் போது, நிறைய உடல் சார்ந்த உபாதைகளுக்கு காரணம் கிடைக்கிறது.

அப்படியே தொடர்ந்து ஏன் பிற பாலூட்டிகளில் முழுமையாக வளர்ச்சியுற்ற குட்டி பிறந்து விழுந்த சில மணிதுளிகளுக்குள்ளாகவே எழுந்து நின்று நடக்கவும், சில வாரங்களுக்குள்ளாகவே இரைதேடிச் செல்லத் தக்கதாகவும் அமைந்து விடுகிறது எனக் கேள்வி எழுப்பி பதிலாக மனித மூளையின் வளர்ச்சி அளவும், கருப்பையில் சிசு இருக்கும் காலளவும், பிறக்கும் பொழுது பிறப்புருப்பின் குறுகல் கூறுகளுமே பரிணாமத்தில் இன்றளவும் ப்ரீமெச்சூர்டுத் தனமாக மனிதக் குழந்தைகள் ஈன்றெடுப்பிற்கான காராணமென சுட்டிக்காட்டுகிறார்.

இதுவே மனிதன் ஒரு நாகரீமாக பிற்காலத்தில் பரிணமிப்பதற்கான முதன்மைக் காரணி என்றும் அடையாளப்படுத்துகிறார். ஏனெனில் மனிதக் குழந்தைகளின் சார்ந்து வாழும் ஆண்டுகள் நீண்டிருப்பதால் அதற்கு குழுவாக சார்ந்து வாழும் ஒரு சூழல் தேவைப்படுகிறது, பின்னே அது ஒரு சமூகமாக கட்டமைக்கப்பட்டு, பிற்சேர்க்கைகளான மதம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு என்ற கற்பிதங்களை அளவிற்கு அதீதமாக ஏற்றிக் கொண்டு எப்படி நம்முடைய இருப்பையே இன்று கேள்விக்குறியதாக ஆக்கிக் கொண்டது சேப்பியன்ஸ் என்பதாக இந்தப் புத்தகம் பின் வரும் பக்கங்களில் பேசுமென்று நினைக்கிறேன்...

அப்பப்போ எழுதுவேன் as I further continue reading this book, I suppose! 😏

Thursday, November 08, 2018

அரை வேக்காட்டு சர்கார்: Crews with a mission!

இந்த இட ஒதுக்கீடும், இலவசங்களும்தான் தமிழகத்தை முன்னேற விடாமல் பிகாருக்கும், உத்திரபிரதேசத்திற்கும் சொல்லப் போனால் மேலைய நாடுகளையொத்த வாழ்க்கைத் தரத்தில் வாழும் வட இந்திய மாநிலங்களை விட படு கேவலமாக பொருளாதார, சுகாதார, கல்வி மேம்பாடுகளில் பின் தங்கிக் கிடக்க காராணமாகி இருக்கிறது; என்பதைப் போல பல பிள்ளை பிடிக்கிகள் கூறி நெருங்குவார்கள்...
இந்த இனிப்பு தடவிய நச்சு லேகியத்தை எவன் கொடுத்தாலும் அவர்களுடைய வாயிக்குள்ளரயே வைச்சு திணிச்சிடறது மேலும் அந்த லேகியம் பரவலைத் தடுக்கும்.
கேள்வி: இலவசங்கள் ஏழைகளை காப்பாற்றவா அல்லது, அவர்களை மேலும் சோம்பேறிகளாக்கவா?
பதில்: இந்த கேள்விக்கு தானே பதிலைடைஞ்சிகணும்னா, உண்மையான சமூக அறிவியலும் அதனையொட்டிய இயலாத மக்களின் உளவியலையும் ஒரு சேர உள்வாங்கினா பதில் கிடைக்கும்.
எப்படின்னா, தனிமனிதனை (குடும்பத்தை) ஆற்றல்படுத்துவது (empowering) என்பது ஒரு நாள் மட்டும் மேடை போட்டு மக்களை உற்சாகப் படுத்துவதோ அல்லது பள்ளி, கல்லூரி மேடைகளை ஆக்ரமித்து ராமாயண, மகாபாரதக் கதைகளை ஒப்பித்து சிறார்களை மூளைச் சலவை செய்வது போலவோ அல்ல!
சமூக சமன்பாட்டு நிலையை எட்டுவது என்பது மக்களின் தினப்படி வாழ்க்கையில் சில உளவியல் மாற்றங்களை உருவாக்கத்தக்க சொல்லாடல்களை ஏற்படுத்திக் கொடுப்பது, அதற்கான உபகரணங்களை எட்டும் தூரத்தில் நகர்த்தி வைப்பதுமாகும்.
இந்த சாத்தியங்கள் ஒரு நாள் ச்சீயர் லீடிங் செய்து விட்டு நகர்ந்து போய்விடுவது கிடையாது. தினப்படி வாழ்க்கை பயன்பாட்டில் இரண்டர கலப்பதால், கூட்டு சமூகத்தின் உளவியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அவ்வாறு ஒரு சமூகமே அந்த திசையில் பயணிக்க ஆரம்பிக்கும் பொழுது அதன் வெளிப்பாடாக சுகாதார, கல்வி ஏனைய சமூக முன்னேற்றம் சார்ந்த விடயங்களில் மக்கள் விழிப்புணர்வடையும் சாத்தியக் கூறுகளை நோக்கி நகரும்படியாக கதவு திறந்து விடப்படுகிறது.
இலவசங்கள், உண்மையில் அது இலவசங்கள் கிடையாது. மக்களின் வெல்ஃபர் சார்ந்த நலத்திட்டங்களை நேரடியாக மக்களுக்கு எடுத்துச் சென்று சேர்க்கும் ஓர் அரசின் அணுகுமுறைதான்.
இப்போ தமிழகம் எந்த அளவில் ஏனைய இந்திய மாநிலங்களைக் காட்டிலும் அடிப்படை கட்டமைப்பு துறைகளில் பின் தங்கிக்கிடக்கிறது? இவையெல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது.
கூறாய்ந்து பார்த்து நீங்களே கண் திறந்து பார்த்தால் ஒரு தேசமாக உலகரங்கில் உயரவும், மற்ற மாநிலங்களையும் சற்றே நாகரீகமடைந்த மாநிலங்களாக்கி மேலெழுப்பிக் கொள்ளவும் உதவலாம்.

வியக்க வைத்த டாக்டர் கலைஞர்: A rare of a kind


ஓர் அதி சிறந்த மூளையால் என்ன செய்து விட முடியும்? சமூகத்தில் நிகழும் ஏற்றத்தாழ்வுகளை, அதன் தேவைகளை நுட்பமாக அவதானிக்க முடியும். அதற்குப் பிறகு மிகக் கடுமையான உழைப்பிற்குப் பின்னால் தன்னை படிப்படியாக நகர்த்தி ஒரு சமூகத்தையே எதிர் காலத்தில் புரட்டிப் போடும் திட்டங்களை 18 மணி நேர கடின உழைப்பின் பேரில் திட்டம் தீட்டி அதனை மனதிற்குள் அடைகாத்து வைத்து தனக்கு கிடைக்கும் சொற்ப காலத்திற்குள் அதற்கு செயல் வடிவம் கொடுக்கும்.
ஆனால், அதற்கும் ஏகப்பட்ட தடைக்கற்கல் போடப்படும் நேரடியாகவும்மறைமுகமாகவும் என்பதனை மறந்து விடக் கூடாது. எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா? தொலை நோக்கு பார்வையோடு பரந்து பட்டு எல்லா மனிதர்களுக்கும் சென்றடையும் திட்டங்களை இயற்றும் எந்த ஒரு தலைவனும் நிகழ்காலத்தில் அதிகமாக வெகுஜன மக்களை சென்றடைவது கிடையாதே அது ஏன்? என்று கேள்வி கேட்டுக் கொண்டதுண்டா?
மேம்போக்கான மனிதர்களை சென்றடையும் "லாலிபப்" திட்டங்கள் ஓர் உடனடி நிறைவுத் தன்மையை எட்டி, அதனை விட இன்னும் பெருமளவிலான திட்டங்களை எட்டுவதை மட்டுப்படுத்துவதற்கான ஒரு கால விரைய தலைவர்களை கொண்டு சமூகத்தையே பின்னோக்கி இழுத்து பிடித்து வைத்திருக்கவும் முடியும் என்பதையும் நாம் உணர வேண்டும்.
அதுதான் புர்ச்சி தலைவரும், தலைவியும் செய்த அரசியல். இன்றைய எடுபுடி தலைவர் அளவிற்கு தரம் தாழ்ந்து விடாமல் இருக்க அந்த புர்ச்சி தலைவர்களை, அந்த நுட்பங்களை உணர்ந்த அதி மூளை, அவர்களை பாதையில் கொஞ்சமேனும் ஒட்டி நடக்க வழி நடத்தி இருக்க முடியும் என்பதையும் நாம் உள்வாங்கி கொள்ள வேண்டும்.
ஏனெனில் நீங்கள் ஒரு நிழல் அரசாங்கத்துடன் சமரிட்டுக் கொண்டே உங்களுடைய இலக்கை அடைய முயற்சிக்கிறீர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.
இத்தனை சூழ்ச்சிகளுக்கிடையிலும் தன்னை தக்க வைத்துக் கொண்டு ஓரளவிற்கு இன்று நீங்கள் இருக்குமிடத்திற்கு நகர்த்தி வைத்திருக்க உதவிய அந்த அதி சிறந்த மூளைதான் கலைஞர்.
உதாரணத்திற்கு, அவரால் சிந்தித்து ஆசியாவிலேயே ஒரு சிறந்த கால் நடைகளுக்கான ஆராய்ச்சி மையத்தை, தமிழுக்கான ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தை, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரிகள் என அடிப்படை கட்டுமானத்தை உருவாக்கித் தரத்தான் முடியும்.
அதனை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வது என்பது, அவரின் தொலை நோக்குப் பார்வையை உள்வாங்கிக் கொண்ட மக்களாகிய நம்முடைய பொறுப்பு.
வாட்சப் மட்டுமே ஜர்னல்ஸ், என்சைக்ளோபீடியா, அரசியல் திறனாய்வுக் கட்டுரைகளை வழங்கும் மாபெரும் வாசிப்பிற்கான ரிசோர்ஸ் என்று கருதி, பொய் பரப்புரைகளுக்கு தானும் இரையாகி அடுத்தவர்களையும் இரையாக்க தூண்டுவது அறியாமையின் உச்சம்.
அது அரசியல் அரிச்சுவடியே இன்னும் கையில் ஏந்தவில்லை என்பதற்கான லிட்மஸ் என்பதாக புரிந்து கொள்கிறேன்.

முட்டிக்கொண்டு நிற்கும் தமிழ் தேசியம்!


பெரியாரும், அண்ணாவும் தனி நாடு அடைகிறோம்னுதிராவிடஅடையாளச் சொல்லை தவறாக பயன்படுத்தி தெலுங்கர்களும், கன்னடியர்களும், மலையாளிகளுக்கும் பயன்படும் வண்ணம் செய்து விட்டு தமிழர்களை வஞ்சித்து விட்டார்கள்; என்பதாக, தமிழ் தேசியம் பேசுபவர்கள், அடைந்திருக்கும் உயரங்கள் அனைத்தையும் கேலியும், கிண்டலும் பேசி ஆரியத்தை சுத்தமாக துடைத்தெரிய வேண்டியவர்கள் இன்று ஒன்றாக குடித்தனம் நடத்துகிறார்களே என்ற அளவிலே புலம்புகிறார்கிறார்களே... எனக்கு என்ன புரியலன்னா, இவர்களுக்கு என்னதான் வேண்டும். ஈழம் போன்ற ஓர் உள்நாட்டு யுத்தமா?
தமிழ் தேசியத்தை எப்படி அடைவது? இந்தியா என்ற யூனியனுக்கு கீழே இருந்து கொண்டே? தனி நாடு அமைப்பதா? அமைப்பதெனில் எப்படி? தனிப் படை அமைத்து இஸ்ரேல்/அமெரிக்காவிலிருந்து ஆயுதங்கள் இறக்குமதி செய்து மேற்கு மலைத் தொடர்ச்சி மழைக்காடுகளிலிருந்து யுத்தம் செய்து அடையலாமா?
நடைமுறையில் எப்படி ஆரியம் இரண்டாயிரம் ஆண்டுகள் "அகண்ட" பாரதத்தில் உங்களையும், என்னையும் மூளைச் சலவை செய்து இப்போது அடைந்திருக்கும் உயரத்தைக் கூட அடையவிடாமல் வைத்திருந்தது? அந்த சூழ்ச்சியை விட எதிர் அரசியலுக்காக இனக்கலப்பின் வழி நிறம்மாறி இருந்தாலும், ஓரளவிற்கேனும் இன்னும் சில மரபணுக்களை தூக்கிச் சுமக்கும் நமக்கு பிழைத்துக் கிடக்க வேணும் இந்த அடையாள அரசியல் தேவை இல்லையா?
சிலோன் அளவிற்கெல்லாம் இப்பொழுது மாஸ் பர்ரியல் செய்து கொள்வது உகந்தது அல்லவே. கொஞ்சம் யோசித்து காலத்திற்கு தகுந்தது மாதிரி பிழைக்கிற வழிய கொஞ்சம் சொல்லிக் கொடுங்க.
This is what the most recent evolutionary biological studies suggest...
...It is not the strongest of the species that survive, nor the most intelligent, but the one most responsive to change.
~Charles Darwin

Related Posts with Thumbnails