Sunday, October 27, 2013

திசைகளறு பயணம் I - கன்யாகுமரி (Photos)

நேற்றிரவிற்கு முந்தைய இரவில் திடீரென்று ஏதோ வீடற்றவன் மனநிலையில் கிடைத்த பேருந்தில் தாவித் தாவி பயணித்ததில் விடியற்காலத்தில் சூரியனார் விழித்து அரைமணி நேரம் கடந்து இறங்கிய இடம் கன்யாகுமரியாக இருந்தது. :)

புதுக்கோட்டையிலிருந்து மதுரைக்கு அந்த நேரத்தில் ஒரு தனியார் பேருந்து ஒன்று கிடைத்தது. போகும் வழியெங்கும் அப்பொழுதே பெய்திருந்த மழை , மரங்களின் இலைகளில் சார்ந்திருந்த ஈரப்பதத்தை காற்றில் பரப்பி, நெஞ்சின் அடியாழம் வரைக்கும் நுரையீரலின் வழியாக உயிரைத் தொட்டுக் வருடிக் கொண்டிருந்தது. கூடவே இளையராஜவின் என்பதுகளின் பாடல் தொகுப்பை மிதமான சப்தத்துடன் ஓட்டுநர் வேறு தவழ விட்டிருந்தார்.

எனது தலைக்கு நேர் மேலாக பெட்டிகளை வைக்கும் தட்டில்  சுற்றியிருந்த ஒரு வெளிப்புற பிளாஸ்டிக் சிறிதே கிழிந்து காற்றில் ஆடியாடி அசைந்தது. அது என்னுடைய கேசமே காற்றில் சிலும்பிப் பறக்கிறதென ஒரு மயக்கத்தை உண்டு பண்ணி என்னுடைய கல்லூரிக்காலத்துப் பயணத்தை மீண்டும் ஞாபகமூட்டியபடியே தனை மறந்து கேசத்தை சிலுப்பிக் கொள்ளும் அவாவை வழங்கிக் கொண்டிருந்தது.

அது இளையராஜாவின் மந்திர விரல்களின் ஊடே கசிந்தொழுகும் பாடல்களுக்கு மட்டுமேயான சாத்தியம் போல!  இல்லாத முடியை, பயணத்திற்கான இலக்கை, வாழ்க்கைக்கான பொருளை, இறந்து போன ஆன்மாவை இன்னும் உயிர்ப்புடனே ஏதோ ஒரு மூலையில் உன் ஆன்மா வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று ஞாபகமூட்டுவதற்கான அத்தனை சாத்தியங்களையும் அது வழங்கி, வாடிய மனதை மேகத்திற்கு மேலாக எடுத்துயர்த்தி வைத்து விடும் ஒரு வெண்புரவி போல.

மிதக்க மிதக்க அப்பொழுதே ஒரு நோட்டுப் புத்தகத்தில் இளையாராஜவிற்கு செலுத்த வேண்டிய எனது காணிக்கையை எழுத்தின் மூலமாக எழுத வேண்டிய தருணமிது என்று எண்ணும் அளவிற்கு அது என்னை கடந்த காலத்திய ஆயிரக்கணக்கான மைல்களின் பயணிப்புகளின் ஊடே தோன்றிய அனுபவங்களை சார்ந்து இப்பொழுதே மொத்தமாக இறக்கி வைக்கும் தருணமாக அழுத்திக் கொண்டிருந்தது.

ஆனால், இப்பொழுது நான் சொல்ல வந்த விசயம் வேறு. பிரிதொரு சமயம் இளையராஜாவிற்கென ஓர் அமர்வு செய்யலாம்.

எப்பொழுதுமே எனக்கு இந்தியா என்றாலே நெருக்கமான விசயமாக எனக்குள் பற்றிப் படர்வது பேருந்து மற்றும் புகை வண்டிப் பயணங்கள். இது போன்ற தனிப்பட்ட முறையில் இலக்கே அற்று கால் போன போக்கில் கிடைக்கும் ஊர்தியில் ஜன்னலோரமாக அமர்ந்து பிரயாணிப்பதுதான்.

அவ்வாறு பயணிக்கும் பொழுது, பேருந்தின் வேகம்  அதிகரிப்பதனை விட்டு அதனை விட என்னுடைய மனம் வேகம் பிடித்து பிரபஞ்சத்தின் விளிம்பை எட்டிப்பிடித்து விட்டு அதற்கு மேல் அது வளைந்து செல்கிறதே என்ற ஆதங்கத்துடன் பூமிக்கே இறக்கிக் கொண்டு கடந்து செல்லும், ஊர்களையும், மரங்களையும், தண்ணீரற்ற குளம் குட்டைகளையும், மாடு மேய்க்கும் தாத்தாபாட்டிகளையும், சிறார்களையும், மனிதர்களையும் அலுக்காமல் பார்த்துக் கொண்டே அவர்களை பின் தள்ளி முன் நகர்வது ஏதோ வாழ்வின் எதார்த்தத்தை எனக்கு ஞாபகமூட்டியபடியே கடந்து செல்வதாக மனமொரு லயிப்பை எட்ட வைக்கும்.

பெரும்பகுதி இது போன்ற ஊர்திகளின் முன் நகர்வு என்னுடனேயே என்னுள் மையம் கொண்டிருக்க பெரிதும் உதவுகிறது. ஏறி இறங்கும் மனிதர்களின் முகங்களும் அவர்களுடனேயே பயணிக்கும் அனைத்து விதமான வாழ்வு வழங்கிய ரேகைகளும், வீடுகளும் சட் சட்டென திரையிழுத்து காட்சிகளை மாற்றுவதனைப் போல மாறிக் கொண்டே இருக்கும். அது நமது வாழ்வின் நிலையாமைக்கான ஒரு குறியீடாக அமைந்து என்னுள் மென்மேலும் உறங்கிப் போக வடிகாலாக அமைய உதவுவதும் இது போன்ற இலக்கற்ற பயணங்கள் ஒரு கிளர்வுற்ற ஈர்ப்பு நிலையில் நடந்தேற உந்தித் தள்ளுகிறதோ என்று ஒரு முடிவிற்கு வர வேண்டி இருக்கிறது.

இதற்கு முன்பு இது போலவே பல பயணங்களை எனக்கு நானே வழங்கிக் கொண்டிருக்கிறேன். அதிலொன்று வட அமெரிக்காவில் நான் நிகழ்த்திய 2980 மைல் அளவிளான மகிழுந்து பயணம் வாயிலாக ஆறு மாநிலங்களை கடந்து சென்றது. வாழ்வின் மறக்க முடியா பயணங்களில் அதுவும் ஒன்று. அதற்கும் பெரிதாக எந்த ஒரு திட்டமிடலுமில்லை. அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது. ஆனால்,  ஏதோ ஒரு வானத்தின் நிலா பின் தொடர்ந்த படியே!

பயணங்கள் எப்பொழுதும் எனக்கு அலுப்பை கொடுத்ததே இல்லை. மனம் வெம்பி சூம்பிக் கிடக்கும் பொழுது இப்படியான பயணங்கள் உள்முகமாக சிந்தனையைத் திருப்பி விடவும், வழியில் தான் சந்திக்கும் புதிய மனிதர்களுடானான உரையாடல் தனக்குள் இருக்கும் உண்மையான இயல்பினை வெளிக்கொணர்ந்து மீண்டும் விரைவாக துளிர்த்தெழும் சாத்தியத்தையும் வழங்குகிறது.

அதனினும் பயணங்களின் பொழுது வாசிக்கும் பழக்கம் இருக்குமாயின் அது மேலும் கூர்மையடைய வாய்ப்பளிக்கிறது. என்னுடைய ஆதர்ச எழுத்தாளரான பாலோவின் த ஸகீர் புத்தகம் வீட்டில் படுத்தவாரே வாசித்துக் கொண்டிருந்தேன். அந்த புதினத்தின் ஓட்டம் புத்தகத்தின் எல்லையைத் தொடத் தொட இது இந்த நிலையில் வாசிக்கும் புத்தகமல்ல என்று அவமானமாக உணர்ந்தேன். அதன் விளைவாக அமைந்தது ஒரு நான்கு மணி நேர பேருந்து பயணம். அந்த பேருந்தின் கடைசி நிறுத்தத்திற்கு முன்பாகவே புத்தகத்துனூடான பயணமும் முடிவடைந்தது. பயணத்தின் பிற்பகுதி ஒரு ரம்மியமான மாலை நேரம். காவிரிக் கரையோரமாக பச்சை பசேல் நிறம் பூசிய வயல் காடுகள் அனைத்தும் கலக்கஸ்தான் புல் மேடுகளாக மாறிப்போயிருந்தன.

மீண்டும் கன்யாகுமரி பயணத்திற்கு வருவோம். மதுரையிலிருந்து குமரிக்கு செல்லும் நேரடி அரசு பேருந்து ஒன்றில் ஏறி அமர்ந்தேன். அரசு பேருந்துகளே இப்பொழுதெல்லாம் தொலை தூர பயணத்திற்கு செல்வதற்கென இயக்கப்படுவதாக கருதுகிறேன். அரசு பேருந்துகளின் பயணச் சீட்டின் விலையும் ஒன்றும் சொல்வதற்கில்லை. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் தஞ்சாவூருக்கும் புதுக்கோட்டைக்குமான பயணச் சீட்டின் விலை அரசு பேருந்திற்கும் தனியாருக்கும் ஒன்பது ரூபாய் வித்தியாசங்களை கொண்டதாக இருக்கிறது. முன்பு ஒரு காலத்தில் தனியார் பேருந்துகளிலேயே விலை அதிகமிருக்கும். இப்பொழுது அது தலைகீழாக இருக்கிறது. பேருந்துகளின் நிலையும் ஒன்றும் பெரிதாக மெச்சிக் கொள்ளும் படியாகவுமில்லை.

ஓடும் பேருந்திற்குள் முதல் முறையாக கொசுக்கள் முத்தமிட முத்தமிட பயணித்து மகிழ்ந்தது இதுவே முதல் முறை. ஓட்டுநர் எத்தனை மிதித்தும் பேருந்து மணிக்கு 50கி.மீ வேகத்திற்கும் மேல் சென்றிருக்க வாய்ப்பில்லை.

பேருந்தின் ஜன்னல்களின் கண்ணாடிகள் சிரித்து அதிர்ந்து சிரித்து என கொஞ்சம் கொஞ்சம் எட்டிப்பார்த்த தூக்கத்தையும் கொசுக்களுடன் சேர்ந்து கொண்டு காவல் காத்தது.

இந்தனை சந்தோஷத்திலும் விருட்டென்று அமைந்த பயணத்தினால், கையில் இருந்த கேமராவில் பாட்டரி இருக்கிறதா இல்லையா என்று பார்க்க அச்சப்பட்ட படியே நேரத்தை கடத்திக் கொண்டிருந்தேன். ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு காலை மணி மூன்றரையைப் போல எடுத்துப் பார்க்கும் பொழுது சுத்தமாக இறந்து கிடந்தது. கொஞ்சமே என்னை திட்டிக்கொண்டு மேலும் அதனை நினைத்துப் பயணத்தின் இனிமையை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அந்த மன அறைக்கு ஒரு பூட்டைப் போட்டு சாத்தி விட்டேன்.

பின்னே என்ன இறங்கி கையில் இருந்த சம்சங் s4 வழியாக கிடைத்ததை எடுத்துக் கொண்டேன். இருந்தாலும் காலை நாலரை மணிக்கு சென்றடைந்து விடும் என்ற பேருந்து சரியாக ஆறரை மணிக்கே சென்றடைந்தது. அதற்குள்ளாக சூரியனார் கொஞ்சம் காத்திரமாகி லென்ஸை பதம் பார்க்க ஆரம்பித்து விட்டார். இன்னும் குமரியில் ஐந்து இட்லிகள் பத்து ரூபாய்க்கு விற்கிறார்கள்! அந்த பெண்கள் மீன் விற்பனை செய்யும் சமூகத்தை சார்ந்தவர்களாக இருக்கக் கூடும். சுற்றி நின்று உணவருந்தியவர்களின் தோல் காய்ச்சலைக் கொண்டு அனுமானிக்க முடிந்தது.

அவர்கள் கடலுக்கும் சற்றே அருகே நின்று இந்த வியபாரம் செய்து வருவது அறியாமல் முகம் அலம்பி பல் விளக்கவென மனதில் நிறுத்தி ஒரு வெண் பொங்கலும், காஃபியும்  அருந்த 95 ரூபாய் கொடுத்து  முதல் போனி செய்து வைத்தேன். கொஞ்சமே வருத்தம். அடுத்த முறை ஐந்து இட்லிகள் பத்து ரூபாய் :) .

நான் பருகித் திளைத்ததிலிருந்து ஒரு சில துளிகள் உங்களின் பார்வைக்காகவும்...


1)2)
3)
4)
5)
6)
7)
8)
9)
10)

Related Posts with Thumbnails