Friday, November 30, 2007

இரவு நேர வேலையால் அதிகரிக்கும் புற்றுநோயாளிகள்!

இன்றைய சூழ்நிலையில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் கொடுத்த பகல் பொழுது போதாமல் இரவையும் பகலாக்கி உற்பத்தியைப் பெருக்கி பெரியத் திரை ட்டி.வி பெட்டி வாங்க வேண்டுமென அயராமல் நாடுகள் தோரும் உழைத்து வருகிறோம். இதில் என்ன வேதனையான மற்றுமொரு விசயமென்றால் இது போன்ற ஷிஃப்ட்களில் வேலையிலிருப்பவர்கள் மிக சொற்பமாகவே தன் வீட்டாருடன் ஊடாடி மகிழும் சூழ்நிலை என்று நினைத்த நேரம் போய், இப்பொழுது தலையில் ஒரு இடியை இறக்கி இருக்கிறது அண்மைய ஆராய்ச்சிகள்.

அது என்னவெனில் இது போன்ற இரவு நேர ஷிஃப்ட்களில் (Graveyard Shift) வேலை செய்யும் பெண்களுக்கு மார்பக, ஆண்களுக்கு ப்ராஸ்டேட் (Prostate) புற்று நோய் வருவதற்கான அனேகத்தன்மை அதிகமாக இருக்கிறது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதற்கான காரணமாக மெலடோனின்(Melatonin) என்ற நிறமியின் குறைவுத் தன்மை பெண்களில் ஓவரியன் ஈஸ்ரோஜனை அதிகரிக்கச் செய்கிறதாம். ஆனால், இந்த மெலடோனின் வந்து உடம்பில் கட்டிகளை வளர விடாமல் தடுக்கும் சக்தி கொண்டதாம், ஆனால் இரவு நேரங்களில் கூட அதிக வெளிச்சத்தில் இருந்து வேலை செய்ய நேர்வதால் இதன் உற்பத்தி பாதிக்கப் பட்டு உடலில் முன் சொன்னது போல சில ஹார்மோன்களின் உற்பத்தியை சமச்சீரற்ற நிலைக்கு தள்ளுவதால் இது போன்ற வியாதிக்கு காரணமென்று அறியப்பட்டுள்ளது.

இதற்காக சுமார் 75,000 இரவு நேர பணி புரியும் செவிலியர்களிடம் நேர்காணல் கண்டு அவர்களின் புற்று நோய் பின்புலம் சார்ந்த கேள்விகளை அறிந்து 10 வருடங்கள் மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டதில், இவர்களுக்கு இரவு நேர பணியிலேயே இல்லாத பெண்களை விட (60%) அதிக அளவில் புற்று நோய் தாக்கியதாக கண்டறிந்தார்களாம்.

இதிலிருந்து என்ன தெரிகிறது நமக்கு, இயற்கைக்கு புறம்பாக உயிரிய(உடம்பு) சங்கீதத் (Biological Clock) தன்மையை உடைத்து நாற்பட்டு தொடர்ந்து இது போன்று உடம்பை தவறுதலாக உட் படுத்தினால், லாஜிக்கலாக யோசித்தாலே நிறைய பின்விளைவுகளை சந்திக்கக் கூடுமென்பது தெளிவாகிறது, இல்லையா?


நன்றி: இது சார்ந்த செய்திகளை மேலும் படிக்க இங்கே, இங்கே மாற்றுக் கருத்தாய்வுக்கு இங்கே போங்க...

Monday, November 26, 2007

இவர்களும் நம் மக்கள்தான்...

நான் புதிதாக அமெரிக்கா வந்திருந்த பொழுது இந்தியா என்று ஏந்தவொரு இடத்தில் எழுதி இருந்தாலும் அதற்கு ஒரு மாஜிக் ஈர்ப்பு இருந்ததுண்டு. இன்னமும்தான். சில சமயங்களில் நான் மான்ஹட்டனில் நேரத்தை செலவு செய்யும் பொருட்டு கால்நடையாக நடந்து திரிவதுண்டு. அப்பொழுது நான் சதாரணமாக காணும் ஒரு விசயம் வழிதோரும் ஆங்காங்கே பாதாள சாக்கடையின் வெளி முகப்பை மூடி வைத்திருக்கும் கணமான மூடி (Manholes). அதன் மீது அடித்திருக்கும் ஒரு வரி "Made in India" என்றதைப் பார்த்தவுடன் கொஞ்சம் பெருமையுடன் அப்படியே பார்த்து நின்று விடுவது.


அப்படி இருக்கும் பட்சத்தில் நேற்று இது தொடர்பாக ஒரு செய்தி படிக்கக் கிடைத்தது "தி நூயொர்க் டைம்ஸ்"ல். என்ன சொல்லியிருக்காங்கன்னா, இந்த சாக்கடை மூடிகள் மேற்கு வங்கத்தில் உள்ள சக்தி இண்டஸ்டிரி என்ற நிறுவனத்தால் முழுக்க முழுக்க செங்கல் சூலையில் செங்கற்கள் தயாரிப்பது போலவே, கைப் பக்குவமாக 1400 செண்டிகிரோடு வெப்பத்தில் நின்று, எந்தவொரு தற்காப்பு கவசங்களுமின்றி வெற்றுடம்புடனும், காலணியற்ற கால்களுடனும் கொட்டும் வியர்வை மழையில் நீந்தி நின்று அதனை செய்து நூயொர்க் நகரத்திற்கு அனுப்பி வைக்கிறார்களாம்.


அந்த செய்தியை கொடுப்பதற்காக இந்தப் பத்திரிக்கை நிருபர் ஒருவர் புகைப்படம் எடுக்கச் சென்ற பொழுது மிகவும் பெருமையாக சுத்திக் காமித்தார்களாம். பாதுகாப்பு சார்ந்த கேள்விகளை மட்டும் கேக்கும் பொழுது இது வரையிலும் எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை என்று கூறி புலகாங்கிதம் அடைந்து கொண்டார்களாம், அதன் நிறுவனத்தார்.


அவர்களின் தினக் கூலி கூட ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைவுதானாம். ஆனால், அதே தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒரு அமெரிக்கருக்கு ஒரு மணி நேரத்திற்கு 25 டாலர்களாம். கேக்கும் பொழுது என்ன தோன்றுகிறது உங்களுக்கு?


இது போலவே முன்பொருமுறை நம்மூர் கணேஷ் பீடிகள் சக்கை போடு போட ஆரம்பித்த நேரம் இங்கு, உலக மனித உரிமை கழகம் எப்படி அந்த பீடிகள் உருட்டப் பெற்று சந்தைக்கு வந்தடைகிறது என்பதனை நேரடியாகவே குழந்தைகள் தொழிலில் ஈடுபடுத்தப் படுவதை காமித்து அதனை இங்கு விற்பதற்கு தடை வாங்கித் தந்தார்களாம்.


இப்பொழுது, இந்த சக்தி இண்டஸ்ட்ரி அந்த லிஸ்டில் சேர்ந்திருக்கிறது. அதற்காக இதற்கு முன்பு இந்த மூடிகளை பல வருடங்களாக அடி மாட்டு விலைக்கு வாங்கி வந்த இந்த New York City’s Department of Environmental Protection ஏஜென்சிக்கு இது தெரியாத என்றால் - அது ஒரு மில்லியன் டாலர் கேள்வி என்று கூறலாம்.


என்னமோ இது போன்று வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் எல்லாம் இப்பொழுது அடித்துக் கொண்டிருக்கும் அதிர்ஷ்ட காற்றில் சுத்தமாக மறந்து போனவர்கள் என்பது மட்டும் உண்மை. ஆனால், இவர்களுக்கு மட்டும் இன்னமும் ஒரு நாளைக்கு 60 ரூபாய்க்கும் குறைவாக ஊதியத்தை வழங்கி விட்டு மற்றவர்கள் வங்கியிலிருந்து ஒரு நாளைக்கு 25 ஆயிரம் மட்டும்தான் எடுக்க முடியுமென்ற பெரிய கிணற்று வித்தியாசத்தை உருவாக்கி அதன் பொருட்டு மக்களையும் ரொம்ப நாளைக்கு பிரித்தாள முடியாது. அதன் எல்லை எங்கே நம்மை இட்டுச் செல்லும் என்பது நமக்கெல்லாம் தெரியும்தானே.







நன்றி: தி நூயொர்க் டைம்ஸ். இந்த செய்தியைப் படிக்க இங்கே சொடுக்கிப் பாருங்க...

Sunday, November 04, 2007

மக்கள்தொகை கட்டுப்பாட்டிற்கு ஆண்களின் பிரசவ பங்களிப்பு!!

அன்றைய இரவும் மற்றைய இரவைப் போலத்தான் எங்களை நாடி வந்தது. ஆனால், அன்றைய இரவுக்கு முற்பகலில் தீபாவளிக்கென துணிகள் எடுப்போமென நிறைமாத கார்ப்பினியை விடாப் பிடியாக பக்கத்தில் இருக்கும் மாலுக்கு(mall) அழைத்துச் சென்றேன். கடைகள் மூட ஒரு இரண்டு மணி நேரங்களே இருக்கும் பட்சத்தில் மூன்று பேருக்கு துணி எடுக்கும் நிலையில் சென்றிருந்தோம். ஒருவருக்கே எடுத்து முடித்த நிலையில் மீதம் ஒரு பதினைந்து நிமிடங்களே கைவசமிருந்தது.

அரக்க பரக்க இன்னொருவருக்கும் எடுத்து முடித்துவிட்டுப் பார்த்தால் கடையின் முகப்பே மூடப்பட்டு இதர கடைகளையும் மூடி விட்டிருந்தார்கள். காரை கிழக்கு முகமாக நிறுத்தி வைத்து விட்டு நுழைந்திருந்த நாங்கள் மேற்கு பக்கமாக திரிந்திருக்கின்றோம். இப்பொழுது ஒரு பக்க வாசலே திறந்திருக்கும் பட்சத்தில் அதன் வழியாக வெளியேறி காரைச் சென்றடைய குறைந்தப் பட்சம் ஒரு 20 நிமிடங்கள் நடக்க வேண்டிருந்தது.

சரியாப் போச்சு என்று நினைத்துக் கொண்டே என்னவளையும் தரத் தரவென்று மெதுவாத்தான் நடக்க வைத்துக் கூட்டிக் கொண்டு வரும் பொழுதே... கூறிவிட்டாள் "என்னாங்க ஏதோ இறங்கின மாதிரி இருக்குன்னு..." எனக்கு கபக்கென்று உள்ளே கிலி பிடித்துக் கொண்டாலும்... சின்னதாக ஒரு ஆசை சுய ப்ரசவித்திற்கு இது அவசியமென்று நினைத்துக் கொண்டேன் :-).

ஒரு வழியாக வெளியே நின்ற செக்யூரிட்டி எங்களின் நிலை பார்த்து பார்க்கிங் லாட்டிலிருந்த அவரின் காரில் எங்கள் வாசல் செல்ல அவராகவே முன்வந்து கூட்டிச் சென்று இறக்கி விட்டார். பின்பு என்னவள் என்னிடத்தே இவர்தான் கடவுள் இப்பொழுதென்று தத்துவம் பேசிச் சிரித்தால். அன்பே சிவமாம்!

இப்படியாக இருந்த எங்களிரவு அடுத்த இரண்டு மணி நேரத்தில் பெரிய வாழ்க்கை கல்வியாக மாறிப் போனது. நான் எதிர் பார்த்திருந்த நாளாகவும் அமைந்துப் போனது! சரியாக ஒரு பதினொரு மணி வாக்கில் கொஞ்சம் இரத்தம் கசிவதாக கூறினாள், அதனைத் தொடர்ந்து நானும் மருத்துவரை தொடர்பு கொள்ளலாமென அவர் கொடுத்த இரவு எண்ணை தொடர்பு கொண்டேன், இரண்டாவது முறை அழைத்தே மருத்துவ மனையிலிருந்து சில அடிப்படை கேள்விகளுக்கு பதிலுரைத்த பின் எங்களை அவர் மருத்துவ மனைக்கே வந்துவிடும் படி அறிவுருத்தினார்.

பதராமல் பக்குவமாக மருத்துவ மனையின் முன் பக்கத்தில் காரை நிறுத்தி விட்டு நடந்தே உள்ளே சென்று என்னவளின் கையாலேயே பேப்பர் வொர்க் செய்ய வைத்து விட்டு ஒரு அறையில் சென்று அடைந்து கொண்டோம்.

பதினொன்னரை மணி. பரிசோதித்துப் பார்த்துவிட்டு இது ப்ரசவ வலியின் அறிகுறிதான் என்று நிச்சயிக்கப் பட்டது.

இருங்க, என்னாடா தெகா குழந்தைப் பொறக்கப் போறத இப்படி நீட்டி முழக்கிச் சொல்லிக்கிட்டு இருக்கானேன்னு நினைக்கிறீங்க இல்லையா. விசயமில்லாம நான் உங்க நேரத்தை திருடிக்கிட்டு இருப்பேனா, சொல்லுங்க. சொல்றேன்.

நம்மூரு பெண்களும் சரி, அப்பாவாகப் போகும் ஆண்களும் சரி ப்ரசவமென்பது பெண்களுக்கே எழுதிவைக்கப்பட்ட வலியென்று யாரோ எழுதி வைத்து விட்டதாக நம்பிக்கொண்டு இன்னமும் மாப்பிள்ளையாக தன்னை நினைத்துக் கொண்டு, பல அப்பாக்கள் வேலை நிமித்தமாக வெளியூரில் இருப்பார் அந்த முக்கியமான நாளில்; பெண்ணும் பக்கவாக அம்மா வீட்டில் அடி ஆட்களுடன் எதிர் வரும் போரை சந்திக்க "மக்கள் படையுடன்" காத்திருப்பார். இது நம்மூர் சிட்டுவேஷன், இல்லையா?

ஆனால் இங்கே அந்த மக்கள் பூராவும் ஆப்செண்ட் (அது உன் தலையெழுத்துடான்னு சொல்லப்பிடாது, இதனை முழுமையா அனுபவிக்கணுமின்னுதான் என்னோட திட்டமே ;). எப்படி நாம் தனிமையில் ஒரு உயிரை உருவாக்க எத்தனித்து இரண்டு பேர் மட்டுமே போரிட்டமோ அதே நிலையில் நானும் அவளும் தான் இன்று (உதவிக்கு ஒரு மருத்துவருடன்). என்னவளுக்கு கொஞ்சம்அதே எதிர் பார்ப்பு அந்த "மக்கள் படை" இருந்தால் இன்னமும் கொஞ்சம் ஆராட்டி இருக்கலாமே என்று. ஆனால், இப்பொழுது வரும் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் முப்பது செகண்டுகள் நிற்கும் வலியை ரொம்பவும் கவனத்துடன் எதிர் கொண்டு வாயால் ஊதியே தனித்துக் கொள்ளும் நிலமை தன்னந் தனியாக.

ஆனால், நம்மூர் மருத்துவ மனைகளில் ஏன் அத்துனை சத்தமும், கையை பிசைந்து கொண்டு வெளியே நடந்து திரியும் பெண்ணின் அப்பாவும், ஊராக வந்து நிற்கும் அத்துனை பெண்களும் உள்ளே வருகிறார்கள். உள்ளே என்ன நடப்பதாக நினைத்துக் கொண்டு ஏற்கெனவே பிள்ளை பெற்ற பெண்டீரும் அப்படி படை கலக்குகிறார்கள்? அதனால் தானோ என்னவோ இப்பொழுது முக்கால் வாசி பேருக்கும் மேல் அறுவை சிகிச்சையின் பேரில் ப்ரசவிக்கிறார்கள் போலும். சரி விசயத்துக்கு வருவோம்.

முதல் நாள் இரவு சேர்ந்து, மறுநாள் மாலை வரையிலும் கொஞ்சம் ஸ்ட்ராங்காக இடுப்பு வலி வரட்டுமென காத்திருந்தோம். என்னவளுக்கு வலியை எப்படி மூக்கில் ஏற்றி வாயின் வழியாக நாகரீகமாக ஊத வேண்டுமென்ற நுட்பம் தெரியாததால் கொஞ்சம் படை கலக்கி வைத்து விட்டால், பயந்து போன இந்த ஊர் செவிலியர்கள், ஷி ஸ் ஹர்டிங்க், ஷி ஸ் ஹர்டிங்க் என்று கூறி கொஞ்சம் மயக்க மருந்தும் கொடுத்து, இடுப்பு வலியையும் துரிதித்தார்கள் என்று நினைக்கிறேன்.

பின்பு வந்தது எபிடூரல் (epidural) என்ற வலியை மறக்கடிக்கும் ஊசி. போட்டதுதான் தெரியும் வலி பறந்து போனது போல. ஆனால், அழுத்தம் தொடர்ந்தது. இப்பொழுது டாக்டரும் உள்ளே வந்தாகிவிட்டது. எனக்கு கொஞ்சம் கலக்கமிருந்தது. எப்படி என்னவள் இதனை முடித்துக் கொடுக்கப் போகிறாள் என்று. டாக்டர், அரை வலி மயக்கத்தில் இருந்தவளிடம் "உன் கணவன் பொறுப்பில்லாமல் ஸ்கீரினுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு நிற்கிறார், அவருக்கு வேலை கொடுப்போமா" என்று நகைத்து அவளை சிரிக்க வைத்து என்னை வேலையில் அமர்த்திக் கொண்டார்.

இப்பொழுது ஒரு செவிலியின் வேலையை நான் பார்க்கப் போகிறேன். எனது வேலை வலது காலை பிடித்து ஒவ்வொரு முறை இடுப்பு வலி உச்சத்திற்கு போகும் பொழுதும் அழுத்தி பிடித்து வெளியே குழந்தையை தள்ளுவதற்கு உதவி புரிய வேண்டும். ஹும்... கொஞ்சம் மனத்துக்குள் பட படப்பு ஒட்டிக் கொண்டாலும், என்ன அவள் அனுபவிப்பதில் நமக்கு கால்வாசியாவது ஒட்டிக் கொள்ளட்டுமே என்று ஒவ்வொரு முறையும் முக்கி, முனகும் பொழுதும் அவள் காதருகே சென்று இதோ உனது தேவதையின் முடி தெரிகிறது... இதோ வெளியே வந்து விட்டால் இன்னும் மூன்று முறை அவ்வளவேதான் என்று சுய ப்ரசவிக்க உதவி, குழந்தையையும் வெளியே எடுத்து விட்டு, பிறகு பனிக்குடம் எடுத்து, தைக்கும் வரையிலும் அருகமையே நின்றது, வாழ்விற்கும் ஒரு மறக்க முடியாத அனுபவம்.

வாழ்க்கைக்கும் ஒரு பெண்ணுக்கு ஒரு குழந்தையே போதுமான அனுபவமாக இருக்க வேண்டுமே, எப்படி இந்தப் பெண்கள் அத்தனை வலியையும் சகித்துக் கொண்டு மீண்டும் மீண்டும் தனது கணவனுக்கு எந்த மகப் பேறு வலியையும் வழங்காமல் தானே முன் வந்து ஏற்றுக் கொண்டு இதில் சிக்கிக் கொள்கிறார்கள் என்று எண்ணத் தோன்றியது.

இந்த அனுபவத்தைத் தொடர்ந்து பல கேள்விகள் என்னுள் எழுந்துள்ளது. அது கலாச்சாரம் சார்ந்தது. குழந்தை பெற்றுக் கொள்ளும் சமயத்தில் நமது நாட்டு மக்கள் எப்படியெல்லாம் பில்டப் கொடுத்து, வேறு வேலை வெட்டி இல்லாமல் பத்து பதினைந்து பேர் எப்பொழுதும் அந்த பெண்ணையே சுற்றிச் சுற்றி வருவது, கணவனும் வேலைக் களவானியாக எனக்கு ஒண்ணுமே தெரியாதுப்பா என்கிற மாதிரி நடந்து கொள்வது.

ஐந்து குழந்தைகள் பெற்றுக் கொண்டும் கூட அதில் உள்ள காம்ளக்ஸிட்டிகளை ஆண்கள் தெரிந்து கொள்ளாமல் உதாசீனப் படுத்துவது ஏன்? என்னமோ பிள்ளையே நான் போட்ட பிச்சைங்கிற மாதிரி, சில ஆண்கள் குழந்தையை தன் கட்டுப் பாட்டுக்குள்ளேயே வைச்சிக்கிறது... பெண்களும் அதுக்கு தகுந்தபடி ஓவர் பில்டப் கொடுத்துப் பார்த்தாலும் நம் ஆண் மக்களிடையே செல்லு படி ஆகாமல் இருப்பது... இப்படி பல விசயங்கள் வந்து போனது.

இன்னும் இது தொடர்பா பின்னால் எழுதணும். இதுக் கிடையில் ஓவ்வொரு அப்பாவும் தன் பிள்ளை ஒண்னொண்ணும் எப்படி தன் துணைவி வெளியே கொணர்ரான்னு பக்கத்தில இருந்து கண்கூடா காணணும், அப்பத்தான் இந்தியாவில் "குழந்தை தயாரிப்பு" ஒரு தொழிற்சாலை தொழிலா நடைபெறாம இருக்குமின்னு நினைக்கிறேன்.

எது எப்படியோ அப்பாவாகப் போகும் அப்பாக்களா எந்ததெந்த சுகத்தையெல்லாம் சேர்ந்து அனுபவிக்க நினைக்கிற நாம, தெய்வீகக் காதல், வெண்டைக்கா காதல் அப்படின்னும் சொல்லிக்கிட்டு திரியற நாம இந்த முக்கியமான விசயத்தில முன்னம நின்னு நம்ம துணைக்கு உதவி பண்ணுறது அவசியமோ அவசியமின்னு நான் நினைக்கிறேன். அதனை நாம மிஸ் பண்ணோமின்னா, பாதி இழப்பு நமக்குத்தான்.

Related Posts with Thumbnails