Thursday, March 26, 2009

களவாணிப் பயலுக...!

எப்பொழுதும் போலவே இன்னிக்கு காலையில எனது அப்பாக் கூட செம அரட்டை. அவரு தன்னைச் சுற்றி நடக்கும் விசயங்களை சிரிப்பாவே பெரும் கசப்பான விசயங்களையும் பகிர்ந்து கொள்வதுண்டு. பேசிக்கிட்டு இருக்கும் பொழுதே எனக்குத் தோன்றும் இன்னிக்கும் ரெண்டு பதிவுக்கான விசயம் தேரிடுச்சுப்பான்னு. அந்தளவிற்கு விசயங்களை கூர்ந்தாய்ந்து அதனை அப்படியே பக்கத்திலருந்து பார்க்கிற மாதிரியே சொல்லுவார்.

இன்னிக்கு அவரு என்கிட்ட அடிச்ச அரட்டையில சொன்ன விசயம் கண்டிப்பா எழுதப்படக் கூடிய விசயமின்னு தோணினதுனாலே இங்கே பதிந்து வைச்சிருக்கிறேன். கிராமங்களில் ஆடு, மாடு, கோழிகள் எப்படியும் ஐந்தில் ஒரு இரண்டு வீட்டிலயாவது வளர்த்து வருவார்கள். அவைகளும் சுதந்திரமாக சுற்றித் திரிந்து அகப்பட்டதையெல்லாம் சுருட்டி மேய்ந்து வளர்ந்து வளர்ப்பவருக்கு ஒரு நாள் கறியாகவோ அல்லது பணமாக ஜீரணமாகிவிடும்.

ஆனால் இவைகள் வளர்க்கப் படும் விதத்தில்தான் அத் தனிப்பட்ட ஒருவரின் சுயநல அணுகு முறை எப்படி நம் சமூகத்தின் ஒட்டு மொத்த அழுக்குத் தனமாக கிராம, நகர ஒன்றியத்திலிருந்து சட்டசபை பாராளுமன்ற மனிதர்களின் கூட்டு மன வெளிப்பாடாக ஒரு நாடே சங்கிலித் தொடர்போல் இவ் அழுக்கில் படிந்து அழகிழந்து வெளிக் காட்டிக் கொள்கிறது என்ற எண்ணவோட்டதின் அடிப்படையில் அப்பா கூறிய ஒரு சிறு பகிர்வு அமைந்தது.

இன்றைய கால கட்டத்தில் இந்திய கிராம மக்களிடையே வண்ண தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று வாங்கி வைத்துக் கொள்வதில் உள்ள முனைப்பும், தீவிரமும் வெளி நாடுகளுக்கெல்லாம் சென்று வீடு, வாசல், நில புலன்கள் வாங்கி பெட்டி பெட்டியாக வீடு கட்டி கொள்வதில் உள்ள அக்கறை தனது மற்றும் அண்டைய வீட்டாரின் சுகாதாரத்திற்கென, ஒரு கழிவறை கட்டிக் கொள்வதில் காட்டுவதில்லையே, ஏன்? அறியாமை??

சரி வாழும் வீட்டு அறைகளில் கழிவறைகள் கட்டிக் கொண்டால்தான் அவர்களின் மன ஊனத்தின் ஊடாக உவ்வே.... ஏன், ஒரு இருபதடி தள்ளியேனும் ஒன்றை கட்டி கொள்ளக் கூடாது? திறந்த வெளியில், பொறுப்பற்ற முறையில் முகம் சுழிக்க வைக்கும் கோணத்தில் அமர்ந்து உன் உபாதயை நீக்கிக் கொள்கிறாய். அதன் விளைவுகளை அறியாமலயே! உதாரணத்திற்கு பார்ப்போம். பக்கத்து வீட்டுக்காரன் வீட்டு தோட்டம்தானே என்று அங்கு அசுத்தம் பண்ணிவிடுகிறாய்; அவரும் அது போலவே உன் தோட்டத்தில்.

இப்பொழுது நீங்கள் இருவரும் வளர்க்கும் கால் நடைகள் அதிலும் குறிப்பாக கோழிகள் உங்களின் எச்சம் வெளிப்பரப்பில் கிடந்து பல தேவையில்லாத நுண் கிருமிகளின் வாழ்விடமாக அமையப் பெற்றும், அல்லது உங்களுக்கே உரித்தான குடற் புழுக்களின் முட்டைகளை எடுத்து வந்து மீண்டும் உங்கள் வீட்டிலேயே டெலிவரி செய்யப் படுவதனை அறிவீர்களா? அதனை விட மோசமாக வீட்டு ஈக்கள் அதே செயலை இன்னும் துரிதமாக செய்துகிறது. சராசரியாக ஒரு ஈயின் ஒரு நாளைய பயணம் ஒரு கிலோமீட்டருக்கும் மேலாக சுற்றி வருவதாக இருக்கையில் உன் சாப்பாட்டுத் தட்டில் அமர்ந்து அந்த குடற் புழுக்களின் முட்டைகளை உனக்கு அனுப்ப எவ்வளவு நேரம் பிடிக்கலாம் என்பதனை உணர்ந்திருக்கிறோமா?

இன்னும் சிலதுகள் வீட்டின் ஒதுக்குப் புறத்தில் கழிவறை இருந்தாலும், காட்டு மோட்டிற்கு சொன்று அப்படி வானத்தை அன்னாந்து பார்த்துக்கிட்டே பண்ணுவதில் ஒரு சொகமிருக்கிறதா செஞ்சுட்டு, பக்கத்தில இருக்கிற குளத்தில வேற போயி கழுவி வைச்சிட்டு வருங்க. பழைய படிக்கா ஈயிம், மற்ற கால்நடைகளும் வெளியில இருக்கிறத இவன் வீட்டுக்கே கொண்டு வந்துடும். மேலும் அந்த குளத்து தண்ணீயில இருக்கிற மீன் இன்ன பிற விசயங்கள் அதையெல்லாம் சுத்தம் பண்றேன்னு முழுங்கி போட்டு வைச்சிரும், மிச்சம் மீதி இருக்கிறதை நம்மாளு அள்ளி அள்ளி அவனுட்டு, இவனுட்டு குடல் வியாதியெல்லாம் வாயி வழியா உள்ளே செலுத்திக்குவோம்.

இது ஒரு வகையான தான் தோன்றித்தனமின்னா... கீழே இருக்கிறது இன்னொரு வகையானது.

ஆடு, மாடுகள் வைத்திருப்போரும் அண்டைய வீட்டார்கள் மரக் கன்றுகள் பிரயத்தனப் பட்டு வைத்து வளர்ப்போரையும் தங்களது பொறுப்பற்றத் தனத்தினால், மனச் சோர்வு அடைய வைத்துவிடுவதும் அடிக்கடி நடப்பதுண்டு. நிறைய மரங்கள் என்பது ஒரு கிராமத்தின் சுகாதார நிறந்தர வைத்திய சாலையைப் போன்றது. இதனை ஊக்குவிப்பதின் பொருட்டு ஊரின் சீதோஷ்ன நிலையும், மழையளவும் கூட மாத்தியமைக்க கூடிய வாய்ப்புகள் அனேகம். ஆனால், கால்நடை வளர்ப்போரின் பொறுப்பற்றத் தனம் அதற்கும் தீங்கிழைக்கிறது.

சரி இது போன்ற தான் தோன்றித்தனமான, பொறுப்பற்ற, சுயநலமான எண்ண வோட்டத்தின் ‘மூலம்’ தான் என்ன? இப்பொழுது ஒரு கிராமத்தின் மக்களில் பத்துக்கு எட்டு பேர் இது போன்ற மன நிலையில் அமைந்தால் அச் சமூகம் எவ்வாறாக இருக்கக் கூடும்? சிறுகச் சிறுக தனது எண்ணத்தின் வன்மத்தைக் காட்டிக் கொண்டே வரும் கனம் தோரும், பிரிதொரு சமயத்தில் அது ஒட்டு மொத்த ஊரின் நிகழ்வாக, அமைப்பாக பிரதிபலித்து விடுகிறது அல்லவா?

ஒருவர் மரக் கன்றுகளை நட்டு எப்பேர் பட்ட தண்ணீர் கஷ்டத்திலும் அவைகளுக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து விடவேண்டுமென்ற அக்கறையில் ஈடுபட்டிருக்கும் பொழுது, பக்கத்து வீட்டில் பொறுப்பற்ற ஒருவர் தனது கால்நடையை விட்டு குருத்திலயே மேய விடுவதென்றால் உழைத்தவரின் வியர்வைக்கு என்ன பொருள் அங்கே? மரம் நட்டு அதன் மூலம் கிடைக்கும் பலன் அவரது உடனடி பலன் என்ற குறுகிய நோக்கமிருந்தாலும், எல்லோரும் முன் வந்து அதனை பொறுப்புடன் எடுத்து நடத்திக் காட்டும் பட்சத்தில் நீர்த் தட்டுப்பாடே ஒழிந்துவிடலாமல்லவா? அந்த கிராமத்திற்கே ஒரு நாள்.

இது போன்ற வளர்ப்பு முறையினாலேதான் இவன் வீட்டை பெறுக்கி அடுத்தவன் சுவற்றுக்குள்ளரோ அல்லது வாசலிலோ அவன் இல்லாமல் இருக்கும் பொழுது செய்வது, மற்றவன் அதனையே இவன் இல்லாமல் இருக்கும் பொழுது இவனுக்கு செய்வது. எல்லோருமாக சேர்ந்து ஊரையே குப்பை கொட்டும் இடமாக மாற்றி கொசு வளர்க்கும் பண்ணைகள் வைக்க வித்திடுவது...

நான் மேற் கூறிய ஒரு தனிப்பட்ட மனிதரின் அல்லது குடும்பத்தின் பொறுப்பற்ற, சுய நல போக்கை ஒவ்வொரு நபரும் ஏதோ ஒரு வகையில் பின் பற்றுவாராயின் ஒட்டு மொத்த நாட்டின் நிலைதான் என்ன? அரசியல், அரசாங்க இயந்திரங்கள் என்பவை இவ் மக்களின் ஊடாகத்தானே திரும்பவும் தனி மனிதர்களுக்கு, அச் சமூகத்திற்கும் வந்தடைகிறது. விசயம் அப்படியாக இருக்கையில் எப்படி நாம் தனித்து நின்று விடுவோம்?

Thursday, March 12, 2009

கிளம்புங்க போகலாம் ஓட்டுப் போட...

ஓட்டுப் போடும் வயதை அடைந்த அனைவரும் வாக்களிக்க முன் வர வேண்டுமென்பது ஒரு ஆரோக்கியமானதொரு விசயம். நல்லதொரு ஜனநாயக நாட்டை கட்டியெழுப்புவதற்கு என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், நம்மில் பலபேருக்கு தன் கையில் உள்ள அந்த ஒத்தை துருப்புச் சீட்டின் வலிமை விளங்காமல் பலவாராக வீணடித்துவிடுகிறோம். நன்றாக படித்துணர்ந்த மேதைகள் அந்த ஒரு தேர்தல் நாளை தேவையற்ற ஒரு சடங்காக கருதி வீட்டிற்குள் முடங்கிவிடுவதுமுண்டு.

இளைஞ/ஞிகளுக்கோ அதனைப் பற்றிய விழிப்புணர்வில்லாமல் ஒன்று தன் பெயரை ஓட்டளிக்க இணைத்துக் கொள்வதில்லை அல்லது அப்படியே இணைத்துக் கொண்டாலும் சரியானதொரு வேட்பாளர் தெளிவு இல்லாமல் யாருக்கோ தனது உரிமையை ஓட்டின் மூலமாக விட்டுக் கொடுத்துவிடுகிறோம். ஒவ்வொரு தேர்தலின் போதும் மொத்த வாக்களிப்பே 45லிருந்து 60 சதவீதம்தான் நடைபெறுகிறதாம். அதனில் 35 சதவீதம் கிராமபுர மக்கள் தங்களின் பலம் தான் அறியாமல் எதுக்காகவாவது விலை போய்விடும் நிலையிருக்கிறார்கள்.

அண்மையில் நண்பர் சந்தோஷ் ஓட்டுப் போடுவதின் அவசியத்தை வலியுறுத்தி தொடர் பதிவிட சில நண்பர்களுடன் என்னையும் அழைத்துருந்தார். அவரிடம் மின்னரைட்டையில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, நான் கூறினேன் இந்த நடக்கவிருக்கும் தேர்தலில் யாருக்குப் போடுவது அவ் ஓட்டு, நன்றாகவே சிந்தித்து அளிக்கப்பட்டாலும் சரியான பயனளிக்கும் முறையில் உள்ள ஒருவருக்கு போய்ச் சேருகிறதா போன்ற கேள்விகளை அவர் முன்னால் வைத்தேன்.

இக் கேள்விகள் எனக்கு தன்னிச்சையாவே எழுந்தது இந்த அரசியல் தகிடுதத்தங்களான மாறும் கொள்கைகள், கோட்பாடுகள், அரசியல் கோமாளித்தனங்கள், கூட்டணித் தாவல்கள், குடும்பம், மதம் சார்ந்த மற்றும் கடைசிப் பெயரைக் கொண்டதால் கிடைத்த சந்தர்ப்பவாத அரசியல் என ஜனநாயகத்தின் மீது அசைக்க முடியா நம்பிக்கை வைத்திருக்கும் எந்த ஒரு நல்ல மனிதனயையும் அசைத்துப் பார்க்கும் கயவோளித் தனங்களை கண்ணுரும் யாரும், எப்படி இந்த தடியெடுத்தவர்களின் கூடாரத்தில் நல்ல கொள்கை பிடிப்புள்ள, பொதுநலம் மிக்க மனிதர்களை கண்டறிந்து வாக்களிப்பதென மனம் தொய்வுருவதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் இருக்கின்றன இந் நிலையில் நானே குழம்பிப் போய் உள்ளேன், சந்தோஷ் என்று அவரிடம் கூறினேன். மேலும் சரியான ஒரு மாற்று அணி வேறு தோன்றாத இக்கால கட்டத்தில் இளைஞர்களை உசிப்பிவிட்டு எந்த அரசியல் கட்சிக்கு வாக்களிக்க அழைப்போம் நாம்?

அமெரிக்காவில் இம்முறை ஓபாமாவிற்கு இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் புதிதாக எப்பொழுதும் இல்லாத அளவில் இத் தேர்தலில் ஓட்டளிக்க முன் வரப் போகத்தான் அந் நாட்டில் மிகப் பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது என்று சுட்டிக்காட்டியிருந்தார் சந்தோஷ். அது உண்மைதான். இருந்தாலும், ஓபாமாவின் அரசியல் நிலைப்பாடுகள், தனது ஆட்சி அமைந்தால் எந்த திசையில் நாட்டை எடுத்துச் செல்வேன் போன்ற வலிமையான, தெளிவான கருத்துக்களை தேர்தல் பிரச்சாரத்தில் முன் வைத்தார். எல்லாவற்றிற்கும் மேலாக நம் அரசியல் வாதிகளைப் போன்று பெரிய அளவில் லஞ்ச, லாவண்யங்களில் திளைத்து வளராதா ஒரு இளைஞர் அவர்.

ஆனால், நம் நாட்டின் அரசியல் நிலையோ மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. புது காற்று உட் புகுவதற்கு ஏற்ற சூழ்நிலை இன்னும் எட்டாக் கனியாகவே இருக்கிறது. இந் நிலையில் புது ஓட்டுக்களை சோகரிப்பதின் மூலம் எந்த ஒரு மாற்றத்தை நாம் பெரிய அளவில் ஏற்படுத்தி விட முடியும் அல்லது எதிர்பார்க்க முடியும்? தமிழகத்தில் மூன்றாவது அணி எந்த அரசியல் கட்சிகளையும் சாராத ஒன்று நிகழ்வதற்கான அனைத்து சாத்தியங்களும் இருந்த பொழுதினும் அப்படி ஒரு மாற்றம் நிகழாமல் போனது ஒரு பெரிய இழப்புதான் நமது மாநில ஜனநாயகத்திற்கு.

நிலைமை அப்படியாக இருக்கையில் திருடர்களில் எந்த திருடர்கள் நியாயமாக திருடுகிறார்களோ அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுப்போமென்ற ஒற்றையடிப்பாதையில் தேர்தல் தேர்வுகள் நடத்த வேண்டிய கட்டாயத்தில் மக்களை கொணர்ந்து இங்கு வைத்திருக்கிறோம். இச் சூழ்நிலையில் ஓட்டளிப்பதின் முக்கியத்துவத்தை நான் எவ்வாறாக வலியுறுத்துவது, மாற்றம் என்பது எப்பொழுது முழுமையடையமெனில் அவ் மாற்றத்திற்கான தொடக்கச் சுழி இட்ட பாதைக்கு வலிமை சேர்ப்பதில்தானே சாத்தியப் படும், அப்படியெனில் இங்கே அந்த தொடக்கச் சுழி எங்கே? தேர்தெலுக்கென மக்களின் வரிப்பணத்தை வாரியெரைத்து, நாடு தழுவிய தேர்தல் ஏற்பாடுகள் மெனக்கெட்டு செய்யப்படும்பொழுது "தேர்தல் புறக்கணிப்புகள்" தனக்குத் தானே மக்கள் சூடு வைத்துக் கொள்வதற்கு சமம் எனும் பொழுது மக்களும் தாங்களாகவே முன் வந்து வாக்களித்து நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிகோலிடுவது அவசியமாகிறது.

உங்களுக்கும் இது மாதிரியே தோனியிருக்கும்தான் இருந்தாலும் நாம கண்டிப்பா ஓட்டுப் போடணுங்க.

ஆனால் இங்கே தொக்கிநிற்கும் ஒரு கேள்வி, யாருக்கு அவ் ஓட்டு? நல்ல சுயேச்சை வேட்பாளர்களை இனம் காண்பது மட்டுமே இப்போதைக்கு உள்ள ஒரு தீர்வோ!
பி.கு: இது தொடர் பதிவில்லையா, அதுனாலே விருப்பமுள்ளவங்க நீங்களும் கலந்துக்கிட்டு இது தொடர்பா பதிவுகளை போட்டுத்தாக்குங்கப்பா, படிப்போம்.

Tuesday, March 03, 2009

நேற்றையவைகளின் கூட்டுத் தொகையே இன்றைய நான்!

தினசரி வாழ்க்கையின் எச்சமாக நமக்குக் கிட்டும் அனுபவ பொதிகளைக் கொண்டு நம் வளர்ச்சியை, வாய்ப்புகளை எப்படியாக ஏற்படுத்திக் கொள்கிறோம் என்பதனைச் சார்ந்து ஒரு எண்ண ஓட்டம். அதன் விளைவே இந்தக் கட்டுரை!

எல்லாவிதமான வாழ்வு நிகழ்வுகளின் போதும் நம் மனம் வலியைக் காட்டிலும் சந்தோஷம் கொடுக்கும் முடிவுகளையே விரும்கிறது, இல்லையா? இருப்பினும், இயற்கையின் படைப்பில் இவ்விரு (வலி/சந்தோஷம்; தோல்வி/வெற்றி) விஷயங்களும் மாறி மாறி நிகழும் ஒரு காரணி. இயற்கையாகவே சந்தோஷ நிகழ்வுகளில் கிடைக்கும் நிர்ணயிக்கப்பட்ட கொண்டாடும் தன்மையில் திளைத்து இருப்பது மட்டுமே எஞ்சியிருப்பதால், பரவலாக மனம் அதனையே பெற்றுக் கொள்ள விரும்புகிறது. இருந்தாலும், அதன் மறு முகமான 'வலியில்' கிடைக்கும் கற்றுக்(வளர்வதற்கான) கொள்வதற்கான சாத்தியக் கூறுகளைப் பற்றி யாரும் எண்ணியும் பார்ப்பதில்லை அதனை ஏற்றுக் கொள்வதற்கான மன வலிமையும் சொல்லிக் கொடுப்பதில்லை.

ஆனால், உண்மை என்னவெனில் இந்த இரண்டாவது காரணியில்(வலி/தோல்வி) கிடைக்கும் பாடங்களே நம்மை வளர்ச்சியின் அடுத்த கட்ட நிலைக்கு எடுத்துச் செல்கிறது. ஓவ்வொரு தோல்வியிலும் நமக்கு கிடைத்த பாடங்களை சற்றே உற்று நோக்கி அதனில் இன்னமும் கவனைத்தை முன்னிறுத்தும் பொருட்டு நமக்கு கிடைக்கக் கூடிய விசயங்கள் வெற்றியடைந்து கடந்தவருக்கு கிடைத்த சந்தோஷ கால நிர்ணயத்தைக் காட்டிலும், வலியுனூடாக பெற்றவருக்கு மேலும் பல விசயங்களை விளக்கியிருக்கக் கூடும்.

உதாரணத்திற்கு ஒருவருக்கு தான் காதலித்த ஒரு காதலி/காதலன் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். அது நடந்து முடிந்திருந்த பட்சத்தில் சுய அலசலில் இரு பாலரும் தன் பக்கமிருக்கும் தவறுகளை களைய முற்படுகையில் எச்சமாக நமக்கு கிட்டுவது என்னவாக இருக்க முடியும் - மேலும் பண்மையடைந்த, இன்னொரு பார்ட்னரை மிகவும் அன்பாக நடத்தக் கூடிய மனிதன் கிடைக்கப் பெறலாம். வளர்ச்சி என்பது அப்படியாகத்தானே அமைய முடியும், அல்லது அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்?

இதே உதாரணத்தை வாழ்வின் எந்த ஒரு நிகழ்விலும் நமக்கு பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும். கடந்து சென்ற சேலஞ்ச் நமக்கு எது போன்ற தாக்கங்களை, வளர்ச்சியை கொணர்ந்திருக்கிறது? அது நேர்மறையானதா அல்லது எதிர்மறையானாதா? மீண்டும் அதே நிலையில் இருப்பதில் தனக்கு ஒப்புமையா? இல்லை இந்த கடந்து போன சேலஞ்சால் பல படிகள் என்னை வளர்ச்சியின் நிலையில் உயர்த்திக் கொள்ள முடிந்தது என்ற நிலையிலிந்தால், நாம் எந்த ஒரு சேலஞ்சையும் தனக்கு தன் வளர்ச்சிப் பாதையின் அடுத்தக் கட்டத்திற்கு செல்வதற்கு வைத்திருக்கும் ஏணிப்படியாக கருதி மென்மேலும் வாய்ப்புகளை தருவித்துக் கொள்ள முடியும்தானே?

Related Posts with Thumbnails