Wednesday, March 25, 2009

களவாணிப் பயலுக...!

எப்பொழுதும் போலவே இன்னிக்கு காலையில எனது அப்பாக் கூட செம அரட்டை. அவரு தன்னைச் சுற்றி நடக்கும் விசயங்களை சிரிப்பாவே பெரும் கசப்பான விசயங்களையும் பகிர்ந்து கொள்வதுண்டு. பேசிக்கிட்டு இருக்கும் பொழுதே எனக்குத் தோன்றும் இன்னிக்கும் ரெண்டு பதிவுக்கான விசயம் தேரிடுச்சுப்பான்னு. அந்தளவிற்கு விசயங்களை கூர்ந்தாய்ந்து அதனை அப்படியே பக்கத்திலருந்து பார்க்கிற மாதிரியே சொல்லுவார்.

இன்னிக்கு அவரு என்கிட்ட அடிச்ச அரட்டையில சொன்ன விசயம் கண்டிப்பா எழுதப்படக் கூடிய விசயமின்னு தோணினதுனாலே இங்கே பதிந்து வைச்சிருக்கிறேன். கிராமங்களில் ஆடு, மாடு, கோழிகள் எப்படியும் ஐந்தில் ஒரு இரண்டு வீட்டிலயாவது வளர்த்து வருவார்கள். அவைகளும் சுதந்திரமாக சுற்றித் திரிந்து அகப்பட்டதையெல்லாம் சுருட்டி மேய்ந்து வளர்ந்து வளர்ப்பவருக்கு ஒரு நாள் கறியாகவோ அல்லது பணமாக ஜீரணமாகிவிடும்.

ஆனால் இவைகள் வளர்க்கப் படும் விதத்தில்தான் அத் தனிப்பட்ட ஒருவரின் சுயநல அணுகு முறை எப்படி நம் சமூகத்தின் ஒட்டு மொத்த அழுக்குத் தனமாக கிராம, நகர ஒன்றியத்திலிருந்து சட்டசபை பாராளுமன்ற மனிதர்களின் கூட்டு மன வெளிப்பாடாக ஒரு நாடே சங்கிலித் தொடர்போல் இவ் அழுக்கில் படிந்து அழகிழந்து வெளிக் காட்டிக் கொள்கிறது என்ற எண்ணவோட்டதின் அடிப்படையில் அப்பா கூறிய ஒரு சிறு பகிர்வு அமைந்தது.

இன்றைய கால கட்டத்தில் இந்திய கிராம மக்களிடையே வண்ண தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று வாங்கி வைத்துக் கொள்வதில் உள்ள முனைப்பும், தீவிரமும் வெளி நாடுகளுக்கெல்லாம் சென்று வீடு, வாசல், நில புலன்கள் வாங்கி பெட்டி பெட்டியாக வீடு கட்டி கொள்வதில் உள்ள அக்கறை தனது மற்றும் அண்டைய வீட்டாரின் சுகாதாரத்திற்கென, ஒரு கழிவறை கட்டிக் கொள்வதில் காட்டுவதில்லையே, ஏன்? அறியாமை??

சரி வாழும் வீட்டு அறைகளில் கழிவறைகள் கட்டிக் கொண்டால்தான் அவர்களின் மன ஊனத்தின் ஊடாக உவ்வே.... ஏன், ஒரு இருபதடி தள்ளியேனும் ஒன்றை கட்டி கொள்ளக் கூடாது? திறந்த வெளியில், பொறுப்பற்ற முறையில் முகம் சுழிக்க வைக்கும் கோணத்தில் அமர்ந்து உன் உபாதயை நீக்கிக் கொள்கிறாய். அதன் விளைவுகளை அறியாமலயே! உதாரணத்திற்கு பார்ப்போம். பக்கத்து வீட்டுக்காரன் வீட்டு தோட்டம்தானே என்று அங்கு அசுத்தம் பண்ணிவிடுகிறாய்; அவரும் அது போலவே உன் தோட்டத்தில்.

இப்பொழுது நீங்கள் இருவரும் வளர்க்கும் கால் நடைகள் அதிலும் குறிப்பாக கோழிகள் உங்களின் எச்சம் வெளிப்பரப்பில் கிடந்து பல தேவையில்லாத நுண் கிருமிகளின் வாழ்விடமாக அமையப் பெற்றும், அல்லது உங்களுக்கே உரித்தான குடற் புழுக்களின் முட்டைகளை எடுத்து வந்து மீண்டும் உங்கள் வீட்டிலேயே டெலிவரி செய்யப் படுவதனை அறிவீர்களா? அதனை விட மோசமாக வீட்டு ஈக்கள் அதே செயலை இன்னும் துரிதமாக செய்துகிறது. சராசரியாக ஒரு ஈயின் ஒரு நாளைய பயணம் ஒரு கிலோமீட்டருக்கும் மேலாக சுற்றி வருவதாக இருக்கையில் உன் சாப்பாட்டுத் தட்டில் அமர்ந்து அந்த குடற் புழுக்களின் முட்டைகளை உனக்கு அனுப்ப எவ்வளவு நேரம் பிடிக்கலாம் என்பதனை உணர்ந்திருக்கிறோமா?

இன்னும் சிலதுகள் வீட்டின் ஒதுக்குப் புறத்தில் கழிவறை இருந்தாலும், காட்டு மோட்டிற்கு சொன்று அப்படி வானத்தை அன்னாந்து பார்த்துக்கிட்டே பண்ணுவதில் ஒரு சொகமிருக்கிறதா செஞ்சுட்டு, பக்கத்தில இருக்கிற குளத்தில வேற போயி கழுவி வைச்சிட்டு வருங்க. பழைய படிக்கா ஈயிம், மற்ற கால்நடைகளும் வெளியில இருக்கிறத இவன் வீட்டுக்கே கொண்டு வந்துடும். மேலும் அந்த குளத்து தண்ணீயில இருக்கிற மீன் இன்ன பிற விசயங்கள் அதையெல்லாம் சுத்தம் பண்றேன்னு முழுங்கி போட்டு வைச்சிரும், மிச்சம் மீதி இருக்கிறதை நம்மாளு அள்ளி அள்ளி அவனுட்டு, இவனுட்டு குடல் வியாதியெல்லாம் வாயி வழியா உள்ளே செலுத்திக்குவோம்.

இது ஒரு வகையான தான் தோன்றித்தனமின்னா... கீழே இருக்கிறது இன்னொரு வகையானது.

ஆடு, மாடுகள் வைத்திருப்போரும் அண்டைய வீட்டார்கள் மரக் கன்றுகள் பிரயத்தனப் பட்டு வைத்து வளர்ப்போரையும் தங்களது பொறுப்பற்றத் தனத்தினால், மனச் சோர்வு அடைய வைத்துவிடுவதும் அடிக்கடி நடப்பதுண்டு. நிறைய மரங்கள் என்பது ஒரு கிராமத்தின் சுகாதார நிறந்தர வைத்திய சாலையைப் போன்றது. இதனை ஊக்குவிப்பதின் பொருட்டு ஊரின் சீதோஷ்ன நிலையும், மழையளவும் கூட மாத்தியமைக்க கூடிய வாய்ப்புகள் அனேகம். ஆனால், கால்நடை வளர்ப்போரின் பொறுப்பற்றத் தனம் அதற்கும் தீங்கிழைக்கிறது.

சரி இது போன்ற தான் தோன்றித்தனமான, பொறுப்பற்ற, சுயநலமான எண்ண வோட்டத்தின் ‘மூலம்’ தான் என்ன? இப்பொழுது ஒரு கிராமத்தின் மக்களில் பத்துக்கு எட்டு பேர் இது போன்ற மன நிலையில் அமைந்தால் அச் சமூகம் எவ்வாறாக இருக்கக் கூடும்? சிறுகச் சிறுக தனது எண்ணத்தின் வன்மத்தைக் காட்டிக் கொண்டே வரும் கனம் தோரும், பிரிதொரு சமயத்தில் அது ஒட்டு மொத்த ஊரின் நிகழ்வாக, அமைப்பாக பிரதிபலித்து விடுகிறது அல்லவா?

ஒருவர் மரக் கன்றுகளை நட்டு எப்பேர் பட்ட தண்ணீர் கஷ்டத்திலும் அவைகளுக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து விடவேண்டுமென்ற அக்கறையில் ஈடுபட்டிருக்கும் பொழுது, பக்கத்து வீட்டில் பொறுப்பற்ற ஒருவர் தனது கால்நடையை விட்டு குருத்திலயே மேய விடுவதென்றால் உழைத்தவரின் வியர்வைக்கு என்ன பொருள் அங்கே? மரம் நட்டு அதன் மூலம் கிடைக்கும் பலன் அவரது உடனடி பலன் என்ற குறுகிய நோக்கமிருந்தாலும், எல்லோரும் முன் வந்து அதனை பொறுப்புடன் எடுத்து நடத்திக் காட்டும் பட்சத்தில் நீர்த் தட்டுப்பாடே ஒழிந்துவிடலாமல்லவா? அந்த கிராமத்திற்கே ஒரு நாள்.

இது போன்ற வளர்ப்பு முறையினாலேதான் இவன் வீட்டை பெறுக்கி அடுத்தவன் சுவற்றுக்குள்ளரோ அல்லது வாசலிலோ அவன் இல்லாமல் இருக்கும் பொழுது செய்வது, மற்றவன் அதனையே இவன் இல்லாமல் இருக்கும் பொழுது இவனுக்கு செய்வது. எல்லோருமாக சேர்ந்து ஊரையே குப்பை கொட்டும் இடமாக மாற்றி கொசு வளர்க்கும் பண்ணைகள் வைக்க வித்திடுவது...

நான் மேற் கூறிய ஒரு தனிப்பட்ட மனிதரின் அல்லது குடும்பத்தின் பொறுப்பற்ற, சுய நல போக்கை ஒவ்வொரு நபரும் ஏதோ ஒரு வகையில் பின் பற்றுவாராயின் ஒட்டு மொத்த நாட்டின் நிலைதான் என்ன? அரசியல், அரசாங்க இயந்திரங்கள் என்பவை இவ் மக்களின் ஊடாகத்தானே திரும்பவும் தனி மனிதர்களுக்கு, அச் சமூகத்திற்கும் வந்தடைகிறது. விசயம் அப்படியாக இருக்கையில் எப்படி நாம் தனித்து நின்று விடுவோம்?

21 comments:

நாமக்கல் சிபி said...

குட் போஸ்ட்!

டிப்பிக்கல் தெகா!

துளசி கோபால் said...

எல்லாம் ஒரு சுயநலம்தான்.

அடுத்தவனைப் பத்தி நினைக்க நேரமில்லே........

நானும் என் பரம்பரையும் இன்னும் கோடித் தலைமுறைக்கு நல்லா இருந்தாப் போதும். எவன் எக்கேடு கெட்டால் என்ன?

இப்படித்தான் நினைப்பு(-:

Thekkikattan|தெகா said...

டிப்பிக்கல் தெகா!//

அதெப்படி இருப்பாரு அவரு :-) ? மறந்து போச்சே...

Thekkikattan|தெகா said...

ஆஹா,

வாங்க! வாங்க!! துள்சிங்க பறந்து பறந்து எழுதுறீங்க... நாங்களும் உங்க வீட்டுப் பக்கம் எல்லாம் வாரோம்ல, என்ன தடயம்தான் விட்டுட்டு வாரதில்ல :-).

//நானும் என் பரம்பரையும் இன்னும் கோடித் தலைமுறைக்கு நல்லா இருந்தாப் போதும். எவன் எக்கேடு கெட்டால் என்ன?//

வெளங்கிறுவோம்... 2999ல :D

சின்னபையன் said...

சொல்லி இருப்பதெல்லாம் சரி தான்!
ஆனால் இதை நம்ம பஞ்சாயத் அமைப்போ அல்லது அந்த கிராம நிர்வாகமோ மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும். அது மட்டும் இல்லாமல் கழிப்பிடம் கட்ட முன்வருபவருக்கு சலுகை அளிக்கலாம், தண்ணீர் வசதி செய்யலாம்.

சரி விடுங்க தெக. குடி தண்ணீர் வசதி செய்து தராத நம் அரசா கழிப்பிடம் கட்ட அறிவூட்ட போகிறது?

- இன்னொரு தெக!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பொதிகை டிவியில் பல சமயம் கிராமப்பகுதி மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் பல விசயங்களை செய்பவர்களையும் அதுக்காக போய் பார்ப்பதையும் பேசுவதையும் காமிப்பாங்க.. (அதையேன் பாத்தீங்கன்னு கேக்கக்கூடாது)

அவள் விகடன் போன்ற பத்திரிக்கையில் ஒரு ஊர் எப்படி மாதிரி கிராமமா மாறீ இருக்கு .. எல்லாரும் கழிப்பறை பற்றீய அறிவைப் பெற்றவங்களா ஆகி இருக்காங்க .. ஊருல குப்பை சேகரிப்பு ஒரே மாதிரியா அமைக்கிறதுன்னு செய்துட்டு இருக்காங்கன்னு எழுதறாங்க.. பல இடங்களில் இப்படி செயலார்வலர்கள் மூலமாக நல்லது நடப்பதை அறிந்துமகிழ்ச்சியா இருக்கும்..

ஏன் ஒரு இஞ்சினியர் ஒருத்தர் தன் வேலைய விட்டுட்டு தன்னோட க்ராமத்தில் போய் கவுன்சிலரா போட்டியிட்டு க்ராமத்தை முன் மாதிரி க்ரமாமாக திகழசெய்த அற்புதத்தைக் கூட படிச்சிருக்கேன்..

இதுக்கெல்லாம் தன்னலமில்லாத செயலார்வலர்கள் தேவை.. மக்கள் தானாக திருந்தமாட்டாங்க.. ஒரு வழிகாட்டி தேவை ..அரசாங்கம் செய்யலன்னா உள்ளூருல ஒருத்தர் கிளம்பனும்..

( மூன்றாவது பத்தி பின்நவீனத்துவ பாணியில் எழுதப்பட்ட பத்தியா? :)ஏன்னா புல்ஸ்டாப்பே இல்லாம போயிட்டே இருக்கு )

Thekkikattan|தெகா said...

நடேசா, வா வணக்கம்!

வலைப்பதிவு ஆரம்பித்ததில் ரொம்பச் சந்தோஷம், ஆனா, இன்னொரு "தெகா"தான் இடிக்குது :-). ஏதாவது மற்றொரு பெயரை தேர்வு செய்யப்பா, பேருக்கா பஞ்சம் ..

இப்போ உன்னோட மறுமொழிக்கு என்னோட பதில்...

இந்தப் பதிவின் மைய கருத்தே எப்படி ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் 'சுயநலம்' ஒட்டு மொத்த சமூகத்தின் அடையாளமாக மாறிப் போகிறது என்பதுதான்.

அதன் அங்கமாக உள்ள கிராம நிர்வாகியோ, பஞ்சாயத்து யூனியன் தலையோ முதலில் கழிப்பறை பயன்படுத்துகிறதா :-))? நகைச்சுவை ஒரு புறமிருக்கட்டும், நீ கூறுவது சரிதான் ஆனா மக்களுக்கு தன்னொழுக்கம் என்ற ஒன்று இல்லாதவரை இது போன்ற தான் தோன்றித் தனங்கள் நிகழ்ந்தவாரேதான் இருக்கக் கூடும்.

இருப்பினும் லோகல் அரசாங்க மையங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இன்னமும் இதன் பொருட்டு அதிக அக்கறை எடுத்து விழிப்புணர்வு எற்றுவது காலத்தின் கட்டாயம்.

அடுத்து வரும் மறுமொழியிலும் தன்னொழுக்கத்தின் அவசியம் மேலும் விவாதிக்கப்படும்... :-)

ராஜ நடராஜன் said...

கறுப்பு பண,சுவிசு வங்கி,திருடறது எப்படி,சமூக நோக்கு இல்லாத பெரிய களவாணிகளை விட்டுப்புட்டு ஆடு,மாடு,கோழி விக்கிறவனைப் புடிச்சு பதிவு போட்டா என்ன அர்த்தமுங்க?

நீங்க சொல்ற மாதிரி சொல்லிக் கொடுக்க ஆளு இல்லாததால்தானே கிராமத்தான் போன வழியில வாழ்க்கையின்னு ஓடுறான்.கழிவிடம் கட்டிவிட்டாலும் ஈக்கள் மொய்க்கவே செய்யும்.கழிவுகளை மறுசுற்று செய்வது எப்படி என்ற வரைக்கும் அறிவியல் வளர்ந்திருக்கு.சொல்லிக் கொடுக்கத்தான் ஆட்களில்லை.

சமூக நோக்குப் பார்வைக்கு நன்றி.

Thekkikattan|தெகா said...

முத்து,

இது போன்ற மீடியாக்களின் பங்கு இன்னமும் இதன் பொருட்டு பெரிய அளவில இருக்கணுங்க. இருக்கிற மக்கட் தொகையில் இந்த கழிவுகள் பொருத்தும் அவைகளின் நீக்கம், மறுசுழற்சி, அதன் பொருட்டு கிடைக்கக் கூடிய சுற்றுப் புற சுகாதாரம் என்று அவ்வளவு இருக்கு. மக்கள் இடத்தில கொண்டு போயி சேர்க்க, இந்தக் கழிவுகளின் மீது முதலில் அக்கறை செலுத்த கற்றுக் கொடுக்கணும், முகம் சுழிப்பதனை நிறுத்தி விட்டு (அதாவது காதலிக்க தொடக்கி விடணும்;-).

//அரசாங்கம் செய்யலன்னா உள்ளூருல ஒருத்தர் கிளம்பனும்...//

இது வாஸ்தவமான வார்த்தை... நாமே ரொம்ப எளிமையா வீட்டுக்கு ஒதுக்குப் புறமா ஒரு கழிவிடம் கட்டிக்க ஒரு பைசாவும் தேவையில்லை, கொஞ்சனுன்டு எழுந்து வேலை பார்க்க மனமிருந்தா போதும். பின் வரும் பின்னூட்டங்களின் அதற்கான (கட்டுமான) வலைத்தளங்கள் இருந்தா தாரேன் சுட்டி... :-).

கோவி.கண்ணன் said...

தெகா, நல்லா எழுதி இருக்கிங்க, கால் நடைகள் தொல்லைத் தவிர்த்து நகரங்களும், கிராமங்களும் (சுகாதார) நலம் குறித்து பெரிய வேறுபாடுகள் இல்லை. நகரங்களில் கொசு உற்பத்தியின் இடமே கழிவரைகள்தான், போதிய அளவு ஈக்களும் உண்டு. கிரமப்புற கழிவரைகளை அரசு கட்டித்தருவதோடு சரி, தண்ணீர் வசதி எதுவும் செய்வது இல்லை. அங்கு ஒதுங்குபவர்கள் வீட்டில் இருந்தே தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும். அப்படி எடுத்துச் செல்வதை கிட்டதட்ட ஊருக்கே 'அங்கு' செல்லப் போவதை அறிவிப்பது போன்றது தான். இதன் சங்கடம் அங்குள்ளவர்களுக்கு குறிப்பாக த்தான் தெரியும். அரசுகள் எதையுமே சரியாக, முறையாக செயல்படுத்துவதில்லை.

நீங்கள் சென்னையில் குடிசை பகுதி மாற்றுவாரியம் இருக்கும் சாலைகளில் இருபக்கமும் நடைமேடை வழியாக நடந்து பாருங்கள், கிராமங்களே தேவலாம், மறைவாக செய்கிறார்கள் என்று திருப்தி படுவீர்கள்

மங்கை said...

படிச்சவர்களே இப்படி இருக்குறதை இப்ப சமீபத்தில் பார்த்து டென்ஷன் ஆயிட்டு வந்தேன்..என்னத்தை சொல்ல

இப்ப இல்லை...இந்த விஷ்யங்களை அனிமேஷன் மூலம் சொல்லீட்டு தான் இருக்காங்க...குளம் குட்டைல கால் கழுவினா அதுனால வர்ர பாதிப்புகள்.. எப்படி கிருமிகல் கால் வெடிப்பிக்குள்ள போகுதுன்னு படமா போட்டு காமிக்காம இல்ல...என்ன பண்ண..நம்ம ஜனங்கள் அப்படி இருக்காங்க

நல்ல பதிவு

கோவி.கண்ணன் said...

குறிப்பாக பெண்களுக்குத்தான் தெரியும். அரசுகள் எதையுமே சரியாக, முறையாக செயல்படுத்துவதில்லை

- என்று வாசிக்கவும்

Thekkikattan|தெகா said...

வாங்க ராஜா,

ரொம்ப நாளாச்சு நம்ம வீட்டாண்டை வைச்சு உங்கள பார்த்து.

அங்கிட்டு இங்கிட்டு திரும்பி பார்த்துக்கிட்டே மக்கள் திருட்டு வேலை செய்யற மாதிரி செய்றதை நினைக்கும் பொழுது இப்படி ஒரு தலைப்பு வைக்கத் தோனிச்சு. இருந்தாலும் எத்தனை ஆயிரக் கணக்கான வருஷமா நாம செஞ்சுட்டு வாரோம் இதனை. சொல்லுங்க ஏன் அடிப்படை சுகாதாரம் எங்கிருந்து ஆரம்பிக்குதுன்னு விளங்கிக்க முடியல?

இருந்தாலும் இந்த வறுமைங்கிற விசயம் நிறைய சாதா மக்களை வறுத்து எடுக்கிறது என்றாலும், இங்கே நாம பேசிக்கிட்டு இருக்கிற வர்க்கம்...

கழிப்பறை இருந்தும், அல்லது கட்டிக்க போதுமான வசதிகள் இருந்தும் முறையான படி டிஸ்போசல் செய்றதின் அவசியமும் அதன் பின் விளைவுகள் பற்றி தெரியாததும்தான் இது போன்ற வாழையடி வாழை பழக்கத்திற்கு ஒரு காரணம் (சில பேருக்கு காத்தாட போனத்தான் அது வருமாம்;-), அவர்களைப் பற்றியதுதான் இந்த பதிவு. வழிகாட்டுதல் என்பது ஓரளவிற்குத்தான் உதவி செய்யும் ராஜா, பொறுப்பு தன் மற்றும் குழந்தைகளின் சுகாதாரம் கருதியேனும் இவர்களுக்கல்லவா வர வேணும்.

அரசாங்கம் - கோவி கண்ணன் சொல்லியிருப்பார் பாருங்கள் அந்த நிலையில்தான் இருக்கிறது. அது தொடர்பாகத்தான் நிறைய பேசியிருக்கிறோமே, என்னுடைய முந்தைய பதிவுகூட அதன் பொருட்டுத்தான்.

இங்கு எப்படி தனி மனித பொறுப்பற்ற, ஒழுக்கமின்மை - அரசியல், அரசாங்களிங்னூடாக அதே மக்களால் மறு சுழற்சியில் ஈடுபடுகிறது என்பதே பதிவின் மையக் கருத்து... தெருவில் "கக்கா" களவானிகள், பாராளுமன்றத்தில் வேறு மாதிரியான திருட்டு... :D. ஆகவே, ரெண்டுக்கும் ஒரே ஒற்றுமை பொறுப்பின்மை, சுயநலத்தனம் மற்றும் அறியாமை[இப்பெல்லாம் நிறைய பேர் அறிந்தே செய்றாங்க:-( ].

Thekkikattan|தெகா said...

கோவி,

மிகச் சரியாக இதன் பொருட்டு மக்கள் தினப்படி படும் கஷ்டத்தினை தோலுரித்திருக்கிறீர்கள்.

//இதன் சங்கடம் அங்குள்ளவர்களுக்கு குறிப்பாக த்தான் தெரியும். அரசுகள் எதையுமே சரியாக, முறையாக செயல்படுத்துவதில்லை.//

இதனை நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். இப்பொழுது ஒரு பேருந்து நிலையத்தில் புதிதாக கழிப்பறை வசதி செய்து கொடுக்கிறது அரசாங்கமெனில் அதனை பயன்படுத்தும் பொது மக்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது அதனை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்ற அக்கறை.

அதே சமயத்தில் அரசாங்கத்திற்கு அதனை முறைப்படி இயங்க வைக்க போதுமான தண்ணீர், மேற்பார்வை போன்றவைகளை பயன்படுத்தி கொடுத்து இலவசமாக மென்மேலும் மக்களை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.

மேலும் கிராம சுகாதார மையங்கள் பட்டறைகள் போட்டு உண்மையான அக்கறையோடு மக்களுக்கு விழிப்புணர்வை பன்மடங்கு அளித்திட வேண்டும், அட வாங்குற சம்பளத்திற்கு உருப்படியா, உண்மையா உழைக்கணுங்க அம்புட்டுத்தேன்... ஆனா, திரும்பவும் பதிவின் மைய கருத்தை சுற்றியே இம் மனிதர்களின் பொறுப்பற்ற, சுய நலத்தனம் எல்லாவற்றையும் எனக்கென்னாச்சுங்கிற ரீதியிலயே எடுத்துச் செல்வதால்... ஊர் முழுக்க வியாதி ஏன் எதுக்குன்னு கேள்வி கேப்பாடு இல்லாமலேயே.

Thekkikattan|தெகா said...

படிச்சவர்களே இப்படி இருக்குறதை இப்ப சமீபத்தில் பார்த்து டென்ஷன் ஆயிட்டு வந்தேன்..என்னத்தை சொல்ல//

அத நினைச்சுத்தான் கடுப்பாகி இந்தப் பதிவுங்க...

அது போன்ற போஸ்டர்களை பார்த்துட்டு அது வேறு யாருக்கோ சொல்றாங்கன்னு அத்தோடு மறந்துட்டு அவங்க முன்னே இருந்த இடத்துக்கே போயிடுறாங்க... சொகமா இருக்காம்.

சுரேகா.. said...

வழக்கம்போல புகுந்து புறப்படுறீங்க அண்ணாத்த!

தனிமனித சுயநலம்தான் சமூகத்தின் சாபக்கேடு..!

அதை சகித்துக்கொண்டே போவதுதான் அதற்குக்கிடைக்கும் தண்டனையாக அமைகிறது!

மங்களூர் சிவா said...

நல்ல பதிவு. பின்னூட்டங்களும் அருமை.

Thekkikattan|தெகா said...

//தனிமனித சுயநலம்தான் சமூகத்தின் சாபக்கேடு..!

அதை சகித்துக்கொண்டே போவதுதான் அதற்குக்கிடைக்கும் தண்டனையாக அமைகிறது!//

எங்க ஆளே ரொம்ப நாளா காணோம். நல்லா இருக்கியளா?

சகித்துக்கிட்டு போகாம சட்டை பிடிச்சு கட்டிபிடிச்சு உருண்டாத்தான் உண்டு. எத்தனை முறை ஓடுற பேருந்தில் எச்சி துப்பி அது நம்ம மேலே பன்னீரா விழுந்தவுடன் சண்டை பிடிச்சிருப்போம். இருந்தாலும், ஆட்கள் புதுசு புதுசா மொளச்சுக்கிட்டுத்தானே இருக்காக!

Thekkikattan|தெகா said...

வாங்க சிவா,

இன்னும் பின்னூட்டங்களில் நிறைய விசயங்கள் கொடுத்திருக்கப் படலாம் இன்னமும், எப்படி எளிய முறையில் தானே கழிவறை கட்டிக் கொள்வது போன்ற வரைபடங்களுடன் கூடிய தளங்கள் ஏதாவது... பார்ப்போம் கண்ணில் தட்டுப் படுகிறதா என்று.

நன்றி!

தருமி said...

2-3 ஆண்டுக்கு முன்னால் இங்க இருந்து உங்க ஊருக்கு வந்துட்டு இப்ப இங்க வந்த பிள்ளைகளுக்கு தாழ்தள பேருந்தும், குளிர் பேருந்தும் ஆச்சரியத்தை அளித்தன. பரவாயில்லை நமது அரசு ஏதேதோ நல்லதெல்லாம் செஞ்சிக்கிட்டுதான் இருக்காங்க. ஆனா மக்கள்ஸ் தான் மாறவில்லை அப்டின்னாங்க.

ஆமான்னு நினச்சுக்கிட்டேன். அரசு புதுசு புதுசா பஸ் உடுது. ஆனா நாம் இன்னும் எந்தத் தகராறுக்கும் அந்த பஸ்களைத்தான் எறிக்கிறோம்.

நாமல்லாம் அம்புட்டு எளிதா மார்ர ஆளுங்களா என்ன?

தருமி said...

//வானத்தை அன்னாந்து பார்த்துக்கிட்டே பண்ணுவதில் ஒரு சொகமிருக்கிறதா செஞ்சுட்டு, பக்கத்தில இருக்கிற குளத்தில வேற போயி கழுவி வைச்சிட்டு வருங்க.//

இன்னும் நம்ம மக்களுக்கு எந்தத் தண்ணியிலும் ஒரே நேரத்தில் கூட எத்தனை பேர் வேணும்னாலும் "காலைக் கழுவலாம்"னு நினச்சிக்கிட்டு இருக்கிறதை நினச்சா பாவமாயிருக்கு.கண்ட தண்ணியில வாய் கொப்புளிக்கிறதை விடவும் இது ஆபத்துன்னு தோணுது. ஆனா நம்ம மக்கள் ...........

:(

Related Posts with Thumbnails