Thursday, June 13, 2013

பறவைகளின் உயரம் வேறு -ஒரு மானுடப் பார்வை!

நேற்று வெளியில உட்கார்ந்து நாலஞ்சு பேரு பேசிகிட்டு இருந்தோம். திடீர்னு மரத்து மேலே இருந்து Gray Catbirdவோட ஒரு குஞ்சு ஒண்ணு கீழே விழுந்து வைச்சிருச்சு. விழுந்த மாத்திரத்திலேயே எனக்கு தெரிஞ்சுப் போச்சு நிறைய ஆக்சன் இருக்கப்போவுதுன்னு. அடுத்த நொடி விழுந்து வைச்ச குஞ்சு சுதாரிச்சு எழுத்து தத்தித் தவறி நகர ஆரம்பிச்சிச்சு.

எங்கயோ சுத்திக்கிட்டு இருந்த அணிலொன்று சரசரவென நகர்ந்து மரத்தின் அடிக்கிளையை நோக்கி நகர அம்மா பறவை தாழப் பறந்து வந்து காச்சாமூச்சான்னு அணிலை பார்த்து சத்தம் போட ஆரம்பிச்சிச்சு தனது சிறகுகளை எல்லாம் கோவத்தில விரிச்சு அணிலை பயமுறுத்துவது மாதிரி.

பக்கத்தில அமைதியா இரை தேடிட்டு இருந்த Northern Cordinal, Eastern Towhee and Brown Thrasherநு ஒரு பெரிய பட்டாளமே ஒண்ணு கூடி வந்து சிலது அணிலை நோக்கி பறந்து போயி மேலே இடிக்கிற மாதிரி போயி மிரட்டினது. சிலது தனது சிறகுகளையும், வாலையும் ஆட்டி எத்தனை அந்த அணிலை மிரட்டி அந்த குஞ்சிடமிருந்து தூரமா வைச்சிக்க முடியுமோ அத்தனைக்கு உதவியா நின்னு பார்த்துகிச்சுங்க.

இத்தனையும் நான் பார்த்துக்கிட்டே ஓடு விவரணையில இறங்கி அந்த நிகழ்வை அங்கே உட்கார்ந்திருந்தவிங்ககிட்ட விளக்கிக்கிட்டே என்னோட கேமராவுடன் விளையாடிட்டு இருந்தேன்.

ஆனா, அந்த நிகழ்வு நடந்திட்டு இருந்தது கொஞ்சம் அடர்த்தியான கருப்பு அப்பிய இடமென்பதாலும், எங்களுக்கும் அவைகளுக்குமான தூரமும் கொஞ்சம் அதிகமென்பதாலும் சரியான படி புகைப்படமாக்க முடியல.

அந்த குஞ்சுப் பறவை இப்பவே சிறகெடுக்க ஆரம்பிச்சிருக்கிறதாலே உயர எவ்வி பறக்க முடியாம, தரையிலிருந்து ஓர் ஒண்ணரை அடி உயரத்திற்கு பறந்து கீழிறங்கிக் கொண்டிருந்தது. பின்னே புதருக்குள் நடந்து போயி மறைந்து கொண்டது.

இருந்தாலும் அவைகள் கூடி நின்று போராடினது, நமது பிழைத்து கிடப்பதற்கான ஆயத்தங்கள் எப்படியெல்லாம் நம்மை விட கீழ் தங்கிய விலங்கினங்களாக கருதப்படும் உயிரினங்களில் கூட நன்றாக ஆழ விதைக்கப்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், விதிவிலக்காக மனிதன் மட்டுமே அந்த தன்முனைப்பற்ற உள்ளுணர்வின் முனையை மழுக்கி சுயநலத்தின் உச்சத்தில் இருந்து எந்தந்த காரணங்களுக்காகவோ பிறர் சாக மனமிறங்கா நவீன விலங்கினமாகி இருக்கிறோம் என்று நிரூபித்து வருகிறோம்.

இந்த சுயநலப் போக்கே நம்மை பரிணாம ஏணியில் ஏற்றி வைக்க காரணமானதும், கீழே இறக்க தேவையானதாகவும் காலம் சுற்றி வருகிறது.

Related Posts with Thumbnails