Monday, December 03, 2012

புலியுடனான பயணம் : Life of Pi


இந்தப் படத்திற்கும் எனக்குமான தொடர்பு என்று கூற வேண்டுமானால், இது எனக்கு ஓர் ஆன்மீக அனுபவம். படம் கூற வந்த விசயங்கள். அதனை வழங்கிய விதம். 3டி முறையின் பிரமாண்டம் அனைத்திற்கும் மேலாக படம் என்னால் பார்க்கப்பட்ட முறை ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக எழுதிக் கொண்டு செல்லும் அளவிற்கு உள்வாங்கப்பட்டிறுக்கிறது.

இதனை முப்பரிமாண முறையில் பார்ப்பேன் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை. எனக்கு காணக்கிடைத்த காட்சிக்கான நேரத்தில் அம்முறையிலேயே இந்தப் படம் திரையிடப்பட்டது. அது ஒரு முதல் பரிசு! இல்லையெனில் இத்தனை வசீகரத்தை இந்தப் படம் வழங்கியிருக்காது. தத்ரூபம், மலைப்பு மற்றும் காட்சிப்படுத்தப்பட்டதின் பிரமாண்டம் அப்படியே ஒவ்வொரு சட்டத்திற்குள்ளும் என்னை பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிந்தது.

இரண்டாவது அத்தனை பெரிய திரையரங்கில் என்னைத் தவிர்த்து வேறு யாருமே இல்லாதது. படம் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது, நிறையவே லயித்து ஓரு மோன நிலையில் இருக்கும் பொழுது சுய நினைவிற்கு வந்தவனாக இத்தனை பிரமாண்டமாக எடுத்த ஒரு படத்தை எனக்காகவே இத்தனை பேர் உழைப்பைச் சிந்தி, படத்தின் இயக்குனர் சொந்த அழைப்பின் பேரில் திரையிட்டு காண்பிக்கபடுவதான பூரிப்பு, பெருமை அந்த திரையரங்கத்தின் காலி இருக்கைகளை காணும் ஒவ்வொரு முறையும் ஏற்பட்டது. பாக்கியசாலியாக உணர்ந்து கொண்டு ஓர் ஏகாந்தத்தின் உச்சத்திற்கே இட்டுச் சென்றது; கொஞ்சம் குறுகுறுப்பு ஓர் ஓரமாக சம்மணமிட்டு அமர்ந்திருந்தாலும்.

படமும் ஒரு பதினைந்து நிமிட ஏனைய முப்பரிமாண திரைப்படங்களுக்கான அறிமுக திரையிடலுக்குப் பிறகாக, படத்தின் முதல் காட்சியே ஒரு முறை நான் எந்த ஊரில் படம் பார்க்கிறேன் என்று தரையிறங்க வைக்கும் கேள்வியுடனே அமைந்திருந்தது. தமிழ்! ஒரு தாலாட்டு போன்ற பாடலுடனும், அதிர்ந்து கொட்டும் நம்மூர் மழையுடனும் உள்ளே அழைத்துச் சென்றது.

படம் பாண்டிச்சேரியின் தெருக்களில் ஆரம்பித்து பள்ளி, வீடுகள் அப்படியே முண்ணார் என்று நகர்ந்து பசிபிக் பெருங்கடலின் மையப்பகுதியில் சூல் கொண்டு விடுகிறது. பாண்டிச்சேரியை இந்தப்படத்தின் கேமராவின் பார்வையில் பார்க்கும் பொழுது ரொம்பவே வித்தியாசமாக காட்டியிருக்கிறார்கள். முண்ணார் - இவங்க லென்ஸ்களில்தான் எத்தனை அழகு! எப்படி நாம் பார்த்து பழகிய இடங்களையே இவர்களால் இத்தன நயமாக, பூமியிலிருந்து தனித்து தொங்கும் ஒரு இந்திரபுரியாக மாற்றிக் காமிக்க முடிகிறது. இங்குதான் கலாச்சாரத்திற்கென ஒரு சிறப்பு அகக்கண் திறந்து கொள்கிறதோ என்பதாக என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

படத்தின் வசனங்களுக்கு ஊடே அம்மா, அப்பா என்று இயக்குனர் தைரியமாக உலகத்திற்கு நம் மொழியில் பெற்றோர்களை விளிக்கும் சொற்களை அறிமுகப்படுத்திய பாங்கு வெகு அழகான துணிச்சல்! தபூ வெகு இயல்பான மத்திய வயது தோழிமார்களுக்கான அழகுடன் ஜொலித்திருக்கிறார். அவர் பேசும் ஈழத்தமிழ் தேனாக இனிக்கிறது.

வெளியூர்க்காரன் வந்து நமக்கான அழகியலை அதன் உச்சரிக்கும் மேட்டிமைத்தனத்திற்கு எடுத்துச் சென்று உச்சரிக்க விட்டு நம்மை அறியாமை என்ற புதைகுழியிலிருந்து மீட்டு எடுக்கச் செய்ய வேண்டி இருக்கிறது. Loved it!

சின்னதாக ஒரு மீசை அரும்பா காதலையையும் எட்டிப் பார்க்க வைத்திருக்கிறார்கள். அதற்கான காட்சிகளில் வரும் ஒவ்வொரு பெண்ணும் பொருட்களும் அத்தனை அழகாக இருக்கிறார்கள். பையன் கட்டி வைக்கப்பட்ட செவ்வந்தி மாலைகளுக்கிடையே நாட்டியம் கற்றுக் கொள்ளும் ஆனந்தியை பார்ப்பது, அப்படியே என்னுடைய சந்தை நாட்களை நினைவூட்டி அலேக்காக தூக்கி அருகே வைத்துக் கொண்டது. மேலும், பாண்டிச்சேரி கடற்கரை காட்சி. அந்த சிதில பாலத்திற்கு கீழே மெல்லிய மாலை நேர ஒளிக்கீற்றுகளுக்கிடையே அமர்ந்து ஆனந்தி அவனது மணிக்கட்டில் ஞாபகத்திற்கென கட்டிவிடும் கயிறு, கவிதை! ஆங்கிலப்படத்திற்கென இந்திய அதுவும் தமிழ்ப்பெயர்களை சிதைக்காமல் முழுமையாக உச்சரிக்க விட்டது புதுமை. இயல்பாக இருந்தது!

படத்தில் நாயகச் சிறுவனின் குடும்பம் தங்கள் பாண்டியில் வைத்து நடத்திய மிருக காட்சி சாலை மூட நேர்ந்ததின் விளைவாக அத்தனை மிருகங்களையும் கப்பலில் ஏற்றிக் கொண்டு கனடா நாட்டிற்கு புலம்பெயர நேர்கிறது. அப்பொழுது இரவு நேர குடும்ப உணவு அருந்தலின் போது அப்பா அதனை முன் மொழிகிறார். நாயகச் சிறுவனுக்கு அது ஓர் அதிர்ச்சி. பிஞ்சிக் காதல் உடைபடுவதை உணர முடிகிறது. அதற்கான முஸ்தீபாக அப்பா கொலம்பஸ் எப்படி பயணம் மேற்கொள்வதின் அவசியத்தை உணர்த்தினார் என்று கூற வரும் பொழுது, சிறுவன் கூறுகிறான் “ஆனா, அப்பா கொலம்பஸ் இந்தியாவை தேடி வந்தார்.” என்ற ஒற்றை வசனத்தில் பல வரலாற்று மற்றும் இன்றைய சமகால இந்திய சூழ்நிலையையின் சவால்களை, அவலத்தை முன் வைத்தாகப் படுகிறது.

இந்த பின்னணியில் கப்பல், குடும்பத்தையும் விலங்குகளையும் ஏற்றிக் கொண்டு, குடும்ப நபர்களில் இருவர் சைவம் உண்பவர்களாகவும் மற்ற இருவர் அசைவத்தையும் உள்ளடக்கியவர்களாக நம் கலாச்சார சங்கிலியை கட்டுடைக்கிறார்.

கப்பலின் உணவகத்தில் ஒரு புத்தமத துறவியைக் கொண்டு எது போன்ற உணவு எந்த மாதிரியான வாழ்வுச் சூழலில் சைவமாகிறது என்று விளக்கும் இடமும், நாயகச் சிறுவனைக் கொண்டு ‘இப்படியாக நடந்துவிட்டால் (what if)' சைவனாக இருந்தவனை அப்படியே சமைக்கப்படாத மீனை உண்ண வைத்து, இவ்வளவுதான் நமது வாழ்வு என்று இந்திய மேட்டிமை மனங்களை அடிப்படையான - தப்பிப்பிழைத்தலுக்கானதும், ஆரம்பக் கல்வியூட்டு விழிப்புணர்வு கேள்விக்குள்ளும் தள்ளி விட்டிருக்கிறார் படத்தின் இயக்குனர்.

இப்பொழுது அவர்களின் பயணம் ஒரு பெரும் புயலில் சிக்கிக் கொண்டு கப்பல் மூழ்க நேரிடும் பொழுது, நாயகனுடன் சேர்ந்து, ஒரு கழுதைப் புலி, வரிக்குதிரை, ஒரு புலியும் கொஞ்சம் தாமதமாக ஓர் ஒரங்குட்டனும் இணைந்து கொள்கிறார்கள் ஒரு சிறிய படகில். இங்கிருந்துதான் படத்திற்கும் எனக்குமான ஆன்மீக அதாவது அகமன பயணம் தொடங்குகிறது. நாம் ஒவ்வொருவரும் கூடவே பயணித்து பல கேள்விகளை கேட்டுக் கொள்ளும் ஒரு சூழ்நிலைக்கு மிக இயல்பாக நம்மை அந்த படத்தின் குணாதிசியத்தில் பொருத்தி பின்பு தனிமை படுத்தி விடுகிறார் திறமையாக இயக்குனர்.

அந்தப் படத்தின் நாயகனைப் போலவே அத்தனை இடர்பாடுகளுக்கிடையேயும் இயற்கை நடாத்தும் ஆனந்த தாண்டவத்தை அவன் ரசிக்க தவறியாதாகவே எந்த ஓர் அபாயகரமான இடத்திலும் காட்சியப் படுத்தப்படவேயில்லை.

அது அவன் பெற்றோர்களுடன் கப்பலில் வரும் பொழுது சந்திக்கும் முதல் புயலாகட்டும், பிரிதொரு சமயம் கடல் முழுக்கவுமே ஜெல்லி மீன்களால் ஒளியூட்டப்பட்டு அதனைக் கண்டு அவன் ஆர்ப்பரித்து நீருடன் விளையாண்டு கொண்டிருக்கும் இடத்தில் அந்த அமைதியை, பேரானந்தத்தை சிதைக்கும் படியாக ஒரு திமிங்கிலாம் அவனுடைய கடைசி உயிர் காக்கும் உணவு சேமிப்பையும் அத்தோட்டு போகும் படியாக செய்யும் பொழுதும் அதனைக் கண்டு வியந்து நிற்பதாக காட்சிப்படுத்தப் பட்டிறுப்பதும், மீண்டும் ஒரு புயல் அதன் பிரமாண்டா வானம், இடி, மின்னல் பார்த்து அவனுடன் பயணிக்கும் முதல் பாதி எதிரி புலியை வெளியே அழைத்து ”தவற விடாதே, வந்து பார்” என்று கொக்கரிக்கும் இடம் அனைத்தும் பல விசயங்களை என்னுள் விதைத்துச் சென்றது என்றால் மிகையாக இருக்க முடியாது.

இடர்பாடுகள் என்பது நாம் எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கிலேயே நம் மனதில் காட்சியாகி விரிகிறது. அதன் சுமை, சுமையற்றத் தன்மை எப்படியாக வந்தடைகிறது என்பதற்கு நடுக்கடலில் மிதக்கும் ஒரு சிறு படகும் அதனில் நம்மையே உணவாக உட்கொள்ளக் கூடிய ஒரு மாமிச பட்சினியுடன் பயணித்துக் கொண்டே ஆன்மத் தேடல் செய்யவிடுவது exotic experience!

சில நேரங்களில் ஏதோ ஒரு ஃபேரிடேல் பார்த்துக் கொண்டிருக்கிறோமா என்றளவில் அந்த இரவு வானமும், மாலை நேர சூரிய அஸ்தமனத்திற்கான ஒளியும் மதிமயங்க வைக்கிறது. அதிலும் குறிப்பாக நான் பல அற்புதமான இரவு நேர வானங்களை மேற்கு மலைத் தொடர்களின் பல பாகங்களிலிருந்தும் பார்த்திருக்கிறேன். இத்தனை பெரிய திரையரங்கிற்குள் முப்பரிமாண முறையில் அதே இரவு வானத்தை காட்டும் பொழுது அந்த படகின் இருப்பை போலவே பால்வீதியில் என் இருப்பும் எத்தனை சிறியது, பொருளடையது, எனக்கே எனக்குமட்டுமானது என்று ஒட்டி பார்த்துக் கொள்ளவும் முடிந்தது.

அவனுக்கும் புலிக்குமிடையிலே நடக்கும் எல்லைச் சண்டையில் ஒரு முறை, நாயகன் அந்த சிறிய படகில் சிறுநீர் கழித்து இது என்னுடைய எல்லை அது உன்னுடைய எல்லை என்று பிரித்து அலறி நிற்கும் பொழுது, புலி அவன் முகத்தில் எல்லையிட்டு சிறுநீர் கழிப்பது மெல்லிய புன்னகையுனூடே யாருக்கு யார் எல்லை வகுத்து கொடுப்பது என்பதனை நகைச்சுவையாக கூறி புரிய வைத்திருக்கிறார்கள்.

இடையில் வந்து போகும் அந்த மாமிசவுண்ணும் தாவரத் தீவு. லாங்க் ஷாட்டில் ஏதோ ஒரு பெண் வானம் பார்க்க படுத்திருப்பதனைப் போன்று காட்டுகிறார்கள். அங்கு ஆயிரக்கணக்கில் வாழ்வதாக காட்டப்படும் நீர்நாய்கள், எத்தனை துல்லியமான க்ராஃபிக்ஸ். சுத்தமாக நம்பமுடியவில்லை உண்மைக்கும், பொய்மைக்கும் நவீன காலங்களில் வரும் படங்களில் கையாளப்படும் விஞ்ஞான வசதிகளை உற்று நோக்கினால். அத்தனை தத்ரூபம்!

படத்தின் இறுதியில் எப்படியாக இந்தக் கதை மற்றுமொரு கிளைக்கதையாக துளிர்க்கிறது என்பதனின் மூலமாக, நம்மையே இரண்டு கதைகளில் எந்தக் கதையை எடுத்துக் கொள்வீர்கள் என்பதனைக் கொண்டு எது போன்ற நபர்கள் நாம் ஒவ்வொருவரும் என்பதனை அறிந்து கொள்ள விடுவது - நல்ல அணுகுமுறை!

எனக்கு புலியுடன் தனித்து விடப்பட்ட பகுதியிலேயே அதிகமான வாழ்க்கைக்கு தேவையான சுவையான உரையாடலுக்கான சாத்தியங்களையும், மனத் திறப்புகளையும் உருவாக்கித் தருவதால் அந்தப் பகுதியுடன் இணைத்துக் கொள்ள முடிந்தது. படத்தின் நாயகன் அப்படியானதொரு வாழ்க்கையை வாழ்ந்து கரை சேர்ந்தானா, இல்லை, புலியுடனான வாழ்க்கை என்பது மனப்பிறழ்சியால் அவனுக்கு, வழங்கப்பட்டதா என்பது subjective!

இருப்பினும் எனக்கு இந்த படம் வழங்கியது என்னுடைய பனிரெண்டு டாலருக்கும் உயர்வான அனுபவத்தை, திளைப்பை! Simply had a mixer of astounding, mesmerizing and exotic experience; never wanting to finish the movie to end.

Related Posts with Thumbnails