Tuesday, May 08, 2018

ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்: மனிதர்களைக் கற்போம்!

என்ன படித்து, எத்தனை நாடுகள் சுற்றி, எவ்வளவு சாமி கும்பிட்டு என்ன பயன். என்றேனும் ஒரு நாள் நாம் ஒரு சராசரி மிருக குணங்களைக் கொண்ட மனிதன் தான் என்று தன்னைப் பற்றிய சுவடை விட்டு விட்டுச் செல்லும் நாளும் வருகிறது தானே!
நான் ஒரு முறை கருப்பர்களும், செவ்விந்தியர்களும் தாங்கள் எதற்காக இத்தனை வலிகளுனூடாக அலைக்கழிக்கப்பட்டு கொல்லப்படுகிறோம் என்று தெரியாமல் செத்து மடிந்த வரலாற்று பாதையின் ஊடாக பயணம் ஒன்று மேற்கொண்டேன்.
அந்தப் பயணத்தின் இறுதி இலக்காக அமைந்து போனது க்ராண்ட் கன்யான், அரிசோனா. அந்த பூகோளத்து மலைச் சுவடுகளின் மீதாக நின்று கொண்டு பரந்து விரிந்து கிடந்த பள்ளத் தாக்குகளை நடுக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது மாலை மங்கி, சூரியன் கூடடையும் நேரத்தில் அங்கு வந்திருந்த ஒரு சிவப்பிந்தியர் புல்லாங்குழல் ஒன்றை வைத்து வாசித்து பெரும் பாரத்துடன் அந்த சூரியனை வழி அனுப்பினார்.
அது மேலும் சுமையை இரட்டிப்பாக்கியது. மற்றுமொரு சிவப்பிந்திய பெண்ணுடன் பேசும் பொழுது, எங்கெல்லாம் இந்தப் பரப்பில் உங்களுடைய முன்னோடிகள் வாழ்ந்தார்கள் என்று வினவினேன். அதற்கு அந்தம்மா, அவர்கள் எல்லா இடங்களிலும் இருந்திருப்பார்கள், இருக்கிறார்கள் என்றார். அதாவது அந்த பள்ளத்தாக்கின் சரிவான மலைப் பிளவுகளில் கூட வாழ்ந்திருக்கிறார்கள் என்றார். என்னால் என்னுள் எழுந்த மலைப்பை விலக்கி வைக்கவே முடியவில்லை.
எதனை அவர்கள் தங்களுக்குப் பின்னால் விட்டுப்போக இப்படி ஒரு கடினமான தட்ப வெப்ப சுற்றுப் புறச் சூழலில் வாழத் தலைப்பட்டிருக்க முடியும் என்ற எண்ணம் என்னை வதைக்கத் தொடங்கியது? அவர்களைப் பற்றி மென்மேலும் வாசிக்க வாசிக்க அவர்கள் வரலாற்றில் செய்த மிகப் பெரிய பிழை, அன்னிய மனிதர்களை நம்பியதும், இயற்கையை அளவுக்கு மீறி காதலித்ததுமே காரணமென்பதாக இருந்தது. நிலத்தின் மீது சிறிதும் பற்றற்று அத்தனை பெரிய நிலப்பரப்பில் வாழ்ந்திருக்கிறார்கள்.
பிரிதொரு நாள் வெள்ளையர்கள் வந்து, மூத்த குடிமக்களிடம் நிலச் சுரண்டல் செய்ய ஆரம்பித்து, எழுதி வாங்க பேனா நீட்டும் போது கூட நகைத்துக் கொண்டே “சுப்ரீம் ஃஸ்பிரிட்டோட” இடத்தை யார், யாருக்கு எழுதி கொடுப்பது என்று எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.
இது போன்ற ஒரு கூட்டம் இந்த பூமிப் பந்தில் இருக்க தகுதியானதா? விட்டு வைப்பார்களா? இடப் பற்றாக் குறையாலும், மக்கள் தொகை பெருக்கத்தாலும், வறுமை, நோய், பசி, பட்டினி என்று மரணித்துக் கொண்டிருக்கும் ஒரு காடையர் கூட்டம், அனைத்தும் லாகவமாக அமைந்து போன ஒரு புதிய இடத்தை கண்டதும், இது போன்ற அப்பாவி மனிதர்கள் இதனை அனுபவிப்பதைப் பற்றி என்ன நினைத்திருக்கக் கூடும்? சூழ்ச்சியாலும், வஞ்சகத்தாலும் கூடிப் பழகியும், பிரிந்து சூழ்ந்தும் அழிதொழித்து விட்டார்கள்.
இயற்கையோடு ஒன்றித்து பேராசை எனும் பேயை அடக்கி வாழ்ந்த ஒரு பெரும் கூட்டம் தன்னுடைய அழிவின் விளிம்பில் கண்டதெல்லாம், வலி, வலி, வலி மற்றும் சாக்காடு.
போலவே, நம்முடைய நிலப்பரப்பிலும் அப்படியானதொரு கூட்டம் கூடி களித்து, சேர்ந்து, பிரிந்து என்று பல அரிதாரங்களை பூசி வரலாறு தோரும் கூடவே நடந்து வருகிறது. சூழ்ச்சியும், வஞ்சகமும் எப்படியோ ஒரு மூலையில் எச்சமாக இருந்து கருகருவென காலத்திற்காக காத்திருந்து நம்பிப் பழகுபவர்களை சாய்த்து விடுகிறது. வரலாற்று புத்தகங்களை புரட்டும் பொழுது டையரி குறிப்புகளாக கிடைக்கும் வலி மிகுந்த முனகல்களை, வரிகளுக்கிடையே வாசிக்கும் பொழுது நமக்கு அவைகள் ஒரு சங்கேத குறிப்பாக கிடைக்கப்பெறுகிறது.
இன்று நாம் அழுது புலம்பும் அத்தனையும் ஏற்கெனவே அந்த வஞ்சகத்திற்கும், சூழ்ச்சிக்கும் இரையாகிப் போன நம் முன்னோடிகளின் வலி மிகுந்த முனங்கல்தான். மீண்டும் மீண்டும் அதே பாசத்தில் வழிக்கி வழிக்கி விழுந்து கொண்டே இருக்கிறோம். ஏனெனில் அந்த நோயின் மூலக் கூறு நானோ பார்டிகில்ஸ்களுக்கு இணையானது. உள்ளிருந்தே மெள்ளக் கொல்லக் கூடிய வாக்கில் பாவனையாக்கப்பட்டிருக்கிறது.
ஒரு எதிரியின் குணம் தன்னிருப்பை அறிவித்து விட்டு நேருக்கு நேராக சந்திப்பது. ஒரு ஒட்டுண்ணியின் குணம் சார்ந்திருந்து மெல்ல அனுபவித்துக் கொண்டே கொல்லுவது. இதில் இரண்டாவது ரகம் நம்மை ஆரோக்கியமாக வாழவே விடாது. நோஞ்சானாக நம்மை வைத்து தனக்குத் தேவையானதை அடைந்து கொள்வதற்கான அத்தனை தகவமைவுகளையும் பெருக்கிக் கொள்ளும். நோய் கூறு அறிந்தாலே ஒழிய இதற்கு வைத்தியமே இல்லை.
நம்முடைய சமூகத்தின் சாபக்கேடு இது. சிவப்பிந்தியர்கள் ஓரளவிற்கு நேராடியான எதிரியை நிராயுதபானிகளாக சந்தித்தார்கள். போராடினார்கள், மாண்டார்கள். ஆனால், நாம் எதிர் கொள்ளும் ஒட்டுண்ணிகளோ பச்சோந்தித் தனமானது, கூடவே இருந்து நிறத்தை மாற்றி இரண்டர கலந்து விட்டது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சற்றே தனது இருப்பை புரண்டு காமித்தாலும், மீண்டும் தேவையானதை அடைந்து கொண்டு ஹைபர்னேசன் மோடிற்கு சென்று விடுகிறது. என்னதான் செய்வது.
விசயத்திற்கு வாரேன். பல ஆண்டுகளாக நானும் ப்ரீ மெச்சூர்டாக வயசுக்கு வந்திட்டதாக அறிவிச்சிக்க வேண்டாம்னு காலம் கொடுத்து கொடுத்து ஒவ்வொரு கதவா தட்டித் தட்டி மாதிரி எடுத்துப் பார்க்கிறேன், ஒண்ணு சொன்ன மாதிரியே அந்த குணம் ஏதோ ஒரு பாயிண்டுல வெளிக்காமிச்சிடுது.
இப்பொழுது நீட், நுழைவுத் தேர்வு, வெறுப்பு அரசியல், காவேரி நதி நீர் பங்கீட்டு விசயம்னு நடக்கிற அனைத்து சமூக நீதி சார்ந்த விசயத்திலும் கொலகாரத்தனமாக எதுவுமே தவறாக தெரியாமல், முட்டுக் கொடுத்து ஒண்ணுமே தெரியாத அப்பாவிகளாக அதே நேரத்தில் தெளிவா எடுக்கிற நிலையைப் பார்த்து, நான் வயசுக்கு வந்துட்டேன்னு அறிவிச்சு கதவை இழுத்து சாத்திக்கலாம்னு ஒரு முடிவிற்கு வந்திருக்கேன்.
அன்பர்களே, நீங்கள் எனக்கு நிறைய கத்துக் கொடுத்திருக்கீங்க. அதெல்லாம் பெரும் வாசிப்பினாலே நீங்களே எடுத்த முடிவா, இல்ல நான் டவுசர் போட்டுக்கிட்டு நாலாப்பு படிக்கும் போது, அதே வகுப்பில நீங்க இருந்தாலும் பத்தாப்பு படிக்கிற அளவிற்கு உலகறிவு புகுத்தப்பட்டு வெளிக்கிடுறீங்களான்னு தெரியாது. ஆனா, இது நானாவே விரலை சுட்டுச் சுட்டு கத்துகிட்டது. நாய் வால நிமிர்த்த முடியாதுன்னு!
சிவப்பிந்தியர்களுக்கும் நம் முன்னோடிகளுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிது. ஆனா, அது காலவதியாகிப் போனது. மூளையை பலப்படுத்தணும், சூழ்ச்சி வெல்லும்!

Saturday, May 05, 2018

புதன் கெரகத்திற்கு ஆள் எடுக்கிறோம்: கொச்சைப் பதிவு!

ஊர்க்காட்டில ஒரு சொலவடை உண்டு ”பிச்சை எடுத்துச்சாம் பெருமாளு அதை தட்டிப்பிடிங்கினிச்சாம் அனுமாருன்னு.” அப்படி இருக்கிறது கதை.
ஒரு காலத்தில் சென்னையில அமெரிக்கன் கன்சூலேட்லயே வைச்சு நிரந்தரமா அமெரிக்காவிற்கு குடியேற்றதிற்கும் நேர்க்காணல் செஞ்சு விசா கொடுத்தாங்க. இப்போ அந்த சர்வீசை சென்னையில நிப்பாட்டிட்டு மும்பாய்க்கு எடுத்திட்டு போயிட்டாங்க.
ஏற்கெனவே அமெரிக்கா குடியுரிமை வழங்கும் கன்சூலேட் மற்றும் எம்பசிகளில் நம்மை போன்ற சப்ஹூயுமன் பிறவிகளை ஒரு மசிரும் மதிக்கிறதில்ல. தெருவிலயே நிப்பாட்டி வைச்சு வதைத்துத்தான் உள்ளரயே கூப்பிடுவாய்ங்க.
அப்படி அடி உதை, சொரணைய விட்டுக்கொடுத்து போறதுக்கு தயாராக நிக்கிற கூட்டம் தன்னோட நாட்டு மக்களை மரியாதையோட நடத்தணும்னு எதிர்பார்த்தா கவைக்கு ஆகுமா?
ஏன் இதையெல்லாம் சொல்லுறேன்னா, நாம எல்லாத்தையும் நகல் எடுத்தே பழகிப்போன கூட்டம். தன்னைச் சுத்தி என்ன நல்லது கெட்டது கெடக்கின்னு கூட ஊன்றிப் பார்க்காம கிடைக்கிறதையெல்லாம் அப்படியே திண்ணு வைக்கிறது.
இப்போ அதிகாரத்தை கையில வைச்சுக்கிட்டு தலைகால் புரியாம ஆடுற கூட்டம் தன்னை என்னவோ தொட முடியாத உசரத்தில இருக்கிறதா நினைச்சிக்கிட்டு ஆடுதுங்க.
அதுங்க என்னமோ அகதிகளை நடத்துறது மாதிரித்தான் நடந்துகிறதா இந்த நீட் சம்பந்தமான பிரச்சினையை பார்க்கிறேன். முதல்ல ஒரு தேசமா தனக்கு வேணுங்கிற துறைகள்ல தன்னிரைவை நீக்கமுற எப்படி அடைஞ்சிக்கிறதுங்கிற தொலை நோக்கு கொஞ்சமும் இல்லாம, அடுத்தவன்கிட்ட இருந்து அடிச்சு பிடிங்கித் திங்க பார்க்கிறது. இந்தியா என்ன அமெரிக்காவாடா? அமெரிக்காவில இருக்கிற மாதிரியா இங்கே மக்கட் தேசத்தை (demographic, community structure) கொண்டிருக்கிறது?
கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் அறைகுறை பசங்க ‘ஓவர் நைட்ல’ பணம் மூட்டை ஒன்றை கண்டெடுத்து அதை வைக்கிற முறை தெரியாமல் ஆடுவது போல, ஒரு தேசம், ஒரு மொழி கத்திரிக்க வெண்டைக்கான்னு, பக்கர்ஸ். அவனவன் மொழியில தன்னுடைய பிராந்திய மக்களுக்கு நோய், நொடி இல்லாம இருக்க சொந்த உழைப்பில கட்டி எழுப்பின சோர்சஸை வைச்சு கல்வி பழகி உயர்ந்து வர்றானுங்கன்னா, அதை ஒரு ரோல் மாடலுக்கான மூலமாக வைத்து உங்க உங்க பிராந்தியங்கள்ல உருவாக்கிக் கொள்வீர்களா, அதனைத் தவிர்த்து முழு தேசதுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு மசிரு மட்டைன்னு அதுவும் ஒண்ணாப்புல இருந்து சி.பி.எஸ்.இன்னு பெரிய புடுங்கி சிலபஸ்ல படிக்க வைச்சேன்னு பிகில் விட்டு படிக்க வைக்கிறவிங்க சிலபஸ்ல இருக்கிற கேள்விகளை கொண்டு போய் அரசாங்க பள்ளி கூடங்கள்ல படிக்கிறவன்கிட்ட திணிச்சு ஏண்ட வன்புணர்வு செய்றீங்க (வேற என்னவாம் அது?)
கேட்டா மனனம் செஞ்சு படிக்கிறதுன்னு ஒரு நொன்னை வாதம். சரி நீங்க சி.பி.எஸ்.இல நொட்டி எத்தனை நோபல் பரிசும், அண்டத்தில புதுக் கோள்கலையும், நட்சத்திரத்தையும் உருவாக்கி வைச்சிருக்கீங்க?
இப்படிச் சுரண்டித் திங்கிறதெல்லாம் ஒரு பொழப்பாடா? இந்த கருமாந்திர பிடிச்ச செயல்பாட்டில வேற நுழைவுத் தேர்வு நடத்துர ஹால்ஸ் கண்டிபிடிக்கிறதில வேற குளறுபடி. நல்ல கெட்ட கெட்ட வார்த்தையா வாயில வருது, ஆனா, ரொம்ப நல்லவிங்க கோவிச்சுக்குவாய்ங்களேன்னு அடக்கி வாசிச்சு எழுதுறேன்.
எவனாவது இப்படித்தான் அமெரிக்காவில ஒரு முறை நான் எக்சாம் எழுதப் போக ஐந்து மணி நேரம் ட்ராவல் செஞ்சு போனேன், அப்படி இப்படின்னு வந்தீங்க, கம்னாட்டி பயலுகளான்னு திட்டிப் புடுவேன்.
ஒரு எக்சாம் ஹால் கண்டுபிடிச்சு அதுக்குத் தேவையான வசதிகளை அமைச்சிக்க எத்தனை மணி நேரம்டா முறையா செஞ்சா தேவைப்படும்? அப்போ தமிழ்நாட்டில இது வரைக்கும் நடத்தப்பட்ட தேர்வுகள் அனைத்தும் தில்லுமுல்லு செஞ்சுதான் உருவாக்கினாங்கன்னு சொல்ல வாரீங்களா? சட்டியில இருக்கிறதுதானே அகப்பையில வரும்... உங்களோட நாள் பட்ட சீழ் பிடிச்ச புத்திப்படிதானே மூளையும் வேலை செய்யும்?
என்னமோ வேற்று கிரகத்திற்கு ஆள் எடுக்கிற தோரனை மசிருல ஒரு தேவையற்ற நுழைவுத் தேர்வு அதுக்கு இத்தனை பில்டப். காதுக்குள்ளர லைட்டு அடிச்சி என்னடா செக் செஞ்சீங்க போன ஆண்டு? காக்லீயா இருக்கான்னா பார்க்கவா? முண்டக் கலைப்பைகளா? சட்டை கிழிச்சு, முடியை வெட்டி கரும்புள்ளி செம்புள்ளி மட்டும்தாண்டா குத்தி ஏண்டா படிக்கிறீங்கன்னு கேக்கல. உங்களோட இந்த பூமிய பகிர்ந்துக்கிறதுக்கே கேவல மசிரா வருது.
இதில வேற அமெரிக்காவில இருக்கேன், அண்டார்டிக்காவில இருக்கேன்னு ஒரு வாழ்க்கை மசிரு வேற. கூட இருக்க கூட்டத்தை ஒரு மனுசப்பிறவிகளா மதிச்சு கூட்டிக்கிட்டு தானும் உயர ஒரு மனசில்ல பின்ன என்ன மரியாதை மசிரு தேவைப்படுதுங்கிறேன்.
இதெல்லாம் ஒரு பிரச்சினைன்னு உச்ச நீதி மன்ற தீர்ப்பு வேற. முடியலடா. இந்த கூத்தையெல்லாம் பார்த்துக்கிட்டு நாமளும் ஒரு மனுசப் பொறப்புன்னு சொல்லிக்க. ஏண்டா, உங்களுக்கெல்லாம் வெக்கம், மனசாட்சிங்கிற மசிரே இருக்காதா?

Thursday, May 03, 2018

வாயால் வடை சுடுவது எப்படி?

முதலில் 2020ல் இந்தியாவை சூப்பர் பவராக வளர்த்தெடுப்போம் என்றார்கள். ஆனால், இப்பொழுதோ நம்மைச் சுற்றி நடந்தேறும் நிகழ்வுகளை காணும் பொழுது 1920களுக்கு முன்பிருந்த காலத்திற்கு முன்பாக நம்மை கடத்திச் சென்று விட்டார்கள் என்பது கண்கூடாகத் தெரிகிறது.
வாயால் வடை சுட முடியுமா? முடியும் என்கிறார்கள் முழித்துக் கொண்டே கனவு காணச் சொல்பவர்கள். கடந்த நான்கு வருடங்களில் என்ன மாதிரியான அடிப்படை கட்டமைப்புகள் அனைவரும் பயன்பெறும் வண்ணம் சென்றடைந்திருக்கிறது.
எந்தப் பக்கம் திரும்பினாலும் எதிர் மறையான செயல்பாடுகளும் அதனையொட்டிய ஓலங்களும் தான் காதில், கண்ணில் விழுகிறது. வெற்று மாயையைக் கொண்டு ஊதிப் பெருக்குவதால் யாருக்கு லாபம்? அவர்களைச் சுற்றி உடனடியாக லாபமடையும் ஒரு சில சதவிகிதத்தினரைத் தவிர. அது உண்மையான வளர்ச்சியா, நிலைக்குமா? வந்த மாதிரியே ஒரு நாள் அதற்கும் கூடுதலாக பிய்த்துக் கொண்டு சென்று விடாதா?
அப்படிச் சமச்சீரற்ற ஒரு வளர்ச்சிக்குள் வாழ எத்தனிப்பவர்களும் அதே நிலப்பரப்பையும் இயற்கை வளங்களையும், சாலைகளையும் தானே பகிர்ந்து கொண்டு ஒரு தேசத்து மக்களாக வாழ வேண்டும். எப்படி ஆயிரம் ஆண்டு காலங்களாக அதே மனிதமற்ற முறையில் மேல் கீழ் என மக்களை பிரித்து, பகிர்ந்து கொண்டு வாழ மனமற்ற மடையர்களாக வாழ்ந்தோமோ அப்படியே மீண்டும் இந்த நவீன காலத்திலும் எப்படி ஒப்பேத்த முடியும்?
நடிப்பும், பொய்யும் புரட்டும் செய்து மக்களை என்னவோ நேற்றே அமேசான் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட காட்டு வாசிகளைப் போல நினைத்துக் கொண்டு அத்தனை சூழ்ச்சிகளோடு தங்களுக்கு வேண்டியதை இன்று அரசு அதிகாரம் தங்கள் கைகளில் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக எப்படிச் சுரண்டி வஞ்சிக்க முடியும்?
இது அனைவருக்குமான தேசமில்லையா? எப்படி வெக்கமே இல்லாமல் நாடு நாடாக சென்று அதுவும் தனிவொரு விமானத்தில் பறந்து ஏதோ வேற்றுக் கிரகத்திலிருந்து இறங்கி வரும் தேவ தூதனைப் போல கைகளை ஆட்டிக் கொண்டே உலாவித் திரிய முடிகிறது?
நீ வரும் ஊரிலிருந்துதானே பத்து வயதிற்கும் குறைந்த வயதுடைய சிறுமிகளை கூட்டு வன்புணர்வு செய்கிறார்கள்? இன்னொரு இடத்தில் இன்னொரு சிறுமியை வன்புணர்ந்து கொன்றவனுக்கு தண்டனையாக ஆறு மாதம் தண்ணீர் சப்ளை செய்யச் சொல்வதும், மாட்டுக்கறி வைத்திருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் அடித்துக் கொல்வதும், தன் மதம் சாரா தன்னுடைய நாட்டு குடிமக்களை வேற்றொரு நிலத்து மக்களாக பாவிக்கச் சொல்லி வெறுப்பு அரசியல் பேசுவதும், அனைவருக்கும் சென்றடைய வேண்டிய கல்வியை தட்டிப் பறித்து நுழைவுத் தேர்வு என்ற பெயரில் பிற மாநில கல்வி திட்டத்தில் படித்து தேர்ந்த மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கி இத்தனை பெரிய மக்கட் தொகை கொண்ட தேசத்தில் எது போன்ற கூட்டு பங்களீப்பு கடைசி கிராமம் வரை சென்றடையும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற வாக்கில் செய்து முடித்திருக்க முடியும்.
மோடியைப் பற்றி இது வரையிலும் நேரடியான எது போன்ற விமர்சனங்களும் என்னிடமிருந்து வைத்தது கிடையாது. ஆனால், இப்பொழுது வைக்கிறேன். இது வரையிலும் ஊதிப் பெருக்கிய அளவிற்கு கட்டியெழுப்பப் பட்ட பிம்பத்திற்கு பைசாவிற்கும் உபயோகமற்ற ஒரு பிரதமரே இவர். தன்னுடைய தேசம் பொருத்தும், அதன் பிரச்சினைகள் குறித்தும், தன்னையொத்த பிற்படுத்தப்பட்ட மிகவும் கீழ் நிலையில் வாழும் சக தேச மனிதர்களைப் பற்றியும் கிஞ்சித்தும் அறிவற்ற ஒரு மூடராகத்தான் ஓடித் தேய்கிறார்.
நல்ல உடைகளையும், உணவையும் வழங்கி, எழுதிக் கொடுப்பதை பல நாள் பழக்கிக் கொண்ட (எரிச்சலூட்டும்) உடல் மொழியைக் கொண்டு வழங்குவதற்காக, ஒரு வாடகைக்கு அமர்த்திக் கொண்ட உள்ளீடற்ற ஒரு மனிதராகாத்தான் இவரை என்னால் பார்க்க முடிகிறது.
நாம் 1980களிலேயே கவர்ச்சி அரசியல் என்றால் என்ன அதன் விளைவுகள் எது போன்றது என்பதனை எம்.ஜி.ஆரிடமிருந்து கற்றுக் கொண்டோம். இவர் இப்பொழுதே இந்த இணைய பலூனை நம்பி சாலையை பெருக்கிறார். கங்கையை சுத்தம் செய்கிறார். கழிவரைக்கு குழி தோண்டி செங்கல் வைத்து சிமெண்ட் பூசுகிறார். கிழவிக்கு செருப்பு போட்டு விடுவது என்று காலாவதியாகிப் போன மயக்க அரசியல் அதுவும் உலகம் விழித்துக் கொண்ட வேலையில் செய்து வருகிறார். இது யாரை ஏமாற்ற? தன்னையே ஏமாற்றிக் கொள்கிறோமே ஒரு பிரதமராக என்று ஒரு நொடி மின்னலாக தோன்றி மறையாதா?
அத்தனையும் வெற்று வார்த்தைகள். அண்மையில் வந்த ஒரு செய்தி- உலகில் வாழ
லாயக்கற்ற அதி மாசுப்பட்ட நகரங்களில் 15ல், பதினான்கு நகரங்கள் இந்தியாவில் இருக்கிறது என்று ஓர் அறிக்கை தெரிவித்திருக்கிறது. அனைத்தும் இவருடைய ஆட்கள் ஆளும் மாநிலங்கள். இப்படி தலை வெட்டுப்பட்ட கோழி போல ஓடும் திசையறியாமல் ஓடிக் கொண்டும், தன்னுடைய மக்களுக்கிடையே வெறுப்பு அரசியலை விதைத்து “கொள்ளிக்கட்டையால் தலையை சொறிந்து கொள்வதற்கு” இணையாக அரசியல் செய்து கொண்டிமிருந்தால், அவைகள் கடைசியாக நம்மை எங்கே கொண்டு நிறுத்தும்?

ஆஃப்கனிஸ்தான், பாகிஸ்தனுக்கும் கீழே... அதி விரையில் அது சாத்தியமே. வரும் 2019ல் மட்டும் வெற்றியை அவர் தலையில் தூக்கி வைத்து விட்டால், புரோகிதர் இல்லாமலே காரியம் செய்து விடுவார்கள்.

Monday, April 16, 2018

நிர்மலா தேவி, யார் அந்த பெரிய இடம்?

நிர்மலா தேவி, யார் அந்த பெரிய இடம்? இதற்கான பதிலில் இது போன்ற அவலங்களுக்கான தீர்வு இருக்கிறது.
விருதுநகர் கல்லூரியின் விரிவுரையாளர் நிர்மலா தேவி என்பவர் இன்றைய இந்தியாவின் நவீன சுரண்டல் அமைப்பின் ஒரு குறியீடு என்றளவிலேயே இதனை அணுக வேண்டியதாக இருக்கிறது. இந்த செய்திகளின் அடிப்படை அணுகுமுறையிலேயே ஒரு தவறு இருக்கிறது.
நாம் யாரும் அதனை நோக்கி கேள்வி எழுப்பவோ, கவனிக்கவோ நம்மை தயார்படுத்தவில்லை. அந்த ஒலிக்கோப்பு முழுதுமாக கேட்டால், நிர்மலா, தான் ஓர் அம்பு மட்டுமே எய்தவர்கள் நம்மை விட பெரிய இடத்தில் உள்ளவர்கள், நம்முடைய வாழ்க்கையையேப் புரட்டிப் போடும் அதிகாரத்தைக் கொண்டவர்கள் என்று கை சுட்டும் இடம் மிகப் பெரிய அதிகார மையமாக இருக்கிறது.
எந்த ஊடகமாவது, யார் அந்த பெரிய தலை? எது போன்ற அதிகார மையமது? இதற்கு பதில் தேடி அதனை நோக்கி தங்களுடைய துப்பு துலக்கும் ஊடகப் பணியை மேற்கொள்ளும் நிழல் கேள்விகளை எழுப்பியதா? இல்லைதானே? அப்படியெனில் டிஸ்கவரி சானலில் நாம் ஒரு வித அச்சத்தினூடும், வெறுப்போடும் அதே நேரத்தில் விரும்பிப் பார்க்கும் புலி ஒரு புள்ளி மானின் குட்டியை துரத்தி குரல்வளையை கடித்து சாகடிக்கும் ஒரு நிகழ்வை பார்க்கும் அதே வக்கிரத்தோடுதானே இதனையும் ரசித்து ஒரு சாஃப்ட் போர்ன் ஒலி அளவில் கேட்டு அதிர்ச்சியுறுவது போல மகிழ்ந்து கேட்டு நகர்கிறோம்?
இந்த ஊழலை, மாசுபாட்டை நிர்மலா என்ற ஒற்றை நபருடன் சுருக்கிவிட முடியுமா? இதற்கு பின்னான காரணிகளை நாம் அரசியல், சமூக, மக்கட்பெருக்க நிலை, அதிகார முறைகேடு இத்தியாதிகளுடன் தொடர்பு படுத்தி எப்படி இதனை நேர்கொள்ள வேண்டுமென்று எண்ண வேண்டாமா?
ஒலிக்கோப்பிில் அந்த நிர்மலா மிகத் தெளிவாக கூற வருவதில் இவை அனைத்தும் அடங்கி இருக்கிறது. அவர் வார்த்தைகளிலே ஓரிரு இடங்களை மேற்கோள் காட்டுகிறேன் - இது ஒன்றும் புதிதல்ல, எங்கும் நடக்காததும்அல்ல. உங்களுக்கே தெரிந்திருக்கும். உங்களுடைய எதிர்காலம் நீங்கள் ஆசைப்படும் இடத்திற்கு கொண்டு செல்ல அந்த ‘பெரியவர்கள், அதிகார மையம்’ அனைத்தையும் கடந்து உதவி செய்யும்.
அதற்குள் இருக்கும் பொருள் பொதிந்த, கையாலாகாத , மிரட்டல் தொனியும் நாள்பட்ட வியாதித்தன்மையின் அயற்சியுமாகத்தான் எனக்கு நிர்மலாவின் உரையாடல் புரியத் தந்தது.
நான் கல்லூரிகளில் படிக்கும் பொழுதே சக மாணவிகளுக்கு இது போன்ற நூல் விட்டுப் பார்த்தல் நடந்து கொண்டு வருவதாகத்தான் அறிகிறேன். இத்தனை மக்கட் தொகை கொண்ட தேசத்தில் இது போன்ற நிகழ்வுகள், அழைப்புகள், முறைகேடுகள் நடக்காமல் இருந்தால்தான் விந்தை. படி, படி, படி நல்ல மதிப்பெண் எடுத்தால்தான் வாழ்க்கை என்று நான்கு வயதில் ஆரம்பித்து 26 வயது வரைக்குமே அந்த மதிப்பெண்கள் என்ற குத்தூசி வைத்து விரட்டும் பொழுது அங்கே மாசுபாடு ஏற்படாமல் போகுமா?
இதற்கிடையில் அப்பாடு பட்டு நல்ல மதிப்பெண்களுடன் தேர்வாகி விட்டால் கூட உடனடியாக அந்த போட்டிக்கிடையே வேலைதான் கிடைத்து விடுகிறதா? ஒரு அரசாங்க காலி இடத்திற்கு ஒரு லட்சம் விண்ணப்பம் வருகின்ற சூழலில் எப்படித்தான் பின்னே தங்களை முன்னிறுத்திக் கொள்வது என்ற அயர்ச்சி வரத்தானே செய்யும். அதனைத்தான் நிர்மலாக்களின் மூலமாக ’அதிகார மையங்கள்’ ஆசை வார்த்தைகளைக் கூற வைத்து ஆள் பிடிக்கும் அவலத்திற்கு தள்ளி விடுகிறது.
நிர்மலாக்களுக்கு குறுக்கு வழியில் தாங்கள் இனிமேல் இழக்க ஒன்றுமேயில்லை எனவும், போட்டியில் தனது சக துறைசார் தோழமைகளிலிருந்து துருத்தி நிற்க அவர்களும் இந்த மாசுநிலைக்குள் தள்ளிவிடப்பட்டு பிரிதொரு நாள் அனுபவ பின்புலத்தில் ஆள் சேர்ப்பு பணிக்கும் எத்தனிக்கும் நிலைக்கு சென்று விடுகிறார்கள்.
இங்கே இந்த மாசுபாட்டின் ஆணி வேர், தோற்றுவாய் எங்கே இருக்கிறது என்று யாருமே பேசவில்லையே! நம்முடைய விரல் சுட்டு அது வரையிலும் நீளாத வரை இவைகளை நாம் அடைக்க முடியாது. கசிந்து கொண்டே தான் இருக்கும். ஏனெனில் இன்றைய போட்டி நிலை அப்படி. ஏதோ ஒன்றை தொற்றிக் கொண்டு தான் தங்களை அந்த இடங்களுக்கு நகர்த்திக் கொள்ள வேண்டிய அபத்த நிலை. அது பணமாக, அதிகார சேகரிப்பாக, வலைபின்னும் நோக்கமாகவென பல அவதாரங்களாக பரிணமிக்கிறது.
இது நமது சமூகச் சூழலில் எந்த துறைக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும்.

Tuesday, April 10, 2018

தம்பிகளே இழப்பதற்கு இங்கே ஏராளமிருக்கிறது!

ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னா மெய் ஆகிடுமா? காமராசர் காலத்திற்கு பிறகு வளர்ச்சியே இங்கே இல்லையென்றால் எதனைச் சுரண்ட கட்டி எழுப்பிய அரசு கல்வி நிறுவனங்களை பட்டப் பகலில் ஜோப்படி செய்ய முயற்சிக்க வேண்டும்? ஒரு மாநில அரசே அந்த ஊர் மக்களின் உழைப்பில் உருவாக்கிய மருத்துவக் கல்லூரிகளில் எது போன்ற தேர்வுகளை நடத்தி மாணவர் சேர்க்கை செய்ய வேண்டுமென்ற உரிமையில் தலையை நுழைக்க வேண்டும்?
அரசாட்சி நடத்தவே தகுதியற்ற ஒருவருக்கு சரியான நேரத்தில் கோர்ட் தீர்ப்புகளை வழங்காமல் தள்ளிப் போட்டு, தேர்தலில் வெற்றியை வழங்கி, பிறகு அவரது மரணத்திற்கு பின்னாக, மீன் வலை போட்டு அள்ளியது போல அரசியல் ஞானமற்ற, அறமற்ற, எதிர்கால திட்டங்கள் ஏதுமற்ற பல சில்லுண்டித் திருடர்களை கொத்தாக வைத்துக் கொண்டு திரைமறைவு அரசியல் செய்வதா? அரசியல் அறம், மரபு?
இதனைச் செய்வதற்கு சிறிதும் அஞ்சாதவர்கள் மக்களாட்சியை எந்த குழிக்குள்ளும் தள்ளி புதைக்க மாட்டார்கள் என்பதில் என்ன சந்தேகம் இருந்திட முடியும்? ஒரு மாநிலம் கிடைத்த வளத்தைக் கொண்டு தன்னாலான அளவு வளர்ச்சியைக் காட்டி பிற மாநிலங்களோடு ஒப்பிடும் வாக்கில் சற்றே உயரத்தை காட்டியிருக்கிறது என்றால், அதனை மாடலாகக் கொண்டு தாங்கள் ஆளும் மாநிலங்களில் அவற்றை பின்பற்றி உயர்த்த நினைப்பார்களா அல்லது பிற பின் தங்கிய மாநிலங்களின் வரிசையில் அதனையும் வைத்து அழகு பார்க்க எண்ணுவார்களா?
பொய்களை பரப்பியே ஒரு சிறந்த நிர்வாகத்தை வழங்கிட முடியும் என்று யார் இவர்களுக்கு பாடம் எடுத்தது? வளர்ச்சி என்பது தன்னைச் சுற்றி நிகழ் காலத்தில் நாம் அனுபவிக்கும் வசதிகளைக் கொண்டு கண்டுணரும் ஒரு விடயம். அது கல்வி வசதியாகட்டும், மருத்துவ, சுகாதார வசதியாகட்டும் எல்லாவற்றையுமே சிறிது சிறிதாக கடினமான உழைப்பின் பெயரில் ஈட்டிக் கொள்வது. அதற்கு பல வருடங்கள் பிடிக்கும். பணத்தைக் கொட்டி ஊடகங்களில் போலியான பரப்புரைகளின் மூலம் அடைவது கிடையாது.
ஒரு நாட்டை கட்டியெழுப்பும் பொழுது, அது வரையிலும் சமூக சமநீதியற்ற ஒரு சமூதாயத்தில் அடையப்படாத விடயங்களான அணைகள், பள்ளிகள், மருத்துவம் ஏனைய வசதிகளுக்கென அடித்தளம் போடுவது என்பது ஓர் இயல்பான விடயம். அதுவும் போர்க்கால அடிப்படையில் சில துறைகள் பீரிட்டு வளர்த்தே எடுக்கப்பட வேண்டியதாக இருக்கும்.
உதாரணமாக கோயபல்ஸ் முறையில் தொடர்ந்து பரப்பப்படும் காமராசர் காலத்து பொற்கால துறைகளான அணைகட்டுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு. அதற்குப் பிறகு இத்துறைகள் எந்த மாற்றத்தையும் அடையவே இல்லை போன்ற ஒரு பிம்பத்தை கட்டி எழுப்புகிறார்கள். இது எத்தனை வடிகட்டிய முட்டாள்தனமான வாதம்? ஒரு மாநிலத்திற்கு முக்கிய அணைகட்டுக்களாக எத்தனை அணைக்கட்டுக்கள் தேவைப்படும். கிடைக்கும் நில அமைப்பு, வன வளம் அதனில் பெறப்படும் நீர் வரத்து, அந்த பூமியத்தை சுற்றியுள்ள மக்களின் வாழ்விடமென்று எத்தனையோ காரணிகளைக் கொண்டே ஒரு முக்கியமான அணைக்கட்டிற்கான அடித்தளம் அமைகிறது.
போகிற போக்கில் நினைத்த இடத்திலெல்லாம் அணைக்கட்டுக்கள் அமைத்து விட முடியுமா என்ன? இது எது போன்ற வாதம்? தெரிந்துதான் பேசுகிறோமா அல்லது மக்கள் அனைவரும் முட்டாள்கள், அடிப்படை அறிவே அற்றவர்கள் என்ற முறையில் பொய்யிலே அரசியல் அறமற்று தன் உடல் வளர்க்க பேசும் பேச்சா?
அந்த கால கட்டத்திற்கு பிறகு எந்த அரசும் எதுவுமே செய்யாமல் தான் நாம் உயிர் வாழ்ந்து, கல்வியறிவு பெற்று இன்று இப்படி வீண் வம்படித்து பிளவுகளை உருவாக்கி நம்முடைய வளங்களை வேற்று மாநிலத்து மக்கள் சூழ்ச்சியின் பால் பிடிக்க வழி கோலுகிறோமா?
ஒரு விடயத்தை பகிர்வதற்கு முன் அதில் எந்தளவிற்கு உண்மைத் தன்மை இருக்கிறது என்று அறிந்து கொள்ள குறைந்த பட்ச உழைப்பையாவது போட வேண்டாமா?
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க இப்பொழுது எந்த அரசியல் அறமுமற்று பொய் பிரச்சாரங்களை பரப்புவதற்கே பெரிய அளவில் தங்களுடைய நேரத்தையும், பணத்தையும் போட்டு அரசியல் வளர்க்கும் சூழலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழலிற்கு நாம் நகர்ந்திருக்கிறோம்.
கிடைத்த ஐந்து வருடங்களில் உங்களுடைய நாற்பது காலத்து கடின உழைப்பின் பெயரில் கட்டியெழுப்பிய, கோரிப் பெற்ற பல உரிமைகள் திரைக்கு பின்பாகவும், நம்முடைய கண்களுக்கு முன்பாகவும் கோமாளி அரசைக் கொண்டு பிடிங்கிக் கொண்டு செல்வதைக் காண்கிறோம்.
உணர்ச்சி வயத்தில் கூட்டத்தோடு சூழ்ச்சிக்கு இரையாகி பின்னால் திரும்பிப் பார்க்கும் பொழுது, இழந்ததை மீட்டெடுக்கவே மீண்டும் பல பத்தாண்டுகள் தேவைப்படலாம். முதலில் எதிரியை அடையாளம் காணுங்கள். யாரை அமர வைத்தால் தவறுகளை திருத்திக் கொண்டு சுயமான வளர்ச்சிக்கு நம்மை இட்டுச் செல்வார்களோ அவர்களை ஆதரியுங்கள். பிறகு உங்களுடைய பங்காளிச் சண்டையை வைத்துக் கொள்ளலாம்.

Thursday, March 08, 2018

பெரியார் எப்போது யாருக்காக சாதி வெறியர் ஆனார்?: Periyar

தொலைக்காட்சி விவாதங்களில் அபாண்டமாக ஓர் உண்மைக்கு எதிராக பரப்பப்படும் பிரச்சார வாதங்களை சொல்லிவிட்டு, அதனை எதிர் தரப்பினர் அவர்கள் எத்தனை பொய்யர்கள் என்பதாக சான்றோடு எதிர் வாதம் வைக்கும் பொழுது- பொய்யர்களுக்கு ச்சீ இதுவும் ஒரு பொழப்பா என்று கூனிக் குறுகும் உடல் மொழியை காண்பதில் ஒரு சுவராசியம் இருக்கிறது.
அப்படியான ஒரு விவாதத்தை புதிய தலைமுறையில் கண்டேன். பெரியார் ஒரு சாதி வெறியர் என்றும், சாமி சிலைகளை உடைத்தார் என்றும் அப்பட்டமான ஒரு பொய்யை தான் சாமார்த்தியமாக எடுத்து வைப்பதாக வைத்து விட்டு நகர்ந்தார். அதற்கு பதிலுரைக்கும் விதமாக தொல். திருமா அவர்கள் மிக அழகான விதத்தில் அந்த உண்மையை எடுத்து வைத்தார். அப்பொழுது அந்த மய்யநிலையாளர் அவசரமாக தண்ணீர் எடுத்து அருந்திய விதம் பார்க்க கண் கோடி வேண்டுமென்பதாக இருந்தது.
பெரியார் சாதி வெறியை ஊட்டி வளர்த்திருப்பாராயின் எதற்காக அவரை நீங்கள் எதிர்த்திருக்க வேண்டும்? உங்களுடைய அரசியலே சாதிய கருத்தாக்கத்தில், பிரித்தாளும் சூழ்ச்சியின் அடிப்படையில் தானே ஆயிரம் ஆண்டு காலங்களாக ஒப்பேறி வருகிறது. அதற்கு வெடி வைக்க வேண்டித் தானே, அதன் ஆணி வேரான இறை நம்பிக்கை என்ற பெயரில் மனிதனை பிரித்தாளும் இடமான நீங்களே நம்பாத அந்த கடவுளர்கள் சன்னிதிக்குள் நீங்கள் விரும்பாத பிற இந்து மனிதர்களையும் அழைத்துக் கொண்டு நுழைய வேண்டி வந்தது.
அந்த ஊரில் உள்ள அனைத்து ஹோமோ செப்பியன்ஸ்ம் ஆலயத்திற்குள் நுழைய வேண்டுமென்றவர் எப்படி ஒரு சாதி வெறியர் ஆகிப்போனார்? பெரியார் என்ன நாட்டில் உள்ள அனைவரும் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக்க வேண்டுமென்றா ஓர் இயக்கத்தை நடத்தினார்? ஒரு முட்டாளுக்கு கூடத் தெரியும் அது எந்த நாட்டிலும் முடியாத விடயமென்று.
ஏனெனில் அதனின்று விடுபட சில அடிப்படை அறிவு விரிவாக்க பயிற்சி தேவைப்படுகிறது. மனத்திண்மை தேவைப்படுகிறது. எதனையும் கேள்விக்குள்ளாக்கும் ஆராய்ச்சி மனோபாவம் தேவைப்படுகிறது. இயல்பாக நமக்கு வருவது எந்த வித சலனமுமில்லாத தன் முயற்சியற்ற மரவட்டை வாழ்க்கை. அந்த ஓட்டத்தில் இத்தனை ஆழமாக சிந்திக்க திராணி ஏது?
எனவே பெரியார் நம் எல்லாரும் துணுக்குற்று முழித்துக் கொள்ளும் வகையில் எதனை எதிர்த்தால் கவனத்தைப் பெற முடியுமோ அந்த இடத்தை கேள்விக்குள்ளாக்கினார். அதிலொன்றுதான், தானே காசு கொடுத்து வாங்கி போட்டுடைத்த பிள்ளையார் சிலை உடைப்பு. அதனை அன்றைய நீதி மன்றமே கூட அவரிடத்தில் கேள்வி எழுப்பும் பொழுது என்னுடைய காசு நான் வாங்கி உடைத்தேன் என்றாராம்.
வரலாற்றிலிருந்து எதனை யாரிடமிருந்து மறைப்பதற்காக இத்தனை பொய்களை, இத்தனை அதிகார பீடத்திலிருந்து இயக்குகிறார்கள்? அப்படியாயின் யார் எதனைப் பெறக்கூடாது? இது இன்று நேற்று தொடங்கியதாக தெரியவில்லை. வீழ்ந்து கிடக்கும் ஒவ்வொரு 300, 500 வருடங்களையும் தாக்கு பிடித்து மீண்டும் மீண்டும் மனித மேன்மைக்கு எதிரான துரு பிடித்து நாசியை துளைக்கும் கேவலத்தை அரங்கேற்ற துடிக்கிறார்கள்.
அதற்கு உதவியாக ஜீன்ஸும், டிஷர்ட்டும் போட்ட புது யுக இளைஞ, இளைஞிகளும், கமலும், ரசியினும் இன்னும் புதுப்புது வேடமணிந்து தொடர் மனித மேம்பாட்டிற்கு எதிரான காட்டுமிராண்டி அடிமை தனத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ துணை போவது மனித இன அவலமன்றி வேறென்ன?

Monday, March 05, 2018

பேரரசன் அசோகர்: பகுதி - 2 (அசோக சக்கரம்)

அசோக சக்கரமிருக்கிறது. இந்திய பாடப் பிரிவிலும் வாழ்க்கை முறையிலும் அசோகரின் வரலாறு எங்கே...?
அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதைத்து அழிக்கப்பட்ட வரலாற்றுச் சுவடுகளின் மீதங்களிலிருந்து புதிருக்கான விடையை அவிழ்ப்பது போல மிக்க சிரமமேற்று அந்த காலத்திய காலனிய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் நமக்கு வரலாற்றின் பக்கங்களிலிருந்து சுத்தமாக அழிக்கப்பட்ட விடயங்களை நம்முன் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இந்த நூலில் அது போன்ற ஆராய்ச்சியாளர்களின் முயற்சிகளை காணும் போது ஏன் அதற்கு பிறகான ஒருங்கிணைந்த இந்திய துணைக் கண்டத்தில் புதிதாக எதுவுமே கண்டுபிடிக்கப்பட்டு இணைக்கப்பட வில்லை என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டே வருகிறது.
ஆனால் கச்சிதமாக நம்மிடம் கொட்டிக் கிடந்த தரவுகளையும், துணுக்குகளையும் பிற நாட்டவர் போரிட்டு அழித்தொழித்தது போதாதென இங்கு வாழ்ந்த பண்டிதர்களும் நிறையவே துடைத்தழித்திருக்கிறார்கள் என்பதாக தெரிகிறது.
இரண்டாயிரம் வருடத்திற்கு முந்திய எஞ்சிய கல்வெட்டுகளில் இருந்து அசோக சக்கரம் அந்த கால கட்டத்தில் ஆண்ட அசோகன் தொடங்கி அவன் வாரிசுகள் வரையிலும் பரவலாக பயன்பாட்டில் இருந்திருக்கிறது. இருப்பினும் பின் வந்த காலங்களில் வேத விற்பன்னர்கள் அடிப்படையான அசோகனின் சக்கரத்தை...
//...சக்கரம் ஒன்றைச் சுழற்றும் நிகழ்வு பழைய வேதகாலத்து புராணங்களையும் நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டது. வேத இலக்கியங்களில் தலைவன் காலத்தையே படைக்கிறார். அவனிடமிருந்தே அறவழி பிறக்கிறது. மகிழ்ச்சி பிரவாகமெடுக்கிறது.
இந்தப் பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் பரிணமிக்கிறது. பிராமண வேதங்களில் இந்தத் தலைவன் தன் கையில் ஒரு சக்கரம் கொண்டுள்ளான். அது அழிவுக் கருவியாக பகைவர்களைக் கொன்று குவிக்கும் எந்திரமாக செயல்படுகிறது. இதுவே இந்து மதப்பரிமாணத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் விஷ்ணு என்னும் கடவுளாக உருவெடுக்கிறது ...//
என்பதாக திரித்து நோகாமல் நொங்கு எடுத்து சாப்பிட்டு இருக்கிறார்கள் இந்த வேத விற்பன்னர்கள். சக்கரம் என்னவோ புத்த காலத்தில் அசோக பேரரசால் ஓர் அறம் சார்ந்த அரசின் குறியீடாக பயன்பாட்டிற்கு வந்தது பின்னாலில் விஷ்ணு வின் அழிவுக் கருவியாக திரிக்கப்பட்டு இருக்கிறது.
ஆங்கிலத்தில் plagiarism என்று கூறுவார்கள் அறிவுசார் திருட்டு என்பதாக தமிழ் படுத்திக் கொள்ளலாம். பார்க்கும் அளவில் தோண்டித் துருவி இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை ஒன்றிணைத்து பார்த்தால் நமக்கு இன்றைக்கு மத நூல்களாகவும், பெரிய பெரிய விஷ்ணு, பெருமாள் (அந்த சிலைகள் கூட புத்த சிலைகளாக இருக்க அனேக வாய்ப்புகள் உண்டு போல...) கோவிலாகவும் எழுந்து நிற்கும் அத்தனையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புத்த சமயத்திற்கென எழுதப் பட்டதும், எழுப்பப்பட்டதுமாக தோன்றுகிறது. அதனிலிருந்து அறிவுசார் திருட்டின் மூலமாக உருவியவையே இன்று நாம் கண்ணுரும் சில விடயங்கள்.
இந்த இடத்தில் ஓர் விடயம் குறிப்பாக கவனிக்கத்தக்கது. அசோகர் காலத்திய புத்த மதம் சார்ந்த விடயங்கள் அனைத்தும் பின்பு வந்த வேத விற்பன்னர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தாலும், பிற தேசங்களுக்கு சென்றடைந்த புத்த மதம் சார்ந்த குறிப்புகள் பெருமளவில் இலங்கையிலும் இருப்பதாக இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது.
இதன் அடிப்படையில் வைத்துப் பார்த்தால் இன்றைய கால கட்டத்தில் நமக்குத் தெரியாத ஏதோ ஒன்று இனப் படுகொலையாளன் ராசபக்‌ஷேவிற்கு தெரிகிறது. அதன் அடிப்படையிலேயே விடாமல் திருப்பதிக்கு வந்து பெருமாளை தரிசித்து செல்கிறாரோ என்று எண்ணுகிறேன்.
நான் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்த காலத்திலாவது அசோகர் மரம் நட்டார் என்று அளவிலும், ஆரிய, திராவிடர் வரலாறு பற்றியும் படித்தாக நினைவு. இந்த முப்பது வருட இடைவெளியில் அதிலும் குறிப்பாக கடந்த ஐந்தாண்டுகளில் எது போன்ற திரித்தல், இடைச் செருகல்கள் அதிலும் செய்யப்பட்டிருக்கிறது என்பது கவணித்து கொண்டிருப்பவர்களுக்கே வெளிச்சம்.

Thursday, March 01, 2018

பேரரசன் அசோகர் - பகுதி 1 by தருமி

இந்த அத்தியாயத்தில் வரலாற்றை, புராணங்களின் வழியாக திருத்தி, இடைச்செருகல் செய்து தங்களுக்கு தேவையானதை செய்து வந்திருக்கிறார்கள் வேத விற்பன்னர்கள் என்பதாக தெளியவைக்கிறது.
இன்றைய காலத்தில் மோடி, எடப்பாடி, பன்னீர் போன்ற அடியாட்களை (ஷத்ரியர்களை) முன் நிறுத்தி வேலை நடத்திக்கொள்வது போலவே, ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பும் வேத விற்பன்னர்கள் அதே ஒட்டுண்ணி பாவனையில் வயிற்று பிழைப்பு நடத்தி இருக்கிறார்கள் என்பதும் இதன் மூலமாக தெளிவாகுகிறது.
இப்பொழுது கூட எடப்பாடிக்கு பக்கத்தில் ஒரு தேனீயின் சுறுசுறுப்புடன் ஒரு தலைமை செயலளாலர் சுற்றித் திரிவது நவீன ஏற்பாட்டின் ஓர் குறியீடு.
இத்துடன் அந்த நூலின் பக்கத்தை இணைத்துள்ளேன், அன்றும் இன்றும் அதே நிலைதான் நடந்தேறுகிறது. தவறாமல் வாசித்து விடுங்கள்.


Tuesday, February 27, 2018

பேரரசன் அசோகன் by ’தருமி’ மொழிபெயர்ப்பு

பேராசான் தருமி மொழி பெயர்த்த பேரரசன் அசோகன் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூல் ஒன்றை வாசித்து கொண்டிருக்கிறேன். வாசித்து கொண்டிருக்கும் பொழுதே அடக்க முடியாத உந்துதலின் பேரில் ஒன்றை இங்கே குறிப்பிடத் தோன்றுகிறது (இது அந்த புத்தகத்திற்கான முழு நீள வாசிப்பனுபவமல்ல. முழுதும் வாசித்தவுடன் முழுமை படுத்தலாமென்று எண்ணியுள்ளேன்).
.
பல நூற்றாண்டுகளை அநாயசியமாக அந்த நூல் ஓரிரு பத்திகளில் கடந்து செல்கிறது. அந்த பத்திகளில் எது போன்ற அரசன் ஆண்டான் என்பதனைக் கொண்டு மக்கள் எது போன்ற வாழ்வுச் சூழலில் வாழ்ந்திருப்பார்கள் என்பதனை நினைக்கும் பொழுதே திகீர் என்கிறது.

அரசியல் சித்தாந்தமற்ற வர்ணாசிரம சூழ்ச்சியும், அதனையொட்டிய அண்டைய நாட்டு படையெடுப்பின் போது அந்த அரசு கவிழ்ந்து வேறு ஓர் அரசிற்கு கீழ் சில நூற்றாண்டுகள் ஆளப்பட்டு மீண்டும் வீழ்த்தப்பட்டுன்னு... காலச் சுழற்சியின் ஒவ்வொரு பக்கத்திலும் நிலையாமையை சுட்டியபடியே நகர்கிறது அந்த நூல். அடிநாதமாக பொதுத் தன்மையே நின்று நிலைக்கும் சித்தாந்தமென நிரவ முற்படுகிறது. வரலாறு மாற்றி எழுதப்பட்டாலும் நீடித்து நிற்பது அறம் சார்ந்த அரசாட்சியே!

அது நூல் அல்ல ஒரு பாடம் போல இருக்கிறது. அப்பட்டமான முறையில் ஒரிடத்தில் இந்திய துணைக்கண்டம் ஏன் நண்டு தனத்தினாலும், வர்ணாசிராமத்திற்கு அடிமைத் தனம் அடைந்ததாலும் அந்த தேசம் வரலாற்று சுவடுகள் தோறும் வீழ்த்தப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த பதிவு அந்த புத்தகத்திற்கான விமர்சனமாக நீண்டு கொண்டே செல்கிறது. இன்னும் முழுமையாக வாசித்து முடிக்காத நிலையில் அப்படி எழுதுவது அறமாகாது என்பதால் நிறுத்திக் கொள்ளலாம்.

சொல்ல வந்தது எப்பொழுதும் மனித வரலாற்றில் தொடர்ந்து அநீதிக்கும் நீதிக்குமான போராட்டம் நடந்து கொண்டேதான் வந்திருக்கிறது. குட் அண்ட் ஈவில்கான சமநிலை எட்டலில் எந்த கால கட்டத்தில் எந்த பக்கம் அதிகமான நல்ல/கெட்ட எண்ணவோட்டம் அதிகமாக குவிகிறதோ அதன் நீட்சியாக நாம் கண்டுணரும் செயல் பாடுகள் ஒரு சமூகத்துள் பாவி நிரையும்.

அநீதி ஓங்கும் பொழுது எதிர் முனையில் இருப்பவர்கள் சோர்வுற்று இனிமேல் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று ஒதுங்கிக் கொள்ள முடியாது. ஒரு சொட்டு நஞ்சு அற்ற தூய்மையான துளி என்றாலும் அது அடர்த்தியாக உள்ள நஞ்சுக் குடுவைக்குள் செலுத்தப்படும் பொழுது அதன் வீரியம் குறைக்கக் கூடியதாக அமைவதைப் போல ஆங்காங்கே தொடர்ந்து எழுப்பப்படும் அநீதிக்கெதிரான குரல்கள் அவசியம் (அது இன்றைய சிரியா, ஆதிவாசி மது, விழுப்புரம் ஆராயியின் குடும்பம் என்பதாக நீள்கிறது...).

ஆகவே, மக்களே தொடர்ந்து பேசிக்கொண்டே இருங்கள். சிறு துளி பெரு வெள்ளம்.

Thursday, February 22, 2018

திராவிடத்தால் வாழ்ந்தோம்: Impact of Dravida Movement

திராவிட ஆட்சிகாலங்களில் ”அ, ஆ, இ, ஈ...” என்று
பள்ளிகளுக்கு சென்று படிக்க ஆரம்பித்தவர்களுக்கு...

ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். என்னை போன்ற ”இந்தியா 2” (have not) பகுதியிலிருந்து படித்து முன்னேறியவர்களின் அறைகூவலிது. திராவிட இயக்கம் மட்டும் தோன்றாமலிருந்து இருந்தால் இன்னமும் நானெல்லாம் ஏதாவது ஒரு பொட்டல் காட்டில் ஆடு, மாடு மேய்த்து கொண்டிருப்பேன்.

ஹிந்துத்துவா பிள்ளை பிடிப்பவர்கள் என் கையில் ஒரு காவி கொடியை சொருகி அவனை அடி, இவனை பிடி என்று ஏவும் வேலைகளை செய்து கொண்டிருப்பேன்.

எதுவும் அவ்வளவு எளிதாக கிடைத்து விடாதுதானே? அப்படி கிடைத்துப் போனால் அதற்கு பின்னான உழைப்பின் மகிமையை நாம் உணர்ந்திருக்க மாட்டோம் தானே?

அந்த இடத்தை நாம் அடைய நிறைய இழப்புகளை நமக்கு முன்னானவர்கள் அனுபவித்திருப்பார்கள். அதன் பலனை மட்டும் நாம் அனுபவிக்க அனுபவிக்க நம் பாதையின் அருமை மறப்போம்... அப்பொழுதான் இந்த குறளை நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.

உரை: ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.
**********************

வரலாறு வாசிக்கிற நேரம் வந்திருச்சு. மேலோட்டமான திரித்தலுக்கு மீண்டும் பலியாகிவிட்டால் மீண்டு எழ பல யுகங்கள் ஆகலாம். ஆழ சிந்திக்க வாசிப்பு அவசியம். இதுவே தூசி தட்ட சரியான தருணம்.

பிக் பாஸின் நட்ட நடு செண்டர் மய்யம் ஓஆர்ஜி: Maiam

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம்னு ஒளி வெள்ளத்திற்கு கீழே நிற்கும் மாய நட்சத்திரங்களெல்லாம் இன்று ”ஒரு மாதிரி பேராசையில்” கிளம்பி வந்திருக்கிறது. அப்படி ஆசை வரவில்லை என்றால் தான் ஆச்சரியப்பட வேண்டும் என்றாகிவிட்டது.

காந்தி சென்னார் என்று தீவிர நடுநிலை வாதியான கமல் சார் மேற்கோள் காட்டியது, ”மனிதனின் தேவைகளுக்கு வேண்டுமானால் இந்த பூமி தன் வளங்களை வழங்கலாம் ஆனால் பேராசைக்கு வழங்க முடியாது.” இது கமலுக்கே பொருத்தமான ஒன்றுதானே! சரிதான். இவரின் சிறிய வயது ஆசையான நடிப்பு உலகில் தான் ஓர் இடத்தை அடைய வேண்டுமென்று உழைத்து அவராலான அளவில் புகழையும் ஈட்டி திருப்தி அடைந்து விட்டார்.

இப்பொழுது எந்த இசங்களையும் பின் பற்றி மக்களுக்கான பொதுச் சேவை ஆற்ற வேண்டிய நிலையில் இந்த நாடும், நாட்டு மக்களும் இல்லை, வெறும் ஊழலற்ற(?) அரசாட்சி மட்டுமே வழங்கினாலே போதுமானது என்று புதுப் படம் எடுப்பதனைப் போன்று ஒரு கட்சியையும், அதற்கான கொடியையும் ஏற்றி ஸ்ரீப்ரியா, ஸ்நேகன், பரணி, வையாபுரி போன்ற மொழி போராட்ட மற்றும் பொருளாதார மேதைகளை மேடையேற்றி இன்னொரு “பிக் பாஸ்” பாணியில் மக்களாட்சியில் பணியாற்ற தொடங்கி இருக்கிறார்.

இத்தனை ஆண்டுகள் இஞ்ச் பை இஞ்சாக நகர்த்தி இன்று நாம் அடைந்திருக்கும் இந்த ஜனநாயக உரிமைகளை எல்லாம் ஜஸ்ட் லைக் தட் புறந்தள்ளி மின்னும் ஒளி வெள்ளத்தின் கீழ் ஊழலாக சுருக்கி நீட், காவேரி நதி நீர் பங்கீடு, இயற்கை வளங்களை புரட்டி போட்டு சாமியார் வளம் பேணல், ந்யூட்ரினோ திட்டம் என்பனவற்றை புட்டியில் அடைத்து கடலில் வீசி விட்டு மூளைச் சலவை செய்ய எத்தனிக்கிறார்.

யாரை வேண்டுமானாலும் நம்பலாம் ஆனால் தனக்கு நடிப்பு நன்றாக வரும் என்ற ஒற்றை காரணத்தை முன் வைத்து வரலாற்றை மறக்கடித்து கண்ணுக்கு முன்னால் அடைந்திருக்கும் வளர்ச்சிகளை குறுக்கி, மற்றுமொரு பீகாராகவும், உத்திர பிரதேசமாகவும் எல்லா துறைகளையும் பின்னுக்கு இழுத்துப் போக நினைப்பவர்களுக்கு துணை நின்று “மதுரை டயலக்” பேசி ஓட்டு அரசியல் பண்ணி விடலாம் என்று நினைப்பது எந்த விதத்தில் சேர்ப்பது?

மக்களை எந்த அளவிற்கு குறைத்து மதிப்பிட்டிருந்தால் இப்படியான ஒரு “மேனாமினிக்கி” அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு கட்சி தொடங்க ஆசை வந்திருக்கக் கூடும்?

ரசினியும் சரி கமலும் சரி இரண்டும் வேறுவேறல்ல ஒரே குட்டை மட்டைதான். வரலாற்று ரீதியாக, சரியாக இந்தியாவில் தமிழகத்தின் நிலை எங்கிருந்து எங்கு நகர்ந்து வந்திருக்கிறது என்று பிடிபடாத அந்த அப்பாவி மக்களை ஒரு பிள்ளை பிடிப்பவனின் சாதுர்யத்துடன் இவர்களை பிஜேபி உள்ளே நுழைந்து கிடைச்ச வரையும் லாபம் என்ற நோக்கில் சுருட்ட நினைக்கிறது.

இது போன்ற ஒரு சூழல் வந்ததிற்கு இது வரையிலும் ஆட்சி செய்து வந்த கழகங்களே காரணம். தேசிய அளவில் தமிழகத்தின் உண்மையான வளர்ச்சி என்ன அது எப்படி சாத்தியமானது, எது போன்ற போராட்டங்களை முன்னெடுத்து நம்மால் இந்த நிலையை அடைய முடிந்தது போன்ற விடயங்களை கட்சி பாராபட்சமின்றி எடுத்து கொண்டு சேர்க்காததே முதன்மையான காரணம்.

கழக ஆட்சி மட்டும் 1969க்கு பிறகு தோன்றாமல் இருந்திருந்தால் நான் இன்று அடைந்து இருக்கும் இடத்தை இன்னும் இரண்டு பிறப்பு எடுத்தாலும் அடைந்திருக்க முடியாது. என்னை போன்றுதான் இங்குள்ள அரிதி பெரும்பாண்மையான தமிழக மக்களுக்கும் என்றே நினைக்கிறேன்.

இல்லையென்றால் பிகாரிகளும், ராஜாஸ்தானிகளும் உத்திரபிரதேசக்காரர்களும், ஹர்யானகாரர்களைப் போன்றும் நானும் தேடித் தேடி மாமிசம் உண்பவர்களையும், காதலர் தினத்தன்று ஜோடியாக நடந்து செல்பவர்களை சாலையோரத்திலும், உணவு விடுதிகளிலும் ஏன் எதற்கு என்று தெரியாமலேயே அடித்துக் கொன்று போடுபவர்களில் ஒருவனாக ஒரு படிப்பறிவற்ற காட்டுமிராண்டியைப் போல வாழ்ந்து கொண்டிருப்பேன். இந்த வேலையில் என்னை நாகரீக மடைந்தவனாக மடைமாற்றம் செய்த பகுத்தறிவாத முன்னோடிகளுக்கு நன்றி செலுத்தாமல் வேறு எந்த சூழ்நிலையில் செய்வேன்.

இன்னமும் கமல் போன்றவர்களை இத்தனை உயரத்தில் வைத்து அண்ணார்ந்து பார்க்கும் நிலையில் நாம் இருக்கிறோம் என்றால் இன்னமும் நாம் போக வேண்டிய தொலைவு மிச்சமிருக்கிறது என்றுதானே புரிந்து கொள்ள முடிகிறது.

இவர் மிகச்சரியாக அரசியல் செய்ய வேண்டிய இடம் பிகார். கேஜ்ரிவாலை அழைத்துக் கொண்டு அடுத்த பிரதம மந்திரியாக தயாராகிக் கொண்டிருக்கும் யோகி, இன்றைய வாய்ச்சவடால் மோடிக்கு எதிராக பிற மாநிலங்களில் சென்று குறைந்த பட்சம் நாகரீகமாக உலக அரங்கில் முன் நிறுத்தி செல்ல அந்த மக்களுக்குத் தேவையான அடிப்படை கல்வியறிவு, வாழ்வாதரங்களை அமைத்து கொள்ள வகுப்பு எடுக்கட்டும்.

இது தமிழகத்திற்கு தேவையற்றது! இப்பொழுது என்னால் யூகிக்க முடிகிறது இது போன்ற ஓநாய் கூட்டங்களுக்கு இடையே இத்தனை ஆண்டுகள் ஓர் இயக்கத்தை வழி நடத்தி சென்றிருக்க வேண்டுமானால் எத்தனை சாதுர்யம் தேவைப்பட்டிருக்கும். விழித்தெழு!

Wednesday, February 14, 2018

அறநிலையத்துறையை தனியார்மயமாக்குதல் = Deprogressive Move!

கடந்த கால சமூக நீதிக்கு எதிரான விடயங்களை போரட்டாங்களின் வழியாக கை வரப் பெற்ற சமூக நீதி சட்டங்களை மீண்டும் திருத்துவது என்பது நாகரீகமடைந்த ஒரு சமூகத்தை மீண்டும் அந்த கற்காலத்திற்கே எடுத்துச் செல்லுவதற்கு ஒப்பானதாகும்.

அண்மைய காலங்களில் அவசர கோலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக சில மத அரசியல் கட்சிகள் கொண்டு வரும் பிரச்சினைகளின் வீச்சத்தைப் பார்த்தால் அதற்கான முயற்சியாகவே படுகிறது.

என்னவோ ஒரு சமூகத்தினர் மட்டுமே பன்னெடும் காலமாக சமூக சீர் திருத்தத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும், சமூக ஏற்றத் தாழ்வுகளை நீக்கி நாட்டில் பாலாறும் தேனாறும் ஓட உழைத்த உத்தம புத்திரர்களாக தங்களை வரலாற்றில் தூக்கி நிறுத்திக் கொள்ள எத்தனிக்கிறார்கள்.

ஆனால், உண்மை என்னவோ அதே வரலாற்று பாதையில் ஓடும் பேருந்தால் நசுங்கி மாண்ட ஒரு வன விலங்கைப் போல மரணித்துக் கிடக்கிறது

ஒரு நாகரீமடைந்த சமூகம் என்பது நாட்டில் வாழும் அனைவரையும் சமமாக பாவித்து அவர்களை அடுத்த கட்டத்திற்கு கூட்டாக அழைத்துச் செல்வது. அதனைத் தவிர்த்து ஏதோ ஒரு காலத்தில் சொரண்டி தின்று உடல் வளர்த்தோம் என்பதால் இந்த நவீன காலத்திலும் அந்த இத்துப்போன கோட்பாடுகளை நடை முறை படுத்த எண்ணுவது எத்தனை சாபக்கேடு ஒரு சமூகத்திற்கே?

சரி பிரச்சினைக்கு வருவோம். ஓர் இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தினுள் தீ, எந்த பொது இடமாகினும் அங்கே விபத்து நடப்பதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளதுதானே? தீ விபத்து ஏதோச்சையாக நடந்தது என்றே வைத்துக் கொள்வோம், அறநிலையத்துறையும் மெத்தனமாகவே இருந்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்... அதற்காக உடனே அந்த அறநிலையத் துறைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அனைத்து அறநிலையத்துறைக்கு கீழே வரும் கோவில்களையும் தனியார் மயம் ஆக்கி பழைய பஞ்சாங்கப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்த ஒப்படைக்க வழிவகை செய்து கொடுக்க தடி எடுப்பீர்களா?

கோவில் என்பது ஜஸ்ட் ஒரு கோவில் வளாகம் மட்டும்தானா? எதற்காக அந்த காலத்திலயே அத்தனை போராட்டதிற்கிடையே பெரிய கோவில்களை இந்த "அறநிலையத்துறைக்கு" கீழாக ஒரு அரசாங்கம் கொண்டு வந்தது,அந்த துறைக்கு கீழ் வருவதற்கு முன்பாக நாமெல்லாம் அந்த கோவிலுக்குள் நுழைந்து அறிய முடிந்ததா?

அந்த கோவிலின் நிர்வாகம் யாரிடமிருந்தது, அங்கு விழும் காணிக்கைகளை யார் எண்ணினார்கள், எந்த வாசப்படி வழியாக அது யாருடைய காஜானவிற்கு சென்றடைந்தது என்று நமக்குத் தெரியுமா?

ஒரு டேட்டா வந்தது. ஒரு பெரிய கோவில் அது அறநிலையத் துறைக்கு கீழ் வருவதற்கு முதல் வருடம் வெறும் 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமானம் வருவதாக காட்டப்பட்டதாகவும், அடுத்த வருடமே அது 40 லட்ச ரூபாயாக உயர்ந்ததாகவும் அறிந்தோம். அது எப்படி சாத்தியம் மக்களே? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், கடவுளுக்கு வெகு அருகமையில் இருப்பவர்கள் இப்படியாக ஆயிரம் ஆண்டுகளாக கணக்கு காமித்து வந்திருக்கிறார்கள்.

அது மட்டுமா? ஒரு கிராமத்திற்குள்ளாகவே வாழும் மனிதர்களை பிரித்து இவன் உள்ளே வரலாம், வரக்கூடாது என்று பிரித்து ஆண்டதும் நடக்கிறது, நடந்து வந்திருக்கிறது.

இவற்றையெல்லாம் களைந்து ஒரு சமூக சமன் பாட்டை கொண்டு வர எண்ணி உருவாக்கப்பட்டதுதான் "அறநிலையத் துறை." இது எத்தனை பெரிய புரட்சி? சமூக சீர் திருத்த எட்டல்??

இதனையெல்லாம் சீர் படுத்த ஒரு அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து முறைமைப்படுத்துவது எப்படி தவறாகும்? அந்தத் துறை இன்றைக்கு சற்றே சீர் குலைந்து அதனில் நிர்வாகச் சீர் கேடுகள் நடக்கிறது என்றால் உடனே ஊசி காதுக்குள் ஒட்டகத்தைத் திணிப்பது போல மீண்டும் கோவில்களை பழைய சுரண்டலுக்கே தனியார் வசம் ஒப்படைத்து விடுங்கள் என்று சந்தில் சிந்து பாடுவது யார்? எதற்காக?

எது எப்படியோ மக்கள் சிந்திப்பதற்கேனும் இது போன்ற நாகரீகமடைந்த ஒரு சமூகத்தில், இன்னமும் அந்த இடத்திற்கு தங்களை நகர்த்திக் கொள்ள முயற்சிக்காத கயவர்களை அடையாளம் காணவும், இந்த பிரச்சினையை ஒட்டி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்றவுமாவது இது உதவுகிறதே என்ற வகையில் அந்த பொய்யர்களுக்கு இந்த தருணத்தில் ஓர் நன்றி!

Sunday, February 11, 2018

நடுநிலைவாதம் என்ற ஒன்று இருக்கிறதா?

ஒரு காலத்தில நான் நடுநிலைவாதி என்று கூறிக் கொள்வதில் ஒரு வசதி இருந்தது. காலம் போகப் போக காட்சிகள், தேவைகள், அனுபவங்கள், வாழும் சூழல் என்று நம்முடைய அறிதலின்றியே ஒர் சார்பு நிலை நம்மை இயக்கியே வந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.

இன்று எனக்கான சார்பு நிலையை எடுத்துக் கொண்டேன். அதற்கான வலுவான காரணங்களுடன். அது "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற உலக பொது நெறிக்கு பொருந்துமொரு தத்துவ நோக்கில் அமைந்த சார்பு நிலை.

பிழைப்பு வாதத்திற்கென சில நேரங்களில் இந்த நடுநிலை அரிதாரம் மிக்க வசதியாக இருந்து போய்விடுவதுமுண்டு. இதனில் இன்னொரு வகையான மனிதர்களுடனான அதாவது "காலத்தை வாங்கிப் போட்டு திரிதலை கவனிப்பவர்களுடைய" அணுகு முறையுடன் இந்த சந்தர்ப்ப வாத நடுநிலையும் ஊடுருவ வசதியாக இருப்பதால் பிழைப்பு வாத பேச்சுக்களுக்கு இடம் அமைத்து கொடுத்து விடுகிறது.

எதன் பொருட்டும் கருத்து இல்லாத மனிதர்கள் இருக்கக் கூடுமா? இடம், பொருள் வைத்து பேசுவதையன்றி வேறு என்ன நம்மை தடுத்து விட முடியும்?

இல்லன்னா குறள் சொன்ன சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல் நெறியை நடுநிலைவாதிகள் பின்பற்றி வாழ்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாமா? இல்லை கள்ள மெளனம் is being practiced for convenienceகாகன்னு எடுத்துக்கலாமா?

Thursday, February 08, 2018

பக்கோடா பட்டாதாரிகள்: Pakoda Politics!

துணை ஜனாதிபதி வெங்கட்டு நல்ல டாக்டரை பார்க்கச் சொல்லிருவாரோன்னு பக்குன்னு வருது.

ஒரு போஸ்ட் படிச்சேன். அம்பூட்டு மண்டைக்காரனும் அந்த முகாம்லதான்யா அடைஞ்சு கிடக்காய்ங்க.  ஒரு சில வரிகளை அந்த போஸ்ட்ல இருந்து இங்கே கட் அன்ட் பேஸ்ட் செஞ்சுருக்கேன், நமக்கு பேசு பொருளா இருக்கட்டும்னு.

// *மதுரை வீதிகளில் பானிபுரி விக்கிறவன் எல்லோரும் வடஇந்தியர்கள் தான். ஒரு நாளைக்கு குறையாமல் ₹ 2000 க்கு வருமானம் பார்க்கிறான். அவனுக்கு படிப்பறிவே கிடையாது. ஆனால் அவன் பிள்ளைகள் உயர்தர பள்ளிகளில் படிக்கின்றனர்.

மண்ணின் மைந்தன் BE.. BA.. Bsc படித்து விட்டு 5000 ஓவாவுக்கு வேலையை தேடி செய்றான். இல்லாமல் போனால் வேலை தேடி வெளியூருக்குப் போறான்.

ஏன் ? படித்தப் படிப்பை வைத்து இங்கேயே பிழைக்க முடியலே!* //

இதில இருக்கிற உள்பொருளில் இருக்கக் கூடிய முரண் கூட
தெரியாம இதனை ஒரு பேசு பொருளாக எப்படி முன் வைக்க முடியும்?

ஏற்கெனவே ஒரளவிற்கேனும் விழிப்புணர்வுற்று பள்ளிகளுக்கு அனுப்பி தங்களுடைய குழந்தைகளை தன்னை விட ஓர் உயர்ந்த நிலையில் வைத்து பார்க்க வைக்கத்தானே உயர் படிப்பு கடன உடன வாங்கி படிக்க வைக்கிறது.

B.Tech., B.E (ஆயிரத்தெட்டு உட்பிரிகளில் உள்ள துறைக் கல்விகள்), M.Scல (வைரலாஜி, மைக்ரோபயோலஜி, செல் பையாலஜி, வைல்ட்ஃலைப்) லொட்டு லொசுக்கின்னு படிச்சு திரும்பவும் தன்னோட அப்பன் சுட்டுக்கிட்டு இருக்கிற பக்கோடாவை திருப்பி போடவா 23 வருஷம் செலவு செஞ்சு திரும்பவும் அதே  இடத்திற்கு கொண்டு வருவாங்க.

சரி அந்த படிப்பை எட்ட வைக்க எத்தனை கடன் சுமை இருக்கும்? எத்தனை சிரமப் பட்டிருப்பாங்க படிச்சு முடிக்க. ஒரு படிப்பை படிச்சு அதுக்கு தகுந்த மாதிரி வேல வாய்ப்புகளை உருவாக்கித் தர முடியாதது யாரோட தவறு? படித்த துறையில் தன்னோட திறமையை வளர்த்தெடுத்து நாட்டிற்கும், தனது வீட்டிற்கும் கொடுக்கும் வயதில் தெண்டச் சோறு, தடிமாடு என்று திட்டு வாங்கிக் கொண்டு சுவாசித்து திரிவது அத்தனை எளிதா என்ன?

சரி இங்கே ஒரு லாஜிகல் கேள்வி, அந்த பானிபூரி, பக்கோடா விற்கும் படிப்பறிவற்ற வட இந்தியர்கள் தங்களுடைய மாநிலம், கிராமம், மக்கள், மொழி தான்டி ஏன் இத்தனை தொலைவு வந்து ஒரு நாளைக்கு 2000ரூபாய் சம்பாதித்து அந்த பணத்தை கொண்டு என்ன செய்யப் போகிறார்? ஏன் அவர்களின் மாநிலத்தில் வாழ்வாதார வளர்ச்சிப் பணிகள் எங்கே போனது? இதே தமிழர்கள் இருபது வருடங்களுக்கு முன்பு செய்ய ஆரம்பித்த வேலையைத் தானே அதே படிப்பறிவற்ற வட மாநிலத்துக் காரர் தன்னுடைய குடும்பத்திற்கு செய்ய எத்தனிப்பார்: ஒரு வீடு, பிள்ளைகளுக்கு படிப்பு இத்தியாதிகள்.

// *ஒரு காலத்தில் TVS. Madura coats,, Fenner, Sitalakshmi mills, Meenakshi mills,, Thiagarajar mills, Visalakshi milll, மற்றும் ஏராளமாக Powerloom,, Handloom .. சில்வர் பட்டறை தொழில்களென பெருந்தொழில் மற்றும் சிறுதொழில் என கொழித்த மதுரை இன்று எல்லா தொழிலையும் தொலைத்து விட்டு சிரம பூமியாக மாறியுள்ளது.

மதுரை க்காரனுக்கு பொறுப்புணர்ச்சியில்லாமல், தொழில் வளம் பெருக செய்யும் எண்ணம் இல்லாமல், ஜல்லிக்கட்டுக்கு மட்டும் போராடி திருப்தி அடைகிறான்.

விவசாயம் முன்னேற கட்டப்பட்ட வைகை அணை, இன்றைய தினம் குடிநீருக்கு மட்டும் திறக்கப் படுகிறது.
இதனால் விவசாயமும் காலி.
ஆனால் நம்ம தமிழன் தான் விவசாயிக்கு சப்போர்ட் செய்து பேஸ்புக், வாட்ஸ்அப் ல் பொங்குவான்* .//

ஏன் இந்த தொழில்கள் எல்லாம் நலிவடைஞ்சு மூடினார்கள்? குடிநீர் பிரச்சினைக்கான காரணம் என்ன, யார் இதனில் அரசியல் செய்வது? ஏன் மக்கள் சமூக வலைத்தளங்களில் வந்து பொங்க வேண்டும், இந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு எது காரணியாக இருந்திருக்கக் கூடும்? எதற்காக ஜல்லிக்கட்டு ஒரு பிரச்சினையாக மாற்றப்படணும்? எதற்காக மக்கள் தெருவிற்கு வந்து போராடணும்?

அப்போ தண்ணீர் பிரச்சினை, மாநிலங்களுக்கிடையேயான நீர் பங்கீடு, விவசாயத் துறையில் வளர்ச்சி குறித்த முன்னெடுப்புகள் எல்லாம் சிறு பிரச்சினைகள் ஆனால் ஜல்லிக்கட்டு விசயம் முதலில் கையாளப்பட வேண்டியது என்று ஒரு அரசாங்கமே அதனில் கை வைக்க எண்ணியதா?

எதற்காக பக்கோடா விற்ற ஒரு தலைமுறையின் பிள்ளைகள் மீண்டும் இருபது வருடங்கள் கழித்து பக்கோடா, பஜ்ஜி விற்க கடை விரிக்க வேண்டும்? சரி தெருவிற்கு எத்தனை பக்கோடா கடைகள் வேண்டும்?

ஏன்டா இதனையெல்லாம் ஒரு ஆர்க்யூமென்டாக எடுத்துட்டு வாரீங்களே உங்களுக்கெல்லாம் ஏதாவது அடிப்படை அறிவோ அல்லது குறைந்த பட்சம் இரக்கமோ கூட இல்லையா? ஒரு படித்தவன் தன்னுடைய படிப்பிற்கு பிறகு என்னவாக ஆக வேண்டுமென்பது அவனுடைய தேர்வாக இருக்க வேண்டுமே ஒழிய நீங்க சொல்வது போல, எப்படி வயிறு வளர்ப்பதுன்னு நீங்க சொல்லி அவன் செய்யும் நிலையில் இருந்தால் அரசாங்கத்தை இழுத்து மூடி விட்டு நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் முக்கு கடையில் டீ க்ளாஸ் கழுவி, பக்கோட வித்து காமிங்க ஏனைய குடும்பங்கள் தங்களுடைய பிள்ளைகளை B.E., டிகிரியுடன் டீ கடை வைக்க அனுப்புவார்கள்.

நீங்களும் உங்க வாதமும். கடுப்பு டாசா வருது!

Sunday, January 28, 2018

அப்பாவின் நினைவுச் சுவடுகள்!


என் அப்பாவின் வயது 78. எனக்கும் அவருக்குமான உறவு 1986க்கு பிறகு நண்பர் என்ற முறையிலேயே தொடர்ந்தது. அவர் என்னை ஒரு நண்பர் அளவிற்கு உயர்த்திக் கொண்ட பொழுது எனக்கு வயது 18. போன வருட இறுதியில் நான் வட அமெரிக்காவில் மகிழுந்தின் உதவியுடன் ஒரு சாலைப் பயணம் மேற்கொண்டேன். மொத்த தூரம் 4120 மைல்கள். ஒன்பது மாநிலங்களின் வழியாக அட்லாண்டாவில் இருந்து அரிசோனா மாகாணம் வரையிலுமாக அமைந்தது.

அந்த பயணத்தின் திரும்பலின் போது டெக்சஸ் மாநிலத்தில் ஒரு விடுதியில் இரவு பத்து மணிக்கு அவருடைய அலைபேசி அழைப்பு வந்தது. என்றைக்கும் இல்லாத அளவில் அன்று மிகத் தெளிவாக ஓர் ஒன்றரை மணி நேரம் என்னோடு உரையாடினார். எப்பொழுதும் போலவே அது ஊர் பற்றிய செய்தி பரிமாறல்களிலிருந்து சமகால அரசியல் நிலவரம் வரைக்கும் நீண்டது. அதுவே என் மனதில் கடைசியாக அவர் விட்டுச் சென்ற அழுத்தமான உரையாடலாக அமையுமென்று நான் கிஞ்சித்தும் எண்ணவே இல்லை.

அப்பொழுது என்னை கடிந்து கொள்ளும் விதமாக நீ ஊருக்கு வந்து என்னைப் பார்த்து விட்டு இந்த சாலைப் பயணத்தை நிகழ்த்தி இருக்கலாம் என்று கூறியிருந்தார். நானும் வரும் மார்ச் மாதம் போல் வருகிறேன் என்று உறுதி அளித்தேன். மீண்டும் ஜனவரி ஒன்றாம் தேதி என்னை அழைத்து "பிரபாகர், புத்தாண்டு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்தார். எனக்கு மனதுக்குள் என்னவோ பிசைந்தது. ஏனெனில் அம்மா அவரின் உடல் நிலை பொருட்டு சமீப காலமாக கூறி வரும் செய்திகள் கலக்கத்தையே ஏற்படுத்தி வந்தன.

இந்த நிலையில் அவருடைய புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த நிலையில் கொஞ்சமே கரிசனத்துடன் இழுத்து, அப்பா, இந்த வருடமும் அனைத்து வருடங்களை போலவே நல்ல செய்திகளுடன் நகர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன் என்று கூறினேன். அதற்கு ஒரு சிரிப்பு மட்டுமே பதிலாக அளித்தார். இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி திங்கள் கிழமை எந்த முன் அறிவிப்பும் அவருக்கு கொடுக்காமல் காலன் அவர் உயிரைப் பறித்துக் கொண்டான். 

அவரின் மரணம் எனக்கு ஈடு செய்ய முடியா ஒரு பேரிழப்பு. என்னை அலைபேசியில் துரத்தி இனிமேல் யார் அழைத்து பேசுவார் அப்பா! செய்தி எனக்கு கிடைக்கும் பொழுது இரவு மணி 1.30. அவர் இருக்குமிடத்தில் இருந்திருந்தால் இன்னுமொரு பத்து வருடங்கள் கூடுதலாக இருந்திருக்கக் கூடும். ஆனால், செய்தி கேட்ட மாத்திரத்தில், என்னால் எதுவுமே இயக்க முடியாத நிலை. அது ஒரு பெரிய அவஸ்தை! கரம்பக்குடி போன்ற ஊரில் இரவு மருத்துவர்களோ, 24 மணி நேர மருத்துவமனைகளோ இல்லாத ஓர் இடத்தில் எது போன்ற முதல் வைத்தியத்திற்கு பரிந்துரைக்க முடியும். கையறு நிலை! தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு அதிர்ச்சியில் உறைந்து நிற்பதைத் தவிர ஒன்றுமே ஓடவில்லை. 

அடுத்த பதினைந்து நிமிடங்களில் அவரின் மரணம் நிச்சயப்படுத்தப்பட்டது. வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் கொடுக்காமல் நானும் எனது சகோதரரும் கிடைத்த ஃப்ளைட்டில் ஏறி ஊர் செல்வது என்று முடிவாயிற்று. இந்த ஊர் திரும்பல் மூன்று வருடங்களாக நான் அவருக்கு கொடுக்க வேண்டி நிலுவையில் இருந்த பயணம். இப்படியான ஒரு சூழலில் ஊர் திரும்புவேன் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

எனது சகோதரர் என் கூடவே பயணித்ததால் ஒருவருக்கொருவர் சற்றே ஆறுதலாகவும், நிறைய நினைவோடைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஏதுவாக அமைந்தது.

அப்பாவைக் காத்திருக்க வைத்து புதன் கிழமை காலையில் ஐஸ் பெட்டியில் தூங்கிக் கொண்டிருக்கும் கோலத்தில் கண்டோம். அமர்ந்திருக்கும் மக்களுக்கிடையே ஏதேதோ சொல்ல வேண்டுமாய் தோன்றியது. ஹீ வாஸ் எ க்ரேட் மேன், லிவ்ட் வெல். மார்ச் மாதத்திற்கு முன்பாகவே முந்திக் கொண்டாரே என்று அங்கலாய்ப்பதைத் தவிர வேறு வார்த்தைகள் தொண்டையில் சிக்கி முடிச்சாகி விட்டது.

மரணித்த காலை அவருக்கு எப்பொழுதும் போலவே ஒரு சுறுசுறுப்பான காலையாகத்தான் இருந்திருக்கிறது. அவருடைய மொபெட் ரைட், ஊருக்கு தரிசனம், தெருவிற்குள் சென்று சில பேருடனான சந்திப்பு என்று முடித்துக் கொண்டு, அம்மாவிற்கு இட்லி கரைத்துக் கொடுத்து விட்டு அடுத்த பத்து நிமிடத்திற்குள் ஓரிரு தொண்டை செருமல்களுடன் தன்னுடைய பூமியப் பயணத்தை நிறைவிற்கு கொண்டு வந்திருக்கிறார். அவர் ஆசை பட்டது போலவே யாருக்கும் சுமையாக இல்லாமல், நான் எப்பொழுதோ ஏதோ ஒரு சூழலில் எழுதிய இந்த கவிதையைப் போல அவருடைய விடை பெறுதலும் நடந்தேறி இருக்கிறது.

 ...பூப்பதும் காய்ப்பதும் உதிர்வதும்
முப்பருவமெனினும்
உதிர்வதை
கனமற்றதாக்கலாம்
பெரு மரத்து
பறவையொன்றின்
ஒற்றை இறகு
சப்தமற்று
தரையிறங்குவதைப் போல!

அப்பா எங்களை வா, போ என்று அழைக்குமளவிற்கு நண்பர்களாக இருக்க, நம்ப வைக்க எது போன்ற நடவடிக்கைகள் செய்தாய் அப்பா. முப்பது வயது பிள்ளைகளாக வளர்ந்து நின்றாலும் மிதி வண்டியில் வைத்து மருத்துவரிடம் அழைத்து சென்றாயே! அதெப்படி முடிந்தது உனக்கு. நீ அதிகம் பள்ளியில் படித்தவனில்லை. பெரிய வாசிப்பாளனுமில்லை. பின்பு எப்படி இத்தனை ஞான ஊற்று உன்னில் பிரவாகமெடுத்தது, அப்பா!

அப்பா உனக்கு நினைவிருக்கிறதா? நான் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த நிலையில் நீ கூறினாயே ”தம்பி, தோலுக்கு மேலே வளர்ந்திட்ட இனிமே உன்னய தட்டி வளர்க்க முடியாது, உன்னுடைய செயல்களுக்கு நீயே பொறுப்பு” என்று... கல்லூரியில் முதல் வருடம் முதல் நாள் கொண்டு போய் என்னை விட வந்த அன்று விளையாட்டுத் துறை கட்டட வாசலில் அமர்ந்து கட்டிக் கொண்டு சென்ற இட்லி பொட்டலத்தைப் பிரித்து எனக்கும் உனக்குமாக வைத்துக் கொண்டே கண்களில் கண்ணீர் துளிர்க்க சாப்பிட்டாயே ஞாபகமிருக்கிறதா? அப்பா.

முதுகலை முடித்து காடோடியாக நான் வாழ்ந்து ஒரு வெள்ளைக்காரியை மணம் முடிக்க எண்ணி அவளை நம்மூர் அழைத்து வந்து உன்னிடம் அறிமுகப் படுத்தும் பொழுது வீடே எதிர்த்துக் கிடக்கையில் நீ என்னை தனியாக அழைத்துச் சென்று தோள் மீது கை போட்டு, "பிரபாகர், நீ இனிமேல் சிறுவன் கிடையாது நன்கு படித்து, நாலும் யோசிக்கத் தெரிந்தவன், எடுக்கும் முடிவுகள் அனைத்திற்கும் நீயே பொறுப்பேற்று எடுத்து நடத்துவாய் என்பதும் எனக்குத் தெரியும். உன்னை நீயே பார்த்துக் கொள்" என்று விலகி நின்று அழகு பார்த்தாயே அப்பா! எப்படியய்யா அது!

நான் கடந்து வந்த பாதையில் உன் உள்ளத்தை சிதைக்கும் எத்தனையோ இடர்பாடுகளை வழங்கிய போதும் அத்தனை வாசிப்பற்ற நீ உன் வழியாக வந்தவன் நான் என்பதால் என் மேல் அத்தனை ஆதிக்கம் செலுத்தாமல் என் வளர்ச்சி அனுபவ சேகரிப்பின் வழித்தடங்களின் ஓர் ஓரத்தில் நண்பனாகவே மட்டுமே நின்று கவனித்துக் கொண்டிருந்தாய்.

உனது எட்டு வயதில் உனது தகப்பன் பொருளாதாரப் பொறுப்பிலிருந்து நழுவிய பொழுது, அந்த குடும்பத்தை உனது தோள்களில் சுமக்க எண்ணி உனது படிப்பை துறந்தாயே அன்றைய வாழ்க்கை கல்வி தானோ உனது பிள்ளைகளுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று பிரிதொரு நாளில் அனைத்தையும் கொடுத்து தள்ளி நின்று பார்க்க கற்றுத் தந்தது. உனது சக்திக்கும் மேற்கொண்டு ஒரே நேரத்தில் இரண்டு பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்பி கட்டணம் கட்ட தடுமாறிய நேரத்தில், ஒரு நாள் நீ எனக்காக பணம் எங்கோ கேட்டு வாங்கச் சென்ற இடத்தில் கன்னத்தில் அறை வாங்கிப் பணத்தைப் பெற்று வந்ததாக கேள்விப்பட்டேனே அப்பா! அத்தனை நெஞ்சுறுதியா அப்பா உனக்கு.

பிறகு வந்த காலங்களில் லட்சங்களில் நீ புரண்டாலும், பணத்தை வைத்து பணம் பண்ணும் பேராசையோ, சொத்துக்களைக் குவிக்கும் எண்ணமோ இல்லாமல், கொடுத்த இடத்தில் திரும்பக் கூட வாங்கத் தெரியாமலேயே வாழ்ந்து முடித்த பெருந்தன்மை எப்படி உனக்கு கைவரப் பெற்றது, அப்பா.

உனை நான் கொண்டாடுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதிலொன்று உனை வைத்துக் கொண்ட சமூகத்தில் அத்தனை எளிதாக பணம் பண்ணுவதற்காக குறுக்கு வழிகள் இருந்த போதும்,
நீ அந்த வழிகளை நம்பாமல் கடின உழைப்பின் மீது எப்படி இத்தனை பற்று வைத்து உழைத்தாய் என்பதுதான் இன்று வரைக்கும் எனக்கு இருக்கும் ஆச்சர்யம். நீ பழகாத தொழில்தான் என்ன அப்பா!


நீ உழைத்த உழைப்பு உனது குடும்பத்தை மட்டும் மாற்றியமைக்கவில்லை, உனது சுற்று காற்று பட்ட தூரங்களிலெல்லாம் அந்த “தூய விதை” விழுந்து பரிணமித்ததை நல்ல கண் கொண்டவர்கள் உணர்வார்கள். அதுவே உனது பிறப்பிற்கு நீ அளித்துக் கொண்ட கெளரவமென நான் எண்ணுகிறேன்.

நீ மரணித்த வாரத்திலேயே ஒரு நாள் என்னிடம் உன்னுடைய வாழ்க்கையைப் பற்றி யாராவது எழுதுபவர்களிடம் சொல்லி அதனை புத்தகமாக்க வேண்டுமென்று கூறினாயே, அதற்கு கூட நான் கடிந்து கொண்டேனே, அதனை நான் செய்ய மாட்டேனா என்று... அந்த புத்தகத்தை நீயே வாசிக்கும் வரைக்குமாவது வாழ்ந்திருக்கலாமே அப்பா.

உன்னுடைய அமெரிக்கா நாட்களில் உனது நீண்ட கால ஆங்கிலம் பேசி புழங்க வேண்டிய ஆசையும் நினைவுருவாக்கம் ஆனதே ஞாபகமிருக்கிறதா? உன்னுடன் ஒரு ஸ்பானிஷ் மங்கையொருத்தி கை கோர்த்து நடனமாடிய பொழுது வந்த அத்தனை வெக்கத்தையும் எங்கே அப்பா ஒளித்து வைத்திருந்தாய்! 

என்னுடைய அனைத்து நண்பர்களுக்கும் நீ ஒரு பொறாமைக்கான அப்பா என்பது தெரியுமா உனக்கு? அனைத்து வயதினருடனும் மிக இயல்பாக எப்படி உன்னால் புழங்கித் திரிந்திருக்க முடிந்தது? உனது இறுதி விடை பிரிதலுக்கான நாளில் உன்னுடைய பல நண்பர்களை, பல பிரிவுகளிலிருந்தும் வந்திருந்தார்கள். அவர்கள் உனை அப்பாவாகவும், அத்தாவாகவும், மாமாவாகவும், செட்டியாராகவும், அண்ணாமலையாகவும் விளித்துக் கொண்டு அவரவர்களும் தங்களுக்கான தனித்துவமான கதைகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். விக்கித்து நின்றேன். உன் நிழல் படாத எளிய மனிதர்களுக்கு குறைச்சலே இல்லை அப்பா. உன் வாழ்வுப் பயணத்தில் நீ நிறைய மனிதர்களை சேகரித்திருக்கிறாய்.

நீ மரணிக்க வில்லை அய்யா! உன் நினைவுச் சுவடுகள் எங்கள் மனங்களில் இருக்கும் வரையிலும் நீ உயிர்ப்புடனே உள்ளாய். 

எனக்கு எப்பொழுதுமே ஓர் எண்ணமுண்டு. மனித வாழ்வென்பது நன்றாக சுகித்து, சுவைத்து வாழ்ந்து முடிக்க வேண்டியதொரு மாபெரும் பயணச் சாலை என்றும் மரணிக்கும் நொடிகளில் கண் திறந்து “வாட் எ ரைட்” என்றழைத்து கண் மூடிட வேண்டுமென்று நினைப்பதுண்டு. அந்த எண்ணம் உன் வாழ்க்கைப் பயணத்தைப் பின்னோக்கி செலுத்திப் பார்க்கும் பொழுது எத்தனை உண்மையென்று எனக்கு இன்று புலப்படுகிறது. நீ நன்றாக அழுத்தமாக வாழ்ந்து சென்றிருக்கிறாய்.

அவரைப் பற்றி நினைவு கூறுவதென்றால் என்னுடைய அனைத்து நடவடிக்கைகளிலும் அவருடைய சாயல் படிந்திருப்பதனைக் கொண்டே என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

Related Posts with Thumbnails