Wednesday, November 07, 2018

வியக்க வைத்த டாக்டர் கலைஞர்: A rare of a kind


ஓர் அதி சிறந்த மூளையால் என்ன செய்து விட முடியும்? சமூகத்தில் நிகழும் ஏற்றத்தாழ்வுகளை, அதன் தேவைகளை நுட்பமாக அவதானிக்க முடியும். அதற்குப் பிறகு மிகக் கடுமையான உழைப்பிற்குப் பின்னால் தன்னை படிப்படியாக நகர்த்தி ஒரு சமூகத்தையே எதிர் காலத்தில் புரட்டிப் போடும் திட்டங்களை 18 மணி நேர கடின உழைப்பின் பேரில் திட்டம் தீட்டி அதனை மனதிற்குள் அடைகாத்து வைத்து தனக்கு கிடைக்கும் சொற்ப காலத்திற்குள் அதற்கு செயல் வடிவம் கொடுக்கும்.
ஆனால், அதற்கும் ஏகப்பட்ட தடைக்கற்கல் போடப்படும் நேரடியாகவும்மறைமுகமாகவும் என்பதனை மறந்து விடக் கூடாது. எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா? தொலை நோக்கு பார்வையோடு பரந்து பட்டு எல்லா மனிதர்களுக்கும் சென்றடையும் திட்டங்களை இயற்றும் எந்த ஒரு தலைவனும் நிகழ்காலத்தில் அதிகமாக வெகுஜன மக்களை சென்றடைவது கிடையாதே அது ஏன்? என்று கேள்வி கேட்டுக் கொண்டதுண்டா?
மேம்போக்கான மனிதர்களை சென்றடையும் "லாலிபப்" திட்டங்கள் ஓர் உடனடி நிறைவுத் தன்மையை எட்டி, அதனை விட இன்னும் பெருமளவிலான திட்டங்களை எட்டுவதை மட்டுப்படுத்துவதற்கான ஒரு கால விரைய தலைவர்களை கொண்டு சமூகத்தையே பின்னோக்கி இழுத்து பிடித்து வைத்திருக்கவும் முடியும் என்பதையும் நாம் உணர வேண்டும்.
அதுதான் புர்ச்சி தலைவரும், தலைவியும் செய்த அரசியல். இன்றைய எடுபுடி தலைவர் அளவிற்கு தரம் தாழ்ந்து விடாமல் இருக்க அந்த புர்ச்சி தலைவர்களை, அந்த நுட்பங்களை உணர்ந்த அதி மூளை, அவர்களை பாதையில் கொஞ்சமேனும் ஒட்டி நடக்க வழி நடத்தி இருக்க முடியும் என்பதையும் நாம் உள்வாங்கி கொள்ள வேண்டும்.
ஏனெனில் நீங்கள் ஒரு நிழல் அரசாங்கத்துடன் சமரிட்டுக் கொண்டே உங்களுடைய இலக்கை அடைய முயற்சிக்கிறீர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.
இத்தனை சூழ்ச்சிகளுக்கிடையிலும் தன்னை தக்க வைத்துக் கொண்டு ஓரளவிற்கு இன்று நீங்கள் இருக்குமிடத்திற்கு நகர்த்தி வைத்திருக்க உதவிய அந்த அதி சிறந்த மூளைதான் கலைஞர்.
உதாரணத்திற்கு, அவரால் சிந்தித்து ஆசியாவிலேயே ஒரு சிறந்த கால் நடைகளுக்கான ஆராய்ச்சி மையத்தை, தமிழுக்கான ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தை, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரிகள் என அடிப்படை கட்டுமானத்தை உருவாக்கித் தரத்தான் முடியும்.
அதனை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வது என்பது, அவரின் தொலை நோக்குப் பார்வையை உள்வாங்கிக் கொண்ட மக்களாகிய நம்முடைய பொறுப்பு.
வாட்சப் மட்டுமே ஜர்னல்ஸ், என்சைக்ளோபீடியா, அரசியல் திறனாய்வுக் கட்டுரைகளை வழங்கும் மாபெரும் வாசிப்பிற்கான ரிசோர்ஸ் என்று கருதி, பொய் பரப்புரைகளுக்கு தானும் இரையாகி அடுத்தவர்களையும் இரையாக்க தூண்டுவது அறியாமையின் உச்சம்.
அது அரசியல் அரிச்சுவடியே இன்னும் கையில் ஏந்தவில்லை என்பதற்கான லிட்மஸ் என்பதாக புரிந்து கொள்கிறேன்.

0 comments:

Related Posts with Thumbnails