Monday, January 21, 2008

*ஒன்பது ரூபாய் நோட்டு* - எல்லோரும் கிழித்த பிறகு...

சக பதிவர்கள் நிறைய பேர் தங்கர் பச்சானின் "ஒன்பது ரூபாய் நோட்டை" கசக்கியும், கிழித்தும் எரிந்த பிறகு ரொம்பவே யோசித்து விட்டு என் கிழிப்பை இங்கு தொடர்கிறேன்.

அண்மையில் நம்ம சேவியர் உண்மையாக எப்படி அந்தப் படத்தின் கருத்தினை வைத்து படத்திற்கு பெயர் வைக்க வேண்டுமோ அந்த டைட்டிலுடன் ஒரு பதிவு எழுதியிருக்கார் "ஒன்பது ரூபாய் நோட்டு : மாதவனாய் வாழாதே" எனக்கும் அந்தப் படத் தலைப்பு சரி என்றே படுகிறது.

அந்தப் படம் எடுக்கப் பட்ட விதமும், வழங்கப் பட்ட நேர்த்தியும் அப்படியே அந்த கிராமத்தில் வாழ்ந்ததனைப் போன்றிருந்தது என்றால் மிகையில்லை.

எங்கோ ஓர் இடத்தில் அந்தப் படத்தில் தேவையில்லாத கூச்சல் இருந்ததென்று நேராகவே தங்கரிடத்தில் யாரோ கேட்டதாகவும், அதற்கு அவர் எங்களூர் கிராமத்தில் அப்படித்தான் இரைந்து பேசுவார்கள் என்று கூறியதற்கு, நம்மவர் ரஷ்யாவில் எடுக்கும் கலை படங்களில் எல்லாம் அப்படி இல்லையென்று கூறாமல் கூறிவிட்டு, ஏதோ ஒரு "கம்யூனிகேசன் கேப்" இருப்பதாக கூறிவிட்டு நகர்ந்து விட்டாராம்.

இன்னமும் கிராமங்களில் இந்த குழாய் ஒலி பெருக்கி அரசாங்க தடுப்பில் இருந்தாலும் எவன் வீட்டு சாவா இருந்தாலும் சரி, இல்ல விநாயக சதுர்த்தியாக இருந்தாலும் சரி, இல்ல நாலு மோடு முட்டிகள் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுகிறேன் என்று கத்தி உயிரோட இருக்கிற கிழங் கட்டைகளை சீக்கிரம் ஊருக்கு அனுப்புவது போல ஒலி பெருக்கிகளை கட்டி வைத்து கும்மியடித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள். இந் நிலையில் கிராமப் புறங்களில் எந்தளவிற்கு "ஹஸ்" வாய்ஸ்ல் பேசிக் கொள்ள நாம் பழகி வருகிறோம் என்பது விளங்கும்.

சரி, இப்ப விசயத்துகுள்ள போவோம். சேவியர் அந்தப் படத்திற்கான சில சினிமாத் தனங்களை அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார். படம் நம் எதிர் பார்ப்பிற்கு தகுந்தால் போல நகர வில்லைதான். ஒத்துக் கொள்ள வேண்டிய விசயம். தனிப்பட்ட மனித எதார்த்த வாழ்வில் எந்த வாழ்வுதான் எதிர் பார்த்த ஓட்டத்தில ஓடித் தேய்கிறது? எத்தனை பேருடைய வாழ்வோ தான் எடுக்கும் சிறு, சிறு தவறான முடிவுகள் கடைசி வரையிலுமே தவறாக நடந்தே முடிவது போலாகிவிடுகிறது. அதனை அந்த முடிவு எடுத்தவரும் புரிந்து கொள்ளாமலே அந்த ஓட்டம் ஒரு முடிவுக்கு வருவதில்லையா?

இந்தப் படத்தில் அப்படி ஒருவர், தான் எடுத்த வறட்டு முடிவுகளால் 'அவர்' ஒரு அனாதை பிணமாக வீழ்ந்து கிடப்பதனை போலவே காட்சியமைத்ததனைக் கொண்டு படத்தின் முழு வீச்சத்தையும் உள் வாங்க முடியவில்லையா?

அந்த நிலையிலேயேதான் அந்தப் படத்திலுள்ள மாதவரின் குணச்சித்திரமும் வழங்கப்பட்டுள்ளாதாக நினைத்து அந்தப் படத்தினை முழுமையாக என்னால் உள்வாங்க முடிந்தது.

கீழே உள்ள பின்னூட்டம் சேவியரின் பதிவுக்கு இட்டது. இங்கயும்.

...மாதவனாய் வாழ்ந்தது சேவியர், ஒரு கேடம்பக்கத்து சினிமா கதையாசிரியன் அல்லவே!


ஒரு கிராமத்தில் ஒரு சாதாரண வறட்டு கொளரவத்துடன் வாழ்ந்த ஒரு மனிதனின் கதைதான். அவனுக்கு வாழ்வியல் சார்ந்து எது சரி, எது தவறு என்று எண்ணக் கிடைக்கிறதோ அதனை அப்படியே செய்து வைக்கிறான்.

இந்தக் கதையின் மூலமாக இரு பக்கமாகவும் கருத்தினை எடுத்துக் கொள்ளலாம் 1) பெரியவர்கள் சிறு பிரச்சினைகளுக்காக இப்படி ஒரு முடிவு எடுப்பது சரியல்ல, மற்றும் வளர்ந்து வளரும் குழந்தைகளின் தேவைகளை புரிந்து கொள்வது அவர்களின் கடமை 2) வளரும் குழந்தைகள் வயதானவர்களின் முக்கியத்துவம் அறிந்து கொடுக்கும் மரியாதையை கொடுக்க வேண்டுமென்பது. இப்படியாகவும் எடுத்துக் கொள்ளலாம் தானே.

கேடம்பாக்கம் பாணியில் எடுத்தால் நமக்கு வேண்டியது மாதிரி கதையை எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த படமே ஒரு உண்மைச் சம்பவத்தை வைத்துத்தான் எனும் பொழுது, ஒரு மனிதன் சில விசயங்களை உணராமலேயே இறந்து விடுவதில்லையா அது போலத்தான், மாதவரும் நிறைய விசயங்களில் காம்ப்ரமைஸ் பண்ணிக் கொள்ளாமலேயே இறந்து விட்டார்.

அதற்கு உ.தா: //மகனை எழுப்பி வாழ்க்கை என்பது உணர்வுகளில் தான் என அவனை அரவணைத்து அவனுடைய வாழ்க்கையில் சற்று ஆனந்தத்தையாவது அளிக்கவில்லை மாதவர்.//

நீங்கள் கூறிய படியே எனக்கும் அந்த அவா எழுந்தது அந்தக் காட்சியைக் காணும் பொழுது. ஆனால், மாதவரான அந்த மனிதனுக்கு தன் மனம் அப்படிச் செய்ய உந்துதல் அளிக்க வில்லை. அங்குதான் நானும், நீங்களும், மாதவரும் வித்தியாசப் படுகிறோம் என்பதனை உள்ளது உள்ளபடியே கூறியிருக்கிறார், இயக்குனர் என்று நினைக்கிறேன்...

Thursday, January 10, 2008

யோகா சார்ந்து *பாரி.அரசுக்கு* சில எண்ணப் பகிர்தல்கள்!!

போன வருஷம் நான் "மருத்துவரே வேண்டாம் - *யோகா* செய்யுங்கள்" அப்படிங்கிற தலைப்பில ஒரு பதிவு போட்டிருந்தேங்க. அதுக்கு நம்ம முக்கியமான தலைகள் எல்லாம் வந்து இப்ப என்னய போட்டு கும்முறாங்க. அதிலும், குறிப்பா நம்ம பாரி.அரசு இந்தக் கலையை செய்து கொண்டே எனக்கு தடகள உடற் பயிற்சிக்கும் இந்த யோகாவிற்கும் அவ்வளவு பெரிய வித்தியாசம் தெரியலைன்னு வந்து சொல்லிட்டார்.

நான் இந்தப் பதிவிற்கு சொந்தக் காரன் என்பதால் அதற்கு பதிலுரைக்கும் நிலையில் இருக்கிறேன். இருந்தாலும், இதன் பலன்களை இன்னமும் நிறைவாக தெரிந்தவர்கள் வந்து இங்கே தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன். இரு தரப்பினரும் வருக! ஆதரவு தருக!!

கீழே பாரியோட பின்னூட்டங்க...

பாரி.அரசு said...

......ஒரு அற்புதமான பதிவுக்கு வாழ்த்துக்கள் தெகா!

நான் 10 ஆண்டுகளுக்கு மேலாக யோகா செய்து வருபவன் என்கிற முறையில்...

யோகா ஒரு உடற்பயிற்சி முறை அது இந்திய சூழலில் உருவானது என்பதை தவிர வேறுவிதமான கற்பனை வாதங்கள் தேவையற்றது.

உடற்பயிற்சி என்பது ஆரோக்கியமான உடலுக்கு தேவை, அதை தவிர யோகா செய்வதால் எல்லாவிதமான நோயும் குணமடையும் என்பதெல்லாம் பொய் என்பதோட மட்டுமல்லாமல்...


ஒழுங்கற்ற உடல் இயங்கியல்(disorder) எனப்படும் மருத்துவ சவால்களை யோகா வால் எதுவும் செய்ய இயலாது.

புறப்பொருட்களால் ஏற்படும் (diseases) யோகா செய்வதால் காப்பாற்ற இயலாது.

இப்படி பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம்.

ஆரோக்கியமான உடல் தேவையென்றால் உடற்பயிற்சி அவசியம் அதை வலியுறுத்துங்கள்.
யோகா - இந்திய சூழல் என்றால்
நீச்சல் - ஐரோப்பிய நாடுகளில் அற்புதமான உடற்பயிற்சியாக இருக்கிறது குறிப்பாக ரஷ்யர்கள்.

மரபு சண்டை பயிற்சி கிழக்காசிய நாடுகளில் முக்கிய மன, உடல் பயிற்சியாக இருக்கிறது (சீனா,கொரியா,ஜப்பான்)

யோகா வால் சக்தி கிடைக்கும் (ஒரு புண்ணாக்கும் கிடைக்காது) என்பதெல்லாம் வெறும் கற்பனை! .....

Thursday, January 10, 2008.


அதுக்கு என்னோட பதில ஒரு பின்னூட்டமா நினைச்சித்தான் எழுத ஆரம்பிச்சேன் அது முடியறாப் போல தெரியல உடைச்சிட்டேன் இரண்டாவது பகுதியா. அதுதான் கீழே...

வாங்க பாரி.அரசு,

தாமதமாக வந்தாலும், சூடாக வந்து கொடுத்திருக்கீங்க எனக்கு ஒண்ணு ;).

சில விசயங்களில் உங்களோட நான் ஒத்துப் போகிறேன் என்றாலும், பல விசயங்களில் எழுந்து நிற்க வேண்டியுள்ளது.

ஒவ்வொன்றாக இப்பொழுது பார்ப்போம்.

1) ஒழுங்கற்ற உடல் இயங்கியல்(disorder) எனப்படும் மருத்துவ சவால்களை யோகா வால் எதுவும் செய்ய இயலாது.

நீங்கள் கூற வருவது உடல் சார்ந்த வியாதி முற்றிய நிலை என்று வைத்துக் கொள்வோமா? அதாவது, புற்று நோய், எய்ட்ஸ் போன்ற வியாதிகள் அதுவும் ஒருவரை ஏற்கெனவே பீடித்து முற்றிய நிலையில் அதற்கு கண் கண்ட மருத்துவ முறையாக இந்த கலையை பயன் படுத்த முடியாதுதான்.

இருப்பினும், இந்த இரத்த கொதிப்பு, சுவாச சம்பந்தமான முதல் நிலை இருப்பில் இவைகளை கட்டுக்குள் வைக்கும் பொருட்டேனும் அதன் பிற்கால அவதரிப்புகளான, டாயபெடிஸ், ஆஸ்த்மா போன்ற முழு நிறைவடைந்த வியாதி நிலைகளிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளலாமல்லவா?

இரத்தக் கொதிப்பே 'ஒருவன்' எப்படி தினசரி வாழ்க்கையில் பிறரிடம் நடந்து கொள்கிறானென்பதனை தீர்மானிக்கும் வல்லமையுடையது. அப்படி இருக்கும் பட்சத்தில் பெரும்பாலான இந்த யோகா பயிற்சிகளில் நாம் உடம்பை மட்டுமே முறுக்க வில்லை, அப்பொழுது நாம் சுவாசிக்கும் முறையையும் கவனத்தில் கொள்கிறோம், இல்லையா?

கோபம் தலைக்கேறும் பொழுது நம் முகம் சிவத்து விடுகிறது, மூச்சும் தாருமாறாக எகிறுகிறது அப்பொழுது அங்கே என்ன நடக்கிறது, பாரி? இப்பொழுது நீங்கள் பத்து வருடங்கள் யோகவினை செய்து வந்திருக்கிறீர்களென்றால் முறையாக, கண்டிப்பாக இவையனைத்தும் உங்களுக்கு இந் நேரத்தில் உங்களையுமறியாமல், அதன் தாக்கம் உங்களுக்கு பலனளித்துக் கொண்டுள்ளது என்றே கொள்ளலாம். உங்களுக்கு அடிக்கடி ஜலதோசத் தொந்திரவு முன்புள்ளது போல இப்பொழுது உண்டா? இல்லையெனில், என்ன நடந்திருக்கக் கூடும், உங்கள் உடல் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை தருவித்துக் கொண்டிருக்க இந்தப் பயிற்சியும் உதவி செய்ததாக எடுத்துக் கொள்ளலாம்.

அதே நோய் எதிர்ப்பு சக்தியும் ஒரு பாசிடிவான நிலையில் தன்னை சிறிதே ஆசுவாசப் படுத்திக் கொண்டு தன் சிந்தனையை ஒரு முகப் படுத்தும் பொழுது, மேலும் மனம் தனக்குத் தேவையான சக்தியை பன்முகமாக தருவித்துக் கொடுக்கிறது. இது போன்ற மனப் பயிற்சி தடகளத்தில் பரவலாக இல்லைதானே?

அதற்குச் சான்றாக எய்ட்ஸ் நோயாளிகளில்... எய்ட்ஸ் நோயாளிக்கு முக்கிய பிரச்சனை நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து கொண்டே போவது...யோகாவினால் இந்த எதிர்ப்பு சக்தி அதிகமாகி நோயாளிகளுக்கு CD4 count ஜாஸ்தியாவது அனைவராலும் ஒத்துக்ககொள்ளப்பட்ட ஒன்று... இது வியாதியை குணமாக்கா விட்டாலும் நோயாளி சந்தர்ப்பவாத நோய்களில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள பயன் படுகிறது, இல்லையா? (நன்றி: மங்கை)

இது போன்ற வியாதி முற்றிய நிலையிலேயே உள்ள ஒருவருக்கு அதிக உடல் உழைப்பு தேவையில்லாது சிறிய, சிறிய மூச்சுப் பயிற்சிகளினாலும், சிறிய உடல் முறுக்கேற்று பயிற்சிகளினாலும் இதனைப் பெற வைக்க முடியுமென்றால்... நீங்கள் கூறிய அயற்சியூட்டக் கூடிய நீச்சல் பயிற்சி, தடகள உடற் பயிற்சிகளை எப்படி அவர்களுக்கு நாம் பரிந்துரைக்க முடியும், பாரி?

உடல் வியாதி முற்றிய நிலையில் ஒரு நோயாளி வியாதியிலிருந்து முழுமையாக குணமடைகிறாரோ இல்லையோ அவருக்குத் தேவை ஆறுதலும், பாசிடிவ் எண்ணங்களும் பெரும் பங்காற்றக் கூடும் தன்னை எழுந்து நிற்க வைக்க (மன ரீதியாகவேணும்)... அதனை இந்த யோகா சிறப்பாகவே வழங்குகிறது.

எனக்குத் தெரிந்தே நூயொர்க் நகரத்தில் வீடு இல்லாமல் தெருவோரங்களில் வசிக்கும் ஒரு ஐம்பது பேரைக் கொண்டு ஒரு ஆராய்சி நடத்தப் பட்டது. அவர்களில் நிறைய பேருக்கு எலும்பு மூட்டு (arthiritis) மற்றும் மன ஆரோக்கியம் சார்ந்த நோய்கள் இருந்தன. அவர்களை இரு பிரிவாக பிரித்து ஒருவருக்கு அலோபதி மருத்துவமும், மற்றொரு பிரிவினருக்கு இந்த யோகா பயிற்சியும் வழங்கப் பட்டது.

இதில் முதல் குரூப்பில் இருந்தவர்கள் உடனடி நிவாரணம் பெற்றது போல ஆரம்பித்த காலத்தில் இருந்தாலும், மீண்டும் அந்த சிகிச்சை முறையை விட்டவுடன் அவர்கள் அதே நோயால் பீடிக்கப் பட்டனர்.

ஆனால் இரண்டாவது குரூப் மெதுவாக அதன் பலனன ஈன்ற பெற்றாலும், ஆர்த்ரடிஸ், இரத்தக் கொதிப்பு சார்ந்த உபாதைகள் மற்றும் மன நலத்தில் நல்ல முன்னேற்றம் கண்டு சிலர் அது போன்ற வாழ்க்கை முறையையே கைவிட்டுவிட்டு நல்லதொரு வாழ்வை அமைத்து கொண்டதாக அறியப் பட்டேன்.

இப்பொழுது இந்த இரண்டாவது குரூப்பிற்கு என்னாயிற்று? அவர்களின் தினப்படி பழக்க வழக்கங்கங்களில் சில மாற்றங்களை திருத்தி அமைத்தார்கள். உதாரணமாக, ஒருவர் எழுந்து அமர்ந்தவுடனே, சரியாக அமரும் ஒரு முறையையும், சரியாக சுவாசிக்கும் ஒரு விசயத்தையும் மனத்தை அதன்பால் குவித்து கவனமாக செய்யும் பொழுது, இரத்த ஓட்டமும், சுவாசமும் சரியாக நடைபெறும் பட்சத்தில் அதனையொட்டிய எண்ணவோட்டமும் சீரடைய வாய்ப்புண்டல்லவா? இதற்கு எதற்கு வியர்வை சிந்த வேண்டும்?

இரத்த ஓட்டமும், சுவாசமும் முறைப்படி நடைபெறும் பொழுது தினப்படி நாம் சேகரிக்கும் இந்த மன அழுத்தத்தை அதன் போக்கிலேயே வந்த வழியிலேயே அனுப்பி விட முடியுமென்பது எனது எண்ணம்.

அது போலவே நிறைய சைக்கோலாஜிகள் டிஸ்ஸர்டர்களுக்கு, சில யோக முறைகளும் பரவலாக இப்பொழுது மேற்கத்திய நாடுகளில் 'குணப்படுத்தக் கூடிய தெரபிகளில்" ஒன்றாக சேர்த்துக் கொள்ள ஆரம்பித்தாகி விட்டது.

பாரி, உதாரணமாக உங்களுக்கு 45 வயதாகியும் இன்னமும் கொலஸ்டிரல் மற்றும் இரத்தக் கொதிப்பு தலை வைத்து படுக்க வில்லையென்றால், மறைமுகமாக உங்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ நீங்க செய்யும் அந்த யோகாவும் ஒரு காரணமென்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மற்றபடி தடகள உடற் பயிற்சிக்கும், யோகாவிற்கு நிறைய வேறுபாடுகளுண்டு. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்... இப்போதைக்கு இது போதும். பின்னூட்டங்களிலும் மேலும் பேசுவும். நன்றி! வணக்கம்!!

Related Posts with Thumbnails