Friday, June 30, 2006

ஐயப்பன் சாமியும் "தீட்டுப்" பெண்களும்...

இது சம்பந்தமான எனது தெளிவினை இங்கு ஆங்கிலத்திலும் இட்டு வைத்திருக்கிறேன், அன்பர்கள் என்னை தவறாக கணிப்பதற்கு முன்பு அங்கும் சென்று வந்து விட்டு விடுங்கள். நன்றி!

இப்பொழுது செய்திக்கு போவோம்...

இது ரொம்ப நாட்களா எனக்கு பிடிபடவே இல்லை. நான் சின்ன பையனா இருக்கிறப்ப, எங்க பார்த்தாலும் நிறைய ஆத்மாக்கள் திடீர்னு மகாத்மாவ ஆயி காவி வேஷ்டியும் நெத்தி நிறைய சந்தனப் பட்டையுமா திரியறதைப் பார்க்கிறது உண்டு. ஆனா, ஆண்கள் மட்டும்தான் அந்த ஆட்டத்தில சேர்த்தி, பெண்களுக்கு கிடையாது, ஏன்னு கேட்டேன் அப்ப சொன்னப்ப புரியல (தீட்டு அது இதுன்னு... இப்பவும் கூடத்தான்).

இதிலென்ன இன்னொரு முக்கியமான விசயமுன்னா பட்டை (இந்த பட்டை அந்தப் பட்டை இல்லைங்கோவ்..) அடிக்கிற ஆசாமிகள் எல்லாம் அத நிறுத்திப் புட்டு நல்ல புள்ளையா சங்கதியா நேரம் தவறாம சாப்பிட்டு குளிச்சு என்னன்னமோ செய்வாங்க, அந்த நேரத்திலே (இப்போ ஐயப்பன் சாமீ கொஞ்சம் அது மாதிரியான ரூல்ஸைக் கூட தளர்த்திக்கிட்டு வாரதா கேள்வி). எப்படியோ நல்லா இருந்தா சரி!

வந்த விசயத்தை விட்டுப்புட்டு நான் எதையோ பேசிகிட்டு இருக்கிறேன். நேத்தைக்கு ஒரு செய்தி யாரோ ஒரு கன்னட நடிகை ஐயப்பா சாமியை சபரிமலையில வைச்சு தொட்டு கும்பிட்டு தீட்டு பண்ணிப்புட்டாராம்.

இப்போ ஐயப்பன் டென்ஷன்ல ஆம்பிளை பக்தர்களை பார்த்து இதெல்லாம் அதட்டி உருட்டி கேட்க மாட்டீங்களப்பா அப்படின்னு கேட்டதற்கு, நம்ம ஆளுங்க சாமி சார்பா, சாமீயை இந்தம்மா தீட்டு பண்ணிப் புடுச்சு அப்படின்னு சொல்லி கோர்ட்ல கேஸ் எல்லாம் போடப் போறதாக் கேள்வி.

அது சரி, இது என்ன சாமீ ஆம்பிளைக்கு ஒரு ரூல்ஸ் அப்புறம் பெண்களுக்கு ஒரு ரூல்ஸ் வைச்சுருக்காரு... இது என்னிக்காவது பிரட்சினையாகப் போகுதுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன், இந்த அம்மா அதத் தொடங்கி வைச்ச மாதிரி இருக்கு இப்போ. இந்த பெண் உரிமை மீறல் அது இதுன்னு என்னமோ சொல்லிக்கிட்டு இருக்கிற அம்மாக்கள் எல்லாம் என்ன பண்ணப் போறங்க இந்த விசயத்திலே பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

இங்கு கூட இதனைப் பற்றி பேசி வருகிறார்கள்...

Monday, June 19, 2006

இதோ எனது ஆறு...

என்னை ஆறுடன் இணைத்த நாகை சிவாவிற்கு நன்றிகளுடன் எனக்குப் பிடித்த ஆறுகள் இங்கே...

I பிடித்த ஆறு மனிதர்கள்:

* பயணத்தின் பொழுது அருகே அமர்ந்திருக்கும் எவரும்...

* சட்டை போடத எங்கள் ஊர் ஊமையன் (பெயரளவிற்கு)...

* எனது நல்ல நண்பர்களாகிப் போன அப்பாவும், அம்மாவும்...

* எனது குட்டி நண்ப-மகன்...

* வாழ்கையை நிஜமாக வாழும் எவரும் (உள்ளொன்று வைத்து புறமொன்று)...
* போரட்டமே வாழ்வாக வாழ்ந்து இப்பொழுதும் ஜெயிக்கத் துடிக்கும் எந்த மனிதர்களும்...

II பிடிக்கமலேயே(பிடித்து) செய்து வருவது:

* கண், காது போலவே இப்பொழுது ஒட்டிக் கொண்டு திரிய எத்தனிக்கும் செல் ஃபோன்...

* பெட்ரோல் போடும் பொழுது என் வாகனத்தின் மீது ஏற்படும் வெறுப்பு...

* சாரை சாரையாக போகும் கார்களுக்கிடையில் மாட்டிக் கொண்டு நெளிவது...

* வீட்டினுள் தமிழ் சப்தம் கேட்பதற்கென இருக்கும் சன் ட்டி.வி...

* வீட்டிற்குள் நடக்கும் வெட்டிப் பஞ்சாயத்து...

* மிதந்து பேசும் அன்பர்களுடன் உரையாடல்...

III எப்பொழுது வேண்டுமானாலும் செய்ய விரும்புவது:

* மிஸ்டியான காலையில் தனிமையில் காட்டிற்குள் சென்று பறவைகளின் சப்பதத்தை பருகுவது...

* மழை பெய்யும் பொழுது மழைக் காடுகளில் மாட்டிக்கொண்டு முழித்துக் கொண்டே அதன் அழகை ரசிப்பது...

* மழைத் துளி சிலீர் சிலீரென்று முகத்தில் அறையெ கண்ணை குறுக்கிக் கொண்டு டூ-வீலர் ஓட்டுவது...

* இப்பொழுது பழகிப் போன அட்லாண்டா - நூ யார்க் கார் பயணம், தன்னந் தனியே சிந்தனைகளினூடையே பாடல்கள் மட்டுமே உணவாக அருந்தி 18 மணி டிரைவிற்கு பிறகு தரிசனம்...

* இந்தியாவில் எங்கே போகிறோம் என்று தெரியமாலே பயணிக்கும் நீண்ட தூர ரயில் மற்றும் பேருந்துப் பிரயாணங்கள்...

* ஹிமாலய மலையோரங்களில் பேருந்தில் அமர்ந்து கீழே வீழ்ந்து கிடக்கும் பள்ளத்தாக்குகளை நாம் எப்பொழுது வேண்டுமானாலும் வீழ்ந்து விடலாம் என்ற நினைவுக்கூடேயே பயணித்துக் கொண்டே அதன் அழகைப் பருகுவது...

IV வாழ்வின் பிரமாண்டங்கள் என நான் எண்ணி பிரமிப்பது:

* எப்படி உலகில் உள்ள இந்த ஏழு பில்லியன் மக்களும் ஒரே மாதிரியாக இல்லாமல் வித்தியாச வித்தியாசமாக இருப்பதை காணும் பொழுது, இயற்கையின் பிரமிப்பை கண்டு மலைத்துப் போவது...

* எப்படி நாம் சிந்திக்கும் விதம் நம்மை யார் என்பதனை நிர்ணயிக்குது என்பதனை சிந்திக்கும் பொழுது...

* பஞ்சம், பட்டினி என்பது எப்படி ஒரு சாரருக்கு மட்டும் சொந்தமாகிப் போனது என்று பார்க்கும் பொழுது...

* பஞ்சத்திலிருந்து தப்பித்து மூணு வேளை சாப்பாடு நிச்சயம் எனும் நாளில் வானத்தை அண்ணாந்து பார்க்க கற்றுக் கொண்ட மனிதம்...

* எப்படி மனித மனம் மட்டும் "இப்படியும்" "அப்படியும்" எண்ணக் கற்றுக் கொண்டது... அவர் அவர்களின் தேவைகளுக்கேற்ப...

* திறந்த கதவின் நிலையை பிடித்துக் கொண்டு வானத்தை பார்த்துக் கொண்டு ஏதோ நீண்ட பிரயாணம் பூமிப் பந்தில் இருந்து கொண்டு செல்வதாக எண்ணித் திளைப்பது - ஏனைய கோள்களின் இருப்பும், அதன் சுழற்சியும், பால் வீதிகளின் மிதப்பும் அதன் பயணங்களும், பிறகு இப் ப்ரபஞ்சத்தின் அகன்ற விரிவடையும் தன்மையினை நினைவிற் கொள்ளும் பொழுது ஏற்படும் மலைப்பு - இரவு வானம்.

V படித்ததில் மனதில் தைத்தது:

* தே தேர்டு சிம்பன்சி - ஜேர்டு டைமண்ட் எழுதியது, ஒரு பரிணாம சிந்தனையூட்டு புத்தகம் - மனித விலங்குகளைப் பற்றியது...

* த புக் - ஆலன் வுட்ஸ் எழுதியது, எல்லா மதங்களையும் தோலுரித்து, மதங்கள் எப்படி மனிதனுக்கு சங்கிலியிட்டுச் சென்றிருக்கிறது என்று காட்டும் பொருட்டு உள்ள தத்துவப் புத்தகம்...

* ஓஷொ எழுதிய அருதிப் பெரும்பான்மையான படைப்புகளும்...

* டீபக் சாப்ராவின் சில படைப்புகளும் அவரின் எண்ண ஓட்டமும்...

* பால்ய வயதில் படித்த தி. ஜா-வின் மோக முள்... (சில வருடங்களுக்கு முன்பு படித்த "த அல்கெமிஸ்ட்" - Paulo Coelho)...

* இன்னும் படித்துக் கொண்டே பிரமித்துக் கொண்டிருக்கும் - ஸ்டீவன் ஹாவ்கிங்-ன் ப்ரபஞ்சம் பற்றி எழுதிய புத்தகங்கள்...

VI என்னை சமீபத்தில் கவர்ந்த ஆறு பேர்:

நிறையெ பேர் இங்கு இருக்கிறார்கள், முன்னமே அவர்கள் இந்த ஆறில் கலந்து விட்டதால் இப் பொழுது சில பேர் என் பார்வையில்...

* தருமி

* ஞானசேகர்

* நாமக்கல் சிபி

* செல்வ நாயகி

* சந்தோஷ்

* கார்த்திக்

Friday, June 09, 2006

*மதம் தேவையா* - "அ.குமாருக்கு" ஒரு பதில்

இங்கு நண்பர் அருள் ஒரு பதிவு மதம் தேவையா என்ற தலைப்பில் ஒரு கேள்வியை வைத்துள்ளார், அங்கு சென்று படித்துவிட்டு இதனை தொடர்ந்தால் வால் தலை புரியும் எதனைப் பற்றியது இப்பதிவு என்பது... ஒரு நடை இதிலேஏறி போயிட்டு வந்திடுங்க ப்ளீஸ்...

ஒகே அருள், மதம் என்பது எதுவரைக்கும் என்பதனைப் பார்ப்போம். தாங்களுக்கு தனது சிறு வயதில் தி.க மக்களையும் அவர்களுடன் தங்களுக்கு அவ்வளர்ச்சிக்குரிய இறை நம்பிக்கைகளுடன் தர்க்கிக்கக் கூடிய வாய்ப்பு கிட்டியது, சரியா? அவ்வாறு அவ் மன நிலைக்கு இட்டுச் சென்றது எது? தாகம்! அத் தாகமும் தேடலும் இருக்கு வரைதான் நீங்கள் ஒரு சூழலில் ஒரு முடிவுக்கு வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். எதிலிருந்து "நீச்சல் எது" "மிதத்தல் எது" என்ற வித்தியாசங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு, இல்லையா?

ஓஷோவிற்கு தனது குழந்தைப் பருவமொட்டியே அத்தாகமும் மிதப்பதற்கான நல்ல சூழலும் அவரைச் சுற்றி தனது பாட்டானர் மூலமும் இதர விசயங்கள் மூலமும் வாய்த்திருந்தன. ஆனால், நம்மை போல conditioned சூழ்நிலையில் சிக்கித் தவித்தவர்களுக்கு அப் பசி நம்மை நாமே ஒரு நிலைக்கு இட்டுச் செல்லும் வரைக்கும் தொடர வேண்டி வருகிறது.

எந்த நாள் வரை என்றால் ஒஷொ ஒரு "சிவப்பு சாமியார்" கிடையாது என்பதனையும் அவரது புத்தகங்களை தானே பணம் கொடுத்து வாங்கி படிக்கும் காலம் கிட்டும் வரை (ராணி என்ற பத்திரிகை ஒரு காலத்தில் எல்லா தரப்பு மக்களையும் சென்றடைந்த காலத்தில் ஒஷொவைப் பற்றிய ஒரு விஷப் பிரச்சாரம் நடத்தி வந்தது... ஒஷொ ஒரு செக்ஸ் சாமியார் என்று... அது போன்ற வாரப் பத்திரிகைகள் வாங்கி படிக்கும் ஒரு விழிப்புணர்வற்ற மக்களிடையே வாழும் சூழலிருந்து விலகி).

அந் நாளை நாம் எட்டும் வரை இந்த மதம் சார்ந்த கோட்பாடுகளை சுவைத்து எது கிட்டுகிறது என்பதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம், அல்லவா? எல்லா வரையறுக்கப்பட்ட புத்தகங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் ஒரு எல்லையும் உண்டு அல்லவா? அவ் எல்லையைத் தொட்டு கேள்விகள் மட்டுமே எஞ்சும் பொழுது, தேடலும் தொடர்கிறது. அத் தேடலே உங்களை "மித, நீந்ததே" என்ற விழிப்புணர்விற்கு இட்டுச் சென்றது எனலாமா?

மனம் என்பது பரிணாமங்களை சந்தித்து தினமும் மாற்றங்களின் ஊடே பயணித்து நாம் விழிப்புற்று திறந்த நிலையில் இருக்கும் பொழுது மட்டுமே "மிதக்கும் நிலையை" எட்ட வாய்ப்பளிக்கிறது. அவ்வாறு அற்ற நிலையில் இருக்கும் பொழுதுதான், நாம் சந்திக்கும் பிரச்சினைகள் அனைத்தும் எழுகின்றன வீழ்கின்றன.

எனவே மதங்கள் ஒருவனை கேள்விகள் கேட்கும் விழிப்புணர்வு நிலைக்கு இட்டுச் செல்வதற்கும் உதவலாம் அல்லவா? ஒரு விசயத்தைப் பற்றி தர்க்கம் செய்வதற்கு, ஒன்று அவ் விசயத்தைப் பற்றி நன்கு படித்து கிரகித்திருக்க வேண்டும், அல்லது "அதுவாகவே" இருந்து வாழ்ந்து அனுபவித்து இருந்து இருக்க வேண்டும். என்னை பொருத்த மட்டில் நான் இரண்டாவது சாரத்துடன் இணைத்துக் கொள்வேன். ஏனெனில் நீ அதுவாகவே வாழ்ந்துருக்கிறாய் எனும் பொருட்டு நல்லது கெட்டது இரண்டுமே புசித்திருக்க வேண்டும்.

இது தருமி அவர்களுக்கு கிட்டியது, அவரின் தாகம் அந்த புத்தகத்துடன் (பைபிள்) தடைப்பட்டு போகவில்லை, எனெனில் அவரின் விழிப்புணர்வு நிலை மேலோங்கி இருக்கக் காரணமாக அம் மதம் சார்ந்த வழிபாடுகள் மற்றும் இத்தியாதி விசயங்கள், அவரது தாகத்தை மென்மேலும் அதீதப் படுத்திய காரணியாகக் கூட இருந்திருக்காலமல்லவா?

அந்த ஒரு சிறு பாதையே அவரை இன்று நம்மிடையே கொணர்ந்து நம்மையும் சிந்தனையோட்டத்தில் கலக்கவைத்தது எனலாமா? இருப்பினும் அது ஒரு தனிமனிதனிரின் உழைப்பு, தேடல் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதனால அவருக்கு divine force-ல் நம்பிக்கையிருக்காது என்று நான் கூறிவிட மாட்டேன், "அவரின் விழிப்புணர்வு நிலை மற்றொரு தளத்திற்கு உயர்ந்திருக்கிறது, அவ்வளவே" என்பது எனது நிலைப்பாடு.

மதத்தினால் கட்டுண்டு போவதில் எனக்கும் உடன்பாடு கிடையாதுதான். இருப்பினும் மதங்கள் ஒரு அரண் போல நாம் விபரம் தெரியாத வயதில் நம்மை நெறியிட்டு வழி நடத்தி அவ் விழிப்புணர்வு நிலைக்கு எட்ட உதவுகிறது. ஒரு சமூதாயம் விபரம் தெரியாத வயது மக்களை வழி நடத்தி மதம் அற்ற சூழலில் எடுத்துச் சொல்ல முடியாது எனென்றால், நம்மில் நிறைய "பெரிய சிறியவர்களின்" மனம் அடைபட்டு "அ" நிலையிலேயே தடைப்பட்டு கிடப்பதால் தான்...

தேடல் உள்ளவருக்கு தித்திக்கும் தேன் இவ் வாழ்கை, அவருக்கு நல்ல இரவுத் தூக்கமும் கிட்டலாம் எப்படியெனில் திறந்த மனது இருப்பதால் அவர் எதற்காகவும் அஞ்சத்தேவையில்லை எதனையும் ஏற்கலாம், இழக்கலாம் என்ற நிம்மதியுடன் இருப்பதால்.அவ்வாறு மதமே அற்ற சூழலில் எல்லா மக்களும் விழிபுணர்வுற்று "மித, நீந்ததே" நிலையை எட்டியிந்தால் மட்டுமே நம்முடைய பிள்ளைகளுக்கும் அந்த "state of mind concept"-யை வாழ்ந்து விட்டுச் செல்ல இயலும். அரிதுப் பெரும்பான்மையினோர் அவ்வாறு தேடலற்ற, சுய சிந்தனையற்ற ஒரு சூழலில் வாழும் பொருட்டு, எப்படி தரம் பிரித்து எதில் "உண்மை" இருக்கிறது என்பதனை அறிவது?

மற்றுமொரு கபடமற்ற செயலுடன் நானும் எனது வீட்டாரும் இருந்ததை நினைவு கூர்ந்து அத்துடன் எனது இந்த நீண்டு போன பின்னூட்ட பதிலை நிறுத்திக் கொள்கிறென். நான் பத்தாம் வகுப்பு படித்துகொண்டிருப்பதற்கும் முன்புதான் என்று நினைக்கிறேன் ஒரு ஃபாஷனுக்காக ஃபான்சி கடையில் விற்ற சிலுவையும், பிறையையும் கருப்புக் கயிற்றில் அணிந்த திரிந்த ஞாபகம் இங்கு வந்து போனது. மேலும் எனது அம்மாவின் பூஜை அறையில் மேரியும், குழந்தை ஏசுவும் சிறு கற்சிலையாக ஏனைய இந்துக் கடவுளர்களின் வரிசையில் கொலுவீற்றிந்ததும் நினைவில் வந்து போனது. அது எனது தங்கையின் விருப்பத்திற்காக (மத நல்லிணக்க கருத்து {எங்களுக்கு இன்று இருப்பதற்கு} எனது பெற்றோர்களின் "மித, நீந்ததே" என்ற சுய வெளிப்பாடு ஒரு காரணமோ?).

ஆக, இந்த மதங்கள் கோட்பாடுகள் நிரம்ப படித்தவர்களுக்கும், நிரம்ப விபரம் தெரிந்தவர்களுக்கும் மட்டுமே ஒரு விசயமாக படுகிறது. அது ஏன்?

மனம் எவ் நிலையிலும் திறந்திருப்பவர்களுக்கும் சுயத் தேடல் உள்ளவர்களுக்கும் என்றென்றும் "மித, நீந்ததே கான்செப்ட்" சாத்தியம். புல் தானகவே வளர்கிறது, மீண்டும் ஒஷொ ;-))

பி.கு: நான் *எரிக்கிறதா இல்லெ புதைக்கிறதா* என்ற ஒரு பதிவை இங்கு இட்டு வைத்ததிற்கும் ஒரு காரணமுண்டு. அதுவும் மனத் திறப்பு பற்றிய ஒரு திறனாய்வே...

Wednesday, June 07, 2006

சாத்தான் தினமாம் இன்னிக்கு...

இன்னிக்கு என்னமோ சாத்தானின் தினமாம், எது இன்னிக்கு தொடங்கினாலும் அது விளங்காதாம், ஏன்னா 6.6.06 எந்த புத்தகத்திலோ யாரோ எழுதி வைத்திருக்கிறாரம். அதான் இந்த பதிவெ இன்னிக்கு தொடங்கி வைப்போமின்னு...ஹி...ஹி...ஹி.

ஏங்க மனித மண்டை எப்பப் பார்த்தாலும் கோணங்கித்தனமா யோசிச்சு வைக்கிது. இப்பெ இந்த நாள்லெ பிறக்கிற குழந்தைகள் எல்லாம் ஒரு மாதிரியா பார்க்கப் படணுமாம், அதினாலே காலச்சாரங்களின் அதிபதியான அமெரிக்கா நாட்டில் வாழும் சில சிறப்பு ஜந்துக்கள் குழந்தை பிறப்பு தேதியை தள்ளி போட்டுக் கொண்டதாம். கருமமுட சாமீ.

அப்படித்தான் பிறந்து வைத்து விட்டால் அக்குழந்தைகளை என்ன பண்ணுவது? சரி, இது போன்ற ஒரு விசயம் இருக்கிறது என்பதனை அறியாத நாட்டில் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் சாத்தானின் குழந்தைகளா? எதோ எனக்கு இதற்கும் நம்மூரில ஜாதகம் குறைந்த பட்சம் 10 பொருத்தம் பார்த்து பண்ணுவதற்கும் தொடர்பு இருப்பதாக தோன்றுகிறது. அவ்வாறு ஒரு பொருத்தமெல்லாம் இருக்கிறது என்று தெரியாமலேயே திருமணம் செய்து கொள்ளும் மக்களின் கதை என்னவாகிறது?

அது போலவே என் சாமீயை கும்பிட்டதான் நேர் பேருந்தில் செர்க்கம் இல்லென்னா... அப்படின்னா, அப்படி ஒரு சாமீ இரு(ந்துரு)க்கிறார் அப்படின்னு தெரியாதவங்க எல்லாம் என்னாவாகிறார்கள், இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது... ?

ஒண்ணுமே புரியலே உலகத்திலே... வட்டம் பெரிசாக பெரிசாக நிறைய கேள்விகள் மட்டுமே எஞ்சி நிற்கிறது எனக்கு.

Related Posts with Thumbnails