Sunday, January 28, 2018

அப்பாவின் நினைவுச் சுவடுகள்!


என் அப்பாவின் வயது 78. எனக்கும் அவருக்குமான உறவு 1986க்கு பிறகு நண்பர் என்ற முறையிலேயே தொடர்ந்தது. அவர் என்னை ஒரு நண்பர் அளவிற்கு உயர்த்திக் கொண்ட பொழுது எனக்கு வயது 18. போன வருட இறுதியில் நான் வட அமெரிக்காவில் மகிழுந்தின் உதவியுடன் ஒரு சாலைப் பயணம் மேற்கொண்டேன். மொத்த தூரம் 4120 மைல்கள். ஒன்பது மாநிலங்களின் வழியாக அட்லாண்டாவில் இருந்து அரிசோனா மாகாணம் வரையிலுமாக அமைந்தது.

அந்த பயணத்தின் திரும்பலின் போது டெக்சஸ் மாநிலத்தில் ஒரு விடுதியில் இரவு பத்து மணிக்கு அவருடைய அலைபேசி அழைப்பு வந்தது. என்றைக்கும் இல்லாத அளவில் அன்று மிகத் தெளிவாக ஓர் ஒன்றரை மணி நேரம் என்னோடு உரையாடினார். எப்பொழுதும் போலவே அது ஊர் பற்றிய செய்தி பரிமாறல்களிலிருந்து சமகால அரசியல் நிலவரம் வரைக்கும் நீண்டது. அதுவே என் மனதில் கடைசியாக அவர் விட்டுச் சென்ற அழுத்தமான உரையாடலாக அமையுமென்று நான் கிஞ்சித்தும் எண்ணவே இல்லை.

அப்பொழுது என்னை கடிந்து கொள்ளும் விதமாக நீ ஊருக்கு வந்து என்னைப் பார்த்து விட்டு இந்த சாலைப் பயணத்தை நிகழ்த்தி இருக்கலாம் என்று கூறியிருந்தார். நானும் வரும் மார்ச் மாதம் போல் வருகிறேன் என்று உறுதி அளித்தேன். மீண்டும் ஜனவரி ஒன்றாம் தேதி என்னை அழைத்து "பிரபாகர், புத்தாண்டு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்தார். எனக்கு மனதுக்குள் என்னவோ பிசைந்தது. ஏனெனில் அம்மா அவரின் உடல் நிலை பொருட்டு சமீப காலமாக கூறி வரும் செய்திகள் கலக்கத்தையே ஏற்படுத்தி வந்தன.

இந்த நிலையில் அவருடைய புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த நிலையில் கொஞ்சமே கரிசனத்துடன் இழுத்து, அப்பா, இந்த வருடமும் அனைத்து வருடங்களை போலவே நல்ல செய்திகளுடன் நகர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன் என்று கூறினேன். அதற்கு ஒரு சிரிப்பு மட்டுமே பதிலாக அளித்தார். இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி திங்கள் கிழமை எந்த முன் அறிவிப்பும் அவருக்கு கொடுக்காமல் காலன் அவர் உயிரைப் பறித்துக் கொண்டான். 

அவரின் மரணம் எனக்கு ஈடு செய்ய முடியா ஒரு பேரிழப்பு. என்னை அலைபேசியில் துரத்தி இனிமேல் யார் அழைத்து பேசுவார் அப்பா! செய்தி எனக்கு கிடைக்கும் பொழுது இரவு மணி 1.30. அவர் இருக்குமிடத்தில் இருந்திருந்தால் இன்னுமொரு பத்து வருடங்கள் கூடுதலாக இருந்திருக்கக் கூடும். ஆனால், செய்தி கேட்ட மாத்திரத்தில், என்னால் எதுவுமே இயக்க முடியாத நிலை. அது ஒரு பெரிய அவஸ்தை! கரம்பக்குடி போன்ற ஊரில் இரவு மருத்துவர்களோ, 24 மணி நேர மருத்துவமனைகளோ இல்லாத ஓர் இடத்தில் எது போன்ற முதல் வைத்தியத்திற்கு பரிந்துரைக்க முடியும். கையறு நிலை! தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு அதிர்ச்சியில் உறைந்து நிற்பதைத் தவிர ஒன்றுமே ஓடவில்லை. 

அடுத்த பதினைந்து நிமிடங்களில் அவரின் மரணம் நிச்சயப்படுத்தப்பட்டது. வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் கொடுக்காமல் நானும் எனது சகோதரரும் கிடைத்த ஃப்ளைட்டில் ஏறி ஊர் செல்வது என்று முடிவாயிற்று. இந்த ஊர் திரும்பல் மூன்று வருடங்களாக நான் அவருக்கு கொடுக்க வேண்டி நிலுவையில் இருந்த பயணம். இப்படியான ஒரு சூழலில் ஊர் திரும்புவேன் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

எனது சகோதரர் என் கூடவே பயணித்ததால் ஒருவருக்கொருவர் சற்றே ஆறுதலாகவும், நிறைய நினைவோடைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஏதுவாக அமைந்தது.

அப்பாவைக் காத்திருக்க வைத்து புதன் கிழமை காலையில் ஐஸ் பெட்டியில் தூங்கிக் கொண்டிருக்கும் கோலத்தில் கண்டோம். அமர்ந்திருக்கும் மக்களுக்கிடையே ஏதேதோ சொல்ல வேண்டுமாய் தோன்றியது. ஹீ வாஸ் எ க்ரேட் மேன், லிவ்ட் வெல். மார்ச் மாதத்திற்கு முன்பாகவே முந்திக் கொண்டாரே என்று அங்கலாய்ப்பதைத் தவிர வேறு வார்த்தைகள் தொண்டையில் சிக்கி முடிச்சாகி விட்டது.

மரணித்த காலை அவருக்கு எப்பொழுதும் போலவே ஒரு சுறுசுறுப்பான காலையாகத்தான் இருந்திருக்கிறது. அவருடைய மொபெட் ரைட், ஊருக்கு தரிசனம், தெருவிற்குள் சென்று சில பேருடனான சந்திப்பு என்று முடித்துக் கொண்டு, அம்மாவிற்கு இட்லி கரைத்துக் கொடுத்து விட்டு அடுத்த பத்து நிமிடத்திற்குள் ஓரிரு தொண்டை செருமல்களுடன் தன்னுடைய பூமியப் பயணத்தை நிறைவிற்கு கொண்டு வந்திருக்கிறார். அவர் ஆசை பட்டது போலவே யாருக்கும் சுமையாக இல்லாமல், நான் எப்பொழுதோ ஏதோ ஒரு சூழலில் எழுதிய இந்த கவிதையைப் போல அவருடைய விடை பெறுதலும் நடந்தேறி இருக்கிறது.

 ...பூப்பதும் காய்ப்பதும் உதிர்வதும்
முப்பருவமெனினும்
உதிர்வதை
கனமற்றதாக்கலாம்
பெரு மரத்து
பறவையொன்றின்
ஒற்றை இறகு
சப்தமற்று
தரையிறங்குவதைப் போல!

அப்பா எங்களை வா, போ என்று அழைக்குமளவிற்கு நண்பர்களாக இருக்க, நம்ப வைக்க எது போன்ற நடவடிக்கைகள் செய்தாய் அப்பா. முப்பது வயது பிள்ளைகளாக வளர்ந்து நின்றாலும் மிதி வண்டியில் வைத்து மருத்துவரிடம் அழைத்து சென்றாயே! அதெப்படி முடிந்தது உனக்கு. நீ அதிகம் பள்ளியில் படித்தவனில்லை. பெரிய வாசிப்பாளனுமில்லை. பின்பு எப்படி இத்தனை ஞான ஊற்று உன்னில் பிரவாகமெடுத்தது, அப்பா!

அப்பா உனக்கு நினைவிருக்கிறதா? நான் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த நிலையில் நீ கூறினாயே ”தம்பி, தோலுக்கு மேலே வளர்ந்திட்ட இனிமே உன்னய தட்டி வளர்க்க முடியாது, உன்னுடைய செயல்களுக்கு நீயே பொறுப்பு” என்று... கல்லூரியில் முதல் வருடம் முதல் நாள் கொண்டு போய் என்னை விட வந்த அன்று விளையாட்டுத் துறை கட்டட வாசலில் அமர்ந்து கட்டிக் கொண்டு சென்ற இட்லி பொட்டலத்தைப் பிரித்து எனக்கும் உனக்குமாக வைத்துக் கொண்டே கண்களில் கண்ணீர் துளிர்க்க சாப்பிட்டாயே ஞாபகமிருக்கிறதா? அப்பா.

முதுகலை முடித்து காடோடியாக நான் வாழ்ந்து ஒரு வெள்ளைக்காரியை மணம் முடிக்க எண்ணி அவளை நம்மூர் அழைத்து வந்து உன்னிடம் அறிமுகப் படுத்தும் பொழுது வீடே எதிர்த்துக் கிடக்கையில் நீ என்னை தனியாக அழைத்துச் சென்று தோள் மீது கை போட்டு, "பிரபாகர், நீ இனிமேல் சிறுவன் கிடையாது நன்கு படித்து, நாலும் யோசிக்கத் தெரிந்தவன், எடுக்கும் முடிவுகள் அனைத்திற்கும் நீயே பொறுப்பேற்று எடுத்து நடத்துவாய் என்பதும் எனக்குத் தெரியும். உன்னை நீயே பார்த்துக் கொள்" என்று விலகி நின்று அழகு பார்த்தாயே அப்பா! எப்படியய்யா அது!

நான் கடந்து வந்த பாதையில் உன் உள்ளத்தை சிதைக்கும் எத்தனையோ இடர்பாடுகளை வழங்கிய போதும் அத்தனை வாசிப்பற்ற நீ உன் வழியாக வந்தவன் நான் என்பதால் என் மேல் அத்தனை ஆதிக்கம் செலுத்தாமல் என் வளர்ச்சி அனுபவ சேகரிப்பின் வழித்தடங்களின் ஓர் ஓரத்தில் நண்பனாகவே மட்டுமே நின்று கவனித்துக் கொண்டிருந்தாய்.

உனது எட்டு வயதில் உனது தகப்பன் பொருளாதாரப் பொறுப்பிலிருந்து நழுவிய பொழுது, அந்த குடும்பத்தை உனது தோள்களில் சுமக்க எண்ணி உனது படிப்பை துறந்தாயே அன்றைய வாழ்க்கை கல்வி தானோ உனது பிள்ளைகளுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று பிரிதொரு நாளில் அனைத்தையும் கொடுத்து தள்ளி நின்று பார்க்க கற்றுத் தந்தது. உனது சக்திக்கும் மேற்கொண்டு ஒரே நேரத்தில் இரண்டு பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்பி கட்டணம் கட்ட தடுமாறிய நேரத்தில், ஒரு நாள் நீ எனக்காக பணம் எங்கோ கேட்டு வாங்கச் சென்ற இடத்தில் கன்னத்தில் அறை வாங்கிப் பணத்தைப் பெற்று வந்ததாக கேள்விப்பட்டேனே அப்பா! அத்தனை நெஞ்சுறுதியா அப்பா உனக்கு.

பிறகு வந்த காலங்களில் லட்சங்களில் நீ புரண்டாலும், பணத்தை வைத்து பணம் பண்ணும் பேராசையோ, சொத்துக்களைக் குவிக்கும் எண்ணமோ இல்லாமல், கொடுத்த இடத்தில் திரும்பக் கூட வாங்கத் தெரியாமலேயே வாழ்ந்து முடித்த பெருந்தன்மை எப்படி உனக்கு கைவரப் பெற்றது, அப்பா.

உனை நான் கொண்டாடுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதிலொன்று உனை வைத்துக் கொண்ட சமூகத்தில் அத்தனை எளிதாக பணம் பண்ணுவதற்காக குறுக்கு வழிகள் இருந்த போதும்,
நீ அந்த வழிகளை நம்பாமல் கடின உழைப்பின் மீது எப்படி இத்தனை பற்று வைத்து உழைத்தாய் என்பதுதான் இன்று வரைக்கும் எனக்கு இருக்கும் ஆச்சர்யம். நீ பழகாத தொழில்தான் என்ன அப்பா!


நீ உழைத்த உழைப்பு உனது குடும்பத்தை மட்டும் மாற்றியமைக்கவில்லை, உனது சுற்று காற்று பட்ட தூரங்களிலெல்லாம் அந்த “தூய விதை” விழுந்து பரிணமித்ததை நல்ல கண் கொண்டவர்கள் உணர்வார்கள். அதுவே உனது பிறப்பிற்கு நீ அளித்துக் கொண்ட கெளரவமென நான் எண்ணுகிறேன்.

நீ மரணித்த வாரத்திலேயே ஒரு நாள் என்னிடம் உன்னுடைய வாழ்க்கையைப் பற்றி யாராவது எழுதுபவர்களிடம் சொல்லி அதனை புத்தகமாக்க வேண்டுமென்று கூறினாயே, அதற்கு கூட நான் கடிந்து கொண்டேனே, அதனை நான் செய்ய மாட்டேனா என்று... அந்த புத்தகத்தை நீயே வாசிக்கும் வரைக்குமாவது வாழ்ந்திருக்கலாமே அப்பா.

உன்னுடைய அமெரிக்கா நாட்களில் உனது நீண்ட கால ஆங்கிலம் பேசி புழங்க வேண்டிய ஆசையும் நினைவுருவாக்கம் ஆனதே ஞாபகமிருக்கிறதா? உன்னுடன் ஒரு ஸ்பானிஷ் மங்கையொருத்தி கை கோர்த்து நடனமாடிய பொழுது வந்த அத்தனை வெக்கத்தையும் எங்கே அப்பா ஒளித்து வைத்திருந்தாய்! 

என்னுடைய அனைத்து நண்பர்களுக்கும் நீ ஒரு பொறாமைக்கான அப்பா என்பது தெரியுமா உனக்கு? அனைத்து வயதினருடனும் மிக இயல்பாக எப்படி உன்னால் புழங்கித் திரிந்திருக்க முடிந்தது? உனது இறுதி விடை பிரிதலுக்கான நாளில் உன்னுடைய பல நண்பர்களை, பல பிரிவுகளிலிருந்தும் வந்திருந்தார்கள். அவர்கள் உனை அப்பாவாகவும், அத்தாவாகவும், மாமாவாகவும், செட்டியாராகவும், அண்ணாமலையாகவும் விளித்துக் கொண்டு அவரவர்களும் தங்களுக்கான தனித்துவமான கதைகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். விக்கித்து நின்றேன். உன் நிழல் படாத எளிய மனிதர்களுக்கு குறைச்சலே இல்லை அப்பா. உன் வாழ்வுப் பயணத்தில் நீ நிறைய மனிதர்களை சேகரித்திருக்கிறாய்.

நீ மரணிக்க வில்லை அய்யா! உன் நினைவுச் சுவடுகள் எங்கள் மனங்களில் இருக்கும் வரையிலும் நீ உயிர்ப்புடனே உள்ளாய். 

எனக்கு எப்பொழுதுமே ஓர் எண்ணமுண்டு. மனித வாழ்வென்பது நன்றாக சுகித்து, சுவைத்து வாழ்ந்து முடிக்க வேண்டியதொரு மாபெரும் பயணச் சாலை என்றும் மரணிக்கும் நொடிகளில் கண் திறந்து “வாட் எ ரைட்” என்றழைத்து கண் மூடிட வேண்டுமென்று நினைப்பதுண்டு. அந்த எண்ணம் உன் வாழ்க்கைப் பயணத்தைப் பின்னோக்கி செலுத்திப் பார்க்கும் பொழுது எத்தனை உண்மையென்று எனக்கு இன்று புலப்படுகிறது. நீ நன்றாக அழுத்தமாக வாழ்ந்து சென்றிருக்கிறாய்.

அவரைப் பற்றி நினைவு கூறுவதென்றால் என்னுடைய அனைத்து நடவடிக்கைகளிலும் அவருடைய சாயல் படிந்திருப்பதனைக் கொண்டே என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

Related Posts with Thumbnails