Saturday, September 22, 2012

கூடங்குளம் - ஒரு சிலந்தியின் செய்தி: With Photos!

நம்மைச் சுற்றியும் எப்பொழுதும் எங்கேயும் விந்தையான விசயங்கள் பின்னிப் பிணைந்தே கிடக்கிறது. அது போன்ற நிகழ்வுகள் யாவும் பெரிய இயக்கங்களாக நம் முன்னால் விரிந்து காட்சி தர வேண்டுமென்று எதிர்பார்ப்பது நுட்பங்களை அவதானிக்க தவறிய சிறு மூளை செயல்பாட்டில் மரத்தன்மை ஊறிப் போனதே காரணம் என்பதனை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள இன்று எனக்கு ஒரு வாய்ப்பு கிட்டியது.

அது ஒரு சிறு நடை. வீட்டின் முன் புறமாக நடந்து இடது பக்கமுள்ள சுவற்றினையொட்டி நின்று மரத்தின் வேர்களை பார்த்து கொண்டிருப்பதெனக்கு பிடிக்கும். அப்படியான ஒரு பயணத்தில் என் கண் முன்னால் கையொப்பம் சிலந்தி (Signature Spider) ஒன்று நெடுக்காக ஓடிய கேபிளுக்கும் அருகாமையே இருந்த புதருக்குமாக ஒரு வலையை தனக்கேயுரிய சிறப்பானதொரு வடிவமைப்பில் பின்னிப் பரப்பி இருந்தது.கவனிக்காது அதனைப் பிளந்து கொண்டு நடக்க இருந்தவன் சற்றே தமாதித்து கண்களின் குவியத்தை நெருக்கி கொண்டுவர மரத்துப் போன புலன் விலகி, அதன் பிரமாண்டம் கண்ணில் சிக்கிக்கொண்டது. அங்கயே நின்று கவனித்து கொண்டிருக்கையில் அதனைப் பற்றிய விரிவான கட்டுரையொன்று என் மன 70mmல் விரிய ஆரம்பித்தது. திரும்ப நகர்ந்தவன், அதிர்ந்து கையொப்ப சிலந்தின் தவத்தை எனது மனச் சிந்தனை சப்தம் கலைத்து விடாமலிருக்க மிக மெதுவாக எனது எண்ணத்தை உள்ளே வைத்து வெடித்துக் கொண்டுடே நகர்ந்து மீண்டும் புகைப்படக் கருவியுடன் சிலந்தி வீட்டின் முன் வந்து நின்று கொண்டேன்.

இப்பொழுது காற்றின் விசை எங்கள் இருவரின் நோக்கத்தையுமே கேள்விக்குறியாக்கியிருந்தது. கையொப்பச் சிலந்தி ஊஞ்சலில் இறுகப்பற்றிக் கொண்டு அலறி அனுபவித்துக் கொண்டே முன்னும் பின்னுமாக சென்று வரும் ஒரு சிறுமியைப் போல, தன் வலையின் வலிமையை கவனித்துக் கொண்டே ஆடிக்கொண்டிருந்தது. நானோ எனது புகைப்படக் கருவியின் அத்தனை குப்பிகளையும் திருகி கிடைக்கும் வெளிச்சத்திற்கேற்ப சிலந்தியி்ன் தெளிவான படத்தை கொண்டு வந்திருக்கும் பொழுது முன்னும் பின்னுமாக நகர்ந்து சோதனை செய்து கொண்டிருந்தது, காற்று.அதற்கும் சற்றே சளைத்தவன் நானில்லை என்று மேகமும் அவ்வப்பொழுது சூரியானரை மறைத்தும், வெளிக்காட்டியுமென அடுத்த ரோதனையை நிகழ்த்திக் கொண்டிருந்தது. எனக்கும் அந்த சிலந்திக்குமான இடைவெளி ஒன்றரை அடிதான் இருந்திருக்க முடியும். இடையில் கொசுக்கள் வேறு என்னிடம் அளவற்ற சாப்பாடு கேட்டுக் கொண்டிருந்தது. பகிர்ந்து கொள்வது கருணை மிக்கது என்று கேள்விப்பட்டிந்ததால் சரி சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்று அரை டவுசர் போட்டு விட்டுவிட்டேன்.

இத்தனைக்குமிடையே அந்த சிலந்தி ஒரு அற்புதமான விளையாட்டை நிகழ்த்தி காண்பித்தது. இத்தனை போராட்டத்தையும் ”நீ சந்திப்பது ஒன்றுமல்ல” என்று கட்டியம் கூறி நின்றதாக அமைந்ததால்தான் இந்த கட்டுரையே உங்களுக்கு.

அப்படியாக காற்று வீசியதால் ஒரு இலையொன்று அதன் வலையின் மீது சிக்கி தொங்க ஆரம்பித்தது. அதனைக் கவனித்த சிலந்தி உடனே இரண்டே ஸ்விங்கில் அதனிடம் சென்று ஒவ்வொரு இழையாக அறுக்க ஆரம்பித்தது; மேலும் கீழுமாக நகர்ந்து. தொடர்ந்து நானும் எனது புகைப்பட செட்டப்பை மாற்றி மாற்றி முடிந்தளவிற்கு பதிந்து கொண்டேன். முற்றுமாக அதனை எடுத்து பொடீர் என்று கீழே போட்டுவிட்டுத்தான் மறுவேலை செய்தது.


அதன் உடனடி நடவடிக்கையை கவனித்தவன் மனதில் ஓடியது வீட்டில் சிறு சிறு ஓட்டை உடைசல்கள் ஏற்படும் பொழுதெல்லாம் அலட்சியம் காட்டி மொத்தமாக செலவு செய்து சரி செய்து கொள்ளும் மனப் போக்கில் இருக்கும் எனக்கு இந்த சிலந்தியின் உடனடி இயக்கம் எதனையோ சொல்லிக் கொண்டிருப்பதாகப்பட்டது. உடனே மனம் திருந்திய மணவாடு ஆகிவிட்டேன் என்று புரிந்து கொண்டிருக்க மாட்டீர்கள். படித்தவன் பாட்டைக் கெடுத்தான் எனக்கொள்க!

இலையை தனது தேவையான இழைகளை அகற்றி அதன் கனம் மொத்தமும் தனது வீட்டை சிதைத்து விடாமலிருக்க நடத்திய அதிரடி நடவடிக்கையில் வெற்றியடைந்த சிலந்தி - புகைப்படத்தின் வாயிலாக...இந்த அவதானிப்பின் நீதி- வரும் முன் காப்போம். கூடங்குளம் மக்களுக்கு வந்திருக்கிற இந்த விழிப்புணர்வு ஃபுக்கிஷிமா அணு உலை விபத்திற்கு பின்புதானே என்றும், ஒப்பந்தம் போட்டு அடிக்கல்லும் நட்டு இந்தனை கோடிகளை அரசியல் சாணக்கியர்கள் பிரித்துக் கொண்டது போக மிச்சத்தை அங்கே கட்டடம் எழுப்பி 24/7 கரண்ட் வாங்க, நாளை அந்த உணு உலைக்கு ஏதோ நிகழ்ந்தாலோ அல்லது எப்படி அந்த அணு உலை பயன்பாடு நாற்பது வருடங்களுக்குள் முடிந்து அதற்கு பின்னான அணுக் கழிவுகளை 10 ஆயிரம் வருடங்கள் வைத்து பாதுக்காப்பதைப் பற்றியோ கவலை இல்லை என்று கூறுபவர்களுக்கும், ஒப்பந்தம் போட்டு பணம் செலவு செய்தாகிவிட்டது வரும் காலத்தில் மூன்று மாவட்டங்களை பலி கொடுத்தாலும் தகும் என்று சகித்துக் கொள்ள தயாராக உள்ளவர்களுக்கும் இந்த சிலந்தி ஏதோ சொல்ல வருகிறது என்றே தோன்றவும் செய்கிறது.

மேலும் அணு உலை சார்ந்த பழைய கஞ்சி குடிக்க-


1) ஜப்பான் அணு உலைக்குள் உலகத்திற்கான செய்தி: Nuclear Reactor!!

2) கூடன்குளமும் அணுக்களின் நண்பர் அப்துல் கலாமும்...

Related Posts with Thumbnails