Tuesday, November 08, 2011

கூடன்குளமும் அணுக்களின் நண்பர் அப்துல் கலாமும்...

பாரதம் அகன்று விரிந்த நிலப்பரப்பினை உடைய ஒரு நாடு. கனவு காணச் சொன்ன நமது ஏரோநாடிகல் அறிவியல் விஞ்ஞானியும் முன்னாள் குடியரசு தலைவருமான டாக்டர். அப்துல் கலாமின் ஆய்வறிக்கையை மக்கள் மிகவும் ஆவலோட எதிர்பார்த்திருந்தார்கள். அதற்கு முன்னதாகவே ஓரளவிற்கு நம்மாலும் யூகிக்க முடிந்தது அவரின் இறுதி வார்த்தை என்னவாக இருக்குமென்று. நமது எதிர்பார்ப்பு பொய்த்துவிடவில்லை. அவரின் அணுகுண்டு சாதனைக்கு பின்னாக நம்மை பாகிஸ்தானிடமிருந்து காத்த அதே உத் வேகத்துடன் இப்பொழுது கூடன்குளத்தில் அணு உலை நிறுவி தமிழகத்திற்கும் அதனையொட்டிய அணி சாரா மாநிலங்களுக்கும் தங்குதடையற்ற மின்சார உற்பத்தியை பகிர்ந்தளித்து நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிகோணும் வாக்கில் இந்த அணு உலை நிரூவப்படுவதின் அவசியம் நம் மக்களுக்கு முன் எடுத்து வைத்திருக்கிறார்.

அதற்காக மிக நீண்ட நாற்பது பக்க அளவில் தன்னுடைய ஆய்வறிக்கையாக அவரின் கருத்துக்களை இப்பொழுது முன் வைத்திருக்கிறார். நல்லது! என்னால் அத்தனை பக்கங்களையும் அவ்வளவு பொறுமையாக அமர்ந்து வாசிக்க முடிய வில்லை. ஏனெனில், அணுக்கதிர் வீச்சின் தாக்கத்தை பற்றியான பாதகங்களில் அவர் எடுத்து முன் வைத்திருக்கும் உதாரணமாக ஹிரோஷிமா மற்றும் நகசாகி விடயத்தில், அந்த வீச்சு பின் வரும் தலை முறைகளுக்கு எந்த பாதிப்பையும் வழங்கியதாக தெரிய வரவில்லை என்று முழு பூசணிக்காயை எதுக்குள்ளோ வைத்து மறைத்து கொடுப்பது மாபெரும் வரலாற்று பிழையாகவும், பாவமாகவும் கருதுவதால் மேற்கொண்டு என்னால் ஏனோ வாசிக்க முடியவில்லை.

நான் ஏற்கெனவே அண்மையில் நிகழ்ந்தேறிய ஜப்பானிய அணு உலை விபத்தினையொட்டி இப்படியாக ஜப்பான் அணு உலைக்குள் உலகத்திற்கான செய்தி: Nuclear Reactor!! கட்டுரை எழுதி சில முக்கியமான கேள்விகளையும் முன் வைத்திருந்தேன். இந்த சூழலில் இப்பொழுது கூடன்குளம் அணு உலை இயக்கப்படக் கூடிய கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. ஜெர்மனி மற்றும் சில விழித்துக் கொண்ட ஐரோப்பிய நாடுகள் இதே அணு உலைகளுக்கு எதிரான ஒரு நிலைக்கு நகர்ந்து தூய்மையான ஆற்றல் (clean energy/eco friendly) பயன்படுத்தப்படுவதின் அவசியமறிந்து, இருக்கும் உலைகளையும் எப்படி கவணித்து மேலாண்மை செய்வது என்ற கவலையில் ஆழ்ந்திருக்கும் ஒரு கட்டத்தில் நமது கனவு கலாம் அவர்கள், மிக வேகமாக நாட்டை முன்னேற்றுவதற்கான வழிகளில் இதுவும் ஒன்று என்று ஒரு நாட்டின் இதர பகுதி மக்களுக்கென ஒரு மாநிலம் பலியிடப் பட்டாலும் தவறில்லை என்ற நோக்கில் மிகச் சாதாரணமாக தியாகிகளாக அறைகூவல் விட்டிருக்கிறார் அந்தப் பகுதி மக்களுக்கு.

அதற்கென அவர் இட்டுக்கட்டிய உதாரணங்கள் அணைகள் கட்டப்படும் பொழுதும், ஏரோ பிளேன் கண்டிபிடித்த பொழுதும், உயர்ந்த கட்டிடங்கள், இதர மனித சாதனைகளுடன் இந்த அணு சார்ந்த விசயத்திலும் மனித இனம் உற்சாகத்துடனும், மனத் துணிவுடனும் இறங்கி செயலாற்ற வேண்டுமென்று கூறியிருக்கிறார். எனக்கு என்ன விளங்கவில்லையெனில்... அவர் சுட்டிக்காட்டிய அனைத்து விசயங்களிலும் அசம்பாவிதங்கள் நிகழும் கனம் தோறும் பாதிப்பு உடனடியாக அதன் அருகாமையில் இருப்பவருக்கு மட்டுமே நிகழக் கூடும். உயிர் பாதிப்பும் பெருமளவில் இல்லை, அதனை தலைமுறைகளாக கடத்தப் பெறுவதும் கிடையாது என்பதுதான். இந்த அணுக்களை உள்ளடக்கி ஒரு சூட்கேசுக்குள் கொண்டு வரும் சக்தியின் வீரியத்தின் மகத்துவத்தை, இப்பொழுது நாம் டன் கணக்கில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலக்கரியினை எரித்து பெறப்படும் சக்தியின் ஆற்றலோடு ஓப்பிட்டு செய்யும் அதே கனத்தில் அதன் அழிவின் வீரியத்தையும்/வீச்சத்தையும் நாம் ஏன் யோசிக்க தவறுகிறோம்?

அணுக் கதிர் வீச்சு காற்றின் மூலமாக பரவி உடனடி விளைவுகளை உருவாக்குவதோடு, மனிதனின் மரபணுக்களின் கட்டமைப்பு வரையிலுமாக ஊடுருவி சிதைத்து பல தலைமுறைகளுக்கு பிறக்கும் சந்ததியினரின் உடல் உள்/வெளி உறுப்புகளின் செயல்பாடுகளிலும், அமைப்புகளிலும் எண்ணற்ற விதங்களில் விளையாடி விடுகிறது. அதற்குச் சான்றாக எத்தனையோ காணொளிகள் ஹிரோஷிமா/நகசாகி நிகழ்விற்கு பிறகு இரண்டாம் தலைமுறையிலும் வெளிக் காண்பதனை நம்மால் கவனத்தில் நிறுத்த முடியும்.

அதெப்படி இத்தனை ஆபத்து நிறைந்த ஒரு தொழில்நுட்பத்தை நூறு சதவீகிதம் பாதுகாப்பானது என்று சொல்லிவிட்டு போக முடியும்? 15 வருடங்கள் அந்த அணு உலைகள் கட்டுவதற்கான பொழுதென்றால் அதன் பயன்பாடு வெறும் 50 வருடங்களே இருக்கிறதாம். அதற்கு பிறகு ஸ்விட்ச் ஆஃப் செய்திவிடுவோமென்று திருகியும் அந்த ஆலையை மூடி விட முடியாது. காரணம் ஒரு முறை அந்த அணுக்களின் இயக்கம் தொடங்கிவிட்டால் அதுவாக வீரியமிழந்து அயர்ந்து போகும் வரையில் தொடர்ந்து செயல்பாட்டிலேயே இருக்கிறதாம்; பத்தாயிரம் வருடங்களை தாண்டியும். அதனை மேலாண்மை செய்து பாதுகாப்பான முறையில் வைத்துக் கொள்வதற்கே சொற்பமான நிதி ஒதுக்கீடு செய்து வைக்க வேண்டும். நிதி ஒதுக்கீடு என்று வரும் பொழுது நமக்கெல்லாம் மணி அடிக்கணுமே, அந்த பணம் எப்படி செலவழிக்கப்படும் எதிர்காலத்திலென்று.

சில தொழிற் நுட்ப தேவைகளுக்கென கடற்கரையை ஒட்டியே இது போன்ற அணு உலைகள் கட்டியெழுப்பப்படுகிறது. அதாவது இந்த அணு உலைகளின் இயக்கத்தின் போது உருவாகும் அதீதமான வெப்பத்தினை தணிப்பதற்கென தொடர்ந்து குளிர்வான நீர் உள்ளே சென்று வெளிப்புக வைக்கப்படுகிறது, வெப்பமூட்டப்பட்ட நீர் மீண்டும் கடலுக்குள் தள்ளப்படுவதோடு அதனூடாக தடம் கண்டுபிடிக்க தக்க கதிர்வீச்சும் (traceable amount of radiation) கடல் நீரோடு கலக்கப்படும் வாய்ப்பிருப்பதால் அங்கு வாழும் உயிரினங்களுக்கு சென்றடைகிறது, அதனை உட்கொள்ளும் நமக்கு சிறிது சிறிதாக நச்சூட்டப்பட்டு விதவிதமான புற்று நோய் வெளிப்பாடுகள் அறியப்படலாம்.

இந்தியாவில் மொத்தம் எத்தனை அணு உலைகள் இது வரையிலும் உள்ளது? எத்தனையோ பிற கடற்கரையையொட்டிய மாநிலங்கள் இருந்தாலும் இரண்டாவது அணு உலை இங்கே தமிழகத்தில் நிறுவப்பட்டதின் சூட்சுமம் அதன் பாதுகாப்பு கருதியே என்று எண்ணுகிறேன். அதாவது எதிரி நாடுகளின் எட்டித் தொடும் தூரத்திலிருந்து விலகி அமைப்பதற்காக குறிப்பாக பாகிஸ்தான் போன்ற துஷ்ட நாடுகளின் தொட்டு விடும் தூரத்திலிருந்து என்று வைத்துக் கொள்வோம். ஆமா, அதான் இப்போ பாகிஸ்தான், சைனா போன்ற நாடுகளுக்கெல்லாம் ஸ்ரீலங்காவிற்கு நல்ல நண்பராகிப் போனதே அதே பயம் ஏன் இப்பொழுது இங்கும் வரவில்லை? அது அப்படியே இருக்கட்டும்.

அடுத்து ஏதாவது எசகு பிசகாக மனித தவறுகளோ, எந்திர கோளாறுகளாலோ, அல்லது தவிர்க்க/அணுமானிக்க முடியாத இயற்கைச் சீற்றத்தால் அணு உலைக்கு சேதம் நிகழ்ந்து போனால், மக்களுக்கென எது போன்ற பாதுகாப்பு வசதிகள் அவர்களை அந்த ஏரியாவில் இருந்து நகர்த்தி வெளி எடுத்துச் செல்லுவதற்கென திட்டங்கள் வைத்திருக்கிறோம். மேலும் இது போன்ற கண்ணுக்கு புலப்படாத கதிர்வீச்சுகள் காற்றிலும் பரவும் குணம் கொண்டதால் அணு உலைகள் எழுப்பப்படும் இடத்தை சுற்றிலும் ஒரு குறிப்பிட்ட மக்கட் தொகைக்கு மேலாக இருக்கக் கூடாது என்பதும் உலக அணு உலை அமைப்பு சட்டத்திலும் ஏதாவது இருக்கக் கூடுமே, அது இங்கே பயன்பாட்டில் உள்ளதா?

அமெரிக்காவில் ஒரு முறை ஆந்தராக்ஸ் புரளியில் இருந்த சமயம், உடனடியாக மக்களிடத்தில் கொந்தளிப்பு எல்லா கடைகளிலிலும் ஜன்னல், கதவோர ஓட்டைகளை அடைப்பதற்கான டக்ட் டேப் வித்து தீர்த்தது. அத்தனை கல்வியூட்டு, மற்றும் விழிப்புணர்வோடும் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் அதற்கென முன்னெச்செரிக்கையோடு தற்காலிகமாக பாதுகாப்பினை தரும் வீடுகளின் கட்டமைப்பையும் கொண்டிருக்கிறது. ஆனால், இன்னமும் நம்மூரில் ஓட்டு வீடுகளும், குச்சியால் வேய்ந்த ஓலை வீடுகளையும் கொண்ட அமைப்பில் இது போன்ற ஓர் அசம்பாவிதங்கள் நிகழுமாயின் எத்தனை தூரம் தாக்கு பிடிக்க முடியும்? அல்லது மக்களுக்கு உண்மையாக அணுக்கதிர் வீச்சு என்றால் என்ன, அது எது போன்ற விளைவுகளை உருவாக்க வல்லது போன்ற அடிப்படை விழிப்புணர்வு வழங்கப்பட்டிருக்கிறதா? பொது ஜனங்களின் நிலைப்பாடு அதன் உண்மையான சாதக/பாதகமறிந்து முழு மனதுடன் அதனை எதிர் கொள்ளும் நிலைக்கு நகர்ந்திருக்கிறார்களா?

இதோ அவர்கள் செய்கிறார்கள், இவர்கள் செய்கிறார்கள் என்று புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்வதனைப் போலில்லாமல், லஞ்சம் வாங்கிய அரசு/அரசியல் ஊழியரின் நிலையறிந்து அதனை அரசாங்கமே 10 அல்லது 20% லஞ்சம் வாங்கியவர்களின் ஓய்வூதியத்தில் பிடித்து கொள்ளும் என்ற நிலைக்கு நகர்ந்திருக்கும் ஒரு கேடு கெட்ட நிலையில் இது போன்ற அதி முன்னெச்செரிக்கையும்/திட்டமிடலும் தேவைப்படும் ஒரு ஹை ரிஸ்க், நச்சு தொழிற் நுட்பம் இந்த சமூக பின்னணியில் நமக்குத் தேவையா?

மாறாக வருடத்தின் 300 நாட்களிலும் அடித்து கொளுத்தும் சூரிய வெப்பக் கதிர்களிலிருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையான மின் உற்பத்தியை பெறத் தக்க சோலார் பானல் திட்டத்தினையும், காற்றாலை, ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டங்களையும் (Wind, Water and solar) மேலும் முடிக்கி விட்டு சுற்றுப்புறச் சூழல் பேணலுடன் மக்களின் ஆரோக்கியம் பேணும் திட்டங்களில் இந்த 42,000 ஆயிரம் கோடிகளை கொட்டினால் என்ன? இதன் மூலமாக இந்த அணு உலையின் இயக்கம் 50 வருடங்களுக்குப் பிறகு மண்டையடியுடன் வைத்து மேய்ப்பதற்கென செலவும், ரிஸ்கிலிருந்தும் தப்பிக்கலமால்லவே!

இந்த மொத்த திட்டமும் எனக்கென்னவோ கண்ணை இழந்து சித்திரத்தை வாங்குவதற்கும், கொள்ளிக்கட்டையால் தலையை சொறிந்து கொள்வதற்கும் இணையாகவே வைத்து பார்த்துக் கொள்ளத் தோன்றுகிறது.

கீழே உள்ள படம் இப்போ ஜப்பானில் நடந்த அணு உலை கசாமுசாவில் கடலின் மறுகோடியில் இருக்கும் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திற்கு 10 நாட்களுக்குள் ட்ரெசபில் கதீர்வீச்சு அறியப்பட்டதாக புரெஜெக்ட் செய்யப்பட்டது...மேலும் வாசிக்க:

1) டாக்டர் அப்துல் கலாம் -  

Nuclear power is our gateway to a prosperous future

2) பேரா - டிரேந்திர ஷர்மா - Why Say NO to Nuclear – Prof. Dhirendra Sharma 


4) நமது பதிவர் கையேடு (இயற்பியலர்) - 

இந்தியா - அமெரிக்க அணு உடன்படிக்கை மற்றும் இந்திய அணு ஆற்றல்..!!??29 comments:

ஜோதிஜி திருப்பூர் said...

இந்த முறை படித்தவுடன் நக்கல் நையாண்டி போன்ற எதுவும் தோன்றாமல் ஒரு கனத்த மனதோடு யோசிக்க வைத்து விட்டாய் ராசா.

மனித குலத்தை, மானிட தர்மத்தை, இயல்பான வாழ்க்கை நெறிகளைப் பற்றி பேசுவது எழுவது என்பது கூட பாவமாக போய் விட்டது என்ற சூழ்நிலையில் தான் நாம் அணைவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று நினைக்கின்றேன்.

கையேடு கட்டுரை வாசித்து முடித்தவுடன் இந்த மனுஷன் இத்தனை நாளாக எங்கிருந்தார் என்று தோன்றியது. உன் ஆழ்ந்த வாசிப்பு அனுபவத்திற்கு என் வணக்கம்.

ஜோசப் பால்ராஜ் இரஞ்சித் பற்றி வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய வார்த்தைகள் அத்தனையும் உண்மை.

தொடக்கம் முதல் நான் யோசித்துக் கொண்டிருப்பது ஏன் இந்த புஷ் என் புண்ணாக்கு ஆட்சியில் இருந்த போது இந்த ஒப்பந்தத்திற்கு இத்தனை மெனக்கிடுறார் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்.

இப்போது அவர் ஆட்சியில் வெளியுறவுத்துறை செயலாளர் பொறுப்பில் இருந்த அம்மிணி வெளியிட்டுட்டுள்ள புத்தகத்திலும் இதைப்பற்றி தான் விலாவாரியாக கஷ்டப்பட்டு சாதித்த புராணத்தை பாடியுள்ளார்.

ஜோதிஜி திருப்பூர் said...

ஆனாலும் என்னுள் இருக்கும் சில கேள்விகள்.

1. கூடங்குள்ம் அடிக்கல் நாட்டியது ராஜீவ் காந்தி. ஏறக்குறைய 20 வருடங்கள் இந்த பூதத்தை எதிர்க்காமல் இப்போது மட்டும் இத்தனை வலுவாக எதிர்க்க காரணம் என்ன?

2. இடையிலே ரஷ்யா துண்டாக உடைந்த போது பத்தாண்டுகள் இந்த திட்டம் கிடப்பில் போட்ப்பட்டு கிடந்தது. ஒரு நல்லவர் கூட வாய் திறக்க வில்லையே ஏன்?

3. திட்ட மதிப்பீட்டுக்கும் இப்போது உருவான மதிப்பீட்டுக்கும் உண்டான வேறுபாடு? இதற்காக யார் இத்தனை பெரிய மூதலீட்டை முடக்கி அமைதி காத்து இருந்தார்கள்? அதன் பின்புலம் தான்?

4. ஏதோவொரு ஆலை வரப்போகுது என்று நினைத்து இருந்தோம் என்று கிராம மக்கள் நினைத்துக் கொண்டு இருந்தார்களாம்? அந்த அளவுக்கு நம் மக்கள் கேவலமாக யோசிக்கக்கூட தெரியாத அளவுக்கு இருந்தார்களா?

5. இந்த நிமிடம் வரைக்கும் இந்த ஒப்பந்த ஷரத்துக்களை அமெரிக்க செனட்டர்கள் துவைத்து காயப் போட்டு தான் அனுமதித்து இருப்பார்கள். ஏறக்குறைய அங்கே வெளிப்படையான நிர்வாகத்தில் இது சாத்தியம். அவர்களுக்கு ஒரு நல்லது என்றாலும் கூட அத்தனை பேர்களின் ஓட்டுகளும் முக்கியம்.

6. ஆனால் இந்த ஓப்பந்த ஷரத்துகளில் என்ன என்ன இருக்கிறது? இதெது அமெரிக்காவுக்கு சாதக அம்சம் என்று இப்போது கூவிக்கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட இந்த நிமிடம் வரைக்கும் பொது மக்களுக்கு கொண்டு போகக் காணோம். எப்போதும் போல மானாட மயிலாட கணக்கு போல ஆளாளுக்கு மைக் பிடித்து முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜோதிஜி திருப்பூர் said...

7. ஸ்டெர்லைட் ஆலை முதலாளிகள் (சரத்பவாருக்கு முக்கிய ஷேர் அளவு உண்டு) வைகோ விடம் என்னன்வோ பேரம் பேசினார்கள். ஆனால் மனிதன் கடைசி வரைக்கும் தில்லாக நின்று ஜெயித்தார். அவர் கூட இதில் பங்களிப்பு குறைவு தான். ஆனால் இன்று முழங்கிக் கொண்டு இருக்கிறார்.

8. முடக்கப்பட்ட யூரேனியத்தை இனிமேல் என்ன செய்ய முடியும்?

9, மாற்று ஏற்பாடு என்ன? என்பதை எவரும் சொல்ல மாட்டேன் என்கிறார்களே?

10. அதில் பணிபுரிபவர்களுக்கு கூட ஒரு ஆபத்தின் மையப் புள்ளியில் மேல் அமர்ந்திருக்கின்றோம் என்ற நினைப்பு வராதா? அதென்ன பணியாளர் குடியிருப்புகளை மட்டும் பல கீலோமீட்டர் தள்ளிப் போய் கட்டி வைத்துள்ளார்கள். மற்ற தொழில் போல உள்ளே கட்டி கொடுக்க வேண்டியது தானே? உயிர் தப்பி விடலாம் என்ற எண்ணமா?

ஜோதிஜி திருப்பூர் said...

11. கையேடு சொன்னது முற்றிலும் உண்மை. தமிழ்நாட்டில் மின் தடைக்கு முக்கிய காரணம் பராமரிப்பு என்பதே இல்லை. இத்துப் போன ஒயர்களும் செத்துப் போன எண்ணங்களுமாக உள்ளவர்கள் தான் இந்த மின்சாரத்துறையை கையாண்டு கொண்டு இருக்கிறார்கள். எவன் செத்தா நமக்கென்ன என்கிற ரீதியில் தான் இந்த துறையே இருந்தது. இந்த லட்சத்தினத்தில் நம்ம மாமா ஆற்காடு வீராச்சாமி அவர் பங்குக்கு முக்கால்வாசி நிர்வாகத்தை மூத்திர சந்துக்குள் கொண்டு போய் நிப்பாட்டி விட்டு போய்விட்டார்.

ஜோதிஜி திருப்பூர் said...

ஆத்தா ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திற்கு ஒருவர் (ஐ ஏ எஸ்) இருப்பாரா என்றே தெரியவில்லை. அதற்கு மேலும் பலரிடம் கேட்டுப் பார்த்தேன். காற்றாலை மூலம் வரும் மின்சாரத்தை பகிர்ந்து கொடுக்க விருப்பம் இல்லை. அதை கொண்டு சேர்க்க ஆளும் இல்லை. அவர்களுக்கு முறைப்படி பணம் கொடுக்க அரசாங்கத்திற்கு விருப்பமும் இல்லை. அப்புறம் எப்படி மின் தடை வராமல் இருக்கும். இத்தனை குளறுபடிகள் இருப்பதால் தான் மின் தடைக்கு அணு உலை முக்கிய பங்காற்றும் என்று ஆளாளுக்கு கூவிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜோதிஜி திருப்பூர் said...

ஏதாவது ஒரு பது வீடு அல்லது அடுக்கு மாடி குடியிருப்பு கட்டும் போது மின்சாரத்தின் மூலம் பயன்படுத்தும் உபகரணங்கள் இருக்கிறதா? அதற்கு முன் உரிமை உண்டா என்று பார்த்தால் பதில் பூஜ்யத்ம.

விடுப்பா.

நாம் செத்துப் போய்விடுவோம்.

நம்ம புள்ளகுட்டிகளுக்கும் இது போன்ற ஏதோவொன்றால் வந்து சேர்ந்து விடுவாங்க. போபால் விஷவாயு சம்பவமே நம்ம ஜனநாயக காவல்ர்களின் மனசாட்சி உறுத்தவில்லை. இது போன்ற விபத்து நடந்தால் மட்டுமா உரைக்கப் போகின்றது?

எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே இருக்கும்

ஜோதிஜி திருப்பூர் said...

அடுக்கு மாடி குடியிருப்பு கட்டும் போது சூரிய ஒளி மின்சாரத்தின் மூலம் பயன்படுத்தும் உபகரணங்கள் இருக்கிறதா

கையேடு said...

அப்துல் கலாமும் அரசின் மொழியைப் பேசத்துவங்கிவிட்டார்..

வளர்ச்சி என்ற ஒன்றை முன்மொழிந்து அது நோக்கி ஒரு தேசத்தையே கொண்டு செல்லும் இந்த அமைப்பை இயக்குகின்ற மாயச் சிந்தனைவலை குறித்து எப்போதும் ஆச்சர்யமாக இருக்கிறது. வேற என்ன சொல்ல..

என் இடுகைக்கு தொடுப்பு கொடுத்ததற்கும் நன்றி.

ஜோதிஜி திருப்பூர் said...

வளர்ச்சி என்ற ஒன்றை முன்மொழிந்து அது நோக்கி ஒரு தேசத்தையே கொண்டு செல்லும் இந்த அமைப்பை இயக்குகின்ற மாயச் சிந்தனைவலை குறித்து எப்போதும் ஆச்சர்யமாக இருக்கிறது. வேற என்ன சொல்ல..

ஆழ்ந்த கருத்து. இது என்னுடைய பாணியில் சொல்கின்றேன் ரஞ்சித்.

ஒருவன் எத்தனை ஒழுக்கமாக உண்மையாக வாழ்ந்து இருக்கின்றான் என்பது குறித்து சமூகத்திற்கு மட்டுமல்ல குடும்ப உறுப்பினர்களுக்கு கூட அக்கறையில்லை.

சொந்த வீடு, வாகனம், வங்கி கணக்கு இது இருந்தால் தான் அவன் பிழைக்கிற உருப்படியான பிள்ளை. இல்லாவிட்டால் அது தறுதலை.

வீடே இப்படிப்பட்ட சிந்தனை கொண்டிருக்கும் போது நாடு எப்படி இருக்கும்? எந்த பாதையில் செல்லும்.

வழக்கறிஞர் சுந்தரராஜன் said...

நல்ல கட்டுரை. என் பேஸ்புக் சுவரில் இணைத்துள்ளேன்.

Avargal Unmaigal said...

உங்களின் கடின உழைப்பில் வெளி வந்த மிக அருமையான கட்டுரை வாழ்த்துக்கள். அதற்கு ஜோதிஜி அவர்களின் பின்னுட்ட கேள்விகளும் சிந்திக்க தூண்டுகின்றன. இந்த கட்டுரை பலபேரை சென்று அடைய வேண்டும் என்று நான் எனது பேஸ்புக்கிலும், கூகுல் பிளஸிலும் ஸேர் செய்கிறேன். அதற்கு நீங்கள் மறுப்பு தெரிவிக்கமாட்டீர்கள் என் கருதுகிறேன். உங்களின் நல்ல முயற்சிக்கு வாழுத்துக்கள். இந்த் மாதிரி பல கட்டுரைகளை எழுதுங்கள்

Avargal Unmaigal said...

உங்களின் கட்டுரை பலபேரை சென்று அடைய வேண்டும் எனவே அதன் தலைப்பை சிறிது மாற்றி ( கொஞ்சம் கவரும் வண்ணம் ) மீண்டும் வெளியிடுங்கள். நம்ம தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்ல வேண்டும் என்றால் அதில் கவர்ச்சி இல்லை என்றால் அதை படிக்க கூடமாட்டார்கள். இது என் அனுபவம். நான் தவறாக சொல்லி இருந்தால் மன்னியுங்கள்

Rathi said...

அணுவியல், அரசியல் இரண்டுக்குமிடையே Hmuman Catastrophe, மனிதப்பேரழிவு இருக்குங்கிறத வரலாற்று உண்மைகளில் இருந்து கண்கூடாக பார்த்த பின்னும், கூடன்குளத்தின் அணுமின் நிலையம் என்கிற காலனை காலால் மிதிக்கலாமென்கிற மாதிரி அப்துல்கலாம் ஆராய்ச்சிகட்டுரை எழுதுவது பரிதாபத்துக்குரியது.

Nuclear Medicine - MRI (Magnetic Resonance Imaging) அதையே குறிப்பிட்ட வருடங்களுக்கு இத்தனை முறைதான் செய்யவேண்டும் என்கிற ஒரு வரையறை உண்டு. வாதையின் வலியும், உபாதையும் தாங்கமுடியாத போதுதான் அதுவும்!!! உயிர் காக்கும் நோக்குடன்.

7 Xrays=1 MRI என்று சொல்வார்கள். காரணம் அதன் கதிர்வீச்சு புற்று நோயை உருவாக்கலாம் என்கிற ஆதாரம் இருப்பதால்.

இது இப்படியிருக்க, ஜப்பானின் ஃபுக்குஷிமா அணு உலை அழிவு குறித்த விழிப்புணர்வில் ஐரோப்பிய நாடுகள் அணுமின் நிலையங்களை மூடிவிட பகீரத பிரயத்தனம் செய்யும் போது, இதை (அப்துல் கலாம் ஆய்வறிக்கை) படிக்கும் நாங்கள் என்ன நினைப்பது என்று யோசிக்க தோன்றுகிறது!!!

ஐயா, உங்கள் அரசியல், அணுவியல் இரண்டுமே மிகப்பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மனிதப்பேரழிவை தவிர வேறெதையும் புடுங்கியதில்லை என்பதை சொல்லாமல் இருக்கமுடியவில்லை :(((

Thekkikattan|தெகா said...

ரதி, மிகச் சரியாக எடுத்துச் சொன்னீங்க. எனது நிலை என்னவென்றால் ஒவ்வொரு அரசியல் கட்ட நகர்விலும் அவர்களுக்குத் தேவையான கல்லா நிரப்பும் பணியில் அதற்குண்டான விஞ்ஞானிகளையும் தங்களுக்காக பேச வைத்து இது போன்ற அதி பாதுகாப்புணர்வோடு இருக்கக் கூடிய தொழிற் நுட்பத்தை கூட நிறுவிவிட்டு, எப்பொழுதும் போலவே சாலையோரச் சாக்கடைக் குழி திறந்து வைத்து மனிதனை சாகடிக்கும் மெத்தனத்தோடு கையாளும் ஆட்டியூட்டில் இதெல்லாம் தேவையா என்பதே...

*மெத்தனங்களின் உச்சத்திற்கு நண்பர் கையேடுவின் கட்டுரைப் பாருங்க... இலை தழை கொடிகளை கடத்திச் செல்லும் குப்பையைப் போல அணுக் கழிவினை கையாளும் விதத்தினை* :(

Thekkikattan|தெகா said...

முண்டாசு,

என்னய்யா வெறும் கேள்வியா கேட்டு வைச்சிருக்கிறீரு... :)

//தொடக்கம் முதல் நான் யோசித்துக் கொண்டிருப்பது ஏன் இந்த புஷ் என் புண்ணாக்கு ஆட்சியில் இருந்த போது இந்த ஒப்பந்தத்திற்கு இத்தனை மெனக்கிடுறார் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்.//

இதில என்ன பெருசா சிந்திக்க இருக்கு. குச்சி ஐஸ் விக்கிறவனுக்கு கையில இருக்கிற அத்தனையும் வித்து தீர்க்கணும், அவன் கையில இருக்கிற சரக்கு அத்தனையும் சுத்தமா தண்ணீரில் தயாரிக்கப்பட்டு சுகாதாரமான முறையில்தான் இருக்கும். அவன் ஒரு வியாபாரி. அவ்வளவுதான்.

மற்ற இதர புண்ணாக்கு உலகமைதி, மாசற்ற/பாதுகாப்பான எரிபொருள் தயாரிப்பு, நீண்ட காலத் தீர்வு என்பது எல்லாம் யாருக்குத் தேவை. எங்க உலகில் பொருளாதார நழிவு. அதனை எடுத்து நிற்க வைக்க வேண்டுமாயின், இருக்கும் விலை உயர்ந்த தொழிற் நுட்பங்களை விற்றும் ஆக்கிக் கொள்வோம் அது பாதுகாப்பிற்கு உகந்ததாகவும் இல்லையென்றாலும்...

வாங்கி பயன்படுத்தப் போகும் நமக்குத்தான் அக்கறை இருக்கணும். எது நீண்ட காலத் தேர்வு இருக்கும் மக்கள் தொகையில் அடர்த்தியைக் கொண்டு இது பாதுகாப்பானதா, எடுத்து செலுத்தி முடிக்க முடியுமா என்பதிலுமெல்லாம்.

Thekkikattan|தெகா said...

//1. கூடங்குள்ம் அடிக்கல் நாட்டியது ராஜீவ் காந்தி. ஏறக்குறைய 20 வருடங்கள் இந்த பூதத்தை எதிர்க்காமல் இப்போது மட்டும் இத்தனை வலுவாக எதிர்க்க காரணம் என்ன?//

ஏன் இப்பொழுது? நல்ல கேள்வி... இதற்கிடையில் நிறைய நிகழ்ந்திருக்கிறது. நேரடியாகவே மக்கள் உணரும் வகையில் இல்லையா? ஃபுகுஷிமாவில் நடந்தது உலகையே பதற வைக்கவில்லையா... ஒரு அணுகுண்டு தலையில் விழுந்த பதை பதைப்புடன் உணர வைத்தது. சுனாமியே நாம் கையறு நிலையிலிருந்து வாயடைத்து நிற்கும் பொழுது அதனைக் காட்டிலும் பேரிடியாக நாம் உருவாக்கிய இந்த அணு உலை 200 கி.மீ சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களை உடனே விலகிச் செல்லுமாறு கூறினால் எப்படி இருக்கும்.

நிச்சயமாக ஒரு சாதாரணனுக்கும் விசயம் சென்றே அடையும். எத்தனைக்கு எத்தனை மக்கள் விழிப்புணர்வு அடைகிறார்களோ அந்தளவிற்கு எதிர் கால பேராபத்துகளை நாம் எதிர் கொள்ள முடியும்.

Rathi said...

இல்லை தெக்கி, இது மெத்தனம் என்று சொல்லி ஒரு சின்ன தப்பிதம் இல்லை. மிகப்பெயரிய தவறொன்றை காலங்காலமா அரசியல்வாதிகள் இழைக்க நாங்களும் பார்த்துக்கொண்டிருந்தே பழக்கமாயாச்சு. அது மெத்தனம் என்பதை விட அடிபணிவது.... ஏன் அடிபணியணும் என்றால் எங்களிடம் மேற்குலகுடன் எம் மக்கள் நலன் சார்ந்து பேரம் பேசவுமான வலுவான அரசியல் கொள்கைகள், பொருளாதார திட்டங்கள் இல்லை! அது ஏன் இல்லை, காரணம், மூன்றாம் உலக அரசியல் மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. மக்களால் அரசியல்வியாதிகளுக்காய் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவதால். அரசியல்வாதிகள் சுய நலம் மட்டுமே நோக்கி சிந்திப்பதால்.

Thekkikattan|தெகா said...

//அதென்ன பணியாளர் குடியிருப்புகளை மட்டும் பல கீலோமீட்டர் தள்ளிப் போய் கட்டி வைத்துள்ளார்கள். மற்ற தொழில் போல உள்ளே கட்டி கொடுக்க வேண்டியது தானே? உயிர் தப்பி விடலாம் என்ற எண்ணமா?//

முண்டாசு காற்று புக முடியாத இடத்துக்குள்ளர கொஞ்சம் ஆக்சிஜன் புகுந்து பொழங்கிட்டு இருக்கும்ல அந்த கதைதான் இந்த கதிர்வீச்சு விசயமும். இதெல்லாம் நகைப்புக்குறியது.

இன்னொன்னு தெரியுமா, எந்த கம்பெனியும் காப்பீட்டு கம்பெனிகளும், இது போன்ற அணு உலைகளை சுற்றி வாழும் மக்களுக்கு காப்பீடு கொடுக்க முன் வருவதில்லையாமா? அது ஏன் அப்படி? யோசிச்சிப் பாருங்க... வெவரமய்யா... விவரம் .

ரெவெரி said...

நம்மளை எல்லாம் கனா காணச்சொல்லி விட்டு அணுவன்றி வேறெதுவும் இல்லை என்று குறுகிய கண்ணோட்டத்தில்...

சிங் எழுதிய கட்டுரையில் கையெழுத்து மட்டும் தான் இவரது ...இவரது முத்திரையே இல்லையோ என்ற எண்ணத்தை எனக்குள் உருவாக்கி விட்டார் கலாம்...

A big let down..

இந்த பூனை கண்ணை மூடிக்கொண்டு நம்மையும் மூட சொல்கிறது...நம் சமாதியின் மூடியை...

ரெவெரி said...

BTW...அழகாய் எழுதியுள்ளீர்கள்...

Thekkikattan|தெகா said...

//நம்மளை எல்லாம் கனா காணச்சொல்லி விட்டு அணுவன்றி வேறெதுவும் இல்லை என்று குறுகிய கண்ணோட்டத்தில்...

சிங் எழுதிய கட்டுரையில் கையெழுத்து மட்டும் தான் இவரது ...இவரது முத்திரையே இல்லையோ என்ற எண்ணத்தை எனக்குள் உருவாக்கி விட்டார் கலாம்...
A big let down.//

எடுப்பார் கைபிள்ளை கனவு கலாம் சார்...

அரசியல் வாதிகள் மேலிரிந்து கீழ், இடமிருந்து வலமென்று இவரை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பிஜேபி காலத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்தியர் என்ற போர்வையில் அப்துல் கலாம் பெயருக்கு பின்னால் அவர்கள் ஒழிந்து கொண்டு காரியம் சாதிக்க இவர் உதவியாக இருந்தார்...

இப்பொழுது காங்கிரஸ் தமிழ் என்ற இவரின் அடையாளத்தைக் கொண்டே முதுகில் குத்த உதவியாக நிற்கிறார். சுய சிந்தனை என்பது அறவே அற்று போய்விட்டதா?

Thekkikattan|தெகா said...

//வளர்ச்சி என்ற ஒன்றை முன்மொழிந்து அது நோக்கி ஒரு தேசத்தையே கொண்டு செல்லும் இந்த அமைப்பை இயக்குகின்ற மாயச் சிந்தனைவலை குறித்து எப்போதும் ஆச்சர்யமாக இருக்கிறது. //

கையேடு, இதனில் என்ன பெரும் வருத்தமளிக்கக் கூடிய விசயமென்றால். அந்த மாய வலையில் மக்கள் பெருமளவில் நேசிக்கும் எளிமையான மனிதர்களும் அதற்குள் புழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை உணராமல் இதோ அந்த கடவுளே வாயைத் திறந்து விட்டது என்ற மயக்கத்தில் வீழ்ந்து விடுவதுதான்.

விஞ்ஞானிகள் இரு வகை உண்டு. மக்களுக்காகவென்று ஒரு வகை அரசாங்கத்திற்கென ஒன்று. இது யார் எந்த ஸ்டாண்டை எடுக்கிறார்கள் என்பதிலேயே அந்த தனிமனிதனின் உண்மையான குண நலன் அமைந்திருக்கிறது.

வவ்வால் said...

தெ.கா,

இப்போ நீங்க என்ன சொல்லி இருக்கிங்களோ இதே கருத்தினை வைத்தே ஒரு பதிவருடன் இந்த வாரம் முழுக்க மல்லுக்கட்டிக்கிட்டு இருந்தேன் ,அப்பவும் அவர் எனக்கு அடிப்படை அறிவியல் தெரியவில்லைனு சொல்லிகிட்டு இருந்தார், அதாவது அணு மின்சாரம் என்ற அறிவியலை நான் எதிர்ப்பதாக:-))


//மாறாக வருடத்தின் 300 நாட்களிலும் அடித்து கொளுத்தும் சூரிய வெப்பக் கதிர்களிலிருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையான மின் உற்பத்தியை பெறத் தக்க சோலார் பானல் திட்டத்தினையும், காற்றாலை, ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டங்களையும் (Wind, Water and solar) மேலும் முடிக்கி விட்டு சுற்றுப்புறச் சூழல் பேணலுடன் மக்களின் ஆரோக்கியம் பேணும் திட்டங்களில் இந்த 42,000 ஆயிரம் கோடிகளை கொட்டினால் என்ன? இதன் மூலமாக இந்த அணு உலையின் இயக்கம் 50 வருடங்களுக்குப் பிறகு மண்டையடியுடன் வைத்து மேய்ப்பதற்கென செலவும், ரிஸ்கிலிருந்தும் தப்பிக்கலமால்லவே!//


நான் கொஞ்சம் விரிவா சூரிய சக்தி மின்சாரம் பத்தி பதிவு போட்டு விட்டு இங்கே வந்தால் நீங்க அதையே சொல்லி இருக்கிங்க!


சூர்ய சக்தி மின் சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது. என்றப்பதிவைப்பாருங்க.

கலாம் இப்படித்தான் சொல்வார்,போக்ரான் சோதனை செய்தவரிடம் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும். இத்தனைக்கும் அவர் ஏர்ரொநாடிக்கல் தான் , அப்போ அரசின் அறிவியல் ஆலோசகர் பதவியில் இருந்ததால் அணு விஞ்ஞானினு சொல்றாங்க.

சீனி மோகன் said...

உங்கள் கட்டுரையின் முக்கியத்துவம் கருதி என்னுடைய முகப்புப் புத்தகத்தில் இணைப்பு கொடுத்துள்ளேன். கட்டுரையின் பின்னிணைப்புகளும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. பின்னூட்டங்களும் ஆரோக்கியமான விவாதத்திற்கு இட்டுச் செல்கின்றன.

Thekkikattan|தெகா said...

நன்றி - வழக்கறிஞர் சுந்தரராஜன்...

அவர்கள் உண்மைகள் - நன்றி - என்ன கவர்ச்சியான தலைப்பு வைக்கிறது :)

அருள் said...

அணுமின்சாரக் கட்டுக்கதைகளும் கூடங்குளமும்

http://arulgreen.blogspot.com/2011/11/blog-post.html

சீனி மோகன் said...

1991 - இல் நான் எழுதிய இந்தச் சிறுகதையை நண்பர்கள் சற்று நேரம் ஒதுக்கி படியுங்கள்.

http://seenimohan.blogspot.com/2011/11/blog-post_13.html

சீனி மோகன் said...

இந்தக் கதையின் இணைப்பைத்தான் முன்பு தவறாகக் கொடுத்துவிட்டேன். கதையின் தலைப்பு - இறுதி மனிதன்
http://seenimohan.blogspot.com/2011/11/blog-post_16.html

Miguel Boones said...

இல்லை தெக்கி, இது மெத்தனம் என்று சொல்லி ஒரு சின்ன தப்பிதம் இல்லை. மிகப்பெயரிய தவறொன்றை காலங்காலமா அரசியல்வாதிகள் இழைக்க நாங்களும் பார்த்துக்கொண்டிருந்தே பழக்கமாயாச்சு. அது மெத்தனம் என்பதை விட அடிபணிவது.... ஏன் அடிபணியணும் என்றால் எங்களிடம் மேற்குலகுடன் எம் மக்கள் நலன் சார்ந்து பேரம் பேசவுமான வலுவான அரசியல் கொள்கைகள், பொருளாதார திட்டங்கள் இல்லை! அது ஏன் இல்லை, காரணம், மூன்றாம் உலக அரசியல் மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. மக்களால் அரசியல்வியாதிகளுக்காய் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவதால். அரசியல்வாதிகள் சுய நலம் மட்டுமே நோக்கி சிந்திப்பதால்.

Related Posts with Thumbnails