Monday, December 26, 2011

எஸ். ராவும் முல்லை பெரியாறும்_தெகாவும்

மனிதர்கள் குறைந்து மனிதம் அரிதாகவே காணப்பெறும் நிலை பரவலாக கண்ணுறும் கால கட்டமிது. முல்லை பெரியாறு அணை கட்டியெழுப்பிய பென்னிகுக் போன்ற மனிதர்களும் இந்த உலகில் வாழ்ந்திருக்கிறார்கள் என்று அறிய நேரும் பொழுது, மனிதர்களின் மனத்தினை எத்தனை எளிதாக நிறமூட்டி பார்த்து விட முடிவதாக எண்ணச் செய்கிறது.

மனம் என்பதிலிருந்துதான் ஆலமரத்திற்கான பெரும் விருட்சமும் விதையாகிறது, கடுகினைப் போன்று சிறுத்து பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் குடிக்கும் சுயநலத்தமான எண்ண விதைகளும் சூல் கொள்கிறது. தமிழக பகுதியில் வசிக்கும் வன விலங்குகள் குறிப்பாக யானை/காட்டெருமைகளைப் போன்ற பெரிய விலங்குகள் கோடையின் வறட்சி பொருட்டு அவைகள் எல்லை கடந்து பெரும் வலசையேற்றம் செய்து கேரளா மற்றும் கர்நாடக காடுகளுக்கு சென்று வருகிறது. அவைகளுக்கு கிடைக்கும் உரிமை கூட மொழியறிவின் மூலமாக உரையாடத் தெரிந்த மனித மனங்களுக்கு நீரின் அவசியமுணர முடியவியலாதது விந்தையிலும் விந்தைதானே!

மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதற்கான நீதிக் கதையே இன்று நடந்து வரும் முல்லைப் பெரியாறு தண்ணீர் பிரச்சினை. ஒரு மனிதர் அந்த அணையை கட்டியெழுப்ப தனது சொத்தையே விற்றழித்து ஊருக்காக அதுவும் பிழைப்பு நடத்த வந்த இடத்தில் மனிதத்தை ஆழ ஊன்றிச் சென்றிருக்கிறார். அதனை நன்றாகவே உள்வாங்கிய அந்தப் பகுதி மக்கள் பென்னிகுக்கையும் ஒரு கடவுளாக்கி விட்டார்கள்.

இதன் நுண்ணிணைப்பு அறியாது இன்றைய அரசியல் சுயநலமிகள் பென்னிகுக்கிற்கும் அந்தப் பகுதி மக்களுக்குமிடையே உள்ள அந்த நுண்ணிழையினை அறுக்க முயற்சிக்கிறார்கள். அதன் விளைவு எப்படியாக இருக்கும் என்பதற்கு சான்றாக சமீபமாக சாரை சாரையாக ஆயிரக்கணக்கில் எல்லைப் பகுதியில் கொந்தளித்து நிற்கும் மக்களின் நன்றியுணர்வே அதற்கு சாட்சி.

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய சிறுகதை தொகுப்பான “ஆயுத எழுத்து” புத்தகம் மீண்டும் என் கண்ணில் பட்டது. அப்படியே புரட்டிக் கொண்டு வரும் பொழுது இந்த காலக் கட்டத்திற்கு தேவையான இந்த முல்லை பெரியாறு பற்றியான ”நீரில் மிதக்கும் நினைவுகள்” கட்டுரையை ஒத்த எழுத்து கவர்ந்தது. ஏதாவது ஒரு வகையில் ஒவ்வொருவரும் முல்லை பெரியாறின் வரலாறு தெரிந்து கொள்ளும் அவசியத்தில் இருப்பதால் மெனக்கெட்டு இதனை இங்கு மறு தட்டச்சு செய்திருக்கிறேன்.

பென்னிகுக் பற்றி தெரிந்து கொள்ளவும் அந்தப் பகுதி மக்களின் இதயத்தில் எப்படி அவர் சிறு கடவுளர் ஆகிப்போனார் என்று தெரிந்து கொள்ளவும் அவசியம் வாசிங்க. நன்றி - எஸ். ரா!

***************************************


நீரில் மிதக்கும் நினைவுகள் - by எஸ். ராமகிருஷ்ணன்

சில மாதங்களுக்கு முன் ஒரு நண்பரின் திருமண நிகழ்சிக்காக தேனிக்கு அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்றிருந்தேன். மணப் பெண்ணின் தந்தை பெயர் பென்னிகுக் தேவர் என்றார்கள். விசித்திரமாகயிருந்தது. நான் சற்றே தயக்கத்துடன் திரும்பவும் அவரது பெயரைக் கேட்டேன். அவர் தனது திருக்கை மீசையைத் தடவியபடியே “பென்னிகுக்” என்றார். தோற்றத்துக்குத் தொடர்பில்லாத பெயராக இருக்கிறதே என்று நான் யோசிப்பதை உணர்ந்தவரைப் போல, இன்னொரு இளைஞரை அழைத்து, “மாப்பிள்ளை, உன் பேரைச் சொல்லுப்பா” என்று அவர் சொன்னது “லோகந்துரை” என அந்த இளைஞன் மிக இயல்பாகச் சொன்னார். என்னால் நம்ப முடியவில்லை இரண்டும் ஆங்கிலோயர்களின் பெயர்கள்!

கருப்பணன், கலுவன், பெருங்காமன், விருமாண்டி, மூக்கவிருமன், தொத்தன் என குலசாமிகளின் பெயர்களுக்கு ஊடாக லோகந்துரையும் பென்னிகுக்கும் எப்படிக் கலந்தார்கள் என்று ஆச்சரியமாகயிருந்தது. என்னோடு வந்திருந்த கவிஞர் வெங்கடேசன், ‘இவை இரண்டும் பெரியாறு அணையைக் கட்டிய வெள்ளைக்கார இன்ஜினீயர்களின் பெயர்கள்’ என்றதோடு, ‘இதை விடவும் ஒரு ஆச்சரியம் இருக்கிறது பார்க்கலாம், வாருங்கள்’ என்று அழைத்துக்கொண்டு போனார்.

சாலையோரத்திலிருந்த டீக்கடையினுள் நுழைந்தோம்.லேசான இருட்டு படிந்த திண்டில் உட்கார்ந்தபடி சுவரைக் காட்டியபோது, அங்கே வேலும் மயிலோடு நிற்கும் முருகன் படமும், வழுக்கை விழுந்த ஏறு நெற்றியும் தொங்கு மீசையும் இடுங்கிய கண்களுடன் கறுப்புகோட் அணிந்த பென்னிகுக்கின் புகைப்படமும் தொங்கிக்கொண்டிருந்தன. அதனடியில் ‘கர்னல் ஜெ.பென்னிகுக்’ எனச் சிறியதாக எழுதப்பட்டிருந்தது. தெய்வ சமானம் கிடைத்த வெள்ளைக்காரனைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

”எதற்காக இந்த வெள்ளைக்காரன் படத்தை கடையில் மாட்டிவைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். டீக்கடைக்காரன் பாலைக் கொதிக்கவிட்டபடியே ”பென்னி துரை மட்டுமில்லேன்னா இந்நேரம் இந்தச் சீமையே நாதியத்துப் போயிருப்போம்” என்றவன்., “ஒண்ணு ரெண்டுல்ல, எத்தனை ஆயிரம் பேரு ராத்திரியும் பகலும் காட்டுக்குள்ளயே கிடந்து கல்லு மண்ணு சுமந்து போட்டுக் கட்டுன அணை தெரியுமா? ஆம்பளை, பொம்பளை பச்சைப் பிள்ளைகள்னு செத்த உசிரை கணக்குப் பாக்க முடியாது - அப்படி உயிர்ப்பறி கொடுத்து கட்டினதுய்யா பெரியாறு அணை!” என்றபடியே வெந்நீர்விட்டுக் கண்ணாடி டம்பளர்களைக் கழுவிக்கொண்டிருந்தான்.

அன்று இரவெல்லாம் பென்னிகுக் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். நண்பர் வெங்கடேசன் தன் வீட்டில் இருந்த பெரியாறு அணை பற்றிய ஆவணங்கள், ஒரிஜினல் ரிக்கார்டுகளின் பிரதிகளைக் காட்டிக்கொண்டிருந்தார். “பென்னிகுக்குக்கு ஒரு சிலை இருக்கிறது. மலையில் அணைக்கட்டு கட்டும் நாட்களில் இறந்துபோனவர்களின் சமாதிகள் கவனிப்பாரற்று இருக்கின்றன.”

அன்று முதல் பென்னிகுக்கைக் பற்றித் தெரிந்து கொள்வதற்காக மதுரை மாவட்டம் முழுதும் அலைந்துதிரியத் துவங்கினேன். தேனி, மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமும் பென்னிக்குக்கைப் பற்றி எத்தனையோ கதைகளை வைத்திருக்கின்றன. தங்கள் மூதாதையர்கள் பென்னிகுக்கோடு சேர்ந்து வேலை செய்தவர்கள் என்பதற்காகப் பெருமைப்பட்டுக் கொண்டார்கள். அணைக்கட்டு வேலைக்காக கிராமம் கிராமமாக ஆட்களைத் திரட்டி வேலைக்குக் கொண்டுபோய், அவர்களது நல்லது, கெட்டதுகளைப் பகிர்ந்துகொண்ட பேய்காமத் தேவரைப் பற்றிய செய்திகளும் வியப்பாகயிருந்தன. நேற்று நடந்து முடிந்த சம்பவத்தைச் சொல்லுவதுபோல அவர்கள் பென்னிகுக்கைப் பற்றி நினைவுகொண்டார்கள்.

பெரியார் அணையைப் பார்ப்பதற்காக மலையின் மீது பயணம் செய்து கொண்டிருந்தேன். மூச்சுக் காற்றில்கூடப் பசுமை படிந்துவிடுமளவு குளிர்ச்சியான அந்தக் காட்டின் ஊடாக அணைக்கட்டு கண்களால் அளவிட முடியாததுபோல நீண்டுகிடக்கிறது. தண்ணீர்மீது கண்கள் ஒரு பூச்சியைப்போல ஊர்ந்து நகர்கிறது.

காட்டாறுகள் மிருகங்களைப்போல மூர்க்கமானவை. தன்னிடஷ்டப்படி வனத்துக்குள்ளாகச் சுற்றி அலையக்கூடியவை. அதன் குறுக்கே எது வந்தாலும் தடையை மீறிப் பாயக் கூடியவை.

ஒருமுறை மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆதிவாசிகளான காணிகளில் ஒருவன் சொன்னான் -

”மலையில இருக்கிறவரை தண்ணீரை எந்தக் கொம்பனாலும் கட்டுப்படுத்தி வைக்கவே முடியாது. தரையிறங்கினால்தான் அது அடங்கிச் சாந்தமாகும். யானை மாதிரிதான் தண்ணியும்.”

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த காட்டுக்குள் ஒரு சிற்றோடையைப்போல பென்னிகுக்கின் வாழ்க்கைக் கதை ஓடிக்கொண்டிருக்கிறது. பெரியாறு அணையின் தண்ணீருக்குள் பென்னிகுக்கின் முகம் இன்றும் அடியாழத்தில் அசைந்துகொண்டேயிருக்கிறது.

அணையைப் பார்வையிட்டபடியே பருந்து உயர்ந்த மரங்களினூடே நடக்கும்போது சருகுகளைக் போலவே கடந்த காலத்தின் நினைவுகளும் சப்தமிடுகின்றன.

நூறு வருடங்களுக்கு முன்பாக ஆங்கிலேயர்கள் ஆட்சியில் பொறியாளராகப் பணியாற்ற வந்த பென்னிகுக்கிடம் நில அளவையாளர் ஒருவர், பெரியாற்று நீரை ஓர் அணை கட்டித் தடுத்து நிறுத்தினால் மதுரை, ராமநாதபுர மாவட்டங்களுக்குப் பாசன வசதியை உண்டாக்கலாம் என்று மங்கம்மாள் ஆட்சிக்காலத்தில் இருந்து ஒரு திட்டமிருப்பதாகத் தெரிவித்தார். பெரியாற்றைப் பார்க்கும்வரை பென்னிகுக்குக்கு அது சாத்தியமானதுதானா என்று சந்தேகமாகவே இருந்தது. பெரியாற்றின் வரைபடங்களையும் அதன் நீர்வரத்தையும் நேரில் பார்த்தபோது, அந்தக் கனவு பென்னிக்குக்கையும் பிடித்துக் கொண்டது.

மேற்கு நோக்கிச் சென்று வீணாகும் ஆற்றுநீரைக் கிழக்காகத் திருப்பி வைகையில் இணைத்துவிட்டால், மதுரை சீமை முழுவதும் பாசன பூமியாகவிடும் என்று திட்ட வரைவுகளைத் தயாரித்தார். ஆனாலும் நினைத்ததுபோல எளிதாக இல்லை வேலை. தடைகளையும் குறுக்கீடுகளையும் தாண்டி, சென்னை மாகாண ஆளுநர் வென்லாக் முன்னிலையில் 1895-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி இந்த அணைக்கட்டுக்காக அடிக்கல் நாட்டும் பணியைத் துவக்கினார். அப்போது, 65 லட்ச ரூபாய் செலவில் அதைக் கட்டி முடிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டது. பணிகள் துவங்கின. கடினமான வேலை, காட்டு யானைகளின் பயம், பூச்சிகளின் விஷக்கடி, ஆயிரக்கணக்கான பணியாளர்கள். குளிர் தாங்க முடியாமல் சாவு. காலரா, எதிர்பாராத கடும் மழை. தனது கனவை நிறைவேற்றுவதற்காக காட்டு மழைக்குள்ளாகவும் பென்னிகுக் அலைந்துகொண்டிருந்தார். பணியாளர்களோடு தங்கியிருந்து அவர்களது சுகதுக்கங்களைப் பகிர்ந்துகொண்டவன், பென்னிகுக்கோடு வேலைசெய்த இளம் பொறியாளர் லோகந்துரை.

அணை கட்டி முடிக்கப்பட்டது. ஆனாலும் எதிர்பாராத வெள்ளத்தால் சில நாட்களிலேயே அணை உடைந்துபோனது விசாரணை, தவறான செயல்பாடு என்று குற்றம்சாட்டப்பட்ட பென்னிகுக், தடுப்பணைகள் உருவாக்கப்படாததால்தான் உடைப்பு எற்பட்டது என்று முடிவுசெய்து, காட்டுக்குள் தடுப்பணைகள் கட்டுவதற்கான நிதியுதவி கேட்டு விண்ணப்பித்தார். ஆங்கிலேய அரசாங்கம் பணம் தருவதற்கு மறுத்துவிட்டது.

வேறுவழியின்றி இங்கிலாந்தில் இருந்த தனது சொத்துக்களை விற்று, பணத்தைத் திரட்டிக் கொண்டுவந்து, மீண்டும் தடுப்பணைகளை உருவாக்கினார். மதுரை மாவட்டப் பகுதிகள் முழுவதும் இந்த அணையால் பாசன வசதி கண்டது. பின்னர், ஆங்கிலேய அரசே பென்னிகுக்கை கெளரவப்படுத்தியது. எந்த தேசம் நம்மை அடிமையாக்கியதோ, அந்த தேசத்திலிருந்து வந்தவர் தமது சொத்தை விற்று, நமது நலனுக்காகப் பாடுபட்டிருக்கிறார்.

அன்று முதல் ஒவ்வொரு கிராமமும் இந்த வெள்ளைக்காரப் பொறியாளர்களைத் தங்களது குலசாமிகளைப் போல மனதுக்குள்ளாக வணங்கி வருகிறார்கள். லோகந்துரையும் பென்னிகுக்கும் இப்போது உள்ளூர்ப் பெயர்களாகிவிட்டன.

காலம் எத்தனையோ கதைகளைத் தன் உள்ளங்கை ரேகையைப்போல, மாற்றாமல் வைத்துக்கொண்டேயிருக்கிறது. தண்ணீருக்காக ஒவ்வொரு கோடையிலும் நடக்கும் போராட்டமும் பிரச்சினைகளும் முடிவற்று தொடரும்போதொல்லாம் எவரோ பென்னிக்குக்கை நினைத்துக்கொள்கிறார்கள். இன்று வன உயிர்க்காப்பமாக மாற்றப்பட்டுவிட்ட பெரியாறு பகுதி மலையில் யானைகளுடன் ஈரப்புகையைப்போல, கடந்த காலத்தின் நினைவுகளும் சுற்றியலைகின்றன.

பின்குறிப்பு: இங்கிலாந்திலிருந்து பென்னிகுக்கின் கொள்ளுப்பேரன் சாம்சன், தனது தாத்தா கட்டிய அணையைப் பார்ப்பதற்காகச் சமீபத்தில் தமிழகத்துக்கு வந்திருந்தார். முதல்முறையாக இந்தியா வந்த அவருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு கொடுத்து, பென்னிக்குக்கின் சிலையைப் பார்வையிடச் செய்தார்கள். கூட்டத்திலிருந்த ஒரு பெண் தனது குழந்தைக்கு ‘பென்னிகுக்’ என்று பெயர் வைக்கும்படி சாம்சனிடம் கொடுத்தாள். உணர்ச்சிப்பெருக்கோடு சாம்சன், தனது தாத்தாவின் பெயரை அந்தக் குழந்தைக்கு வைத்தார். கிராமவாசிகளில் ஒருவர், சாம்சனின் கையைப் பிடித்துக்கொண்டு விளையும் ஒவ்வொரு நெல்லிலும் பென்னிகுக்கின் பெயர் ஒட்டிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். உண்மையை எந்த பாஷையில் சொல்லும்போதும் புரிந்துவிடும் என்பார்கள். அது நிஜமென்று அப்போது காண முடிந்தது.

Wednesday, December 21, 2011

எங்கேயும் எப்போதும் - பேருந்து பயணங்களில்...


இப்படி ஒரு படத்தை தமிழில் நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இன்றைய பரக்கா வெட்டி அவசர உலகமாக மாறி வரும் நமது தமிழகச் சாலை கலாச்சாரத்தில் மிகவும் அவசியம் தேவைப்படும் படமென்றால் அது மிகையாகிவிடாது.

எனது ஊரில் சக்தி விநாயகர் ட்ரான்ஸ்போர்ட் என்ற பெயரில் ஒரு பேருந்து ஓடுவதுண்டு. கரம்பக்குடிக்கும் புதுக்கோட்டைக்குமான சராசரி பாதையான ஆலங்குடி செல்லாமல் வடவாளம் வழியாக செல்லும் வழியது. எல்லா பேருந்துகளும் குறைந்தது ஏத்தி, இறக்கி என்று ஒண்ணரை மணி நேரம் எடுத்துக் கொண்டு செல்லும். ஆனால், இந்த பேருந்து மட்டும் எனக்கு தெரிந்த ஒரு அண்ணனால் ஓட்டுநராக இயக்கப்பட்டு வந்தது. அவன் ஓர் இளைஞன். அவனுக்கு எல்லாரும் கொண்டு போயி பயணிகளை சேர்க்கும் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக 45 நிமிடத்தில் கொண்டு போயி சேர்ப்பதிலொரு அலாதி இன்பம், பெருமை.

அந்த பேருந்து காலை வேளையில் மிகச் சரியாக பள்ளி, கல்லூரி, அலுவலக நேரத்திற்கு உகந்ததாக ஒரு பயணிப்பு செய்யும். அந்த நேரத்திற்கு இவர் ஓட்டுவது எல்லாராலும் ஊக்குவிப்பட்டு, பாட்டு, கும்மாளம் என்று இயக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த அண்ணனுக்கு அப்பொழுதே திருமணமாகி ஒரு குழந்தையும் இருந்ததாக எனக்கு ஞாபகம். ஒரு நாள் அந்த பேருந்தை காட்டு வேகத்தில் தனது பட்டன்கள் மாட்டப் படாத சட்டை காற்றில் பறக்க ஓட்டி புளியமரத்தில் மோதி ஓட்டுநர் அண்ணன் அந்த இடத்திலேயே மரணித்து விட்டார். அவரின் அந்த இளம் குடும்பத்தை பாதி வழியே நிறுத்தி விட்டு நிரந்தரமாக அவர் விடைபெற்றுக் கொண்டார்.

இது போலவே தினமும் நாம் கேள்வியுறும், கண்ணுரும் சாலை விபத்துக்களை அந்த பேருந்துக்களில் நம்மையும் ஒருவராக அமர வைத்து இந்த இளம் இயக்குனர் சரவணன் நம்மை உணர வைக்க முயற்சித்து அதில் கன்னாபின்னாவென்று வெற்றியும் அடைந்திருக்கிறார். என்னுடைய சூழலில் கண்ட குப்பை படங்களையும் பார்த்து உணர்ச்சி பூர்வமாக விமர்சனம் முன் வைப்பது என்பது கட்டுப்படியாகாது என்பதால், உற்ற நண்பர்கள், எனையறிந்தவர்களின் தொடர்ந்த நொச்சுக்கு பிறகே பார்த்து வருகிறேன்.

இன்னொரு பாலிசி என்னிடம் ஆன்லைனில் படம் பார்த்தால் விமர்சனம் எழுதக் கூடாது என்பது. ஆனால், அதனை உடைக்க வேண்டியதாகி விட்டது; இந்தப் படத்தின் தாக்கத்தால். ஒவ்வொரு முறை ஊருக்கு வரும் பொழுதும் தொடர்ச்சியாக பேருந்து பயணங்கள் செய்வது என்பது எனது உயிர்ப்பை மீட்டெடுக்கும் யுக்திகளின் ஒரு பகுதி. இந்தியாவின் நீள அகலங்களை அளந்ததும் பெரும்பாலும் பேருந்து, மட்டும் புகை வண்டிப் பயணங்களின் மூலமாகவே. ஆனால், இன்றைய நிலையில் ஊரில் சாலைகள் மேம்படுத்தப் பட்டிருப்பதனை முன்னிட்டு தனியார் பேருந்துகளின் பெருக்கமும் கட்டுக்கடங்காமல் எகிறியிருக்கிறது. விதவிதமான பெயர்களில், இருக்கை வசதிகளுடன் சம்பந்தமே இல்லாத வேகத்தில் இயக்கப்படுகிறது.

ஒரு முறை இங்கிருந்து ஒரு வெள்ளைக்காரரை ஊருக்கு அழைத்து வந்திருந்தேன். அவர் கூறிக்கொண்டு வந்தார் ஊரில் கார் ஒன்று வாடகைக்கு எடுத்து தானே இயக்கப் போவதாக. இத்தனைக்கும் அவருக்கும் இங்கு 30 வருடங்கள் வாகனம் இயக்கிய அனுபவம். ஆனால், விமான நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்கு வந்து சேருவதற்குள்ளாவுமே தனது திட்டத்தை மாற்றிக் கொண்டார். அது மட்டுமில்லாது, எதிர் இருக்கையை இறுக பற்றிக் கொண்டவர்தான் வழியெங்கும் ஹோலி ஷிட் என்று கூறிக் கொண்டே வந்தார். அந்த அழகில் வண்டிகள் முந்திச் செல்ல எடுக்கும் முயற்சிகளும், மயிரிழையில் இன்னொரு வண்டியின் முன் வந்து மற்றுமொரு வாகனம் இறங்கும் நிலையும் குடல் கலங்க வைத்திருந்தது.

சரி இந்தப்படத்தில் என்ன அப்படியொரு விசேசம். இது அத்தனையும் தத்ரூபமாக வழங்கப்பட்டிருக்கிறது. இல்லாது படத்தின் நாயகர்களை நம்மில் ஒருவராக ஆக்கி அவர்களை அந்த பேருந்துகளில் அமர்த்தி அவர்களுடன் நம்மையும் பயணிக்க விட்டு படத்தின் இறுதியில் மிகப் பெரிய விபத்தொன்றை சந்திக்க விட்டு முக்கிய கதாபாத்திரம் ஒன்றையும் மரணிக்க விட்டு பதறடித்து விடுகிறார் இயக்குனர்.

இயல்பாக தமிழ் படங்களில் மனதை தொடுகிறேன் பேர்வழியென்று கொடுக்கும் வாழ்வு கசப்புகளை அதீதமாக கலந்து நகைச்சுவையாக்கி விடுவார்கள், ஆனால் இந்தப் படத்தில் மிகையே கிடையாது.

பேருந்தில் ஏறுவதற்கு முன்னால் எல்லாரையும் போல பிஸ்கெட், தண்ணீர் பாட்டில், தம் என்று கலவையான மனிதர்கள் கலவையான வேலைகளை நாம் அனைவரும் செய்வதனைப் போன்றே செய்கிறார்கள். அடுத்த சில மணி நேரங்களில் தங்களது வாழ்க்கையே தலைகீழாக மாறப் போவது தெரியாமல். பல கலர் கனவுகளுடன் பயணம் துவங்குகிறது.

அப்படியே ப்ளாஷ்பேக்காக காதல் கதையும் சுத்தப்படுகிறது. இரண்டு செட் காதலர்களைக் கொண்டு ரொம்ப வித்தியாசமாக நகர்த்தியிருக்கிறார்கள். அஞ்சலியினை ஒட்டி வரும் கதாபாத்திரக் குடும்பச் சூழலில் வரும் அப்பா ஒரு போலீஸ் கான்ஸ்டபிள், அது போலவே அவளுக்கான கதாநயாகன் ஒரு இரும்பு தொழிற்சாலையில் வேலை பார்க்கிறான் இரண்டுமே பெரிதாக உறுத்தலே இல்லாமல் அந்த காதலுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. அவளின் வெளிப்பாடு ஒரு பெண்ணுள் இருக்கும் ஆண்மையின் ஆளுமையை வெளி விடுவது. ஒவ்வொரு காட்சியும் ரசிக்க வைக்கிறது.

காதலில் விழுவதற்கு முன்னாக ரொம்ப எதார்த்தமாக நடை முறைப் படுத்த வேண்டிய விசயங்களை ஒரு பிரச்சார முறையில், சாலை விபத்து தடுக்கப்படுவதின் அதே வீரியத்துடன் இந்த காதல் முன் எச்சரிக்கையும் அழகாக கையாளப்பட்டிருக்கிறது. காதலனை அதட்டி உருட்டி இரத்தப் பரிசோதனை எடுத்துக் கொள்ளச் சொல்வது அவனது ஜாதகத்தினை விட அது கொடுக்கும் வரலாறு முக்கியமென்று கூற வருகிறது.

பிறகு உறுப்பு தானத்திற்கு கையெழுத்துப் போட வைத்து அவன் பயப்படும் பொழுது அடிக்கும் வசனங்கள் டாப் கியரில் நகர்கிறது. வேறு எந்த படத்திலும் இவ்வளவு அழுத்தமாக உறுப்பு தானம் பேசப் படவில்லை. அதே கதாநாயகன் விபத்தில் மரணிக்க நேரும் பொழுது அஞ்சலி மருத்துவரிடம் உறுப்புகளை எடுத்துக்கச் சொல்லி கூறும் காரணங்கள் நிச்சயமாக இன்னும் நிறைய மக்களை உறுப்பு தானம் செய்ய வைக்க முன்வருமாறு உந்தச் செய்யலாம். அதற்கெனவே அந்த கதாநாயகனை சாகடிக்க வேண்டியிருந்திருக்கிறது இயக்குனருக்கு என்பது புரிந்து கொள்ளக் கூடியது.

இரண்டாவது செட் காதலர்கள் அதே க்யூட்நெஸ். உயிர்ப்பு எல்லாம் இருக்கிறது. அநன்யா அசத்தியிருக்கார். பெரியளவில் அவர்கள் எதுவும் படத்தில் செய்தி சொல்லிப் போவதாக இல்லை. ஆனால், கலகலப்பாக்கிறார்கள். பாடல்கள அனைத்து அருமையாக அமைந்து போயிருக்கிறது. படம் பிடித்த விதவும் அழகே!

பேருந்தினுள் உள்ள பயணிகளில் யாரேனும் ஒருவருடன் நம்மால் ஐடெண்டிஃபை செய்துக் கொள்ள முடியும். ரொம்ப எதார்த்தமாக இருக்கிறார்கள்.  ஒரு குழந்தையிடம் உடனே என்னய கட்டிக்கிறாயா என்று அந்த புதுப் பொண்டாட்டிக்காரர் கேட்பது, அது அம்மாவிடம் சென்று உரையாடும் டயலாக், கொஞ்சம் அதிகம் என்பதனைத் தவிர.

ஒருவர் மத்திய கிழக்கு நாட்டிலிருந்து வருகிறார். ஐந்து வருட பிரிவு ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கும் போது மனைவியைப் பிரிந்த கணவர். அவரின் ஐந்து வயது குழந்தையின் குரலை ரிங்க் டோனாக வைத்திருப்பதும், பேருந்தில் ஒலிக்கும் ஒவ்வொரு அலைபேசியின் ரிங் டோனைக் கேக்கும் பொழுது சிரிப்பை வரவழைக்கிறது. அந்த மத்திய கிழக்கு நாட்டிலிருந்து திரும்பும் அப்பா கூட நமக்கு ஒரு பெரும் செய்தியை கொண்டு வருகிறார். அவர் ஒவ்வொரு முறை குழந்தையுடன் பேசும் பொழுது இதோ கிளம்பிட்டேன் என்று கூறுவார், அதுவே பின்னாளில் குழந்தை உண்மையாக அப்பா ஊர் திரும்பும் போது கூட நம்பிக்கையற்ற முறையில் ட்ரீட் செய்ய தலைப்படுவதை அழகாக காட்டியிருக்கிறார்கள்.

அந்த பேருந்து விபத்துக்குள்ளாகும் காரணமும் ஏற்றுக் கொள்ளக் கூடியது. அதனை படம் பிடித்த விதமும் பிரமாண்டமாக இருக்கிறது. தமிழுக்கு இது கண்டிப்பாக புதிது! ஓட்டுநர்கள் தங்களுக்கு பின்னால் எத்தனையோ குடும்பங்களின் மனிதர்கள் பல விதமான கனவுகளுடன் பயணித்து கொண்டிருக்கிறார்கள் என்பதனை உணர வைப்பதற்கான அழகானதொரு படைப்பு. குடித்து விட்டு, கவனமற்ற முறையில், முறையான சாலை விதிகளை கடைபிடிக்காத தான் தோன்றித் தனமான, முரட்டு வளர்ப்பு பின்னணியில் வரும் ஓட்டுநர்கள் இந்தப் படத்தை பார்த்தேனும் ஒரு முடிவிற்கு வந்தால் அதுவே இந்த படத்தை எடுக்கத் துணிந்த சரவணனுக்கு கிடைத்த வெற்றி.

எனக்கு படத்தை பார்த்து முடித்ததும், வாழ்க்கைதான் எத்தனை நெகிழ்வுத் தன்மையும், நிலையற்றதுமாய் விரிந்து கிடக்கிறது என்று நினைவிற்கு வந்து அழுத்தி என்னை மிகவும் டிஸ்டர்ப் செய்து விட்டது. எப்பொழுதும் போலவே ஒரு பாட்டம் கண்ணீர் வடித்தேன். இந்த படத்திற்கென உழைத்த அனைவருக்கும் ஒரு சபாஷ்...

மிக மிக நல்ல படம்!


பி.கு:  பண்புடன்.காம் தளத்திற்காக எழுதியது.

Sunday, November 27, 2011

முல்லை பெரியார் - நீருக்கான போர் - காணொளியுடன்.


இது வரையிலும் இந்த பூகோளம் இரண்டு பெரிய உலக போர்களை சந்தித்திருக்கிறது. மூன்றாவது ஒன்று வர வேண்டும் என்று பரவலாக கனியக் காத்திருக்கும் ஒரு சூழலிலிருக்கிறது. அந்த இனிய சூழலும் இயற்கை வளங்களை யார் சுரண்டி கொழுப்பது என்பதனை ஒட்டியே அமையும் என்று பணம் படைத்தவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அவர்கள் சொல்வது எத்தனை அளவிற்கு உண்மையோ இல்லையோ நமக்குத் தெரியாது. ஆனால், அண்மைய காலங்களில் நடந்தேறும் வனங்களின் விரைந்து அழித்தொழிப்புப் பரவலாக உலகளவில் மழை பெறும் அளவையும், நிலத்தடி நீரின் குறைவும் அப்பட்டமாக செய்தி சொல்லி நிற்கிறது.

உலகின் மொத்த நீர் வளத்தில் 97.5 சதவீதம் கடல் நீரும் மீதமுள்ள 2.5 சதவீதமே நன்னீருமாக நமக்கு இந்த இயற்கை பிச்சையாக வழங்கி நம்மை போன்ற ஒரு முட்டாள் மனித இனத்தை வைத்து அழுது கொண்டிருக்கிறது இந்த பூமி. இதனிலும் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே நாம் எடுத்துக் கொள்ளும் வாக்கில் அந்த நன்னீர் அமைந்திருப்பதாக நாம் அறிகிறோம்.

இந்தச் சூழலில் நமது தென் மாவட்ட நிலமையை சற்றே உற்று நோக்கினால் ஓர் இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்த நீரோட்டம் இப்பொழுது கிடையாது. விரைவான பாலைவனவாக்கம் நடைபெற்று வருகிறது; இயற்கையாகவே. ஐயூசின் ஆய்வறிக்கை கூட இதனையே வழிமொழிந்து 2020ஆம் வருடமாக்கில் கூடுதலாக இந்த பாலையின் கோர முகத்தை நாம் கண்ணுறலாமென்று அபாய மணி வேறு அடித்து வைத்திருப்தாக எங்கோ படித்த ஞாபகம்.

இது ஒரு சுழற்சியாக கூட நடைபெற்று வரலாம். பதினேழாம் நூற்றாண்டு வாக்கில் இந்தியா முழுவதும் ஒரு மாபெரும் வறட்சியும் அதனையொட்டிய பட்டினிச் சாவுகளும் நடந்தேறி இருக்கிறது. அதிலும் நமது பகுதியில் மிகக் கோரத் தண்டாவம் ஆடி முடித்திருக்கிறது. இதற்கு தீர்வாக கண்டடைந்ததுதான் முல்லை பெரியார் அணையும், அதனையொத்த பல மேற்கு மலைத் தொடர்களை ஒட்டிய பல நீர்த்தேக்க அணைகளும். அந்த பாடம் நிச்சயமாக பல உயிர் சேதங்களுக்கு பின்னாக கற்றுக் கொண்டதது.

அப்படியாக அணைக்கட்டுக்கள் கட்டப்பெறும் பொழுது பல சதுர கிலோமீட்டருக்கான மழைக்காடுகள் அழிக்கப்பெற்று அத்துடனேயே பல ஜீவராசிகளின் வாழ்வும் முடிக்கப் பெற்று நமது சுயநலத்திற்கென அணைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இது போன்றே புதிது புதிதாக மென்மேலும் விரிவாக்கம் செய்து கொண்டேச் சென்றால் வனத்தினுள் இருக்கும் பெரிய விலங்குளான யானை, காட்டெருமை ஊருக்குள் நடந்து திரிவதனை காண முடியும். அதனை விட சிறிய விலங்கினங்கள் கண்ணுக்கு எட்டுப்படாமலேயே சுத்தமாக மாண்டொழியும்; அத்துடனே பல அரிய மர, சொடி, கொடி வகைகளும்; அவைகள் அறிவியல் உலகின் பார்வைக்கே வந்திருக்கக் கூட வாய்ப்பில்லாமலே துடைத்தழிக்கப்படலாம்.

இத்தனை சிக்கலை உள்ளடக்கியது இந்த விசயம். இருப்பினும் நமது தேவையை முன் வைத்து ஒரு நூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்பு கேரளத்திலிருந்து உபரியாக வழிந்தோடும் நீரை தேக்கி வைத்து வறட்சிக்கு பெயர் போன தேனி, கம்பம், போடி, திண்டுக்கல், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஏரியாவிற்கு விவசாயம் செய்வதற்கும், குடிநீருக்குமென பயன்படும் வாக்கில் ஓர் அணைக்கட்டு முல்லை பெரியார் என்ற பெயரில் ஒரு ப்ரிட்டிஷ்காரரின் முன்னிலையில் மக்களாவே முன் வந்து பணத்தை போட்டு கட்டியெழுப்பியிருக்கிறார்கள்; கேரளா அரசுடனான 999 வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில்.

திடீரென்று சர்வதேச அரங்கில் எல்லைகளை அடிப்படையாக கொண்டு இரு தேச அரசுகள் விளையாடும் ஓட்டு அரசியல் விளையாட்டை இன்று ஒரு நாட்டிற்குள் அடங்கியிருக்கக் கூடிய மாநில அரசுகள் இது போன்ற நீர் வள ஆதார விசயத்தில் வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்திருக்கிறது - கேவலமான அபாயகரமான விளையாட்டு. இது எப்படி என்றால் எரியும் கொள்ளிக் கட்டையை எடுத்து பரட் பரட் என்று சொறிந்து கொள்வதற்கு சமமாக இருக்கிறது. எத்தனை சென்சிடிவான ஒரு விசயமிது? இதனை வைத்து இரு மாநில மக்களுக்கிடையே பகையுணர்ச்சியை வளர்க்கும் பொருட்டு அந்த மாநிலங்களை ஆளும் அரசுகளே முன்னின்று செய்தால் ஒரு நாடாக எப்படி மேலேழும்பி வல்ல’அரசு ஆகுவது?

கிட்டத்தட்ட தமிழகத்தை சுற்றிலும் உள்ள அனைத்து மாநிலங்களும் இந்த அரசியல் விளையாட்டை முன் வைத்து விளையாடுகிறது. இதன் அபத்தம் புரியாமல் மத்திய அரசு என்று பெயர் வைத்துக் கொண்டு முட்டி கழண்டவர்கள் இதனை சூப்பர்வைசிங் செய்கிறார்கள். இது எங்கே எப்படி போய் முடியப் போகிறது என்ற தொலை தூர பார்வையே அற்று வீங்கி வெடிக்கும் வரைக்கும் பொறுத்திருப்பது யாருக்கு நன்மை பயக்கும் என்று புரியவே இல்லை.

அண்மையில் ஒரு காணொளியை பார்க்க நேர்ந்தது. அந்த ஆவணப்படத்திற்கான இயக்குனரும் பல அனுபவம் வாய்ந்த சீனியர் இஞ்சினியர்களும் ஒருங்கே இணைந்து 17ஆம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பித்து நேற்று வரையில் இந்த முல்லை பெரியார் அணைக்கட்டு விசயமாக என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றதொரு கல்வியூட்டும் விதமாக ஒரு அருமையான விவரண காணொளியை நமக்கு வழங்கியிருக்கிறார்கள்.

இந்த காணொளி கட்டம் கட்டமாக (phase by phase) நகருகிறது. ஒவ்வொருவரும் அவசியம் காண வேண்டிய காணொளி இது. ஏனெனில் இன்றைய கேரளா அரசு மிக முனைப்புடன் இந்த 999 வருட ஒப்பந்தத்தை உடைக்க எண்ணி மிக்க பிரயத்தனப்பேரில் பெரிய பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் நாம் குறைந்த பட்சம் இந்த பிரச்சினைக்கு பின்னான உண்மைதான் என்ன என்று தெரிந்து கொள்வது அனைவருக்கும் பொறுப்பான காரியமாகிவிடுகிறது. ஏன்னா, தண்ணீர் இல்லைன்னா நாக்கு வறண்டு செத்து போயிடுவோம்யா... அது நீ கேராளக்காரான இருந்தாலும் இராம்நாட்டில் வாழ்ந்தா உன் வாயிலும் தான் மண்ணு...  


பகுதி - 2

Saturday, November 19, 2011

ஜெயமோகனின் இந்து மத தட்டைப்படுத்தல் விதி...

இவரையெல்லாம் படிப்பதற்கே ஒரு மண்டை வேண்டும் என்ற நிலையில் இருக்கும் பொழுது என்னவோ இந்த தட்டைப்படுத்தல் சித்தாந்தம் சில கேள்விகளை என்னுள் எழுப்பியதால், விமர்சிக்கும் நிலையிலிருந்து தூரத்தில் நின்றாலும் பொதுவில் வைத்து வாசிக்கக் கிடைத்ததால் ஓர் ஓரத்தில் வைத்து நாங்களும் பேசித் தெளிந்து கொள்வோமே என்று இதனை எழுத்தாக்கி முன் வைத்திருக்கிறேன். வாங்க வாசிப்போம்.

சில வருடங்களுக்கு முன்பு நியூ யார்க் டைம்ஸ் பத்தி எழுத்தாளர் தாமஸ் ஃப்ரீட்மென் எழுதிய த ஃப்ளாட் வேர்ல்ட் புத்தகம் படித்தேன். அன்றைய வளர்ச்சியில் படிக்கும் பொழுது அதன் மேலோட்டமான சர்க்கரை தடவிய விசயங்கள் மயக்கத்தை ஊட்டி அடடா என்ன சிந்தனை என்ன சிந்தனை என்று வாசிக்கும் பொழுது கட்டிப் போட்டிருந்தது. அதன் அடி ஆழத்தில் ஒளிந்து கிடக்கும் பல கோடி மக்களின் நசுங்கிய வாழ்க்கையை அந்த எழுத்து எடுத்து காட்டிக் கொண்டிருக்கவில்லை; அதற்கு பின்னான ஃப்ரீட்மெனின் கொள்கை நோக்கு எதனைப் பொறுத்தது என்று புரிந்து கொள்ளும் பக்குவமுமில்லை அன்று எனக்கு. அந்த அரசியல் சார்ந்த எழுத்து அத்தனை மயக்கத்தை ரொம்ப இயல்பாக விதைத்து விட்டுப் போயிருந்தது.

அந்த புத்தகத்தின் வெற்றிக்கான எழுத்துச் சிந்தனைக்கான பாராட்டை நாம் அந்த பத்தி எழுத்தாளருக்கே வழங்க வேண்டும். ஏனெனில் அதற்குப் பின்னான உண்மைகளை மறைத்து உள்ளதை உள்ளபடியே வழங்குவதாக உலகம் முழுமைக்குமே ஒருமுகப் போக்கே (monopoly) சிறந்தது என்று வழங்கி அதனை எடுத்து முன் வைத்த புத்திசாலித்தனத்தினை வேண்டுமானால் பாராட்டலாம். ஆனால், அதனில் கூறப்பட்டிருக்கும் உண்மை என்னவெனில் மெக்டொனல்ஸ் போன்ற அதி விரைவு உணவகங்களில் உருவாகும் உணவை உண்டு செரித்துக் கொள்ள பழகி விட்டால் பல ஏற்றத் தாழ்வுகள் மறைந்து விடும். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் மெக்டெனால்ஸ் பரப்புவதின் அவசியத்தை எடுத்தியம்பி அதனால் மட்டுமே உலக தட்டையாக்கப்படல் சிந்தனை ரீதியாக எப்படி எடுத்து கட்டியெழுப்பப்படும் என்று மயக்கம் ஊட்டக் கூடிய கருதுகோளின் அடிப்படையை நிறுவ முயன்றிருக்கும் அந்தப் படைப்பு.

இந்த உலகம் முழுதிலும் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் லோகல் வாழ்வு ஆதாரத்தில் கிடைக்கும் பொருளாதாரச் சூழலில் அமைத்து கொள்ளும் தன்னிறைவு அணுகுமுறையைத் தவிர்த்து உலகினைத் தட்டையாக்கிவிட்டால் அனைவருக்கும் ஒரே மாதிரியான வாழ்வும், ஒரு மித்த சிந்தனையும் எட்டி விடுவார்கள் பின்பு இந்த பூகோளத்தில் பஞ்சமும், போரும் அற்று ஜீவித்து வாழலாம் என்பதனை போல மிக மேலோட்டமான கருத்தை முன் வைத்து எழுதப்பட்டது. ஆனால் அந்தப் புத்தகம் அறிவுச் சுரண்டல் பண்ணுபவர்களுக்கான ஒரு கையேடு.

அந்தப் புத்தகத்தில் அவர் எப்படி வெளி நாட்டுத்தொழில்கள் இந்தியா போன்ற மூன்றாம் தர நாடுகளுக்கு பொருளாதாரத்தை ஈட்டித் தரக்கூடிய அமுத சுரபி, என்று கூறியபடியே இனிப்பு மிட்டாய் வழங்கியிருப்பார் (கசப்பை மறைத்து). அதற்கு அடிப்படையான மனித வளம், ஆங்கிலம் கற்றறிந்த பல கோடி இளைஞ/ஞிகளைக் கொண்டு மிக எதார்த்தமான சூழ்நிலையில் அமைந்து பட்டிருக்கிறது என்ற புள்ளி விபரத்துடன். அதற்குப் பின்னான விசயங்களான இந்த இளைஞர் கூட்டம் எப்படி உறிஞ்சப்பட்டு ஒரு நாட்டிற்கு கிடைக்கற்கறிய அறிவுச் சுரண்டல் நடந்து கொண்டிருக்கிறது என்பதனை உணர முடியாத வாக்கில், நமது இளைஞர்களின் ஆங்கில அறிவு சிலாகிக்கப் பெற்று எப்படி அவர்கள் பீட்சாவும், கோக்கும் வார இறுதி கேளிக்கைகளையும் நடத்தி அமெரிக்கர்களைப் போலவே இன்று சிறு சேமிப்பு அற்று, ஈட்டும் பணத்தை சுழற்சியில் போடுவதின் மூலம் லோகல் பொருளாதாரம் மேம்பாடு அடைய உதவுகிறார்களென்றும், இந்திய இளைஞர்களின் வாழ்க்கை அமெரிக்க இளைஞர்களைப் போலவே இருக்கிறது என்றும் புல்லரித்துப் போய் இருப்பார்.

படிக்கிற என் போன்றவர்களை அந்த மயக்கமூட்டல் என் தலைமுறைக்கும் தாங்கும் விதமாக தடம் பதித்து விட்டுவிடும்.அதற்குப் பின்னான சுரண்டல் புரியாமலேயே! இன்னும் ஆங்கிலம் வாசிக்கத் தெரிந்தாலே தான் ஓர் அறிவாளியாக எண்ணிக் கொள்ளும் மயக்கத்திலிருப்பவர்களுக்கு இது போன்ற வாசிப்பு பின்பு எதனை விட்டுச்செல்லும்.

இந்தக் கட்டுரை பேச வந்த விசயம் இதுவல்ல. இருப்பினும், அதே உலகமயமாக்கல் சந்தைப்படுத்தலுக்கான எழுத்து பிரதிநிதியை ஒத்தே இன்று நமது பகுதி உலகில் ஒருவர் எப்படி கடவுளுடன் உரையாட தகுதியான ஒரே மொழியான சம்ஸ்கிருதத்தைக் கொண்டு நாட்டார்கள் தெய்வத்தினையும், மற்ற கோடான கோடி கிராம கடவுளர்களையும் உலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்து எல்லைகளைக் கடந்து கடவுள் உலகமயமாக்கல் செய்ய முடியுமென்று நமக்கெல்லாம் ஒரு சித்தாந்த லாலிபாப் வழங்க தனது சிந்தனைக் கடையை விரித்திருக்கிறார். அதனை வாசிக்க நேர்ந்ததின் விளைவாக உருவானதுதான் இந்தக் கட்டுரை. அந்தக் கட்டுரையை வாசிக்க இங்கே அழுத்துங்க...

எனக்கு அதனை வாசித்துக் கொண்டிருக்கும் பொழுதே அந்த சித்தாந்தத்திற்கான அடிப்படை நல் கருத்தாக்கங்கள் மேலே அறிமுகப்படுத்தியிருந்த அதே ஃப்ரீட்மெனினுடைய உலகமயமாக்கலின் நன்மைகளை எப்படி இனிப்புத் தடவி அதற்கு பின்னாக அழுந்தி, நசுங்கி கொண்டிருக்கும் பன்முக வாழ்வு முறை, கலாச்சாரம், பண்பாடு, வாழ்வாதாரம், மொழி போன்றவைகளை தவிர்த்து/மறைத்து பேசி ஒரு வித மயக்கத்தை தோற்றுவித்தாரோ அதே செயலை வேறொரு தளத்திலிருந்து நமது எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் வழங்கியிருக்கிறார் என்பதாக புரிந்து கொண்டேன்.

அந்தக் கட்டுரையின் சாரம்சம்:- இந்தியா போன்ற அகன்ற நிலப்பரப்பை கொண்ட ஒரு நாட்டில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் மதம் இந்து மதம். அதற்கென உள்ள கடவுள்களோ வாழும் மக்களை விட அதிகப்படியான எண்ணிக்கையில் உள்ளது. எப்படி இவர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து தேசீய இனமாக கட்டியமைக்க எண்ணி, மத ரீதியாக இணைக்கும் நிலையிலாவது அது சாத்தியப்படுமா என்ற ஒரு முயற்சியின் நிமித்தம் இந்த சம்ஸ்கிருத பொது மொழியை முன் நிறுத்தி அந்த கட்டுரை பேசியிருக்கிறது.

எனது முப்பாட்டனான தாத்தா கூட எங்களுக்கு குல தெய்வம் ஆகிவிட்டார் எனும் பொழுது, ஒவ்வொரு குடும்பத்திற்கும் அது போன்ற கடவுள் ஒருவர் இருப்பார்தானே? அப்போ அவர் சொல்வதும் சரிதான். சரி, ஆனால் என் முப்பாட்டன் பேசிய, புழங்கிய மொழியில் அவருடன் உரையாடுவதில்தான் எனக்கு கிடைக்கக் கூடிய நெருக்கமும், உணர்வுகளும் கடத்திப் பெறுவதாக எனது மனதும் லயித்து எனக்கு கிடைக்க வேண்டிய நம்பிக்கை சார் விசயங்களும் கிடைத்ததாக நகர்ந்து அடுத்த தலைமுறைக்கும் அதனை கடத்தப்பெற வைக்கிறேன்.

மாறாக, பக்கத்துத் தெரு கிஷ்மு உடைய கொள்ளுத் தாத்தா ஓரளவிற்கு அறியப்பட்டவர் என்பதால், அவர் பேசுகின்ற மொழியின் அ, ஆ கூட தெரியாமல் நான் எனது முப்பாட்டனை அவருக்கு கீழாக இணைத்துக் கொள்வதின் மூலமாக எனக்கான நெருக்கத்தினை எப்படி எட்ட முடியும்? அப்படியெனில்  எனது முப்பாட்டன் அவரை விட இளக்காரமானவரா? எதன் பொருட்டு? அவர் எட்டியிருந்த பொருளாதார அடிப்படையிலா, அல்லது பேசும் மொழி சார்ந்தா? இப்பொழுது இந்த அடிப்படை வாதத்தை விட்டுவிட்டு சற்றே பெரிய கடவுளர்களுக்கு வருவோம்.

உதாரணமாக, எங்களூரில் மகமாயி கோவில் ஒன்று உள்ளது. அங்கே லோகல் பூஜாரியே சூடம் ஏத்தி, அவருக்கு தெரிந்ததைப்பாடி, எங்களுக்கு போதுமான நெருக்கத்தை உருவாக்கித் தருகிறார். அதுவே போதுமானதாக கருதி எத்தனையோ தலைமுறைகளை கடந்து வந்து அந்த வழிபாடும் நிற்கிறது. வருடம் ஒரு முறை கோழி, ஆடுகள் நேர்த்திக்காக பலியிடப்பட்டு அங்கேயே கிராமமாக அமர்ந்து, சமைத்து உண்டு கொண்டாட்டமாக நாளை கடத்துகிறோம்.

இந்த முறையை மாற்றி மிருக பலியிடல் நாகரீகமற்ற செயல். அதனில் ஓர் அழகில்லை. காட்டுமிராண்டித் தனமாக இருக்கிறது. மாரியாத்தாளிடம் உரையாடும் மொழியும் அப்படியே இருக்கிறது என்று கூறி 99% சதவீத மக்களுக்கு புரிந்த மொழியைத் தவிர்த்து புரியாத ஒரு மொழியில் அன்னியமாக உணர்ந்து கொண்டு, தன் சார்ந்த நிலத்திற்குள்ளாகவே வேறுபட்டு ஏதோ மற்றுமொரு கட்டமைக்கப்பட்ட உலக கடவுள் நிறுவப்படலின் அவசியத்தில் எனது கொண்டாட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்வது அந்த மண்ணின் மணத்தையும், வாழ்வு முறையையும் சிதைக்குமா சிதைக்காதா?

...இவ்வாறாக இந்து மதத்தின் மையப்போக்கில் சம்ஸ்கிருதம் வழிபாட்டுமொழியாக உள்ளது. ஒரு தெய்வம் இந்து மையப்போக்குக்குள் நுழையும்போதே சம்ஸ்கிருதத்தில் அதற்கான மந்திரங்களும் தோத்திரங்களும் உருவாகிவந்துவிடுகின்றன. வழிபாட்டுக்கு அது தேவையாகிறது...


எழுத்தாளர் ஜெயமோகனின் வாதம் - சம்ஸ்கிருதத்தை கடவுளுடன் உரையாடும் ஒரே பொது மொழியாக ஆக்கிவிட்டால் கன்னியாகுமரியிலிருந்து கேதர்நாத் வரையிலும் ஒரே சங்கீதமே ஓதப்படும். அதனால் மிசோரத்திலிருந்து குஜாரத் வரையிலும், தமிழகத்திலிருந்து கஷ்மீரம் வரையிலும் அனைத்து இந்தியர்களும் கடவுளின் பொது மொழி புரிந்து தங்களை ஒரே தாயின் பிள்ளைகள் என்று உணர்ந்து அனைத்து சிறு கடவுளர்களும் பெரும் கடவுளர்கள் போன்றே இந்தியாவின் ஏனை பகுதி மக்களின் கவனத்தை பெற்று, என் ஊர் மாரியம்மா கோவிலுக்கு மிசோரத்து பிரஜை வந்து போக வசதியாக இருக்கும் என்று மத ஒருமுக போக்கை கட்டியெழுப்புகிறேன் என தனது மத தட்டைப்படுத்தல் சித்தாந்தத்தை முன் வைத்திருக்கிறார்.


...சென்ற நூறாண்டுக்காலத்துக்குள்தான் ஐயப்பனுக்கு சம்ஸ்கிருத தோத்திரங்கள் உருவாயின. அதன்பின்னர்தான் கேரள நாட்டார் தெய்வமான ஐயப்பன் இந்தியாவெங்கும் , உலகமெங்கும் இந்துக்கள் வழிபடும் தெய்வமாக ஆகியது. சபரிமலையில் மலையாளம் மட்டுமே ஒலித்திருந்தால் இத்தனை தமிழர்களும் ஆந்திரர்களும் பிகாரிகளும் அங்கே ஒன்றாக நின்று வழிபட்டிருக்க முடியாது...


மோலோட்டமாக வாசிக்கும் பொழுது அதே எண்ணம் ஃப்ரீட்மெனிடம் கிடைத்த அடடா என்ன சிந்தனை, என்ன சிந்தனை என்று சித்தம் கலங்க வைக்கக் கூடிய மயக்கமே வந்தது. ஆனால், அதற்குப் பின்னான அபத்தமும், 3000 வருடங்களாக நடந்தேறும் அதே குயுக்தியும் அந்த வார்த்தைகளுக்குப் பின்னான நிழலில் ஒளிந்து நிற்கிறது. இந்த வாரத்தில் ராகுல் சங்கிருத்தியாயன் எழுதிய “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற ஆய்வாராய்ச்சியினை ஒத்த புத்தகம் ஒன்று வாசிக்கக் கிடைத்தது. சற்றே புனைவு கலந்து மிக அழகாக 6000 வருடங்களுக்கான பின்னோக்கிய நடையில் தொடங்கி முன்னேறி 1940களில் வைத்து முடித்திருக்கிறார்.

இந்த மானிட வளர்ச்சியும்/வீழ்ச்சியும், அதற்குப் பின்னான உண்மையான அரசியலும் புரிந்து கொள்ள வேண்டுமெனில் அந்த வாசிப்பு ஒரு நல்ல தொடக்கம். ஒரு மானுட இனமாக எங்கிருந்து தொடங்கியது நமது நடை என்று அறிந்து கொள்ள எத்தனித்து தெளிவு வேண்டி நிற்பவர்களுக்கு நல்ல தொடக்கப் புள்ளி அந்த வாசிப்பு. அதனை வாசித்து விட்டு ஜெயமோகனின் கட்டுரையை வாசித்தால் அந்த எழுத்திற்கு பின்னான ஒருமுக நோக்குமயம் எதனை வேண்டி நிற்கிறது என்பதனை மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும். இந்த போராட்டம்/பரப்புவாதம் இன்றைய நேற்றைய விசயமாக படவில்லை.

இஸ்லாத்திற்கு பொது மொழி அரபி, கிருஸ்துவத்திற்கு இன்றைய நாளில் ஆங்கிலம் எனவே மதம் வளர்கிறது என்று நினைத்திருப்பார் போலும். அதனைக் கருத்தில் கொண்டு இந்தியச் சூழலில் நமக்கு இந்த சம்ஸ்கிருத கடவுள் உரையாடல் மொழியை பொது மொழியாக்க முயன்றிருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. அவரின் சிந்தனை ஓர் உயர்ந்த நோக்கத்திற்கானது என்றாலும் அதற்கு பின்னான பூர்வீக நிலத்தின் விழுமியங்கள் சிதைவுக்குள்ளாவதை ஏன் அவர் கருத்தில் நிறுத்த வில்லை என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.

ஜெயமோகன் கூறிய வழியில் நடந்தால், எப்படி உலமயமாக்களின் பக்க விளைவாக சிறு விவசாயிகளும், லோகல் பண்ட சந்தையைச் சார்ந்த சிறு தொழில்களும், மக்களும் அதற்கே உண்டான மொழியும், சொல்லாடல்களும், கொண்டாட்டமும் இழந்து ம்யூசியத்தில் வைத்து பார்த்து கல்லா கட்டும் நிலையை அடைய வைத்ததோ அதனைப் போன்றே இந்த கடவுள் பொது மொழியும் நிலத்திற்கான அடையாளங்களை சிதைத்து அந்த மண்ணிற்கே உண்டான கலாச்சார விழுமியங்களை சிறுமைப் படுத்தி அழிக்கவே செய்யும்.

பன்முகத் தன்மையில்தான் உலகின் அழகே செழித்து, கொழித்து வாழ்வதில் பொருளுள்ளதாகவும் இந்த ப்ரபஞ்சத்தின் பிரமாண்டம் உணர வைக்கக் கூடியதாகவும் உள்ளது. இதற்கு மேலும் இது போன்ற உலகமயமாக்கம் அது பொருளாதார, மத, கடவுள் சார்ந்து எடுத்து நிறுத்துவது மென்மேலும் அடிப்படை வாதம் பல்கிப் பெருகவே வழி நடத்திச் செல்லும். இருக்கும் பிரச்சினைகள் போதுமே!    





டிஸ்கி: ஜெயமோகனின் கட்டுரையில் மொழியின் வளர்ச்சி, பிற மொழிகளுடன் ஒரு மொழி ஊடாட நேரும் பொழுது எப்படி ஒன்றிற்கு பிரிதொன்று கொடுத்து, வாங்கி அதன் இலக்கண நெகிழ்வினைக் கொண்டு அந்த மொழி தன் காலங்கள்தோறும் நிலை நிறுத்திக் கொள்கிறது என்பது வரைக்கும் புரிந்து கொள்ள முடிகிறது. ஓர் இயற்கைசார் அறிவியலாளன் என்ற முறையில். அதனைத் தவிர்த்து ஜெமோ நிறுவ வந்த மத அடிப்படையிலான சம்ஸ்கிருத சித்தாந்த முன் நிறுத்தலை மட்டுமே இங்கே பிரித்திருக்கிறேன். 



Friday, November 11, 2011

நிறங்களணிவகுப்பு : Fall Color's Photography

இயற்கைதான் எத்தனை நிறங்களைத் தன்னைச் சுற்றிலும் எப்பொழுதும் படைத்து, அழித்து செய்து கொண்டே இருக்கிறது. அதன் கற்பனை எப்பொழுதும் வற்றா ஜீவநதி. தொடர்ந்து ஆச்சர்யங்களை உள்ளடக்கி பூமி முழுதுக்குமே பரப்பி வைத்திருக்கிறது. கண்ணுற்று கண்களை அகல விரிப்பத்தற்குத்தான் அதே இயற்கை படைத்த ஜீவராசிகளுக்கு கற்பனை வறட்சி போலும்...

ஒரு மாலை வேளையில் என்னை கிறங்கடித்த ஒளி வெள்ளத்தில் எனைச் சுற்றிலும் மிதந்து கொண்டிருந்த நிறங்களை எனது புகைப்பட லென்ஸின் வழியாக சுருட்டிக் கொள்ள முனைந்ததின் விளைவு நீங்கள் இங்கே கண்ணுருவது.

# 1 - டெலிடப்பீஸ்கள் வாழும் வீட்டைச் சுற்றிலும் - இயற்கையின் அழகு பெரிதா நான் தயாரித்த வீட்டின் நிறத்தின் அழகா...!!



























# 2 - மிக மெதுவாக இரவு பகலென்று மிதமான குளிரும், சரேலென்று ஒரு நாள் காயும் வெயிலும் இலைகளின் நிறங்களை மெருகூட்டிக் கொண்டே வருகிறது...



































# 3 - அவைகளின் அணிவகுப்பு..




























# 4 ... பச்சையத்தை எரித்துக் கொண்டே...



































# 5 - எத்தனைதான் ஜொலிக்கும் சிவப்புக் கம்பளங்களை தரைப்படுகைளாக நாம் விரித்தாலும் இந்த நிறங்களுக்கு இணையாகுமா...




























# 6 ... அணிலொன்று தனது வீட்டை விட்டுவிட்டு தற்காலிக நகர்வு செய்திருப்பதும் ஏதோ நீண்ட நூழிழையில் முடிச்சொன்றை இட்டு சென்றிப்பதாக படுகிறது...




























# 7 - வண்ணங்களை நான் என் தலையில் கொட்டிக் கொள்வதற்கு சற்று முன்பாக :-) ...




# 8 - இன்னும் கீழே இறங்கி ...



கே. ஜே. ஏசுதாசின் இந்த பாடலைக் கேளுங்க... பூமிக்கு எத்தனை நிறமூட்டி பாடி பார்த்திருக்கிறார்னு. அழகான பாடல்...

பூமியென்னும் பெண்ணும்
பொட்டு வைத்துக் கொண்டு
பச்சையாடை கட்டிப்பார்த்தாள்...
கோடைப் பெண் நாணம் கொண்டு
ஏன் வளைந்து போகிறாள்...

Tuesday, November 08, 2011

கூடன்குளமும் அணுக்களின் நண்பர் அப்துல் கலாமும்...

பாரதம் அகன்று விரிந்த நிலப்பரப்பினை உடைய ஒரு நாடு. கனவு காணச் சொன்ன நமது ஏரோநாடிகல் அறிவியல் விஞ்ஞானியும் முன்னாள் குடியரசு தலைவருமான டாக்டர். அப்துல் கலாமின் ஆய்வறிக்கையை மக்கள் மிகவும் ஆவலோட எதிர்பார்த்திருந்தார்கள். அதற்கு முன்னதாகவே ஓரளவிற்கு நம்மாலும் யூகிக்க முடிந்தது அவரின் இறுதி வார்த்தை என்னவாக இருக்குமென்று. நமது எதிர்பார்ப்பு பொய்த்துவிடவில்லை. அவரின் அணுகுண்டு சாதனைக்கு பின்னாக நம்மை பாகிஸ்தானிடமிருந்து காத்த அதே உத் வேகத்துடன் இப்பொழுது கூடன்குளத்தில் அணு உலை நிறுவி தமிழகத்திற்கும் அதனையொட்டிய அணி சாரா மாநிலங்களுக்கும் தங்குதடையற்ற மின்சார உற்பத்தியை பகிர்ந்தளித்து நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிகோணும் வாக்கில் இந்த அணு உலை நிரூவப்படுவதின் அவசியம் நம் மக்களுக்கு முன் எடுத்து வைத்திருக்கிறார்.

அதற்காக மிக நீண்ட நாற்பது பக்க அளவில் தன்னுடைய ஆய்வறிக்கையாக அவரின் கருத்துக்களை இப்பொழுது முன் வைத்திருக்கிறார். நல்லது! என்னால் அத்தனை பக்கங்களையும் அவ்வளவு பொறுமையாக அமர்ந்து வாசிக்க முடிய வில்லை. ஏனெனில், அணுக்கதிர் வீச்சின் தாக்கத்தை பற்றியான பாதகங்களில் அவர் எடுத்து முன் வைத்திருக்கும் உதாரணமாக ஹிரோஷிமா மற்றும் நகசாகி விடயத்தில், அந்த வீச்சு பின் வரும் தலை முறைகளுக்கு எந்த பாதிப்பையும் வழங்கியதாக தெரிய வரவில்லை என்று முழு பூசணிக்காயை எதுக்குள்ளோ வைத்து மறைத்து கொடுப்பது மாபெரும் வரலாற்று பிழையாகவும், பாவமாகவும் கருதுவதால் மேற்கொண்டு என்னால் ஏனோ வாசிக்க முடியவில்லை.

நான் ஏற்கெனவே அண்மையில் நிகழ்ந்தேறிய ஜப்பானிய அணு உலை விபத்தினையொட்டி இப்படியாக ஜப்பான் அணு உலைக்குள் உலகத்திற்கான செய்தி: Nuclear Reactor!! கட்டுரை எழுதி சில முக்கியமான கேள்விகளையும் முன் வைத்திருந்தேன். இந்த சூழலில் இப்பொழுது கூடன்குளம் அணு உலை இயக்கப்படக் கூடிய கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. ஜெர்மனி மற்றும் சில விழித்துக் கொண்ட ஐரோப்பிய நாடுகள் இதே அணு உலைகளுக்கு எதிரான ஒரு நிலைக்கு நகர்ந்து தூய்மையான ஆற்றல் (clean energy/eco friendly) பயன்படுத்தப்படுவதின் அவசியமறிந்து, இருக்கும் உலைகளையும் எப்படி கவணித்து மேலாண்மை செய்வது என்ற கவலையில் ஆழ்ந்திருக்கும் ஒரு கட்டத்தில் நமது கனவு கலாம் அவர்கள், மிக வேகமாக நாட்டை முன்னேற்றுவதற்கான வழிகளில் இதுவும் ஒன்று என்று ஒரு நாட்டின் இதர பகுதி மக்களுக்கென ஒரு மாநிலம் பலியிடப் பட்டாலும் தவறில்லை என்ற நோக்கில் மிகச் சாதாரணமாக தியாகிகளாக அறைகூவல் விட்டிருக்கிறார் அந்தப் பகுதி மக்களுக்கு.

அதற்கென அவர் இட்டுக்கட்டிய உதாரணங்கள் அணைகள் கட்டப்படும் பொழுதும், ஏரோ பிளேன் கண்டிபிடித்த பொழுதும், உயர்ந்த கட்டிடங்கள், இதர மனித சாதனைகளுடன் இந்த அணு சார்ந்த விசயத்திலும் மனித இனம் உற்சாகத்துடனும், மனத் துணிவுடனும் இறங்கி செயலாற்ற வேண்டுமென்று கூறியிருக்கிறார். எனக்கு என்ன விளங்கவில்லையெனில்... அவர் சுட்டிக்காட்டிய அனைத்து விசயங்களிலும் அசம்பாவிதங்கள் நிகழும் கனம் தோறும் பாதிப்பு உடனடியாக அதன் அருகாமையில் இருப்பவருக்கு மட்டுமே நிகழக் கூடும். உயிர் பாதிப்பும் பெருமளவில் இல்லை, அதனை தலைமுறைகளாக கடத்தப் பெறுவதும் கிடையாது என்பதுதான். இந்த அணுக்களை உள்ளடக்கி ஒரு சூட்கேசுக்குள் கொண்டு வரும் சக்தியின் வீரியத்தின் மகத்துவத்தை, இப்பொழுது நாம் டன் கணக்கில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலக்கரியினை எரித்து பெறப்படும் சக்தியின் ஆற்றலோடு ஓப்பிட்டு செய்யும் அதே கனத்தில் அதன் அழிவின் வீரியத்தையும்/வீச்சத்தையும் நாம் ஏன் யோசிக்க தவறுகிறோம்?

அணுக் கதிர் வீச்சு காற்றின் மூலமாக பரவி உடனடி விளைவுகளை உருவாக்குவதோடு, மனிதனின் மரபணுக்களின் கட்டமைப்பு வரையிலுமாக ஊடுருவி சிதைத்து பல தலைமுறைகளுக்கு பிறக்கும் சந்ததியினரின் உடல் உள்/வெளி உறுப்புகளின் செயல்பாடுகளிலும், அமைப்புகளிலும் எண்ணற்ற விதங்களில் விளையாடி விடுகிறது. அதற்குச் சான்றாக எத்தனையோ காணொளிகள் ஹிரோஷிமா/நகசாகி நிகழ்விற்கு பிறகு இரண்டாம் தலைமுறையிலும் வெளிக் காண்பதனை நம்மால் கவனத்தில் நிறுத்த முடியும்.

அதெப்படி இத்தனை ஆபத்து நிறைந்த ஒரு தொழில்நுட்பத்தை நூறு சதவீகிதம் பாதுகாப்பானது என்று சொல்லிவிட்டு போக முடியும்? 15 வருடங்கள் அந்த அணு உலைகள் கட்டுவதற்கான பொழுதென்றால் அதன் பயன்பாடு வெறும் 50 வருடங்களே இருக்கிறதாம். அதற்கு பிறகு ஸ்விட்ச் ஆஃப் செய்திவிடுவோமென்று திருகியும் அந்த ஆலையை மூடி விட முடியாது. காரணம் ஒரு முறை அந்த அணுக்களின் இயக்கம் தொடங்கிவிட்டால் அதுவாக வீரியமிழந்து அயர்ந்து போகும் வரையில் தொடர்ந்து செயல்பாட்டிலேயே இருக்கிறதாம்; பத்தாயிரம் வருடங்களை தாண்டியும். அதனை மேலாண்மை செய்து பாதுகாப்பான முறையில் வைத்துக் கொள்வதற்கே சொற்பமான நிதி ஒதுக்கீடு செய்து வைக்க வேண்டும். நிதி ஒதுக்கீடு என்று வரும் பொழுது நமக்கெல்லாம் மணி அடிக்கணுமே, அந்த பணம் எப்படி செலவழிக்கப்படும் எதிர்காலத்திலென்று.

சில தொழிற் நுட்ப தேவைகளுக்கென கடற்கரையை ஒட்டியே இது போன்ற அணு உலைகள் கட்டியெழுப்பப்படுகிறது. அதாவது இந்த அணு உலைகளின் இயக்கத்தின் போது உருவாகும் அதீதமான வெப்பத்தினை தணிப்பதற்கென தொடர்ந்து குளிர்வான நீர் உள்ளே சென்று வெளிப்புக வைக்கப்படுகிறது, வெப்பமூட்டப்பட்ட நீர் மீண்டும் கடலுக்குள் தள்ளப்படுவதோடு அதனூடாக தடம் கண்டுபிடிக்க தக்க கதிர்வீச்சும் (traceable amount of radiation) கடல் நீரோடு கலக்கப்படும் வாய்ப்பிருப்பதால் அங்கு வாழும் உயிரினங்களுக்கு சென்றடைகிறது, அதனை உட்கொள்ளும் நமக்கு சிறிது சிறிதாக நச்சூட்டப்பட்டு விதவிதமான புற்று நோய் வெளிப்பாடுகள் அறியப்படலாம்.

இந்தியாவில் மொத்தம் எத்தனை அணு உலைகள் இது வரையிலும் உள்ளது? எத்தனையோ பிற கடற்கரையையொட்டிய மாநிலங்கள் இருந்தாலும் இரண்டாவது அணு உலை இங்கே தமிழகத்தில் நிறுவப்பட்டதின் சூட்சுமம் அதன் பாதுகாப்பு கருதியே என்று எண்ணுகிறேன். அதாவது எதிரி நாடுகளின் எட்டித் தொடும் தூரத்திலிருந்து விலகி அமைப்பதற்காக குறிப்பாக பாகிஸ்தான் போன்ற துஷ்ட நாடுகளின் தொட்டு விடும் தூரத்திலிருந்து என்று வைத்துக் கொள்வோம். ஆமா, அதான் இப்போ பாகிஸ்தான், சைனா போன்ற நாடுகளுக்கெல்லாம் ஸ்ரீலங்காவிற்கு நல்ல நண்பராகிப் போனதே அதே பயம் ஏன் இப்பொழுது இங்கும் வரவில்லை? அது அப்படியே இருக்கட்டும்.

அடுத்து ஏதாவது எசகு பிசகாக மனித தவறுகளோ, எந்திர கோளாறுகளாலோ, அல்லது தவிர்க்க/அணுமானிக்க முடியாத இயற்கைச் சீற்றத்தால் அணு உலைக்கு சேதம் நிகழ்ந்து போனால், மக்களுக்கென எது போன்ற பாதுகாப்பு வசதிகள் அவர்களை அந்த ஏரியாவில் இருந்து நகர்த்தி வெளி எடுத்துச் செல்லுவதற்கென திட்டங்கள் வைத்திருக்கிறோம். மேலும் இது போன்ற கண்ணுக்கு புலப்படாத கதிர்வீச்சுகள் காற்றிலும் பரவும் குணம் கொண்டதால் அணு உலைகள் எழுப்பப்படும் இடத்தை சுற்றிலும் ஒரு குறிப்பிட்ட மக்கட் தொகைக்கு மேலாக இருக்கக் கூடாது என்பதும் உலக அணு உலை அமைப்பு சட்டத்திலும் ஏதாவது இருக்கக் கூடுமே, அது இங்கே பயன்பாட்டில் உள்ளதா?

அமெரிக்காவில் ஒரு முறை ஆந்தராக்ஸ் புரளியில் இருந்த சமயம், உடனடியாக மக்களிடத்தில் கொந்தளிப்பு எல்லா கடைகளிலிலும் ஜன்னல், கதவோர ஓட்டைகளை அடைப்பதற்கான டக்ட் டேப் வித்து தீர்த்தது. அத்தனை கல்வியூட்டு, மற்றும் விழிப்புணர்வோடும் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் அதற்கென முன்னெச்செரிக்கையோடு தற்காலிகமாக பாதுகாப்பினை தரும் வீடுகளின் கட்டமைப்பையும் கொண்டிருக்கிறது. ஆனால், இன்னமும் நம்மூரில் ஓட்டு வீடுகளும், குச்சியால் வேய்ந்த ஓலை வீடுகளையும் கொண்ட அமைப்பில் இது போன்ற ஓர் அசம்பாவிதங்கள் நிகழுமாயின் எத்தனை தூரம் தாக்கு பிடிக்க முடியும்? அல்லது மக்களுக்கு உண்மையாக அணுக்கதிர் வீச்சு என்றால் என்ன, அது எது போன்ற விளைவுகளை உருவாக்க வல்லது போன்ற அடிப்படை விழிப்புணர்வு வழங்கப்பட்டிருக்கிறதா? பொது ஜனங்களின் நிலைப்பாடு அதன் உண்மையான சாதக/பாதகமறிந்து முழு மனதுடன் அதனை எதிர் கொள்ளும் நிலைக்கு நகர்ந்திருக்கிறார்களா?

இதோ அவர்கள் செய்கிறார்கள், இவர்கள் செய்கிறார்கள் என்று புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்வதனைப் போலில்லாமல், லஞ்சம் வாங்கிய அரசு/அரசியல் ஊழியரின் நிலையறிந்து அதனை அரசாங்கமே 10 அல்லது 20% லஞ்சம் வாங்கியவர்களின் ஓய்வூதியத்தில் பிடித்து கொள்ளும் என்ற நிலைக்கு நகர்ந்திருக்கும் ஒரு கேடு கெட்ட நிலையில் இது போன்ற அதி முன்னெச்செரிக்கையும்/திட்டமிடலும் தேவைப்படும் ஒரு ஹை ரிஸ்க், நச்சு தொழிற் நுட்பம் இந்த சமூக பின்னணியில் நமக்குத் தேவையா?

மாறாக வருடத்தின் 300 நாட்களிலும் அடித்து கொளுத்தும் சூரிய வெப்பக் கதிர்களிலிருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையான மின் உற்பத்தியை பெறத் தக்க சோலார் பானல் திட்டத்தினையும், காற்றாலை, ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டங்களையும் (Wind, Water and solar) மேலும் முடிக்கி விட்டு சுற்றுப்புறச் சூழல் பேணலுடன் மக்களின் ஆரோக்கியம் பேணும் திட்டங்களில் இந்த 42,000 ஆயிரம் கோடிகளை கொட்டினால் என்ன? இதன் மூலமாக இந்த அணு உலையின் இயக்கம் 50 வருடங்களுக்குப் பிறகு மண்டையடியுடன் வைத்து மேய்ப்பதற்கென செலவும், ரிஸ்கிலிருந்தும் தப்பிக்கலமால்லவே!

இந்த மொத்த திட்டமும் எனக்கென்னவோ கண்ணை இழந்து சித்திரத்தை வாங்குவதற்கும், கொள்ளிக்கட்டையால் தலையை சொறிந்து கொள்வதற்கும் இணையாகவே வைத்து பார்த்துக் கொள்ளத் தோன்றுகிறது.

கீழே உள்ள படம் இப்போ ஜப்பானில் நடந்த அணு உலை கசாமுசாவில் கடலின் மறுகோடியில் இருக்கும் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திற்கு 10 நாட்களுக்குள் ட்ரெசபில் கதீர்வீச்சு அறியப்பட்டதாக புரெஜெக்ட் செய்யப்பட்டது...



மேலும் வாசிக்க:

1) டாக்டர் அப்துல் கலாம் -  

Nuclear power is our gateway to a prosperous future

2) பேரா - டிரேந்திர ஷர்மா - Why Say NO to Nuclear – Prof. Dhirendra Sharma 


4) நமது பதிவர் கையேடு (இயற்பியலர்) - 

இந்தியா - அமெரிக்க அணு உடன்படிக்கை மற்றும் இந்திய அணு ஆற்றல்..!!??



Sunday, October 30, 2011

மேட்டிமைத்தனம் + போலி அறிவியல் = ஏழரை அறிவு!

அது என்னப்பா ஏழாம் அறிவு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லி படமா வருதேன்னும், ஹாரீஸ் ஜெயராஜ்வோட இசையும் கொஞ்சம் கவனிக்க வைச்சிருந்ததாலும் ஏதோ ஓர் உந்துதல் இந்த படத்தை பார்க்கணும்னு. பார்த்தேன். இரண்டும் கெட்டான் அப்படிங்கிறதுக்கு மிகச் சரியா பொருளைக் கொடுத்த படமிது!

பிறகு எதுக்கு இதைப் பத்தி எழுதி நேரத்தை வீணடிக்கிறன்னு கேட்டீங்கன்னா, கண்டிப்பா பேசப்படணும். ஏன்? ஓரளவிற்கு உயிரியலையே மேஜரா எடுத்து படிச்ச என்னயே பாதி வழியே படம் பார்த்திட்டு இருக்கும் போதே ஒரு தற்குறியா உணர வைச்ச படமாச்சே அதுனாலே மத்தவிங்களுக்கும் மணி அடிச்சு அப்படி ஃபீல் செஞ்சிராதீங்க இதுவும் ஒரு சாதாரண தமிளு படமின்னு சொல்லவாவது உதவட்டுமேன்னு இதை எழுத உட்கார்ந்திருக்கேன்.

இந்த அளவிற்கு பணத்தை கொட்டி எடுக்குறீங்கன்னா, ஒண்ணு முற்று முழுதுமாக உண்மையான வரலாற்று உண்மைகளை (அப்படின்னு ஒண்ணு இருந்தா) உள்ளடக்கி அதை மக்களுக்கு கொண்டு போயி சேர்க்கும் முயற்சியில் படத்தை கொடுங்க, அதே மாதிரி அறிவியல் பேசுறீங்களா அடிப்படை விசயங்களை புரிஞ்சிட்டு அதுக்கு மேலே அதில நிகழ்த்தக் கூடிய விசயங்களா கற்பனையை கலந்து கொடுங்க. இரண்டுமே இல்லாம மொட்டையன் குட்டையில விழுந்த மாதிரி ஏற்கெனவே அடிப்படை அறிவியல் அறிவு இல்லாத ஒரு சமூகத்திற்கு எது போன்ற எண்ண விதைகளை விதைப்பீர்கள்?

இந்த படத்தையெல்லாம் இத்தனை தீவிரமாக எடுத்துக் கொண்டு விமர்சனம் எழுதுவது என்பது கண்ணில்லாத குருடன் யானையைத் தடவின மாதிரிதான் இருந்தாலும், பேசப்படுவதின் மூலமாக அடுத்து இதே வழியில் இறங்கி பணம், புகழ் சம்பாரிக்க எண்ணுபவர்களுக்கு ஒரு இரண்டாவது யோசைனையாக இருக்கட்டும் என்றளவிலாவது பேசப்படுவது அவசியமாகி விடுகிறது.

இந்தப் படத்தில 1600 வருடங்களுக்கும் முன்பாக வாழ்ந்த போதி தர்மர் என்ற தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட ஒரு துறவியைப் பற்றி நமக்கெல்லாம் தெரியவில்லை என்ற அவமான உணர்வுடன், குற்ற உணர்வு கொள்ளச் செய்யும் பீடிகையுடன் தொடங்கும் படம் மலை, காடுகள், ஆறுகள் வழியாக பயணித்து பின்பு மரபணு பாடம் எடுக்க எத்தனிக்கிறது.

எனக்கு அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது. அப்படியே ரெகுலர் சினிமா மசாலாத்தனமாக ஓட்டி முடித்திருந்தால் என்னிடமிருந்து இப்படி ஒரு கட்டுரை வந்திருக்க வேண்டிய அவசியமிருந்திருக்காது. மரபணு அறிவியல் சார்ந்த அடிப்படை அறிவு என்னவென்றால் - பரம்பரை வியாதிகள், முடி, கண்ணின் நிறம், உடற் சார்ந்த ஒற்றுமைகள் மரபணு வழி கடத்தப் பெறலாம் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு பரம்பரை பரம்பரையாக.

அதே நேரத்தில் எனது தாத்தன் தொடர்ந்து பல மணி நேரங்கள் தண்ணீர் அடிக்கும் பம்ப் செட்டில் 1000 குடங்களை அடித்து நிறப்பும் திறன் கொண்டவர், எனது அப்பா பெரிய கால்பந்து வீரர், மஹாத்தமா, அறிவியல் விஞ்ஞானி, பேராசிரியர் போன்ற புற பண்புகள் அதாவது முயன்று பெற்ற திறமைகள் கடத்தப் பெறுவது கிடையாது என்பது கண் கூறு, அனுபவ வழி உண்மை. இதுக்கு பெரிதாக அறிவியல் ஆராய்ச்சிகள் கூட தேவை இல்லை. வீட்டிற்குள் நிகழும் விசயங்களை கொண்டே புரிந்து கொள்ள முடியும்.

இந்த படத்தில் போதி தர்மா ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக முயன்று பெற்ற பண்பான கம்பு சுத்துறது, தொடர்ந்து பல மணி நேரங்கள் சுவற்றை உற்று நோக்குவது, வியாதிகளுக்கு மருத்துவ மூலிகைகளைக் கொண்டு குணப்படுத்துவது போன்ற விசயங்களை இருபது தலைமுறைகளை தாண்டி வந்த படத்தின் கதாநாயகனுக்குள் உறங்கிக் கொண்டிருக்கிறது என்பதாக கூறி ஜல்லி அடிப்பதனை தாங்க முடியவில்லை. இது போன்ற பண்புகள் கடத்தப்படக் கூடியதுதான் என்று புதிதாக எதுவும் ஆராய்சிகளின் மூலம் கண்டறிந்திருக்கிறார்களோ என்று ஒரு நிமிடம் என்னயே அதிர்ச்சியடைய வைத்தது என்றால் மிகையில்லை.

அதனை சப்பை கட்டும் விதமாக கதாநாயகி, இது போன்ற பரம்பரை குணங்கள் தலைமுறையாக கடத்தப்பெறுகிறது என்று வேறு அழுத்தம் திருத்தமாக கூறுவார். அடக் கொடுமையே! ஏற்கெனவே ஊர்க் காடுகளில் டேய் என் முப்பாட்டான், தாத்தா யார் தெரியுமாடா என்று மூடத்தனமாக ஒட்டு பீடிக்கு அருவா தூக்கும் இன்றைய இளைஞர்கள் வாழும் ஒரு சமூகத்திற்கு நவீன அறிவியல் பேசும் ஒரு படத்தில் அதே போன்ற மொண்ணை பேசும் வச்சனம் தேவையா? அது உண்மையா?

இந்த லட்சனத்தில் சமூகத்திற்கு ஏன் தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஏதோ பெரிய பெருமை சேர்க்கும் விசயத்தை உள்ளடக்கி வந்திருக்கிறது என்று கூவிக் கொண்டு டிக்கெட் வித்து தீத்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தனை அறிவையும் உள்ளடக்கிய பல ஞானிகளை பெற்றெடுத்த பூமியில் தான் இன்னமும் ஜாதி என்ற பெயரில் நடந்தேறும் அத்தனை வெட்டுக் குத்துகளும், அநீதிகளும் அதே ஞானிகளின் காலத்திலிருந்து இன்றைய அப்துல் கலாம்கள் வாழும் நாள் வரையிலும் நீட்டித்து நிற்கிறது. அதே அடிப்படை வாத பிரிவினைகளைக் கொண்டே இதோ நேற்று ஆயிரக் கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட ஈழ மக்களுக்கான அநீதியும் அடக்கம். இவைகளே உண்மையாக பேசப்பட வேண்டிய பாடங்கள், படங்கள்?

இது போன்ற பிரச்சினைகளை முகத்திற்கு முகமாக பேசக் கூடிய படங்கள் ஒன்றையும் காணோம். உயிரியல் தொழி நுட்பத்தை பயன்படுத்தி வரப் போகும் நவீன போர் உத்திகளை பற்றி பேசியமையும், எப்படியாக அது போன்ற நோய்கள் மிக விரைவில் பரவி மக்களை சென்றடையும் என்று இந்த படம் காட்டிய வரைக்கும் சரி, அது போலவே தாய் மொழியில் பயின்று, பேசி அறிவியல் ஞானத்தை எட்டுவது என்பதுமாக இரண்டு நேர்மறையான எண்ணங்களை கொண்டு சேர்ப்பது இந்த படத்தில் கவணிக்க வேண்டி விசயங்கள் என்றால் - நேர் எதிராக பல விசயங்கள் மூட/மேட்டிமை மயக்கத்தை தூவி, நிரூவி நிற்கிறது.

1600 வருடங்களுக்கு மேலாக நம் கூடவே நடந்து வரும் ஒரு மாபெரும் விசயம் நமது சமூகத்திற்குள்ளாகவே மக்களை பிளவு படுத்தி, அடிமை சாசனத்தில் வைத்திருக்கும் மக்களுக்கான விடியலான தீர்வு இட ஒதுக்கீட்டு விசயம். அதனை இந்தப் படம் போகும் போக்கில் இந்தியா இழிவான நிலைக்கு போவதற்கான அடிப்படை பிரச்சினைகளான ஊழல், சிபாரிசு மற்றும் இட ஒதுக்கீடு என்ற கேடுகெட்டவைகளில் ஒன்றுடன் இணைத்துச் செல்கிறது. என்னவோ, இந்த இட ஒதுக்கீட்டிற்கு முன்பாக பாலாறும், தேனாறும் இந்த சமூதாயத்தில் ஓடிக் கொண்டிருந்த மாதிரியும் அந்த மக்கள் அனைவரும் அப்பொழுது வேற்று கிரகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்ற ரீதியில் விசயத்தை மிகவும் எளிமை படுத்திச் செல்கிறது.

அதற்கு பின்னான அவசியமும், ஒரு நாடாக, ஒரு இனமாக மேலேழும்ப வேண்டுமாயின் சமதளம் எப்படியாக பரப்பபப் பட வேண்டுமென்ற அடிப்படை தேடல் கூட இல்லாது அப்படி ஒரு மேட்டிமைத் தன எள்ளலுடன் இட ஒதுக்கீட்டிற்கான அவசியத்தை புறம் தள்ளி பேசி நகர்த்திச் செல்கிறார்கள். இது போன்ற மேம்போக்கான எண்ண வெளிப்பாடுகளை கொண்ட விசயம் பேச எதற்கு அறிவியல் துணை தேவைப்படுகிறது? பரம்பரை குணம் இரத்தத்தில் பாய்ந்தோடுகிறது என்பதாகவும் அதனை மீள் பிரதியெடுக்க படத்தில் கதாநாயகனுக்கு ஏற்றிய பச்சை நிற சர்பத்தை தண்டுவடத்தில் ஏற்றி ராஜ ராஜ சோழனையும், போதி தர்மாக்களையும் இன்றைய பரமக்குடி பிரஜைகளாக உருவாக்கவா? நிகழ்கால பிரச்சினைகளை பேசி அதன் பொருட்டான விழிப்புணர்வை பரப்புவதே உண்மையாக ஒரு சமூகமாக பிழைத்து தம்மை தக்க வைத்துக் கொள்வதற்கான வழி முறையாக இருக்க முடியும்.

மாறாக அறிவியலின் துணைகொண்டு நம்பிக்கையின் அடிப்படையில் பேசப்படும் விசயங்களுக்கு உயிர் ஊட்டி மென்மேலும் மூட நம்பிக்கைகள் பல்கிப் பெருக வழியமைப்பது இல்லாத ஊருக்கு வழிகாட்டுவதாகத்தான் அமையும். Thanks for no thanks!


பி.கு: இங்கே ஒரு விஞ்ஞானி இப்படியாக பாஞ்சிருக்கார் (அழுத்தி படிங்க )... அறிவியல் கண்டுபிடிப்புகள் தமிழ் சினிமாவில் நகைப்புக்குள்ளாக படுவது நினைத்து கடுப்பை கிளப்புகிறது.

Sunday, October 09, 2011

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - V


ஐயா ஞானவெட்டியான், ஒட்டுமொத்த தமிழ் இலக்கியத்திற்குமே அருந்தொண்டு ஆற்றிவருகிறார். இந்த வயதிலும் அவரின் ஆர்வமும், உழைப்பும் என்னை பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விடுவதுண்டு. அவருடைய அத்துனை வலைத்தளங்களும் பொக்கிஷங்களாக பாதுகாத்து அந்தந்த வளர்ச்சி நிலைகளுக்கேற்ப பயன் படுத்திக் கொள்ளத்தக்கது எனினும், நான் அடிக்கடி செல்லும் அவரது வலைத்தளம் ஞானவெட்டியானின் ஞான வேள்வி என்ற தளத்திற்குத்தான் இன்றைய நாட்களில்.

அங்கு அன்பர்களின் ஆன்மீகம் சார்ந்த கேள்விகளுக்கு விடை பகன்று வருகிறார்.

18.மனம் என்பது ஆன்மாவா? என்ற கேள்விகளிலிருந்து மனத்தின் வளர்ச்சி நிலைகள் என்று அடுக்கடுக்கான பதிவுகளை அங்கே காணலாம். இருந்தாலும், தமிழ் மணத்தில் இவரின் பதிவுகள் வந்து போகாமல் நின்று போனது நமக்கெல்லாம் ஒரு இழப்பே!

அறிவியலும் ஆன்மீகமும் என்ற வலைத்தளத்தில் செந்தில் குமரன் என்பவர் முன்பொரு காலத்தில் விடாது பதிவுகளை கொடுத்துக் கொண்டிருந்தார். அங்கே மிகவும் எளிய நடையில் எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணத்தில் இயற்பியல் சார்ந்த ப்ரபஞ்ச கோட்பாடுகளையும், அதன்பால் ஏற்படும் ஆச்சர்யத்தை மறக்காமல் ஆன்மீகக் கேள்விகளுனூடையே

வைத்து கேள்விகளையும் தொடுக்கும் விதம் ஒரே கல்லிள் இரண்டு மாங்காய்கள் அடிப்பதனைப் போன்றே வாசகர்களுக்கு அமைந்திருக்கிறது. அதற்கு உதாரணமாக அறிவியலும் ஆன்மீகமும் - 3 அனுபவித்துப் பாருங்கள். 

பரஞ்சோதி மற்றும் விழியன் நடத்தி வந்த சிறுவர் பூங்காவும் குழந்தைகளுக்கான

சிறு சிறு குட்டிக் கதைகளும், பாப்பாப் பாடல்களையும் வழங்கி வந்தது. அதுவும் ஒரு நேரத்திற்குப் பிறகு நின்று போனது. அதனை எழுதியவர்கள் இன்னமும் இங்குதான் உலாவிக் கொண்டிருக்க வேண்டுமென்று எனக்குப் பல்லி சொன்னாலும் ஏன் அப்படி எழுதுவதை நிறுத்திக் கொண்டார்கள் என்று வினாவ வேண்டும் போல் உள்ளது.

திடீரென்று தஞ்சாவூரான் என்றழைத்துக் கொண்டு தஞ்சாவூருக்கே உரித்தான குசும்புடன் ஒருவர் வந்தாரய்யா. பதிவுக்குப் பதிவு நகைச்சுவையும், நக்கலும் மோலோங்கியிருந்தாலும் மறக்காமல் அந்த நகைச்சுவைக்குப் பின்னால் ஒளித்து வைத்திருக்கும் சிந்தனை நம்மை சிரிக்க வைத்து பிறகு யோசிக்க வைக்கத் தவறுவதில்லை. அமெரிக்காவுக்கு இந்தியா வச்ச ஆப்பு! சென்று படித்து வந்தாலே தெரியும் நான் எது போன்றவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேனென்று.

அண்மையில் தமிழ் மணத்துப் பக்கம் வந்து கலக்கிக் கொண்டிருக்கும் சுரேகா! இவரிடம் கதம்பமாக எல்லாத் திறமைகளும் ஒளிந்திருக்கிறது என்பதற்கினங்க வித விதமான பதிவுகளை காணப் பெறலாம் அவர் தளத்தில். சாமி காட்டிய தங்கசாமி! போன்ற வித்தியாசமான மனிதர்களை தின வாழ்க்கையோட்டமென்ற குப்பையிலிருந்து தனித்தெடுத்து நமக்கு அறிமுகப் படுத்துவதாக இருக்கட்டும், பஞ்சு மெத்தையில் படுத்தும் தூக்கம் பெற தவிக்கும் கூட்டத்திற்கிடையே ஈரோட்டுப் பெண்கள் என்ற பதிவில் இப்படியும் சக மனித ஜீவன்கள் இருக்கிறதென்று நம் கண் முன்னே நிறுத்துவதாகட்டும், நல்ல நல்ல வேளைகள் செய்து வருகிறார்.

Thursday, October 06, 2011

கால நிவாரணி...


எல்லாமே கடந்துதான்
வந்துவிடுகிறோம்
நேற்றைய கிளிமஞ்சாரோ
இன்றைய இளைப்பாறலுக்கான
சிறுகுன்றாகிப் போனது
எவரெஸ்ட் ஏறிய பொழுதில்...

மறக்கவே முடியாத
ஏதோவொரு பெருஞ்சுமை
இன்றைய இலவம்பஞ்சுப் பொதி.
மனப் பல்லிடிக்கில் அகப்பட்டு
என்றேனும்
சிரிப்பூனூடே எட்டித் துப்பப்படுகிறது...

சுவாசமென அள்ளி
நெஞ்சுருக அணைத்ததொன்று
மறுநாள்
காத்திராமல் ஏதோ ஒன்றால்
ஹீமோகுளோபினுள் கரைக்கப்பெற்று
பிராணவாயுவாய் மாறி விடுகிறது

சர்வரோக நிவாரணியாய்
காலம் மட்டும்
ஆற்றுதல் படுத்திக் கொண்டே
மூட்டு வலியை
ஆழப் பதிக்கிறது!




In Buzz...

Tuesday, October 04, 2011

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - IV


எனது கடந்த பதிவில் சுய முன்னேற்றக் கட்டுரைகளும் இடம் பெறுகிறதென்று பிதற்றல்கள் என்ற வலைத்தளத்தைப் பற்றி சுட்டிக் காட்டியிருந்தேன். அதே லைனில் என்.கணேசன் என்பவரும் விட்டு விலாசிக் கொண்டுள்ளார். அதே பெயரின் தளத்தின் கீழ், அங்கே அவரே எழுதிய சிறுகதைகள், கவிதைகள், சுய முன்னேற்றம், ஆன்மிகம் மற்றும் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள் இடம் பெற்றிருக்கிறது. அண்மையில் நான் அங்கு வாசித்த படகு புகட்டிய பாடம் என்ற சுய முன்னேற்றக் கதையில் கோபத்தை கையாள்வது எப்படி என்பதனை மிக அழகாக சில உதாரணங்களைக் கொண்டு விளக்கியிருந்தது பிடித்திருந்தது.

அனாதை என்ற பெயரில் ஒருவர் இங்கு உண்மையிலேயே அனாதையாக நிறைய கிடைக்கற்கரிய உலகப் திரைபடங்களைப் பற்றி எழுதிவருகிறார். இவர் தான் பார்த்த அதாவது இன்னா படம்தான் இன்னா மொழிதான் என்றில்லை போல அத்தனை இன, மொழி எல்லைகளையும் தாண்டி படம் பார்த்து அவைகளுக்கு விமர்சனம் எழுதும் திறமை அசத்தலாக உள்ளது. இது போன்ற மக்களும் இங்கு இது போன்ற ரசனையுடன் இருப்பது நமக்குப் பெருமைதானே! இவர் Cronicas / காலக்குறிப்புகள் என்ற தலைப்பின் கீழ் எப்படித் தனக்கு இது போன்ற ஆர்வம் கிளம்பியதென்ற நினைவுகூர்தலுடன் நிறைய விசயங்களை அங்கே பகிர்ந்துர்க்கிறார். சினிமா பிரியர்களுக்கு அத் தளம் ஒரு தங்கச் சுரங்கமாக அமையும்.

K.P. குப்புசாமி என்ற ஓய்வுற்ற காவலதிகாரி ஒருவர் மூலிகை வளம் பற்றி எழுதி வருகிறார். அங்கே அது போன்ற தாவரங்களின் புகைப்படங்கள் அவைகளின் குடும்ப வகை, தாவரப் பெயர் மற்றும் அதன் பயன்பாடுகள் என்று அவரின் பக்கங்கள் மூலிகைச் செடிகள் மற்றும் அவைகள் எவ்வாறு பல்வேறு வியாதிகளுகளை குணப்படுத்தலாம் என்பதனை பட்டியிலிட்டுக் நிறைத்திருக்கிறார். சும்மா பார்ப்பதற்கே கண்களுக்கு

பச்சை நிற செடிகளின் படங்களையும் டெம்ப்ளேட்டையும் கொண்டு குளிர்சியூட்டுகிறார்.

சிங்கநல்லூர் சுகா, இவரை நான் விடுவதே இல்லை. தான் பார்த்து வளர்ந்த விசயங்கள் தன்னைச் சுற்றிலும் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் அந் நேரத்தில் ஒரு அனிச்சையாகத்தான் நம் மனத்தில் ஏறி சிம்மாசனமுற்றிருக்கும். ஆனால், ஊரைப் பிரிந்திருந்து விட்டு அவைகளை மீண்டும் அனுபவிக்கும் பொழுது அவைகள் ஒரு புது பரிமாணம் காட்டிப் போகத் தவறுவதில்லை என்பதற்கு இவரின் பல பதிவுகள் சாட்சி. அப்படி ஒரு பதிவாக இவரின் கோடை காலத்து மீண்டும் மழை அமைந்திருக்கும்.

பிறகு "பேருந்து ஜன்னலோர இருக்கை பிரயாணம், பயனங்களும் பாடங்களும்" போன்ற பதிவுகளிலும் ஏனைய பிற இடுகைகளிலிலும் நிறைய அன்றாடம் நாம் இயந்திரத் தனமாக கண்ணுரும் காட்சிகளுக்கு, சுகா ஒரு புது பரிமாணத்தைக் கொடுத்து நமக்கும் அவர் உள்வாங்கி இருக்கும் வீட்சத்திற்கு நம்மையும் இட்டுச் செல்ல முயற்சித்திருப்பார். அத் தளத்திலேயே இவரது பென்சில் ஓவியங்களும் காணக் கிடைக்கும்.

Thursday, September 29, 2011

கழுகமைவு...


கசிந்தொழுகி முழங்கிக்கொட்டிய
மழை மரணிப்பின்
ஒரு பின் மாலைப்பொழுதில்
வெளுப்பேறிப்போன மென் தோல்
உதறிய உள் மனதுடன்
அவன் சாலையோரத்தில் அமர்ந்திருந்தான்...

ங்கோ வட்டமிட்டபடியே
கொழுத்த வார்த்தை ரணமேறிய
மனித மன ஊன் உண்ணும்
பூமி பார்ந்திருந்த பட்சியொன்று
அவனருகில் சிறகு சுருட்டி
வந்தமர்ந்து, நிமித்தமாய்
மனவாய் கிளறியது...

ஒப்புவிக்க ஒப்புவிக்க
ரணமருந்தியபடியே
கற்றறிந்த வித்தையின் 
இலக்கணப்படி
அவசரமாய்
சொற்களுக்குள் 
செருகிக் கொண்டிருந்தது...

சூலுற்றிருந்த கருவை இறக்கும் 
நாழிகையை எண்ணியபடி...

பட்சி அறிந்திருக்கவில்லை
தான் உண்டு தரிசித்தது
நொடிப்பொழுதைய
உதிரக் குழம்பையென...

எலும்பு மஜ்ஜை இன்னமும் மிச்சமிருக்கிறது...


P.S: Discussion in Buzz ...Kazhugamaivu...

Monday, September 26, 2011

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - III


சிங். செயகுமார் என்று ஒரு வலைப்பதிவர் முன்பொரு காலத்தில் நிறைய விசயங்களை கவிதை வடிவாகவும், சிறுகதைகளாகவும் கொடுத்துக் கொண்டுருந்தார். எழுதியவைகளில் அனேகமானவை காதல் சார்ந்தும் அவரின் சமூக பார்வையாகவும் இருந்தது. சமீப காலமாக அவரைக் காண முடிவதில்லை, அச் சமயத்தில் படித்த காதலர்தினம்! என்ற தலைப்பில் ஒரு கவிதை என் மனதில் தைத்துப் போனதை உங்களின் பார்வைக்காக வைத்திருக்கிறேன். ஏனைய பதிவுகளும் அருமையாக இருக்கும், சுவைத்துப் பாருங்கள்.

கூட்டைக் கலைத்த பின் ஒரு பறவைக்கு நேரும் கொடூரத்தை கொடுப்பது போலவே ஒரு கைம்பெண்ணிற்கும் நம் சமூகத்தில் நிகழும் அவலத்தை தோலுரித்திருக்கார் பஹீமாஜஹான் என்பவர் அழிவின் பின்னர்...... என்ற தலைப்பின் கீழ். இவரின் "ஊற்றுக்களை வரவழைப்பவள், தடுமாறும் தனிப்பாதம்" என்ற பதிவுகளும் ஏனைய பதிவுகளும் மிக நேர்த்தியாக இருக்கிறது.


திறந்து வைத்திருக்கிறாள்


என்று ஒரு குழந்தையின் கள்ளமில்லாத்தனத்தை இந்த மூன்று வரிகளுக்குள் வைத்து, மனிதன் வளர்ந்த பிறகு எவ்வளவு சூது, வாதுடையவானுகிறான் என்று எண்ண வைத்து விடுகிறார் ராஜா சந்திரசேகர். மேலும் தொடர்ந்து "மனிதக் காடு" என்று பெயரிட்ட தலைப்பின் கீழ் நாம் மெது மெதுவாக எப்படி நம்முள்ளே இருக்கும் அந்த கபடமற்றக் குழந்தையை எப்படியெல்லாம் தொலைத்து, தேடித் தேடி எங்கே காண்கிறோமென்று அழகாக அந்தக் கவிதையில் பொதித்து வைத்திருக்கிறார். இவரின் இரண்டு மூன்று வரிக் கவிதைகளில் ஏதாவதொன்றை படிக்க நேர்ந்தாலே அடுத்தடுத்து படிக்கத் தோன்றும் மாஜிக் தீம் இருக்கிறது மற்ற மற்ற பதிவுகளிலும்.


ஆனந்தமாய் உண்டு களிக்க நாமே பயிர் செய்கிறோம்


செய்கிறோம்


இந்த ஒரு கட்டுரை வடிவ கவிதையே போதும் இந்த வளர்ந்து வரும் நெஞ்சத்துக்குள் பீறிட்டு வெளிக் கிளம்பும் தொலை நோக்குப் பார்வையும் நவன் என்ற பதிவரின் வாழ்வு சார்ந்த பட்டறிவையும் பறைசாற்ற. மென் மேலும் இவர் தொடர்ந்து தனது எண்ணங்களை இங்கே வைப்பார் என்று நம்புவோம்.

பிதற்றல்கள் என்ற வலைத்தளத்தில் சிரிப்புக்கும், சிந்திப்பதற்கும் ஏற்ப பல பதிவுகளுண்டு. அங்கே அவ்வப்பொழுது பித்தானாந்தாவாக ஒரு புது அவதாரம் எடுத்து விடுவார் அந்தத் தளத்தின் நிர்வாகிகளில் ஒருவர் போலும். அவ்வாறு எடுத்த அவதார கோலத்தில்தான் 262 : பித்தானந்தாவின் போதனை என்ற தலைப்பின் கீழ் ஒரு கவுஜாவை வடிதிருக்கக் கூடும். அதில் விளையாட்டுப் போக்கில் நிறைய தத்துவங்களை அள்ளித் தெளித்திருக்கிறார். இரட்டை தன்மையில் வாழும் அனைவரையும் ஒரு முறை உட்முகமாக திரும்ப வைக்கும் ஓர் பதிவு. ஏனைய பதிவுகளில் வெடிச் சிரிப்பிற்கும் (குறிப்பாக பின்னூட்டங்களில்), சுய முன்னேற்றக் கட்டுகரைகளுக்கும் பஞ்சமே இல்லாமல் இருக்கிறது.

Thursday, September 22, 2011

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - II


தருமி...! இவரை முதன் முதலில் எப்படி சந்திக்க வாய்ப்புகிட்டியது என்று சற்றே பின் சாய்ந்து அமர்ந்து பொறுமையாக யோசிக்க வேண்டியிருந்தது. அந்த சந்திப்பு எனது ஆங்கில வலைப்பூ பக்கத்தின் மூலமாகத்தான் அமைந்திருந்தது என்று நினைக்கிறேன். அங்கே அவரின் பாணியிலேயே ஒரு கேள்வி why we should be different? என்று கேட்டு ஒரு பதிவிட்டிருந்தற்கு இவர் கொடுத்த லிங்கில் சென்று பார்த்த பொழுதுதான், அங்கே ஒரு கடலளவிற்கு பொக்கிசங்களாக நிறைய பதிவுகள் மின்னிக் கொண்டிருந்தன.

அவைகளில் என்னை மீண்டும் சிந்திக்க தூண்டிய பதிவுகளாக அமைந்தது 49. நான் ஏன் மதம் மாறினேன்...? என்ற அவரின் தொடர்ப் பதிவுகள்தான். எல்லா வளர்ச்சி நிலைகளிலுமுள்ளவர்கள் அவசியம் படித்துப் பார்த்து தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொள்ளும் படி மிக நேர்த்தியாக அமைத்திருப்பார் அந்தப் பதிவுகளை. அதற்காக அவர் எவ்வளவு படித்திருக்கக் கூடும் என்று நினைத்துப் பார்க்கும் பொழுதே அவர் பொருட்டு இருக்கும் மரியாதை பல மடங்கு எகிறுகிறது. அதன் பிறகு அவரின் எல்லா பழைய பதிவுகளையும் தோண்டிப் படித்து பல பதிவுகளுக்கும் உணர்ச்சி வசப்பட்டு பின்னூட்டமெழுதியது இன்னமும் நினைவிருக்கிறது.

பிரிதொரு சமயம் இளவஞ்சி எனக்கு, என் காட்டான் பக்கத்தில் பின்னூட்ட அரசியலை சாடி எழுதியிருந்த பொழுது அங்கே வந்து எனக்கு அறிவுருத்தும் படியாக எழுதிய பின்னூட்டத்தின் மூலமாக அவரின் பதிவுகள் பக்கம் செல்ல நேர்ந்தது. இவரின் எழுத்து நடைக்கு நிகர் இவரே! அவரின் பல பதிவுகளை ரசித்துப் படித்து சிரித்து, சிந்திச்சிருக்கிறேன்.` அண்மையில் தோண்டி எடுத்துப் படித்து சிரித்து, சிந்தித்தது காலச்சுழிப்பில் தொலைந்(த்)தவைகள்.. . அதே தளத்தில் நிறைய புகைப்படங்களையும் சுட்டுத் தள்ளி நமக்கு வழங்கி வருகிறார்.

...இவ்வளவும் தெரிந்திருந்தும்
பெண் தொட்டால்
பரவும் தீட்டிலிருந்து
தம்மைக் காத்துக்கொள்ளத் தெரியாமல்
கதறும் எங்கள் சாமிகள்!...

செல்வநாயகி, இவரைப் பற்றி நான் என்ன சொல்லவிருக்கிறது. நிறங்கள் என்ற தலைப்பில் பளுப்பில் இருக்கும் இவரின் வலைத்தளமே வாழ்வின் முரண்களை அதனிலிருந்தே சுட்டிக் காட்டுவதனைப் போல அமைத்து விளாசி வருகிறார் பல விசயங்களை. இங்கு அவரைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்க அனேக வாய்ப்புகளுண்டு. இவர் எழுத எடுத்துக் கொள்ளும் விசயங்கள், அதன் பொருட்டு அவரின் எண்ணங்கள் அதனை வெளிக்கொணர பயன் படுத்தும் மொழியின் ஆளுமை இவைகள் எல்லாமே இவர் வலைப் பக்கத்தின்பால் எனை இழுத்து வைத்திருக்கிறது.

கைராப்ட்ரான் (Chiroptera) அதாங்க நம்ம வவ்வாலு தலைகீழாக தொங்கிட்டே காத்துப் புக முடியாத இடத்திக்குள்ளரக் கூட நிஜ வவ்வாலுங்க அல்ட்ராசோனிக் சப்தத்தை அனுப்பி போகும் வழியில் உள்ள விசயங்களை அறிந்து கொள்வது மாதிரி, இவரின் தளத்தில் ஒரு சிறு நூலகத்திற்கு இணையான எல்லா படைப்புகளும் எளிமையான முறையில் திரட்டி தகவல்களாக தந்திருக்கிறார். ஆழ் நீர் நெல் சாகுபடி - பொக்காலி!! இப்படி ஒரு விவசாய முறை இருப்பதே அந்தப் பதிவின் மூலமாகத்தான் எனக்கு தெரிய வந்தது. இது போல ஆச்சர்ய மூட்டக் கூடிய பல பதிவுகள் அங்குண்டு.

Saturday, September 17, 2011

எனது மேய்ச்சல் நிலங்களின் தொகுப்பு - I


எனது சுய புராணங்களை செய்து முடித்த கையோடு, அடுத்தவர்களின் படைப்புகளையும் எந்தளவிற்கு உள்வாங்கி வருகிறேன் என்று எனது அடுத்தடுத்தப் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்.

திருச்சி மலைக்கோட்டையில் ஏறி என்னால் ஒரு உணர்ச்சிப் பூர்வமான படைப்பாளியான திரு. ஞானசேகரை தனியாக சந்திக்க முடியுமென்றால் நாளைக்கே எனது பயணம் அமைய விருப்பம் கொள்வேன். அவரின் பல படைப்புகளை படித்துவிட்டு மனம் அன்று பூராவும் அதுனூடே சிக்குண்டு தவித்ததுண்டு.

...பொட்டச்சியப் பெக்கப்போற
பொட்டக் கழுதக்கித்
தொணையெல்லாம் ஏதுக்குன்னு
வெசலூரு கெரகாட்டம்
போயிட்டாரு எம்புருஷன்...

என்று தொடங்கி ஒரு பெண் தனக்குத்தானே சுய'ப்ரசவம் பார்ப்பதனை அழகாக, நேர்த்தியாக கொடுத்திருப்பார். நிறைய சமூதாய ஓட்டைகளையும் அங்கே சுட்டிக்காட்ட தவறாமல். அதே தளத்தில் நிறைய சிறு கதைகளும், கவிதைகளும் உண்டு.

மற்றுமொருவர் இப்படியும் தன்னை விளித்துக் கொள்ள யாரேனும் முட்படுவார்களா என்றால் முடியுமென்று தன்னை "ஆடுமாடு" என்றழைத்துக் கொண்டு "கால்நடைகளுக்குள் புகுந்து" ஒரு கிராமத்தின் மணத்தைப் பரப்பி வருகிறார், ஆடுமாடு. இவரின் அனைத்து படைப்புகளுமே அம் மணம் மாறாமல் அத் தளத்தை நிரப்பிக் கொண்டுள்ளது.

இங்கே ஒருவர் தன்மீது இருக்கும் நம்பிக்கையின் எல்லை எவ்வளவு என்று விடாது, உண்மையாகவே விடாது உழைத்து இப்படியும் தனது மன படபடப்பை படைத்திருக்கிறார். அண்மையில் சிவாஜி பட வெள்ளி விழாவின் போது நமது பிரபலம் பேசிய முரணை தோலுரித்து, மூகச்சீலை அகற்றி இங்கே காட்டியிருந்தது, நான் போட இருந்த பதிவை யாரோ முந்திக் கொண்டு போட்டுவிட்டார்களோ என்பதனைப் போன்ற ஒருமித்த சிந்தனைகள், அதன் பொருட்டு அங்கே எழுப்பியிருந்த வினாக்கள் அமைந்திருந்தது.

ஒரு பெண்ணை எப்படி வளர்க்க வேண்டுமென்ற சமூக கட்டமைப்பினை கையேடாகக் கொண்டு வளர்த்து, திருமணச் சந்தையில் நிறுத்துபவர்களுக்கு சில கேள்விகளுக்கு பதிலும் வேண்டியதில்லை, அப்படி கேள்விகளும் எழ வேண்டுமென்ற கட்டாயமும் இருக்கப் போவதில்லை. ஆனால், இங்கு ரேகுப்தி என்பவர் எவ்வளவுதான் பெண் என்ற அடையாளத்தால் தன் சுயம் இழக்க தேவையில்லை என்பதனை எப்படியெல்லாம் போராடி தக்கவைத்துக் கொள்ள வேண்டியுள்ளது என்பதனை...

...மரபு அல்லது பண்பாடு என்ற வெகு அபத்தமான (பண்பாடு என்பது வெறுமனவே ஆறுமுழ சேலையிலும், ஒன்றரைப் பவுன் தங்கத்திலும் மட்டும் தங்கியிருப்பதில்லையென்ற புரிதலுடன்...

என்று தொடங்கி அழகாக ஒரு சிறுகதையை நகர்த்தியுள்ள நேர்த்தி. அவரின் எழுத்து நடை பிடித்திருக்கிறது.


பி.கு: வலைச்சரத்திற்காக எழுதியது 2008ல்...

Related Posts with Thumbnails