இப்படி ஒரு படத்தை தமிழில் நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இன்றைய பரக்கா வெட்டி அவசர உலகமாக மாறி வரும் நமது தமிழகச் சாலை கலாச்சாரத்தில் மிகவும் அவசியம் தேவைப்படும் படமென்றால் அது மிகையாகிவிடாது.
எனது ஊரில் சக்தி விநாயகர் ட்ரான்ஸ்போர்ட் என்ற பெயரில் ஒரு பேருந்து ஓடுவதுண்டு. கரம்பக்குடிக்கும் புதுக்கோட்டைக்குமான சராசரி பாதையான ஆலங்குடி செல்லாமல் வடவாளம் வழியாக செல்லும் வழியது. எல்லா பேருந்துகளும் குறைந்தது ஏத்தி, இறக்கி என்று ஒண்ணரை மணி நேரம் எடுத்துக் கொண்டு செல்லும். ஆனால், இந்த பேருந்து மட்டும் எனக்கு தெரிந்த ஒரு அண்ணனால் ஓட்டுநராக இயக்கப்பட்டு வந்தது. அவன் ஓர் இளைஞன். அவனுக்கு எல்லாரும் கொண்டு போயி பயணிகளை சேர்க்கும் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக 45 நிமிடத்தில் கொண்டு போயி சேர்ப்பதிலொரு அலாதி இன்பம், பெருமை.
அந்த பேருந்து காலை வேளையில் மிகச் சரியாக பள்ளி, கல்லூரி, அலுவலக நேரத்திற்கு உகந்ததாக ஒரு பயணிப்பு செய்யும். அந்த நேரத்திற்கு இவர் ஓட்டுவது எல்லாராலும் ஊக்குவிப்பட்டு, பாட்டு, கும்மாளம் என்று இயக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த அண்ணனுக்கு அப்பொழுதே திருமணமாகி ஒரு குழந்தையும் இருந்ததாக எனக்கு ஞாபகம். ஒரு நாள் அந்த பேருந்தை காட்டு வேகத்தில் தனது பட்டன்கள் மாட்டப் படாத சட்டை காற்றில் பறக்க ஓட்டி புளியமரத்தில் மோதி ஓட்டுநர் அண்ணன் அந்த இடத்திலேயே மரணித்து விட்டார். அவரின் அந்த இளம் குடும்பத்தை பாதி வழியே நிறுத்தி விட்டு நிரந்தரமாக அவர் விடைபெற்றுக் கொண்டார்.
இது போலவே தினமும் நாம் கேள்வியுறும், கண்ணுரும் சாலை விபத்துக்களை அந்த பேருந்துக்களில் நம்மையும் ஒருவராக அமர வைத்து இந்த இளம் இயக்குனர் சரவணன் நம்மை உணர வைக்க முயற்சித்து அதில் கன்னாபின்னாவென்று வெற்றியும் அடைந்திருக்கிறார். என்னுடைய சூழலில் கண்ட குப்பை படங்களையும் பார்த்து உணர்ச்சி பூர்வமாக விமர்சனம் முன் வைப்பது என்பது கட்டுப்படியாகாது என்பதால், உற்ற நண்பர்கள், எனையறிந்தவர்களின் தொடர்ந்த நொச்சுக்கு பிறகே பார்த்து வருகிறேன்.
இன்னொரு பாலிசி என்னிடம் ஆன்லைனில் படம் பார்த்தால் விமர்சனம் எழுதக் கூடாது என்பது. ஆனால், அதனை உடைக்க வேண்டியதாகி விட்டது; இந்தப் படத்தின் தாக்கத்தால். ஒவ்வொரு முறை ஊருக்கு வரும் பொழுதும் தொடர்ச்சியாக பேருந்து பயணங்கள் செய்வது என்பது எனது உயிர்ப்பை மீட்டெடுக்கும் யுக்திகளின் ஒரு பகுதி. இந்தியாவின் நீள அகலங்களை அளந்ததும் பெரும்பாலும் பேருந்து, மட்டும் புகை வண்டிப் பயணங்களின் மூலமாகவே. ஆனால், இன்றைய நிலையில் ஊரில் சாலைகள் மேம்படுத்தப் பட்டிருப்பதனை முன்னிட்டு தனியார் பேருந்துகளின் பெருக்கமும் கட்டுக்கடங்காமல் எகிறியிருக்கிறது. விதவிதமான பெயர்களில், இருக்கை வசதிகளுடன் சம்பந்தமே இல்லாத வேகத்தில் இயக்கப்படுகிறது.
ஒரு முறை இங்கிருந்து ஒரு வெள்ளைக்காரரை ஊருக்கு அழைத்து வந்திருந்தேன். அவர் கூறிக்கொண்டு வந்தார் ஊரில் கார் ஒன்று வாடகைக்கு எடுத்து தானே இயக்கப் போவதாக. இத்தனைக்கும் அவருக்கும் இங்கு 30 வருடங்கள் வாகனம் இயக்கிய அனுபவம். ஆனால், விமான நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்கு வந்து சேருவதற்குள்ளாவுமே தனது திட்டத்தை மாற்றிக் கொண்டார். அது மட்டுமில்லாது, எதிர் இருக்கையை இறுக பற்றிக் கொண்டவர்தான் வழியெங்கும் ஹோலி ஷிட் என்று கூறிக் கொண்டே வந்தார். அந்த அழகில் வண்டிகள் முந்திச் செல்ல எடுக்கும் முயற்சிகளும், மயிரிழையில் இன்னொரு வண்டியின் முன் வந்து மற்றுமொரு வாகனம் இறங்கும் நிலையும் குடல் கலங்க வைத்திருந்தது.
சரி இந்தப்படத்தில் என்ன அப்படியொரு விசேசம். இது அத்தனையும் தத்ரூபமாக வழங்கப்பட்டிருக்கிறது. இல்லாது படத்தின் நாயகர்களை நம்மில் ஒருவராக ஆக்கி அவர்களை அந்த பேருந்துகளில் அமர்த்தி அவர்களுடன் நம்மையும் பயணிக்க விட்டு படத்தின் இறுதியில் மிகப் பெரிய விபத்தொன்றை சந்திக்க விட்டு முக்கிய கதாபாத்திரம் ஒன்றையும் மரணிக்க விட்டு பதறடித்து விடுகிறார் இயக்குனர்.
இயல்பாக தமிழ் படங்களில் மனதை தொடுகிறேன் பேர்வழியென்று கொடுக்கும் வாழ்வு கசப்புகளை அதீதமாக கலந்து நகைச்சுவையாக்கி விடுவார்கள், ஆனால் இந்தப் படத்தில் மிகையே கிடையாது.
பேருந்தில் ஏறுவதற்கு முன்னால் எல்லாரையும் போல பிஸ்கெட், தண்ணீர் பாட்டில், தம் என்று கலவையான மனிதர்கள் கலவையான வேலைகளை நாம் அனைவரும் செய்வதனைப் போன்றே செய்கிறார்கள். அடுத்த சில மணி நேரங்களில் தங்களது வாழ்க்கையே தலைகீழாக மாறப் போவது தெரியாமல். பல கலர் கனவுகளுடன் பயணம் துவங்குகிறது.
அப்படியே ப்ளாஷ்பேக்காக காதல் கதையும் சுத்தப்படுகிறது. இரண்டு செட் காதலர்களைக் கொண்டு ரொம்ப வித்தியாசமாக நகர்த்தியிருக்கிறார்கள். அஞ்சலியினை ஒட்டி வரும் கதாபாத்திரக் குடும்பச் சூழலில் வரும் அப்பா ஒரு போலீஸ் கான்ஸ்டபிள், அது போலவே அவளுக்கான கதாநயாகன் ஒரு இரும்பு தொழிற்சாலையில் வேலை பார்க்கிறான் இரண்டுமே பெரிதாக உறுத்தலே இல்லாமல் அந்த காதலுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. அவளின் வெளிப்பாடு ஒரு பெண்ணுள் இருக்கும் ஆண்மையின் ஆளுமையை வெளி விடுவது. ஒவ்வொரு காட்சியும் ரசிக்க வைக்கிறது.
காதலில் விழுவதற்கு முன்னாக ரொம்ப எதார்த்தமாக நடை முறைப் படுத்த வேண்டிய விசயங்களை ஒரு பிரச்சார முறையில், சாலை விபத்து தடுக்கப்படுவதின் அதே வீரியத்துடன் இந்த காதல் முன் எச்சரிக்கையும் அழகாக கையாளப்பட்டிருக்கிறது. காதலனை அதட்டி உருட்டி இரத்தப் பரிசோதனை எடுத்துக் கொள்ளச் சொல்வது அவனது ஜாதகத்தினை விட அது கொடுக்கும் வரலாறு முக்கியமென்று கூற வருகிறது.
பிறகு உறுப்பு தானத்திற்கு கையெழுத்துப் போட வைத்து அவன் பயப்படும் பொழுது அடிக்கும் வசனங்கள் டாப் கியரில் நகர்கிறது. வேறு எந்த படத்திலும் இவ்வளவு அழுத்தமாக உறுப்பு தானம் பேசப் படவில்லை. அதே கதாநாயகன் விபத்தில் மரணிக்க நேரும் பொழுது அஞ்சலி மருத்துவரிடம் உறுப்புகளை எடுத்துக்கச் சொல்லி கூறும் காரணங்கள் நிச்சயமாக இன்னும் நிறைய மக்களை உறுப்பு தானம் செய்ய வைக்க முன்வருமாறு உந்தச் செய்யலாம். அதற்கெனவே அந்த கதாநாயகனை சாகடிக்க வேண்டியிருந்திருக்கிறது இயக்குனருக்கு என்பது புரிந்து கொள்ளக் கூடியது.
இரண்டாவது செட் காதலர்கள் அதே க்யூட்நெஸ். உயிர்ப்பு எல்லாம் இருக்கிறது. அநன்யா அசத்தியிருக்கார். பெரியளவில் அவர்கள் எதுவும் படத்தில் செய்தி சொல்லிப் போவதாக இல்லை. ஆனால், கலகலப்பாக்கிறார்கள். பாடல்கள அனைத்து அருமையாக அமைந்து போயிருக்கிறது. படம் பிடித்த விதவும் அழகே!
பேருந்தினுள் உள்ள பயணிகளில் யாரேனும் ஒருவருடன் நம்மால் ஐடெண்டிஃபை செய்துக் கொள்ள முடியும். ரொம்ப எதார்த்தமாக இருக்கிறார்கள். ஒரு குழந்தையிடம் உடனே என்னய கட்டிக்கிறாயா என்று அந்த புதுப் பொண்டாட்டிக்காரர் கேட்பது, அது அம்மாவிடம் சென்று உரையாடும் டயலாக், கொஞ்சம் அதிகம் என்பதனைத் தவிர.
ஒருவர் மத்திய கிழக்கு நாட்டிலிருந்து வருகிறார். ஐந்து வருட பிரிவு ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கும் போது மனைவியைப் பிரிந்த கணவர். அவரின் ஐந்து வயது குழந்தையின் குரலை ரிங்க் டோனாக வைத்திருப்பதும், பேருந்தில் ஒலிக்கும் ஒவ்வொரு அலைபேசியின் ரிங் டோனைக் கேக்கும் பொழுது சிரிப்பை வரவழைக்கிறது. அந்த மத்திய கிழக்கு நாட்டிலிருந்து திரும்பும் அப்பா கூட நமக்கு ஒரு பெரும் செய்தியை கொண்டு வருகிறார். அவர் ஒவ்வொரு முறை குழந்தையுடன் பேசும் பொழுது இதோ கிளம்பிட்டேன் என்று கூறுவார், அதுவே பின்னாளில் குழந்தை உண்மையாக அப்பா ஊர் திரும்பும் போது கூட நம்பிக்கையற்ற முறையில் ட்ரீட் செய்ய தலைப்படுவதை அழகாக காட்டியிருக்கிறார்கள்.
அந்த பேருந்து விபத்துக்குள்ளாகும் காரணமும் ஏற்றுக் கொள்ளக் கூடியது. அதனை படம் பிடித்த விதமும் பிரமாண்டமாக இருக்கிறது. தமிழுக்கு இது கண்டிப்பாக புதிது! ஓட்டுநர்கள் தங்களுக்கு பின்னால் எத்தனையோ குடும்பங்களின் மனிதர்கள் பல விதமான கனவுகளுடன் பயணித்து கொண்டிருக்கிறார்கள் என்பதனை உணர வைப்பதற்கான அழகானதொரு படைப்பு. குடித்து விட்டு, கவனமற்ற முறையில், முறையான சாலை விதிகளை கடைபிடிக்காத தான் தோன்றித் தனமான, முரட்டு வளர்ப்பு பின்னணியில் வரும் ஓட்டுநர்கள் இந்தப் படத்தை பார்த்தேனும் ஒரு முடிவிற்கு வந்தால் அதுவே இந்த படத்தை எடுக்கத் துணிந்த சரவணனுக்கு கிடைத்த வெற்றி.
எனக்கு படத்தை பார்த்து முடித்ததும், வாழ்க்கைதான் எத்தனை நெகிழ்வுத் தன்மையும், நிலையற்றதுமாய் விரிந்து கிடக்கிறது என்று நினைவிற்கு வந்து அழுத்தி என்னை மிகவும் டிஸ்டர்ப் செய்து விட்டது. எப்பொழுதும் போலவே ஒரு பாட்டம் கண்ணீர் வடித்தேன். இந்த படத்திற்கென உழைத்த அனைவருக்கும் ஒரு சபாஷ்...
மிக மிக நல்ல படம்!
பி.கு: பண்புடன்.காம் தளத்திற்காக எழுதியது.
8 comments:
HI
CHECK MAIL.
JOTHIG
Nice revive about a nice movie ...
review (typo ...)
நல்ல விமரிசனம் தெக்கி
சார் நானும் "கரம்பக்குடி"தான் நல்ல விமர்சனம் என்னுடைய ப்ளாக் வாங்க tamilviduthy.blogspot.com
கவரும் பதிவுகள் அருமை
கவரும் பதிவுகள் அருமை
எல்லாருமே நிஜம்மா இருந்தாங்க. இந்தபடத்தில் மிகையே கிடையாது என்பது ரொம்ப உண்மை ..
Post a Comment