Monday, September 17, 2007

அவளின் வலியும், அவனின் புரட்டாசி மாத விரதப் பலனும்!!

இன்னும் நம் ஆன்மீக இந்தியா எவ்வளவு தொலைவு போக வேண்டியிருக்கிறது என்பதற்கு இதோ மற்றுமொரு பட்டறிவுக் காட்சி உங்களுக்காக.

நான் என்னுடைய பள்ளி இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் பொழுது நன்றாக ஊன்றிப் படிக்க வேண்டி நண்பர்களுடன் ஒரு தங்கும் அறை எடுத்து தங்கச் செய்தோம். அது என் வீட்டிலிருந்து ஒரு இரண்டு கிலோ மீட்டர் தூரமே இருந்தது. என்றாலும், இரு வேறு கண்டங்களில் வசிப்பவர்களுக்கான சில வேறுபாடுகள் அந்த சமூகத்தில் வாழ்பவர்களுக்கும் என்னுடைய வீட்டினுள் வாழும் மக்களுக்குமிடையே இருந்தாக உணர முடிந்தது.

சரி அப்படி என்னதான் பெரிய வித்தியாசத்தை உணர்ந்தேன். அவ்வாறு அங்கு தங்கியிருந்த இடம் ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களின் கடவுள் சார்ந்த நம்பிக்கைகள் கொஞ்சம் அதீதமான வெளிப் பகட்டிற்காக அமைந்ததாக இருந்தது.

அவர்களின் பெருவாரியான தொழில் வட்டிக்கு வட்டி போட்டு கறுப்புப் பணத்தை பெருக்குவது. இது பரம்பரையாக கையிறக்கம் பெற்று ஜரூராக வாழும் ஒரு கூட்டம் இருக்குமிடமாக திகழ்ந்தது. அங்கு வருடந்தோறும் இந்த புரட்டாசி என்ற மாதம் வந்துவிட்டால், தினமும் பெண் பிள்ளைகள் தவறாமல் வீட்டைக் கழுவி, துடைத்து, மொழுகி விரதச் சாப்பாடு செய்து அமர்க்களப் படுத்தி விடுவார்கள்.

இதிலென்ன இருக்கிறது என்று கேக்குறீர்களா? நல்லதுதானே வீட்டை சுத்தம் செய்து, ஆரோக்கியமான உணவு சமைத்து சாப்பிட்டால் என்று கேக்கத் தோன்றும். இதில பாருங்க இந்தக் குடும்பங்கள் எல்லாம் சம்பாரிக்கிறதே ஒரு மார்க்கமான முறையில்தான், அடுத்தவர்களின் வயிற்றில் அடித்து பிடிங்கி.

அப்படியாக செய்யும் பொழுது அதற்கு வடிகாலாக இது போன்ற பரிகாரங்கள் அவசியமென கருதி, திருடிய பணத்தில் கொஞ்சமேனும் அந்த பெரிய சாமீக்கு படைக்க வேண்டுமென்ற நியாயத்தனத்தில் செய்தாலும், பல வீடுகளில் ஆண்கள் இதனில் கலந்து கொள்ளாமலேயே (சாப்பிடுவதை தவிர்த்து), தெருவில் நின்று அடவடிப் பேசி வட்டி வசுலிக்கும் அதே மன நிலையிடன் தன் வீட்டிலும் உள்ள பெண்களை அவர்கள் உடம்பிற்கு முடியாமல் இருக்கும் பட்சத்திலும் கடவுளுக்கு சேவை செய்யச் சொல்லி கொல்லாமல் தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் மனிதர்களின் அடிப்படை அறிவை அறிந்து கொள்ளவே இப் பதிவு.

கடவுளின் அருளைப் பெற வேண்டி, இந்த சோம்பேறித் தாதாக்கள் தன் கட்டிய மனைவியே சுவாசக் கோளாறால் பீடித்திருக்கும் சமயத்தில் கூட, ஒட்டடை அடிக்க வைத்து மேலும் அந்த நோயின் தாக்கத்தை அதிகப் படுத்தினால் அந்த கண்ணை கட்டிக் கொண்டிருக்கும் சாமீ என்ன பலனை இந்த சோம்பேறிக் கணவன் சாமீகளுக்கு வழங்கும்?

இந்த வன்புறுத்தலின் மூலமாக அவர் பெறுவது வரமா அல்லது சாபமா? சிந்திப்பார்களா அவர்கள்??

Sunday, September 09, 2007

பெண் வீட்டார்களும், மதிகெட்ட மாப்பிள்ளைகளும்...!!!

ஒவ்வொரு முறை ஊர்க்காடுகளில் திருமணம் என்ற ஒன்று நடந்தேறும்பொழுதும் என்னால் பார்க்க நேரும் ஒரு கே(அ)வலம் இந்த வர(வராத)தட்சணை விசயம். அண்மையிலும் இது போன்ற ஒரு விசயம் நடந்தேறியதாம்.

இத்தனைக்கும் இரு பக்க நபர்களுமே அரசாங்க உத்தியோகத்தில் உள்ளவர்கள். வரதட்சணை கொடுப்பதோ வாங்குவதோ சட்டப்படி குற்றமென்று அறிந்தவர்களாகத்தான் இருக்கக்கூடும். இந்த லட்சனத்தை பின்புலமாக கொண்டு ஊரே மூக்கில் விரல் (நல்லவேளை வேறு எங்கும் வைத்துக் கொள்ளவில்லை) வைக்கும் படி தடபுடலாக அந்தத் தொழில் நடந்திருக்கிறது. இந்த கட்டுரை கொஞ்சம் காட்டமாகவே இருக்கப்போகிறது. ஏன் இப்படி எழுதத் தூண்டியது என்றால் கூறுகிறேன் விபரங்களை, அறிந்து கொள்ளுங்கள் அன்பர்களே!


மணமகன் ஒரு பெரிய பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்கிறாராம், விரிவுரையாளராக (எதுக்கென்று யாராவது அறிந்தால் எனக்கும் சொல்லுங்கள்). தனது மாணாக்கர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்து சமூக அவலங்களுக்கு விடையளிக்கும் இடத்தில், அதுவும் அரிதுப்பெரும்பாண்மையான நம்மில் பலர் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் ஒரு ஊரில் வசிப்பவரும் அவரே.


இந்நிலையில் இவர் பெண் வீட்டாரிடம் அவர்கள் எவ்வளவுதான் பெரீரீரீரீய பணக்காரராக இருப்பின் கை நீட்டி எப்படி கொடுக்கும் பண முடிப்புகளை பெற்றுக்கொண்டு அத்துடன் வரும் பெண்ணுடன் முதலிரவு நடத்த மனம் இடமளிக்கக் கூடும். எனக்கு சற்றே இந்த சூழலை உற்று நோக்கும் பொழுது ரொம்பவே மனது கூசிப்போகிறது.


இதற்கு எதிர் மாறாக அவ்வூரிலேயே சற்றும் எதனையும் எதிர்பார்க்காது சத்தமே இல்லாமல் இது போன்ற ஈனச் செயல்களில் நாட்டம் கொள்ளாமல் திருமணங்களை நடத்துபவர்கள் இருப்பார்கள் அல்லவா? அவ்வாறு இருந்திருக்கும் பட்சத்தில் ஏன் மக்களோ அல்லது வேறு நல்ல மனிதர்களோ அவர்களைப் பற்றி கொஞ்சமேனும் வெளிக்கொணர்ந்து சமூதாயத்தில் எது போற்றத்தக்கது, எது பலிக்கத்தக்கதென்று பறைசாற்றி அது போன்ற சமூதாய தொற்றுக்கிருமிகளை ஒழிப்பதில் பங்களிக்க முன் வர தயங்குகிறார்கள்? எது அவர்களை தடுக்கிறது?


அவ்வாறு தடபுடலாக வரதட்சணைகளுடன் ஒரு திருமணம் நடைபெறுகிறது என்பது அவ்வூரின் எல்லா தரப்பு மக்களுக்கும் தெரிந்திருக்கும் பட்சத்தில் அந்த ஊர் காவல் துறை மக்களும், செய்தித்தாள் நிருபர்களும் என்ன செய்து கொண்டு இருப்பார்கள்? இங்கு நமக்கு ஒரு கேள்வியொன்று எழலாம், தெகா, அது அவர்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு வரதட்சணை கொடுப்பதனைப் பொருட்டு என்று கேட்கத்தோன்றும்.


எதற்காக இதனை ஒரு விசயமாக பேச வேண்டுமென்றால், இருப்பவர்கள் ஆடிக்காமிக்கிறார்கள் என்றால் அதே சமூகத்தில் வாழும் இல்லாதவர்கள் அவ் நிலைக்கு மறைமுகமாக இட்டுச்செல்லப்படவில்லையா? இது கண்களை மூடிக்கொண்டு அங்கீகரிக்கப்பட வேண்டிய ஒரு விசயமா? அதுவும், படித்த இளைஞர்களே சுய புத்தி இழந்து, தன்னை விற்று காசாக்கிக்கொள்ளும் அவலத்தை பார்த்துக்கொண்டு எப்படி சும்மாவே இருந்துவிட முடிகிறது நம்மால்? மேலும், இவர்களால் எப்படி இந்த ஒரு ப்ரக்ஞை உணர்விற்கேனும் வருவதற்கு முன்னால் ஒரு மனிதனை(மனைவியை) சம்பாதித்துக்கொள்ள முடிகிறது?!


இதன் உளவியல் பின்னணியில்தான் அது போன்று வாழ்க்கை நடத்த வந்த பெண்களில் சிலர் தனது கணவனையே தூக்கிப்போட்டு பந்தாடும் நிலையில் வைத்துக்கொள்கிறாரா, அட கடன்காரா என்று? ஆமாம், பிறகு எப்படி எடுத்துக்கொள்வது, ஒரு புது வரவு தன் வீட்டிற்குள் வருவதற்கு முன்பே கல்லூரி விடுதியில் தனது தங்கள், உணவிற்கென முன்பணம் கட்டிவிட்டு சேருவதனைப்போன்றல்லவா இந்த சூழ்நிலையும் இருக்கிறது. பிறகு பணம் கட்டி உள் நுழைபவர் வசதிக்கேணும் அந்த விடுதியில் இருப்பவர்கள் சற்று வளைந்து கொடுத்துப்போக வேண்டாமா? அவ்வாறு எதிர்பார்ப்பதில்தான் என்ன தவறு இருக்கிறது?


அதே மூடனால் தனிப்பட்ட முறையில் தன் வாழ்வியல் சார்ந்த நோக்கங்களைக் கொண்டு ஒரு மனுசியை கவர்ந்து தனது வாழ்க்கைத் துணையாக்கிக்கொள்ள முடியுமா? தனது வாழ்க்கை முழுதும் முயன்றால் கூட முடியாது என்பதே நிசர்சனம். நாற்றமடிக்கும் சமூதாயமும், புரையோடிப்போன சம்பிரதாயங்களும், சகிக்கவில்லை இவர்களை மனிதர்களாக கண் கொண்டு பார்க்க. :-(

Related Posts with Thumbnails