Sunday, March 20, 2011

லிபியாவின் கடாஃபிக்கு குரல் குடுப்போம் வாங்க...

லிபியாவில் ‘ஆபரேசன் ஆடிசி டாவ்ன்’ தொடங்கி கடாஃபி மற்றும் அவர்களது மகன்களின் கொக்கரிப்பிற்கு ஒரு முடிவுரை உலக நாடுகள் சேர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஏன் நமது அ’ஹிம்சையை மட்டுமே விரும்பும் தேசம் இங்கிருந்து கடாஃபியை அடிக்காதீங்க, அடிக்காதீங்கன்னு கூக்குரலிடுகிறது. யாருக்காவது என்ன ஏதுன்னு ஏதாவது தெரியுமா?

லிபியாவில் கடந்த 40 வருடங்களாக தனது இரும்பு கரத்தைக் கொண்டு மக்களை அடக்கி ஒடுக்கி பெட்ரோல் வளத்தின் மூலமாக கிடைக்கும் அத்தனை பொருளாதாரத்தையும் தானும், தன் மகன்களின் மூலமாகவும் வெளி நாட்டு பாடகிகளை கொண்டு வந்து நாலு பாட்டு பாடு மில்லியன் கணக்கா பணம் தாரேன்னு நாட்டின் பணத்தை செலவு பண்ணி களிக்கும் கூட்டத்திற்கு ஏன் இத்தனை பெரிய ஜனநாயகம், சர்வதிகார அரசாங்கத்திற்காக குரல் கொடுக்கிறது?

கிட்டத்தட்ட எகிப்தில் மக்கள் எழுச்சி எழ ஆரம்பித்த சமயத்திலேயே லிபியாவிலும் மக்கள் துணிந்து தெருவிற்கு வந்து விட்டார்கள். சர்வதிகாரிக்கு எதிராக எழுந்து போராட்டம் நடத்த முன் வர வேண்டுமென்றால் தனது உயிரை இரண்டாம் பட்சமாக பனயம் வைத்து விட்டுத்தான் முன் வந்திருப்பார்கள். அதுவும் இத்தனை ஆண்டுகள் வறுவலுக்கு பிறகு.

இது போன்ற ஒரு வாய்ப்பை பயன்படுத்தி ஜனநாயகத்தில் திளைத்த நாகரீக நாடுகள் அது போன்று தானாக மக்களே முன் வந்து கேக்கும் நிலையில் தன்னாலான உதவிகளை செய்து, ஏனைய சர்வாதிகாரிகளுக்கும் ஓர் எச்சரிக்கை விடுக்கும் வண்ணம் செயல்களை செய்து மக்களுக்கு ஒரு தீர்வை வாங்கி கொடுப்பதல்லவா முறையாக இருக்க முடியும்.

இருந்தாலும் யூ. என்_க்கு செலக்ட்டிவ்வா மனித உரிமைகள் பாதிக்கப்படும் பொழுது, தட்டிக் கேட்கப் போகும் இடம் எது போன்றது, செல்வதின் மூலமாக ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்பதனை எல்லாம் கருத்தில் கொண்டுதான் இறங்குகிறது என்பதனை மறுப்பதற்கில்லை. ஈழத்திலோ அல்லது உகண்டாவிலோ நடந்தேறிய இனப் படுகொலையின் போதெல்லாம் இது போன்ற செலக்ட்டிவ் முன் உரிமைகளே முன் நின்றன. இது போன்ற சமயங்களில் உலக நாடுகளுக்கிடையே முடிவு எடுப்பதில் பிளவுற்று இருந்தாலும் அங்கே சென்று செலவழிப்பதில் எந்த பயனுமில்லை என்றால், மனித உரிமை மீறல்களைக் கூட கிடப்பில் போட்டு வேடிக்கை பார்க்க வைத்து வந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா?

கடாஃபி தனது நாட்டின் தேசீய தொலைக்காட்சியிலேயே தோன்றி போராட்டக்காரர்களை நோக்கி - இதோ எனது கூலிப்படை இன்று இரவு வருகிறது, எந்த ஈவு இரக்கமும் காட்டப் போவதில்லை சாவதற்கு தயாராக இருங்கள் என்று அறைகூவல் விட்டே கோரக் கொண்டாட்டத்தை தொடர்கிறார். இதனை யூ. என் என்ற அமைப்பு அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்க்க வேண்டுமா? இதன் மூலமாக என்ன இந்த உலகத்திற்கு செய்தியாக கொடுக்க முடியும்? மேலும் பல ஈழ, உகாண்டாவை ஒத்த படுகொலைகளை நடத்துங்கள் உங்களின் சொந்த குடும்ப பேராசைக்காக என்று விட்டுவிடலாமா.

ஏன் இந்தியா போன்ற ஒரு பெரிய ஜனநாயக நாடு யூ.என்_ல் கடாஃபி நிகழ்த்தும் வன்முறைக்கு எதிராக ஓட்டு போடுவதில் இருந்து வெளி வந்தது, வந்தும் ஏனைய நாடுகள் எடுத்திருக்கும் முயற்சியினை உடனடியாக நிறுத்துமாறும் கூறி வருகிறது. ஏன் இதனைப் போன்று அன்று ஈழத்தில் இறுதி கட்ட போரில் அத்தனை அப்பாவி உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள், சீனாவும் இலங்கை அரசாங்கத்திற்கு பக்க பலமாக நின்று கொல்லத் துணை போகிறது என்று தெரிந்தும் இந்தியா இன்று லிபியாவிற்கு விடும் அறை கூவலை அன்று ஈழ மக்களுக்காக விடவில்லை? ஒன்னுமே புரியலை...


சகாய விலையில் எண்ணெய் தருகிறேன் என்றால் மனித உயிர்கள் ஒன்று மற்றதாகி விடுகிறதா? இங்கேயும் நம் சுயநலம் வெட்ட வெளிச்சத்தில் அம்மணமாக நிற்கிறது.

பஹ்ரைனில் நம்மவர்கள் அந்த நாட்டு அரசருக்கு ஆதரவாக பாகிஸ்தானின் கூலிப்படைகள் எப்படி அந்த நாட்டு அரசருக்கு சாதகமாக போலீஸ் என்ற பெயரில் அடித்து கொல்வதற்கு துணை நிற்கிறதோ, அதே நிலையில் நம்மூரிலிருந்து சாதாரணமாக வேலைக்கு சென்றவர்களும் கிட்டத்தட்ட பாகிஸ் கூலிப்படைகளின் மனம் போன்றே தாங்களும் நடந்து கொள்வதாக படிக்க முடிகிறது.

அங்கும் 200-300 வருடங்களாக ஒரே பெரும்பான்மையற்ற சன்னி முஸ்லீம் நாட்டை ஆண்டு வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் ஒடுக்கப்பட்ட ஷியா பிரிவினர் தங்களுக்கும் சம உரிமை வேண்டுமென்று போராடி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் எங்கிருந்து நாம் இடையில் வருகிறோம். ஏன் இந்த சுயநலத்தனமான நிலையை எடுக்க வேண்டும்? அங்கே, நமக்கு வேலை போய் விடலாம் என்பதனைத் தவிர வேறு ஏதாவது யோசிப்பதற்கு இருக்கிறதா? இது போன்ற புத்தியைத்தான் நாம் ஐக்கிய நாட்டுச் சபையிலிலும் காட்டி வருகிறோம்.

நீதி, நியாயம் என்ற ஒன்றெல்லாம் நமது சுயநலத்திற்கு முன்பு ஒன்று மற்றதாகி விடுகிறது என்றுதான் நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையிலும் காட்டிக் கொள்கிறோம். இதனையே பிர தேசங்களில் தற்காலிகமாக இருக்கும் பொழுதும் கண்ணை மூடிக் கொண்டு முன் வைக்கவும் எத்தனிக்கிறோம் விளைவுகளை பற்றி சிறிதும் கவலையோ, அக்கறையோ இல்லாமல்.

லிபியாவிலும் மற்ற மத்திய கிழக்கு நாடுகளிலும் நடந்து வரும் மக்கள் எழுச்சியினையொட்டி வரும் ஆபத்திற்கு பின்னால் பல நாட்டு மக்கள் வெளியேறி வருகிறார்கள். நம்மூர்க்காரர்கள் ஊருக்கு சென்று என்ன செய்வது, நம்மூரில் எனக்கு உள்ள சூழ்நிலையை விட இதுவே பரவாயில்லை என்று அங்கயே இருந்து விடவும் துணிவதாக செய்திகள் படிக்கிறோம் அதுவும் லிபியா போன்ற நாட்டிலிருக்கும் நம்மூர் பெண்களே இப்படியாக முடிவு எடுத்து தங்கியிருக்கிறார்களாம். இதன் மூலமாக தெரிய வருவது என்ன? நம்மூரில் எத்தனை துயரங்களையும், பொருளாதார நலிவடைவையும் பார்த்திருந்தால் அப்படியான ஒரு துணிவிற்கு வந்திருப்பார்கள். இதனை நினைத்து பெருமைபட்டுக் கொள்ளவா முடியும்.

நம்மால் செய்ய முடியாததை அடுத்தவன் செய்யவாவது விட்டு விலகி நிற்போம். இந்த நேரத்தில போயி இரட்டை நிலை எடுப்பதெல்லாம் எங்கப்பன் குதிருக்குள் இல்லைங்கிற மாதிரி காட்டி கொடுத்துவிடும். கொஞ்சம் அப்படி ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்க்கலாம், ஈழத்தில நடந்தப்போ இருந்த மாதிரியே!



P.S: Photo Courtesy: Net

ஓநாய் நிலவு, சூப்பர் நிலவு - Wolf & Super Moon Photography

ஏற்கெனவே சில முறை தெக்கி பதிவுகளில் நிலவின் புகைப்படங்கள் தோன்றியிருக்கின்றன.இருப்பினும் இயற்கையில் ஏதாவது அதிசிய நிகழ்வுகள் நிகழ்ந்தே கொண்டே இருப்பதால் அவ்வப்பொழுது அவைகளையும் சுருட்டும் பொழுது நான் அனுபவித்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எனக்கு பிடித்திருக்கிறது.



இங்கு மேலும் இரண்டு புகைப்படங்கள் உங்களுக்காக. ஒன்று கடந்த ஜனவரி மாதம் 2010 ‘ஓநாய் நிலவு (wolf moon)' என்று பெரிதாக இயற்கை புகைப்பட கலைஞர்களால் கொண்டாடப்பட்டு சுட்டுத் தள்ளப்பட்ட நிலவின் புகைப்படம் எனது புகைப்பட பெட்டியின் வழியாக. அந்த இரவு நேரத்தில் வீட்டிலிருந்து எஸ்ஸாகி அருகிலிருந்த ஒரு பெரிய சர்ச் மைதானத்தில் பேயோடு பேயாக நின்று, குளிரில் பற்கள் கிடுகிடுக்க எடுத்த ஜில் நிலவு இதுதான்...



ஏற்கெனவே இந்த பதிவில் சொன்னதைப் போன்று புகைப்படமெடுக்க முழு நிலவு காலம் சரியான தருணம் கிடையாதாம். எனவே ரொம்ப துள்ளியமாக பார்க்கணமின்னா இந்த நிலாவை பாருங்க.

Moon in July Night

அடுத்து நேற்று இரவு எடுத்த சூப்பர் நிலவு. இது 18 வருடங்களுக்கு ஒரு முறைதான் பூமிக்கு மிக அருகே வந்து போகிற நிலவாம். பல முறை பல முகங்களில் படம் எடுத்து தலைக்கேறி இருப்பதால் என்னாத்தை வெளியிலே போயி எடுக்கிறதுன்னு நினைச்சுட்டு இருந்தேன். கடைசியாக சோம்பேறித்தனத்தை உதறி, ட்ரைபாட் எதுவுமே இல்லாம முடிஞ்ச அளவிற்கு ஆட்டமில்லாம எடுக்க முனைந்த படம்தான் இது... I would say this is an OK shot :D...


Super Moon 2011

Wednesday, March 16, 2011

ஜப்பான் அணு உலைக்குள் உலகத்திற்கான செய்தி: Nuclear Reactor!!

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியான ஜப்பான் இயற்கை கொடுத்த தொடர் அடியினை சந்தித்து தடுமாறி நிற்கும் இந்த சூழ்நிலையில் அணு சக்தி தொழில் நுட்பத்தை பற்றி மறு பரிசீலனை உலகம் தழுவிய முறையில் செய்வது நமக்கெல்லாம் அவசியமாகிறது.

ஜப்பான் தனது பூமிய இருப்பில் அதிகளவு பூகம்பத்தையும், தொடர்பாக ஆழிப்பேரலையையும் சந்திக்கும் ஓரிடத்தில் அமைந்து போய் தனது இருப்பை நகர்த்தி வருகிறது. அவர்கள் இந்த இயற்கை சார்ந்த பேரழிவினை கடந்த கால அனுபவத்தைக் கொண்டு மிக்க ஆயத்தத்துடன் எதிர் நோக்கும் தன்மை இருப்பினும், இந்த சமீபத்திய பூமியச் சிலிர்ப்பு அவர்களை எதிர்பாராத நிலைகுலைவில் இருத்தி வைத்திருக்கிறது.

நில அதிர்வு ஏற்பட்ட அடுத்த நிமிடத்திலேயே ஆழிப்பேரலையின் பயணம் தொடங்கி விடுகிறது. அதன் வேகமும், நிகழ்த்தப் போகும் சேதாரமும் எதனை ஒத்ததாக இருக்கப் போகிறது என்பது, நாம் கரைப் பகுதியில் அமைத்து வைத்திருக்கும் தொழிற்நுட்பங்களையும், நம்மிடம் இருக்கும் மக்கட் தொகையையும் கொண்டே இறுதியில் கணித்து தெரிந்து கொள்வதாக இருக்கிறது.

அத்தனை பெரிய அனுபவத்தையும், தொழில் நுட்பத்தையும், பொருளாதாரத்தையும், முன் ஏற்பாடுகளையும், நேர்மையாக மக்களுக்கென இயங்கும் அரசாங்க எந்திரத்தையும் கொண்டிருக்கும் ஒரு நாடே இப்படியான ஒரு அவல நிலையில் இந்த அணு சக்தி உலைகளுக்கு நிகழ்ந்த நிகழ்வினால் நிலை குலைந்து நிற்கும் பொழுது ஏனைய மூன்றாம் தர நாடுகளுக்கு இது போன்ற எதிர்பாராத ஒரு இயற்கை பேரழிவினையொட்டி அணு உலை விபத்து நிகழ்ந்தால் என்னவாகும் என்று நினைக்கும் பொழுது மண்டை கிறு கிறுக்கிறது. அதிலும் குறிப்பாக நமது சுரண்டல் அரசாங்கத்தை கொண்ட நாட்டில் எப்படியெல்லாம் விளைவை சந்திப்போம்?

கல்பாக்கத்தில் அமைந்திருக்கும் அணு உலை கண்டிப்பாக 35+ வருடங்களுக்கு முன்பாக கட்டமைக்கப்பட்டிருப்பதாகத்தான் இருக்க முடியும். இந்த கால இடைவெளியில் அதன் கட்டமைப்பே கலகலத்துத்தான் போயிக்கொண்டிருக்கும். அங்கே இது போன்ற ஒரு பூகம்பத்தாலோ அல்லது ஏதோ ஒரு தொழிற்நுட்பக் காரணத்தாலோ வெடிப்பு நிகழ்ந்து கதிரியக்கம் நிகழப்படுமாயின் எது போன்ற தற்காப்பு முன்னெடுப்புகள் கை வசத்தில் உள்ளன? அந்த திட்டத்தில், மக்களையும் பங்கு கொள்ள வைத்து தயார் நிலையில் அறிவூட்டி நாம் திட்டங்களை தீட்டி வைத்திருக்கிறோம். இத்தனை மக்கட் தொகையையும் உள்ளடக்கி கொண்டு, சரிவர அவர்களுக்கு இந்த கதிரியக்கத்தின் சாதக பாதகங்களை அறிவுறுத்தி வைக்காமல் எப்படி கண்களை மூடிக் கொண்டு மேலும் மேலும் அணு உலைகளை நாட்டின் இதரப் பகுதிகளுக்கும் பரப்பி வைக்க நம்மால் முடியும்?

குறைந்த பட்சம் இருக்கும் மக்கட் தொகையினை கருத்தில் கொண்டாவது இயற்கை-நண்ப தொழிற்நுட்ப வழியில் இது போன்ற மின் சக்திக்கென அணு உலைகளை பயன்படுத்தி பிற்காலத்தில் அதன் கழிவுகளாலும், விபத்துக் காலங்களில் நடந்தேறும் கதிர் வீச்சுக் கோரங்களை கணக்கில் கொண்டு மாற்றுத் திட்டங்களான காற்று, நீர், சூரிய வெப்பத்தினைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் உக்தியினை சொடுக்கி ஒரு பழக்கமாக ஆக்கிக் கொண்டால்தான் என்ன.

இப்பொழுது ஜப்பானில் அணு உலை வெடித்த இடத்திலிருந்து 250 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கூட கதிரின் தாக்கம் இருப்பதாக அறியப்படுகிறது. இது போன்றதொருதளவில் நமது நாட்டில் கல்பாக்கத்திலோ அல்லது கூடான் குளத்திலோ நடந்தேறினால் கதிரியக்கத்தின் தாக்கம் எது வரைக்கும் சென்றடையும்? எப்படி மக்களை அப்புறப்படுத்தி எந்த மாநிலத்தில் கொண்டு போய் விடுவோம்? எந்த வீட்டை அது போன்ற ஒரு கதிர் வீச்சு நடைபெறும் நாளில் அடைத்து காற்று கூட உட்புக முடியாதவாறு பூட்டிக் கொண்டு உள்ளயே இருப்போம்?

ஒன்று தெரியுமா? இது போன்ற கதிர்களிலிருந்து வரும் கழிவுப் பொருட்கள் 10 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் வருடங்கள் கூட தனது வீரியத்தை இழக்காமல் கதிர் வீச்சை வெளிப்படுத்துகிறதாம். இதனை வைத்து பாதுகாப்பதற்கே இடம் தேடி வருகிறோம், அதாவது கழிவினைக் கூட எப்படி ஜப்பான் அணு உலையினுள் குளிர்ந்த நீரைச் செலுத்தி வெப்பத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள போராடியதோ அதனைப் போன்றே இந்த கழிவினையும் வைத்து கண்ணும், கருத்துமாக பாதுகாத்து வரவேண்டும்.

நம்ம பிச்சாத்து போபால் விபத்திலேயே பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை பலி கொடுத்துவிட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி துடைச்சி போட்டுட்டு மறந்து போனவிங்க நாம. இனிமே வரப் போறதுக்கு மட்டும் அலட்டிக்கவா போறோம். ஆனா, இந்த அணு கதிர் வீச்சில என்னவொரு மறுக்க முடியாத தடயத்தை விட்டுக்கிட்டே போகுமின்னா நான்கு தலைமுறைக்கும் தள்ளி பிறக்கும் குழந்தைகளில் கூட குறைபாடுகளை மரபணுக்களின் வழியாக வெளிப்படுத்தி நான் இன்னும் உசிரோடதான் இருக்கேன்னு சொல்லிகிட்டே இருக்கும்.

ஜப்பானில் இப்பொழுது நிகழ்ந்திருக்கும் விபத்தின் பிரமாண்டத்தைக் கண்டு சைனாவே எல்லா அணு உலைகளுக்கும் போட்டிருந்த எதிர்கால ஒப்பந்தத்தை கடாசப் போகிறதாம். எனவே, நாம சைனாவை பார்த்துத்தானே சூடு போட்டுக்குவோம், இப்போ அவங்கள நகல் படுத்தி ஒரு நல்ல சூடு போட்டுக்குவோம் வாங்க!


கதிர்வீச்சின் நீள அகலத்தை புரிந்து கொள்ள இந்த படத்தை பார்த்து புரிஞ்சிக்குவோம். இது இப்பொழுது ஜப்பானில் நிகழ்ந்த அணு உலை வெடிப்பினையொட்டிய projection ...



Photo Courtesy: Net

Related Posts with Thumbnails