Thursday, January 19, 2006

யார் புத்திசாலி...?

எதார்த்த வாழ்வில் பல நிலைகளில் பல விதமான மனிதர்களை சந்திக்க வாய்ப்புகள் அதுவாக அமையும். உதாரணமாக தன்னுடன் வேலை பார்க்கும் இடத்திலோ, ரயில் மற்றும் பேருந்து பயணங்களிலோ. அப்படி சந்திக்க நேர்ந்து சில அதிசியத்தக்க விடையங்கள் ஒருவரிலிருந்து மற்றொருவருக்கு இடமாறக் கூடும். அண்மையில் பெரும் வெற்றியை ஈட்டித் தந்த "காதல்" திரைப் பட கதைக் கரு கூட அப்படி ஒரு சந்திப்பில் கிடைத்ததாக அப்படத்தின் இயக்குனர் கூறக் கேட்டோம்.

நாம் கதைக் கேட்கும் நிலையிலிருப்பதால் அவ் நிகழ்வின் ஆழத்தை நம்மால் கிரகித்திக் கொள்ள முடியுமே தவிர அவ் உணர்வை நம்மால் பெற முடியுமா? அவ்வாறு கேட்டுணர்ந்த உண்மைச் சம்பவம் ஒன்றை நம் வாழ்வில் (சந்திக்க நேர்ந்து) கொணர்ந்து அதன் உச்சத்தை அடைந்து அதன் உண்மை நிலையை உணர நம்மில் பல பேர் அஞ்சி விலகியே இருக்கிறோமே, ஏன் இப்படி.

அவ்வாறு ஈடுபடும் பொழுது அதனால் ஏற்படும் சிக்கல்களை மனதில் கொண்டு தவிர்ப்பதால் நமக்கு கிடைப்பது வாழ்வியல் சார்ந்த பட்டுணர்விழப்பா அல்லது அது போன்ற துர்ச் சம்பவங்களிலிருந்து விலகி தன்னை தக்க வைத்துக் கொள்வதால் எதிர் கால சுய முன்னேற்றம் (ஆன்மீக மற்றும் சமூதாய) கருதியா என்பது எனது அண்டைய காலத்திய விழிப்புணர்வு கேள்விகளில் ஒன்று.

இவைகளுக்கு மிக அண்மையில் மிக்க தெளிவாக ஐயா ஞானவெட்டியானிடமிருந்து தெளிவுரை பெறும் பாக்கியமும் பெற்றேன், அது என்னை புத்தக அறிவூட்டத்துடன் தடை பட்டுப் போன சிந்தனை ஒட்டத்தை கலைந்து பட்டறிவூட்டதினுள் உள்ள நீரோடையில் இணைத்து தெளிவு படவைத்ததுடன் நிறைய என்னுடைய வினாக்களுக்கு விடை கிடைத்ததாகவும் தோணச் செய்கிறது.

இப்பொழுது புத்தகங்கள் படிப்பது சிந்திக்கும் திறனை வளர்த்துக் கொள்வதற்கு மட்டுமே என்பதில் தெளிவாக உள்ளேன். மேலும் வள்ளுவம் கூறிய இந்த குறளின் மகத்துவமும் அதன் இன்றியமையாமையும் உணரப்பட்டது. அக் குறள் இதுதான்...

"அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்."

Friday, January 13, 2006

தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்...

எல்லோரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கி நலமே வாழ்ந்திட தெக்கிக்காட்டானின் வாழ்த்துக்கள். உரக்க சப்தமிட்டு "பொங்கலோ பொங்கல்."

Wednesday, January 11, 2006

மாதிரிப் பதிவு

இது என்னுடைய மாதிரிப் பதிவு, நிறைய மாற்றங்கள் செய்யப் பட்ட நிலையிலே இது எப்படி வந்திருக்கிறது என்பதனை அறிந்துகொள்ள. மீண்டும் இவ்வளைப் பக்கத்தை பராமரிக்கும் அன்பர்களுக்கு நன்றி.

Sunday, January 08, 2006

பட்டறிவு, படிப்பறிவு பார்த்து தெரிந்தறிவு

ரொம்ப சீரியசான தலைப்பா இருக்கேன்னு தலை தெறிக்க ஒடிப்போயிடதீங்க படிச்சுப் பாருங்க பிடிக்கலாம் அதனைபற்றியதுதான் இப்பதிவு:

பட்டறிவு, படிப்பறிவு, பார்த்து தெரிந்தறிவு இம் மூன்றில் எது ஒருவனுக்கு வாழ்வியல் சார்ந்தறிவை ஆழமாக உணர்த்தி தனது வாழ்வை மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது என்பதனை பற்றிய எனது கண்ணோட்டம் நான் பட்டு தெரிந்து கொண்டிருப்பவைகளிலிருந்து சில உங்களின் பார்வைக்கு.

நானும் வயதிற்கு வந்த நாளிலிருந்து என் மனம்மெனும் குரங்கை ஒரு நிலை படுத்தி வாழ்வெனும் படகில் எந்தவொரு ஒட்டையும் விழுந்துவிடா வண்ணம் கரை சேர்த்துவிட எத்தனித்து ஆன்மீகமெனும் துருப்புச் சீட்டை படிப்பறிவின் [Universe in a Nutshell and Parallel Universe ;) போன்ற] மூலம் பெற்று அதனை எனது சொந்த வாழ்க்கையில் பாதி தெரிந்தும் பாதி தெளியாமலும் நடைமுறை படுத்தப்போக எனக்கு இன்று கிடைத்துக் கொண்டிருப்பது பட்டறிவு.

இந்த பட்டறிவு எனும் பொக்கிசம் கிடைக்க தன்னையும் தன்னை சார்ந்த சமூக நடைமுறை கருத்துக் களையும் கூட சில நேரங்களில் தொலைத்து நானும் காணாமல் போகி கொண்டிருக்கின்றேனோ என்று கூட நினைக்க வைக்க தோன்றுகிறது. எனினும் இந்த அகன்று விரிந்த(கொண்டிருக்கிற) பிரபஞ்சத்தில் வளரும் ஒவ்வொன்றும் இறுதியில் திரும்பவும் தனது சுய நிலைக்கு (சுருங்கி) வந்துதான் ஆக வேண்டும்மென்ற கூற்று உண்மையெனில் தேடும் ஒவ்வொரு வினாவுக்கும் விடை கிடைத்துத்தானே ஆக வேண்டும்? நான் இங்கு பேசப் போகும் வினாக்கள் வாழ்வியல் சார்ந்தவையே அன்றி ஐன்ஸ்டைன்னிய அல்லது ஹாக்கின்ச வினாக்களோ அல்ல.

நாம் எல்லோருமே எதோ ஒரு மண்ணியல் சார்ந்த விடயமன்றி அதனைவிட உயர்ந்த விடயத்திற்காக பிறக்கிறோம் என்று வைத்துக்கொண்டால் எங்கிருந்து வருகிறது இந்த மனித ஏற்ற தாழ்வுகள்? அவ் ஏற்ற தாழ்வுகள்தான் மனிதனின் தனி மனித சுயமுன்னேற்றதிர்க்கு அடிகோலாக அமைகிறதோ என்று எண்ணுகின்றேன். இருவர் பார்க்கும் ஒரே விடயமும் அவ்விருவருக்கும் ஒரே மாதிரியான எண்ணவோட்டத்தை ஏற்படுத்துவதில்லையே ஏன்?

எந்த தளத்திலிருந்து நாம் அவ்வாறு வேறு படுகிறோம் அவ்வாறு இறு வேறு தளங்களிலிருந்து விடயங்களை அணுகுவதற்கு ஏது அடிப்படையாக அமைகிறது? மதமா? அல்லது நம் வளர்ப்பு முறையின் மூலம் நமக்கு ஊட்டப் பட்ட கருத்தோட்டங்களா? அல்லது வேறுபிற காரண காரணிகளா (கல்வி, தொழில் அல்லது குடும்ப அங்கீகாரம் அன்றி)?

நான் என்னையே பல சூழ்நிலைகளில் கேட்டுக் கொண்ட கேள்விகளில் சிலவை அவை. எனக்குக் கிடைத்த வாழ்வும் வளர்ப்பு முறையும் எல்லோருக்கும் அமைந்தது போலத்தான் அமைந்திருக்கிறது. இருப்பினும் எல்லோரும் நடக்கும் அந்த முள்ளற்ற, கரடு முரடற்ற பாதையிலிருந்து விலகி சற்றே வலியேற்றமிக்க பாதையை தேர்ந்ததெடுக்க உந்துதலாக இருந்தது எது (உதராணமாக நானகவே தேடிப் போய் இந்தியாவிலிருந்து சிறுமியாக சிறு வயதில் அமெரிக்க கொண்டுவரப்பட்டு அதற்கு முன்னரே நமது தாயகத்தில் படக் கூடாத கொடுமைகளையெல்லாம் அனுபவித்து அந்த வலியே இன்றும் தனது சொந்த வாழ்வை அமைத்துக் கொள்ளும் நிலையிலிருந்தும் ஒரு நம்பிக்கையற்ற தன்மையை கொண்டு தன்னையும் வருத்திக் கொண்டு தனக்கு உதவ வந்தவர்களையும் வஞ்சிக்கும் அளவிற்கு அந்த பாதிப்பு அவளை தாக்கியிருக்கிறது இது அவளின் ஆழ் மனத்தில் பதிந்த ஒரு உண்மை, இது இப்படியாக இருக்க, அதன் ஈர்ப்பின் விகாரம் தெரியாமல் அவளுக்கு ஒரு வாழ்வு கிடைக்கவேண்டும் என்ற மிக்க சிரத்தையான விடா முயற்சியை கையில் கொண்டு இறங்கி இன்றும் அவளின் கேள்விகளுக்கு பதில்மட்டுமே அளித்துக் கொண்டு இருக்கிறேன்...).

இருப்பினும் இம் முயற்சியின் மூலம் நானும் தினமும் ஏதோ ஒரு இலக்கை அடைந்து கொண்டுதான் இருக்கிறேன் என்பது அவ்வப்பொழுது உணர்கிறேன், அதிலும் இந்த கதை சுபமாக முடிந்தாலும் முடியாவிட்டாலும்.

ஒருவனுக்கு வாழ்வை பற்றிய பிரக்ஞை அதாவது வாழ்ந்து மடிகிறோம் என்றும் இடைப்பட்ட காலத்தில் எதனை தேடித் தேய்கிறோம் என்ற உணர்வும் எந்த சூழ்நிலையில் எண்ணவைக்கிறது? வாழ்வில் எடுக்கப்பட்ட முடிவுகள் தவறாகும் போதோ, பேரிழப்பொன்றோ அல்லது பேரிடிவொன்றொ நம்மை தாக்கும் பொழுதானே பொதுவாகவே அவ்வாறு எண்ண வைக்கிறது.

மாறாக மிக்க சந்தோசமான சூழலிலா? நிறைய சிந்தனா வாதிகள் கூறியதை பேன்றே வெற்றியை காட்டிலும் தோல்வியில் தான் நிறைய கற்றுகொள்ள கிடைக்கிறது, தொடர் வெற்றி ஒருவருக்கு தான் அவ் முயற்சியில் தன்னிரைவு அடைந்துவிட்டதாகவும் எல்லாமும் அறியப்பட்டதாகவும் எண்ணத் தோன்றி வளர்ச்சியினூடே தொய்வு ஏற்படுத்தி விடுவதாக எனக்குப் படுகிறது.

இது வாழ்வியல் சார்ந்த எல்லா முயற்சிகளுக்கும் பொருந்தும். எல்லா விடயங்களும் மிகச் சரியாக கணக்கீடப் பட்ட ரீதியில் சொல்லும் பொழுதோ தனது மன உலகம் அதிலேயே உழன்று ஏனைய பிற விடயங்களுக்கு மனம் திருப்பப்படும் பொழுது நாம் வாழ்வின் எல்லைக் கோட்டை தொட்டிருப்பதை உணர்வோம்.

இதற்கிடையில் எல்லா உயிரினங்களும் செய்திருக்கக் கூடிய அடிப்படை வேலைகளான தனக்கே வாழ்ந்திருப்பதை காணலாம் (பிறத்தல், உண்ணுதல், உறங்குதல், வளர்தல், இனப் பெருக்கம் இறுதியாக மடிதல்). இந்த அவசர கதியில் தன்னைத் தானே தொலைத்துக் கொள்ளும் சமயத்தில் இதில் எங்கிருந்து வருகிறது பொது நலம், மத நல்லிணக்கம், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போதல், சாகோதரத்துவம்.

நம்மில் பெரும்பாலோருக்கு தன்னிடத்தே உள்ள "தற்பெருமை" மற்றும் "ஈகோ" என்ற சிறிய வட்டத்தை விட்டு வெளியில் வருவதற்கே வாய்ப்பே இல்லாமல் வாழ்ந்து மடிந்து விடுகிறோம். இச் சூழலில் தன்னை மிஞ்சிய ஏனைய பிற விடயங்களும் தன் வீட்டுக்கு வெளியே காத்துக் கொண்டிருக்கிறது தனக்கு வாழ்வியல் பொருத்த சூத்திரங்களை கற்றுக் கொடுக்க என்று எப்பொழுது உணர்வது, அதனை நாடிச் சென்று ஆராய்ந்து தெளியும்வரை.

இதனால் தான் நான் நினைக்கின்றேன், இன்னும் ஐம்பது வருடங்களாக சலிக்காமல் திரையரங்கங்களுக்குச் சென்று எல்லா விடயங்களையுமே கதநாயக/கிகளை நடிக்க வைத்து நாம் நம் அவாவை சொரிந்து தீர்த்துக் கொள்கிறொம் என்று எனக்கு கருதத் தோன்றுகிறது.

அவ்வாறு பார்க்கும்பொழுது நீலிக் கண்ணீரும் வடித்து தொலைத்துவிட்டு, தனது அண்டை வீட்டில் தப்பித்தவறி யாரவது ஒருவர் காதல் திருமணமோ அல்லது வேறு மாதிரியான வாழ்வோ வாழ்வில் நலிவடைந்தோருக்கு அளிக்க முன் வந்து வாழ நேரிட்டால் அந்த பக்கமாக தனது குழந்தையை கூட அனுப்பப் பயப்படும் கண் இருந்தும் குருடர்களான இவர்களை எந்த வாழ்வு சார்ந்த பிரக்ஞை தட்டி எழுப்பப் போகிறது?

என்னை பொருத்தமட்டில் ஆற்றின் கரையில் நின்று கொண்டு தண்ணீர் ரொம்ப குளிர்ச்சியாக இருக்குமோ என்று அங்கலாய்ப்பவனை விட, if someone says, been there and done it, it would not work for me என்று கூறுபவன் பட்டறிந்துவிட்டவன் என்று கூருவேன். இது போன்ற அனுபவம் மற்றவர் பட்ட அனுபவங்களை கூர்ந்து கவனிப்பதின் மூலமோ அல்லது நிறைய்ய்ய்ய்ய புத்தகங்கள் படிப்பதின் மூலமாகவோ கிடைக்காது.

மற்றுமொரு இடத்தில் படித்ததில் பிடித்த வரிகள்:

'Adventure without risk is Disnelyland.'

'Do what you will, this life is a fiction/And is made up of contradiction.'

Friday, January 06, 2006

மினசோட்டா பய(ண)ம்

அண்மையில் மினசோட்டா மாநிலத்திற்கு சென்றிருந்தேன் Christmas நிமித்தமாக, கண்டிப்பாக அந்தப் பயணத்தைப் பற்றி இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் ஏதாவது அவர்களுக்கு கிடைக்கக்கூடும் என்ற எதிர்ப்பார்புடன் இதனை இங்கு கிறுக்கிவைக்கிறேன். முதலில் எனது விமான பயணத்திலிருந்து ஆரம்பிக்கிறேன். ஏழு வாரங்களே இருக்கும் பட்சத்தில் பயண சீட்டு வாங்க நேர்ந்த்ததால் அமெரிக்க ஏர்லைன்ஸ் இணைப்பு விமானம் மூலம் அட்லாண்டாவிலிருந்து சிகாகோ வழியாக செயிண்ட் பால் செல்ல வேண்டும், குறைந்தது நேரடி விமானமாக இருந்தால் ஒரு இரண்டரை மணி நேரமே ஆகக்கூடும்.

இதில் என்ன இருக்கிறது தெக்கிக்காட்டான் பிளேடூ போட்றனே அப்படின்னு நினைக்காதீங்க வந்திட்டேன் விசயத்திற்கு. இரண்டு மணி நேர தாமதத்திற்கு பிறகு மெதுவா உருட்டி ஒடு தளத்திற்கு வந்து வேகத்தை அதீதப் படுத்தி ஒரு நான்கு அடி உயரத்தில் தாவ ஆரம்பித்த அடுத்த விநாடி விமான ஒட்டி தடமுடன்னு திரும்பவும் வலது பக்கமாக விமானம் சாய பலத்த சப்தத்துடன் தரையிறக்கினார். உள்ளே பயணிகளிடத்தே ஒரே கலோபரம் கூச்சல் குழப்பம். விமானம் வேகம் குறைந்து மட்டுக்கு வந்ததும் விமான ஓட்டி வலது பக்கமாக உள்ள இஞ்சின் பழுதடைந்தாகவும் இப்பொழுது விமானம் தன்வசப்படுத்தப்பட்டதாகவும், தாம் அனைவரும் அதிர்ஷ்டவசமாக ஒரு பெரிய விபத்திலிருந்து தப்பித்துவிட்டதாகவும் கூறினார்.

மீண்டும் எல்லோரையும் வேறு விமானம் மாற்றி ஒரு ஆறு மணி நேர இடைவேளைக்குப் பிறகு வங்கொலையா கிடந்த எங்களுக்கு ஒரு பெப்சியை இரண்டு பேருக்கு நிரந்து ஒரு காகிததுண்டை கடிச்சிக்க சொல்லி கொடுத்துப் போட்டு அம்மணிகள் இரண்டும் எஸ்கேப்பு அதுவும் இரண்டாவது விமானத்தில.

சரி விட்டுத்தள்ளு அப்படின்னு மறந்திட்டு ஒரு ஐந்து நாளை குளிரக் குளிர கொண்டடிப்புட்டு திரும்ப கொண்டுவந்து விமான நிலையத்தில தள்ளிப்புட்டு போயிட்டாங்க. மொத்தம் பதினோரு மணி நேரம் வீடு வந்து சேர, இடையில என்னன்ன நடந்திச்சுன்னு சொல்ல ஆரம்பிச்சன்ன திரும்ப பேசாம சிவா ஒணான் பிடிக்கிற கதையில வர கதாநாயர்களில் ஒருவராக நானும் திரும்ப போயிடலாம தெக்கிக்காட்டுக்கு அப்படின்னு தோணுது. உடுவன ஒங்கள மிச்சத்தையும் கேட்டுப்புட்டு போயிருங்க, நீங்க தப்பித்தவறி அமெரிக்கன் ஏர்லைன்ஸ்_ல பறக்கப் போறீங்களா இல்லையான்னு முடுவு பண்ணற பகுதி இப்ப சொல்ல போர விடயம்.

அடங் கொப்புறனா, மினசோட்டாவில் ஏத்தி உட்கார வைச்சுப்புட்டு திரும்பவும் ஒரு இரண்டு மணி நேரம் தாமத்திருக்கு பிறகு, ஏதொ வலது இறக்கை பக்கம் போட்ட ஃபியோல் அளவு தெரியலயாம் ஏன்னா அத அளக்குற மீட்டர் வேலை செய்யலயாம் அதனால மெக்கானிக் வந்துக்கிட்டு இருக்கான் செத்த பொறுமையா இருங்கான்னு சொல்லிபுட்டு ஒரு காப்பிதண்ணி கூட கொடுக்கம உட்காரவைச்சு கொன்னுபுட்டாய்ங்க.

அப்புறம் அந்த பக்கம் உள்ள மீட்டரை இந்த பக்கம் மாத்தி ஃபியோல் திரும்ப வடிச்சி திரும்ப ஏத்தி, ஒரு வழி பண்ணி 40 நிமிட மிதவைக்கு பிறகு எல்லாம் உசிர கையில புடிச்சுக்கிட்டு மாரியாதைக்காக வைச்சிருக்க ரெடிமேடு சிரிப்ப வேற சிரிச்சி வைச்சு, இத விட என்ன கூத்துன்னா கொஞ்சம் பேர் உணர்ச்சி பெருக்கில தரையிரங்கின பிறகு கைவேற தட்டி என்ன கண்ணீர் வர வைச்சுப்புட்டாய்ங்க பொறுமையின் சிகரங்கள் கணக்கா, அப்புறம் ஏன் சைக்கோதெரபி போகமாட்டாய்ங்க.

இத ஏன் சொல்றேன்னா இப்ப நான் இருக்கிற நாடு வளர்ந்த நாட அல்லது வளர்ந்து சுருங்கிற நாடான்னு கொழப்பமா இருக்கு. எல்லாத்திலயும் கணக்கு பாக்கிறாய்ங்க கொடுக்கிறதில மட்டும், ஆனா விலைவாசியெல்லாம் சத்தமில்லாமல் ஏறிக்கிட்டு கிடக்குது.

சரி பஞ்சம் பொழைக்க போன இடத்தில என்ன வேண்டிகிடக்கு வீராப்புன்னு பாத்துகிட்டும் இருக்க வேண்டி கிடக்கு இந்த கன்றாவியெல்லாம், ஏன்னா என் சட்டை பையில ஒரு பெரிய ஒட்டையை போட்டு பண்ற ஒவ்வொரு பைசாவையும் ஏதாவது ஒரு வழியில மத்திய, மாநில மற்றும் தாலூக வாரிய அடிச்சு புடிங்கி புட்ராய்ங்க.

என்ன நடக்கிதுன்னே தெரியல, டாலர் மயக்கத்தில விட்டில் பூச்சியா மாட்டிக்கிட்டு என்னமோ அமெரிக்கன் கனவாமில்ல கடங்காரன் கனவ தொரத்திகிட்டு, என்னத்த சொல்றது, போங்க. பசங்களா நல்ல யோசித்து ஒரு முடிவு எடுத்துப் புடுங்க, ஆமா.

Thursday, January 05, 2006

வந்துட்டேன்...!

எங்கிருந்து ஆரம்பிப்பது அப்படின்னு யோசித்து நாளைக்கு வந்து எழுதலாம்மென இருக்கிறேன். கிட்டதட்ட ஒரு மாததிற்க்குமேல் ஆகிவிட்டது இந்த பக்கம் தலைய காமித்து, இருப்பினும் சில அன்பர்களின் எழுத்துக்களை படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். நாளை பார்க்கலாம்.

Related Posts with Thumbnails