Friday, December 25, 2015

அகவய நட்பற்ற பெரியாரும், ராஜாஜியும்...

இரண்டு பெரியவர்களோட நட்பு ஒழுகல் பொருட்டு ஓர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பெரிய கட்டுரை எழுதி வைச்சிருந்தேன். ஆனால், எனக்கு வேண்டிய ஒருவருக்கு அதை அனுப்பி வைச்சு, அந்த கட்டுரையை பதிவேற்றலாமான்னு கேட்டேன். அவர் சொன்னார், அப்படியே கிடப்பில வைச்சிக்கோ, இன்னொரு ஐந்து வருஷம் போகட்டும் அப்பவும் நீ கேட்டுருக்க கேள்விகள் சரியா இருந்தா பதிவேற்றுன்னு.

நான் கேட்ட கேள்வி அதில என்னான்னா, பெரியாரும், ராஜாஜியும் ஒருவர் தட்டில இருந்து இன்னொருத்தர் எடுத்து சாப்பிடுற அளவிற்கு நண்பர்களாக இருந்தும், பெரியார் கடைபிடித்த பிரபஞ்ச பொது விதி ‘மனிதத்தை மதித்தலை’ எதன் பொருட்டு ‘குலக் கல்வியை’ ஆதரித்த ராஜாஜியிடம் அக வயமாக கொண்டு சேர்க்க முடியவில்லை.

இது அரசியல் சார்ந்த ஒரு நிலைப்பாடா அல்லது அகம் சார்ந்த மன மலர்தலில் நடந்த சிக்கலா? அக நக நட்பது நட்பா, அல்லது முக நக நட்பது நட்பா?? 

இதில் என்னாத்தை பெரிசா நட்பு பாராட்டுதலின் பேரில் கடத்தி சென்று சேர்த்திருக்கிறார்கள்?

இரு வேறு துருவங்களில் கருத்தியல், அகவய வேறுபாடுகளை கொண்டவர்களாகினும்... 
அப்போ அந்த இரண்டு பெரிய மனிதர்களுமே தங்களுடைய சகிப்புத் தன்மையின் அடிப்படையில் மட்டுமே நாகரீகம் பொழங்கியவர்களா? 

பெரியாரை பொருட்டு எனக்கு ஒரு வருத்தமுண்டு , இத்தனை பெரிய உண்மையை ராஜாஜியிடமே கூட கடத்தி சென்று அவரை விழிப்படைய வைக்க முடியாத நிலையில் நட்பு பாராட்டி இருக்கிறாரேயென...

Wednesday, December 09, 2015

மதங்களும் மனிதர்களும் வெள்ளத்திற்கு முன்னும்/பின்னும்!

 


மதங்களும் மனிதர்களும் வெள்ளத்திற்கு முன்னும்/பின்னும் ! by Prabhakar

ஒரு நான்கு வாரங்களுக்கு முன் அதாவது சென்னை வெள்ளத்திற்கு முன்பு பின்பு என பிரித்துக் கொண்டால், காலம் மனிதர்களின் நாவை, அவர்களுடைய கருதுகோள்களை எப்படியெல்லாம் புரட்டி போட்டு விடுகிறது என்பதாக விளங்கச் செய்யும்.

எல்லாமே நன்றாக போகிறது என்ற நிலையில் ஒரு வகையில் ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுது போக்குவதற்கென ஏதாவது ஒரு விசயம் வாயில் போட்டு மெல்லும் அவலை போன்று தேவைப் படுகிறது. கொஞ்சம் நன்றாக யோசித்துப் பாருங்கள். மாட்டு இறைச்சி சாப்பிட்டால் மரண தண்டனை, எங்கோ ஒரு நாட்டில் அவனது பிராந்தியத்தில் நடக்கும் அரசியல் குழப்படிகளுக்காக அவன் ஆற்றும் செயலை வைத்து, உனது ஊரில் வாழும் அடுத்த மதத்து ஆட்களுடன் பிரச்சினை. அதனை சகியாது ஒரே வீட்டினுள்ளே வசித்து அனைவரையும் போல, உழைத்து, வருமானம் ஈட்டி, குடும்பம் எடுத்து, பிள்ளைகளை வளர்த்து என்று வாழும் ஒருவர் இங்கு நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு உண்மையான அக்கறையுடன் ஏனையவர்கள் போலவே ஒரு கருத்தை முன் வைத்தாலும் வேற்று மதத்தவர் என்ற ஒரே அடையாளத்தைக் கொண்டு உடனே கிஞ்சித்தும் சம்பந்தமே இல்லாத அண்டைய நாட்டிற்கு அனுப்பத் துடிக்கும் அவலம்.

நாங்கள் அந்த கூட்டத்தினர் அல்ல என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் கொண்டு போய் முட்டுச் சந்தில் நிப்பாட்டி வைத்திருக்கிறீர்கள். இதெல்லாம் சென்னை வெள்ளத்திற்கு முந்திய அவலுக்கான சமாச்சாரங்கள். ஆனால், இரண்டு வாரத்திற்கு முன்பாக நடந்த இயற்கை/செயற்கை பேரிடர் நாம் அனைவர் மனதையும் திருப்பி போட்டு, நம் மீது படிந்த அழுக்கு எண்ணத்தை துடைத்தும் தந்து விட்டு போயிருக்கிறது. பிம்பத்தத்தை கட்டி எழுப்ப முயன்றவர்களின் அத்தனை முயற்சிகளும் இப்பொழுது விழலுக்கு இரைத்த நீராக போய் விட்டது.

மீண்டும் அது போன்ற ஒரு நிலையை கொண்டு வந்து, மக்கள் மனதில் அழுக்கை படிய வைக்க சற்று சிரமப்பட்டே உழைக்க நேரலாம். இது வரைக்கும் படைப்பாற்றலுடன் இயங்கி அதனை கட்டியெழுப்ப முயன்றைதை விட இன்னும் கூடுதலாக இல்லாத மூளையை கசக்கி வேலை செய்தாக வேண்டும்.

எது எப்படியோ எனக்கு பல கேள்விகள் இருக்கிறது. ஒரே ஊரில் பிறந்து வளர்ந்து, அதே
காற்றை சுவாசித்து, நீரை அருந்தி, விளையும் மரக்கறிகளிலிருந்து அரிசி வரையிலும் ஒரே மாதிரி உண்டு, உடுத்தி, அத்தனை வீட்டு விழாக்களிலும் இரு தரப்பும் கை கலந்து வாழும் ஒரு கிராமியப் பின்னணியில் பிணைந்து கிடக்கும் மனிதர்களை உடனே அத்தனை நம்பிக்கைகளையும் கை கழுவி விட்டு விட்டு, அவர்களை எப்படி நீங்கள் சத்திய சோதனையில் இறக்கி தீயின் வழி நடந்து வந்து உன்னை நிரூபித்துக் கொள் என்று பணிப்பீர்கள்?

இன்று அந்த மதத்தவர்கள் இறங்கி வெறும் கைகளால் உங்களது மலத்தையும், சிறு நீரையும், நீங்கள் உண்டு, உடுத்தி விட்டெறிந்த குப்பை கூளங்களையும் அகற்றி தங்களுடைய விசுவாசத்தை நிரூபிக்கும் நிலைக்கு நகர்த்தியிருக்கிறீர்கள். இது அனைத்தும் வெகு இயல்பாக நிகழக் கூடியது. இங்கு பிரித்து வைத்து பார்க்கவோ, பேசவோ வெக்கமாக இருக்கிறது. அவர்கள் உங்கள் வீட்டு அண்டையர்கள். கோவையில் நடந்த ஒரு நிகழ்வை கொண்டு ஒரு பிம்பத்தை எடுத்து கட்டமைக்க விளைந்தாலும், நமது விழுமியச் சாயல்கள் நமது தோலின் நிறத்தையொட்டி இருப்பதனை போலவே, உணர்வுகளாகவும் கலந்துள்ளது. உலகம் திடுக்கிடுகிறது என்பதால், நாமும் நம்மை ஒட்டி மண்ணுடன் கலந்து ஊட்டிக் கொண்ட உணர்வுகளை கொன்று அரசியல் வளர்க்க வேண்டுமென்ற அவசியமில்லை.

ஃபேஸ்புக்கிலும் மற்ற சமூக வலைத் தளங்களிலும் தன் எழுச்சியாக எழுந்த இந்த நிவாரணப் பணியின் மூலமாக ஓர் ஆரோக்கியமான சூழல் நம் முன்னால் விரிந்து கிடக்கிறது. இதனை முறையாக கையாண்டு இழந்த பரஸ்பரமான நம்பிக்கைகளை மறு கட்டமைப்பு செய்து கொள்ளும் நேரமிது. சாக்கடை, மலம், குப்பை அள்ளி தங்களுடைய தேச பற்றையும், ஊர் பற்றையும் காட்டுவதற்கென அவர்களை அக்னிபரிச்சைக்கு தள்ளி இருக்கிறேன் என்று இருமாந்திராதீர்கள். தூய்மை இந்தியா என்று குப்பை இல்லாத சிமெண்ட் ரோட்டில் நான்கு தண்ணீர் போத்தல்களை விட்டெரிந்து ஒரு லட்ச ரூபாய் மனிக்கடிகாரம் அணிந்து செய்வதல்லா வெள்ளத்திற்கு பின்னான கழிவு, பிணம் அகற்றலும் - அது நம்முடைய கற்பனைக்கும் எட்டாத ஒரு செயல்.

கொச்சை செய்து, அவமானப் படுத்துவதை எதிர் வரும் காலத்தில் அரவே நிறுத்திக் கொள்வது நல்லது. மனிதர்களின் மனங்களை புரிந்து கொள்ளுங்கள். இன்று அமெரிக்காவில் இஸ்லாமோஃபோயியா என்ற மன பிறழ்சி நோய் அளவிற்கு அவ நம்பிக்கை பீடித்திருக்கிறது. சென்னையில் நடை பெறும் சம்பவங்களை அமெரிக்காவிற்கு அவர்கள் நேரடி தொலைக்காட்சி செய்து மக்களின் மனங்களில் நன்னம்பிக்கை ஏற்படுத்தும் அளவிற்கான விடயங்கள் மேலே கூறிய நமது மண் சார்ந்த விழுமியங்களின் பால் நடந்தேறி வருகிறது. அது அவர்களால் கிஞ்சித்தும் புரிந்து கொள்ளவே முடியாத ஆழத்தை கொண்டது. இதுவே சர்வ தேசத்திற்கு இன்றைய தேவை. இதனையே மொத்த இந்தியாவும் தன்னை ஒரு சரியான பாதையில் செலுத்திக் கொள்ள வேண்டுமாயின், சென்னையில் வெள்ள நீராக பாய்ந்த மனிதத்தை எடுத்து சேர்ப்பது தலையாயக் கடமை.

Friday, August 28, 2015

மைக்ரோ மனிதர்கள்: Micro by Michael Chrichton

கடைசியாக மைக்கேல் க்ரிக்டனோட புதினம் வாசித்தது ’தி ப்ரே.’ வாசித்த
கையோட வந்தவங்க போனவங்ககிட்டயெல்லாம் "நானோ" தொழிற் நுட்பத்தை எதுக்கெல்லாம் எப்படியா பயன் படுத்த முடியும்னு மூச்சு விடாம பேசியதில் ரெண்டு மூன்று புத்தகங்கள் வாங்க வேண்டியதாப் போச்சு. மைக்கேல் க்ரிக்டன் எப்பொழுதும் புதிய தொழிற் நுட்பங்களை அவ்வளவு எளிமை படுத்தி புரியும்படி வழங்கியிருப்பார்.

அதுக்குப் பிறகு வெளியான அவருடைய இரண்டு புத்தகங்கள் வாங்கி அரைகுறையா வாசித்த வாக்கில் தூங்கிட்டு இருக்கு.  இடையில 2011ல அவர் கடைசியா எழுதின ‘மைக்ரோ’ இப்போதான் என் கண்ணில பட்டு வாங்கி வாசிக்க ஆரம்பிச்சேன். அவருடைய நடையும் இந்த புதினத்தின் கருவும் கீழே வைக்க முடியாத அளவிற்கு வாசிக்க வைச்சிருக்கு. இந்த புதினம் எழுதிட்டு இருக்கும் போதே அவரு போய் சேர்ந்திட்டாராம். முடிவை குன்ஸா இன்னொரு சய் ஃபை ஆளான ரிச்சர்ட் ப்ரெஸ்டன் எழுதி முடிச்சிருக்கார். ஒண்ணும் பெரிசா வித்தியாசம் தெரியவில்லை. இருப்பினும் சில மரணங்களை அவர் தவிர்த்திருப்பாரோன்னு தோனச் செய்தது.

பாதி படிச்சிட்டு இருக்கும் போதே இதை எழுதியே ஆகணுங்கிற அளவிட முடியா அவா உந்தித் தள்ள இறக்கி வைக்கலாம்னு  எழுதத்தொடங்கினேன். இந்த புதினத்தோட கரு என்னான்னா வளர்ந்து வரும் இளம் உயிரியல் விஞ்ஞானிகள் ஓர் ஏழு பேர் அடங்கிய குழு, எப்படி கார்ப்பரேட் தனமான ஒரு பணப் பிசாசு, தன்னுடைய கட்டிங் எட்ஜ் தொழிற் நுட்ப ஆய்வகத்தில் புதிய விதமான கருவிகளைக் கொண்டு இது வரையிலும் அறிவியல் உலகில் கண்டறியாப் பல புதிய கண்டு பிடிப்புகளைக் கண்டு பிடிக்க இருப்பதாகவும், அதற்கு இளம் விஞ்ஞானிகள் தங்களுடையப் பங்களிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் வரலாற்றில் இடம் பிடிப்பது உறுதின்னு மூளைச் சலவை செய்து ஆள் பிடிப்பதிலிருந்து தொடங்கிறது இந்த புதினத்தோட சதுரங்க வேட்டை.

அதற்கென அவர்கள் நடந்து கொள்ளும் விதம் எப்படி ஒரு நிறுவனம் தன்னை சந்தை படித்திக் கொள்ள மலிவான உத்திகளில் எல்லாம் ஈடுபடுகிறது என்பதற்கென ஃபெர்ராரி கார்களையும், அழகிய பெண்களையும் பல்கலை கழகங்களின் ஆய்வுக் கூடங்களின் முன்பாக நிறுத்தி இளம் மாணவர்களை உசுப்பேத்துவாக மைக்கேல் சுட்டிக்காட்டுவது- பணம் படைத்த ஒரு சிலர் குறிப்பிட்ட கால காட்டத்தில் தங்களின் சுய வளர்ச்சிக்கென ஒரு துறையை வளர்த்தெடுப்பதும் அதற்கு மேல் கறப்பதற்கு ஒன்றுமில்லை எனும் போது துடைத்தழிப்பதுமாக தங்களது ஆளுமைத் திறனை காட்டுகிறார்கள் என்பதாகக்  கல்வியூட்டிச் செல்கிறார்.

அப்படியாக காம்ப்ரிட்ஜ் பல்கலையிலிருந்து ஒரு ஏழு மாணவர்களைத்
ஹவாயில் அமைந்திருக்கும் தலைமை ஆய்வகமான நானிசெஞ்சிற்கு இலவச விமான டிக்கெட்டுடன் அங்கே அழைக்கப்படுகிறார்கள்.  அந்த மாணவர்களில் ஒருவனான பீட்டரின் அண்ணன் எரிக் அந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவன். அந்த நிறுவனம் அளவிடற்கரிய காந்த சக்தியை பயன் படித்தி மைக்ரோ ரோப்பாட்டுகளையும், மனிதர்களையே சுருக்கி நம்முடைய கட்டைவிரலிலும் சிறிய அளவில் ஆக்கி நம் கண்ணுக்கு புலப்படா மைக்ரோ உலகினுள் அனுப்பி ஆராய்ச்சி செய்ய வைப்பதாக உள்ளது. இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியான ட்ரேக், பீட்டரின் அண்ணனான எரிக்கை கொலை செய்ய எத்தனிக்கிறான்.கொலை செய்யப்படுவதற்கு முன்பாக  அலைபேசியில் ‘வராதே’ என்ற வார்த்தையோடு எரிக்கின் தொடர்பு துண்டிக்கப்படுகிறது.

இருப்பினும் செய்தி அந்த நிறுவனத்திலிருந்து பீட்டருக்கு அறியத்தரும் பொழுது அவன் உடனே கிளம்பிச் செல்கிறான். அந்த மரணத்தில் ஏதோ மர்மமிருப்பதாக பீட்டருக்கு தெரிய வரும் பொழுது, மொத்த மாணவக் குழுவையே சிறிய மனிதர்களாக சுருக்கி காட்டினுள் தொலைத்து விடுகிறார்கள்.

அந்த நிறுவனம் நாம் பயன்படுத்தும் மண் தோண்டும் வாகனத்திலிருந்து,
ஹெலிகாப்டர்கள், கார்கள் வரை புதிய தொழிற் நுட்பத்தை பயன்படுத்தி
சுருக்கி மைக்ரோ உலகில் பயன்படுத்தி வருகிறார்கள்.  மைக்ரோ உலகென்பது
ஹவாய் மலைக்காடுகளில் தரை  அளவில் மக்கிய இலை, சருகு, மரத்
துண்டங்களுக்கிடையே  அமைந்த இடம்.

நம் கண்ணுக்கு புலப்படா பல மைக்ரோ அளவிலான பூச்சிகளும், ஏனைய உயிரினங்களின் வாழ்வமைவையும், அவைகள் தங்களை தக்க வைத்துக் கொள்ள எது போன்ற வேதிய பொருட்களை சுரக்கிறது, தங்கள் இனங்களுக்குள்ளாக தொடர்பு கொள்ள  எது போன்ற சமிக்கைகளை அனுப்புகிறது, எல்லாவற்றிற்கும் மேலாக அந்த உலகில் இன்னமும் கண்டறியப்படா பல மில்லியன் உயிரினங்களைக் கண்டறிந்து அறிவியல் உலகிற்கு புலப்படுத்துவது என ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்த முனைகிறது நானிஜென் நிறுவனம்.

இதற்கென மனிதர்களைச் சுருக்கி ஒரு அங்குலத்திற்கும் குறைவாக அனுப்பவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அது போன்ற தள ஆராய்ச்சிக்கென அவர்கள் காட்டிற்குள் செல்லும் போது அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள். அவர்களின் உருவத்திற்கு ஒரு கட்டெறும்பு கூட ஒரு காண்டாமிருகத்தினை ஒத்த அளவுடையதாகிறது. நிராயுதபாணியாக அந்த இடத்தில் எறும்பிற்கு முன்னால் கூட எல்லாம் தெரிந்த மனிதன் ஒன்று மற்றவர்களாகி விடுகிறார்கள். அப்படியாக பிற வண்டுகளின் மூலமாகவோ, என்னற்ற  மற்ற ஆபத்துக்களின் வாயிலாகவோ ஏதாவது காயப் பட நேர்ந்து இரத்தப் போக்கு ஏற்பட்டால் கசிவு நிற்பதில்லை முடிவு மரணம். அந்த காந்த சக்தியின் பரிமாண சுருக்க விளைவினாலோ, அல்லது இடையில் ஏதாவது முதன்மை ஆய்வு நிலையத்திலிருந்து தொடர்பு துண்டிக்கப் பட்டாலோ மீண்டும் அந்த மைக்ரோ மனிதர்கள் பழைய நிலைக்கு திரும்ப கொண்டுவரப்படாத நிலையில், மூன்றாவது நாள் மரணம் நிச்சயமாகிவிடுகிறது.

இந்த நிலையில் சில பல அறிவியல் விஞ்ஞானிகளை முன்னமே அந்த உலகிற்கு அனுப்பிக் காணாமல் போயிருக்கிறார்கள். அந்த ஏழு பேரில் கடைசியாக மிஞ்சுவது இரண்டு பேர் மட்டுமே! இந்த புத்தகத்திற்கென மைக்கேல் மேற்கோள் காட்டியிருக்கும் தரவுகள் இதனை எழுதுவதற்கென அவர் எடுத்திருக்கும் முயற்சி, நோ ச்சான்ஸ்! ஹவாய் மலைக்காடுகளில் உள்ள பூச்சி பட்டைகளிலிருந்து, அவைகளின் வாழ்வமைவு, பழக்க வழக்கமென பக்கத்திற்கு பக்கம் இயற்கையின் விந்தைகளை நம் கண் முன்னே விரித்திச் செல்கிறார். பறவைகளுக்கும், வவ்வால்களுக்கும் தாங்கள் இரையாவதிலிருந்து போராடுவதாகட்டும், சிலந்தி எப்படி தனது நச்சை இரையாகப் போகிற மைக்ரோ மனிதன் மீது உமிழ்ந்து அவனை வெளியிலேயே செரிமானப் படுத்தி பின்பு உட்கொள்கிறது என்பது போன்ற விசயங்கள் ஆச்சர்யத்தையும், அடுத்து யார் இறக்கப் போகிறார்கள் என்ற பரிதவிப்வையும் ஒருங்கே விட்டுச் செல்லுகிறது.

இந்த மைக்ரோ ரோபாட்களைக் கொண்டு பிற்காலத்தில் மனித இனம் நிகழ்த்தப் போகும் போர் முறைகளை பற்றிச் சுட்டுக்காட்டுமிடம் இதனை எட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதனை நினைவூட்டுகிறது. அவரின் பல கதைகள் படங்களாக ஆகியிருக்கும் நிலையில் இந்த புத்தகம் வெகு சீக்கிரம் திரைக்கு வர வேண்டும். அண்மையில் திரையில் பார்த்த ’த ஆண்ட்மென்’ கொஞ்சம் ஞாபகத்திற்கு வந்து போனதையும் தவிர்க்க முடியவில்லை. இந்த புத்தகத்தின் விறுவிறுப்பும் அதன் கருவும், இயற்கைக்கு முன்பாக நாம் எத்தனை சிறியவர்கள் என்பதனைச் சுட்டிக் காட்டும் படமாக
நிச்சயம் அமையும்.


Monday, January 19, 2015

எழுத்தென்பது... : மாதொருபாகன் (Madhorupagan)

கடைசியாக எல்லா புத்தகப் பிரதிகளும் விற்றுத் தீர்ந்ததிற்குப் பிறகாக இணையத்தின் உதவியால் என்னுடைய கடைக்கோடி உலகத்திற்கு எட்டக் கிடைக்க நானும் பேராசிரியர் எழுதிய மாதொருபாகன் எனும் புதினத்தை வாசித்து முடித்து விட்டேன்.

ஓரளவிற்கு புத்தகம் கைக்கு கிடைப்பதற்கு முன்பாகவே மொத்தக் கதையின் மையக் கருவும் மனதில் பதியுமளவிற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாக பல பக்கங்களை கூடவே வாசித்தவருடன் பயணிக்க, வாசிக்கக் கிடைத்தது.

அந்த கதையின் நாயகர்களான பொன்னா மற்றும் காளி இன்னமும் நமது சொந்தங்களில்/தெருக்களில் வாழும் ஒரு குழந்தை பேறற்ற தம்பதிகளாக இருக்கக் கூடும். அவர்கள் முகங்களற்ற வேறு வேற்று கிரகத்து மனிதர்களல்ல. நம்மை போன்றே உணர்வுகளால் செதுக்கப்பட்ட வெறும் மனிதர்கள்தாம்.

இருப்பினும் மனித உணர்வுகளை மதிக்கத் தெரியா தடித்த நாக்கையும், தோலையும் போர்த்தியுள்ள இந்த சமூகம் அவர்களை வாழத் தகுதியற்றவர்களாக்கி, ஒடுக்கிக் கொண்டு வாழும் நிலைக்கு தள்ளி வைத்து விடுகிறது. காரணம் - குழந்தை பேறின்மை!

பல வருடங்களாகவே நம் சமூகத்தில் புழங்கி வருகி்றது இந்த நாகரீகமற்ற வேலை.  ஏதோ பேச வெண்டுமென்பதற்காக புதிதாக திருமணமான மூன்றாவது வாரத்திலிருந்து போகிற போக்கில் எழுப்பப்படும் கேள்வி “ஏதாவது விசேசம் உண்டாவும்,” ”இன்னும் குழந்தை இல்லையா.” என்னமோ குழந்தை பெற்றுக் கொள்வது ஹிமாலயத்தில் ஏறி கொடி நட்டு இறங்கி வந்து விட்டதைப் போல, விபத்தாகப் பெற்றவர்கள் கேட்கும் அவலக் கொடுமை.

இந்தப் புத்தகத்தை ஒரு சாதாரண புதினமாக வாசித்து கடந்து சென்று விட முடியாது. அக்கறையுடன் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பல அதிர்வுகளை தன்னுள் கடத்திச் செல்லக் கூடிய வலிமை கொண்டது. கூடவே அது போன்ற சூழலில் வாழும் மனிதர்களை அவர்களாக இருக்க வைக்க நமக்கு வாழ்க்கை கல்வியும், அடிப்படை நாகரீகமும் கற்றுக் கொடுக்குமொரு கையேடும் கூட.

என்னளவில் ஒரு புதினத்தை எப்பொழுதும் நேரத்தை கடத்த வைக்கும் வெறும் எழுத்துகளின் கோர்வை என்றளவில் வாசித்துக் கடக்க முடிவதே இல்லை. இதுனாலேயே கண்டமேணிக்கு எழுத்து என்று ஏதோ பக்கம் நிரப்பும் ஆசாமிகளின் புத்தக குவியல்களை வாசிக்கும் ஆர்வமும் இருந்ததில்லை.

இந்தப் புத்தகம் தோண்டி எடுக்க ஆழத்தில் புதைப்பட்டுப் போன ஒரு தமிழக கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் கதை நகர வைப்பதாக எழுதப்பட்டுள்ளது.

ஆசிரியரின் கூரிய அவதானிப்பும் கிராமத்து சொந்த வாழ்க்கை அனுபவமும் பல இடங்களில் பிரகாசிக்கிறது.

உதாரணமாக என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஒரு அவதானிப்பு என்றால் கதையின் நாயகன் ஊரைத் தாண்டி அமையப்பட்ட தோட்டத்தில் வசிப்பான். கால் நடைகளையும், கோழிகளையும், மரம் சொடி கொடிகளுடனான இயற்கையொன்றிய வாழ்வமைவுடனான ஒரு வாழ்வு. கோழி அடைகாப்பில் இருபது முட்டைகளுக்கு குறையாமல் பொரிக்க வைத்து அத்தனை குஞ்சுகளையும் வெற்றிகரமாக மற்ற பருந்து, கழுகு இனங்களுக்கு பறி கொடுக்காமல் வளர்தெடுப்பதனையொட்டி ஒரு சம்பாஷனை உண்டு.

நாயகன் எப்படி தோட்டத்தில் இருக்கும் பனை மரத்திலுள்ள கருக்குகளை அடர்த்தியாக வளரவிட்டு, அதில் கரிச்சான் குருவி வந்து கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யும் காலத்தையொட்டியே, தனது கோழியை அடை காக்க வைத்து பொரிக்க வைப்பதின் மூலம், கரிச்சான் குருவி தனது குஞ்சுகளுக்கென காப்பாத்த போராடும் போரட்டத்தின் பேரில் தனது கோழிக் குஞ்சுகளை மற்ற வேட்டையாடும் பறவை இனங்களிடமிருந்து குஞ்சுகள் தப்பிப் பிழைக்க வைக்க வழியறிந்தாக கூறுவான். இயற்கையுடனான ஒத்திசைவு வாழ்க்கை எந்தளவிற்கு ஒரு தனிமனித கற்றறிதலின் மூலமாக கடத்தப்பட்டு வந்திருக்கிறதென அறிந்து கொள்ள கிடைத்த விதம், ஆசிரியரின் மீதான பிரமிப்பை சில படிகள் உயர்த்தியது.

சிக்கனமான எழுத்து. ஆழமான கதைக்களன். ஒரு சமூக அறிவியல் மாணவனுக்கான நூலாகவும், யாரும் வாசித்து புரிந்து கொள்ளக் கூடிய கொங்கு வட்டார பேச்சுத் தமிழில் எழுதப்பட்டு அவர்களின் மொழியும், நிலமும் அதனையொட்டிய பழக்க வழக்கங்களும் சொலவடைகளாகவும், மொழியின் செழுமையும் சேகரிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இந்த புதினத்தின் மையக் கருவாக எடுத்துக் கொள்ளப்பட்ட ‘குழந்தை பேறின்மை’ எப்படி சமூகத்தின் சாடல்களுக்கு உட்பட்டு போகும் பட்சத்தில், கதையின் நாயகி அந்த காலக் கட்டத்தின் சூழ்நிலைக்கென பொழங்கி வந்த ’சாமிக் குழந்தை ஏற்பு’ செய்வதை சுட்டிக் காட்டப் போக இன்றைய மத/சாதீய அரசியலுக்கு உள்ளாகி புத்தக விற்பனைக்கு தடை என்றளவில் சென்று முடிந்திருக்கிறது.

கதையின் அடிநாதமாக ஓடுவது சமூக நிர்பந்ததிற்கெனவே நாயகி கோவில் திருவிழாவில் அப்படி ஒரு பாலியல் தொடர்பால் பிள்ளை பெற்றுக் கொள்ளவும், தனது கணவனுக்கு வீராதி வீரர் பட்டமும், தான் மலடியல்ல என்று நிரூபணம் செய்யக் கூடிய சூழலாலயே அப்படி ஒரு திருவிழாவும், சாமீ பிள்ளை கொடுக்கும் ஆண்களும்,பெண்களும் அவதரிக்கிறார்கள். இதனை சுட்டிக்காட்டிய ஆசிரியர் ஒரு மாபெரும் பாவியாய்யா?  உண்மை எப்பவும் கசக்கவே செய்கிறது!

இதுவும் அருந்ததி ராயின் ‘சின்ன விசயங்களின் கடவுள்’ (god of small things) வரிசையில் உலகப் பார்வையை திரும்ப வைக்கக் கூடிய கதைக் கருவை கொண்டது.

எழுத்து என்பது ஈவு இரக்கமற்று ஒரு சமூகத்தை பீடித்திருக்கும் நோயை தாக்க வல்லதாக இருக்க வேண்டும்.  அது ஒரு சமூகத்தையே உலுக்கி தனது குரூர புத்தியை குற்ற உணர்வுக்கு ஆட்படுத்தி மாற்றங்களை ஏற்றுக் கொண்டு முன் நகர வைப்பதாக அமைய வேண்டும். அந்தளவில் இந்த புத்தகம் நமது சமூகத்தின் மேல் அடர்ந்து படிந்திருக்கும் கருமையின் மீதாக ஒரு அதிர்ச்சி விளக்கொளியை பாய்ச்சி இருக்கிறது.


பி.கு; விரைவில் அத்தனை தடைகளையும் தகர்த்து பேராசிரியர் தனது ஆக்கப்பூர்வமான எழுத்துப் பணியை தொடர்வாரென நம்புவோம்



Related Posts with Thumbnails