Sunday, October 28, 2012

விழித்துக்கொள்ளும் நேரம்:பொது சந்தை...


வலைப்பதிவர்களின் கூட்டமைப்பு பல புயல்களையும், ஆழிப்பேரலைகளையும் களம் கண்டு மேலெழும்பி வரும் ஒரு சமூகம். இப்பொழுதும் அது போன்றதொரு ஒரு முக்கியமான சுழற்சியில் இந்த அமைப்பு நின்று கொண்டிருக்கிறது. இது ஒரு பரந்த வெளி அண்டத்தில் மிதந்து வரும் பால்வீதிகளைப் போன்றே விட்டு விலகியியும், மறுமுனையில் ஒன்றித்து சுருங்கும் மாபெரும் இயக்கம்.

எழுதப்படிக்க தெரிந்தவர்களும், ஆக்க உந்து சக்தியினை உள்ளடக்கியவர்களும் காலம் தோறும் இணைந்து கொள்ளும் ஒரு மாநதி. ஆனால், அது போன்று புதிது புதிதாக இணைந்து கொள்பவர்களுக்கு சில அடிப்படையான புரிதல்கள், இந்த வெளி எப்படியாக இயங்குகிறது, எங்கு சென்று தனது கருத்துக்களை பரிமாறிக்கொள்வது, பரிமாறிக்கொண்டதிற்கு பிறகான எதிர்வினை எப்படியாக அமைய வேண்டும் என்பதனை அந்த கருத்தினை முன் வைத்தவர்களே முகம் கொடுத்து முடிக்க வேண்டிய பொறுப்பினையும் கொண்டவர்களாகி விடுகிறார்கள்.

இந்த பின்னணியில் தற்பொழுது நடந்து வரும் சர்ச்சை பல பரிமாணங்களைக் கொண்டது. தட்டையாக இதனைச் சுருக்கி ஒரு ஆண்/பெண் சம்பந்தப்பட்டதாக மட்டுமே பார்த்து விட முடியாது. எப்பொழுது விளைந்த ஒரு பயிர் சந்தைக்கு வருகிறதோ, அப்பொழுது நுகர்வோர்களின் விமர்சனத்திற்கும் அந்த விளைச்சலின் தரம் பரிசீலிக்கப்படுகிறது. சமூகம் சார்ந்த கருத்துக்களை முன் வைக்கும் பொழுது, நாம் பலதரப்பட்ட பின்னணியின் ஊடாக நடந்து வரும் மனிதர்களின் சொல்லாடல்களையும்/கருத்துக்களையும் முகம் கொடுக்கும் நிலைக்கு நம்மை நகர்த்திக் கொள்கிறோம் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரிதொரு சமயம் நாம் இதனை கொஞ்சம் விரிவாக அலசலாம்.
அதற்கு முன்னால், கீழே உள்ள கட்டுரையை வாசித்துப் பாருங்கள். இது 2010ல் தமிழ்மணத்தில் நடந்த ஒரு சர்ச்சையின் விளைவாக எனக்குள் எழுந்த எண்ணங்கள். இருப்பினும் இப்பொழுதும் இதற்கான தேவை இருக்கிறது...

உடல் + உடை = அரசியல்!


தமிழ்மணத்தில் வரும் அத்தனை பதிவுகளையும் வாசிக்க முடிந்துவிடுவதில்லை. இப்பொழுதெல்லாம் நண்பர் வட்டம் படித்துவிட்டு இதற்கு ஒரு ஐந்து நிமிடங்கள் செலவு செய்தால் வீண் விரயமில்லை என்ற வடிகட்டலுக்குப் பிறகே சில நாட்கள், வாரங்களுக்குப் பிறகு நல்ல பதிவுகள் வந்தடைகிறது. இருப்பினும், தான் தோன்றியாக அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆர்வத்தை கிளப்பும் பதிவுகளை நானாகவே கிடைக்கும் நேரங்களில் அங்கு சென்று தழுவிச் செல்லாமலும் விட்டதில்லை.

எழுத்து என்பது என்னைப் பொருத்தமட்டில் ஒரு தானியங்கி முறையில் உள் உந்துதலாக நிகழ வேண்டியதொரு விசயம். அவ்வாறாக நிகழும் பொழுது அங்கே பசப்புத் தனங்களுக்கு இடமிருக்காது என்றே எண்ணுகிறேன். அதனை ஒரு கட்டாயமாக, நிர்பந்தமாக ஆக்கிக் கொள்ளும் பட்சத்தில் அதற்கு பயிற்சி தோள் கொடுத்தாலும், எழுத்தில் ஒரு போலித்தனமும், ஆழமின்மையும் மிளிரக் காணமுடியலாம்.

அண்மைய காலங்களில் அதாவது வலைப்பூக்கள் அநாமதேயமாக எங்கிருந்து வேண்டுமானாலும், குறைந்த பட்ச நேரம் மட்டுமே மூலதனமாக செலவு செய்து தன்னிடம் சரக்கு இருக்கிறது, அது இந்த உலகிற்கு சென்றடைய வேண்டுமென்ற ஆவல் உள்ள எவரும் செயற்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கிற ஒரு சூழலில், நான் இன்று சந்திக்கின்ற வளரத் துடித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களிடம் கேட்டுக் கொள்வதனைத்தும் "ஏன், நீங்கள் ஒரு ப்ளாக்கர்" கணக்குத் தொடங்கி உங்களின் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்பதுதான் ;).

அப்படியாக அவரும் தொடங்கும் பொழுது அது அவருக்கு ஒரு ஆரோக்கியமான சுய வளர்ச்சிச் சூழலை உருவாக்கிக் கொடுக்கக் கூடும் என்ற நம்பிக்கையிலேயே, அவ்வாறாக பரிந்துரைக்கிறேன். ஏனெனில், மனித மனமென்பது எப்பொழுதும் தனக்கு பழக்கமான, ஆபத்தற்றதாக கருதிக் கொள்ளும் எல்லைகளிலேயே பயணிக்க பிரியப்படும். அவ்வாறான ஒரு சூழலும் அமைந்து போனால், அதனைத் தாண்டிய ஒரு உலகமும், மனிதர்களும் பல் வேறு பட்ட கருத்து, சமூக, கலாச்சாரங்களின் ஊடான பார்வைகளைக் கொண்டும் இதே தெருவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், என்ற எண்ணத்தையே மறந்து தன்னுடைய எல்லைக்குள்ளாகவே லயித்து இருக்கும். அதன் நேர் பாதையில் ஏதாவது இடர்பாடுகள் இடரும் வரையிலும்...

மனமும் அதன் வளர்ச்சியுமென்பது ஒரு நீரோடையைப் போன்று ஓடிக் கொண்டே இருப்பதும், தேவையான மாற்றங்களை, பிரபஞ்ச விரிதலைப் போன்று எல்லாவற்றையும் அரவணைத்துச் செல்வதற்கு எப்பொழுதும் தயாராக்கிக் கொள்வதுமாக அமைந்து போனால் எங்கிருந்து வருகிறது மனச் சோர்வும், இத்தனை முரண்பாடுகளும்? இந்த தயார்படுத்தலுக்கு எழுத்தும், எண்ணமும் மேலும் வழிவகை செய்து கொடுக்கலாம். மனம் கற்றுக் கொள்ளும் நிலையிலேயே என்றுமிருந்தால்.

எனது எழுத்து என்பது என்னை நானே மேலும், மேலும் உட் நோக்கி பார்த்துக் கொள்வதற்கான காலச் சுவடு போன்றதாகக் கருதுகிறேன். அதற்கெனவே, மனதில் ஆழமாக உதித்ததை இங்கு பொதித்து வைத்து விடுகிறேன். பின்பொரு நாளில் கடந்து வந்த வளர்ச்சிப் பாதையின் நீளம், அகலம் அறிந்து கொள்வதற்காக.

அது போன்ற எழுத்தை எல்லார் முன்னிலையிலும் வைக்கக் காரணுமும் எத்தனை பேருக்கு அந்தத் தளத்தின் வீச்சம் பிடிபடுகிறது அல்லது எரடுகிறது என்பதனையும் அறிந்து கொண்டு எனது மேம்பட்ட வளர்ச்சிக்கெனவும் மேலும் பரந்து பட்ட பார்வையை உருவாக்கிக் கொள்ளவும் பயன் படுத்திக் கொண்டுள்ளேன். நமது உலகம், கற்றுக் கொள்ள மனதும் திறந்தே இருக்கும் நிலையில் விரிந்து கொண்டே செல்கிறது என்பதனை இது வரையிலும் எனக்கு ஊறக்கிடைத்த கிணறுகளின் நீள, அகலங்களை அளந்ததின் மூலமாக அறிந்து கொண்டேன். அதன் பொருட்டு இப்பொழுதெல்லாம் சில "கம்பளத் தனமான" வார்த்தைகளை (sweeping statement) விடுவதிலிருந்து முழித்துக் கொள்ள முடிகிறது.

இது அண்மையில் தமிழ்மணத்தில் நடந்து வரும் முரண்பாடுகளுக்கு ஊடான பதிவுகளும் , அதற்குண்டான எதிர் வினைகளுக்கும் சிறிது தொடர்பு இருக்கலாம். புதுப் புது பதிவர்களும், வாசகர்களும் வந்து கொண்டே இருக்கும் பட்சத்தில், அது போன்ற முரண்பாடுகள் ஊடான பதிவுகளும், எதிர் வினைகளும் முடிவற்று நடந்து கொண்டேதான் இருக்கும். அடிப்படையான எண்ணங்களையே அவர்களும் தான் ஊறிக் கிடந்த கிணற்று சாளரத்தின் வழியாக பரந்து பட்ட வானத்தின் ஒரு வட்டத்தைப் பார்த்து அவர்கள் கண்ட வானம் எப்பேர்பட்டது என்பதனை 'பீத்தி' முன் வைக்கலாம், மற்றொருவர் அதற்கு பக்கத்தில் கிடக்கும் கிணற்றிலிருந்து அவர் தரப்பில் கூவிக் கொண்டிருக்கும் அதே வேலையில்.

இப்பொழுது, எனது கிணற்றின் ஊடான அனுபவம் சில வற்றையும், அது எப்படி என் அகக் கண்களை அந்த வேலையில் திறக்க உதவியது, அது போன்று உங்களுக்கும் திறக்க உதவக் கூடுமென்ற நப்பாசையில் இங்கே இறக்கி வைத்து விடுகிறேன் ...

அனுபவம் எண் 1: அப்பொழுது கார்கில் பகுதியில் பாகியுடன் நாம் சண்டையிட்டுக் கொண்டிருந்தோமென்று நினைக்கிறேன். அதே நேரத்தில் எனக்கு முன்னமே இந்தியாவிலிருந்து அமெரிக்கா குடியேறி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தமிழர் எனக்குப் பழக்கமானார். அவர் இஸ்லாத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்தும், படிப்பிற்கும் பொது அறிவிற்கும், பண்பாட்டிற்கும் ஒருவனுடைய அடிப்படை இயல்பிற்கும் எந்த தொடர்புமில்லை என்பதற்கிணங்க, ஒரு அறிவு கெட்ட "கம்பள வார்த்தை" ஒன்றை அவரிடத்தில் மிக்க தேச பக்தியில்(??) உளறி வைத்தேன்.

அந்தக் கம்பள வார்த்தை என்னவெனில், "பாகியை துடைத்தெறிந்திட்டா எல்லா பிரச்சினைகளும் ஓய்ந்துவிடும்" என்பதுதான் அது. அவரும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்து விட்டு, நண்பா! அந்த நாட்டில் இன்னமும் எங்களுக்கு தொடர்புடைய பெரியப்பா, பெரியம்மா வகை சொந்தங்கள் வசிக்கிறார்கள் இன்னமும் வந்து போயிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதாக கூறினார். எனக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வது என்றே புரியவில்லை. அப்படியே நிலை குலைந்தவனாக அமர்ந்திருந்தேன். ஒரு நிமிடம் என்னை அவர் நிலையில் வைத்துப் பார்த்தேன். என்னுடைய வார்த்தையின் தீவிரம் புரிந்தது. அன்றிலிருந்து, பல சில நேரங்களில் இது போன்ற குருட்டுத் தனமான கம்பள வார்த்தைகளை தவிர்ப்பதின் அவசியத்தை உணர்ந்தேன்.

அனுபவம் எண் 2: இங்கு அமெரிக்கா வந்த பொழுதினில், எங்களைப் போல உண்டா என்று நாளும் ஏதாவது ஒரு வெட்டி வம்பு பேசுவதுண்டு. ஓடும் வாகனங்களின் எண்ணிக்கையைக் காண்பதிலிருந்து ஆரம்பித்து, அரை ட்ராயர் போட்டு நடந்து திரியும் பெண்களைக் கண்டால், பார்க்கில் அமர்ந்து அன்நியோன்யமாக வருடிக் கொள்ளும் ஜோடிகளைக் கண்டால், வாயை விட்டு 'ஐ லவ் யு, ஹனி, மகளே, மகனே' எனச் சொல்லிக் கொள்ளும் மக்களைக் கண்டால்னு சகட்டு மேனிக்கு குருட்டுக் கம்பளம் விரித்தேன். எல்லாமே போலி, வேஷமென்று. அதாவது அந்நாளில் என்னுடைய கிணற்று சாளரத்தின் வழியாக எனக்குக் காணக் கிடைத்த வான வெளியுடன் அவர்களின் கலாச்சாரத்தை தேவையில்லாமல் ஒப்பீடு செய்து கொண்டிருந்திருக்கிறேன். என்ன ஏதென்று எனக்குப் புரிய ஆரம்பிப்பதற்கு முன்பாகவே!

அது போன்ற ஒரு நாளில் எனக்குத் தெரிந்த ஒரு இந்திய குடும்பத்தாரை அருகிலிருக்கும் 'ஜோன்ஸ் பீச்சாங்கரைக்கு' அழைத்துச் சென்றேன். அதில் உள்ள கணவன், மனைவி ஐம்பதுகளின் மத்தியிலிருந்தார்கள். பத்தாவது படிக்கும் ஒரு மகன். பீச்சாங்கரையில் ஒரே ஜனத் திரள். எங்கு திரும்பினும் கூட்டம். யூனி ஃபார்மாக அந்த சூழலுக்கேயான உடை. பெண்கள் ட்டூ பீஸ், ஆண்கள் அரை ட்ரவுசர் என ஜோடித்திருந்தார்கள்.

என்னுடன் வந்திருந்த அம்மா வட இந்தியர். சுடிதாருக்கு மேலாக போட்டிருந்த துணியையும் வெயில் காய்கிறதென்று தலையில் போட்டு சுத்தியிருந்தார்கள். கால் முதல், தலை வரை துணியாக பீச்சாங்கரையை வலம் வந்து கொண்டிருந்தார். நாங்களும் ஒரு இடத்தை தேர்வு செய்து, துணிக் கம்பளம் விரித்து, கொண்டு வந்த திண் பட்டங்களை வைத்து கடை விரித்தோம். அருகினில் அமர்ந்திருந்த ஏனைய கூட்டம் எங்களைப் பார்ப்பதும், ஏதோ கிசு கிசுப்பதுமாக இருந்தார்கள். ஒரு அரை மணி நேரம் கழித்துப் பார்த்தால் எங்களைச் சுற்றி ஒரு 15 மீட்டர் சுற்று வட்டத்தில் யாரையுமே காணோம்!

எங்கடா மக்கள் எல்லாம் என்று பார்த்தால், இந்தக் காட்டுமிராண்டிகளுடன் நமக்கெந்த தொடர்மில்லை என்று தொப்புள் கொடி அறுக்கும் விதமாக விலகிச் சென்றிருக்கிறார்கள். இங்கும் எனக்கு கண் திறக்கும் நிகழ்ச்சியாகவே அந்த நிகழ்வும், சூழலும் அமைந்திருந்தது. நம் ஊரில் வாரப் பத்திரிக்கைகளும், தினசரிகளிலும் வெள்ளைக்காரிகள் என்றாலே என்னமோ எப்பொழுதும் ட்டூ பீஸில் அழைந்து கொண்டு, சாலையோரங்களில் கண் அடித்து கவிழ்த்து விடும் பெண்கள் என்ற வித பொதுப் புத்தியை விதைத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அன்று அந்த மெஜாரிடி சமூகத்தின் முன்னால்... எங்களுக்கு நிகழ்ந்ததின் பொருள் என்ன?

ஒவ்வொரு பூமியிலும் அந்தந்த காலக் கட்டத்திற்கு ஏற்றார் போல அந்தந்த சமுதாயமும் வசதிக்கேற்ப உடலரசியலை நகர்த்திக் கொள்கிறது. அந்த எல்லைக்குள் வாழும், சமூகக் கண்களுக்கு எது வரையிலும் தோலைக் காமித்தால் முகம் சுழிக்காமல் எடுத்துச் சொல்லக் கூடுமோ அதுவரையிலும் அவர்களுக்கு அது நாகரீகம். அவர்களின் எல்லைக்குள். அதனைக் கொண்டு பிரிதொரு எல்லைக்குள் பிரவேசித்து அதனைப் போல உடலரசியல் செய்யவில்லை என்று கூவுவது எந்த விதத்திலும் நாகரீகமில்லை, அப்படி நிகழ்த்தும் பொழுது அங்கே வீண் பிரச்சினையும், கிணறுகளின் நீள, அகலங்கள் ஒன்றிலிருந்து பிரிதொன்றின் பார்வையில் வித்தியாசப் பட்டுக் கொண்டே போகும். எது வரையிலுமென்றால், அவைகளை விட்டு விலகி மொத்தமாக அந்த வித்தியாசங்களின் கூறுகளை காணும், மனக் கண் திறக்கும் நாள் வரையிலும் என் கிணறு உன் கிணறை விட சிறந்தது/தாழ்ந்தது என்ற முறையிலேயே அமையும்.

பர்தா போட்டிருப்பவர்களின் கண்களுக்கு அதனைப் போடாமல் வெளியே போயி வருபவர்கள் ஆபாசமாகவும், சேலை கட்டிக் கொள்ளாமல் ஜீன்ஸ், ட்டி-ஷர்ட் போட்டுக் கொள்பவர்கள் ஆபாசமாகவும், அவர்களின் கண்களுக்கு மினி ஸ்கர்ட்டும், அரை ட்ரவுசரும் போட்டுக் கொள்பவர்கள் ஆபாசமாகவும் தெரிவது (இந்த வரிசைக்கிரமத்தை பின்னோக்கியாக ஓட்டி ஒருவர் மற்றொருவரை காட்டுமிராண்டி என்று அழைத்துக் கொண்டுமென...) எல்லாமே இந்த கிணற்று சாளரத்தின் வழியாக பார்க்கும் பார்வையில் தான் கோளாறே ஒழிய அந்தந்த தனிப்பட்ட மனிதரின் நிலையில் அது சரியே. பிடித்திருந்தால்/செல்லும் நிகழ்விற்கு ஒத்து வந்தால் எப்படி வேணா யாரும் இருந்துவிட்டுப் போகட்டுமே!

பி.கு: நான் இங்கு லுங்கி கட்டிக்கிட்டு வெளியே சென்று கடுதாசி பொறுக்கிக் கொண்டு வருவதற்குள், என் லுங்கியின் அமைப்பை பார்த்துவிட்டு என்னடா ... a guy dressed in long skirt என்று அதிசயத்து ஓட்டும் வாகனத்தை மட்டுப்படுத்தி குடுபத்தோட, குழந்தை குட்டிகளோட பார்த்தா அதுக்கு நான் என்ன பண்றது :))) ...

Friday, October 19, 2012

மலர்களுக்குள் ஆண்களுக்கான விடை: Flower Structure!

பரிணாமம் எப்பொழுதும் எனக்கு ஒரு வியப்பூட்டும் நந்தவனம். அது விசயங்களை குழந்தைகளுக்கு மகிழ்ச்சி ஊட்டவென மறைத்து வைத்திருக்கும் சாக்லேட் பார்களை போலவே பல வாழ்க்கை சூத்திரங்களை மறைத்து வைத்திருக்கிறது. அவதானிக்கும் தருணம் தோறும் என்னுடைய அனுபவ எல்லைக்களுக்கு ஏற்ப பெரிய சிறகுகளைப் சிறுகச் சிறுக கொடுத்து விரிவடைய வைத்துக் கொண்டு வருகிறது.

சில வாரங்களுக்கு முன்பு மலர்களின் அமைப்பை பற்றி படித்துக் கொண்டிருந்தேன். மலர்களின் இதழ்களை கடந்து சென்ற எனக்கு பெரும் ஆச்சர்யம் காத்துக் கொண்டிருந்தது அப்பொழுது விளங்கவில்லை. சற்று மென்மேலும் தவழ்ந்து அறிந்து கொண்டிருக்கும் பொழுது, மலர்களின் உள்ளே நடு நயமாக பெரிய வயிற்றுடன் அமைந்துப்பட்டிருந்த பெண் இனப்பெருக்க உறுப்பான சூல்வித்தினைச் (carpel) சுற்றிலும் அரண்களாக எழுந்து அழகூட்டிக் கொண்டிருந்த ஆண் இனப்பெருக்க உறுப்பான பல ஸ்டெமென்களை (stamen) பார்க்கும் பொழுது என்னுடைய சிந்தனை சிறகு நின்று நிதானித்து விரியத் தொடங்கியது.

இந்த அமைப்பிற்கும் மனித ஆண்/பெண் தேடல் சார்ந்த ஈர்ப்பிற்கும், மரபணு கொண்டு சேர்ப்பிற்கான பரிணாம விளையாட்டிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கக் கூடுமா என்று சிந்திக்க தோன்றியது. அதன் விளைவு இந்த பதிவு. என்னுடைய கோணங்கி சிந்தனை எப்படியாக இந்த மலரின் இனப்பெருக்க தேர்ந்தாய்வை நம்முடன் தொடர்பு படுத்திக் கொண்டது என்பதற்கு முன்பாக முதலில் ஒரு மலரின் அமைப்பிற்குள் சென்று வந்துவிடுவோம்.

நம்மால் மலர்களே இல்லாத ஒரு உலகையோ அல்லது சினிமாப் பாடல்களையோ நினைத்தும் பார்க்க முடியுமா? அந்த உலகுதான் எத்தனை நிறமிழந்து, வாழ்க்கையற்று சாம்பல் நிறமாக இருக்கும். மலர்கள் அழகிற்கெல்லாம் அழகு சேர்க்கும் ஒரு ரோஜா வனம். கண்களுக்கு முன்னால் அலைகள் வடிவில் விரிந்து கிடக்கும் மலைகளின் சரிவிலும், எழுச்சியிலும் வண்ண வண்ண மலர்களால் நிறைந்திருந்தால் மனம் ஒரு செளந்தர்யத்தின் ஒரு வண்டாக எழுந்து அத்தனை மலர்களையும் ஒரு பறவை பார்வையில் பார்க்க சிடுசிடுத்துக் கொண்டிருக்கும். அத்தனை அழகூட்டு சிரிப்பினை உள்ளடக்கியது அந்தப் பூக்கூட்டம்.

பூக்கும் தாவரங்களில் (angiosperms) உள்ள ஒரு பூவின் பரிணாம வடிவமைப்பை பார்த்துவிடலாமா இப்பொழுது. ஒரு பூக்காம்பு ஒரு மொட்டை யாருக்கோ தான் பரிசளிக்கவிருக்கும் பெட்டியினை சுமந்து நிற்பதாக தன்னுடைய புல்லிவட்ட புற இதழ்களைக் (sepal) கொண்டு உள்ளே இருக்கும் பரிசினை பாதுக்காக்கிறது. இது சற்று தடிமனான இலைகளைப் போல் தோன்றும், அதன் முக்கிய பயன் மலர்வதற்கு முன்னாக அந்த மலரை பொத்தி பாதுகாப்பளிப்பது.

இப்பொழுது அந்த மொட்டு மெல்ல அவிழ்கிறது. வண்ணம் வெடிக்கிறது. புறவயமாக இந்த பூமிக்கு அழகூட்டும் அல்லிவட்டம் (petal) மலர்களின் இனங்களுக்கு தகுந்தாற் போல பல நிறங்களைக் கொண்டு விரிவடைகிறது. ஒவ்வொரு மலரும் தனக்குள்ளேயே ஒரு உலகத்தை உள்ளடக்கியே எழுந்து நிற்கிறது.

ஒரு மலருக்குள் ஆண்/பெண் இனப்பெருக்க உறுப்புகளை உள்ளடக்கியிருந்தால் அதனை ஒரு முழு பூவாகவும், அப்படி அன்றி பெண் இனப்பெருக்க விசயங்கள் ஒரு பூவிலும், ஆண் விசயங்கள் மற்றொரு பூவிலும் அமைந்திருந்தால் அது முழுமையற்ற பூவாகவும் கருதிக் கொள்வோம்.

எப்படியாகினும் இவைகளை இணைத்து வைப்பது என்னவோ புறக்காரணிதான் என்பதனை ஞாபகத்தில் நிறுத்திக் கொள்வோம் (அது காற்றாகவோ, நீராகவோ, பூச்சி/பறவை இத்தியாதி விசயங்களாகத் தானிருக்கும்).


பெண் இனப்பெருக்க பாகங்கள்:

இப்பொழுது அல்லிவட்டத்தை (petal) தொடாமல் உள்ளே பார்வையை செலுத்தினால் நடுநயமாக பூக்களுக்கான ராணியைப் போல ஒரு தண்டு நின்று கொண்டிருக்கும். சற்றே ஒரு பேரிளம் பெண்ணை ஒற்ற தசைப் பிடிப்புடன். அந்த ராணியின் பெயர் சூல்வித்திலை (carpel). இந்த ராணி மூன்று பகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. இந்த அமைப்பை ஒரு வீணையாக மனதில் நிறுத்திக் கொள்வோம். அந்த வீணையை தூக்கி நிறுத்தினால் அதன் குடுவை அமைப்பு கீழ் நோக்கி இருக்கும், அல்லவா?

அந்த வீணை அமைப்பின் முகப்பில் சூலகமுடி (stigma) இருக்கிறது. அதன் கீழாக நீண்டு ஓடும் வீணையின் கழுத்துப்பகுதிக்கு பெயர் சூலகத்தண்டு (style). இவைகள் இரண்டையும் உள்வாங்கியபடி இருக்கும் வீணையின் குடுவைப்பகுதியினை சூலகம் (ovary) எனக் கொள்க. அதனை ஊடுருவி பார்த்தால் அதனுள் பொதிக்கப்பற்றிருக்கிறது, பெண் சூல் முட்டை (ovule).

ஆண் பகுதி:

இப்பொழுது அந்த ராணியைச் சுற்றியும் நிறைய கலங்கரை விளக்கங்களைப் போல எழுந்து நிற்கும் ஆண் இனப்பெருக்க உறுப்பு. அந்த ராணியை சுற்றிலும் அண்ணார்ந்து பார்த்தபடியோ, அல்லது குனிந்து பார்த்த படியோ மிக அருகாமையில் நின்று கவரக் காத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மொத்த கலங்கரை விளக்கத்தினை Stamen என்று கொள்வோம்.

இது இரண்டு பகுதிகளாக உள்ளது. நீண்ட தண்டு (மகரந்த கம்பி-filament) அதன் நுனியில் பல மகரந்ததூள்களை கொண்ட மகரந்த பை (anther). இங்கிருந்தே மகரந்த தூள்கள் புறக்காரணிகளைக் கொண்டு பெண்ணின் பிசுபிசுப்புடன் அமைந்துப்பட்டிருக்கிற சூலகமுடிகளுக்கு ஆணின் மகரந்த தூள்களை கொண்டு சேர்க்கின்றன.

மெதுவாக அந்த மகரந்தத் தூள், சூலகத்தண்டின் வழியாக சில வேதிய மாற்றங்களைப் பெற்றபடியே சூலகத்திற்கு சென்றடைகிறது. அங்கே தனக்காக காத்திருக்கும் சூல் முட்டையுடன் பற்றிப்படறி, இரண்டற கலந்து அடுத்த தலைமுறையை மரபணு பரிவர்த்தனை மூலமாக சாதித்துக் கொள்கிறது. சூல்கொண்டவுடன், அந்த வீணையின் புற அமைப்பு அதாவது சூலகம் நாம் உண்ணும் பழப்பகுதியாகவும், உள்ளமைப்பு விதையாகவும் ஆகிவிடுகிறது.

இப்பொழுது நாம் முழுமையாக ஒரு மலரின் அமைப்பினையும் அது எப்படி சூல் கொள்கிறது என்றும் பார்த்தாகிவிட்டது.

இதில் புதிதாக நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதனை இங்கு வைத்து தைத்து விடுகிறேன். இயற்கையமைவில் பார்த்தால் ஆண்/பெண் பாலின விகிதாச்சாரம் எல்லா உயிரினங்களுக்கும் ஒரே போல அமைந்து விடுவது கிடையாது. இயற்கையின் தேர்ந்தெடுப்பதில் எப்பொழுதும் ஆண் போராடியே தனது மரபணு சிறப்பை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் கட்டாயத்தில் வைக்கப்படுவதாக அறிய முடிகிறது.

அதற்கு உதாரணமாக அனைத்து உயிரினங்களின் ஆண்/பெண் புறத் தோற்றத்திற்கென அமைந்த வண்ண வண்ண ஜிகர்தண்டா வேலைகளை வைத்துப் பார்த்தாலே தெரியும். இதனில் குறிப்பாக பறவைகளில் ஆண் சற்றே தூக்கலான நிறங்களையும், குரல் வளத்தையும் பெற்று தனக்கு போட்டியான மற்றொரு ஆண் பறவையிலிருந்து பெண்ணின் பார்வையை தன்னிடத்தே கவர்ந்து வெற்றி கொள்ளும் கட்டாயத்திலிருக்கிறது.

போலவே, விலங்குகளில் எது அதிகமான போராட்டத் திறனையும், உடல் வலிமையையும் பெற்றிருக்கிறதோ அது அதிகப்படியான பெண்களை பெற்றுக் கொள்கிறது. இதனில் கூர்ந்து கவனித்தால் அது மலர்களிளாகட்டும், விலங்குகளிளாகட்டும் பெண் நடுநயமாக நின்று தன்னுடைய சுட்டு விரல் அசைப்பில் தனக்கு எது போன்ற திறனைக் கொண்ட, வலிமை மிக்க வாரிசை அடைந்து கொள்ள வேண்டுமென்று தீர்மானிக்கும் பீடத்தில் அமர்ந்திருப்பதாக இருக்கும்.

என்னுடைய சிந்தனை இந்த அடிப்படையின் புரிதலோடு இந்த மலர்களின் இனப்பெருக்க அமைப்பை காண தலைப்பட்டது. எப்படியெனில், ஒரே ஒரு சூல்வித்திலை சுற்றிலும் ஏன் அத்தனை ஆண் இனப்பெருக்க ஸ்டேமெனை நிறுத்தி வைத்திருக்கிறது? இது இனவிருத்தி செய்யும் வாய்ப்பை அதிகரிக்கவே அப்படியான ஓர் இயற்கையமைவு என்றாலும், எப்படி ஆஃப்ரிகா சமவெளிகளில் இன்றளவும் விலங்குகளிடத்தில் போட்டியின் அடிப்படையில் இயற்கை தேர்ந்தெடுப்பு நடைபெறுகிறதோ அதனே இந்த ஒரு மலர் உலகத்திலும் நடைபெறுகிறது.

இங்கே ஒரு திருகல், ஒரு சூல்வித்திலையை சுற்றிலும் நிற்கும் அந்த ஸ்டெமென்களை பார்க்கும் பொழுது, நம் உலகில் ஆண்களின் இயல்பான பெண்களைக் கண்டதும் நடைபெறும் தலை திரும்பல்களுக்கான பரிணாமப் புரிதலை உள்ளடக்கியிருக்கிறதாகப் படுகிறது :) ... இது ஒரு மனித ஆணின் தவறல்ல பரிணாம உயிரிய நிரலிப் பரப்பல். முயன்று சிறந்த மரபணுக்களை அடுத்த பரிணாமச் சக்கரத்தில் ஏற்றி வைக்க இயற்கை அமைத்து வைத்திருக்கும் ஒரு ஏற்பாடு.

அதனால் பூக்களே எங்களின் கஷ்டத்தை புரிந்து கொள்ளுங்கள் :)


Tuesday, October 09, 2012

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்: செல் அமைப்பும் இயக்கமும்.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பதாக சொல்கிறார்களே அது எப்படின்னு திரும்பவும் புரிந்து கொள்ள கொஞ்சம் உள்ளர போயி பார்த்திடலாம்னு உட்கார்ந்தேன். பார்க்கப் பார்க்க இந்த இயற்கைதான் என்னமா கபடி விளையாண்டிருக்கிறது ஒவ்வொரு வாழும் உயிரினங்களின் உள்ளும் என்பதனை புரிந்து கொள்ளும் பொழுது ஆச்சர்யத்தில் பிளந்த தாடையை மீண்டும் தட்டிகிட்டி அதன் இடத்தில் வைப்பதற்குள் இதனை பதிவாக உங்களுக்கு வழங்குகிறேன்.

இந்த உலகத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் இதனில் உள்ளடக்கம். கண்ணுக்கு தெரியா பாக்டீரியாக்களிலிருந்து அன்னார்ந்து பார்க்க வைக்கும் ஒட்டக சிவிங்கி வரையிலும் அதன் உடலமைவு செல்களால் (cells) கட்டமைக்கப்பட்டது. இந்த செல் வெற்றுக் கண்களுக்கு புலப்படுவதற்கு அப்பாற்பட்டது. இருப்பினும் அத்தனை உயிரினங்களுக்கும் அடிப்படையான ஒரு விசயம்.

இந்த செல்களே ஒன்றாக இணைந்து திசுக்களாகின்றன (tissue) இந்த திசுக்களே உயிரினங்களின் உறுப்புகளை (organs) கட்டமைக்கிறது. எனக்கு பெரும் மயக்கத்தையே கொடுக்குமளவிற்கு அமைந்த விசயம் என்னவெனில் இந்த ஒற்றை செல்லுக்குள் நடக்கும் விந்தையான, முறைப்படுத்தப்பட்ட இயக்கம்தான்.

இப்போ இந்த காணொளியை காணுங்கள். இதனைக் கொண்டு நான் புரிந்து கொண்ட வரையில் எத்தனை எளிமையாக விசயங்களை கொடுக்க முடியுமோ அத்தனை தொலைவு உள்ளே ஒரு பயணம் போவோம்.

மேலே உள்ள காணொளி வேலை செய்ய வில்லையெனில் இங்கே போங்க- http://www.youtube.com/watch?v=o1GQyciJaTA

செல்களில் இரண்டு விதமான செல்கள் இருக்கின்றன. புரொகரியோடிக் (Prokaryotic) - பாக்டீரியாக்களும் சில ஆல்கைகளும் இந்த வகையான செல்லால் ஆனது. மற்றொன்று யூகரியோடிக் (Eukaryotic) இந்த வகை செல்களே உலகின் அனைத்து விதமான சிக்கலான உடல் அமைவுகளை கொண்ட உயிரினங்களையும் கட்டமைக்கிறது; இதனில் தாவரங்களும் அடக்கம்.இப்பொழுது நாம் ஒரு நகரத்திற்குள் நுழைவதாக ஒரு செல்லிற்குள் நுழைவதனை கற்பனை செய்து கொள்ளுவோம். முதலில் அந்த நகரத்திற்கென நுழைவு வாயிலாக அமைந்துபட்டிருப்பது-

1) ப்ளாஸ்மா செல் மெம்ப்ரேன் (Plasma Cell Membrane) - இந்த மெம்ப்ரேனே அந்த நகரத்திற்குள் (செல்லுக்குள்) யார் நுழையலாம், வெளியே வரலாம் என்பதனை செய்கிறது. மேலும் நரம்பு மண்டலத்திலிருந்து கிடைக்கும் செய்திகளை ஒரு செல்லிலிருந்து மற்றொரு செல்லிற்கும் நகர்த்துகிறது.

2) நுயுக்ளீயஸ் (Nucleus) - இது அந்த நகரத்தின் தலைமையகம் என்று கொள்வோம். அங்கயே அந்த நகரத்தை இயக்குவதற்கான அத்தனை ஆணைகளையும் உள்ளடக்கிய மரபணு (DNA)இருக்கிறது. இந்த மரபணுவை சுற்றிலும் அதற்கென அமைந்த நுயுக்ளீயஸ் மெம்ப்ரேன் உள்ளது.

3) மைட்டோகாண்ட்ரியா (Mitochondria) - அந்த நகரம் இயங்குவதற்கான சக்தி பெட்டகம் (power house) எனக் கொள்ளலாம். இங்கிருந்தே அந்த செல் இயங்குவதற்கான சக்தி சேமிக்கப்பட்டு, பகிரப்படுகிறது இங்கேதான் சாதாரண குளுகோஸ் பின்பு அடினோசின் ட்ரைபாஸ்பாஸ்பேட்டாக (ATP) மாற்றப்பட்டு வழங்கப்படுகிறது.

4) ரைபோசோம் (Ribosome) - நகரத்திற்கென இயங்கும் ஒரு தொழிற்சாலை எனலாம். இங்கு மரபணுவின் குறீயிடுகள் மாற்றப்பட்டு பயன்பாட்டிற்கென இயங்கும் புரதக் கூறுகளாக மாற்றப்படுகின்றது.

5) கால்ஜி (Golgi) - ரைபோசோம்களால் உருவாக்கப்பட்ட புரதம் இங்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த அமைப்பு அந்த நகரத்திற்கான தபால் நிலையமாக செயல்பட்டு வரும் புரத மூலக்கூறுகளை வகை பிரித்து, மாற்றி, பொட்டலம் போட்டு அடுத்த அமைப்பிற்கு அனுப்பி வைக்கிறது...

6) எண்டோப்ளாஸ்மிக் ரெட்டிகுலம் (Endoplasmic Reticulam-ER) - நகரத்திற்கென அமைந்த புராதான சாலைகளும் அங்கு நிறுத்தப் பட்டிருக்கும் லாரிகளும் என்று கொள்வோம். இந்த அமைப்பு புரதத்தை மற்ற பாகங்களின் செல்களுக்கு  எடுத்துக் கொண்டு சேர்க்கும் தலையாய பணியை செய்கிறது. இந்த அமைப்பின் வெளிபுறத்தில் புரத தயாரிப்பாளரான ரைபோசோம்கள் இருக்கின்றன.

7) லைசோசோம்கள் (Lysosome) - இவைகள் அந்த நகரத்தின் அசுத்தம் நீக்குவான். பழுதடைந்த செல்களின் இதர மூலக்கூறுகளை உண்டு செரித்தும், பழுது நீக்குவதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

8) ஸ்மூத் எண்டோப்ளாஸ்மிக் ரெட்டிகுலம் (Smooth Endoplasmic Reticulam) - செல்களில் புகும் நச்சுகளை அகற்றவும், தேவையான பொழுது உபரி மெம்ப்ரேன்களை உருவாக்குவதிலும் பங்கு கொள்கிறது.

9) சைட்டோஸ்கிலிடல் ஃபைபர் (Cytoskeletal Fiber) - இந்த மொத்த நகரத்திற்கான வெளிப்புற கட்டமைப்பை வழங்கி, அதற்கென ஸ்ரத்தன்மையை வழங்கி அதன் இயக்கத்திலும், செல் பிரிதலின் போது இரண்டாக பிரிவதற்கும் உதவுகிறது.

நாம் மேலே பேசிக்கொண்டிருந்தது நம் உடம்பினுள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பிற்கும், சதை அமைப்பிலும் கட்டமைப்பிற்கென அமைந்திருக்கும் கோடான கோடி செல்களில் ஒரு செல்லுக்குள் நடைபெறும் இயக்கமே.

தாவர செல்லிற்கும் விலங்கு செல்லிற்கும் ரொம்ப பெரிய வித்தியாசம் கிடையாது. ஆனால், இந்த உலகத்தில் நாம் ஜீவிதம் நடத்த அடிப்படையான சக்தியை ஒளியிலிருந்து பெற்று அதனை ஒளிச்சேர்க்கையின் மூலமாக வேதிய சக்தியாக மாற்றுவதால் அதன் செல்களில் குளோரோப்ளாஸ்ட் (Chloroplast) என்ற அமைப்பு உபரியாக உள்ளது.

பிரிதொரு சமயம் எப்படி மரபணுவிலிருந்து செய்தி பிரித்தெடுக்கப் பெறுகிறது என்பதனை மீண்டும் ஒரு ஆர்வமூட்டு காணொளி உடன் காண்போம்.

Monday, October 01, 2012

அவள் அப்படித்தான்/மூணு(3) - அரைகுறை பட விமர்சனம்!

இன்று இரண்டு படங்கள் பார்க்கிற வாய்ப்பு கிடைச்சிச்சு. 

*அவள் அப்படித்தான்*

இது வரைக்கும் அந்த படத்தினுடைய ஒரு பாடலை மட்டுமே பார்த்துட்டு இருந்த எனக்கு, அந்தப் படத்தினுடைய சில பாகங்கள் யூட்யூப்ல பார்க்க கிடைச்சதிலே என்னதான் இந்தப் படம் பேச வருதுன்னு முழு படத்தையும் பார்க்கணுங்கிற ஆவல் வந்துச்சு. பார்த்தேன். சும்மா சொல்லக் கூடாது அந்த கால கட்டத்திலேயே இப்படி ஒரு படம் எடுக்க ரொம்பவே துணிச்சல் இருக்கணும்னு தோணச் செஞ்ச படம்.

ஸ்ரீப்ரியா, ரொம்ப இயல்பா அழுத்தமா தனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்துக்குள்ளர வாழ்ந்திருக்கு. ஒரு பெண்ணின் மன உலகம் எப்படியா இயங்கிட்டு இருக்கலாம்னு செய்ற ஓர் அக உலாத்தல்தான் இந்தப் படம். இயக்குனர் ரொம்ப நுட்பமான காட்சிகளின் மூலமாகவும், ஆணித்தரமாக, சிந்தனையை கீறிவிடும் வசனங்களை அதில வர்ற குணாதிசியங்களைக் கொண்டு கட்சிதமாக செஞ்சிருக்கார். நிறைய பேசலாம்.

*மூணு*

வரவர தமிழ் படங்களின் மீதாக இருக்கும் மயக்கம் கூடிட்டே வருது. ரொம்ப இயல்பா திரைக்கதை அமைத்து அதனை படமாக்கவும் ஒரு பெரிய கூட்டமே நம்ம கையில கிடைச்ச மாதிரி நிறைவு கிடைக்க ஆரம்பிச்சிடுச்சு.

இந்தப் படத்தில தனுஷ், ஸ்ருதி ரெண்டு பேரும் போட்டி போட்டுட்டு கலங்கடிச்சிருக்காங்க.  படம் ரொம்ப மெதுவா நகர்ந்து இரண்டாவது பகுதியில தனுஷ்வோட நடிப்பை மட்டுமே கேட்டு நிக்கிற ஒரு கதை. ரொம்ப நல்லா செஞ்சிருக்காப்ல. தனுஷ்க்கு மன பிறழ்வு சம்பந்தமா எந்த கதை கிடைச்சாலும் தைரியமா நடிக்கலாம். நிறைய இடங்களில் கொஞ்சம் மனசை தொடுகிற படியாக பின்னணி இசையும் அமைந்து போனதால் கட்டிப்போட்டுட்டாங்க. படம் நல்லா ஓடலன்னு நினைக்கிறேன். அதுக்கான காரணம் கதை நம்ம பெரும்பாலான சத்தமான வாழ்க்கையில் வாழும் கூட்டத்துடன் ஓட்டியிருக்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.

இரண்டாம் பாதியில் வரும் தனுஷ்விற்கான கதை அமைத்த விதம், மிக அருகாமையில் இருந்து கவனித்து யாருக்கோ நடந்ததை தானே எழுத்தில் வெளிக் கொண்டு வந்தததிற்கான அழுத்தமிருக்கிறது as though nothing is cinematic exaggeration in itங்கிற அளவிற்கு!

மற்றுமொரு மாற்றுப் பார்வை.

3 / Moonu - movie review : Perfectly bipolar


ஆனா, அந்த விமர்சனத்தில் இரண்டாம் பாதியில் ஏன் அப்படியான பைபோலார் மன வியாதி வந்திச்சின்னு அன்னியன், நடுநிசி நாய்கள் படங்களில் சொல்லப்பட்ட மாதிரி அழுத்தமா சொல்லல இதிலங்கிறதை ஒத்துக்க முடியாது. சத்தமா சொன்னாத்தான் உண்மைங்கிற மாதிரி இருக்கு இதுவும். பாதிப்பை கொடுக்கும் மிக மென்மையான விசயங்கள் கூட கவனமா ஒருவனுக்கு மேலாண்மை செஞ்சிக்க பக்குவமில்லாம இருந்தா நிச்சயமா அது போய் முட்டிக்கிட்டு நிக்கிற இடம் மன அழுத்தமாத்தான் இருக்கும்.

அது போன்ற சூழ்நிலையில் கவனிக்கப்படாம விட்டா மேலும் அது இழுத்துக் கொண்டு நிறுத்துகிற இடம்தான் இது போன்ற ஏதோ ஒரு டிஸ்ஆர்டர்.

இந்த கதையில் ரொம்ப subtleஆ அதற்கான காரணத்தை கொடுத்திருக்காங்க. அது மாதிரி சினிமாத்தனமா சொல்லாததால் தான் இந்தப் படம் ஊத்திக்கிச்சின்னு இப்ப விளங்குது. அதில ஆச்சர்யமும் இல்ல. ஆளவந்தான் படத்தில கமல் சொல்ல வந்த விசயம் எத்தனை பேருக்கு புரிஞ்சு ஏத்துக்கிட்டோம் அது போலவேத்தான் இதுவும்.

I enjoyed both the movies, a touchy ones!!

Related Posts with Thumbnails