Tuesday, October 09, 2012

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்: செல் அமைப்பும் இயக்கமும்.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பதாக சொல்கிறார்களே அது எப்படின்னு திரும்பவும் புரிந்து கொள்ள கொஞ்சம் உள்ளர போயி பார்த்திடலாம்னு உட்கார்ந்தேன். பார்க்கப் பார்க்க இந்த இயற்கைதான் என்னமா கபடி விளையாண்டிருக்கிறது ஒவ்வொரு வாழும் உயிரினங்களின் உள்ளும் என்பதனை புரிந்து கொள்ளும் பொழுது ஆச்சர்யத்தில் பிளந்த தாடையை மீண்டும் தட்டிகிட்டி அதன் இடத்தில் வைப்பதற்குள் இதனை பதிவாக உங்களுக்கு வழங்குகிறேன்.

இந்த உலகத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் இதனில் உள்ளடக்கம். கண்ணுக்கு தெரியா பாக்டீரியாக்களிலிருந்து அன்னார்ந்து பார்க்க வைக்கும் ஒட்டக சிவிங்கி வரையிலும் அதன் உடலமைவு செல்களால் (cells) கட்டமைக்கப்பட்டது. இந்த செல் வெற்றுக் கண்களுக்கு புலப்படுவதற்கு அப்பாற்பட்டது. இருப்பினும் அத்தனை உயிரினங்களுக்கும் அடிப்படையான ஒரு விசயம்.

இந்த செல்களே ஒன்றாக இணைந்து திசுக்களாகின்றன (tissue) இந்த திசுக்களே உயிரினங்களின் உறுப்புகளை (organs) கட்டமைக்கிறது. எனக்கு பெரும் மயக்கத்தையே கொடுக்குமளவிற்கு அமைந்த விசயம் என்னவெனில் இந்த ஒற்றை செல்லுக்குள் நடக்கும் விந்தையான, முறைப்படுத்தப்பட்ட இயக்கம்தான்.

இப்போ இந்த காணொளியை காணுங்கள். இதனைக் கொண்டு நான் புரிந்து கொண்ட வரையில் எத்தனை எளிமையாக விசயங்களை கொடுக்க முடியுமோ அத்தனை தொலைவு உள்ளே ஒரு பயணம் போவோம்.





மேலே உள்ள காணொளி வேலை செய்ய வில்லையெனில் இங்கே போங்க- http://www.youtube.com/watch?v=o1GQyciJaTA

செல்களில் இரண்டு விதமான செல்கள் இருக்கின்றன. புரொகரியோடிக் (Prokaryotic) - பாக்டீரியாக்களும் சில ஆல்கைகளும் இந்த வகையான செல்லால் ஆனது. மற்றொன்று யூகரியோடிக் (Eukaryotic) இந்த வகை செல்களே உலகின் அனைத்து விதமான சிக்கலான உடல் அமைவுகளை கொண்ட உயிரினங்களையும் கட்டமைக்கிறது; இதனில் தாவரங்களும் அடக்கம்.இப்பொழுது நாம் ஒரு நகரத்திற்குள் நுழைவதாக ஒரு செல்லிற்குள் நுழைவதனை கற்பனை செய்து கொள்ளுவோம். முதலில் அந்த நகரத்திற்கென நுழைவு வாயிலாக அமைந்துபட்டிருப்பது-

1) ப்ளாஸ்மா செல் மெம்ப்ரேன் (Plasma Cell Membrane) - இந்த மெம்ப்ரேனே அந்த நகரத்திற்குள் (செல்லுக்குள்) யார் நுழையலாம், வெளியே வரலாம் என்பதனை செய்கிறது. மேலும் நரம்பு மண்டலத்திலிருந்து கிடைக்கும் செய்திகளை ஒரு செல்லிலிருந்து மற்றொரு செல்லிற்கும் நகர்த்துகிறது.

2) நுயுக்ளீயஸ் (Nucleus) - இது அந்த நகரத்தின் தலைமையகம் என்று கொள்வோம். அங்கயே அந்த நகரத்தை இயக்குவதற்கான அத்தனை ஆணைகளையும் உள்ளடக்கிய மரபணு (DNA)இருக்கிறது. இந்த மரபணுவை சுற்றிலும் அதற்கென அமைந்த நுயுக்ளீயஸ் மெம்ப்ரேன் உள்ளது.

3) மைட்டோகாண்ட்ரியா (Mitochondria) - அந்த நகரம் இயங்குவதற்கான சக்தி பெட்டகம் (power house) எனக் கொள்ளலாம். இங்கிருந்தே அந்த செல் இயங்குவதற்கான சக்தி சேமிக்கப்பட்டு, பகிரப்படுகிறது இங்கேதான் சாதாரண குளுகோஸ் பின்பு அடினோசின் ட்ரைபாஸ்பாஸ்பேட்டாக (ATP) மாற்றப்பட்டு வழங்கப்படுகிறது.

4) ரைபோசோம் (Ribosome) - நகரத்திற்கென இயங்கும் ஒரு தொழிற்சாலை எனலாம். இங்கு மரபணுவின் குறீயிடுகள் மாற்றப்பட்டு பயன்பாட்டிற்கென இயங்கும் புரதக் கூறுகளாக மாற்றப்படுகின்றது.

5) கால்ஜி (Golgi) - ரைபோசோம்களால் உருவாக்கப்பட்ட புரதம் இங்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த அமைப்பு அந்த நகரத்திற்கான தபால் நிலையமாக செயல்பட்டு வரும் புரத மூலக்கூறுகளை வகை பிரித்து, மாற்றி, பொட்டலம் போட்டு அடுத்த அமைப்பிற்கு அனுப்பி வைக்கிறது...

6) எண்டோப்ளாஸ்மிக் ரெட்டிகுலம் (Endoplasmic Reticulam-ER) - நகரத்திற்கென அமைந்த புராதான சாலைகளும் அங்கு நிறுத்தப் பட்டிருக்கும் லாரிகளும் என்று கொள்வோம். இந்த அமைப்பு புரதத்தை மற்ற பாகங்களின் செல்களுக்கு  எடுத்துக் கொண்டு சேர்க்கும் தலையாய பணியை செய்கிறது. இந்த அமைப்பின் வெளிபுறத்தில் புரத தயாரிப்பாளரான ரைபோசோம்கள் இருக்கின்றன.

7) லைசோசோம்கள் (Lysosome) - இவைகள் அந்த நகரத்தின் அசுத்தம் நீக்குவான். பழுதடைந்த செல்களின் இதர மூலக்கூறுகளை உண்டு செரித்தும், பழுது நீக்குவதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

8) ஸ்மூத் எண்டோப்ளாஸ்மிக் ரெட்டிகுலம் (Smooth Endoplasmic Reticulam) - செல்களில் புகும் நச்சுகளை அகற்றவும், தேவையான பொழுது உபரி மெம்ப்ரேன்களை உருவாக்குவதிலும் பங்கு கொள்கிறது.

9) சைட்டோஸ்கிலிடல் ஃபைபர் (Cytoskeletal Fiber) - இந்த மொத்த நகரத்திற்கான வெளிப்புற கட்டமைப்பை வழங்கி, அதற்கென ஸ்ரத்தன்மையை வழங்கி அதன் இயக்கத்திலும், செல் பிரிதலின் போது இரண்டாக பிரிவதற்கும் உதவுகிறது.

நாம் மேலே பேசிக்கொண்டிருந்தது நம் உடம்பினுள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பிற்கும், சதை அமைப்பிலும் கட்டமைப்பிற்கென அமைந்திருக்கும் கோடான கோடி செல்களில் ஒரு செல்லுக்குள் நடைபெறும் இயக்கமே.

தாவர செல்லிற்கும் விலங்கு செல்லிற்கும் ரொம்ப பெரிய வித்தியாசம் கிடையாது. ஆனால், இந்த உலகத்தில் நாம் ஜீவிதம் நடத்த அடிப்படையான சக்தியை ஒளியிலிருந்து பெற்று அதனை ஒளிச்சேர்க்கையின் மூலமாக வேதிய சக்தியாக மாற்றுவதால் அதன் செல்களில் குளோரோப்ளாஸ்ட் (Chloroplast) என்ற அமைப்பு உபரியாக உள்ளது.

பிரிதொரு சமயம் எப்படி மரபணுவிலிருந்து செய்தி பிரித்தெடுக்கப் பெறுகிறது என்பதனை மீண்டும் ஒரு ஆர்வமூட்டு காணொளி உடன் காண்போம்.

12 comments:

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!!!!!1

Thekkikattan|தெகா said...

Teacher, are there any spelling mistakes :)

துளசி கோபால் said...

நோ:-)))))

Thekkikattan|தெகா said...

thank you, deeecher :))

TERON said...

மிக நன்றாக எழுதியுள்ளீர்கள். :)

Anna said...

The previous comment was mine. Didn't realise that my hubby had signed in. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாடம் நடத்தறதைப் பார்க்க மத்த டீச்சரெல்லாம் வந்துருக்காங்க போலயே..:)
ப்ளாஸ்மா செல் மெம்பரென் லஞ்சம் வாங்குமா..
ஏன்னா இங்க இருக்கிறது அங்க இருக்குமோன்னு ஒரு டவுட்..:)

வடுவூர் குமார் said...

படிச்சுட்டு அப்படியே யோஜனை எங்கெங்கோ போய்கொண்டிருக்கிறது...


நான் யார்???

Thekkikattan|தெகா said...

Hi! Anna, is that you :)... How's life? Thank you for the compliment.

ஜோதிஜி said...

சிரித்து விட்டேன்.

சத்தியமா சொல்றேன்ப்பா இதில் உள்ள அத்தனையும் எனக்கும் பாடம் தான். ரசித்து விரும்பி படித்த பாடங்கள் தான். ஆனால் இருபது வருடத்திற்குப் பிறகு ரிபோசோம் என்ற வார்த்தையையே இப்போது தான் இங்கு தான் படிக்கின்றேன். நிச்சயம் இது போன்ற காணொளி காட்சியை வகுப்பறையில் நடத்தினால் எம்பூட்டி நல்லாயிருக்கும்.

Thekkikattan|தெகா said...

//ப்ளாஸ்மா செல் மெம்பரென் லஞ்சம் வாங்குமா..//

நல்ல கற்பனை. நிச்சயமாக கொடுக்கத்தான் முயற்சித்திக் கொன்டிருக்கிறார்கள். அதனில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறோம். டி.என்.ஏ ரிகாம்பினென்ட் தொழிற் நுட்பத்தில் முன்னேற முதலில் துளைத்துக் கொண்டு உள்ளே புக இந்த மெம்ப்ரேனைத்தானே கவனிக்கணும். அப்போ அந்த சுவரைக் கரைக்க ஏதாவது கொடுப்பாங்களோ :)

srinivasan said...

zoology பாடம் படித்த ஞாபகங்கள் !!!.நல்ல பதிவு

Related Posts with Thumbnails