Thursday, March 06, 2014

எழுத்தாளர் இமையமும் பெண்ணிய சர்ச்சையும்

சில வருடங்களுக்கு முன்பாக எழுத்தாளர் இமயம் எழுதிய மண்பாரம் என்ற சிறுகதை தொகுப்பை அதன் பெயருக்காகவே வாங்கியதாக நினைவு. எப்பொழுதும் போல ஊர்க்கண்டி கழுதையாக எதற்காக ஓடுகிறேன் என்று தெரியாமலே ஓடிக் கொண்டிருப்பதால் உட்கார்ந்து வாசிக்கும் மனநிலை இல்லாமல் போனது.

இருந்தாலும் என்னுடைய அப்பா அந்த புத்தகத்தை வாசித்திருக்கிறார். அவர் ஒரு சாதாரணன். அடிப்படையில் பல தொழில்கள் நடத்தி தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் எழுந்து நிற்க வைத்திருக்கிறார். அந்தச் சிறுகதை தொகுப்பை வாசித்திருக்கும் பொழுது அனேகமாக அவருக்கு வயது 65ஆக இருந்திருக்கக் கூடும். இதற்கு முன்பு அவர் எந்த சிறுகதைகளையோ/புதினங்களையோ வாசித்து நான் கண்டதே இல்லை.

அவர் சுய தொழில்கள் பல செய்து தன்னைச் சார்ந்தவர்களை சிறகு எடுக்கச் செய்திருந்தாலும், என்னுடைய அம்மா அவருக்கு இணையாகவே கூடவே இருந்து அத்தனை பாரத்தையும் சுமந்திருக்கிறாள். அவரின் மனோபாவம் ஒரு சராசரி தமிழக கணவனின்/ஆடவனின் மனதே! 

இந்தச் சூழலில் எழுத்தாளர் இமயம் படைத்த ஒரு படைப்பை வாசித்திவிட்டு அவர் சொன்னது- இந்த புத்தகத்தில் வரும் குணாதிசியங்கள் எல்லாம் நம்மூர் வெட்டன்விடுதிகள், வெள்ளையம்மா, உங்கப்பத்தா முனியம்மா மாதிரி பேசிச் திரிஞ்சிக்கிட்டு, வயல் காடுகளிலும், பொட்ட வெளிகளிலும் கஷ்டப்படும் பெண்களாகவே உள்ளார்கள். அப்படியே அவர்கள் பேசிக்கொள்ளும் மொழி பதியப்பட்டிருக்கிறது என்று.

இந்த மனிதர் உறுதுணையாக தனக்கு சமமாக ஒரு தொழில் நிபுணியாக இருந்த தனது மனைவியை ஒன்றும் வயது காலத்தில் அணுசரனையான சொற்கள் பேசி திளைக்க வைத்தவரில்லை. எங்களுக்காக வறுமையின் பொருட்டு அம்மா எல்லாருக்கும் கல்விச் சென்று சேர வேண்டுமென அத்தனை ஏச்சு பேச்சுக்களையும், சமயத்தில் அடி உதைகளையும் வாங்கி கரை சேர்த்தவள்.

இன்று வேண்டுமானால் எனது அப்பாவின் குணம் ஓர் யூ டர்ன் அடித்து அம்மாவின் அருமை உணர வைத்திருக்கிறது எனலாம். அதற்கான காரணங்களும் பல உள்ளது.

இங்கே இத்தனை முஸ்தீபுகளோடும் இந்த கட்டுரையை எழுதத் தொடங்கி இருப்பதற்குக் காரணம் சமீபத்தில் எழுத்தாளர்  இமயம் 04.03.2013ல் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பெண்ணியம் குறித்த கருத்தரங்கில் அவர் பெண்ணியம் சார்ந்து தவறாகப் பெண்களை கீழே போட்டு பேசிவிட்டதாக பெரும் பேச்சு ஃபேஸ்புக்கில் நடந்து வருகிறது.
அவர் எழுதி வாசித்த முழுக் கட்டுரையையும் இன்று எனக்கு வாசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. பொறுமையாக வாசித்தேன். முகநூலில் அந்த குறிப்பிட்ட சர்ச்சைப் பதிவையும், பலரின் கருத்துக்களையும் மூச்சு முட்ட முட்ட வாசித்தேன். எனக்கு அப்பொழுதே சிறிது சந்தேகம் இருந்தது. தனது அனைத்து படைப்புகளிலும் பெண்களையே மையமாக வைத்து எழுதிய ஒருவர் எப்படி அவர்களின் வாழ்வியல் போராட்டம், சிந்தனை, திறன், அவர்களின் மீதாக சமூகம் விதித்திருக்கும் அபத்தங்கள் பற்றியெல்லாம் முற்றும் முழுதாக அறியாமல்  இப்படி அவரே “நான் ஓர் உரித்து வைத்த ஆணாதிக்கவாதி” என்று பிரகடனப்படுத்திக்கொண்டு பொது இடத்தில் அடி வாங்கிக் கொள்வார்? எனக்கு முரணாகவும், நிச்சயமாக அவர் ஒரு positive antagonistic toneலேயே இதனை கொழுத்தி விட்டெரிந்திருக்க முடியும் என்று எண்ணச் செய்தது.

அவரின் வார்த்தைகளிலேயே அவர் தன்னைப் பற்றி விமர்சித்திக்கொண்டது-

...பெண்களைப்பற்றி எழுதவேண்டும் என்பது என் விருப்பமல்ல. தேர்வல்ல. நான் பெண்களுக்காக பரிந்து பேசுபவனும் அல்ல. நிஜத்தில் நான் ஒரு ஆணாதிக்கவாதிதான். தமிழ் – இந்திய சமூகம் ஆண்களுக்கு என்று வரையறுத்துள்ள அத்தனை குணங்களும் என்னிடத்திலும் இருக்கின்றன. சற்று கூடுதலாகவும்... 

போலவே, அவருடைய கட்டுரையை வாசித்து முடித்ததும், எனக்குத் தோன்றியதும் அதுவே! ஒருவன் தன்னைப் பற்றியும், தன் சமூகம் பற்றியும் எதிர்பாலினத்தின் வலிமை, அவர்களின் வாழ்வியல் நோக்கு பற்றியெல்லாம் தீர்க்கமாக அறிந்திருக்காவிடில் இப்படி தன்னையே விமர்ச்சித்துக் கொள்ள முடியாது. ஓர் உண்மையான ஆணாதிக்கவாதி தன்னை தான் ஓர் ஆணாதிக்க வாதி என்று எங்கும் கூறிக்கொள்ள மாட்டான். அது அவனது இயல்பிலேயே தன் முயற்சியற்று இயங்கி வரும் எந்திரமாக உள்ளான்.

தன்னைப் பற்றி ஆழ அறிந்தவனே தன் செயல்கள், எதிர்பாலினத்தின் மீது தன் முயற்சி அற்று உமிழும் வார்த்தைகளுக்குப் பின்னான சமூக பொது புத்தி விளைச்சல் எல்லாம் கவனிப்பவனாக இருக்க முடியும். 

இப்பொழுது எனது அப்பாவிடம் செல்வோம். அவர் எனக்கு மாலை வேளைகளில் இன்றைய நவீன பெற்றோர்களைப் போல கூடவே அமர்ந்து வீட்டுப் பாடங்கள் சொல்லிக் கொடுக்கும் ஓர் நிலையில் அன்று இல்லை. அவருக்கு கோபம் வரும் பொழுது சமூகம் அவருக்குள் ஆழ விதைத்திருந்த அத்தனை வெறுப்பு அமிலங்களும் வார்த்தைகளாக பெண் சார்ந்த உடல்/குணம் சார்ந்த சிதைப்புகளாகத்தான் வந்து விழும்.

இதனை கேட்டு, பார்த்து/வளரும் ஒரு குழந்தையின் மாலை நேரத்து வகுப்பெடுப்பையொத்த பண்பு எப்படியாக இருக்கும்? இதுவே ஒரு சமூகமாகவே தெருவிலும், அலுவலகங்களிலும், தாலூகா தாண்டி மாவட்டம், மாநிலம், என்று சென்று நாடு தழுவிய ஒரு கூட்டு பண்பு நிலையாக இருந்தால் கிடைப்பது என்னவாக இருக்கும்? அதில் வாழும் ஒரு ஆண் மகவின் உரையாடல்/பார்வை ஒரு பெண் சார்ந்து எதுவாக அமையக் கூடும்? சார்ந்து வாழும் பெண்கள் சகித்து வாழ அடிப்படையிலேயே அங்கே தூண்டப்படுகிறார்கள் அல்லவா?

இந்த அடிப்படையில் வைத்து பார்த்தோமானால் ஒவ்வொரு ஆண் மகவும் சமூகத்தால் அத்தனை ஆணாதிக்க அடிப்படை குணயியல்புகள் அவர்களையும் அறியாமல் மெல்ல சவ்வூடு பரவலாக உள்ளே விதைக்கபட்டு உற்பத்திக்கப்படுகிறார்கள். அது சமயம் பார்த்து நாவை மெல்லச் சுருட்டி, தன்னுடன் கூடவே ஒரு தொழில் நிபுணியாக, எல்லா விதத்திலும் தன்னை விட பல மடங்கு திறமை சாலியாக, வலிமை உள்ளவளாக இருக்கிற தனது மனைவியையே, பிச்சாத்து விசயத்திற்காக ”ஒழுங்கா இருக்கிறதின்னா இரு, இல்லன்னா உங்கப்பன் வீட்டுக்கு போயிக்கோ” என்று சொல்லும் அந்த தன் முயற்சியற்ற எகத்தாளமான தன் நிலையறியா வார்த்தை அந்த அரை ட்ரவுசர் பாண்டிக்கு எங்கிருந்து கிடைத்திருக்கக் கூடும்?

இங்கேதான் எழுத்தாளர் இமயம் மேலும் ஓர் ஒடுக்கப்பட்ட சமூக பின்புலத்திலிருந்து வரும் பெண்களை ஆழப் புரிந்த மட்டில் இப்படியாக முன் வைக்கிறார்-

...அதே மாதிரி பெண் தன்னைவிட்டு அந்நியப்பட்டு விடுவாளோ என்ற அச்சத்திலேயே, ஒவ்வொரு கணவனும் வாழ்நாளெல்லாம், ஒவ்வொரு கணமும் வாழ்கிறான். அந்த அச்சத்தை போக்கத்தான் – சமூக – ஒழுக்க, நீதி, நெறி, அறப் பண்புகளை எல்லாம் பெண்ணை மையப்படுத்தியே சமூகம் வைத்திருக்கிறது. பெண் ஓடிவிடுவாளோ என்ற தனிமனித அச்சம், சமூக அச்சம்தான் – என்னை பெண்களைப்பற்றி எழுத வைக்கிறது. முன்பின் தெரியாத ஒரு ஆணோடு வாழ்வதற்குப் போகிறாள் ஒரு பெண். பதினாறு பதினேழு வயதிலேயே ஒரு பெண்ணால் குழந்தையை பிரசவிக்க முடிகிறது. எவ்வளவு பெரிய தைரியம் இது? துணிச்சல் இது. இந்த தைரியத்தில், துணிச்சலில் நூறில் ஒரு பங்குகூட ஆணிடம் இல்லை.

நம்முடைய புராண, இதிகாச, ஐதீக கதைகள், நீதிக்கதைகள், நாட்டார் பாடல்கள், கதைகள், வாய் மொழிக் கதைகள், எல்லாமும் ஏன் பெண்ணுக்கான ஒழுக்கத்தை, அறத்தைப்பற்றி மட்டுமே பேசுகின்றன? பத்தினி சொன்னால் மழை வரும், பத்தினி சொன்னால் மாநகரம் எரியும், பத்தினி கட்டளையிட்டால் பஞ்ச பூதங்களும் கைகட்டி நிற்கும், பத்தினி சொன்னால் வானத்து மழையே நின்றுவிடும், கற்பில் குறைபாடு இருந்தால் மழையே வராது என்றும் எதற்காக சொன்னார்கள்? பெண் வலிமையானவள். மனரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும். அதனால் அவளை வெல்ல முடியாது. அதனால் ஆண்கள் தந்திரம் செய்தார்கள். அந்த தந்திரங்கள்தான் நம்முடைய புராண, இதிகாச, காப்பிய, ஐதீக, நீதிக் கதைகள், சமூக ஒழுக்கங்கள்...

இதனை அறிந்தே தன்முயற்சியற்று, ஒரு அனுபவத்திற்கும் வாய்ப்பு கிடைக்காமல் சமூகத்தால் பாதுக்காக்கப்பட்ட ஆண் மகக்கள், தங்களின் உண்மையான, வலிமையாக சாய்ந்து கொண்டிருக்கும் தூணையே உருவிப் போடுவது போல அனிச்சையாக வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இமயம் இதனை மறைமுகமாக அந்த சக்தியின் வலிமையை ஆழமாக சுட்டிக்காட்டுகிறார்.

அந்த டோனை புரிந்து கொள்ள முடியாமல், அதற்கு பின்னால் மறைந்திருந்த உண்மையான நோக்கம் சிதைவுறும் படியாக உள்வாங்கப்பட்டிருக்கிறது. மேலோட்டமாக அவர் சுட்டிக்காட்டிய “பெண்ணியம் வாழ்க, ஆணீயம் ஒழிக” ஜீன்ஸ், டீ சர்ட்ஸ் கலக கலாச்சாரத்தில் ஒரு சமூகமாக மேலெழும்ப வேண்டிய கூட்டுச் சிந்தனை இங்கே ஃபேஸ்புக்கில் அலசி பேசப்படாமல் சிதறடிக்கப்படுகிறதெனலாமா? 

இத்தகைய சூழலில், அவரின் கதையில் சோற்றை மட்டுமே எதிர்ப்பார்த்து வாழும் குரலற்ற அறிதிப் பெரும்பாண்மை வெள்ளையம்மாக்களும், தேன்கொடிகளும், பூங்குழலிகளிலும் கால காலத்திற்கும் தங்களை காணாமல் அடித்துக் கொண்டு உழைத்துக் கொடுக்கும் பணம் அனைத்தையும் தனது ஆண் மக்களுக்கு கொடுக்கும் அவலம் நடந்தேறிக் கொண்டேதான் இருக்கும். சமகாலத்தில் அதனையொத்த பெண்களும் தொடர்ந்து சோற்றால் வயிற்றை நிறைக்கும் அபலைப் பெண்டீர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், தொடர்ந்து கலகக் குரல் ஒலிக்கட்டும்! 

Related Posts with Thumbnails