Thursday, February 14, 2008

Valentine's Day - ஏன் நடிக்கணும்?

இந்தக் கட்டுரை நம்மூரை நினைவில் கொண்டே எழுதப் பட்டது. இதனில் உண்மையாக தன் நேசிக்கும் ஒருவரை மணம் முடிக்க எண்ணி வியர்வை சிந்தும் நல்ல உள்ளங்கள் இந்தக் கட்டுரைச் சாடலிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள். ஏனையதுகளுக்கு இந்தக் கட்டுரை ஒரு அவசியமான வாசிப்பாக அமைய வாய்ப்புண்டு.

தினகரனில் நான் படித்த விழுப்புரம் அருகே காதலன் வீட்டு முன் அமர்ந்து விடிய விடிய காதலி தர்ணா போன்ற போராட்டக் காதல்களுக்கு முன்னாலும், சில சமயத்தில் வீட்டு மிரட்டல்களையும் மீறி திருமணம் முடித்துக் கொண்ட நபர்களைத் தேடிக் கண்டுபிடித்து பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் ஹானர் கொலை (Honor Killing) போன்றே இங்கும் அது போலவே கண்டுபிடித்து உயிரோடு எரிக்கவும் துணியும் நிலையிலும், நன்றாக மூன்று, நான்கு வருடங்கள் ஒளிந்து மறைந்து கடலை வறுத்து, ஸ்பரிசம் உணர்ந்து திடீரென்று ஒரு நாள் காதலிக்கும் ஆண் மகனோ அல்லது அந்தப் பெண்ணோ நெஞ்சில் மாஞ்சா இல்லாமல் உருவிக் கொண்டு போவதைக் கொண்டும், ஒரு படி மேலேச் சென்று தன்னை விரும்பியவனையே நம்பிச் செல்லும் ஒரு சில பெண்களை வசதியாக ஒரு இரண்டு மூன்று மாதங்களுக்கு பயன்படுத்தி விட்டு தூக்கியெறிஞ்சிச் செல்லும் அவல நிலைக்கு முன்னாலும், நம்மூர் "வாலண்டைன்'ஸ் டே"ஒரு ஏமாற்று நாளாகத்தான் எனக்குப் படுகிறது.

இன்னும் போக வேண்டிய தொலைவை எங்கோ வைத்துக் கொண்டு எதற்காக இந்தப் பகட்டு, நாங்களும் உலகளவில் வளர்ந்து விட்டோமென்று தொலைகாட்சிகளில் நடித்துக் காட்டிக் கொள்வதற்காகவா இந்த நாள்? அல்லது வியாபாரத் தந்திரம் தெரிந்த பெரிசுகள் வைக்கும் விளக்கின் கீழ் விழும் விட்டில் பூச்சிகளாக இருப்பதற்காகவா? எதற்காக நீங்கலெல்லாம் இந்த வாலண்டைன்'ஸ் டே கொண்டாடுகிறீர்கள் என்று அறிந்து கொள்ளலாமா?

ஓவ்வொரு வருடமும் இந்தத் தொலைகாட்சிகளின் பேனை பெருமாளாக்கும் தனத்தால் வெகுண்டெழுந்து எழுத வேண்டுமென்று நினைத்து நினைத்து தள்ளிப் போட்டதை இந்த வருடம் கடைசியாக எழுதலாமென்று எழுதவும் செய்தாகிவிட்டது.

எனக்கு நம்மூர் சிறுசுகள், அதாவது இந்த விடலைகள் முப்பதுக்குள் இருப்பவர்களும் இதற்குள் அடக்கம் தான். ஏனெனில் அந்த வயதிலும் இன்னமும் ஒருத்தியை காதலிப்பதாக அழைத்துக் கொண்டு திரிபவர்கள், அதற்கென நாள் நெருங்கும் பொழுது எங்க அம்மாவும், அப்பாவும் என் பிணத்தின் மீது ஏறிப் போயி அவ கழுத்தில தாலியைக் கட்டுன்னு சொல்லி மிரட்டுறாங்கன்னு சொல்லிட்டு கடைசி நிமிட்ல அப்பீட் ஆகிக்கிறது பெரும்பான்மையா நடக்குதுன்னா, இவர்களை விடலைப் பசங்க லிஸ்ட்ல சேர்க்கலாமில்லையா?

எத்தனை கலப்புத் திருமணங்கள் இந்தியாவில் தினந்தோறும் நடந்தேறுகிறது, அதிலும் இந்த ஜாதி, மத, இனத் தொடர்பான வெட்டுக் கொத்து, ஆட் கடத்தல் போன்றவைகள் இல்லாமல்? உண்மை நிலை இப்படியாக இருக்க, எதற்காக தெரிந்தே இந்த ஏமாற்றுத் தனம், அதாவது என்னுயிர் உன்னிடத்தில், உன்னுயிர் என்னிடத்தில் என்றுக் கூறி நாட்களை இந்த ஒரு உயிர்ப்பூ நிலையில் வைத்தற்கோரி தற்காலிகமாக நகர்த்தும் ஏமாற்றுத் தனம். இங்கு ஏமாற்றுத் தனம் என்றழைக்கக் காரணம் அந்த உறவில் ஈடுபட்டிருக்கும் இருவருக்குமே தெரிகிறது, இது இறுதி நிலையை அடையப் போவது கிடையாது என்று அறிந்தே இருவரும் ஒரு வரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டு நடித்தித் திரிவதற்கு வேறு என்ன பெயர் பொருத்தமாக இருக்கும்.

இதற்கு எதற்கு வெள்ளைகாரத் துரைகள் தன் காதலியினடத்தே அல்லது தன் மனைவியிடத்தே பக்குவமாக, உண்மையாகவே காட்டப் பயன் படுத்தும் ஒரு நாள் உங்கள் கைகளில் ஒரு ஏமாற்றுத் தினமாக? ஒரு பெண்ணையோ அல்லது ஒரு ஆணையோ விரும்பவதற்கு முன்னால் உன் பின்புலத்தை திரும்பிப் பார்த்துக் கொண்டாயா - எது போன்ற மக்களை உனது குடும்பம் பெற்றிருக்கிறது, அருவாக் கலாச்சாரம் கொண்டதா, மத, ஜாதி பித்து பிடித்திருக்கிறதா அல்லது உன் நலமே எங்களின் நலமென்ற பண்பாடு கொண்ட குடும்பமா?

அப்படி இல்லாதப் பட்சத்தில் உனது மனத் தைரியத்தை கேள்வி நிலைக்கு இட்டுச் சென்றாயா - எந் நிலையிலும் எல்லா பிரச்சினைகளையும் சந்திக்க தயாராகி விட்டோமா, எனது சமூக, பொருளாதார, மனப் பக்குவம் பின்னால் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை சந்திக்கும் பொருட்டு எனது மன நிலை என்னவாகா இருக்கிறது போன்ற கேள்விகள் கேட்டறிந்திருக்கிறாயா? இது போன்ற நிலையில் ஆக்கப் பூர்வமான போராட்டத்திற்கு தயாராகமல் தன்னை அதற்கு ஒரு தகுதியானவனாக ஆக்கிக் கொள்வதற்கு முன்னர் எதற்கு இப்படி ஒருவரை ஒருவர் ஏப்ரல் ஃபூல் ஆக்கிக் கொள்ள வேண்டும்.

பதிவர் தஞ்சாவூரானின் பரவாக்கோட்டையில் வாலன்டைன்ஸ் டே கொண்டாட்டங்கள்! என்ற பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டம் நம்மூர் காதலர்(!?)களுக்கு ரொம்பவே பொருந்தும். அந்தப் பின்னூட்டம் கீழே:

Thekkikattanதெகா said...

... //ஆனா, எதையுமே அறைகுறையாகப் புரிந்துகொண்டு பந்தா காட்டும் நமது நாட்டில்.....???//

இன்னமும் இந்தியாவில் இந்த காதல் திருமணங்கள் என்பது ஃபாண்டஸி நிலையிலயே தேக்கமுற்றுப் போனதால்தான் அதன் பொருட்டே கச்சடா திரைக்கதைகளைக் கொண்டு கதைச் சொல்லி சினிமா உலகம் காசு பார்த்துக் கொண்டுள்ளது. இந் நிலையில் இந்த மேற்கத்திய "வாலண்டைன்ஸ் டே" வியாபாரம் கூடக் கொடி கட்டிப் பறக்கலாம் அங்கே. காரணம், ஃபாண்டஸி நிலையில் எல்லாமே அழகாகத்தான் இருக்கும்...

ஆக மொத்தத்தில் இவனுங்களுக்கு (காதலிக்கிறவங்களுக்கு) உண்மையான guts இருந்தால் காதலிப்பவளையே கரம் பிடித்து பிறகு இன்று இந்த ஃபாண்டஸி நிலையில் செய்வதை தொடரட்டும் நான் ஒத்துக் கொள்கிறேன், இவனுங்க a real gutsy guys என்று. அதுவரைக்கும் இது ஒரு பேத்தல், "ஏப்ரல் ஃபூல் டே," to pacify eachother... shame on them...!

Wednesday, February 06, 2008

ஓர் கருப்பினத்தவருக்கோ, பெண் ஜனாதிபதிக்கோ அமெரிக்கா ரெடியா?

உலகம் போகிற போக்கைப் பார்த்தால் இந்த வருடத்தில் நடக்கப் போகிற அமெரிக்கா தேர்தல் ஒரு முக்கியமான தேர்தலாக உலகம் தழுவிய முறையில் எதிர் பார்க்கப் படவேண்டியா ஒன்றாக இருப்பதனைப் போல உள்ளது.

இங்கு தொலைக்காட்சி பெட்டியைத் திறந்தாலே எப்பொழுதும் தேர்தல் கலத்தில் போட்டியிடும் நபர்களின் பேட்டியோ அல்லது முதன்மைச் சுற்று வாக்களிப்பதற்கு ஏதுவான பிரச்சாரங்களோதான் நடந்து கொண்டிருக்கிறது.

கடந்த எட்டு வருடங்களாக நம்ம தீரன் புஷுன் முகம் பார்த்து சலித்தவர்களுக்கு இந்த தேர்தல் ஒரு தென்றலாக தீண்டிச் செல்லவிருக்கையில், இந்த தேர்தலில் யார் வெற்றியடைப் போகிறார்கள் என்பதனைப் பொருட்டு மீண்டும் நாம் ரோலர் கோஸ்டர் ரைட் எடுக்கப் போகிறோமா இல்லை நம்ம உண்டு, நம்ம வீட்டு பொருளாதார, சுகாதார காப்பீட்டுப் பிரச்சினைன்னு கலாத்தை கடத்தப் போறமான்னு ஆர்வம் பிறீட காத்துக் கொண்டிருக்கிறார்கள், மக்கள்.



இந் நிலையில் பாருங்க ஜனநாயக கட்சியில் சொல்லிக்கிற மாதிரி ஒருத்தரும் நிக்காததாலே, நியாயமா இந்த முறை ஒரு மாறுதலுக்காகவாவது எட்டு வருட அவஸ்தையிலிருந்து தப்பித்து ஓட்டுப் போட மக்கள் ரெடியா இருந்தாலும், குடியரசுக் கட்சியிலேயே அந்த நிறமும், தேவைப்பட்டளவில் ஆண்ட்ரோஜனும் இருந்து போனதால் இந்த முறையும் அந்தக் கட்சியே வெற்றியடையும் நிலையில் இருக்கிறது.

ஜனநாயகக் கட்சியில் எப்பொழுதும் புரட்சிகரமான திட்டங்களுக்கும், அடிமட்ட மக்களின் குரலுக்கும் கொஞ்சம் மதிப்புண்டு (சர்ச் போன்ற விசயங்களை கொஞ்சம் அப்படித் தள்ளிவைத்து விட்டு அரசியல் நடத்துவார்கள் - கொஞ்சம் மனசாட்சியுடன்). ஆனால், இந்த அண்மைய போர்கள், மற்றும் வெளியுலக அதிருப்தி இன்னமும் நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் துரதிருஷ்ட வேளையாக ஜனநாயகக் கட்சி வெற்றியடைந்து சற்றே ஆருததளிக்காமல் போவப் போவது ஒரு பலத்த பின்னடைவே, அமெரிக்காவிற்கும் உலக நாடுகளுக்கும்.

இப்பொழுது நிகழும் இந்த முதற் கட்ட தேர்தல் அங்கீகரிப்பின் படி ஓபாமாவும், ஹிலாரியும் ஜனநாயக கட்சியில் மேலோங்கி இருக்கிறார்கள். இதில் கடைசியாக யார் ஜனாதிபதிக்கு நின்றாலும் இருவருமே வெற்றியடைய வாய்ப்புகள் மிகவும் குறைவென்றே என்னால் எண்ணத்தோன்றுகிறது. காரணம் ஓபாமா - ஒரு கருப்பினத்தவர், மேலும் இசுலாமிய முன்னோர்கள் அவர்களின் வழி வந்திருப்பதாலும் மக்கள் கடைசி நேரத்தில் கணினித்திரைக்கு முன்னால் நிற்கும் பொழுது மனதை மாற்றிக் கொண்டு எதிர் தரப்பில் நிற்கும் குடியரசுக் கட்சி வேட்பாளர் மெகனைக்கு ஓட்டைக் குத்தித் தள்ளி விடுவார்கள்.

அது போலவே ஹிலாரியின் நிலையும் கடைசி நேரத்தில் ஒரு பெண் உலக அரங்கில் நின்று என்னாத்தை சாதித்து விடப் போகிறாள், என்று ஆண்ட்ரோஜன் பீறிட மக்கள் மீண்டும் மெகைனுக்கே ஓட்டைக் குத்தித் தள்ளப் போகிறார்கள். நான் இங்கு தென் கிழக்கு மகாணத்தில் இருந்து பார்த்து, பேசி வருவதொட்டும் வெள்ளைப் பெண்களே ஹிலாரியை ஒரு 'விட்ச்'ன்றே விளிக்கிறார்கள் (ஆனால், வட கிழக்கு மகாணங்களில் அப்படியே இதற்கு நேர் மாறாக இருக்கும் அதுவும் தெரியும்).

எனவே, அமெரிக்கா எல்லா தகுதியையும் கொண்ட ஒரு பெண் ஜனாதிபதியையோ அல்லது ஒரு கருப்பினத்தவரையோ (அனுபவம் கொஞ்சம் குறைவே என்றாலும் - புஷ்சே எனும் பொழுது ;) முழுதுமாக அரசாட்சியில் அமர வைக்க தயாராகவில்லை என்பது எனக்கு வெளிச்சமாக தெரிகிறது.

இந்த எட்டு வருடங்களுமே போதும் போதுமென்று ஓடித் தேய்ந்திருக்கிற நிலையில் மேலும் இன்னொரு ரிபப்ளிகன் ஜனாதிபதியை இந்த நாடும், இந்த உலகமும் தாங்குமா? பொறுத்திருந்து பார்ப்போம், என்ன நடக்கப் போகிறது வரும் நவம்பருக்குளென்று.

Related Posts with Thumbnails