Tuesday, August 12, 2014

திறக்கப்படாத கதவுகள்! The death of Robin Williams

ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் எனக்கு நமது ஊரின் இளையராஜா எந்த அளவிற்கு வாழ்வெனும் இந்த பெரும் ஆறு காட்டாற்று வெள்ளமாக அடித்து இழுத்துச் செல்ல எத்தனிக்கும் கணம் தோறும் கரையில் அள்ளி வந்து போட்டுவிட்டுச் செல்லும் துடுப்பாக அமைவாரோ, அது போலவே அக்கரையில் வில்லியம்ஸ் எனக்கானவர். அவரின் மரணம் என்னை மிகவும் நெருக்கமாக உணரச் செய்கிறது. எத்தனையோ மரணங்களை கண்ணுற்றும், கேள்வியுற்றும் கடந்து செல்கிறேன். அவைகளை ஒரு மரத்தின் பூப்பதற்கும் உதிர்வதற்கும் ஒப்பானதாகவே எடுத்துக் கொண்டு. எனது உதிர்வையும் ஓர் ஒரத்தில் நிறுத்திக் கொண்டே!

ஹாலிவுட் நடிகர்களில் குறிப்பிடும் படியாக ஒரே நபரை இலக்காக கொண்டு பல படங்கள் பார்த்திருக்கிறேன் என்றால் அது ராபின் வில்லியம்ஸ் நடித்த படங்களாகத்தான் இருக்க முடியும். இவர் பெரும்பாலும் நடித்த அத்தனை படங்களும் மனித மன சிக்கல்களோட வாழத் தலைப்படும் விளிம்பு மனிதர்களுடன் வாழ்வதை ஒத்ததாகவே இருந்திருக்கிறது. மேலோட்டமான ஒரு நகைச்சுவையுணர்வுடன் அழுத்தமான கதைக்களம் கொண்டதாக இருக்கும். குறிப்பிடும் படியாக என்னை மிகவும் பாதித்த படங்களென கூற வேண்டுமானால் - Good Will Hunting, Good Morning Vietnam, House of D, Bicentennial Man, Mrs. Doubtfire இப்படி அடிக்கிக் கொண்டே செல்லலாம்.

ஒவ்வொரு சிரிப்பை வழங்கும் கண்களுக்கு பின்னாலே எங்கோ ஓர் ஒரத்தில் அவர்களே அறியாத தனது சோக பிம்பம் அமர்ந்திருக்கிறதென அறிகிறேன். இவர் எத்தனை சிவப்பு கம்பளங்களையும், பளபளக்கும் கார்களையும், நடிகர்களையும், நடிகைகளையும் உலகின் பெரும் பணக்காரர்களையும், நிலங்களையும் கண்டிருப்பார். 

இவை அத்தனையும், இப்படி தன் தனிமையில் கண்டதாகவோ, இவை எதுவும் தன்னுடைய துயருக்கு மருந்தாகவோ இருக்க முடியாது என்ற நிலையிலேயே தன்னுடைய வாழ்வை எடுத்திருக்க துணிந்திருப்பார். அதுவும் தனது 63வது வயதில்! நல்ல மனித நேயரும் கூட என்பது எனது தோல் உரசும் தூரத்திலிருந்து பழகிய ஒருவரின் சொந்த வாக்குமூலம். அது சார்ந்த புகைப்படங்களையும் பார்த்திருக்கிறேன்.

ஒவ்வொரு மனதிற்குள்ளும் திறக்கப்படாத இன்னும் எத்தனையோ கதவுகள் சிலந்தி வலைகளுடன் தூசி படிந்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆயிரம் பேருக்கிடையிலும் தனிமையை உணர்வது போல! அவைகளில் ஒரு கதவை திறந்து தீர்க்கமாக பிரவேசிக்கும் பொழுது இந்த வாழ்வே சூன்யமாகி விடுகிறது போல.  இந்த இழப்பு தனி மனித ‘தனிமையை’ சுட்டி நிற்கும் கேள்வி வினா? என்ன செய்யப் போகிறோம்... ஆழ்ந்த வலிகளோடு...

சில வருடங்களுக்கு முன் பார்த்த மாத்திரத்தில் கடந்து போக விடாமல் அமரச்செய்து வில்லியம்ஸிற்கு நான் செலுத்திய நன்றியாக ஒரு பதிவு - House of D(the movie that stole my heart).

Sunday, July 13, 2014

கற்கால மனிதனும் நவீன ஏப்களும்: Planet of the Apes

கொஞ்சம் எதிர்பார்ப்புடன் சென்ற படமிது "The dawn of the planet of the apes." மற்ற பாகங்களைக் காட்டிலும் இந்த பகுதி மிக நெருக்கமாக உணரவைத்தது! அதற்கான காரணமாக நான் எடுத்துக் கொண்டது, இன்றைய நாளில் நம்முடன் வாழும் போனோபோ வகை சிம்பன்சி வாலில்லா குரங்குகளிலிருந்து படத்திற்கென ரொம்ப வித்தியாச படித்தி காட்டி விட எத்தனிக்காமல், அப்படியே அதன் உடல் புற அமைப்பிலும் முக வெளிப்பாடுகளிலும் வித்தியாசம் காட்டாமல் அமைத்துக் காட்டியது.  மேலும், இன்றைய உலக அரசியல் மேடையில் மேற்கத்திய கலாச்சரம் பிற இனங்களின் மீது கட்டவிழ்த்து விடும் உளவியல் போர் குயுக்த்தியும் சற்றே கூர்ந்து கவனிக்க வைத்தது.

ஓபனிங் சீன் வால்பாறை மழைக்காடுகளில் சிங்கவால் குரங்குகள் தலைக்கு மேலாக கரும் மேகமென பரவித் திரியும் ஓர் உணர்வை, இந்த படத்தில் வரும் ஏப்கள் தாவித் திரியும்படியாக காட்சியாக்கிய கோணம்,  பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. இருப்பினும் படத்தின் பிற பகுதிகளில் அப்படியாக இல்லை. வெறும் விடியோ கேம் பார்ப்பதையொத்து அமைந்து போனது மிக்க துரதிருஷ்டவசமானது.

ஏப்களின் தலைவனாக வரும் சீசர் துப்பாக்கி நொறுக்கும் காட்சி மனிதன் முன்னிருத்தி வரும் வன்முறை கலாச்சாரத்திற்கு நுட்பமாக வைக்கப்பட்டிருக்கும் ஓர் அழுத்தமான குறியீடு.

இந்த படத்தை என்னால் இரு வேறு பரிணாம உச்சத்திற்கு வரத் துடிக்கும் இனங்களுக்கிடையே நடக்கும் தப்பிப்பிழைப்பதற்கென நடைபெறும் போராட்டமாக, ஒரு பரந்த பார்வையில் மட்டுமே வைத்து பார்க்க முடியவில்லை. சமகாலத்தில் நடந்தேறும் மதம், இன வேறு பாடுகளைக் கொண்டு நம் ஒருவரை ஒருவர் அழித்தொழிக்கும் குறுகிய வட்டத்திற்குள்ளாகவே வைத்துப் பார்க்கத் தூண்டும் விதத்தில் அமைந்தது.

இன்னும் சுருக்கி கூறி சிறிய திரையில் விரித்துப் பார்த்துக் கொள்ள வேண்டுமானால், மேற்கத்திய நாடுகள் வளர்ந்து வரும் நாடுகளின் மீதாக கட்டவிழ்த்து விடும் உளவியல் போராகவும் பார்க்கத் தூண்டுகிறது. உதாரணமாக, இந்த ஏப்கள் தங்களுக்குள்ளாக மொழியின் ஊடாக விசயங்களை பேசி புரிந்து கொள்வது, ஆயுதங்களை பயன்படுத்தி வேட்டையாடுவது போன்ற காட்சியமைப்புகள் இன்றைய பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் இன பிரச்சினையை வைத்து பார்க்கும் படியாக எச்சரித்து செல்வதாக புரிந்து கொள்ளலாம்.

துப்பாக்கிகளை தூக்கிக்கொண்டு தங்களின் நியாயமான காரணங்களுக்காக இந்த ஏப்கள் போராடத் தயாரானாலும், துப்பாக்கிகளை விட அதி நவீன கன ரக ஆயுதங்களைக் கொண்டு கொத்து கொத்தாக எங்களால் உங்களை கொன்றொழிக்க முடியும் என்ற அபாய மணியை அழுத்தமாக இது போன்ற சிறு இனங்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கான பிரச்சாரமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

மனிதன் எப்படி துரோகங்களையும், வெறுப்பையும், தன்னை தக்க வைத்துக் கொள்ளும் முன் அவசரத்தன்மையில் கண் மூடித்தனமாக மன சாட்சி அற்று இயங்குவதும், முன் கோபியாக தனது மனித இனத்தையே அழித்துக் கொள்ளும் பாதையில் நடக்கிறான் என்பதனை இந்த படத்தில் ஏப்களை விட்டு கருத்து சொல்ல விட்டிருக்கிறார்கள்.

ஏப்கள் வன்முறையை விரும்பது கிடையாது. ஏப்கள் தங்களுடைய இனத்தில் ஒருவரையே கொல்லாது. ஏப்களின் தளபதியை நோக்கி சீசர் கூறும் ஒரு வசனம் - மனிதர்களிடமிருந்து நீ கற்றுக் கொண்டது கோபமும், வெறுப்பும் மட்டுமே என்று ஒட்டு மொத்த தற்கால மனித இனத்தை தங்களுக்கும் பின் தங்கியவர்களாக கூறி இந்த படம் முன் நகர்கிறது.

Saturday, June 21, 2014

பெண் எழுத்தாளர்களும் எழுத்துலக பிதாமகர்களும்...

புக்கர்ஸ் ப்ரைஸ் வெற்றியாளர் சாரு தனது சக புக்கர்ஸ் வின்னர் அருந்ததி ராயை நோக்கி இப்படி ஒரு கேள்வி கேட்டிருந்தார்.

...//ஆனால் சல்மான் ருஷ்டி அந்த நாவலைப் பாராட்டி எழுதியிருக்கிறார். அருந்ததி ராய் எழுதியது ஒரே ஒரு நாவல்.  அதுவும் பால்ய காலம் பற்றிய சுய சரிதை.  உலகப் புகழ்.  அதற்கு மேல் புதினமே எழுதவில்லை.  ஏனென்றால், ஒருவருக்கு ஒரு பால்யம்தானே இருக்க முடியும்? இப்படி இருக்கிறது இந்திய ஆங்கில இலக்கியம். //...

இதனையொட்டியும் வேறு சில பெண் படைப்பாளிகள் சார்ந்த தனது அக்கறையான கேள்விகளுக்கும் அவரது கட்டுரையை வாசித்து தொலைய எனக்கு தோன்றிய சில எண்ணங்கள்.

*************

இந்த ஐம்பதுகளை தாண்டிய இரண்டு எழுத்துலக பிதாமகர்களும் கம்பியூட்டர் கைநாட்டுகளாகவே இருந்து தொலைத்திருக்கலாம். இன்னும் தான் மரணிப்பதற்கு குறைந்த பட்சம் நற்பது வருடங்களேனும் இருக்கிறது. அதற்குள் ஏதாவது ஒரு விருதோ குருதோ கிடைத்து விடாமலா இருக்கும். எதற்கு இந்த பிழைப்பு!

இங்கு யாராவது யாரையாவது வந்து எழுத்து தர நிர்ணயம் செய்து தாருங்கள் என்று இந்த பெரிசுகளை கேட்டு வீட்டுக் கதவு தட்டித் நின்றார்களா? தெரியவில்லை. இந்த இணையமும், கட்டற்ற பெரு வெளியும் ஓரளவிற்கு அஞ்சி ஓரத்தில் நின்றவர்களுக்குக் கூட தங்களுக்கு தோன்றிய எண்ணங்களை ஏதோ ஒரு படைப்பு வடிவில் எழுதி வைத்து விட்டு நகர்ந்து செல்லும் ஒரு திறப்பை கொடுத்திருக்கிறது.

அது யாருக்கு பிரயோசனமாக நிற்கிறது நிற்கவில்லை என்பதும், காலம் கடந்தும் நிற்கிறதா அல்லது மக்கித் தொலைத்து ஆடிக் காத்தில் அள்ளிச் செல்கிறதா என்பது பொதுவானது. காலம் வடிகட்டி கொடுக்கப் போவதில் உங்களுக்கும் அவர்களுக்கும் பெரிதாக வித்தியாசம் இருப்பதாகப் படவில்லை.

இருப்பினும் நீங்கள் செயல் ஊக்கியாக, கர்ம வீரராக, சாதித்து முடித்த அருட்பொரும் ஜோதியாக இருந்து அந்த எதிர் பாலினத்தை கை கொடுத்து இலக்கிய உலகில் அடர்த்தியாக எழுதி உலக அரங்கில் சாதிக்க வேண்டி கொளுத்தி போடுகிறீர்கள் என்று எடுத்துக் கொண்டால் கூட, அதற்கான மொழி இதுவல்ல. இது ஒரு நல்ல ஆசிரியனுக்கு, மனிதர்களின் உளவியல் படிக்கத் தெரிந்த மனிதருக்கோ அழகல்ல.

உடலின் மேடு பள்ளங்களை வைத்தே முன்னுக்கு வருகிறார்கள் என்ற எளிமையான புரிதலோடு எல்லாவற்றையும் குறுக்கலாக ஒரே சீசாவிற்குள் வைத்து பார்த்த பிறகு எப்படி வேறு கோணத்தில் எந்த ஒரு படைப்பையும் நம்மால் கடந்து சென்று பார்க்க முடியும்?

இதில் அந்த முட்டைகோசு தலையர் அருந்ததி ராயை கையை பிடித்து இழுக்கிறார். நீங்கள் இருவரும் எந்த கிராமத்தில் இல்லை இல்லை எந்த கிரகத்தில் வசிக்கிறீர்கள் என்பதாவது அவருக்குத் தெரியுமா?

யார் எதனை எப்பொழுது எழுத வேண்டும் வருடத்திற்கு எத்தனை பக்கங்கள் எழுத வேண்டும் என்று சுத்தி வந்து கேட்கும் அபத்தக் கேள்விகளுக்கு யார் உங்களுக்கு பதிலுரைப்பது.

அருந்ததி ராய் ஒரு நாவல் மட்டுமே எழுதினார் இல்லை மாதத்திற்கு ஐநூறு பக்கங்கள் எழுதுகிறார், அது அவரின் தேர்வு. தன் வாழ்க்யை எப்படி வாழ வேண்டும் என்று எடுக்கும் முடிவு. ஆனால், உங்களைக் காட்டிலும் அவர் அந்த ஒரு புத்தகத்திலேயே நீங்கள் எதனை கசப்பாக நினைத்து பாரா முகம் காட்டி வரும் ஒரு விடயத்தையும், மேலும் முக்கிக் வெளியே எடுக்க திணறிக் கொண்டிருக்கும் ஒரு சமூக அவலத்தை உலகத்திற்கே தோலுறித்துக் காட்டி தன்னுடைய வேலையை முடித்துக் கொண்டார்.

இதற்கு மேல் நீங்கள் முக்கிக் கொண்டிருக்கும் அந்த கற்பனை கட்டுக்கதைகளை போன்று கொடுக்க மனமின்றி தற்காலத்தில் நிகழும் சமூக பிரச்சினைகளுக்கு நேரடியான தலையீடுகளில் காலம் தள்ளி வருவதும் அனைவரும் அறிந்ததே. எனக்கு என்னவோ உங்கள் இருவரைக் காட்டிலும் அவர் தைரியசாலியாக கர்ம வீரராக படுகிறார்.

அப்படி என்ன உங்கள் இருவருக்கும் அவரின் மீது அப்படி ஒரு பார்வை. உங்களுடைய கேள்விகளை ஏன் நேரடியாக அவருக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பி வழிந்து கொள்ளக் கூடாது?

முட்டைக்கோசுக்கு க்யூபா என்பதனை கூபா என்பதாகவே வாசிக்க வேண்டும் என்று எப்படியோ தெரிய வர அதனை தமிழ் கூறும் நல்லுலகிற்கு எடுத்துச் சென்றே ஆக வேண்டும் என்று தன் கண்கள் விரிய தான் எழுதி வரும் குப்பைகளில் இது போன்ற டுபாக்கூர் விவரணைகளோடு பக்கம் நிரப்பும் ஒருவருக்கு எதுக்கு புக்கர்ஸ் மேலே எல்லாம் கண்ணு.

பக்த கோடிகள் ஒரு நூறு பேரை வைத்துக் கொண்டு அவர்களுக்கு மட்டுமேயாவது எழுதி உள்ளரயே வெடித்துக் கொள்வது நல்லது.

இந்த எழவை எல்லாம் எதுக்கு இணையத்திலும் ஏத்திக் கொண்டு.
எப்பொழுதுதாவது வாழ்க்கையில் ஒரே ஒரு நல்ல படைப்பையாவது பால் வேறுபாடுகளை, தான் டவுசர் போட்ட பருவத்தில் தப்பும் தவறுமாக கவனித்து வைத்திருந்த கட்டுப் பொட்டி தனங்களிலிருந்து வெளி வந்து தரமான படைப்பை நிகழ்த்தி விடுங்கள்.  நான் வாசிக்கா விட்டாலும் என் பேரனாவது வாசிக்கட்டும்!

Thursday, May 01, 2014

நிறமிழக்கும் கனவுகள்: ஒரு மயான அமர்வு!

நேற்று இரவு அந்த ஒரு சிறு கிராமத்தின் அடர்ந்த இருளில் விஞ்ஞானத்தில் ஊறித் திளைத்திட்ட உடல் சாம்பலாகிக் கொண்டிருப்பதை கண்டு கொண்டிருந்தேன்.

அந்த பொட்டலை சென்றடையும் வரையிலும் அந்த உடலை நகர்த்திச் சென்ற ஊர்தியின் பின்னால் அந்த இருளைக் காட்டிலும் பூசி அப்பிய கறுமையான எண்ணங்களுடன் ஊர்ந்து கொண்டிருந்தோம். அந்த கிராமத்து சாலையின் இரு மருங்கிலும் அமைந்திருந்த சின்னஞ்சிறு வீடுகளிலிருந்து நடுநிசி பன்னிரெண்டைத் தொட்டிருந்தாலும் ஊரே அவருக்காக விழித்திருந்தது. அதில் குறிப்பிடும் படியாக என் கண்களுக்கு தட்டுப்பட்டதெல்லாம் கூப்பிய கைகளுடன் நின்ற வயதான பாட்டிகளும், தாத்தாக்களுமே!

அந்த விஞ்ஞானிக்கு அது ஒன்றும் செத்துப் போகும் வயதல்ல. வெறும் ஐம்பத்திரண்டு வயதே! மிகவும் மென்மையாக பேசும், பழகும் குணத்திற்கு சொந்தக்காரர். எங்களுடைய காடு புகும் அனுபவத்தில் எத்தனையோ முறை தடுக்கி விழுந்திருக்கலாம் எழுந்திருக்கலாம். ஆனால், ஒரு போதும் இப்படி ஒரு கெடுநிகழ்வு நிகழக் கூடுமென்று நினைத்திருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் இப்படி நாங்கள் அறிந்துக் கொள்ளக் கூடியதாக எங்களவு காடு புகும் அனுபவ ஓட்டத்தில் நிகழ்ந்திடவே இல்லாத ஒரு கெடு நிகழ்விது.

அப்படி ஓர் உடைந்த மூங்கில் சிறு குச்சு அங்கே கிடந்திருக்க வேண்டாம். இவர் விழுந்த வேகத்தில் கண்ணின் வழியாக பாய்ந்து மறுமுனையில் துருத்தி நின்றிருக்கிறது. அவர் அதே இடத்தில் தனது அத்தனை ஆசாபாசங்களையும் காலன் இடத்தில் ஓப்படைத்துவிடக் கூடிய அசுர வேகத்தில் நடந்து முடிந்தே விட்டது.

இரவு பதினோரு மணி வாக்கில் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இறங்கும் பொழுது ஊரே உறங்கிக் கிடந்தது. நண்பர் அருண் வழிக்காட்டலின் பெயரில் ஆட்டோ ஒன்றை அமர்த்திக் கொண்டேன். வழியெங்கும் அந்த ஆட்டோ, சாலை பல்லாங்குழியில் வாகனத்தின் ஒற்றைச் சிம்னி வெளிச்சத்தில் வான வீதியின் ஏதோ ஒரு முனையில் மிதந்து செல்வதைப் போன்ற மயக்கத்தில் வைத்தபடியே அந்தப் பயணம் நீண்ண்ண்டு கொண்டே சென்றது. மின்சாரமும் துண்டிக்கப்பட்ட நிலையில் எங்கும், சுற்றிலும் மற்ற விளக்கு ஒளிகள் அறவே இல்லை. ஏதேதோ எண்ணங்கள்!

ஒரு வழியாக அந்தச் சாலையை அடைத்த படி மக்கள் திரண்டிருக்கும் அந்த இடத்தை அடைந்தது. அங்கயே இறங்கிக் கொண்டேன். வாழ்விற்கும் பிசுபிசுத்து திணறி நிற்கப்போகும் அந்த அனைத்து நிகழ்வுகளையும் கண்ணுரும் பொருட்டு எங்கிருந்தோ எனை நகர்த்தி இங்கே கொண்டு வந்து சேர்த்துக் கொண்டதாகப் பட்டது.

அவரது உடல் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் பிரவேசிக்கும் பொழுது, விஞ்ஞானியின் விசித்திரமான சிரிப்பொலியை என்னால் என் காதருகில் பிரத்தியேகமாக கேட்க முடிந்தது. காலம் அவர் முகத்தில் சிறு ரேகைகளை விட்டுச் சென்றதைத் தவிர்த்து பெரிதாக ஒன்றும் அவருடைய முகத்தில் வித்தியாசங்களை காணமுடியவில்லை. சிலபல நிமிடங்கள் முகத்தை பார்த்தபடியே தரைக்கு கீழே பூமி நகர்வதை உணர்ந்து அங்கிருந்து என்னை பெயர்த்து எடுத்து வெளியில் வைத்துக் கொண்டேன்.

மீண்டும் அந்த உடல் எடுத்தும் செல்லும் ஊர்திக்கு பின்னால் செல்கிறேன். தனியனாக. சாலையை மூடியபடியே விதைத்துச் செல்லும் மலர்களின் மீதாக என்னுடைய அடிபட்டு விடாத படிக்கு மிககக கவனமாக...

இன்னமும் நமது உடல் எரியூட்டும் நிகழ்வு பல ஆயிரம் வருடங்களைத் தாண்டியும் கடைபிடிக்கப் படும் வகையிலேயே அந்த ஏற்பாடுகள் நடத்தப்பெறுவதாக என்னால் ஊகிக்க முடிந்தது. அந்த ஏற்பாடுகள் நம் ஒவ்வொருவரின் அகங்காரத்தில் அடிக்கப்படும் கடைசி ஆணியாகவே படுகிறதெனக்கு. மேலே சாணத்தால் தயாரிக்கப்பட்ட வராட்டி அடுக்கப்பட்டது. அதன் மீது வைக்கோல் பரப்பப்பட்டு களி மண்ணால் சாத்தப்பட்டது. பிறகு அந்தத் தீ ஒரு முனையில் செருகப்பட்டது. பிறகு நான்கு முனைக்கும் பரப்பட்டது.

எரியும் சிதையை படமெடுக்க வேண்டுமென எண்ணம் அவ்வப்பொழுது எழுந்தாலும், மனதில் திராணி இல்லை. சற்றே கொச்சையாகப் பட்டது. எதனை சுருட்டிக் கொள்ள இந்த மனம் ஆசைப்படுகிறது என்று வெட்கித்து இரண்டு முறை வெளியில் இழுத்த புகைப்படக் கருவியை திரும்பவும் உள்ளயே போட்டுக் கொள்ளத் தூண்டியது எதார்த்தம்.

முதலில் புகையாகக் கிளம்பியத் தீ பிறகு சன்னமாக மஞ்சள் நிறத்தில் அடர்ந்தது. நான் பிற கிழவன் மார்களுடன் ஓர் இருட்டு பார்த்த தரையில் சப்பனமிட்டு வானத்தையும், தீயையையும் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அந்த தீ பிறகு தலைமாட்டிருலிருந்து நீல நிறத்தில் யாரோ ஊதி ஒற்றை திரியில் அனுப்பவதைப் போல பிறீட்டு வந்தது. உடலின் இனிப்பு!

அவர் கரைந்து கொண்டிருந்தார். அதற்கு மேல் என்னால் அங்கே அமர்ந்திருக்க முடியவில்லை. மீண்டும் நடை. இதோ அவ்வளவே நாம்! அவரின் வெற்றிடம் நிரப்பப்பட முடிவதற்கரிது! காலம் கண்ணாமூச்சியாடிபடியே சுழண்டு கொண்டிருக்கிறது.

Tuesday, April 15, 2014

எனக்கு ஏ.டி.ம் கார்ட் கிடைச்சிருச்சு: A tell tale behind an ATM card!

வெளி நாட்டு கிளையான நியூயார்க் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஆறில் ஒரு கணக்குத் துவங்கினேன். எனக்கு கையில் ஒரு செக் புத்தகம் மட்டும் வந்து கிடைத்தது. என்னவோ பாஸ் பொஸ்தவமாம் அதெல்லாம் எனக்கு கிடைக்கல. ஏ.டி.ம் கார்டும் இல்லை. நான் வாங்கவும் முயற்சிக்கல.

ஏன்னா ஒரு பாஸ்வேர்ட் வாங்கணும்னா, மாத்தணும்னா, டெபிட் கார்ட் வாங்கணும்னா எல்லாத்துக்கும் பிரம்மபிரயத்தனம் செஞ்சாலே ஒழிய கிடைக்காதுன்னு தெரியும். இல்லன்னா, நேரடியா கணக்கு வைச்சிருக்கும் கிளைக்கு ஆளா போயி நிக்கணும் அல்லது கடிதத்தில எழுதணும். இத்தனையும் பார்த்து மிரண்டு நல்ல பிள்ளையா எப்பயாவது இருக்கிற இருநூறு ரூபா இன்னும் இருக்கான்னு மட்டும் போயி லாக் இன் செஞ்சு பார்த்திட்டு பத்திரமா வெளியில வந்திர்றது,

சரி ஊர்ல இருக்கோமே ஒரு டெபிட் கார்ட்தான் வாங்க முயற்சிப்போமேன்னு ஓர் இரண்டு வாரத்திற்கு முன்னாடி 50 கிலோமீட்டர் பயணித்து ஒரு வழியா அப்ளிகேசன் எல்லாம் வாங்கி நிரப்பி எப்படியோ முடிச்சு கொடுத்தாச்சு.

போன வாரம் தபால்ல கார்டு வந்திருச்சு. அய்யோன்னு வாங்கிப் பார்த்தா வங்கி கிளைக்கு நேரா வா, பிரத்தியேக அடையாள எண் வாங்கன்னு (PIN) சொல்லி இருந்திச்சு. சரின்னு இன்னிக்கு போனேனா, போனேனாதான் கதை.

ஒருத்தர்கிட்ட போயி நல்லா என்னோட முதுகு வளைஞ்சு இருக்க மாதிரி நின்னுகிட்டுதான், கக்கத்தில ஒரு பொஸ்தவத்துக்குள்ளர மத்த பேப்பர் எல்லாம் வைச்சிக்கிட்டு முதல் கேள்வியா-

“சார் எனக்கு டெபிட் கார்ட் வந்திருக்கு பின் வாங்க இங்க வரச் சொன்னாங்க” அப்படின்னேன்.

நிமிர்ந்து பார்க்காமயே ”உன்கிட்ட பாஸ்புக் இருக்கா”ன்னு கேட்டார்.

நான் ”அப்படின்னு ஒண்ணு கொடுக்கலீங்களே சார்.”

அப்படியா, ”உனக்கு மூணு வாரம் தாரேன் அதுக்குள்ளர நீ பாஸ்புக் வாங்கிட்டு வா” செஞ்சுக் கொடுக்கிறேன்.

”சார் நான் இன்னும் இந்த பில்டிங்குள்ளரதானே இருக்கேன். பாஸ்புக் எங்கிருந்து வரும்னு சொன்னா செஞ்சிடாலாமே சார்.”

”இத்தனை வருஷம் பாஸ்புக் இல்லாம எப்படி நீ அக்கவுண்ட் வைச்சிட்டு இருக்க.”

”எனக்கு அப்படின்னு ஒண்ணு கொடுக்கிறதே தெரியாது, சார். இந்த கணக்கை நான் ஆன்லைன்லேயே மெயிண்டைன் செஞ்சிட்டு இருக்கேன்.”

”சரி போயி ஒரு பேப்பர்ல இந்த மாதிரி பாஸ்புக் காணாம போயிடுச்சு புதுசா ஒண்ணு செஞ்சுக்கொடுங்கன்னு எழுதிக் கொண்டுவா.”

அரக்கபரக்க எழுதி அங்கேதான் மறக்காம என்னோட Dr. முன் இணைப்பா போட்டுக்குவேன். அது ஒர்க் அவுட்டும் ஆகுது ஓரளவிற்கு. இரண்டாவது சுற்றில் கொஞ்சம் மரியாதை கிடைச்சது.

ஒருத்தர் டாக்டர்னா என்ன மாதிரின்னு கேக்குற அளவிற்கு கொஞ்சம் நெருக்கம் காமிச்சாங்க. எப்படியோ என்னோட ஐந்து மணி நேர போராட்டத்திற்குப் பிறகு என்னோட பின் அடங்கிய மெயில் கையில் கிடைச்சது.

இத்தனை சுத்து என்னாத்துக்கின்னா, மக்கள் பிளு பிளுன்னு தேனி மொய்க்கிற மாதிரி மொய்க்கிறாங்க. சின்னச் சின்ன கேள்விகளோட! ஏன் அப்படின்னு கொஞ்சம் நுண்ணறிவோட ஆராய்ந்தா, கொடுக்கப்படும்.படிவங்களில் ஆங்கிலமும், ஹிந்தியும் மட்டுமே இருக்கிறது. தமிழ் நாட்டில் செய்யப்படும் ஒரு வங்கித் தொழிலுக்கு புரியாத மொழி எதற்கு? தமிழ் மட்டுமே தெரிந்து ஆங்கிலம் புரியாத ஒருவர் என்ன செய்வார்? இதில் ஏதாவது ஏரணம் இருக்கிறதா? இதுனாலே பாதி தேவையற்ற களேபரம். பாவம்தான் அத்தனை பேருக்கும் பதில் சொல்லி ஒரு நாளை கடத்திப் போறதுங்கிறது. புரியுது!

அதுக்காக நான் என்ன செய்றது. குறைந்த பட்ச நாகரீகமான ஒரு அணுகுமுறை கூட இல்லாம மூஞ்சில சுடுதண்ணீயை பிடிச்சு ஊத்தி பிஸினெஸ் செய்ற மாதிரியான ஒரு சர்வீஸ். என்னதான் அரசாங்கத்து வங்கின்னாலும், லாபமில்லாத ஒரு தொழிலையா அரசாங்கம் மக்களுக்கு செஞ்சிக் கொடுத்துட்டு இருக்கு. ஒர்க் லோட் அதிகமாகிட்டா இன்னொரு கிளை திறங்க, அல்லது மேலும் ஆட்களை ஆட் செய்ங்க. 

அவ்வளவு வேண்டாம் இந்த பின் வாங்க என்னை எதுக்கு நேரா வரச் சொல்லணும். ஏன் முப்பது ரூவா கழிச்சிக்கிட்டு கூரியர்ல அனுப்பி வைச்சா இந்த மூஞ்சிய நீங்க அங்க பார்க்க வேண்டாம்ல.

ஒரு முறை நான் அமெரிக்கால பிஸினெஸ்ல இருந்தப்போ, கையில் ஒரு கஸ்டமருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை ஹாண்ட் அவுட் செய்யாம கவுண்டரில் வைச்சிட்டேன்னு சொல்லி கெட்ட வார்த்தையில திட்டிபோட்டு, didn't your mama teach you some manners அப்படின்னு கேட்டுட்டு போனா ஒருத்தி.

இங்க பேனாவை தூக்கி போட்டு கையெழுத்து போடுன்னு கொடுக்கிறது கீழே விழற பேனாவை துழாவி எடுத்து, முதுகை இன்னும் வளைச்சு நின்னு போட்டுக் கொடுத்துட்டு வர வேண்டியதா இருக்கு.

என்னதான் கூட்டம், மூன்றாம் தர உலக நாடுகளில் நாம் வசிக்கிறோம்னாலும், நம்ம மக்கள் தானேய்யா தாராளமா ஒருத்தரை ஒருத்தர் மிதிச்சிக்காம மதிச்சிக்கலாமே. காசா பணமா?! என்னமோ போங்க.

இந்த படம் எதுக்கின்னு கேக்குறீங்களா, இந்த மிஸ்ஸனின் இறுதியில் இப்படித்தான் இருந்துச்சு. ஒரு கடையில உட்கார்ந்து ஒரு ட்டீயை ஊத்தி பாய்லரை கூடுதலா எரிச்சிக்கும் போது.



Thursday, March 06, 2014

எழுத்தாளர் இமையமும் பெண்ணிய சர்ச்சையும்

சில வருடங்களுக்கு முன்பாக எழுத்தாளர் இமயம் எழுதிய மண்பாரம் என்ற சிறுகதை தொகுப்பை அதன் பெயருக்காகவே வாங்கியதாக நினைவு. எப்பொழுதும் போல ஊர்க்கண்டி கழுதையாக எதற்காக ஓடுகிறேன் என்று தெரியாமலே ஓடிக் கொண்டிருப்பதால் உட்கார்ந்து வாசிக்கும் மனநிலை இல்லாமல் போனது.

இருந்தாலும் என்னுடைய அப்பா அந்த புத்தகத்தை வாசித்திருக்கிறார். அவர் ஒரு சாதாரணன். அடிப்படையில் பல தொழில்கள் நடத்தி தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் எழுந்து நிற்க வைத்திருக்கிறார். அந்தச் சிறுகதை தொகுப்பை வாசித்திருக்கும் பொழுது அனேகமாக அவருக்கு வயது 65ஆக இருந்திருக்கக் கூடும். இதற்கு முன்பு அவர் எந்த சிறுகதைகளையோ/புதினங்களையோ வாசித்து நான் கண்டதே இல்லை.

அவர் சுய தொழில்கள் பல செய்து தன்னைச் சார்ந்தவர்களை சிறகு எடுக்கச் செய்திருந்தாலும், என்னுடைய அம்மா அவருக்கு இணையாகவே கூடவே இருந்து அத்தனை பாரத்தையும் சுமந்திருக்கிறாள். அவரின் மனோபாவம் ஒரு சராசரி தமிழக கணவனின்/ஆடவனின் மனதே! 

இந்தச் சூழலில் எழுத்தாளர் இமயம் படைத்த ஒரு படைப்பை வாசித்திவிட்டு அவர் சொன்னது- இந்த புத்தகத்தில் வரும் குணாதிசியங்கள் எல்லாம் நம்மூர் வெட்டன்விடுதிகள், வெள்ளையம்மா, உங்கப்பத்தா முனியம்மா மாதிரி பேசிச் திரிஞ்சிக்கிட்டு, வயல் காடுகளிலும், பொட்ட வெளிகளிலும் கஷ்டப்படும் பெண்களாகவே உள்ளார்கள். அப்படியே அவர்கள் பேசிக்கொள்ளும் மொழி பதியப்பட்டிருக்கிறது என்று.

இந்த மனிதர் உறுதுணையாக தனக்கு சமமாக ஒரு தொழில் நிபுணியாக இருந்த தனது மனைவியை ஒன்றும் வயது காலத்தில் அணுசரனையான சொற்கள் பேசி திளைக்க வைத்தவரில்லை. எங்களுக்காக வறுமையின் பொருட்டு அம்மா எல்லாருக்கும் கல்விச் சென்று சேர வேண்டுமென அத்தனை ஏச்சு பேச்சுக்களையும், சமயத்தில் அடி உதைகளையும் வாங்கி கரை சேர்த்தவள்.

இன்று வேண்டுமானால் எனது அப்பாவின் குணம் ஓர் யூ டர்ன் அடித்து அம்மாவின் அருமை உணர வைத்திருக்கிறது எனலாம். அதற்கான காரணங்களும் பல உள்ளது.

இங்கே இத்தனை முஸ்தீபுகளோடும் இந்த கட்டுரையை எழுதத் தொடங்கி இருப்பதற்குக் காரணம் சமீபத்தில் எழுத்தாளர்  இமயம் 04.03.2013ல் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பெண்ணியம் குறித்த கருத்தரங்கில் அவர் பெண்ணியம் சார்ந்து தவறாகப் பெண்களை கீழே போட்டு பேசிவிட்டதாக பெரும் பேச்சு ஃபேஸ்புக்கில் நடந்து வருகிறது.
அவர் எழுதி வாசித்த முழுக் கட்டுரையையும் இன்று எனக்கு வாசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. பொறுமையாக வாசித்தேன். முகநூலில் அந்த குறிப்பிட்ட சர்ச்சைப் பதிவையும், பலரின் கருத்துக்களையும் மூச்சு முட்ட முட்ட வாசித்தேன். எனக்கு அப்பொழுதே சிறிது சந்தேகம் இருந்தது. தனது அனைத்து படைப்புகளிலும் பெண்களையே மையமாக வைத்து எழுதிய ஒருவர் எப்படி அவர்களின் வாழ்வியல் போராட்டம், சிந்தனை, திறன், அவர்களின் மீதாக சமூகம் விதித்திருக்கும் அபத்தங்கள் பற்றியெல்லாம் முற்றும் முழுதாக அறியாமல்  இப்படி அவரே “நான் ஓர் உரித்து வைத்த ஆணாதிக்கவாதி” என்று பிரகடனப்படுத்திக்கொண்டு பொது இடத்தில் அடி வாங்கிக் கொள்வார்? எனக்கு முரணாகவும், நிச்சயமாக அவர் ஒரு positive antagonistic toneலேயே இதனை கொழுத்தி விட்டெரிந்திருக்க முடியும் என்று எண்ணச் செய்தது.

அவரின் வார்த்தைகளிலேயே அவர் தன்னைப் பற்றி விமர்சித்திக்கொண்டது-

...பெண்களைப்பற்றி எழுதவேண்டும் என்பது என் விருப்பமல்ல. தேர்வல்ல. நான் பெண்களுக்காக பரிந்து பேசுபவனும் அல்ல. நிஜத்தில் நான் ஒரு ஆணாதிக்கவாதிதான். தமிழ் – இந்திய சமூகம் ஆண்களுக்கு என்று வரையறுத்துள்ள அத்தனை குணங்களும் என்னிடத்திலும் இருக்கின்றன. சற்று கூடுதலாகவும்... 

போலவே, அவருடைய கட்டுரையை வாசித்து முடித்ததும், எனக்குத் தோன்றியதும் அதுவே! ஒருவன் தன்னைப் பற்றியும், தன் சமூகம் பற்றியும் எதிர்பாலினத்தின் வலிமை, அவர்களின் வாழ்வியல் நோக்கு பற்றியெல்லாம் தீர்க்கமாக அறிந்திருக்காவிடில் இப்படி தன்னையே விமர்ச்சித்துக் கொள்ள முடியாது. ஓர் உண்மையான ஆணாதிக்கவாதி தன்னை தான் ஓர் ஆணாதிக்க வாதி என்று எங்கும் கூறிக்கொள்ள மாட்டான். அது அவனது இயல்பிலேயே தன் முயற்சியற்று இயங்கி வரும் எந்திரமாக உள்ளான்.

தன்னைப் பற்றி ஆழ அறிந்தவனே தன் செயல்கள், எதிர்பாலினத்தின் மீது தன் முயற்சி அற்று உமிழும் வார்த்தைகளுக்குப் பின்னான சமூக பொது புத்தி விளைச்சல் எல்லாம் கவனிப்பவனாக இருக்க முடியும். 

இப்பொழுது எனது அப்பாவிடம் செல்வோம். அவர் எனக்கு மாலை வேளைகளில் இன்றைய நவீன பெற்றோர்களைப் போல கூடவே அமர்ந்து வீட்டுப் பாடங்கள் சொல்லிக் கொடுக்கும் ஓர் நிலையில் அன்று இல்லை. அவருக்கு கோபம் வரும் பொழுது சமூகம் அவருக்குள் ஆழ விதைத்திருந்த அத்தனை வெறுப்பு அமிலங்களும் வார்த்தைகளாக பெண் சார்ந்த உடல்/குணம் சார்ந்த சிதைப்புகளாகத்தான் வந்து விழும்.

இதனை கேட்டு, பார்த்து/வளரும் ஒரு குழந்தையின் மாலை நேரத்து வகுப்பெடுப்பையொத்த பண்பு எப்படியாக இருக்கும்? இதுவே ஒரு சமூகமாகவே தெருவிலும், அலுவலகங்களிலும், தாலூகா தாண்டி மாவட்டம், மாநிலம், என்று சென்று நாடு தழுவிய ஒரு கூட்டு பண்பு நிலையாக இருந்தால் கிடைப்பது என்னவாக இருக்கும்? அதில் வாழும் ஒரு ஆண் மகவின் உரையாடல்/பார்வை ஒரு பெண் சார்ந்து எதுவாக அமையக் கூடும்? சார்ந்து வாழும் பெண்கள் சகித்து வாழ அடிப்படையிலேயே அங்கே தூண்டப்படுகிறார்கள் அல்லவா?

இந்த அடிப்படையில் வைத்து பார்த்தோமானால் ஒவ்வொரு ஆண் மகவும் சமூகத்தால் அத்தனை ஆணாதிக்க அடிப்படை குணயியல்புகள் அவர்களையும் அறியாமல் மெல்ல சவ்வூடு பரவலாக உள்ளே விதைக்கபட்டு உற்பத்திக்கப்படுகிறார்கள். அது சமயம் பார்த்து நாவை மெல்லச் சுருட்டி, தன்னுடன் கூடவே ஒரு தொழில் நிபுணியாக, எல்லா விதத்திலும் தன்னை விட பல மடங்கு திறமை சாலியாக, வலிமை உள்ளவளாக இருக்கிற தனது மனைவியையே, பிச்சாத்து விசயத்திற்காக ”ஒழுங்கா இருக்கிறதின்னா இரு, இல்லன்னா உங்கப்பன் வீட்டுக்கு போயிக்கோ” என்று சொல்லும் அந்த தன் முயற்சியற்ற எகத்தாளமான தன் நிலையறியா வார்த்தை அந்த அரை ட்ரவுசர் பாண்டிக்கு எங்கிருந்து கிடைத்திருக்கக் கூடும்?

இங்கேதான் எழுத்தாளர் இமயம் மேலும் ஓர் ஒடுக்கப்பட்ட சமூக பின்புலத்திலிருந்து வரும் பெண்களை ஆழப் புரிந்த மட்டில் இப்படியாக முன் வைக்கிறார்-

...அதே மாதிரி பெண் தன்னைவிட்டு அந்நியப்பட்டு விடுவாளோ என்ற அச்சத்திலேயே, ஒவ்வொரு கணவனும் வாழ்நாளெல்லாம், ஒவ்வொரு கணமும் வாழ்கிறான். அந்த அச்சத்தை போக்கத்தான் – சமூக – ஒழுக்க, நீதி, நெறி, அறப் பண்புகளை எல்லாம் பெண்ணை மையப்படுத்தியே சமூகம் வைத்திருக்கிறது. பெண் ஓடிவிடுவாளோ என்ற தனிமனித அச்சம், சமூக அச்சம்தான் – என்னை பெண்களைப்பற்றி எழுத வைக்கிறது. முன்பின் தெரியாத ஒரு ஆணோடு வாழ்வதற்குப் போகிறாள் ஒரு பெண். பதினாறு பதினேழு வயதிலேயே ஒரு பெண்ணால் குழந்தையை பிரசவிக்க முடிகிறது. எவ்வளவு பெரிய தைரியம் இது? துணிச்சல் இது. இந்த தைரியத்தில், துணிச்சலில் நூறில் ஒரு பங்குகூட ஆணிடம் இல்லை.

நம்முடைய புராண, இதிகாச, ஐதீக கதைகள், நீதிக்கதைகள், நாட்டார் பாடல்கள், கதைகள், வாய் மொழிக் கதைகள், எல்லாமும் ஏன் பெண்ணுக்கான ஒழுக்கத்தை, அறத்தைப்பற்றி மட்டுமே பேசுகின்றன? பத்தினி சொன்னால் மழை வரும், பத்தினி சொன்னால் மாநகரம் எரியும், பத்தினி கட்டளையிட்டால் பஞ்ச பூதங்களும் கைகட்டி நிற்கும், பத்தினி சொன்னால் வானத்து மழையே நின்றுவிடும், கற்பில் குறைபாடு இருந்தால் மழையே வராது என்றும் எதற்காக சொன்னார்கள்? பெண் வலிமையானவள். மனரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும். அதனால் அவளை வெல்ல முடியாது. அதனால் ஆண்கள் தந்திரம் செய்தார்கள். அந்த தந்திரங்கள்தான் நம்முடைய புராண, இதிகாச, காப்பிய, ஐதீக, நீதிக் கதைகள், சமூக ஒழுக்கங்கள்...

இதனை அறிந்தே தன்முயற்சியற்று, ஒரு அனுபவத்திற்கும் வாய்ப்பு கிடைக்காமல் சமூகத்தால் பாதுக்காக்கப்பட்ட ஆண் மகக்கள், தங்களின் உண்மையான, வலிமையாக சாய்ந்து கொண்டிருக்கும் தூணையே உருவிப் போடுவது போல அனிச்சையாக வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இமயம் இதனை மறைமுகமாக அந்த சக்தியின் வலிமையை ஆழமாக சுட்டிக்காட்டுகிறார்.

அந்த டோனை புரிந்து கொள்ள முடியாமல், அதற்கு பின்னால் மறைந்திருந்த உண்மையான நோக்கம் சிதைவுறும் படியாக உள்வாங்கப்பட்டிருக்கிறது. மேலோட்டமாக அவர் சுட்டிக்காட்டிய “பெண்ணியம் வாழ்க, ஆணீயம் ஒழிக” ஜீன்ஸ், டீ சர்ட்ஸ் கலக கலாச்சாரத்தில் ஒரு சமூகமாக மேலெழும்ப வேண்டிய கூட்டுச் சிந்தனை இங்கே ஃபேஸ்புக்கில் அலசி பேசப்படாமல் சிதறடிக்கப்படுகிறதெனலாமா? 

இத்தகைய சூழலில், அவரின் கதையில் சோற்றை மட்டுமே எதிர்ப்பார்த்து வாழும் குரலற்ற அறிதிப் பெரும்பாண்மை வெள்ளையம்மாக்களும், தேன்கொடிகளும், பூங்குழலிகளிலும் கால காலத்திற்கும் தங்களை காணாமல் அடித்துக் கொண்டு உழைத்துக் கொடுக்கும் பணம் அனைத்தையும் தனது ஆண் மக்களுக்கு கொடுக்கும் அவலம் நடந்தேறிக் கொண்டேதான் இருக்கும். சமகாலத்தில் அதனையொத்த பெண்களும் தொடர்ந்து சோற்றால் வயிற்றை நிறைக்கும் அபலைப் பெண்டீர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், தொடர்ந்து கலகக் குரல் ஒலிக்கட்டும்! 

Friday, February 07, 2014

நமக்கும் சிம்பன்சிக்கும் இடைப்பட்ட மனித இனங்கள் எங்கே??

யு.கே டெலிகிராஃப்ல மனித பரிணாமம் சார்ந்த ஒரு கட்டுரை வாசிச்சேன். படிக்கும் பொழுது எனக்குள் தோன்றிய சில எண்ணங்களை இதுக்கு முன்பே இங்கே பேசி கேள்விகளாக முன் வைத்து கேள்விகளுக்கு பல இடங்களில் பதில்கள் வழங்கப்பட்டிருந்தாலும், இந்த படத்துடன் கூடிய டெலிகிராஃப் கட்டுரை சில கூர்ந்த அவதானத்தை பக்கம் பக்கமாக வைத்து எளிதாக பலருக்கு விளங்கிக் கொள்ள வாய்ப்பளிக்கலாம் என்பதால் இதோ மீண்டும் பரிணாம அக்கப்போர் :).  அந்த கட்டுரைக்கான சுட்டி- The evolution of man. http://www.telegraph.co.uk/science/10623993/The-evolution-of-man.html

************

மனித இன பரிணாமத்தில அடிக்கடி புத்திசாலித் தனமாக கேட்கப்படும் ஒரு கேள்வி. நாம் குரங்குகளின் இனத்திலிருந்து வந்தது உண்மையென்றால், ஏன் நமக்கும் நமக்கு இடைப்பட்ட மனித பிற இனங்களை இணைக்கும் குரங்குகளை அல்லது மனிதர்களை ஒத்த இனங்கள் காணப் பெறவில்லை என்பது. அதாவது குரங்கு, சிம்பன்சி (வாலில்லா மனித குரங்கு) வகைகளில் இன்று காணப்படுவதனைப் போன்றுங்கிறது கேள்வியா இருக்கும். அதுக்கு எத்தனை விதமா பதில் கொடுத்தாலும் விசயம் சென்று சேருவதில்லை.

கீழே உள்ள தொகுக்கப்பட்ட படக்கட்டுரையில் வரும் ஆண்டுகளை கொண்டு நன்றாக கவனித்தால் நாம் ஒன்றை உணர்ந்து கொள்ளலாம். அதாவது மனித இனத்திற்கு மிக நெருக்கமாக வரும் எதுவும் இன்று சைட் பை சைடாக இல்லை. உதாரணமாக நியாண்டர்தால் கடைசியாக ஐரோப்பாவில் 30 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வரை வாழ்ந்தது. ஆனால், அவைகள் நம்மை விட மூளை அளவிலும், உடல் பருமனிலும் பலசாலிகளாக இருந்தாலும் நாம் அவைகளை வெற்றி கொண்டோம்.

அதற்கான காரணங்களாக நமது சமூக அமைப்பு, உணவு பழக்கம், கூடிப் பேசி வேட்டையாடும் திறன், உடல் பருமனை மட்டும் நம்பி இருக்காமல் மூளையை செயல்படுத்தும் திறன், சீதோஷ்ண நிலையை நேர் கொண்ட திறன் அப்படி இப்படின்னு பல காரணங்கள் ஏன் நாம முன்னேறி கடைசியா தப்பி பிழைத்து நின்னு இருக்கோங்கிறது இருக்கு.

ஆனால் இந்த போட்டியில் தோல்வி உற்றவைகள் ஏதோ ஒரு வகையில் நம்மை விட திறன் குறைந்ததாகவே இருந்ததால் இந்த தப்பிப் பிழைத்துக் கிடக்கும் ஆட்டத்தில் தோற்று மண்ணுக்கு உரமாகி இருக்கிறது, சில எலும்புகளை மட்டும் விட்டுச் சென்றபடி.

ஏன் நமக்கு மிக அருகாமையில் வரும் சிம்பன்சி வகை மட்டும் ஆறு மில்லியன் வருடங்களுக்கு முன்பே நம்முடைய பரிணாமக் கிளையிலிருந்து பிரிந்து சென்றிந்தாலும் இன்றும் கூடவே இருக்கிறதுன்னு கேக்குறீங்களா. நமக்கு அவைக்குமான உணவு பழக்க வழக்கம், வாழ்வமைப்பு, அதன் கம்யூனிகேஷன் திறன், மூளை வளர்ச்சி பெருமளவில் பின் தங்கி இருப்பதே காரணமாக இருக்கிறது (மரபணு மேட்சில நமக்கும் அதுக்கும் 98.5% தொடர்பிருப்பினும்).

அப்போ ஏன் இன்னும் வளராமயே இருக்கிறதின்னு இன்னொரு கேள்வியை போட்டிங்கன்னா- அதற்கான சரியான சூழ்நிலை இன்னமும் தேவைப்படாததும், அவைகளுக்கு தேவையான வாழ்வுச் சூழல் பெரிய மாற்றங்களை சந்திக்காமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது நாமே அவைகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்து இந்த பூமியை நமது ஆளுமைக்குள் வைத்திருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

நம்முடைய சுற்றுப் புறச் சூழல் அழிவுற வைக்கும் திறனுக்கு முன்பு இந்த பரிணாம சுழற்சியின் பெரிய சக்கரம் சுழற்ற போதுமற்றதாகவே பிற உயிரினங்கள் அழிந்து வருவதும் ஒரு காரணமாக இருக்குமென்று எண்ணச் செய்கிறேன்.

We don't give them enough time and space to evolve on its own pace! We alter every single strand of DNA of every living single organisms on this globe!!

Friday, January 03, 2014

புதுக்கோட்டையில் ஓர் ஞானாலயம்: Gnalaya P. Krishnamurthy

என் வாழ்நாளில் புதுக்கோட்டையை எத்தனையோ முறை  பேரூந்து வழியே கடந்து சென்றிருப்பேன். எண்ணிக்கையில் அடக்க முடியாது. அதுவும் அந்த மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஞானாலயா இல்லத்தை கடந்துதான் நான் பயணம் செய்த பேரூந்து சென்றிருக்கக் கூடும். ஆனால், இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்த பிறகு, வாழ்க்கையின் மத்திம பகுதியில் வந்து நிற்கும் எனக்கு சில நாட்களுக்கு முன் ஞானாலயா ஆய்வு நூலகத்தை பார்க்கவும், அதன் நிறுவனர் திரு. பா. கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் உரையாடவும் வாய்ப்பு கிடைத்தது. இவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், எனது உலகத்தில் இவர்களுக்கான காட்சியளிப்பு எனக்கு நானே வழங்கிக் கொள்ளவும் இப்பொழுதுதான் அமைந்திருக்கிறது.

ஒரு நாள் முழுதும் தங்கி ஐயா ஞானாலயா கிருஷணமூர்த்தி மற்றும் அவருடைய துணைவியாருடன் உரையாடினோம்.  அவர்கள் அளித்த மதிய உணவை முழுதும் உண்ணும் வரையிலும் அருகிலேயே அமர்ந்திருந்து என்னுடைய கொரித்து சாப்பிடும் பழக்கத்தை தற்காலிகமாக தள்ளி வைக்க செய்தார் அம்மா.

மனிதனின் நினைவாற்றல் என்பது ஒருவர் தனது துறை சார்ந்து எது போன்ற இலக்கை சென்றடைய வேண்டுமோ அதற்கென பயன்படுத்தி தன்னை சந்தைப் படுத்தி கொள்வது நடைமுறையில் நாம் காண்பது.

இவர் தான் வாசித்து சுவாசித்த அத்தனை புத்தக, நிஜ மனிதர்களின் நினைவுகளோடும் அவர்களின் கனவுகளோடும் வாழ்ந்து கொண்டிருப்பவரும், பெரியவர்களென தன்னைத் தானே தூக்கி வைத்துக் கொண்டாடும் சிறியவர்களுக்கு முன்னால் ஒரு சொப்பன மனிதர்.

இரண்டு மாடிகளில் உள்ள எந்த புத்தகத்தை தொட்டாலும் அதனைப் பற்றிய சிறப்புகளை எடுத்து வைக்கும் பாங்கு நம்மை கொக்கிப் போட்டு உடனே அந்த புத்தகத்தை வாசித்து விட வேண்டுமென்ற வேட்கையை வளர்த்தெடுக்கிறது.

எத்தனையோ பெரிய கூட்டங்களில் இவர் கலந்து கொண்டு உரையாடி இருக்கக் கூடும். ஆனால் திருப்பூர் ஜோதிஜியுடன் சென்ற போது, எங்களிருவருக்காக இத்தனை ஆர்வத்துடன் தன்னுடை அத்தனை வாழ்பனுவத்தை வருடியும், தேவையான இடத்தில் எங்களின் குறுக்கீடுகளை மன்னித்தும், கலந்து கொள்ளுமாறு எங்களையும் அணைத்து கருத்துகளையும் உள் வைத்து எடுத்துச் சென்றது முதல் ஆச்சரியம் என்றால் அவரின் உரையாடலின் அனுபவத்தை சொல்லாமல் சொல்லிக் கொண்டே சென்றது  என் கண்களை அகல விரிய வைத்தது.

அவர் ஓர் அறிவுச் சுரங்கம். 1800களின் இந்தியாவிலிருந்த வாழ்க்கை முதல்  சமகால அரசியல் நிலையென்று அத்தனை விசயங்களையும் இதுவரையிலும் நாம் வெகுஜன ஊடகம் வழியே அறியாத முக்கியமான தகவல்களாக சொல்லிக் கொண்டே செல்ல எனக்கு கனவா நினைவா? என்று யோசிக்கத் தோன்றியது.  அக்காலத்திய மனிதர்களின் வார்த்தைகளிலிருந்து அவர்களின் கனவுகள் எப்படியாக இன்றைய இந்தியாவில் வெறும் நினைவுகளாகி இருக்கின்றன என்று கூறி அவர் விடுக்கும் ஒரு வெறுப்பு கலந்த வரட்டுப் புன்னகை அவ்வப்பொழுது என் மனதை என்னவோ செய்தது.

அவரின் பார்வையில் காந்தியின் செயல்பாடுகளும் அவரின் தொலை நோக்கு பார்வையும் ஓவ்வொரு வார்த்தைகளின் ஊடாக ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டுமென்று அழுத்தமாக சில சான்றுகளை காந்தியின் வார்த்தைகளிலிருந்தே மேற்கோள் காட்டி சொல்லும் பொழுது “அட, ஆமால்ல” என்றுதான் வாய்பிளக்கச் செய்தது.

ஒரிடத்தில் நம்மை எல்லாம் காந்தியின் சுயசரிதை வாசிப்பிலிருந்து மீண்டு அவரைப் பற்றிய, காந்தியே எழுதிய பிற புத்தகங்களையும் ஆழ்ந்து வாசிக்க அழைக்கிறார். மற்றொரு இடத்தில் மிக அதிகமாக புத்தகங்களின் விற்பனையும், வாசிப்பாளர்களையும் பெற்ற மாவட்டமாக புதுக்கோட்டை விளங்கியதின் பின்னணியை விளக்கும் பொழுது, எப்படி நாட்டுக்கோட்டை செட்டியார்கள் தமிழுக்கென செய்த பெரும் தொண்டுகளை பெயர், வருடம் வாரியாக அட்டவணை இடுகிறார்.

முன்பொரு காலத்தில் தமிழகத்தில் மொத்த பிரசுரங்களே 13 தானாம். அதனில் பத்து பிரசுரங்கள் புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார செட்டியார்களால் நடத்தப் பெற்றவைதானாம். எனவே, இயல்பாகவே அதிகப்படியான புத்தகங்கள் விற்பனை மற்றும் வாசிப்பாளர்களையும் உள்ளடக்கிய மாவட்டமாக அமைந்து போனதாக உபரித் தகவலாக போகிற போக்கில் பெரிய தகவல்களைச் அள்ளித் தெளிக்கிறார்.

பேசப் பேச எனக்கு தோன்றியதெல்லாம், ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை தமிழில் எம்.ஃபில் செய்வதற்கான அத்தனை தகவல்களையும் நம் முன் வைத்து நகருவதாக  ஒரு பிரமிப்பை எனக்குள் விதைத்துக் கொண்டிருந்தார்.

ஞானாலயா நூலகத்தில் உள்ள பல புத்தகங்கள் முதற் பதிப்பு கண்டு அத்துடனே அத்தனை மூலத்தையும் உள்ளடக்கி அதற்கென உரிய புனிதத் தன்மையுடன் நம்மை சற்றே பணிவுடன் வணங்கச் செய்கிறது.

பெரியாரின் 1920களின் விடுதலை செய்தித் தாளை தொடும் பொழுது பயம்மா/மிரட்சியா/அதன் அதிர்வா அல்லது அந்தத் தாளின் இப்பொழுதோ அப்பொழுதோ விரலோடு ஒட்டிக் கொண்டு வந்துவிடுவேங்கிற புனிதம் தோய்ந்த பழமையா ஏதோ ஒன்று அந்த பைண்டிங் தொகுப்பை திறக்கும் பொழுது காலுக்கு கீழ் பூமி நகர்வதாக உணரச் செய்தது.

இத்தனை புத்தங்களையும் ஒரே இடத்தில் வசிக்க வைக்க வேண்டி தனது வளர்ச்சியை ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் அளவிலே வைத்துக் கொண்டிருந்திருக்கிறார். தான் ஆசிரியர் பணியில் இருந்த அனுபவம், புதுக்கோட்டை தவிர வேறு எந்த பகுதிக்கும் செல்ல விரும்பாத காரணத்தால் வந்த பதவி உயர்வை ஏற்றுக் கொள்ளாமல் ஆசிரியராகவே வாழ்ந்த அனுபவம், கடைசியில் தலைமையாசிரியர் பொறுப்பில் இருந்த போது பள்ளியில் உருவாக்கிய சீர்சிருத்தம் என்ற அவர் நிஜவாழ்க்கை சாதனை என்பது தமிழிலில் வந்த சாட்டை படம் போலவே இருந்தது.
ஆனால் எதையும் எவரிடமும் சொல்வதும் இல்லை. எந்த ஆதாயத்தையும் எதிர்பார்த்து செய்யும் பழக்கமும் இல்லாத அவரைப் பார்த்த போது சகமனிதர்களின் குறிப்பாக பணமே சரணம் என்று காட்டு ஓட்டமாக ஓடும் இன்றைய நவீன இந்தியர்களின் மீதாக நான் வைத்திருந்த பார்வையை சற்றே மறு பரிசீலனை செய்யச் சொல்லி இருக்கிறது. சென்ற பள்ளிகளில் எல்லாம் தனது நிர்வாக திறமையால் பல மாற்றங்களையும் செய்திருக்கிறார்.

குறிப்பாக கந்தர்வகோட்டை அரசு தொடக்கப் பள்ளியில் ரஜினி ரசிகர்கள் ஒரு முறை பென்சில் நோட் புத்தகம் வழங்க வந்த பொழுதில் அவர்களை பள்ளியின் சுற்றுச் சுவற்றை வெள்ளையடிக்க பயன்படுத்திக் கொண்ட லாவகம் ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் கடைபிடிக்க வேண்டிய ஆளுமைத் திறன்.

இன்றைய அரசியல் போகும் போக்கிலும் மக்களின் மனங்களில் ஏற்பட்டிருக்கும் பணத்திற்கு ஓட்டு என்கிற பரிணாம சுழற்சியில் இது போன்ற மனிதர்களும் இவைகளை சகித்துக் கொண்டு எப்படியாக தங்களை இன்னமும் சந்தோஷமாக வைத்துக் கொள்கிறார்கள் என்பது சமூக அறிவியல் - உளவியலுக்கே உரித்தான கேள்வியது.

நம்முடைய வயதை ஒத்தவர்களுக்கு இதுவே வாழ்க்கையென ஓடும் ஓட்டத்தோடு கலந்து கரையேறுவது எளிமையாக இருக்கலாம். ஆனால், நாட்டின் அடிப்படை உரிமைகளை காக்கவும், அதன் கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை கட்டிக் காக்கவென போராடியே வாழ்ந்தவர்களின் வாழ்க்கையின் ஊடாக வாழப் பெற்ற இது போன்ற அறிவார்ந்தவர்களின் அங்காலய்ப்புதான் எதனை ஒத்ததாக அமையக் கூடும்.

இப்பொழுது உள் நாட்டிலும் சரி, உலக அரங்கிலும் சரி எந்த ஒரு முடிவும் தன் நாட்டின் நலனுக்காகவும், மக்களுக்காகவும் சார்ந்து இல்லாமல் வியாபாரிகளின் நலனுக்காகவே நடந்து கொண்டிருக்கின்றது. இந்த நாட்டின் மண்ணை/பாறை முகடுகளைக் கூட கூறு போட்டு விற்கும் நிலைக்கு நகர்ந்து வந்துள்ளோம்.

இத்தனைக்கு நடுவிலும் இத்தனை ஆயிரம் புத்தகங்ளையும் அதனூடாக வசிக்கும் மனிதர்களையும் வாசித்து அவர்களின் கனவுகள் எல்லாம் காற்றில் ஒன்று ஒன்றாக பறக்க விடுவதனையும் கவனத்தில் நிறுத்தி இன்னமும் மனதை விட்டு விடாமல் நேர்மறை எண்ணத்தில் அவருக்கே ஆன வாழ்வை அவரது தத்துவார்த்த நோக்கில் வாழ்வது simply notable and impressive!

அந்த குடிலை விட்டு வெளிக் கிழம்பி வரும் பொழுது நான் விளையாட்டாக சொன்னது எனது நண்பரிடத்தில் “ஏதாவது செய்யணும் பாஸ்.” அங்கே உள்ள அனைத்து புத்தகங்களையும் இண்டஸ்ட்ரியல் இயக்கமாக இயங்கி ஸ்கான் செய்து கணினியில் ஏற்ற வேண்டியது அனைத்து கணினி பயனீட்டர்களான நமது ஒவ்வொருவரின் கடமை.

Related Posts with Thumbnails