Friday, July 23, 2010

புது ஃபேஷன் ஷெட்டி, ஐயர், ரெட்டி, மேனன்: Is it fool's identity?

”யாதும் ஊரே யாவரும் கேளிர்” இது தமிழில் ரொம்ப பரவலாக பல மேடைகளில், சங்கங்களில், குழுக்களாக கூடி மகிழுமிடங்களில் பயன்பாட்டுக்கு உதவும் ஒரு வாக்கியம். இது வாக்கியம் என்றளவிலேயே பயன்படுத்தப்பட்டு வந்து கொண்டிருக்கிறதோ என்ற ஐயப்பாடு எப்பொழுதும் எனக்கு உண்டு. எனது அவதானிப்பின் படியும், பயணங்களின் ஊடாகவும் நான் அறிந்து கொண்ட ஒரு விடயம், தமிழகத்தைக் காட்டிலும் வட இந்தியா மற்றும் ஏனைய தென்னிந்தியாவில் இந்த நூற்றாண்டிலும் ஒரு வடி கட்டிய முட்டாள்தனமாக பெயருக்குப் பின்னால் ஒரு அடைமொழியாக ராஜ் பட்டேல், ஷில்பா ஷெட்டி, முகேஷ் ஷர்மா, ரேணுகா அய்யர், ப்ரீயா ரெட்டி,  அன்பு மேனன் என்று புழக்கத்தில் இருப்பதனைக் காணும் பொழுது உடம்பெல்லாம் பற்றிக் கொண்டு எரிகிறது.

பெயருக்கு முன்னாலோ பின்னாலோ படிப்பை அடைமொழியாக இட்டுக் கொள்வதைக் கூட தன்னை பிறரிடமிருந்து தனிமை படுத்திவிடும் என்ற நோக்கிலும், தனது உலகறியாமையை பறைசாற்றி நான் ஒரு ’முட்டாள்’ என்று சொல்லாமல் அறிவித்துக் கொண்டிருக்கக் கூடுமென்ற புரிதலில், முயன்று உழைத்து பெற்ற பட்டயங்களைக் கூட சில நற்சிந்தனையாளர்கள் போட்டுக் கொள்ள சிந்திக்கும் வேளையில், இது போன்ற காலாவதியாகிப் போன பிறப்பின் வழி பெற்ற வடிகட்டிய வெளுத்துப் போன இந்த ஜாதி சார்ந்த ”அடைமொழி” முட்டாள்தனத்தை இட்டுக் கொள்வதின் மூலம் எதனை அது போன்ற நபர்கள் நிறுவ முயல்கிறார்கள் என்று எண்ணுவதுண்டு.

இது போன்ற துருத்தல் அடைமொழி ஒரு வீடு வாடகைக்கு பிடிக்க எத்தனிக்கும் பொழுது சொல்லாமலே புரிந்துக் கொள்ளக் கூடிய ஒரு குறியீடாக இருக்க வேண்டுமானால் உதவலாம், அது போன்ற மற்றொரு கேடு கெட்டவர் எதிர்பார்த்திருக்கும் பொழுது. ஆனால், ஒரு அலுவலகத்தில் அன்றைக்கே புதிதாக சந்திக்க நேரிடும் ஒருவரிடத்தில் தான் நரேஷ் xxxx என்றோ, மீரா xxxx என்று அறிமுகப் படுத்திக் கொண்டு கை நீட்டும் பொழுது கை குழுக்க நேரிடும் ஒருவர் எது போன்ற மன ஓட்டத்தில் அந்த கையினை உணர்ந்து கொண்டிருப்பார்?

அண்மைய காலத்தில் தமிழகத்தில் அது போன்ற ‘ஜாதி அடைமொழிகள்’ சிறிதே வெளிப்பார்வைக்கு எழுதி அறிவித்துக் கொள்வது குறைந்திருப்பதாகவே தெரிகிறது. இருப்பினும் லோ கட் ஜீனும் , யூ பெட் என்ற வாசகத்தை கொண்ட டீ சர்ட்டும் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்டறியாத உடை உடுத்திகளின் மண்டைகளை கொண்ட ட்ரெண்ட் செட்டர்களின் நடவடிக்கைகளைப் போல, நவீன யுவன்/யுவதிகளில் பலர் ஐயர்களையும், படையாச்சிகளையும், ரெட்டிகளையும், ஷெட்டிகளையும் தங்களின் பெயருக்குப் பின்னால் பயன்படுத்தி வருவதும் ’ட்ரெண்ட் செட்டிங்’ அவதானிப்பிலேயே என்னால் கண்ணுற்று கடந்து போக முடியவில்லை.

ஏனெனில் இன்று நாம் தொலைத் தொடர்பு சாதனங்களின் உதவியால் இந்த பரந்து விரிந்து கிடந்த உலகத்தை ஒருங்கே இணைத்துக் கட்டி, ஒரு சொடுக்கு நிகழ்த்தும் நிகழ்விற்கும் குறைவான காலத்தில் ஒரு மண்டைக்குள் இருக்கும் எண்ணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு அது உலகம் முழுதுமே கற்றறிந்தவர்கள் என்று கூறிக் கொண்டு - ஃபேஸ் புக், டிவிட்டர், ப்ளாக் என்று மாய்ந்து, மாய்ந்து எழுதி, படித்து உலகம் சுற்றி தனது மண்டை வளர்ந்து விட்டதாக அறிவித்துக் கொள்ளும் கால கட்டத்தில் இன்னமும் இந்த அடைமொழியின் மூலமாக எது போன்ற விளைவுகளை இந்த மனிதக் கடலில் கலக்க எண்ணி கலக்கிறோம். இது போன்ற அறிவு முண்டியடிக்கும் ஒரு கால கட்டத்தில், அது போன்ற துருத்தல்கள் எது போன்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று அறிந்து கொள்ளக் கூட வாய்ப்பு கிட்டாமலா போய்விடும்?

அப்படி அறிந்தே செய்கிறோமென்றால், அது போன்ற அடைமொழி யாரை நோக்கி முன் வைத்து, எதனை கடத்திச் சென்று சேர்க்க துருத்தி வைக்கப்படுகிறது? அறியாமையின் பொருட்டு செய்கிறோம் என்றால், எப்பொழுதுதான், ’தான்’ என்ன செய்து கொண்டிருக்கிறோம் இதன் மூலமாக தன்னுடன் பழகும், அல்லது தன் புள்ளியில் கடந்து போக நேரிடும் துரதிருஷ்ட வாதிகளின் மன நிலையில் எது போன்ற பிம்பத்தை இது போன்ற அடைமொழி எழுப்ப நேரலாம் என்று எப்பொழுது தானாகவே அறிந்து கொள்வது அல்லது யார் தைரியமாக முன் சென்று அந்த விழிப்புணர்வை வழங்குவது ?

சரி அரைகுறைகளை விட்டுவிடுவோம். காலம் வரும் பொழுது தானாகவே விளங்கிக் கொள்வார்கள் என்ற நப்பாசையில். கலைச் சேவையோ அல்லது லைம் லைட்டிற்கு கீழே நிற்கும் மனிதர்களை எடுத்துக் கொள்வோம். ஒரு இயக்குனர் தனது படங்களின் மூலமாகவோ, அல்லது தனது புத்தகத்தின் மூலமாகவோ சில சமூக கருத்துக்களை முன் வைக்கும் இடத்தில் இருப்பவர் எப்படி தான் ஒரு முட்டாள், இன்னும் அந்தக் கட்டத்தையே தாண்டவில்லை என்ற குறைந்த பட்ச விழிப்புணர்வே அற்ற நிலையில் இப்படி சமூகத்தில் தன்னை அது போன்ற ஒரு ’நச்சு அடைமொழியுடன்’ முன் நிறுத்திக் கொண்டிருக்க முடியும்.

அடுத்து, அண்மையில் வெளிவந்து சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் படமான ’அங்காடித் தெரு’ நல்ல ஒரு சமூக கருத்தை முன் வைத்து எடுக்கப்பட்ட படம். அதனில் இரண்டு பாடல்கள் அப்படியே தூக்கி மிதக்க வைத்த பாடல்கள் அந்த வசிகரமான குரலும், பாடலின் ஆழமும் திளைக்க வைத்து எங்கோ நம்மை எடுத்துச் சென்று கொண்டிருக்கும் பொழுது அங்கே அந்தக் குரலுக்கு சொந்தமான மனிதர்களின் பெயரோ, புற அடையாளங்களோ முன் நிறுத்தப் படாத வரையிலும் எந்த விதமான குறுக்கீடுகளும் இல்லாமல் இருக்கும் பொழுது நம்மால் லயித்திருக்க முடிந்தது, ஆனால் எதார்த்தமான ஒரு சூழலில் அந்தப் பாடலை பாடியவரின் பெயருக்குப் பின்னால் கண்ட இந்த அடைமொழிகள் - ஜானகி அய்யர், நரேஷ் அய்யர் போன்றவைகள் மீண்டும் நம்மை பூமிக்கே கொண்டு வந்து ஒரு அர்ப்பனாக்கி மாடுகளை கட்டுத்தறியில் கட்டி வைத்ததிற்கிணையாக நம்மை சிக்குற வைத்து விடாதா? இது போன்ற முன்னிருத்தல்கள் எல்லாம் எதற்காக; அதுவும் மனிதத்தின் மேன்மை பண்புகளான நேசம், பாசம், காதல், பரிவுகளைப் பற்றி பாடி மனிதர்களின் இறுக்கங்களை தளர்த்தும் ஒரு தளத்தில் இருப்பவர்களுக்கு. உண்மையாகவே எனக்கு புரியவில்லை!

அப்படியெனில் இது வரையிலும் அது போன்ற மனிதர்கள் இதன் பின்னணியில் இருக்கும் அபாயத்தை/அபத்தத்தை உணரவே இல்லையா? தான் இந்தத் துருத்தலை தூக்கிக் கொண்டு அலைவதால் முதலில் தான் ஒரு முட்டாள் என்பதனை ஊரறிய ஒத்துக் கொள்பவனாகவும், அடுத்த மனிதர்களை சஞ்சலமடையவும், உணர்வுகளை நசுங்க வைத்துக் கொண்டிருக்கும் ஓர் உணர்வற்ற மூடனாகத்தானே நம்மால் புரிந்து கொள்ள முடியும்?

இப்படி குழுக்களாக, சிறிது சிறிதாக உடைத்து உடைத்து ஒரே நாட்டிற்குள் வாழ நேர்ந்து போனால், எப்படி நாமும் 2020க்குள் இது போன்ற சில்லறைத் தனமான விடயங்களிலிருந்து வெளிப்பட்டு உலக அரங்கில் ‘சூப்பரு பவரு’ன்னு அறியப் படுத்திக்கிறது; இவ்வளவு ஓட்டை ஊழல்களை நம்மிடம் வைத்துக் கொண்டு.

எது போன்ற வாழ்க்கை கல்வி, இவர்களின் வாழ்க்கையை எந்தச் சூழலில் பேரிடியாக அடித்து சக மனிதனை மனிதனாக மட்டுமே பார்த்து பழகும் ஒரு நல்ல பண்பை ஊட்டும் வகையில் ஒரு வாய்ப்பை வழங்கப் போகிறது? Morons!

இது என்னுடைய சுய விசாரிப்புகளாக எழுந்த எண்ணங்களே! அப்படியே இந்தப் பாட்டை கேட்டு கொஞ்சம் நேரம் மறந்து மிதப்போம்...NK Dreams¨‘°ºO™ - Un Perai Sollum .mp3
Found at bee mp3 search engine

Tuesday, July 20, 2010

இன்செப்ஷன் - Inception (the movie)...

ஞாயிற்றுக் கிழமை ஒரு தாத்தாக் கூட பேசிட்டு இருந்தேன். அவரு அறிவியல் புனைவுப் படங்களையும், மெதுவாக நகரும் ட்ராமா சீரிஸ் படங்களையும் விடாம பார்த்திட்டு வந்து என்கிட்ட சிலாகிச்சு பேசுவார். இந்த வாரம் அப்படியாக சிலிர்த்துப் பேசின படம்தான் Inception. நான் ஏற்கெனவே கொஞ்சம் முன் ஓட்டம் பார்த்து வைச்சிருந்தேன். அதில இயற்பியல் சார்ந்த கோட்பாடுகளை உடைக்கிற மாதிரியான சில காட்சி அமைப்புகளும், நம்மோட கனவு நிலையில், உள்ளே புகுந்து நமது subconscious மனதில் இருக்கும் ரகசியங்களை கண்டறிந்து பெரிய பெரிய விசயங்களை திருடுவது மாதிரியான கதையும் பார்த்தே ஆகணும்மப்பாங்கிற ஆர்வத்தை ஊட்டியது.

இப்போ தாத்தா வேற ஆஹா, ஒஹோன்னு ஒரே பாராட்டா பாராட்டி தள்ளிட்டார். அதுவும் என்கிட்ட படத்தோட மேலோட்டமான கதையைச் சொல்லும் போதே, தன்னோட இரண்டு கைகளாலும் தலையை பிடிச்சிட்டு இடமும் வலமுமா ஆட்டின ஆட்டு என்ன நடக்கிதுன்னே தெரியல படத்தில just mind boggling, trying to get into a dream to dream to dream, ideas after ideas அப்படியாக படம் நகருதுன்னு சொல்லி பல முகங்களை ஒரே நேரத்தில காமிச்சார். இப்போ ’மைண்ட் வைரஸ்’ஆ (தொத்து வியாதி கணக்கா) எனக்குள்ளும் விதைக்கப்பட்டுருச்சா. பிறகென்னா, இரண்டரை வருஷங்களுக்குப் பிறகு முதல் முறையா இரவு ஒன்பதரை மணி படம் கடைசி பத்து நிமிடங்களுக்கு முன்னாடியாக முடிவு பண்ணி ஓடிப் போனேன் நான் மட்டும் தனியா பார்க்க.

படம் ரெண்டரை மணி நேரம் ஓடுதுங்க. படத்தில என்ன இல்லைன்னு கேக்கலாம். ஆக்‌ஷன், ஸ்பெஷல் எஃபெக்ட், தியரி, காதல் அப்படின்னு நேரம் போறதே தெரியாத அளவிற்கு நம்ம டைட்டானிக் படப் புகழ் லியோநார்டோ டிகாப்ரியோ கலக்கி கட்டிப் போடுறாரு. பையனுக்கு செம எதிர்காலம் இருக்குது! படத்தோட முழுக் கதை என்னடா தெக்கின்னு மட்டும் கேட்டுறாதீங்க. செம சுத்து சுத்தியிருக்காய்ங்க, ஒரே குழப்பம். எந்த கனவில இருந்து எந்த கனவுக்குள்ளர புகுறாய்ங்க, எந்த டைமிங்ல திரும்ப எழுப்பப்பட்டு மற்றொரு கனவிற்குள்ளர சுத்திட்டு இருக்காய்ங்கன்னு காட்டுத்தனமா மூளையின் நுயுரான்ஸ்களுக்கு செம வேலை கொடுக்கிறாய்ங்க. படம் ஆரம்பிச்சு முக்கா மணி நேரம் வரைக்கும் என்ன நடக்கிதுன்னே தெரியல!! :))

அதில ஒரு வசனம் பேசுவாங்க, யோசிச்சி பார்த்தப்போ அது எவ்வளவு உண்மை அப்படின்னு தோணுச்சு. உலகத்திலயே குணப்படுத்த முடியாத, வேகமா பரவுற தொற்று எதுன்னு கேட்டுப்பாங்க. அதுக்கு சொல்லுவாங்க, ‘மைண்ட் வைரஸ்.’ ஏன்னா, அது ஒருத்தனுக்குள்ளர முகிழ்ந்து ஒருவனிலிருந்து, மற்றொருவனுக்கின்னு விதைக்கப்படும் பொழுது அந்த எண்ணத்தை சுத்தமா அழிச்சு எடுத்துறவே முடியாது, அதே நேரத்தில மிக விரைவாகவும் பரவுமுன்னு பேசிக்குவாங்க. அது உண்மைதானே! அதுவும், இப்போ இருக்கிற இந்த இணைய தொடர்பில எவ்வளவு விரைவா ஒரு தனிப்பட்ட மனதின் எண்ணங்கள் எங்கிருந்து தொடங்கியதுன்னே தெரியாமயே காட்டுத்தீ மாதிரி உலகம் முழுக்கவுமே பரவும் சாத்தியங்களை கொண்டிருக்கிறதுன்னு கண் கூடாக பார்க்கிறோமே அண்மைய காலங்களில்.

அடுத்து இந்த கனவு நிலையில மற்றவர் உருவாக்கிய உலகத்திற்குள் புகுவது, அதுவும் நம்ம கனவில எப்படியெல்லாமோ உலகம் விசித்திரமா விரிய வைப்போமல்லவா அதையெல்லாம் திரைகாட்சிகளாக கொஞ்சம் ஆக்கி காமிக்க செஞ்சிருக்கிற முயற்சிக்கே இந்தப் படத்தை போயி பார்க்கலாம். அத்தனை காட்சிகள் வாயைப் பிளக்க வைக்கிறது. கனவாக வரும் இயற்பியல் விதிகளுக்கு எதிராக விரியும் தனிப்பட்ட மனதின் வீதிகளும், கட்டடங்களும், நகரங்களுமாக - கலக்கல் மண்டை யார் இந்தப் படத்தை ஸ்கிரிப்டா கொண்டு வந்தாரோ அவருக்கு.

கதாநாயகன் தன்னோட மனைவியை ஏதோ ஒரு கனவு நிலையில் தொலைத்து இருந்தாலும், தான் உருவாக்கிய கனவு உலகில் இன்னமும் வாழ்வதாக எண்ணும் ஒவ்வொரு முறையும் அவனாகவே அபாயம் சூழ்ந்திருக்கக் கூடிய ஒவ்வொரு இடத்திலும் அவளை கொண்டு வந்து அவனின் நிகழ் கால உணர்வு சார்ந்த(?) நிலைக்கே சேலஞ்ச் பண்ணிக் கொள்ளுவதும், அதன் மூலமாக தன்னோட காதல் வாழ்க்கையை சொல்லுவதும், முடியல்ல - ரேஞ்ச்!

படம் விட்டு வீட்டுக்கு வரும் பொழுது நான் என்னவோ என்னோட கனவில உருவாக்கி வைச்சிருந்த நகரத்திற்குள் நடமாடித் திரியற மாதிரி ஒரு ஃபீலின்ஸ் :) . என்னோட தொடர்பில வாரவங்க எல்லாம் என்னோட subconscious mindல உருவாக்கி வைச்சிருக்க நபர்கள்ங்கிற ரேஞ்சிற்கு யோசிக்க வைச்சிருச்சு. படிக்கிற நீங்களும்தாம்பா! பார்க்க முடிஞ்சவுங்க கண்டிப்பா தியேட்டர்ல போய்ப் பாருங்க. கொடுக்கிற காசிற்கு ஒர்த்!!

Monday, July 12, 2010

உலக உதை பந்தாட்டமும் இந்தியாவும் : FIFA Final 2010

இன்று நடந்த முடிந்த உதை பந்து போட்டியின் முடிவில் ஸ்பெயின் மக்களின் முகங்களில்தான் எத்தனை மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. ஸ்பானியார்ட்ஸ்ம் சரி அவர்களுக்கு எதிர்ப்பாக விளையாடிய டச்சுக்காரர்களும் சரி கொஞ்சம் கூட விளையாட்டில் தொய்வே இல்லாதபடிக்கு விறு விறுப்பாக நகர்த்திக் கொண்டிருந்தார்கள். கொடுக்கப்பட்ட எக்ஸ்ட்ரா பதினைந்து நிமிடங்களில் விளையாட்டாக சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஸ்பானியார்டின் Andres Iniesta பந்தை அலேக்காக தூக்கி உள்ளே போட்டு 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற காரணமாகிப் போனார்.

இறுதிகட்ட மேட்ச் என்பதால் அமளிதுமளிக்கு ஒன்றும் குறைச்சலே இல்லாமல் இருந்தது. உதை பந்தாட்ட நடுவர் Howard Webb விளையாட்டு வீரர்களை உச்சந்தலையிலிருந்து பார்த்தபடி கிட்டத்தட்ட 15 மஞ்சள் அட்டைகளையும், ஆட்ட முடிவின் 10 நிமிடத்திற்கு முன்பாக ஒரு சிவப்பு அட்டையையும் வழங்கி தனது இன்றைய தின இறுதி ஆட்டத்தினை கட்டுக்குள் வைத்திருந்தார்.

இது போன்று விளையாட்டுக்களை முன்னிருத்தி சர்வ தேச விழாக் கோலம் பூணும் ஒலிம்பிக்ஸ் மற்றும் சர்வ தேச உதை பந்தாட்டம் போன்றவைகளில் இந்தியாவின் சுவடுகளே தெரிவதில்லை. நான் இது போன்றே புலம்பி கடந்த ஒலிம்பிக்ஸின் போது ஒரு பதிவினை இட்டிருந்தேன். அதே போன்ற நடையில் இப்பொழுது இந்த உதை பந்தாட்டதின் இறுதி நாளில் என்னிடமிருந்து மீண்டும் ஒரு பதிவு வருவது என்னாலேயே தவிர்க்க முடியாததாகி விடுகிறது. ஏன் இது போன்ற எண்ணம் வர வேண்டும். புலம்பித்தான் என்னாவாகிவிடப் போகிறது என்று சமாதானம் கூறிக் கொண்டாலும், ஏன் இத்தனை நான்காண்டு, ஐந்தாண்டு சர்வ தேச விழாக்கள் வந்து போனாலும் நம்மால் கூறிக் கொள்ளும் படியாக எதனையுமே உலக அரங்கில் தனது இருப்பை காட்டிக் கொள்ளும் படியாக எதனையும் சாதித்துக் கொள்ள முடிவதில்லை.


தருமியின் தளத்தில் ஆக்டோபஸ் ஆருடம் பற்றிய பதிவின் கடைசி பத்தியில், ஆக்டோபஸ் கூறியதாக முன் வைத்த வாதங்கள்தான் எத்தனை உண்மையானது. அந்தப் பத்தி இப்படியாக ஓடியிருந்தது...

... தமிழ்ஸ்போர்ட்ஸ்: இந்திய கால்பந்து பற்றி ஏதாவது கணித்து கூற முடியுமா?

கவலைப்படாதப்பா! பிரமாதமான வளர்ச்சி எதிர்காலத்துல இருக்கு.முதல்ல நல்ல ஸ்டேடியங்களை கட்டுங்க.சிறுவர்களை பள்ளிப்பருவத்தில் இருந்தே,கால்பந்து விளையாட பழக்குங்க.உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குங்க.இந்த அரசியல்வாதிகளை கால்பந்து பக்கம் அண்ட விடாதீங்க.முதல்ல அந்த பிரபுல் படேல்ட்ட இருந்து தலைவர் பதவியை பிடுங்கி கால்பந்து மேல உண்மையான பற்று இருக்குறவங்ககிட்ட கொடுங்க.அது ஏன் உங்க நாட்டுல மட்டும் இந்த அரசியல்வாதிகள் கையில் விளையாட்டு இருக்குது?(பால் கேட்ட கேள்விக்கு நம்மட்ட பதில் இல்லை)...


அதனைப் படித்தவுடன் என்னுள் தவிர்க்க முடியாமல் வந்து போன ஒரு எண்ணம் என்னவெனில் 1986ல் மெக்சிகோவில் நடைபெற்ற உலக உதை பந்தாட்டதின் போது பள்ளி தலைமை ஆசிரியரை இரவில் எழுப்பி தொலைக்காட்சிப் பெட்டியை விளையாட்டு மைதானத்திற்கு நகர்த்தி வைக்கச் சொல்லி அவரைப் படுத்திப் பார்த்த காலங்களும், பள்ளி விட்ட மாலை வேளைகளில் உடற்பயிற்சி ஆசிரியரிடம் திட்டு வாங்கியேனும் காற்று இல்லாத பந்தாக இருந்தாலும் கிடைத்த இடத்தில் உருட்டிக் கொண்டு திரிந்த நாட்களும் அச்சு பிறழாமல் மனதில் வந்து போனது. இப்படி ஒவ்வொரு கிராமத்திலும், அது அரசாங்க பள்ளிகளாக இருக்கட்டும், சற்றே பெரிய நகரங்களிலுள்ள தனியார் பள்ளிகளாக இருக்கட்டும் இந்தியா முழுதிற்குமே எத்தனை கோடி மாணவர்கள் ஆர்வத்துடன் இருந்திருக்கக் கூடும் (இன்றும் கூட).

ஏன் இத்தனை மக்கள் தொகையைக் கொண்ட நாட்டில் இத்தனை பஞ்சம் சரியான விளையாட்டு வீரர்களை இனம் கண்டு சர்வ தேச அரங்கில் நிறுத்த. சாப்பாடு சத்து பத்தாமல், ஸ்டெமினா இல்லாமல் நாம் ப்ரைமரி மேட்சிற்குள் கூட நுழைய முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறோமா? இல்லை கிரிக்கெட்டை வைத்துக் கொண்டு அரசியல் பண்ணிக் கொண்டிருப்பதிலேயே காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறோமா? சமச்சீராக ஒரு நாடு உலக சபையில் தன்னை அடையாளம் காண வேண்டுமென்றால் எல்லா விசயங்களிலும் தன்னை முன்னிருத்திக் கொண்டால்தானே கொண்டிருக்கக் கூடிய இடத்திற்கு அழகு! இந்த லட்சணத்தில் இருந்து கொண்டு 2020ல் வல்ல அரசு என்று வேறு கூறிக் கொண்டிருக்கிறோம். மொதல்ல இந்த இத்துப் போன அரசியல் வாதிகளை ஒரு சுனாமி கொண்டு போனாத்தான் உண்டு.

Wednesday, July 07, 2010

An Inspiring Speech, deliverance by Sunitha Krishnan

புற வெளிப்பாடுகளுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டு வாழும் நம்மிடையே... இது போன்ற மனிதர்களுக்கிடையேயும் நாமும் பங்கு போட்டுக்கிட்டு இருக்கோம் இந்த உலகத்தைன்னு நினைக்கும் பொழுது மூஞ்ச கொண்டு போயி எங்க வைச்சிக்கிறதின்னே தெரியல... நீங்களே பார்த்து தெரிஞ்சிக்கோங்க.


இந்த வீடியோ கண்டிப்பா பார்த்தே ஆகணும் பல காரணங்களுக்காக.இணைப்பிற்கு செல்ல இங்கே அழுத்துங்க ...Sunitha Krishnan’s Fight Against Sex Slavery

Monday, July 05, 2010

அட்லாண்டாவில் வான வேடிக்கை: 4th July Fireworks_Photos

என் வீட்டிற்கு பின்புறம் 1996ல் நடந்த அட்லாண்டா ஒலிம்பிற்கென வடிவமைக்கப்பட்ட சர்வதேச குதிரைகள் பூங்கா ஒன்று உள்ளது. அங்கு வருடா வருடம் ஜுலை 4ம் தேதி அனுசரிக்கப்படும் அமெரிக்கா சுதந்திர தினவிழாவிற்கென வான வேடிக்கை நடைபெறுவது வழக்கம். நான் பல ஆண்டுகள் எனது வீட்டின் கொல்லைப்புறமே நடைபெறும் இந்த நிகழ்ச்சியை ஒரு முறையேனும் சென்று பார்க்க வேண்டுமென ஆர்வம் கொண்டதில்லை.


முதற்காரணம் கூட்டம். கூட்டமின்னாலும் மக்கள் கூட்டம் மட்டுமில்லை. ஆயிரக் கணக்கில் கார்கள் உள்ளே வந்து வெளியே போக திண்டாடும் கூட்டத்தை நினைத்துதான். இப்பொழுது மக்கள் வீட்டிலும் கொஞ்சம் கூடி விட்டதால் போயித்தான் பார்ப்போமே என்ற நிலை. போனால், உள்ளே போயி வெளியே வரவே இரண்டு மணி நேரங்கள். கார்கள் இஞ்ச் பை இஞ்சாக நகர்ந்து ஊர்ந்தது. அப்பொழுதுதான் நினைத்தேன், இது மாதிரி இன்றைய தின நாளில் அல்லது ஏதோ ஒரு நிகழ்வினையொட்டி நாடெங்கும் இது போல கார்கள் அணி வகுத்து செல்லும் பொழுது ஏன் பெட்ரோலுக்கென திண்டாட்டமும், அதனையொட்டிய மாசுபாடும் களைகட்டிப் போகதுன்னு தோணிச்சு. அதைத் தனியா பேசிக்குவோம்.

இப்போ இந்தாங்க நாங்க கண்டு களித்த அந்த வான வேடிக்கை புகைப் படங்களில் சில நீங்களும் அனுபவிக்க...


மற்ற புகைப்படங்கள் இங்கே...

Related Posts with Thumbnails