Tuesday, July 20, 2010

இன்செப்ஷன் - Inception (the movie)...

ஞாயிற்றுக் கிழமை ஒரு தாத்தாக் கூட பேசிட்டு இருந்தேன். அவரு அறிவியல் புனைவுப் படங்களையும், மெதுவாக நகரும் ட்ராமா சீரிஸ் படங்களையும் விடாம பார்த்திட்டு வந்து என்கிட்ட சிலாகிச்சு பேசுவார். இந்த வாரம் அப்படியாக சிலிர்த்துப் பேசின படம்தான் Inception. நான் ஏற்கெனவே கொஞ்சம் முன் ஓட்டம் பார்த்து வைச்சிருந்தேன். அதில இயற்பியல் சார்ந்த கோட்பாடுகளை உடைக்கிற மாதிரியான சில காட்சி அமைப்புகளும், நம்மோட கனவு நிலையில், உள்ளே புகுந்து நமது subconscious மனதில் இருக்கும் ரகசியங்களை கண்டறிந்து பெரிய பெரிய விசயங்களை திருடுவது மாதிரியான கதையும் பார்த்தே ஆகணும்மப்பாங்கிற ஆர்வத்தை ஊட்டியது.

இப்போ தாத்தா வேற ஆஹா, ஒஹோன்னு ஒரே பாராட்டா பாராட்டி தள்ளிட்டார். அதுவும் என்கிட்ட படத்தோட மேலோட்டமான கதையைச் சொல்லும் போதே, தன்னோட இரண்டு கைகளாலும் தலையை பிடிச்சிட்டு இடமும் வலமுமா ஆட்டின ஆட்டு என்ன நடக்கிதுன்னே தெரியல படத்தில just mind boggling, trying to get into a dream to dream to dream, ideas after ideas அப்படியாக படம் நகருதுன்னு சொல்லி பல முகங்களை ஒரே நேரத்தில காமிச்சார். இப்போ ’மைண்ட் வைரஸ்’ஆ (தொத்து வியாதி கணக்கா) எனக்குள்ளும் விதைக்கப்பட்டுருச்சா. பிறகென்னா, இரண்டரை வருஷங்களுக்குப் பிறகு முதல் முறையா இரவு ஒன்பதரை மணி படம் கடைசி பத்து நிமிடங்களுக்கு முன்னாடியாக முடிவு பண்ணி ஓடிப் போனேன் நான் மட்டும் தனியா பார்க்க.

படம் ரெண்டரை மணி நேரம் ஓடுதுங்க. படத்தில என்ன இல்லைன்னு கேக்கலாம். ஆக்‌ஷன், ஸ்பெஷல் எஃபெக்ட், தியரி, காதல் அப்படின்னு நேரம் போறதே தெரியாத அளவிற்கு நம்ம டைட்டானிக் படப் புகழ் லியோநார்டோ டிகாப்ரியோ கலக்கி கட்டிப் போடுறாரு. பையனுக்கு செம எதிர்காலம் இருக்குது! படத்தோட முழுக் கதை என்னடா தெக்கின்னு மட்டும் கேட்டுறாதீங்க. செம சுத்து சுத்தியிருக்காய்ங்க, ஒரே குழப்பம். எந்த கனவில இருந்து எந்த கனவுக்குள்ளர புகுறாய்ங்க, எந்த டைமிங்ல திரும்ப எழுப்பப்பட்டு மற்றொரு கனவிற்குள்ளர சுத்திட்டு இருக்காய்ங்கன்னு காட்டுத்தனமா மூளையின் நுயுரான்ஸ்களுக்கு செம வேலை கொடுக்கிறாய்ங்க. படம் ஆரம்பிச்சு முக்கா மணி நேரம் வரைக்கும் என்ன நடக்கிதுன்னே தெரியல!! :))

அதில ஒரு வசனம் பேசுவாங்க, யோசிச்சி பார்த்தப்போ அது எவ்வளவு உண்மை அப்படின்னு தோணுச்சு. உலகத்திலயே குணப்படுத்த முடியாத, வேகமா பரவுற தொற்று எதுன்னு கேட்டுப்பாங்க. அதுக்கு சொல்லுவாங்க, ‘மைண்ட் வைரஸ்.’ ஏன்னா, அது ஒருத்தனுக்குள்ளர முகிழ்ந்து ஒருவனிலிருந்து, மற்றொருவனுக்கின்னு விதைக்கப்படும் பொழுது அந்த எண்ணத்தை சுத்தமா அழிச்சு எடுத்துறவே முடியாது, அதே நேரத்தில மிக விரைவாகவும் பரவுமுன்னு பேசிக்குவாங்க. அது உண்மைதானே! அதுவும், இப்போ இருக்கிற இந்த இணைய தொடர்பில எவ்வளவு விரைவா ஒரு தனிப்பட்ட மனதின் எண்ணங்கள் எங்கிருந்து தொடங்கியதுன்னே தெரியாமயே காட்டுத்தீ மாதிரி உலகம் முழுக்கவுமே பரவும் சாத்தியங்களை கொண்டிருக்கிறதுன்னு கண் கூடாக பார்க்கிறோமே அண்மைய காலங்களில்.

அடுத்து இந்த கனவு நிலையில மற்றவர் உருவாக்கிய உலகத்திற்குள் புகுவது, அதுவும் நம்ம கனவில எப்படியெல்லாமோ உலகம் விசித்திரமா விரிய வைப்போமல்லவா அதையெல்லாம் திரைகாட்சிகளாக கொஞ்சம் ஆக்கி காமிக்க செஞ்சிருக்கிற முயற்சிக்கே இந்தப் படத்தை போயி பார்க்கலாம். அத்தனை காட்சிகள் வாயைப் பிளக்க வைக்கிறது. கனவாக வரும் இயற்பியல் விதிகளுக்கு எதிராக விரியும் தனிப்பட்ட மனதின் வீதிகளும், கட்டடங்களும், நகரங்களுமாக - கலக்கல் மண்டை யார் இந்தப் படத்தை ஸ்கிரிப்டா கொண்டு வந்தாரோ அவருக்கு.

கதாநாயகன் தன்னோட மனைவியை ஏதோ ஒரு கனவு நிலையில் தொலைத்து இருந்தாலும், தான் உருவாக்கிய கனவு உலகில் இன்னமும் வாழ்வதாக எண்ணும் ஒவ்வொரு முறையும் அவனாகவே அபாயம் சூழ்ந்திருக்கக் கூடிய ஒவ்வொரு இடத்திலும் அவளை கொண்டு வந்து அவனின் நிகழ் கால உணர்வு சார்ந்த(?) நிலைக்கே சேலஞ்ச் பண்ணிக் கொள்ளுவதும், அதன் மூலமாக தன்னோட காதல் வாழ்க்கையை சொல்லுவதும், முடியல்ல - ரேஞ்ச்!

படம் விட்டு வீட்டுக்கு வரும் பொழுது நான் என்னவோ என்னோட கனவில உருவாக்கி வைச்சிருந்த நகரத்திற்குள் நடமாடித் திரியற மாதிரி ஒரு ஃபீலின்ஸ் :) . என்னோட தொடர்பில வாரவங்க எல்லாம் என்னோட subconscious mindல உருவாக்கி வைச்சிருக்க நபர்கள்ங்கிற ரேஞ்சிற்கு யோசிக்க வைச்சிருச்சு. படிக்கிற நீங்களும்தாம்பா! பார்க்க முடிஞ்சவுங்க கண்டிப்பா தியேட்டர்ல போய்ப் பாருங்க. கொடுக்கிற காசிற்கு ஒர்த்!!

8 comments:

சென்ஷி said...

இந்த வாரம் ஐமேக்ஸ்ல இந்தப் படத்துக்கு கண்டிப்பா போயிடனும்னு ப்ளான் செஞ்சு வச்சிருக்கேன். :)

Thekkikattan|தெகா said...

கண்டிப்பா போயி பாருங்க நாகேஷ். இங்கயும் ஐமேக்ஸ்லும் போட்டு இருக்காங்க, அதில பார்த்திருந்தா நானும் தியேட்டர்குள்ளரயே அவிங்க கனவில வார நகரத்திற்குள்ளர நடந்து திரியற ஒரு ஆளா என்னயயே பார்த்திருப்பேனோ :-P

மயில்ராவணன் said...

நானு அடுத்த வாரம் பாத்டுபுடுறேன். சென்ற வாரம் மதராசப்பட்டிணம் பாத்தேன். அருமையான படம். தாத்தா நல்லா சொல்லியிருக்காரு :)

பழமைபேசி said...

//கொடுக்கிற காசிற்கு ஒர்த்!//

அப்பச் சரி... அந்த காசையும் இங்கால அனுப்பி வெச்சிருங்க...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குடுத்துவச்சவங்க பாத்துட்டு சொல்றீங்க.. சான்ஸ் வரப்ப பாக்கறோம்..
எழுதிய விதம் ரொம்ப நல்லா இருக்கு..
படத்தைப்பாத்துட்டு நிஜமே கனவு நகரமா
தெரிஞ்சது சுவாரசியம்.. :)

Prasanna Rajan said...

தமிழ்நாட்டில் நம்முடைய டைரக்டர்கள் எல்லாம், மக்களை முட்டாள் போல் நினைத்து படம் எடுத்து கொன்டு இருக்கின்றனர். ஆனால், கிறிஸ்டோஃபர் நோலன் தன்னுடைய பார்வையாளர்களை சிந்திக்கும் திறம் உடையவர்களாய் நினைத்து இந்த படத்தை எடுத்திருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இந்த படத்தை பற்றிய என் அனுபவத்தை ஆங்கிலத்தில் இங்கு எழுதியுள்ளேன்...

http://prasanna-rajan.blogspot.com/2010/07/christopher-nolan-and-inception-maze.html

வடுவூர் குமார் said...

அப்படியா! பார்த்திடுவோம்.

SurveySan said...

பாத்துட்டோம்ல.


//கதாநாயகன் தன்னோட மனைவியை ஏதோ ஒரு கனவு நிலையில் தொலைத்து இருந்தாலும், தான் உருவாக்கிய கனவு உலகில் இன்னமும் வாழ்வதாக எண்ணும் ஒவ்வொரு முறையும் அவனாகவே அபாயம் சூழ்ந்திருக்கக் கூடிய ஒவ்வொரு இடத்திலும் அவளை கொண்டு வந்து அவனின் நிகழ் கால உணர்வு சார்ந்த(?) நிலைக்கே சேலஞ்ச் பண்ணிக் கொள்ளுவதும், அதன் மூலமாக தன்னோட காதல் வாழ்க்கையை சொல்லுவதும், முடியல்ல - ரேஞ்ச்!///

நல்ல விவரணை.

Related Posts with Thumbnails