Thursday, April 25, 2019

பொதுபுத்திக் கனவுகள்: Sapiens - 4


கட்டுக்கதைகளே நம்மை உலகினோடு ஒட்டி ஒழுக கட்டியெழுப்பப் பட்டுள்ள சிறைகளின் மதில்களை ஒத்தது என்கிறார் சேப்பியன்ஸ் புத்தகத்தின் ஆசிரியர். இதனை நிறுவ இவர் மதங்கள், அரசுகள், அரசியல் கொள்கைகள், ஒரு பெரிய கார்ப்பரேட்டின் வியாபார முழக்கங்கள் என்ற விசயங்களை கையில் எடுக்கிறார்.
நம்முடைய அன்றாட சொந்த அக விருப்பத்தின் பால் நாடுகின்ற தன்னியல்பில் வாழ்வது (live your life), கனவுப் பயணம் (dream trip) போன்ற விசயங்களில் கூட எந்த அளவுக்கு வெளியிலிருந்து கட்டமைக்கப்படுகிற கற்பனை வாதம் நம்மை அகத்திலும் வடிவமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது என்று அலசி அதிர வைக்கிறார்.
இதனை சற்றே விரித்துப் பார்த்தால் குழந்தைகளை நாம் தற்சார்பு (independent) முறையில் வளர்த்தெடுக்கிறோம் என்ற அணுகுமுறையில், தேனிலவிற்கு சென்றே ஆக வேண்டுமென்ற இடத் தேர்வில், நம்முடைய பெற்றோர்களை எப்படி நலம் பேணுவது என்று எடுக்கப்படும் முடிவுகளில் என்று அனைத்திலும் இன்று கார்ப்பரேட் விளம்பரங்கள் நமக்கான தேவைகளை பொதுமைப் படுத்தி அதன் வழியில் நம்மை வழி நடத்தி வருவதை தெரிந்து கொள்ள முடியும்.
எண்ணிப்பார்க்கும் பொழுது அதில் பெரிய உண்மைகள் இருப்பதாகவே படுகிறதெனக்கு. இன்றைய அளவில் பயணங்கள் மேற்கொள்வது என்பது ஊருக்கு சொல்லிக் கொள்ளத்தக்க மெச்சும் செயலாகிப்போனதுதானே. அது போன்ற பயணங்கள் தன்னியல்பில் உந்தப்படாமல், பயண ஏற்பாட்டு மையங்களும், விமான போக்குவரத்துக் கழகங்களும், ஏனைய சுற்றுலாத் துறை மேம்பாட்டு நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பற்றி புனையப்பட்ட கருத்துக்கள் நம்மை அந்த இடத்திற்கு செல்லத் தூண்டுவதில் முதன்மைப் பங்கு வகிக்கிறதுதானே.
மிகுந்த பொருட்செலவில் மேற்கெள்ளப்பட்டும் அது போன்ற பியர்ப்ரஷ்சர் (அடுத்தவர்களுக்கான) பயணங்கள் ஏதாவது நமக்கு படிப்பினைகளை ஆழ் மனதில் விட்டுச் செல்கிறதா என்றால் மிகவும் சொற்பமானவர்களே அதனை பெற்றதாக ஒப்புக்கொள்வோம்.
இப்படியான பொது கற்பனைவாத விதைப்புகளே பொதுவான விசயங்களான மதம் பொருட்டோ, ஒரு கார்ப்பரேட்டின் விற்பனை சார்ந்த மூளை மழுங்கடிக்கும் வியாபார யுக்தி பொருட்டோ கூட ஒற்றிணைந்து நம்மை இயக்கிச் செல்கிறது என்கிறார் ஆசிரியர். இதிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டுமாயின் தனிப்பட்ட முறையில் இவைகளை கேள்வி எழுப்பி அதன் பொருட்டே நம்மை வெளிக் கொண்டு வர முடியும் என்கிறாரவர்.
பெரும்பாண்மையானவர்களால் ஒரு கதை நம்பப்பட்டு அதுவே சிறந்தது என்று எனும் பொழுது வெகு சிலர் தன்னிச்சையாக அதிலிருந்து வெளிக்கிட்டு, மற்றவர்களுக்கு தான் அறிந்ததை உணர்த்தி அதிலிருந்து மீட்டெடுக்க, ஏற்கெனவே நம்பிக்கொண்டிருக்கும் கதையை விட இன்னும் வலிமையான ஒரு கதையை கட்டமைப்பது அவசியமாகிறது (உ.தா: இன்றைய இந்திய அரசியலை எடுத்துக்கொள்ளலாம் - செக்கியுலர் வெர்சஸ் அடிப்படைவாதம்).
பெரிய அளவில் இன்றும் அடையாளப் பேணல் கருதி கண்டங்களை தழுவி நிற்பது மதங்கள். இது பல தரப்பட்ட மனிதர்களையும் ஒரு சில குறிப்பிட்ட சித்தாந்தங்களின் அடிப்படையில் ஒன்றிணைத்து கட்டி இழுத்துக் கொண்டு போக ஒரு கால கட்டத்தில்உருவாக்கப்பட்டது. இதன் தேவை மனித ஓட்டத்தில் அவனுடைய சிந்தனைக்கு ஈடு கொடுக்க முடியாமல் அந்த கதையின் ஆணி வேர் சற்றே நெகிழ்ச்சியுறும் பொழுது, அந்த சித்தாந்தின் மீதான நம்பிக்கை பெருமளவில் மக்களிடத்தில் குறைந்து அது காற்றோடு கரைந்து காணாமல் போய்விடும் வாய்ப்புண்டு.
இந்த கால கட்டத்தில் நமக்கு இன்னொரு புனைவு தேவை. அது இந்த ஒட்டுமொத்த மனித குலத்தையும் அடுத்தக்கட்ட பரிணாம நவீனப்படுதலுக்கு தயார் படுத்துவதாக அமைய வேண்டும். எந்த கதை சொல்லி எதிலிருந்து ஆரம்பிப்பார்?

Tuesday, April 23, 2019

பொன்பரப்பி கலவரமும் சேப்பியன்ஸ் நூலும்: Sapiens - 5

நெறிமுறையற்ற விளையாட்டுத் தளமே வரலாறு: Sapiens - 5
ஹோமோ சேப்பியன்ஸ் நூல் எனக்கு என்னவோ மலிவு விலையில் பதிப்பிக்கப்பட்டு பள்ளி மேற்படிப்பு படித்த அனைவரும் கட்டாயமாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகமாகப்படுகிறது.
இப்பொழுது நான் அந்த புத்தகத்தின் எட்டாவது அத்தியாயம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாகரீகங்களுக்குள்ளும் எப்படி சமூக அடுக்கதிகார முறை கட்டமைக்கப்படுகிறது, அது எதன் பொருட்டு வளர்த்தெடுக்கப்படுகிறது, அதன் பயன்பாடு என்ன என்று தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.
அந்த பக்கங்கங்களை வாசிக்கும் பொழுது எதற்காக இந்த சமூகம் இப்படி ஏற்றத் தாழ்வுகளுடன் இயங்குகிறது என்ற எளிய கேள்விக்கு பதிலுரைக்கிறது. முதல் கட்ட அறிதலின் பொருட்டு வாசிப்பை நாடுபவர்களுக்கு இது ஒரு முக்கியமான அத்தியாயம்.
வரலாறு தோறும் இந்த ஏற்றத் தாழ்வுகளை ஓரளவிற்கேனும் சமப்படுத்த பல அவதார புருஷர்கள் வர வேண்டியத் தேவைதான் என்ன, எதன் பொருட்டு அவர்கள் தொடர்ந்து பேசி, சண்டை செய்ய வேண்டியுள்ளது என்பது அனைத்தும் நமக்கு விளங்கிவிடும் இந்தப் பக்கங்களை நாம் கடந்துவிடுவதற்குள்.
சமூக அடுக்கு "ஆண்டான் அடிமை" என்ற எளிய கட்டமைப்பில் அதற்குள் பல அடுக்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பயன் உயர் அடுக்கில் இருப்பவர்கள் கீழ் அடுக்கில் உள்ளவர்களை சுரண்டி கொழுத்து வாழ்வதற்கென உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை நிறுவி அதன் பயன்பாட்டினை அறுவடை செய்ய பல கட்டுக்கதைகள் தேவைப்படுகிறது. அதனயொட்டிய புனைக் கதைகள் மனிதர்களின் ஆழ் மனதில் நம்பிக்கை நச்சுக்களாக விதைக்கப்பட்டோ (வர்ணாஷ்ரம), சட்டங்களாக இயற்றியோ (வெள்ளையர்களும், கருப்பினத்தவர்களும் சமமல்ல, ஏழை, பணக்காரர்களின் வாழ்வமைவு ஆசீர்வதிக்கப்பட்டது) காலப்போக்கில் ஏற்றுக் கொண்டு வாழும் ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.
இந்த கட்டமைப்பை விளக்க முற்படும் போது இந்த நூல் மிக தாராளமாக இந்து மதத்தின் பால் பிறந்த சாதிய சமூக அடுக்கு யாரால், எதற்கு உருவாக்கிக் கொள்ளப்பட்டது, அது எவருக்கு பயனளிக்கும் விதத்தில் இன்றும் இயக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை சமகால இந்திய அரசியலமைப்பைக் கொண்டு மிகத் தெளிவாக விளக்க எடுத்து கையாண்டுள்ளார் இந்த நூலின் ஆசிரியர்.
இந்த புத்தகம் உலகம் முழுதிலும் மில்லியன் கணக்கில் விற்பனையாகி இருக்கிறது. இந்த அத்தியாயத்தில் சமூக அடுக்கு உருவாக்கத்திற்கு பின்னான அயோக்கியத்தனங்களை, சூழ்ச்சிகளை அப்பட்டமாக அடிக்கோடிட்டு இந்த உலகத்திற்கே புரிய வைக்க இந்துக்களின் சாதியக் கட்டமைப்பை பயன் படுத்திக் கொண்டுள்ளார்.
தீட்டு, தீண்டாமை, தூய்மை, மோலோன், கீழோன் அனைத்தும் ஒருவனை தரம் பிரித்து எவனை எந்தளவிற்கு வளர்ந்து வர இடம் கொடுக்க வேண்டும் என்று அறிந்து கொள்வதற்கும், ஒவ்வொரு முறையும் பின்புலத்தை தோண்டித் துருவி அறிந்து கொள்வதற்கு பதிலாக கூட்டு அடுக்குகளைக் கொண்டு பிரித்து வைத்து விட்டால் பொதுப் புத்தியில் அதற்குண்டான புத்திகளை இவன் உள்ளடக்கியவன் என்ற கற்பிதங்களையும் நம்ப வைத்து அவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயங்க வைக்க முடியும் என்பதே இதன் ஏற்பாடு.
இப்பொழுது உதாரணமாக ஒன்று பார்ப்போம். வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான். நல்ல திறமையானவன் ஏதோ ஒன்று அவனுடைய இரத்தத்திலோ அல்லது மரபணுவிலோ இருக்கிறது அதனால் தான் கருப்பர்களை விட அதி புத்திசாலிகளாக, பல அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டறியும் அறிஞர்களாக இருக்கிறார்கள் என்ற வாதம்.
இரண்டு, நம்ம ஊரில் ஒரு குறிப்பிட்ட சாதி இனங்களில் பிறந்த குழந்தைகள் இசையிலும், நாட்டியத்திலும் மிக்க திறமை உள்ளவர்களாக இருக்கக் காரணம் இறைவனால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு அந்த குலத்தில் பிறப்பதால் தான் என்றொரு வாதம்.
ஆனால், இந்த இரண்டு கதைகளுக்குப் பின்னாலும் மாபெரும் உழைப்புச் சுரண்டலும், சூழ்ச்சியும் புதைந்து கிடக்கிறது என்கிறார் இந்த நூலாசிரியர். பிறக்கும் போது எல்லா குழந்தைகளும் ஏதோ ஒரு வகையில் மெருகேற்ற மெருகேற்ற அவைகளை நம்மால் வார்த்தெடுத்துக் கொள்ளும் திறமைகளை உள்ளடக்கியே பிறக்கிறது, ஆனால் அதற்குரிய வசதி, வாய்ப்பு அதற்குண்டான நேரத்தை எப்படி வழங்குவது?
இங்குதான் அந்த சமூக அடுக்கமைவு ஒரு சாரருக்கு எளிய வழியையும், அங்கீகரிப்பையும் கொடுத்து மெருகேற்றிக் கொள்ள, மேல் நிலைக்கு செல்லும் படியாக கட்டமைக்கப்பட்டு பயனளிக்கிறது. பயனளிக்காமல் போகக் கூடிய அந்த போர்வை சாதி'யம் கொண்டு மற்றவர்களிடத்தே கண்டறியப் படுகிறது.
இந்த சாதிய கட்டமைப்பு உடையாமல் கட்டிக் காக்கப்படுவதின் சூட்சுமம் இதுதான். இப்போ சாதி மறுப்பு மணங்கள் பெருகும் போது இந்த அடித்தளம் சுக்கு நூறாக தகர்ந்து விடுமல்லவா? தகர்ந்து விடாமல் பார்த்துக் கொள்வதில் தான் ஏனைய சமூக அநீதிகள் அடங்கி இருக்கிறது.
இப்போ புரிகிறதா இந்த நவீன தீண்டாமை உலகில் நீட், கேட் என்ற வடிகட்டல்கள் எதற்கு என்று? அவதாரப் புருஷர்கள் இத்தனை வரலாற்று ரீதியாக சக்தி படைத்த ஒரு சூழ்ச்சிக் கூட்டத்தை வெற்றியடைய வேண்டுமாயின் எத்தனை பெரிய பரந்து பட்ட பொது நோக்கும், கட்டற்ற பரிவும், விசாலமான பார்வையும் கொண்டிருக்க வேண்டும்.
நமக்கு அந்த முழுப் பயன்பாடும் வந்து கிட்டுவதற்கு முன்னதாகவே பல கட்டுக்கதைகளின் மூலமாக அவர்களுடைய பங்களிப்பு முடக்கப்படுகிறது. அந்த அரசியலை நாம் புரிந்து கொள்ள ஆரம்பிக்கும் பொழுது போராட்டம் மீண்டும் ஒன்றாவது படிக்கி சறுக்கி வந்து நின்றிருக்கும்.
வரலாற்று புத்தகங்களை எந்த கரையிலிருந்து நின்று கொண்டு மீள் வாசிப்பு செய்கிறோமென்பதும், இது போன்ற மானுடவியல் சார்ந்த புத்தகங்களை வயதோடு வாசித்து அவரவர்கள் நிலையில் தெளிவடைதும் முக்கியமாகிறது.
ஏனெனில் வரலாற்றில் எப்படி விளையாண்டோம் என்பது ஒரு பொருட்டே அல்ல! பிழைத்து அடுத்த கட்டத்திற்கு நமது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்வுச் சூழலைக் கொடுத்துச் செல்கிறோமா என்பதே படிமலர்ச்சியில் நம்மை படியெடுக்க இந்த இயற்கை வைத்திருக்கும் ஒரே ரூல்ஸ்!

Saturday, April 13, 2019

புத்திசாலி – டைனோசாரா, மனிதனா?: ஒரு படிமலர்ச்சிப் பார்வை

படிமலர்ச்சியில இந்த பூமியோட 4.5 பில்லியன் ஆண்டு கால‌ இருப்பிற்கும்,  நம்மோட ஒன்றரை லட்ச ஆண்டுகளோட இருப்பை ஒப்பிட்டா நம்மோட இருப்பு ஒன்றுமே இல்லை இந்த கால ஓட்டத்தில் என்று புரிந்து கொள்ளலாம்.

இரண்டு பில்லியன் ஆண்டுகள் வரைக்குமே அது வரையிலும் இந்த பூமி வாயுக்களாலும், நெருப்பாலும், பொங்கி வழியும் எரிமலைகளின் தீ குழம்புகளாலும் பக்குவப்படுத்தப்படாமல் இருந்தே வந்துள்ளது. இடையில் முதல் உயிரினமான பாக்டீரியாக்கள் எட்டிப்பார்த்து 1.5 பில்லியன் ஆண்டுகள் வரை அடுத்தக் கட்ட உயிரினங்கள் வர வழி கோணி வாழ்ந்து வந்திருக்கிறது.

இருப்பினும் 540 மில்லியன் ஆண்டு வாக்கில்தான் உயிரின பன்முகத் தன்மை விரிவடைந்து எலும்புகளை கட்டமைப்பாக கொண்ட முதுகெலும்புடைய‌ உயிரினங்களும் கடல் சார்ந்த சுற்றுப்புறச் சூழலில் பல்கிப் பெருகி இருக்கிறது (நம்முடைய மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள பாறைகள் இந்த‌ ப்ரிகாம்ப்ரியன் கால கட்டத்தில் உருவானவைகளே). பிரிதொரு நாள் அந்த உயிரினங்கள் நீரிலிருந்து வெளியேறும் தகவமைகளைப் பெற்று சுமாராக 390 மில்லியன் ஆண்டுவாக்கில் தரை ஏறுகிறது. இவைகளே மனிதனாகிய நாம் தோன்றுவது வரைக்குமான முன்னோடி; அவைகளுக்கு உதாரணமாக தவளைகள், சாலமண்டர்கள், முதலைகள், பாம்புகள் மற்றும் டைனோசார்கள் வந்து வாழ்ந்திருக்கின்றன.

இந்த உயிரினங்கள் தோன்றிய வரைக்குமே பூமி பல மாற்றங்களை மிகவும் கொடூரமான முறைகளில் எதிர் கொண்டே நகர்ந்து வந்திருக்கிறது எனலாம். நாம் நின்று கொண்டிருக்கும் பூமி மேலோட்டிலிருந்து  100 மைல் தொலைவு கீழே சென்றால் மேன்டில் பகுதியை சென்றடையலாம். அந்த மேன்டில் பாறைக் குழம்பாக இருக்கிறது. அது ஓர் ஆற்றின் இயல்புடன் ஓடிக் கொண்டிருப்பதின் விளைவாகவே இங்கு கண்டங்களும் உருவாகி, அதில் மலைகளும், கடலும், நிலப்பரப்பும் கொண்ட ஒரு வனப்பான வாழத் தகுதியான இடமாக இந்த பூமி நமக்கு இடம் கொடுத்து அழகு பார்த்து வருகிறது.

அப்படியான பாறை குழம்பு சுமார் 252 மில்லியன் ஆண்டு வாக்கில் சைபீரியப் பகுதியில் உடைத்துக் கொண்டு மேலே எழும்பி எரிமலைகளின் வழியாக வெடித்து ஆறாக பல நூறு ஆண்டுகள் ஓடி பல கண்டங்களை நிரப்புகிறது. அது போன்றதொரு நிகழ்வுகள் நடை பெறும் கனம் தோறும் சுற்றுப்புறச் சூழலில் பல விதமான மாற்றங்களை உடனடியாகவும், பின் வரும் காலங்களுக்கும் நிரந்தமாக மாற்றி அமைக்கிறது. தவிர்க்க முடியாத பூமிய படிமலர்ச்சியின் இது போன்ற பெரும் நிகழ்வுகள் நடைபெறும் போது 80 சதவிகித உயிரினங்கள் மாண்டழிவது தவிர்க்க முடியாததாகி விடுகிறதாம்.

அந்த பேரழிவிற்கு பிறகு மீண்டும் மெதுவாக பூமியில் உயிரினங்கள் வாழத் தகுந்த ஒரு சூழல் உருவாகி அது மள மளவென முன்னெப்பொழுதும் இல்லாத வேகத்தில் புது விதமான பல்லுயிர்கள் பெருகக் காரணமாக இருந்தது. சுமாருக்கு 240-230 மில்லியன் ஆண்டுகளின் போது டைனோசார்கள் எட்டிப்பார்க்கிறது. பின்பு அது ஆயிரக்கணக்கான‌ இனங்களாக பல்கிப் பெருகி உலகின் அனைத்து பகுதிகளிலும் அதி சிறந்த தகவமைவுகளுடன் கோலோச்சுகிறது.

மீண்டும் ஒரு பேரழிவு. இந்த முறை அவைகள் சார்ந்து வாழும் சூழல்களான தட்பவெப்பம், உண்ணும் உணவின் போதாமை அல்லது விண்வெளிக் கல் ஒன்று பூமி மீது விழுந்தது என்ற கலவையான காரணிகளால், டைனோசார்களின் இருப்பு ஒரு முடிவிற்கு 65 மில்லியன் ஆண்டுகளின் போது வந்தது.

அந்த முடிவின் ஒரு தொடக்கமாக டைனோசார்கள் விட்டுச் சென்றது படிமலர்ச்சியின் அடுத்த நகர்வான பறவையையொத்த டைனோசார் இனமொன்று. ஆனால், அந்த படிமலர்ச்சியில் பூமி வெகு உக்கிரமாக இடம் கொடுத்து பார்த்தது, மாமிச உண்ணிகளான டி ரெக்ஸ் மற்றும் வெலாசிராப்டர் (ஜீராசிக் பார்க் படங்களில் நாம் அதிகமாக காணும் இனங்கள்). இவைகளே பறவைகளின் முன்னோடியான ஆர்க்யோப்ட்ரெக்ஸின் மூதாதை.

இந்த கால கட்டத்தில நாம எங்கய்யா இருந்தோம்னு கேட்டிங்கன்னா, பூமிக்கடியில குழி பறித்து வாழும் ஒரு சுண்டெலி அளவிற்கே பாலுட்டிகளாக இருந்திக்கக் கூடும். டைனோசார்களின் பேரழிவிற்குப் பிறகான கொழிப்பில் பூமி மீண்டும் தன் இருப்பை சமப்படுத்தி பல்லுயிர் பெருக்கத்தை முடுக்கி விட்டிருக்கிறது.

அந்த தவழ்தலில் இருந்து இப்பொழுது நம்முடைய இருப்பு ஒரு மனித இனமாக வந்தடைய வெறும் ஒரு லட்சம் ஆண்டுகளே! கடந்த 500 மில்லியன் ஆண்டுகளில் இது வரையிலும் ஐந்து பேரழிவு நடந்தேறி இருக்கிறதாம். அதில் ஒவ்வொரு முறையும் குறைந்த பட்சம் 90 சதவீத பேரழிவு ஏற்பட்டே மீண்டும் உயிரினங்கள் தழைத்திருக்கிறது.
இந்த நிலையில் அழிந்து போன டைனோசார்கள் நம்மை விட அதி பலசாலிகளாகவும், உணவு சேகரிக்கும் முறையில் புத்திசாலிகளாகவும் 275 மில்லியன் ஆண்டுகள் இந்த பூமியில நடந்து திரிஞ்சிருக்கு. ஆனா, நாம இந்த அளவுகோள்ல எங்க இருக்கோம்; வெறும் ஒரு லட்சம் ஆண்டுகள் இருப்புதான். ஆனா, அதுக்குள்ளும் எத்தனை பெரிய நாகரீகங்கள் எழுந்து வீழ்ந்திருக்கிறது? உதாரணமாக மத்திய கிழக்காசியாவில் மீசோபொடோமியா, தென்னமெரிக்க மாயன், தெற்காசியாவின் க்மோர், ரோமன் எம்பயர், க்ரீன்லாந்த் வைக்கிங் வாசிகள் போன்ற நாகரீங்கங்களுக்கெல்லாம் என்னாகின?

இவைகள் அனைத்தும் வெறும் 4000ம் ஆண்டுகளுக்குள் தான் நடந்தேறி இருக்கிறது. நன்றாக செழித்து வாழ்ந்து வளர்ந்து பின்பொரு நாள் பூமிய மாற்றங்களால் வியாதியும், இட நெருக்கடியும், நாம் மேற்கொண்ட இயற்கைசார் வளங்களின் மீது அளப்பெரிய அழுத்தமும் ஒன்று கூடி உணவு உற்பத்தி குறைந்து அடித்துக் கொண்டு மாண்டழிந்தது போக ஏனையவர்கள், நல்லதொரு வாழ்விடம் தேடி இடம் பெயர்ந்திருப்பார்கள்.

இப்பொழுது அப்படியே காமெராவை நாம் வாழும் காலக் கட்டத்திற்கு நகர்த்துங்கள். என்ன பார்க்கிறோம். கிட்டத்தட்ட நாம் கடந்த கால வரலாற்றை செயற்கையாக மிக விரைவாக தருவித்துக் கொண்டிருப்பதாகப் படவில்லை. 2030களுக்குள் நமது பூமியின் வெப்ப நிலை ஒரு டிகிரி சென்டிக்ரேட் அதிகரிக்கப் போவதாக தெரிகிறது. அது எது போன்ற விளைவுகளை உயிரினங்களின் மீதும் நம் மீதும் செலுத்தப் போகிறது என்று தெரியாது. அதற்கான தயாரிப்புகளாக மழையளவு குறைந்து வருவது, விரைவு பாலைவனமாகும் நிலை, குடிநீர் பற்றாக் குறை, காற்று மாசு, போதாக் குறைக்கு நாம் எடுக்கும் தவறான அரசியல் முடிவுகள் இந்தக் காரணிகளை ஊக்குவிக்க‌ பெரும் பங்காற்றி வருகிறதுதானே!

எனக்கு எழும்புவது ஒரே ஒரு கேள்விதான் டைனோசார்கள் வாழ்ந்ததின் ஒரு 10 சதவீத இருப்பு ஆண்டுகளாவது நாம் இந்த பூமியில் வாழ்ந்து பார்த்துவிடுவோமா? அப்படி இல்லையெனில் நாம் இந்த பூமியிலேயே தோன்றிய உயிரினங்களில் அதி புத்திசாலியும் அதே நேரத்தில் முட்டாள் உயிரினமும் நாமாகத்தான் இருப்போம்.

P.S: இந்த கட்டுரையை வாசகசாலை இணைய தளத்தில் பிரசுரித்த க. விக்னேஷ்வரன் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி.*படிமலர்ச்சி = பரிணாமம்

Tuesday, April 09, 2019

ரஜினிக்கு ஒரு கடிதம்: நதிநீர் இணைப்பு

பாஜக ஆட்சிக்கு வந்தால் உடனே நதிகளை இணைக்க வேண்டும் - ரஜினி காந்த்.

அளவிற்கு மீறிய புகழ், பணம், அதிகாரம் இது எல்லாமே ஒரு நிலையில் காலம் ஒருவருக்கு வைத்த செக்மேட் அல்லது சாபம் எனக் கொள்ளலாம்.

இவைகள் அனைத்தும் கிடைத்தும் ஒருவருக்கு தன்னுடைய லிமிட், டிலிமிட் அறிந்து கொள்ளத் தேவையான தனக்கென நேரம் செலவழிப்பு, நல்ல புத்தகங்கள் வாசிக்கத் தேவையான மன நிலை, தன்னுடைய நிலைக்கென தன்னிடம் பழகும் மனிதர்களைத் தாண்டிய நட்பு பேணும் மனநிலை அமைவது என்பது சிம்ம சொப்பனமே!

உண்மையான "டவுன் டு எர்த் பர்சன்" என்பது அதுவாகத்தான் இருக்க முடியும். எளிமை, பணிவு, பக்குவம் என்பதும் அந்த உலகத்தின் கூரையில் தான் இருக்கிறோம் என்றாலும், இடம், பொருள் தன்னுடைய அறிவிற்கு இதைச் சொல்வது பொருத்தமானதா என்று அறிந்து பேசுவதில் இருக்கிறது.

இந்த நதிநீர் இணைப்பை பற்றி இந்த சூப்பர் ஸ்டார் தொடர்ந்து தன்னுடைய மட்டித் தனமான வாதத்தை வைக்கிறாரே, இவர் இந்த பூமியுனுடைய இரண்டு பில்லியன் ஆண்டுகளின் படிமலர்ச்சிப் பற்றி ஏதாவது வாசித்திருப்பாரா?

கடந்த 600 மில்லியன் ஆண்டுகளுக்குள் எது போன்ற கரடு முரடான வளர்ச்சிகளை இந்த பூமி முகம் கொடுத்து வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் செலுத்தி இருப்பாரா? ஏன் அவ்வளவு தூரம் போகிறோம் பெர்மியன், ட்ரையாசிக், ஜுராசிக், க்ரேட்டேசியஸ் என்ற பூகோள கால க்ரமத்தில் என்னவெல்லாம் இந்த பூமி மேலோடு மாற்றங்களை சந்தித்திருக்கிறது என்று அவருக்கு யாராது சொல்லி இருப்பார்களா?

300 மில்லியன் ஆண்டுகள் வரைக்குமே கண்டங்களே இல்லாமல் ஒன்றாக பாஞ்சியா (Pangea) என்ற முழுப் தரைப்பகுதியாகத்தான் இந்த பூமி இருந்திருக்கிறது. ஒரே கடல்தான்.

டைனோசார்கள் கோலுச்சிக் கொண்டிருந்த காலத்தில்தான் நிலப்பரப்பு பிய்த்துக் கொண்டு தனித்தனியாக கண்டங்களாக நகர்ந்திருக்கிறது. அப்பொழுது ஏற்கெனவே ஓடிக் கொண்டிருந்த நதிகள், ஆறுகளுக்கெல்லாம் என்ன வாகி இருக்கும்?

இருந்த பெரிய ஆறுகள் காணாமல் போயிருக்கும் அத்துடன் அதனையொட்டி வாழ்ந்த உயிரினங்கள் மெல்ல மெல்ல அழிந்துப் பட்டிருக்கும். பூமியின் மோலோடு மாற்றி அமைக்கப்பட்டதால் புதிய ஆறுகள் அதனதன் வழியை கண்டுபிடித்து உருவாகி இருக்கும். அதனையொட்டிய நிலப்பரப்பில் அதனையொட்டிய சுற்றுச்சுழலுக்கு தகுந்த தகவமைவுகளுடன் உயிரினங்கள் உருவாகி படிமலர்ச்சி அடைந்து கொண்டிருக்கும்.

இவை எதுவுமே ஒரே இரவில் அடைந்த மாற்றங்கள் கிடையாது.
கோடிக்கனக்கான ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. இந்த பின்னணியில் வைத்து நம்மை பார்த்தால், நாம் யார் இந்த பூகோளத்தின் வரைபடத்தை திருத்தி எழுதிக் கொள்ள? அப்படி நதிகளின் வழியை திருத்தி அமைக்கும் பொழுது எது போன்ற நீண்ட கால மாற்றங்களை இந்த சுற்றுப் புறச் சூழல் முகம் கொள்ளும் என்று சிந்தித்தது உண்டா, மிஸ்டர். சூப்பர் ஸ்டார்?

அன்று தழைத்து, கொழித்து வாழ்ந்து வந்த டைனோசார்கள் இன்று எங்கே? எதனால் அவைகள் அழிந்து பட்டிருக்கக் கூடும்? நீரும், உணவும் தானே அடிப்படை ஆதாரம் அனைத்து உயிரினத்திற்கும் ஆறுகள் தன்னியல்பில் தனது பாதை கண்டு கடலில் கலப்பது தானே காலச் சக்கரம் அதற்கு வழங்கிய இயல்பு. இதில் உங்க ஒரு கோடி ரூபாய் கொண்டு வேண்டுமானால் இருக்கும் குளம், குட்டை, ஆறுகளை தூர் வார கொடை அளியுங்கள்.

போகாத ஊருக்கு வழி காட்டாதிங்க. செலவு மிச்சம்னு.

யாரோ சொல்கிறார்கள் என்பதால் லாஜிக் இல்லாத தன்னுடைய அறிவிற்கு எட்டாத விசயத்தை எல்லாம் உளரி வைக்கக் கூடாது. தானே தேடிப் படித்து, சிந்தித்து பெரும் பெரும் பிரச்சினைகள் பொருத்து வாயை விட வேண்டும்.

உங்களுக்கு ஒரு புத்தகம் சிபாரிசு செய்கிறேன். ஆராய்ச்சிக்கான புத்தகமே ஆனாலும் ஒரு சினிமாவிற்கு உண்டான பிரமாண்டம் இருக்கிறது. உங்களது வாழ் நாளுக்குள் வாசியுங்கள். பிறகு நதிநீர் இணைப்பு பற்றி பேச கொஞ்சம் யோசிப்பீர்கள்.

The Rise and Fall of the Dinosaurs: A New History of a Lost World by Stephen L. Brusatte

Related Posts with Thumbnails