படிமலர்ச்சியில இந்த பூமியோட 4.5 பில்லியன் ஆண்டு கால இருப்பிற்கும், நம்மோட ஒன்றரை லட்ச ஆண்டுகளோட இருப்பை ஒப்பிட்டா நம்மோட இருப்பு ஒன்றுமே இல்லை இந்த கால ஓட்டத்தில் என்று புரிந்து கொள்ளலாம்.
இரண்டு பில்லியன் ஆண்டுகள் வரைக்குமே அது வரையிலும் இந்த பூமி வாயுக்களாலும், நெருப்பாலும், பொங்கி வழியும் எரிமலைகளின் தீ குழம்புகளாலும் பக்குவப்படுத்தப்படாமல் இருந்தே வந்துள்ளது. இடையில் முதல் உயிரினமான பாக்டீரியாக்கள் எட்டிப்பார்த்து 1.5 பில்லியன் ஆண்டுகள் வரை அடுத்தக் கட்ட உயிரினங்கள் வர வழி கோணி வாழ்ந்து வந்திருக்கிறது.
இருப்பினும் 540 மில்லியன் ஆண்டு வாக்கில்தான் உயிரின பன்முகத் தன்மை விரிவடைந்து எலும்புகளை கட்டமைப்பாக கொண்ட முதுகெலும்புடைய உயிரினங்களும் கடல் சார்ந்த சுற்றுப்புறச் சூழலில் பல்கிப் பெருகி இருக்கிறது (நம்முடைய மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள பாறைகள் இந்த ப்ரிகாம்ப்ரியன் கால கட்டத்தில் உருவானவைகளே). பிரிதொரு நாள் அந்த உயிரினங்கள் நீரிலிருந்து வெளியேறும் தகவமைகளைப் பெற்று சுமாராக 390 மில்லியன் ஆண்டுவாக்கில் தரை ஏறுகிறது. இவைகளே மனிதனாகிய நாம் தோன்றுவது வரைக்குமான முன்னோடி; அவைகளுக்கு உதாரணமாக தவளைகள், சாலமண்டர்கள், முதலைகள், பாம்புகள் மற்றும் டைனோசார்கள் வந்து வாழ்ந்திருக்கின்றன.
இந்த உயிரினங்கள் தோன்றிய வரைக்குமே பூமி பல மாற்றங்களை மிகவும் கொடூரமான முறைகளில் எதிர் கொண்டே நகர்ந்து வந்திருக்கிறது எனலாம். நாம் நின்று கொண்டிருக்கும் பூமி மேலோட்டிலிருந்து 100 மைல் தொலைவு கீழே சென்றால் மேன்டில் பகுதியை சென்றடையலாம். அந்த மேன்டில் பாறைக் குழம்பாக இருக்கிறது. அது ஓர் ஆற்றின் இயல்புடன் ஓடிக் கொண்டிருப்பதின் விளைவாகவே இங்கு கண்டங்களும் உருவாகி, அதில் மலைகளும், கடலும், நிலப்பரப்பும் கொண்ட ஒரு வனப்பான வாழத் தகுதியான இடமாக இந்த பூமி நமக்கு இடம் கொடுத்து அழகு பார்த்து வருகிறது.
அப்படியான பாறை குழம்பு சுமார் 252 மில்லியன் ஆண்டு வாக்கில் சைபீரியப் பகுதியில் உடைத்துக் கொண்டு மேலே எழும்பி எரிமலைகளின் வழியாக வெடித்து ஆறாக பல நூறு ஆண்டுகள் ஓடி பல கண்டங்களை நிரப்புகிறது. அது போன்றதொரு நிகழ்வுகள் நடை பெறும் கனம் தோறும் சுற்றுப்புறச் சூழலில் பல விதமான மாற்றங்களை உடனடியாகவும், பின் வரும் காலங்களுக்கும் நிரந்தமாக மாற்றி அமைக்கிறது. தவிர்க்க முடியாத பூமிய படிமலர்ச்சியின் இது போன்ற பெரும் நிகழ்வுகள் நடைபெறும் போது 80 சதவிகித உயிரினங்கள் மாண்டழிவது தவிர்க்க முடியாததாகி விடுகிறதாம்.
அந்த பேரழிவிற்கு பிறகு மீண்டும் மெதுவாக பூமியில் உயிரினங்கள் வாழத் தகுந்த ஒரு சூழல் உருவாகி அது மள மளவென முன்னெப்பொழுதும் இல்லாத வேகத்தில் புது விதமான பல்லுயிர்கள் பெருகக் காரணமாக இருந்தது. சுமாருக்கு 240-230 மில்லியன் ஆண்டுகளின் போது டைனோசார்கள் எட்டிப்பார்க்கிறது. பின்பு அது ஆயிரக்கணக்கான இனங்களாக பல்கிப் பெருகி உலகின் அனைத்து பகுதிகளிலும் அதி சிறந்த தகவமைவுகளுடன் கோலோச்சுகிறது.
மீண்டும் ஒரு பேரழிவு. இந்த முறை அவைகள் சார்ந்து வாழும் சூழல்களான தட்பவெப்பம், உண்ணும் உணவின் போதாமை அல்லது விண்வெளிக் கல் ஒன்று பூமி மீது விழுந்தது என்ற கலவையான காரணிகளால், டைனோசார்களின் இருப்பு ஒரு முடிவிற்கு 65 மில்லியன் ஆண்டுகளின் போது வந்தது.
அந்த முடிவின் ஒரு தொடக்கமாக டைனோசார்கள் விட்டுச் சென்றது படிமலர்ச்சியின் அடுத்த நகர்வான பறவையையொத்த டைனோசார் இனமொன்று. ஆனால், அந்த படிமலர்ச்சியில் பூமி வெகு உக்கிரமாக இடம் கொடுத்து பார்த்தது, மாமிச உண்ணிகளான டி ரெக்ஸ் மற்றும் வெலாசிராப்டர் (ஜீராசிக் பார்க் படங்களில் நாம் அதிகமாக காணும் இனங்கள்). இவைகளே பறவைகளின் முன்னோடியான ஆர்க்யோப்ட்ரெக்ஸின் மூதாதை.
இந்த கால கட்டத்தில நாம எங்கய்யா இருந்தோம்னு கேட்டிங்கன்னா, பூமிக்கடியில குழி பறித்து வாழும் ஒரு சுண்டெலி அளவிற்கே பாலுட்டிகளாக இருந்திக்கக் கூடும். டைனோசார்களின் பேரழிவிற்குப் பிறகான கொழிப்பில் பூமி மீண்டும் தன் இருப்பை சமப்படுத்தி பல்லுயிர் பெருக்கத்தை முடுக்கி விட்டிருக்கிறது.
அந்த தவழ்தலில் இருந்து இப்பொழுது நம்முடைய இருப்பு ஒரு மனித இனமாக வந்தடைய வெறும் ஒரு லட்சம் ஆண்டுகளே! கடந்த 500 மில்லியன் ஆண்டுகளில் இது வரையிலும் ஐந்து பேரழிவு நடந்தேறி இருக்கிறதாம். அதில் ஒவ்வொரு முறையும் குறைந்த பட்சம் 90 சதவீத பேரழிவு ஏற்பட்டே மீண்டும் உயிரினங்கள் தழைத்திருக்கிறது.
இந்த நிலையில் அழிந்து போன டைனோசார்கள் நம்மை விட அதி பலசாலிகளாகவும், உணவு சேகரிக்கும் முறையில் புத்திசாலிகளாகவும் 275 மில்லியன் ஆண்டுகள் இந்த பூமியில நடந்து திரிஞ்சிருக்கு. ஆனா, நாம இந்த அளவுகோள்ல எங்க இருக்கோம்; வெறும் ஒரு லட்சம் ஆண்டுகள் இருப்புதான். ஆனா, அதுக்குள்ளும் எத்தனை பெரிய நாகரீகங்கள் எழுந்து வீழ்ந்திருக்கிறது? உதாரணமாக மத்திய கிழக்காசியாவில் மீசோபொடோமியா, தென்னமெரிக்க மாயன், தெற்காசியாவின் க்மோர், ரோமன் எம்பயர், க்ரீன்லாந்த் வைக்கிங் வாசிகள் போன்ற நாகரீங்கங்களுக்கெல்லாம் என்னாகின?
இவைகள் அனைத்தும் வெறும் 4000ம் ஆண்டுகளுக்குள் தான் நடந்தேறி இருக்கிறது. நன்றாக செழித்து வாழ்ந்து வளர்ந்து பின்பொரு நாள் பூமிய மாற்றங்களால் வியாதியும், இட நெருக்கடியும், நாம் மேற்கொண்ட இயற்கைசார் வளங்களின் மீது அளப்பெரிய அழுத்தமும் ஒன்று கூடி உணவு உற்பத்தி குறைந்து அடித்துக் கொண்டு மாண்டழிந்தது போக ஏனையவர்கள், நல்லதொரு வாழ்விடம் தேடி இடம் பெயர்ந்திருப்பார்கள்.
இப்பொழுது அப்படியே காமெராவை நாம் வாழும் காலக் கட்டத்திற்கு நகர்த்துங்கள். என்ன பார்க்கிறோம். கிட்டத்தட்ட நாம் கடந்த கால வரலாற்றை செயற்கையாக மிக விரைவாக தருவித்துக் கொண்டிருப்பதாகப் படவில்லை. 2030களுக்குள் நமது பூமியின் வெப்ப நிலை ஒரு டிகிரி சென்டிக்ரேட் அதிகரிக்கப் போவதாக தெரிகிறது. அது எது போன்ற விளைவுகளை உயிரினங்களின் மீதும் நம் மீதும் செலுத்தப் போகிறது என்று தெரியாது. அதற்கான தயாரிப்புகளாக மழையளவு குறைந்து வருவது, விரைவு பாலைவனமாகும் நிலை, குடிநீர் பற்றாக் குறை, காற்று மாசு, போதாக் குறைக்கு நாம் எடுக்கும் தவறான அரசியல் முடிவுகள் இந்தக் காரணிகளை ஊக்குவிக்க பெரும் பங்காற்றி வருகிறதுதானே!
எனக்கு எழும்புவது ஒரே ஒரு கேள்விதான் டைனோசார்கள் வாழ்ந்ததின் ஒரு 10 சதவீத இருப்பு ஆண்டுகளாவது நாம் இந்த பூமியில் வாழ்ந்து பார்த்துவிடுவோமா? அப்படி இல்லையெனில் நாம் இந்த பூமியிலேயே தோன்றிய உயிரினங்களில் அதி புத்திசாலியும் அதே நேரத்தில் முட்டாள் உயிரினமும் நாமாகத்தான் இருப்போம்.
P.S: இந்த கட்டுரையை வாசகசாலை இணைய தளத்தில் பிரசுரித்த க. விக்னேஷ்வரன் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி.
*படிமலர்ச்சி = பரிணாமம்
0 comments:
Post a Comment