Sunday, October 28, 2012

விழித்துக்கொள்ளும் நேரம்:பொது சந்தை...


வலைப்பதிவர்களின் கூட்டமைப்பு பல புயல்களையும், ஆழிப்பேரலைகளையும் களம் கண்டு மேலெழும்பி வரும் ஒரு சமூகம். இப்பொழுதும் அது போன்றதொரு ஒரு முக்கியமான சுழற்சியில் இந்த அமைப்பு நின்று கொண்டிருக்கிறது. இது ஒரு பரந்த வெளி அண்டத்தில் மிதந்து வரும் பால்வீதிகளைப் போன்றே விட்டு விலகியியும், மறுமுனையில் ஒன்றித்து சுருங்கும் மாபெரும் இயக்கம்.

எழுதப்படிக்க தெரிந்தவர்களும், ஆக்க உந்து சக்தியினை உள்ளடக்கியவர்களும் காலம் தோறும் இணைந்து கொள்ளும் ஒரு மாநதி. ஆனால், அது போன்று புதிது புதிதாக இணைந்து கொள்பவர்களுக்கு சில அடிப்படையான புரிதல்கள், இந்த வெளி எப்படியாக இயங்குகிறது, எங்கு சென்று தனது கருத்துக்களை பரிமாறிக்கொள்வது, பரிமாறிக்கொண்டதிற்கு பிறகான எதிர்வினை எப்படியாக அமைய வேண்டும் என்பதனை அந்த கருத்தினை முன் வைத்தவர்களே முகம் கொடுத்து முடிக்க வேண்டிய பொறுப்பினையும் கொண்டவர்களாகி விடுகிறார்கள்.

இந்த பின்னணியில் தற்பொழுது நடந்து வரும் சர்ச்சை பல பரிமாணங்களைக் கொண்டது. தட்டையாக இதனைச் சுருக்கி ஒரு ஆண்/பெண் சம்பந்தப்பட்டதாக மட்டுமே பார்த்து விட முடியாது. எப்பொழுது விளைந்த ஒரு பயிர் சந்தைக்கு வருகிறதோ, அப்பொழுது நுகர்வோர்களின் விமர்சனத்திற்கும் அந்த விளைச்சலின் தரம் பரிசீலிக்கப்படுகிறது. சமூகம் சார்ந்த கருத்துக்களை முன் வைக்கும் பொழுது, நாம் பலதரப்பட்ட பின்னணியின் ஊடாக நடந்து வரும் மனிதர்களின் சொல்லாடல்களையும்/கருத்துக்களையும் முகம் கொடுக்கும் நிலைக்கு நம்மை நகர்த்திக் கொள்கிறோம் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரிதொரு சமயம் நாம் இதனை கொஞ்சம் விரிவாக அலசலாம்.
அதற்கு முன்னால், கீழே உள்ள கட்டுரையை வாசித்துப் பாருங்கள். இது 2010ல் தமிழ்மணத்தில் நடந்த ஒரு சர்ச்சையின் விளைவாக எனக்குள் எழுந்த எண்ணங்கள். இருப்பினும் இப்பொழுதும் இதற்கான தேவை இருக்கிறது...

உடல் + உடை = அரசியல்!


தமிழ்மணத்தில் வரும் அத்தனை பதிவுகளையும் வாசிக்க முடிந்துவிடுவதில்லை. இப்பொழுதெல்லாம் நண்பர் வட்டம் படித்துவிட்டு இதற்கு ஒரு ஐந்து நிமிடங்கள் செலவு செய்தால் வீண் விரயமில்லை என்ற வடிகட்டலுக்குப் பிறகே சில நாட்கள், வாரங்களுக்குப் பிறகு நல்ல பதிவுகள் வந்தடைகிறது. இருப்பினும், தான் தோன்றியாக அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆர்வத்தை கிளப்பும் பதிவுகளை நானாகவே கிடைக்கும் நேரங்களில் அங்கு சென்று தழுவிச் செல்லாமலும் விட்டதில்லை.

எழுத்து என்பது என்னைப் பொருத்தமட்டில் ஒரு தானியங்கி முறையில் உள் உந்துதலாக நிகழ வேண்டியதொரு விசயம். அவ்வாறாக நிகழும் பொழுது அங்கே பசப்புத் தனங்களுக்கு இடமிருக்காது என்றே எண்ணுகிறேன். அதனை ஒரு கட்டாயமாக, நிர்பந்தமாக ஆக்கிக் கொள்ளும் பட்சத்தில் அதற்கு பயிற்சி தோள் கொடுத்தாலும், எழுத்தில் ஒரு போலித்தனமும், ஆழமின்மையும் மிளிரக் காணமுடியலாம்.

அண்மைய காலங்களில் அதாவது வலைப்பூக்கள் அநாமதேயமாக எங்கிருந்து வேண்டுமானாலும், குறைந்த பட்ச நேரம் மட்டுமே மூலதனமாக செலவு செய்து தன்னிடம் சரக்கு இருக்கிறது, அது இந்த உலகிற்கு சென்றடைய வேண்டுமென்ற ஆவல் உள்ள எவரும் செயற்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கிற ஒரு சூழலில், நான் இன்று சந்திக்கின்ற வளரத் துடித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களிடம் கேட்டுக் கொள்வதனைத்தும் "ஏன், நீங்கள் ஒரு ப்ளாக்கர்" கணக்குத் தொடங்கி உங்களின் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்பதுதான் ;).

அப்படியாக அவரும் தொடங்கும் பொழுது அது அவருக்கு ஒரு ஆரோக்கியமான சுய வளர்ச்சிச் சூழலை உருவாக்கிக் கொடுக்கக் கூடும் என்ற நம்பிக்கையிலேயே, அவ்வாறாக பரிந்துரைக்கிறேன். ஏனெனில், மனித மனமென்பது எப்பொழுதும் தனக்கு பழக்கமான, ஆபத்தற்றதாக கருதிக் கொள்ளும் எல்லைகளிலேயே பயணிக்க பிரியப்படும். அவ்வாறான ஒரு சூழலும் அமைந்து போனால், அதனைத் தாண்டிய ஒரு உலகமும், மனிதர்களும் பல் வேறு பட்ட கருத்து, சமூக, கலாச்சாரங்களின் ஊடான பார்வைகளைக் கொண்டும் இதே தெருவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், என்ற எண்ணத்தையே மறந்து தன்னுடைய எல்லைக்குள்ளாகவே லயித்து இருக்கும். அதன் நேர் பாதையில் ஏதாவது இடர்பாடுகள் இடரும் வரையிலும்...

மனமும் அதன் வளர்ச்சியுமென்பது ஒரு நீரோடையைப் போன்று ஓடிக் கொண்டே இருப்பதும், தேவையான மாற்றங்களை, பிரபஞ்ச விரிதலைப் போன்று எல்லாவற்றையும் அரவணைத்துச் செல்வதற்கு எப்பொழுதும் தயாராக்கிக் கொள்வதுமாக அமைந்து போனால் எங்கிருந்து வருகிறது மனச் சோர்வும், இத்தனை முரண்பாடுகளும்? இந்த தயார்படுத்தலுக்கு எழுத்தும், எண்ணமும் மேலும் வழிவகை செய்து கொடுக்கலாம். மனம் கற்றுக் கொள்ளும் நிலையிலேயே என்றுமிருந்தால்.

எனது எழுத்து என்பது என்னை நானே மேலும், மேலும் உட் நோக்கி பார்த்துக் கொள்வதற்கான காலச் சுவடு போன்றதாகக் கருதுகிறேன். அதற்கெனவே, மனதில் ஆழமாக உதித்ததை இங்கு பொதித்து வைத்து விடுகிறேன். பின்பொரு நாளில் கடந்து வந்த வளர்ச்சிப் பாதையின் நீளம், அகலம் அறிந்து கொள்வதற்காக.

அது போன்ற எழுத்தை எல்லார் முன்னிலையிலும் வைக்கக் காரணுமும் எத்தனை பேருக்கு அந்தத் தளத்தின் வீச்சம் பிடிபடுகிறது அல்லது எரடுகிறது என்பதனையும் அறிந்து கொண்டு எனது மேம்பட்ட வளர்ச்சிக்கெனவும் மேலும் பரந்து பட்ட பார்வையை உருவாக்கிக் கொள்ளவும் பயன் படுத்திக் கொண்டுள்ளேன். நமது உலகம், கற்றுக் கொள்ள மனதும் திறந்தே இருக்கும் நிலையில் விரிந்து கொண்டே செல்கிறது என்பதனை இது வரையிலும் எனக்கு ஊறக்கிடைத்த கிணறுகளின் நீள, அகலங்களை அளந்ததின் மூலமாக அறிந்து கொண்டேன். அதன் பொருட்டு இப்பொழுதெல்லாம் சில "கம்பளத் தனமான" வார்த்தைகளை (sweeping statement) விடுவதிலிருந்து முழித்துக் கொள்ள முடிகிறது.

இது அண்மையில் தமிழ்மணத்தில் நடந்து வரும் முரண்பாடுகளுக்கு ஊடான பதிவுகளும் , அதற்குண்டான எதிர் வினைகளுக்கும் சிறிது தொடர்பு இருக்கலாம். புதுப் புது பதிவர்களும், வாசகர்களும் வந்து கொண்டே இருக்கும் பட்சத்தில், அது போன்ற முரண்பாடுகள் ஊடான பதிவுகளும், எதிர் வினைகளும் முடிவற்று நடந்து கொண்டேதான் இருக்கும். அடிப்படையான எண்ணங்களையே அவர்களும் தான் ஊறிக் கிடந்த கிணற்று சாளரத்தின் வழியாக பரந்து பட்ட வானத்தின் ஒரு வட்டத்தைப் பார்த்து அவர்கள் கண்ட வானம் எப்பேர்பட்டது என்பதனை 'பீத்தி' முன் வைக்கலாம், மற்றொருவர் அதற்கு பக்கத்தில் கிடக்கும் கிணற்றிலிருந்து அவர் தரப்பில் கூவிக் கொண்டிருக்கும் அதே வேலையில்.

இப்பொழுது, எனது கிணற்றின் ஊடான அனுபவம் சில வற்றையும், அது எப்படி என் அகக் கண்களை அந்த வேலையில் திறக்க உதவியது, அது போன்று உங்களுக்கும் திறக்க உதவக் கூடுமென்ற நப்பாசையில் இங்கே இறக்கி வைத்து விடுகிறேன் ...

அனுபவம் எண் 1: அப்பொழுது கார்கில் பகுதியில் பாகியுடன் நாம் சண்டையிட்டுக் கொண்டிருந்தோமென்று நினைக்கிறேன். அதே நேரத்தில் எனக்கு முன்னமே இந்தியாவிலிருந்து அமெரிக்கா குடியேறி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தமிழர் எனக்குப் பழக்கமானார். அவர் இஸ்லாத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்தும், படிப்பிற்கும் பொது அறிவிற்கும், பண்பாட்டிற்கும் ஒருவனுடைய அடிப்படை இயல்பிற்கும் எந்த தொடர்புமில்லை என்பதற்கிணங்க, ஒரு அறிவு கெட்ட "கம்பள வார்த்தை" ஒன்றை அவரிடத்தில் மிக்க தேச பக்தியில்(??) உளறி வைத்தேன்.

அந்தக் கம்பள வார்த்தை என்னவெனில், "பாகியை துடைத்தெறிந்திட்டா எல்லா பிரச்சினைகளும் ஓய்ந்துவிடும்" என்பதுதான் அது. அவரும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்து விட்டு, நண்பா! அந்த நாட்டில் இன்னமும் எங்களுக்கு தொடர்புடைய பெரியப்பா, பெரியம்மா வகை சொந்தங்கள் வசிக்கிறார்கள் இன்னமும் வந்து போயிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதாக கூறினார். எனக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வது என்றே புரியவில்லை. அப்படியே நிலை குலைந்தவனாக அமர்ந்திருந்தேன். ஒரு நிமிடம் என்னை அவர் நிலையில் வைத்துப் பார்த்தேன். என்னுடைய வார்த்தையின் தீவிரம் புரிந்தது. அன்றிலிருந்து, பல சில நேரங்களில் இது போன்ற குருட்டுத் தனமான கம்பள வார்த்தைகளை தவிர்ப்பதின் அவசியத்தை உணர்ந்தேன்.

அனுபவம் எண் 2: இங்கு அமெரிக்கா வந்த பொழுதினில், எங்களைப் போல உண்டா என்று நாளும் ஏதாவது ஒரு வெட்டி வம்பு பேசுவதுண்டு. ஓடும் வாகனங்களின் எண்ணிக்கையைக் காண்பதிலிருந்து ஆரம்பித்து, அரை ட்ராயர் போட்டு நடந்து திரியும் பெண்களைக் கண்டால், பார்க்கில் அமர்ந்து அன்நியோன்யமாக வருடிக் கொள்ளும் ஜோடிகளைக் கண்டால், வாயை விட்டு 'ஐ லவ் யு, ஹனி, மகளே, மகனே' எனச் சொல்லிக் கொள்ளும் மக்களைக் கண்டால்னு சகட்டு மேனிக்கு குருட்டுக் கம்பளம் விரித்தேன். எல்லாமே போலி, வேஷமென்று. அதாவது அந்நாளில் என்னுடைய கிணற்று சாளரத்தின் வழியாக எனக்குக் காணக் கிடைத்த வான வெளியுடன் அவர்களின் கலாச்சாரத்தை தேவையில்லாமல் ஒப்பீடு செய்து கொண்டிருந்திருக்கிறேன். என்ன ஏதென்று எனக்குப் புரிய ஆரம்பிப்பதற்கு முன்பாகவே!

அது போன்ற ஒரு நாளில் எனக்குத் தெரிந்த ஒரு இந்திய குடும்பத்தாரை அருகிலிருக்கும் 'ஜோன்ஸ் பீச்சாங்கரைக்கு' அழைத்துச் சென்றேன். அதில் உள்ள கணவன், மனைவி ஐம்பதுகளின் மத்தியிலிருந்தார்கள். பத்தாவது படிக்கும் ஒரு மகன். பீச்சாங்கரையில் ஒரே ஜனத் திரள். எங்கு திரும்பினும் கூட்டம். யூனி ஃபார்மாக அந்த சூழலுக்கேயான உடை. பெண்கள் ட்டூ பீஸ், ஆண்கள் அரை ட்ரவுசர் என ஜோடித்திருந்தார்கள்.

என்னுடன் வந்திருந்த அம்மா வட இந்தியர். சுடிதாருக்கு மேலாக போட்டிருந்த துணியையும் வெயில் காய்கிறதென்று தலையில் போட்டு சுத்தியிருந்தார்கள். கால் முதல், தலை வரை துணியாக பீச்சாங்கரையை வலம் வந்து கொண்டிருந்தார். நாங்களும் ஒரு இடத்தை தேர்வு செய்து, துணிக் கம்பளம் விரித்து, கொண்டு வந்த திண் பட்டங்களை வைத்து கடை விரித்தோம். அருகினில் அமர்ந்திருந்த ஏனைய கூட்டம் எங்களைப் பார்ப்பதும், ஏதோ கிசு கிசுப்பதுமாக இருந்தார்கள். ஒரு அரை மணி நேரம் கழித்துப் பார்த்தால் எங்களைச் சுற்றி ஒரு 15 மீட்டர் சுற்று வட்டத்தில் யாரையுமே காணோம்!

எங்கடா மக்கள் எல்லாம் என்று பார்த்தால், இந்தக் காட்டுமிராண்டிகளுடன் நமக்கெந்த தொடர்மில்லை என்று தொப்புள் கொடி அறுக்கும் விதமாக விலகிச் சென்றிருக்கிறார்கள். இங்கும் எனக்கு கண் திறக்கும் நிகழ்ச்சியாகவே அந்த நிகழ்வும், சூழலும் அமைந்திருந்தது. நம் ஊரில் வாரப் பத்திரிக்கைகளும், தினசரிகளிலும் வெள்ளைக்காரிகள் என்றாலே என்னமோ எப்பொழுதும் ட்டூ பீஸில் அழைந்து கொண்டு, சாலையோரங்களில் கண் அடித்து கவிழ்த்து விடும் பெண்கள் என்ற வித பொதுப் புத்தியை விதைத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அன்று அந்த மெஜாரிடி சமூகத்தின் முன்னால்... எங்களுக்கு நிகழ்ந்ததின் பொருள் என்ன?

ஒவ்வொரு பூமியிலும் அந்தந்த காலக் கட்டத்திற்கு ஏற்றார் போல அந்தந்த சமுதாயமும் வசதிக்கேற்ப உடலரசியலை நகர்த்திக் கொள்கிறது. அந்த எல்லைக்குள் வாழும், சமூகக் கண்களுக்கு எது வரையிலும் தோலைக் காமித்தால் முகம் சுழிக்காமல் எடுத்துச் சொல்லக் கூடுமோ அதுவரையிலும் அவர்களுக்கு அது நாகரீகம். அவர்களின் எல்லைக்குள். அதனைக் கொண்டு பிரிதொரு எல்லைக்குள் பிரவேசித்து அதனைப் போல உடலரசியல் செய்யவில்லை என்று கூவுவது எந்த விதத்திலும் நாகரீகமில்லை, அப்படி நிகழ்த்தும் பொழுது அங்கே வீண் பிரச்சினையும், கிணறுகளின் நீள, அகலங்கள் ஒன்றிலிருந்து பிரிதொன்றின் பார்வையில் வித்தியாசப் பட்டுக் கொண்டே போகும். எது வரையிலுமென்றால், அவைகளை விட்டு விலகி மொத்தமாக அந்த வித்தியாசங்களின் கூறுகளை காணும், மனக் கண் திறக்கும் நாள் வரையிலும் என் கிணறு உன் கிணறை விட சிறந்தது/தாழ்ந்தது என்ற முறையிலேயே அமையும்.

பர்தா போட்டிருப்பவர்களின் கண்களுக்கு அதனைப் போடாமல் வெளியே போயி வருபவர்கள் ஆபாசமாகவும், சேலை கட்டிக் கொள்ளாமல் ஜீன்ஸ், ட்டி-ஷர்ட் போட்டுக் கொள்பவர்கள் ஆபாசமாகவும், அவர்களின் கண்களுக்கு மினி ஸ்கர்ட்டும், அரை ட்ரவுசரும் போட்டுக் கொள்பவர்கள் ஆபாசமாகவும் தெரிவது (இந்த வரிசைக்கிரமத்தை பின்னோக்கியாக ஓட்டி ஒருவர் மற்றொருவரை காட்டுமிராண்டி என்று அழைத்துக் கொண்டுமென...) எல்லாமே இந்த கிணற்று சாளரத்தின் வழியாக பார்க்கும் பார்வையில் தான் கோளாறே ஒழிய அந்தந்த தனிப்பட்ட மனிதரின் நிலையில் அது சரியே. பிடித்திருந்தால்/செல்லும் நிகழ்விற்கு ஒத்து வந்தால் எப்படி வேணா யாரும் இருந்துவிட்டுப் போகட்டுமே!

பி.கு: நான் இங்கு லுங்கி கட்டிக்கிட்டு வெளியே சென்று கடுதாசி பொறுக்கிக் கொண்டு வருவதற்குள், என் லுங்கியின் அமைப்பை பார்த்துவிட்டு என்னடா ... a guy dressed in long skirt என்று அதிசயத்து ஓட்டும் வாகனத்தை மட்டுப்படுத்தி குடுபத்தோட, குழந்தை குட்டிகளோட பார்த்தா அதுக்கு நான் என்ன பண்றது :))) ...

11 comments:

ஜோதிஜி திருப்பூர் said...

பெரிசா அடித்த பிறகு என்ன காரணமோ பிடுங்கிக் கொண்டு போய்விட்டது.

வெகு சிறப்பாக வந்துருக்கும்.

ஜோதிஜி திருப்பூர் said...

பெரிசா எழுதவே பயமாயிருக்கு. மொத்தமாக எழுதிய பிறகு அப்படியே மக்கர் செய்கின்றது. மறுபடியும் முயற்சிக்கின்றேன்.

ஜோதிஜி திருப்பூர் said...

நணபர் மற்றொரு நண்பருக்குச் சொன்ன அறிவுரை இந்த சமயத்தில் நினைவுக்கு வருகின்றது.

உன்னோட குழந்தைகள் பெண் குழந்தைகள். நாளைக்கு உன் பதிவை எடுத்து படிக்கும் போது சங்கடப்படக்கூடாது. அதை மனதில் வைத்துக் கொண்டு எழுதவும் எனறாராம்.

ஆனால் புதிய நண்பர்கள் உணர்ச்சி வேகத்தில் எழுதும் பல பதிவுகளின் போக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான். அந்த வேகம் முடிந்ததும் அவர்களுக்கே ஒரு அலுப்பு வந்து விடும்.

காலடிச்சுவடுகளை குறிப்பிட்ட காலம் கழித்து நாம் நடந்து வந்த பாதைகளின் தன்மைகளை இந்த எழுத்து வழியே படிக்கும் உணரும் உண்மைகள் பலப்பல.

ஆனால் உணர்ந்தவர்களும், உணர்ந்தவற்றை எழுதிக் கொண்டுருப்பவர்களின் எண்ணிக்கையும் மிகக்குறைவாக இருக்கிறது.

ராஜ நடராஜன் said...

தெகா!நலமா?

எனக்கும் நீண்ட உறக்கத்திற்கு பின்பு விழித்துக்கொண்டு வாசிக்கிற மாதிரிதான் இருக்குது உங்களின் வாசிப்பு.

லுங்கி கட்டிகிட்டு வெளியில் சுத்துவதை ஒரு பேஷனாகவே ஆக்கறதுக்கு அமெரிக்க இந்தியர்கள் முயற்சி செய்வது மாதிரி இருக்குதே!அக்கா சல்வார் கமிசும்,மாமு மடிச்சு கட்டுன ட்ரவுசரா லுங்கியுமா ஒருத்தர் படம் போட்டு பதிவு போட்டிருந்தார்.

எனக்கு லுங்கியை கட்டிகிட்டு வெளியில் சுத்துவதில் இன்னும் வெட்கம் கலந்த போலித்தனம் இருக்குது.

கார்கில் பாகி நிகழ்வு சிந்திக்கும் போது யோசிக்க சரியாக இருந்தாலும் கூட உணர்வு உந்துதலில் பாகியை இல்லாம செஞ்சுட்டா நல்லது என்பதுதான் யதார்த்த இந்திய மனப்பான்மையாக அந்த கால கட்டத்தில் இருந்திருக்கும்.ட்விட்டர்களின் நிலையும் இப்படி இரு புற விவாதமாகவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.விவேகத்தையும் முந்திக்கொள்வது அந்தக் கண உணர்வுகளே.

வானம்பாடிகள் said...

நல்ல கட்டுரை. (பெருசா ஒரு பின்னூட்டம் அடிச்சிட்டு எதுக்கு வியர்த்தம்னு இதோட நின்னுக்கிட்டேன்:))))

ராஜ நடராஜன் said...

//நல்ல கட்டுரை. (பெருசா ஒரு பின்னூட்டம் அடிச்சிட்டு எதுக்கு வியர்த்தம்னு இதோட நின்னுக்கிட்டேன்:))

பாலாண்ணா!ஏன்!ஸ்மைலி மட்டும் போட்டிருந்தா இன்னும் பாதுகாப்பாக இருந்திருக்குமே:)

வவ்வால் said...

தெ.கா,

நடுநிலையா பேசுவது என்பது இப்போ புரியுது :-))

நானும் நடுநிலையா பேச பழகிட்டு வரேன்(அதான் நல்லதாம்) :-))

ஆபாசமாக தனிநபர் பேசுவது என்பது தவறான செயல் என்றே வைப்போம்.

ஆனால் அப்படி ஆபாச தாக்குதலுக்கு ஆளாகிட்டேன்னு பரிதாபம் தேடிக்கொள்ளும் தகுதியற்றவராக தானே பாடகி சின்மயி இருக்கிறார்.

அவர் பேசியதில் எத்தனை வெகுஜன விரோத கருத்துக்கள், ஆனால் அது எல்லாம் எவ்வளவு விஷமத்தனமானது என அவருக்கு தெரியாது என்றால், அவருக்கு மூளை வளர்ர்சியில் ஏதோ குறை என்று தான் நினைக்க தோன்றுகிறது.

பெருவாரியான மக்கள் ஆதாரித்தால் தான் பிழைப்பு எனப்படும் கலைத்துறையில் இருந்து கொண்டு பெருவாரியான மக்களை ஏளனமாக பேசுபவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

பாட்டுக்கேட்டா பசியா தீறப்போகுது!

Thekkikattan|தெகா said...

வவ்ஸ்,

நடு செண்டர்ல இருந்து எல்லா சூழ்நிலைகளூக்கும் பேசிவிட முடியாது என்றே கருதுகிறேன்.

உதிர்க்கும் ஒரு வார்த்தையைக் கொண்டே ஒரு நபர் எந்த இந்தியாவிலிருந்து பேசுகிறார் என்பதனை அவதானித்து விட வேண்டும்.

நம்ம மக்களிடம் உள்ள பிரச்சினை ஒரு பிரபலம் என்றால் அவர்களை அவதாரப் புருஷர்களாக நினைத்துக் கொண்டு உலகில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் அவர்களின் திருவாய் மலரச் சொல்லி திருப்பாதங்களை வேண்டி நிற்படு நம்முடைய அறியாமையையே சுட்டி நிற்கிறது.

என்னால் சம்பந்தப்பட்ட பிரபலத்தின் ஒரு சில ட்விட்களையே பொறுமையாக படிக்க முடியவில்லை. எப்படி இவர்களால் அம்பதாயிரம் டிவிட்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்க முடிந்தது.

இதனை பிரிதொரு சமயம் பேசலாம்.

//பெருவாரியான மக்களை ஏளனமாக பேசுபவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.//

எனக்கும் அதே எண்ணம் தான். இதனை அனைத்து தரப்பு மக்களும் உணர வேண்டும்.

பதி said...

தெகா,

பின்னூட்டம், லைக் போடுறவங்க மேல எல்லாம் கேசு கொடுக்க மாட்டாங்க இல்ல? :))

//பி.கு: நான் இங்கு லுங்கி கட்டிக்கிட்டு வெளியே சென்று கடுதாசி பொறுக்கிக் கொண்டு வருவதற்குள், என் லுங்கியின் அமைப்பை பார்த்துவிட்டு என்னடா ... a guy dressed in long skirt என்று அதிசயத்து ஓட்டும் வாகனத்தை மட்டுப்படுத்தி குடுபத்தோட, குழந்தை குட்டிகளோட பார்த்தா அதுக்கு நான் என்ன பண்றது :)))//

கடுதாசி எடுக்குற அளவுக்கெல்லாம் போறீங்களா? எனக்கு பிரான்சில ஆரம்பகாலத்தில கெடைச்ச அனுபவத்தினால, பால்கனி பக்கம் கூட லுங்கியோட போறது இல்ல :(

மாற்றுப்பார்வை said...

நல்ல கட்டுரை.

The Analyst said...

இதை எழுதத் தூண்டிய விடயங்களோ நீங்கள் பதிவின் முதலில் கூறிய பதிவுலகில் நடக்கும் பிரச்சனைகளைப் பற்றியோ ஒன்றும் தெரியாது. ஆனால் Loved reading this. இது மாதிரி எனக்கும் சில அனுபவங்கள் உண்டு. எமது சமூகம் தான் மற்றவர்களை விட morally superior என்று எம் சமூகத்தில் அநேகமானவர்களுக்கு நினைப்பு. இங்கு வந்த நாள் முதலிலிருந்தே கொஞ்சம் கொஞ்சம் அனுபவங்கள் கிடைத்தாலும் பத்து வருடங்களுக்கு முன் திரும்ப இலங்கைக்குச் சென்ற கழித்த நாட்களில் தெட்டத் தெளிவாக உணார்ந்தது. நாம் நினைத்தளவு நம் கலாச்சாரம் மேலானதும் இல்லை, இந்நாட்டுக் கலாச்சாரம் கீழானதும் இல்லை என்பது.

Related Posts with Thumbnails