Tuesday, January 22, 2008

*ஒன்பது ரூபாய் நோட்டு* - எல்லோரும் கிழித்த பிறகு...

சக பதிவர்கள் நிறைய பேர் தங்கர் பச்சானின் "ஒன்பது ரூபாய் நோட்டை" கசக்கியும், கிழித்தும் எரிந்த பிறகு ரொம்பவே யோசித்து விட்டு என் கிழிப்பை இங்கு தொடர்கிறேன்.

அண்மையில் நம்ம சேவியர் உண்மையாக எப்படி அந்தப் படத்தின் கருத்தினை வைத்து படத்திற்கு பெயர் வைக்க வேண்டுமோ அந்த டைட்டிலுடன் ஒரு பதிவு எழுதியிருக்கார் "ஒன்பது ரூபாய் நோட்டு : மாதவனாய் வாழாதே" எனக்கும் அந்தப் படத் தலைப்பு சரி என்றே படுகிறது.

அந்தப் படம் எடுக்கப் பட்ட விதமும், வழங்கப் பட்ட நேர்த்தியும் அப்படியே அந்த கிராமத்தில் வாழ்ந்ததனைப் போன்றிருந்தது என்றால் மிகையில்லை.

எங்கோ ஓர் இடத்தில் அந்தப் படத்தில் தேவையில்லாத கூச்சல் இருந்ததென்று நேராகவே தங்கரிடத்தில் யாரோ கேட்டதாகவும், அதற்கு அவர் எங்களூர் கிராமத்தில் அப்படித்தான் இரைந்து பேசுவார்கள் என்று கூறியதற்கு, நம்மவர் ரஷ்யாவில் எடுக்கும் கலை படங்களில் எல்லாம் அப்படி இல்லையென்று கூறாமல் கூறிவிட்டு, ஏதோ ஒரு "கம்யூனிகேசன் கேப்" இருப்பதாக கூறிவிட்டு நகர்ந்து விட்டாராம்.

இன்னமும் கிராமங்களில் இந்த குழாய் ஒலி பெருக்கி அரசாங்க தடுப்பில் இருந்தாலும் எவன் வீட்டு சாவா இருந்தாலும் சரி, இல்ல விநாயக சதுர்த்தியாக இருந்தாலும் சரி, இல்ல நாலு மோடு முட்டிகள் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுகிறேன் என்று கத்தி உயிரோட இருக்கிற கிழங் கட்டைகளை சீக்கிரம் ஊருக்கு அனுப்புவது போல ஒலி பெருக்கிகளை கட்டி வைத்து கும்மியடித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள். இந் நிலையில் கிராமப் புறங்களில் எந்தளவிற்கு "ஹஸ்" வாய்ஸ்ல் பேசிக் கொள்ள நாம் பழகி வருகிறோம் என்பது விளங்கும்.

சரி, இப்ப விசயத்துகுள்ள போவோம். சேவியர் அந்தப் படத்திற்கான சில சினிமாத் தனங்களை அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார். படம் நம் எதிர் பார்ப்பிற்கு தகுந்தால் போல நகர வில்லைதான். ஒத்துக் கொள்ள வேண்டிய விசயம். தனிப்பட்ட மனித எதார்த்த வாழ்வில் எந்த வாழ்வுதான் எதிர் பார்த்த ஓட்டத்தில ஓடித் தேய்கிறது? எத்தனை பேருடைய வாழ்வோ தான் எடுக்கும் சிறு, சிறு தவறான முடிவுகள் கடைசி வரையிலுமே தவறாக நடந்தே முடிவது போலாகிவிடுகிறது. அதனை அந்த முடிவு எடுத்தவரும் புரிந்து கொள்ளாமலே அந்த ஓட்டம் ஒரு முடிவுக்கு வருவதில்லையா?

இந்தப் படத்தில் அப்படி ஒருவர், தான் எடுத்த வறட்டு முடிவுகளால் 'அவர்' ஒரு அனாதை பிணமாக வீழ்ந்து கிடப்பதனை போலவே காட்சியமைத்ததனைக் கொண்டு படத்தின் முழு வீச்சத்தையும் உள் வாங்க முடியவில்லையா?

அந்த நிலையிலேயேதான் அந்தப் படத்திலுள்ள மாதவரின் குணச்சித்திரமும் வழங்கப்பட்டுள்ளாதாக நினைத்து அந்தப் படத்தினை முழுமையாக என்னால் உள்வாங்க முடிந்தது.

கீழே உள்ள பின்னூட்டம் சேவியரின் பதிவுக்கு இட்டது. இங்கயும்.

...மாதவனாய் வாழ்ந்தது சேவியர், ஒரு கேடம்பக்கத்து சினிமா கதையாசிரியன் அல்லவே!


ஒரு கிராமத்தில் ஒரு சாதாரண வறட்டு கொளரவத்துடன் வாழ்ந்த ஒரு மனிதனின் கதைதான். அவனுக்கு வாழ்வியல் சார்ந்து எது சரி, எது தவறு என்று எண்ணக் கிடைக்கிறதோ அதனை அப்படியே செய்து வைக்கிறான்.

இந்தக் கதையின் மூலமாக இரு பக்கமாகவும் கருத்தினை எடுத்துக் கொள்ளலாம் 1) பெரியவர்கள் சிறு பிரச்சினைகளுக்காக இப்படி ஒரு முடிவு எடுப்பது சரியல்ல, மற்றும் வளர்ந்து வளரும் குழந்தைகளின் தேவைகளை புரிந்து கொள்வது அவர்களின் கடமை 2) வளரும் குழந்தைகள் வயதானவர்களின் முக்கியத்துவம் அறிந்து கொடுக்கும் மரியாதையை கொடுக்க வேண்டுமென்பது. இப்படியாகவும் எடுத்துக் கொள்ளலாம் தானே.

கேடம்பாக்கம் பாணியில் எடுத்தால் நமக்கு வேண்டியது மாதிரி கதையை எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த படமே ஒரு உண்மைச் சம்பவத்தை வைத்துத்தான் எனும் பொழுது, ஒரு மனிதன் சில விசயங்களை உணராமலேயே இறந்து விடுவதில்லையா அது போலத்தான், மாதவரும் நிறைய விசயங்களில் காம்ப்ரமைஸ் பண்ணிக் கொள்ளாமலேயே இறந்து விட்டார்.

அதற்கு உ.தா: //மகனை எழுப்பி வாழ்க்கை என்பது உணர்வுகளில் தான் என அவனை அரவணைத்து அவனுடைய வாழ்க்கையில் சற்று ஆனந்தத்தையாவது அளிக்கவில்லை மாதவர்.//

நீங்கள் கூறிய படியே எனக்கும் அந்த அவா எழுந்தது அந்தக் காட்சியைக் காணும் பொழுது. ஆனால், மாதவரான அந்த மனிதனுக்கு தன் மனம் அப்படிச் செய்ய உந்துதல் அளிக்க வில்லை. அங்குதான் நானும், நீங்களும், மாதவரும் வித்தியாசப் படுகிறோம் என்பதனை உள்ளது உள்ளபடியே கூறியிருக்கிறார், இயக்குனர் என்று நினைக்கிறேன்...

29 comments:

தஞ்சாவூரான் said...

படம் பார்க்கும்போது, கிராமத்தானாகிய எனக்கும் அந்த இரைச்சல் கொஞ்சம் புரிந்துகொள்ள கஷ்டமாகத்தான் இருந்தது.

மாதவரைப் பொறுத்தவரை, அவர் எடுத்த முடிவுகள் அனைத்தும் நல்லவை என்று கூற முடியாவிட்டாலும், இந்த மாதிரி மனதில் ஈரமும், பிடிவாதமும் கொண்ட எத்தனையோ பேர் இன்னும் கிராமங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

ஒரு தந்தைக்கு, தம் மக்கள் திறமை நன்றாகத்தெரியும். அதனால்தான், குடும்பப் பொறுப்பை முழுதும் தானே வைத்துக்கொண்டு, கொஞ்சம் கஞ்சத்தனத்துடனும், கண்டிப்புடனும் வளர்க்கிறார். குடும்பம் பிரிந்த பிறகு, மக்கள் சீரழிவது நன்றாகவே காட்டப்பட்டுள்ளது.

என்னைப் பொறுத்தவரை, மாதவரைப் போல் வாழ் என்றுதான் கூறுவேன் - கொஞ்சம் பிடிவாதத்தைத் தளர்த்திக்கொண்டு, மாறும் உலகத்துக்கு ஏற்ப கொஞ்சம் மாறிக்கொண்டு!

Anonymous said...

9 ரூபாய் நோட்டு கிராமத்தில் வாழ்ந்த
'பெருசுகள்' அனைவரும் ஏதாவது ஒரு கால கட்டத்தில் அது போன்ற காதாபாத்திரங்களை பார்த்திருப்பார்கள்.
நான் அந்த வட்டாரத்தை சேர்ந்தவன் தான். இது போல் பல நிகழ்வுகள் இன்னும் எனக்கு பசுமையாக உள்ளன
மிகவும் அருமையான படைப்பு -
படைப்பு பொருளாத ரீதியாக பின் தங்கினது மிகவும் சோகத்தை தருகிறது.
அன்புடன்
பி.ரா

நவன் said...

நானும் இந்தப் படம் பார்த்தேன்.

இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு படம் அவசியமா? முழுதும் சினிமாத்தனமே இல்லாமல்..

மாதவரின் சரித்திரம் இங்கே யாருக்கு தேவைப்படுகிறது?

இப்படத்தில் ஒரு பாடல் வரும்.

//மாதவனாய் வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும்.//

வைரமுத்து வறுமையை நியாயப்படுத்துவது போலுள்ளது.

கடைசியா பதிவுக்கு சம்பந்தமில்லாமல்,

தெகா,
சொந்தமா உங்க அடுத்த பதிவு எப்போ வரும்? :-)))))

சுரேகா.. said...

நியாயமா எழுதுறதுதான் உங்க வழக்கமாவே போச்சு!

மிகச்சரியான பார்வை (விமர்சனம் இல்லை)

கலக்கு தலை...!

சேவியர் said...

மாதவர் என்னும் ஒரு தனி நபருடைய வாழ்வியல் வெளிப்பாடு என்னுமளவில் திரைப்படம் சரியானதே.

தருமி said...

படம் பார்க்க வேண்டுமென்ற ஆவலைக் கிளப்பியுள்ளீர்கள்.
பாத்திருவோம்ல ... சீக்கிரம்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கிராமம், அந்த மக்கள் வாழ்வு; அவர்கள் ஆடு;மாடு பற்றி நன்கு தெரிந்ததால் ;இந்தப் படம் பிடித்தது.நெடுநாட்களின் பின் ""ஏய்" என்று வில்லன் ;நாயகன் கூச்சலில்லாமல் படம் பார்த்த திருப்தி
இருந்தது.

Thekkikattan|தெகா said...

தஞ்சாவூராரே,

படம் பார்க்கும்போது, கிராமத்தானாகிய எனக்கும் அந்த இரைச்சல் கொஞ்சம் புரிந்துகொள்ள கஷ்டமாகத்தான் இருந்தது.//

நடப்பதைத்தானேங்க அப்படியே கொடுக்க முயற்சிக்கிறார். ஒரு சீன்ல, மாதவர் இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவரை ஊர்மக்கள் கொண்டு வந்து பெஞ்சில் சாய்க்கும் பொழுது கிளம்பும் ஆர்ப்பரிப்பும், ஓலமும் கிராமங்களின் நடப்பதுதான். அந்த சீனை மணிரத்தனத்தின் படங்களில் வரும் ஹஸ், ஹஸ் ஸ்டைலிள் எடுத்திருந்தால் உட்கார்ந்து பார்க்கும் நமக்கு காது மிச்சமென்றாலும், படமெடுக்கப்பட்ட கிராமத்திலுன்றி விலகியே அல்லவா நின்றிருக்கக் கூடும்.

//இந்த மாதிரி மனதில் ஈரமும், பிடிவாதமும் கொண்ட எத்தனையோ பேர் இன்னும் கிராமங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.//

ரொம்ப உண்மை. இன்னமும் எத்தனையோ பேர் வாழ்ந்து கொண்டுதான் உள்ளார்கள். அதிலும், குறிப்பாக வறட்டு கொளரவத்தின் பேரில் எதுக்கும் துணிந்தவர்கள் ரொம்பவே அதிகம். புரியுமின்னு நினைக்கிறேன் :-).

//என்னைப் பொறுத்தவரை, மாதவரைப் போல் வாழ் என்றுதான் கூறுவேன் - கொஞ்சம் பிடிவாதத்தைத் தளர்த்திக்கொண்டு, மாறும் உலகத்துக்கு ஏற்ப கொஞ்சம் மாறிக்கொண்டு!//

இதுவும் சரிதான். அதிக ஈரம், கொஞ்சமே வறட்டுத்தனம். சரியா :D.

Thekkikattan|தெகா said...

Anony,

நான் அந்த வட்டாரத்தை சேர்ந்தவன் தான். இது போல் பல நிகழ்வுகள் இன்னும் எனக்கு பசுமையாக உள்ளன.//

கண்டிப்பாக இருந்திருக்குமென்று நம்புகிறேன். பார்க்க வாய்ப்பு கிட்டாதவர்களே அது சினிமாத்தனமாக இல்லையென்று கடிந்து கொள்ள முடியும்...

படைப்பு பொருளாத ரீதியாக பின் தங்கினது மிகவும் சோகத்தை தருகிறது.//

என்ன பண்றது. நாலு ஃபைட்டு, நாலு குத்து, நடு நடுவிலே வடிவேலு இந்த காம்போ இல்லையே... ரசனை, ரசனைங்கோவ்வ்வ்வ்.... :-(

வசந்தன் said...

தருமி,

இன்னும் படம் பார்க்கவில்லையா?
சரி, காசைப் பார்தாற்கூட பிரமிட் சாய்மீரா நூறு திரையரங்குகளில் இலவசமாகக் காட்டிய போதாவது பார்த்திருக்கக்கூடாதா? ;-)
மதுரையில் காட்டவில்லையோ?

அடுத்தமுறை தமிழ்ச்சினிமாவைத் திட்டி அல்லது நக்கலடித்து, கூடவே நல்ல படங்களை யாரும் சீண்டுவதில்லையென்ற புலம்பலோடு ஒரு பதிவு உங்களிடமிருந்து வரட்டும்; அப்போது வைத்துக்கொள்கிறேன்.
~~~~~~~~~~~~~~~~~~

மதன் திரைப்பார்வையில் மதனுக்கும் தங்கருக்குமிடையில் மாதவப் படையாட்சியின் பாத்திரப்படைப்புப் பற்றிய - அதாவது வாழ்க்கையில் தோல்வியடைந்த ஒருவரின் கதை என்றளவில் - விவாதம் நடந்தது.

அங்கும், அர்ச்சனா அதிகமாகக் கத்துகிறார் என்று மதன் சொல்லப்போய் தங்கருக்குக் கோபமூட்டினார்.

~~~~~~~~~~~~~~~~~~

அர்ச்சனா கத்துவதைப் பற்றிய விமர்சனங்களை வைத்து நானுமோர் இடுகை எழுதினேன்.

வசந்தன் பக்கம்: ஒன்பது ரூபாய் நோட்டு அர்ச்சனா எப்படி அழுதிருக்க வேண்டும்?

மங்கை said...

நல்லா இருக்கு விமர்சனம்

கத்தல் பற்றிய விமர்சனம் தான் பயமுறுத்திச்சு...இன்னும் பார்க்கலை.. பார்க்கனும்

Thekkikattan|தெகா said...

நவன்,

//நானும் இந்தப் படம் பார்த்தேன்.//

அட இந்த மாதிரி படங்கள் எல்லாம் பார்ப்பதுண்டா :))...

//இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு படம் அவசியமா? முழுதும் சினிமாத்தனமே இல்லாமல்...//

அது சரி, யாருக்கு வேணும்? ஸ்ரேயா தோல் காமிக்காத படங்கள் இல்லையா :-P.

//மாதவரின் சரித்திரம் இங்கே யாருக்கு தேவைப்படுகிறது?//

அவரைப் போல குடும்பம் நடத்துபவர்களுக்கும், எதார்த்த வாழ்வு நடத்தப் போகும் உமக்கும், எனக்கும்.

//இப்படத்தில் ஒரு பாடல் வரும்.

//மாதவனாய் வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும்.//..
வைரமுத்து வறுமையை நியாயப்படுத்துவது போலுள்ளது.//

உண்மைதானய்யா எதனையும் ஒரு லயித்துப் போகும் தன்மையுடன் "இயல்பாக இருந்து" ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துடன் இருந்தால் பின்பு அதுவே ஒரு அழகியிலாக பரிணமிக்கிறது. அதுவேதான், இந்தப் படத்தில் அந்தப் பாடலின் மூலமாகவும் வழங்க முயற்சித்துள்ளார்கள்.

//சொந்தமா உங்க அடுத்த பதிவு எப்போ வரும்? :-)))))//

அட விடுங்கானும். சொந்த கருத்தைத் தானே இங்கே பதிவு செய்றோம். மண்டையில மசால குறைஞ்சுக்கிட்டு வருதுன்னு எப்படி சிம்பாலிக்கா சொல்றே :))

தருமி said...

வசந்தன்,
//நல்ல படங்களை யாரும் சீண்டுவதில்லையென்ற புலம்பலோடு ஒரு பதிவு உங்களிடமிருந்து வரட்டும்; அப்போது வைத்துக்கொள்கிறேன்.//

அடப்பாவி மக்கா! இப்படியா வயசான மனுசனை விரட்டி பயமுறுத்தி படம் பார்க்க வைக்கிறது.

சீக்கிரம் பாத்திர்ரேன். பயமால்ல இருக்கு ...

Thekkikattan|தெகா said...

சுரேகா,

//நியாயமா எழுதுறதுதான் உங்க வழக்கமாவே போச்சு!//

நான் சொன்ன மாதிரியே நியாயமாத்தான் இருப்போமின்னு இருந்தேன், ஆனா, நம்ம மக்கா விடுற மாதிரி இல்லை. அதான் உடைச்சிட்டேன் விரதத்தை.

//கலக்கு தலை...!//

என்னது தலை, உடம்புன்னுட்டு :) நான் வெஜ்க்கு மாறீட்டியா :))

Thekkikattan|தெகா said...

//மாதவர் என்னும் ஒரு தனி நபருடைய வாழ்வியல் வெளிப்பாடு என்னுமளவில் திரைப்படம் சரியானதே.//

வாங்க சேவியர்,

நானும் அப்படித்தான் பாவித்து அந்தப் படத்தை எடுத்துக் கொண்டேன். ஒரு தனி நபரின் வாழ்க்கை சுய சரிதை. அதில் ஏற்பட்ட ஏற்றம் மற்றும் வீழ்ச்சி. அவ்வளவே.

நன்றி!

VSK said...

சென்றவாரம் இந்தியா சென்றிருந்த போது நான் பார்த்த ஒரே தமிழ்ப்படம் இதுதான்!

மாதவனாய் வாழாதே என்ற உணர்வு படம் பார்த்த ஒரு சிலருக்காவது வந்திருந்தால் அதுவே இயக்குநரின் வெற்றி என நான் கருதுகிறேன்.

படம் பார்த்து வெளியே வந்ததும் இதைப் பார்த்ததில் ஒரு திருப்தி மனதில் ஏற்பட்டதும் உண்மை..

அதே சமயம் இதைப் பார்க்காமல் விட்டிருந்தால் எந்த்வொரு இழப்பும் இருந்திருக்காது எனப்தும் உண்மையே!

இது போன்ற அவலங்களை திரையரங்கிற்குச் சென்றுதான் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற அவசியம் இல்லைதான்.

படம் பார்ப்பது பொழுதுபோக்குக்காக மட்டுமே என்ற மனநிலை இன்னமும் பரவலாக இருக்கும்ம் தமிழகச் சூழ்நிலையில் இது பெரும் வெற்றி பெறாதது வியப்பில்லை.

படிப்பினை மக்களைச் சேரவேண்டும் என இயக்குநர் நினைத்திருந்தால், சில சமாதானங்களைச் செய்துகொண்டுதான் தீர வேண்டும். இதில் மாற்றுக் கருத்தில்லை. அதை விடுத்து இது ஒரு கலைப்படம் என்ற அளவில் எடுக்கப்பட்டிருந்தால், இயக்குநர் இவ்வளவு புலம்பியிருக்க வேண்டியதில்லை.

இப்படத்தைப் பார்த்த மறுநாள் தற்செயலாக அண்ணாசாலை காதி பவனில் திரு. தங்கர் பச்சானைச் சந்தித்த போது இந்தக் கருத்தை சொல்லவும் செய்தேன்! ஒரு புன்முறுவலுடன் அகன்று விட்டார்.

கலைப்படமா, கருத்துப்படமா என்ற நிலையில் திரு. தங்கர் பச்சான் இன்னமும் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.... அடுத்த படம் எடுக்கும் முன்பு..... தமிழ் ரசிகர்களைக் குறை சொல்ல வரும் முன்பு.


//கொஞ்சம் பிடிவாதத்தைத் தளர்த்திக்கொண்டு, மாறும் உலகத்துக்கு ஏற்ப கொஞ்சம் மாறிக்கொண்டு!//

திரு. தஞ்சாவூரானின் கடைசி வரிகள் இயக்குநருக்கும் பொருந்தும்!!

நவன் said...

//அட இந்த மாதிரி படங்கள் எல்லாம் பார்ப்பதுண்டா :))...//

சும்மா டைம் பாஸ் பண்ணனும்னா என்ன படம் வேணாலும் ஓஸியில பார்ப்பம்ல :)

சினிமாத்தனமா வேணுங்கிறது கவர்ச்சிய மட்டுமா? (இந்தக் காலப் பையன்களை யாருமே நம்ப மாட்டேங்கிறாங்கப்பா...)

//எதார்த்த வாழ்வு நடத்தப் போகும் உமக்கும், எனக்கும்//

உங்களுக்கு சரி. அது ஏன் என்னையும் இழுக்கிறீர்கள்? மாதவர் ஸ்டோரியெல்லாம் ரொம்ப பழசு எங்க ஜெனரேசன்ல.

//இயல்பாக இருந்து" ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துடன் இருந்தால் பின்பு அதுவே ஒரு அழகியிலாக பரிணமிக்கிறது//

எல்லாம் (வறுமையும்) அழகியல் தான் உங்களுக்கு.

சுரேகா.. said...

திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா.!

Thekkikattan|தெகா said...

படம் பார்க்க வேண்டுமென்ற ஆவலைக் கிளப்பியுள்ளீர்கள்.
பாத்திருவோம்ல ... சீக்கிரம்!//

தருமி,

வசந்தன் சொன்னதையேத்தான் நானும் சொல்றேன். மிரட்டல் விடும் தொனியில் படிச்சிக்கோங்க; சீக்கிரமாகவே படத்தை பார்க்க முயற்சி பண்ணுங்க சொல்லிப்புட்டேன் :).

Thekkikattan|தெகா said...

வாங்க யோகன் பாரீஸ்,

ரொம்ப நாளைக்கு பிறகு நம்ம வீட்டாண்டை பார்க்கிறேன்... :)

//கிராமம், அந்த மக்கள் வாழ்வு; அவர்கள் ஆடு;மாடு பற்றி நன்கு தெரிந்ததால் ;இந்தப் படம் பிடித்தது.நெடுநாட்களின் பின் ""ஏய்" என்று வில்லன் ;நாயகன் கூச்சலில்லாமல் படம் பார்த்த திருப்தி
இருந்தது.//

ஆமாம், அதனைப் பற்றிய அறிதல் இடைவெளி தான், இப்பொழுது வரும் படங்களின் ஒத்த அலைவரிசையிலிருந்து விலகி நின்று இது போன்ற எதார்த்த படங்களை பார்ப்பதில் குளறுபடிகளை உருவாக்கி வைக்கிறது. அதனின்று விலகி நிற்கும் அல்லது நிற்க எத்தனிக்கும் நம்ம மக்களிடையே.

"ஏய்" "ஊய்"களில் அன்னிச்சையாக ஒரு போலித்தனமான கூச்சல் இருக்கும்,ஆனால் ஒரு தாயிடும் கூச்சல்?

நன்றி யோகன்!

காட்டாறு said...

எல்லாரும் கிழித்த பிறகுன்னு ஆரம்பிச்சிருக்கீங்க தெகா. இத்தனை விமர்சனங்களால் கிழிந்த நோட்டாதான் தெரியுது. ஒன்னு மட்டும் நிச்சயம். Controversial thoughts motivate me to watch this movie.

Thekkikattan|தெகா said...

வசந்தன்,

உங்களுடைய பதிவையும் சென்று படித்தேன், ஒருமித்த பார்வை :)).

ஆனால், அங்கு பின்னூட்ட மிட முயற்சித்தேன் முடியவில்லை. என்ன காரணமென்று தெரியவில்லை.

தருமியை மிரட்டி அந்தப் படத்தை பார்க்க வைத்தமைக்கு நன்றி :-).

Thekkikattan|தெகா said...

கத்தல் பற்றிய விமர்சனம் தான் பயமுறுத்திச்சு...இன்னும் பார்க்கலை.. பார்க்கனும்//

மங்கை,

வெளியில் நடக்கும் (பாராளூமன்றத்திலேயே..) கூச்சலை விட இந்தப் படத்தில் அப்படி ஒன்றும் பெரிய கூச்சல் இருப்பதாகப் படவில்லை :-). அதனால், நேரம் கிடைக்கும் பொழுது தைரியமாக படத்தைப் பாருங்க...

Thekkikattan|தெகா said...

வாங்க விஎஸ்கே அய்யா,

பார்த்து வெகு நாட்களாகிவிட்டது!

//இது போன்ற அவலங்களை திரையரங்கிற்குச் சென்றுதான் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற அவசியம் இல்லைதான்.//

அய்யா, நம் போன்ற உள் முகமாக மனதை திருப்பி வாழ்கின்றவர்களுக்கு தன்ணுர்வு மோலோங்கி இருப்பதால், இது போன்ற வாழ்க்கை பாடங்கள் தேவையில்லைதான். ஆனால், அது போன்ற ப்ரக்ஞை உணர்விலிருந்து விலகி வாழும் மக்களுக்கு சற்றேனும் தன்னை உட் நோக்கி பார்க்க இந்தப் படம் சிறிதேனும் தாக்கத்தினை விட்டுச் செல்லாலமில்லையா?

அதனைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

//படம் பார்ப்பது பொழுதுபோக்குக்காக மட்டுமே என்ற மனநிலை இன்னமும் பரவலாக இருக்கும்ம் தமிழகச் சூழ்நிலையில் இது பெரும் வெற்றி பெறாதது வியப்பில்லை.//

ஆம் மிக்க உண்மைதான். இரட்டை வேடம் போடும் மக்களுக்கும், மக்களின் பலகீனம் எங்கே இருக்கிறது என்று பார்த்து அதில் அடித்து காசு பார்ப்போர்களுக்குமே சினிமா ஒரு கருவியாக பயன்படுத்தப் பட்டு வருகிறது - "சிவாஜி" வெள்ளி விழா பார்த்தீர்களா? பார்த்திருந்தால் என்ன சொல்ல வருகிறேன் என்பது விளங்கும்.

தங்களின் மற்ற கருத்துக்களில் நிறைய உண்மைகள் உள்ளது.

நன்றி, எஸ்.கே!

Thekkikattan|தெகா said...

ஆறு,

// Controversial thoughts motivate me to watch this movie.//

அவசியம் பாருங்க! பார்த்திட்டு வந்து சொல்லுங்க.

வவ்வால் said...

தெகா ,

எல்லாரும் கிழித்த பிறகு எனது பின்னூட்டம்,

தங்கர் , 9 ரூபாய் நோட்டில் வெற்றியே அடைந்திருக்கிறார். படத்தின் பட்ஜெட், கிடைத்த லாபம் என்று வைத்து சொல்வது, சிவாஜி போல எல்லா திரை அரங்குகளும் கிடைக்கவில்லை, அதே போல பல கோடி வருமானம் இல்லை என்று அவர் புலம்புவது அதிகப்படியானது.

தங்கரின் ஆடியன்ஸ் யார், அவரது படத்தின் வியாபாரம் என்ன என்று வைத்து பேசாமல் அவர் அதிகப்படியாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

ஹாலிவுட்டில் கூட மசாலாப்படமான ஜேம்ஸ் பாண்ட் படங்கள் மிக அதிக விலைக்கு போகும், அதே சமயம் பல அவார்ட் வாங்கும் படங்கள் அதை விட குறைவான விலைக்கு போகும்.

வியாபாரம் வேறு, படத்தின் தரம் வேறு!

வணிக உலகு இது என்பது அவர் பல வணிகப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிப்புரிந்த போதே புரிந்திருக்காதா?

மேலும் அவரும் ஒளிப்பதிவாளராக பணிப்புரிந்த காலத்தில் அதிக சம்பளம், பெரிய நடிகர் என்றுப்பார்த்து தான் வேலை செய்தார்.சம்பள விவகாரத்தில் தங்கர் ரொம்ப கறார் என பலரும் கூறக்கேட்டிருக்கிறேன்.

அதே போல பணத்தை சுருட்டுவதிலும். இதே படத்தை எடுப்பதாக சொல்லி ஆஸ்கர் பில்ம்ஸ் பாஸ்கர் என்ற ஒரு தயாரிப்பாளரை மொட்டை அடித்தவர் தான் இவர்.

தனிப்பட்ட தங்கர் எப்படி என்று பார்ப்பதை தவிர்த்து படம் எப்படி என்றால் பார்க்க கூடிய படமே. ஆனால் ஒரு இயக்குனர் இப்படித்தான் படம் எப்போதும் எடுப்பார் என்று ஒரே போல போனால் ஒரு கட்டத்தில் இயக்குனர் மீது சலிப்பு வரும், அனேகமாக மக்களுக்கு இப்படத்தில் அதிக கத்தல் என்று சொல்லக்காரணம் அத்தகைய இயக்குனரின் உத்தியை அவரது படங்களில் அடிக்கடிப்பார்த்த விளைவே என நினைக்கிறேன்.

Thekkikattan|தெகா said...

வவ்ஸ்,

லேட்டா வந்தாலும் நிறைய தங்கர் பற்றிய செய்திகளோட வந்திருக்கீங்க. நானும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன், தவற விடவில்லை.

ஒரு நல்ல படைப்பாளிக்கு இருக்கக் கூடிய படபடப்பு இருந்தாலும், இன்னும் கொஞ்சம் எண்ணங்களை குவித்து, நிதானித்து பேசலாம்தான் என்று தோணச் செய்கிறது.

பணம் என்ற விசயத்தில் அவரைப் பற்றி நிறையவே கேள்விப் பட்டிருக்கேன். "சொல்ல மறந்த கதை"யில் சேரனுக்கு 3 லட்சம் கொடுத்துவிட்டு, இவர் தயாரிப்பாளரிடம் 25 லட்சம் கேட்டதாக வாங்கி லவட்டிக் கொண்டதாக :)).

Anonymous said...

ஒன்பது ரூபாய் நோட்டு சேரனின் தவமாய் தவமிருந்து இரண்டுமே சமுதாயத்திற்கு மெசேஜ் சொல்ற யதார்த்தமான படங்கள்னு சொல்றீங்க. ரெண்டாவது படம் ஓரளவு ஓகே. ரூபா நோட்டுல என்ன மெசேஜ் இருக்குன்னே புரியல. யாராவது தெரிஞ்சவங்க சொல்றீங்களா?

itha solla nee yaru? said...

adasd

Related Posts with Thumbnails