ஒரு பேனா இத்தனை பேரை அலற வைக்க முடியுமா? முடியுமென்றால் அந்தச் சமூகத்தில் ஏதோ பெரியளவில் சம்பவம் நிகழ்த்தப் பெற்றிருக்கிறது என்று தானே புரிந்து கொள்ள முடியும்?
பேனா என்ற ஓர் அடையாளம் எதனையெல்லாம் சுமந்து நிற்க முடியும்? பேனா - மனித குலத்தின் நாகரீக திசையறியும் திசைகாட்டி. ஒரு சமூகத்தின் மாண்பு! உண்மையை செதுக்கி வைக்கும் உளி. குரலற்றோருக்கு உரக்க குரல் கொடுக்கும் ஓர் ஒலி பெருக்கி. இருட்டின் அடர்வையொத்த பொய்களுக்குள் புதைந்திருக்கும் ஓர் பேரொளி.
பேனாவிற்கு ஏது வேலி, முகம்? ஒரு சமூகத்தில் ஒரு பேனா ஒரு தனி மனிதனின் முகத்தை உன் நெஞ்சிற்குள் ஈட்டியாக இறக்குகிறது என்றால் அந்த முகத்திற்கான சொந்தக்காரன் ஒரு சம்பவத்தை அந்தச் சமூகத்தில் செய்து இருக்கிறான் என்றல்லவா பொருளாகிறது.
எடுத்துக்காட்டாக நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். முதல் முறையாக வேறொரு நாட்டிலிருந்து விமான மார்க்கமாக அந்த பேனா எழுந்து நிற்கும் கடற்கரையோரமாக பறந்து தரை இறங்குகிறேன் என்று வைத்துக் கொள்வோம்.
இப்பொழுது அந்தப் பேனா எனக்கு தரும் செய்தி என்னவாக இருக்கும்? எனக்கு அந்தச் சமூகத்தில் புழங்கிய எந்த ஒரு தனிப்பட்ட முகங்களும் பரிச்சயமில்லை எனும் போது, பொதுவான ஓர் ஐடியாவான பேனா - அதனையொட்டிய பெரும் மதிப்பு அந்தச் சமூகத்தின் பொருட்டு இயல்பாகவே ஏற்படுவதை என்னால் தவிர்க்க முடியாது இல்லையா?
ஏனெனில், வரலாறு தோறும் பேனாவிற்கான இடமப்படி. பேனாவின் மதிப்பு என்பது ஒளவையின் "கற்றாரை கற்றாரே காமுறுவர் என்பதற்கு ஒப்பான" ஓர் அண்டத்தின் குறியீடு!
இந்த தமிழ்நாட்டுப் பேனா உங்களுக்கு கலைஞரின் முகத்தை நினைவு படுத்துகிறது என்றால் அது மிகச் சரியாக அவரது விரலிடுக்களில் சுழன்று தன் கடமையை செவ்வனே செய்திருக்கிறது என்று விளங்குகிறது.
அது வரும் தலைமுறையினருக்கும் இடம் சுட்டி பொருள் விளக்கியபடியே நிற்கும். நீங்கள் இன்னும் பலமாக ஓலமிட்டு கதறிக் கொண்டே இருங்கள்!
#பேனா_கலைஞர்
#நினைவுச்சின்னம்
#மீள்
0 comments:
Post a Comment