Sunday, April 25, 2021

குடும்பக் கட்டுப்பாடு: தமிழ்நாடு பெற்றதும் இழந்ததும்!

ஒரு பிள்ளை போதும் என்ற மனதிற்கு தமிழகம் பெற்றதும் இழந்ததும் என்ன?

1965களில் குடும்பக் கட்டுப்பாடு இந்தியாவில் பெருமளவில் கொண்டு சேர்க்க
ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டமே Family Planning in India. ஒரு கால கட்டத்தில சிகப்பு நிற முக்கோண வடிவ தலைகீழ் சின்னத்தை சுவர்களிலும், பேருந்துகளிலும் பார்த்திருப்போம். அதற்கான வாசகமாக நாமிருவர், நமக்கிருவர் என்றும் பின்னாளில் ஒருவர் என்றும் சுருங்கியது.

இந்த நாற்பது ஆண்டு கால நடையில் தென்னக மாநிலங்கள் மிகத் தீவிரமாக பின்பற்றி, வடக்கு மாநிலங்களோட ஒப்பீடும் பொழுது உண்மையாகவே ஒரு பெண்ணிற்கு சராசரியாக 2 குழந்தைகள் என்ற அளவிற்கு வந்து விட்டோம்.

ஆனால், வட மாநிலங்களில் அது இன்னமும் 4 குழந்தைகளை கொண்டதாகவே இருக்கிறது. அதனால், தென்மாநிலங்கள் இழந்து நிற்பது நிதி ஒதுக்கீட்டில் பெரும் ஓட்டை. அடைய வேண்டியதை அடைந்து கொள்வதில் சுணக்கம்.

இப்பொழுது எது என்னை இதனை எழுத வைத்தது? அன்மையில் நான் கண்ணுரும், கேள்வியுறும் விசயங்கள், எனக்கு தெரிந்தவர்களின் குடும்பங்களிலேயே ஒரு பிள்ளையோடு நிறுத்திக் கொண்டவர்களின் கடைசி காலங்களில், அந்த ஒரு பிள்ளையும் வெளி நாட்டிற்கு எங்காவது செல்ல நேர்ந்து சிக்கிக் கொண்டால், அந்த பெற்றோர்களுக்கு நிகழும் இன்னல்களை பார்த்ததாலே இதனை எழுதத் தூண்டியது.

ஒன்றே போதுமென்று நிறுத்திக் கொள்கிறார்களே அவர்களின் மன வலிமைக்கு நமது மத்திய அரசு கொடுக்கும் நற்சான்றிதழ் என்னத் தெரியுமா? நமக்கு இந்தக் குடும்ப கட்டுப்பாட்டிற்கென வரவேண்டிய உபரி நிதியை பிடித்து வைத்துக் கொண்டதுதான். அது எங்கே போகிறது என்றால் அரசாங்க கனவை எட்டி அனைவருக்கும் ஒரு டீசண்டான வாழ்வுச் சூழலை ஈட்டிக் கொடுப்பதிலிருந்து பின்தங்கி இருக்க நேரிடும் கேட்டில் நிறுத்தி வைக்கிறது.

சொன்ன பேச்சை கேட்டு வளர்ந்து நிற்கும் பிள்ளைக்கு கொடுத்த உறுதியை நிறைவேற்றி, ஊக்குவித்து அடுத்த பிள்ளையையும் ஆர்வத்துடன் அந்தப் பாதையில் வளர உதவுவீர்களா அல்லது சொல்லுப் பேச்சை கேட்டதால் தண்டீப்பீர்களா?

சரி, கீழே இணைத்துள்ள பதிவையும் வாசிங்க, ரொம்ப எளிமையா வடக்கத்தியர்களுக்கும், தென்னியந்திர்களுக்குமான அப்பம் பிச்சிக் கொடுப்பதில் எப்படி மத்திய அரசு கையாள்கிறது என்பதை, குடும்பக் கதை மாதிரி சொல்லி புரிய வைச்சிருப்பாங்க... 

••••••©©©•••••••

மகனே தென்னவா, என் பிள்ளைகள் உங்கள் இருவரையும் ஒன்று போலவே படிக்க வைத்தேன்.

நீ படிப்பில் சிறந்து விளங்கினாய்.பட்டங்கள் பெற்றாய்.பார்ப்போர் பொறாமைப்படும் பணி,பதவிகள் என்று உச்சம் தொட்டாய்.நல்ல வருமானம் திட்டமிட்ட வாழ்வு.அளவோடு இரு குழந்தைகள் அதனால் அளவில்லா மகிழ்ச்சி.


உன் அண்ணன் மூத்தவன் வடமாக்கானை நினைத்து பார்க்கிறேன்.அவனுக்கு படிப்பு துளியும் ஏறவில்லை.அதனால் ஒழுங்கான வேலை கிடைக்கவில்லை.போதிய வருமானமின்றி வாய்க்கும் வயிற்றுக்கும் அல்லாடுகிறான். போதாக்குறைக்கு வெளியில் தான் வேலையில்லை என்று வீட்டில் வத வதவென்று ஒன்பது பிள்ளைகளை வேறு பெற்று போட்டுவிட்டான்.தரித்திரம் அவன் வீட்டில் தாண்டவமாடுகிறது.

என்ன இருந்தாலும் அவன் உன் உடன்பிறந்தான் இல்லையா?அவனும் அவன் பிள்ளைகளும் பசி, பட்டினியின்றி நிம்மதியாய் உறங்க உதவி செய்ய வேண்டியது உன் கடமையல்லவா? பண்டிகை காலங்களில் பரதேசி போல் அல்லாது குடும்பத்தோடு அவன் நல்ல துணி உடுத்துவதும் நீ செய்யும் உதவியில் அல்லவா இருக்கிறது?

ஆகையினால் நான் பெற்ற மகனே உன்னை உரிமையோடு இரண்டு விஷயங்கள் கேட்கிறேன்.

முதலாவது,உன் வருமானத்தில் முக்கால்வாசியை அவன் வசம் ஒப்படைத்து விடு.ஏனென்றால் அவன் உன்னை விட ஏழு பிள்ளைகள் அதிகம் பெற்ற உன் அண்ணன்.

இரண்டாவது நாம் வெளியே செல்லும்போது சப்பாத்தி சாப்பிட வேண்டுமா? இட்லி,தோசை சாப்பிட வேண்டுமா? என்பதையும்,சைவம் சாப்பிடலாமா அல்லது ஆட்டுக்கறி,மாட்டுக்கறி உள்ளிட்ட அசைவம் சாப்பிடலாமா என்பதையும், சினிமாவுக்கு சென்றால் தமிழ் சினிமாவா அல்லது ஹிந்தி சினிமாவா என்பதையும் உன் அண்ணன் வடமாக்கானே முடிவு செய்யட்டும்.எண்ணிக்கையில்   நாங்கள் அதிகம் அல்லவா? ஒன்பது பிள்ளைகள் தம்பதி இருவரோடு என்னையும் சேர்த்தால் பன்னிரண்டு பேராகிவிடுகிறோம்.ஆனால் நீங்களோ இரண்டு பிள்ளைகள் மனைவியோடு நால்வர் தானே? என்ன நான் சொல்வது?

என் அருமை மகனே தென்னவா, படித்தவன்,உலகம் முழுதும் சுற்றி பலவற்றையும் கற்று தேர்ந்தவன்,கை நிறைய சம்பாதிக்கறவன் என்ற இறுமாப்பில் என் வார்த்தையை மீறி உன் அண்ணனை,என்னை அவமதித்து விடாதே.அது நம் கூட்டு குடும்பத்திற்கு மிகப்பெரிய கேவலத்தை தேடித்தரும் என்பதை அறியாதவனா நீ?

கருப்பு வெள்ளை காலத்தில் கூட இப்படி ஒரு சென்டிமெண்ட் வசனத்தை அப்பா ரங்காராவ் பேசினால் மகன் சிவாஜியோ,ஜெமினியோ, ஏவிஎம் ராஜனோ கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

MR ராதா பாணியில் சுத்த நான்சென்ஸ் என்று உதறித்தள்ளிவிட்டு தனிக்குடித்தனம் போய் விடுவார்கள்.

தமிழ்நாட்டு விஷயத்தில் மத்திய ஒன்றிய அரசு இப்படித்தான் நடந்து கொள்கிறது.நீ அரிசி கொண்டு வா நான் உமி கொண்டு வருகிறேன் இரண்டையும் 

கலந்து ஊதி ஊதி சாப்பிடலாம் என்று 

நம் வளங்கள் எப்படி கொள்ளையடிக்கப்படுகிறது?

நாசகார திட்டங்கள் ஏன் இங்கு வலிந்து திணிக்கப்படுகின்றன?

கல்வியிலும்,மருத்துவத்திலும் முன்னேறிய மாநிலம் இப்போது ஏன் திட்டமிட்டு காயடிக்கப்படுகிறது?

உணர்வோமா? தெளிவோமா?

~ FaceBook via  யவன குமாரன்

0 comments:

Related Posts with Thumbnails