Friday, April 09, 2021

தம்பீகளே இழப்பதற்கு இங்கே ஏராளமிருக்கிறது!


ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னா மெய் ஆகிடுமா? காமராசர் காலத்திற்கு பிறகு வளர்ச்சியே இங்கே இல்லையென்றால் எதனைச் சுரண்ட கட்டி எழுப்பிய அரசு கல்வி நிறுவனங்களை பட்டப் பகலில் ஜோப்படி செய்ய முயற்சிக்க வேண்டும்? ஒரு மாநில அரசே அந்த ஊர் மக்களின் உழைப்பில் உருவாக்கிய மருத்துவக் கல்லூரிகளில் எது போன்ற தேர்வுகளை நடத்தி மாணவர் சேர்க்கை செய்ய வேண்டுமென்ற உரிமையில் தலையை நுழைக்க வேண்டும்?
அரசாட்சி நடத்தவே தகுதியற்ற ஒருவருக்கு சரியான நேரத்தில் கோர்ட் தீர்ப்புகளை வழங்காமல் தள்ளிப் போட்டு, தேர்தலில் வெற்றியை வழங்கி, பிறகு அவரது மரணத்திற்கு பின்னாக, மீன் வலை போட்டு அள்ளியது போல அரசியல் ஞானமற்ற, அறமற்ற, எதிர்கால திட்டங்கள் ஏதுமற்ற பல சில்லுண்டித் திருடர்களை கொத்தாக வைத்துக் கொண்டு திரைமறைவு அரசியல் செய்வதா? அரசியல் அறம், மரபு?
இதனைச் செய்வதற்கு சிறிதும் அஞ்சாதவர்கள் மக்களாட்சியை எந்த குழிக்குள்ளும் தள்ளி புதைக்க மாட்டார்கள் என்பதில் என்ன சந்தேகம் இருந்திட முடியும்? ஒரு மாநிலம் கிடைத்த வளத்தைக் கொண்டு தன்னாலான அளவு வளர்ச்சியைக் காட்டி பிற மாநிலங்களோடு ஒப்பிடும் வாக்கில் சற்றே உயரத்தை காட்டியிருக்கிறது என்றால், அதனை மாடலாகக் கொண்டு தாங்கள் ஆளும் மாநிலங்களில் அவற்றை பின்பற்றி உயர்த்த நினைப்பார்களா அல்லது பிற பின் தங்கிய மாநிலங்களின் வரிசையில் அதனையும் வைத்து அழகு பார்க்க எண்ணுவார்களா?
பொய்களை பரப்பியே ஒரு சிறந்த நிர்வாகத்தை வழங்கிட முடியும் என்று யார் இவர்களுக்கு பாடம் எடுத்தது? வளர்ச்சி என்பது தன்னைச் சுற்றி நிகழ் காலத்தில் நாம் அனுபவிக்கும் வசதிகளைக் கொண்டு கண்டுணரும் ஒரு விடயம். அது கல்வி வசதியாகட்டும், மருத்துவ, சுகாதார வசதியாகட்டும் எல்லாவற்றையுமே சிறிது சிறிதாக கடினமான உழைப்பின் பெயரில் ஈட்டிக் கொள்வது. அதற்கு பல வருடங்கள் பிடிக்கும். பணத்தைக் கொட்டி ஊடகங்களில் போலியான பரப்புரைகளின் மூலம் அடைவது கிடையாது.
ஒரு நாட்டை கட்டியெழுப்பும் பொழுது, அது வரையிலும் சமூக சமநீதியற்ற ஒரு சமூதாயத்தில் அடையப்படாத விடயங்களான அணைகள், பள்ளிகள், மருத்துவம் ஏனைய வசதிகளுக்கென அடித்தளம் போடுவது என்பது ஓர் இயல்பான விடயம். அதுவும் போர்க்கால அடிப்படையில் சில துறைகள் பீரிட்டு வளர்த்தே எடுக்கப்பட வேண்டியதாக இருக்கும்.
உதாரணமாக கோயபல்ஸ் முறையில் தொடர்ந்து பரப்பப்படும் காமராசர் காலத்து பொற்கால துறைகளான அணைகட்டுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு. அதற்குப் பிறகு இத்துறைகள் எந்த மாற்றத்தையும் அடையவே இல்லை போன்ற ஒரு பிம்பத்தை கட்டி எழுப்புகிறார்கள். இது எத்தனை வடிகட்டிய முட்டாள்தனமான வாதம்? ஒரு மாநிலத்திற்கு முக்கிய அணைகட்டுக்களாக எத்தனை அணைக்கட்டுக்கள் தேவைப்படும். கிடைக்கும் நில அமைப்பு, வன வளம் அதனில் பெறப்படும் நீர் வரத்து, அந்த பூமியத்தை சுற்றியுள்ள மக்களின் வாழ்விடமென்று எத்தனையோ காரணிகளைக் கொண்டே ஒரு முக்கியமான அணைக்கட்டிற்கான அடித்தளம் அமைகிறது.
போகிற போக்கில் நினைத்த இடத்திலெல்லாம் அணைக்கட்டுக்கள் அமைத்து விட முடியுமா என்ன? இது எது போன்ற வாதம்? தெரிந்துதான் பேசுகிறோமா அல்லது மக்கள் அனைவரும் முட்டாள்கள், அடிப்படை அறிவே அற்றவர்கள் என்ற முறையில் பொய்யிலே அரசியல் அறமற்று தன் உடல் வளர்க்க பேசும் பேச்சா?
அந்த கால கட்டத்திற்கு பிறகு எந்த அரசும் எதுவுமே செய்யாமல் தான் நாம் உயிர் வாழ்ந்து, கல்வியறிவு பெற்று இன்று இப்படி வீண் வம்படித்து பிளவுகளை உருவாக்கி நம்முடைய வளங்களை வேற்று மாநிலத்து மக்கள் சூழ்ச்சியின் பால் பிடிக்க வழி கோலுகிறோமா?
ஒரு விடயத்தை பகிர்வதற்கு முன் அதில் எந்தளவிற்கு உண்மைத் தன்மை இருக்கிறது என்று அறிந்து கொள்ள குறைந்த பட்ச உழைப்பையாவது போட வேண்டாமா?
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க இப்பொழுது எந்த அரசியல் அறமுமற்று பொய் பிரச்சாரங்களை பரப்புவதற்கே பெரிய அளவில் தங்களுடைய நேரத்தையும், பணத்தையும் போட்டு அரசியல் வளர்க்கும் சூழலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழலிற்கு நாம் நகர்ந்திருக்கிறோம்.
கிடைத்த ஐந்து வருடங்களில் உங்களுடைய நாற்பது காலத்து கடின உழைப்பின் பெயரில் கட்டியெழுப்பிய, கோரிப் பெற்ற பல உரிமைகள் திரைக்கு பின்பாகவும், நம்முடைய கண்களுக்கு முன்பாகவும் கோமாளி அரசைக் கொண்டு பிடிங்கிக் கொண்டு செல்வதைக் காண்கிறோம்.
உணர்ச்சி வயத்தில் கூட்டத்தோடு சூழ்ச்சிக்கு இரையாகி பின்னால் திரும்பிப் பார்க்கும் பொழுது, இழந்ததை மீட்டெடுக்கவே மீண்டும் பல பத்தாண்டுகள் தேவைப்படலாம். முதலில் எதிரியை அடையாளம் காணுங்கள். யாரை அமர வைத்தால் தவறுகளை திருத்திக் கொண்டு சுயமான வளர்ச்சிக்கு நம்மை இட்டுச் செல்வார்களோ அவர்களை ஆதரியுங்கள். பிறகு உங்களுடைய பங்காளிச் சண்டையை வைத்துக் கொள்ளலாம்.

0 comments:

Related Posts with Thumbnails